கோவை இரட்டை ஆணவப் படுகொலை: ஆதிக்கச் சாதி சங்கங்கள் தடை செய்யப்பட வேண்டும்

ஆணவப்படுகொலைகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது ஆதிக்க சாதிவெறிச் சங்கங்கள்தான். இன்றைக்கு இத்தகைய சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான் கைப்பற்றி இயக்கி வருகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் முத்தரையர் சாதியைச் சார்ந்த கருப்புசாமி என்பவரின் மகன் கனகராஜ். சுமை தூக்கும் தொழிலாளியான இவர் வெள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற அருந்ததியர் சாதிப் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு கனகராஜ் வீட்டினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். பின்னர், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட அவர்கள் சீரங்கராயன் ஓடைப் பகுதியிலேயே வசித்து வந்துள்ளனர்.

சாதிவெறி தலைக்கேறிய கனகராஜின் சகோதரர் வினோத்குமார் சதித்திட்டம் தீட்டி, கடந்த 2019, ஜூலை 25 ஆம் தேதியன்று தனது நண்பர்கள் சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகியோருடன் கனகராஜின் வீட்டுக்கே சென்று, அங்கிருந்த கனகராஜ், வர்ஷினி பிரியா இருவரையும் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த கனகராஜ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிற வழியில் உயிரிழந்தார். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வர்ஷினி பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக, வர்ஷினி பிரியாவின் தாயார் அமுதா அளித்த புகாரின் அடிப்படையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீஸார் வினோத்குமார், சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு கோவை சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஜனவரி 23 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், வினோத்குமார் குற்றவாளி என்றும் அவருக்கான தண்டனை விவரம் ஜனவரி 29 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஜனவரி 29 ஆம் தேதி, சிறப்பு நீதிபதி விவேகானந்தன் அவர்கள் வினோத்குமாருக்கு மரணதண்டனை விதித்து உத்தரவிட்டார். சதி என்பது நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, சின்னராஜ், ஐயப்பன், கந்தவேல் ஆகிய 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பொதுவாக ஆணவப்படுகொலை போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட தரப்பு சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் அரசின் தரப்பில் எப்போதும் மெத்தனப்போக்கே இருந்து வருகிறது. எனவே, வழக்கின் துவக்கத்திலிருந்தே, மனித உரிமை ஆர்வலர்களான வழக்கறிஞர் பாலமுருகன், ஆர்தர், சம்பத், ரகுமான் ஆகியோர் பாதிக்கப்பட்ட தரப்பு சாட்சிகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்காக தோழர் ப.பா.மோகன் அவர்களுடன் இணைந்து போராடித்தான் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பெற்றுள்ளனர்.

குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்ததில் வர்ஷினி பிரியாவின் தாயார் அமுதாவின் தரப்பில் வழக்காடிய வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன் மற்றும் அவருடன் இணைந்து இவ்வழக்கில் உறுதுணையாக இருந்த வழக்கறிஞர்களின் உணர்வுப்பூர்வமான பங்களிப்பும், கடுமையான போராட்டமும் மிக மிக முக்கியமானதாகும். கோகுல்ராஜ் கொலை வழக்கிற்குப் பிறகு, கடுமையான சட்டப் போராட்டத்தை நடத்தப்பட்டு இவ்வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.


படிக்க: தமிழ்நாட்டில்  அதிகரித்துவரும் ஆணவப்படுகொலைகள்!


அதே சமயம், தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 120 முதல் 150 சாதி ஆணவப்படுகொலைகள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இது தொடர்பாக அரசிடம் மிகச் சொற்பமான தகவல்களே இருப்பதாகவும் கூறுகின்றனர். சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்ற அக்கறையும், பொறுப்புணர்ச்சியும் தி.மு.க அரசிற்கு இல்லை என்பதையே இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியல், சமூகத் தளத்தில் ஆதிக்கச் சாதி சங்கங்கள் அதிகார வர்க்கத்தின் துணையோடு தீவிரமாகச் சாதிவெறியைப் பரப்பும் வேலைகளைத் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றன. ஆணவப்படுகொலைகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது ஆதிக்க சாதிவெறிச் சங்கங்கள்தான். இன்றைக்கு இத்தகைய சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான் கைப்பற்றி இயக்கி வருகிறது. தனது பாசிச நோக்கத்திற்கேற்ப சாதிவெறியைத் தூபம் போட்டு வளர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது அதிக அளவில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களும், கொலைகளும் அரங்கேறி வருவதற்கு இதுதான் அடிப்படையான காரணமாக உள்ளது.

போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கப் பிரிவுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆதிக்கச்சாதி வெறிக்குச் சாதகமாகத்தான் போலீசு இருக்கும் என்பதற்கு வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி-சி.ஐ.டி-இன் அறிக்கையே தற்கால சான்று. மேலும், போலீசு துறைக்குள்ளும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த அதிகாரிகளின் மீது நடத்தப்படும் சாதிரீதியான ஒடுக்குமுறைகள் தொடர்ச்சியாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. திமுக அரசும் வேங்கைவயல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் ஆதிக்கச்சாதி தரப்புக்குச் சாதகமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சாதி மறுப்புத் திருமணம் செய்த இணையர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்; ஆதிக்க சாதிவெறிச் சங்கங்களைத் தடை செய்ய வேண்டும்; கல்வி நிலையங்களிலும், சமூகத் தளத்திலும் சாதி மறுப்பு, சமத்துவ சிந்தனைகளைப் பரப்பிடத் தனி நிர்வாக அமைப்பினை அரசு உருவாக்க வேண்டும் – ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும் மாற்றுப் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டு சேர்க்கும் வகையில் உழைக்கும் மக்களைத் திரட்ட வேண்டிய தேவையை சமூகநிலைமைகள் ஆழமாக உணர்த்துகின்றன.

அதேசமயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முற்றிலும் எதிராக இருக்கும் இக்கட்டமைப்புக்கு வெளியே சமத்துவத்துக்கான மாற்றுக் கட்டமைப்பை நிறுவுவதற்கான தேவையை அனைவரும் உணர வேண்டியுள்ளது. அதற்கான உரையாடலை முன்னெடுக்க வேண்டியுள்ளது.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க