வரைவு தேசியக் கல்விக் கொள்கை 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு!
– பேராசிரியர் கருணானந்தன் !
பேராசிரியர் கருணானந்தன், சென்னையிலுள்ள விவேகானந்தா கல்லூரியில் வரலாற்றுத் துறை தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
பணியில் இருந்த சமயத்தில் அரசுக் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கத் தலைவராகச் செயலாற்றியிருக்கிறார். தமிழக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியபொழுது, சமச்சீர் பாடத் திட்ட நூல் ஆசிரியர் குழு தலைவராகப் பணிபுரிந்திருக்கிறார்.
கருணானந்தன் ஆசிரியர் பணியில் இருந்துதான் ஓய்வு பெற்றுவிட்டாரே தவிர, மக்கள் பணியிலிருந்து ஓய்வு பெறவில்லை. மக்கள் கல்வி மற்றும் ஆசிரியர், மாணவர் உரிமைகள் ஆகிய தளங்களில் இன்று வரையில் ஊக்கமுடன் பணியாற்றிவருகிறார். பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராக இருக்கும் அவர், வரலாற்றுப் புலத்தில், குறிப்பாக இந்து மதவெறி பாசிஸ்டுகள் வரலாற்றைக் காவிமயமாகத் திரித்துப் புரட்டிவருவதற்கு எதிராகப் போராடிவருகிறார்.
மைய அரசு தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை வெளியிட்டிருப்பதை அடுத்து, அக்கொள்கையின் கார்ப்பரேட் காவி சார்பை அம்பலப்படுத்தி கடந்த இரண்டு மாதங்களில் தமிழகமெங்கும் முப்பதுக்கும் மேற்பட்ட கூட்டங்களில் உரையாற்றியிருக்கிறார்.
புதிய ஜனநாயகம் வாசகர்களுக்காக, தேசியக் கல்விக் கொள்கை- வரைவு குறித்துப் பேராசிரியர் கருணானந்தன் அவர்களிடம் நேர்காணல் ஒன்றை ஒழுங்கு செய்தோம். அந்நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் இவ்விதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆசிரியர் குழு.
♦ கல்வி முறையில் மாற்றம் தேவை என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே எழுப்பப்பட்டு வரும் வேளையில் தேசியக் கல்விக் கொள்கை (வரைவு) 2019 வெளியிடப்பட்டிருக்கிறது. அக்கோரிக்கையை நிறைவுசெய்யும் விதத்தில் இந்த வரைவு அறிக்கை அமைந்திருக்கிறதா?
◊ இந்தக் கல்விக் கட்டமைப்பு மாற வேண்டும் என நாம் மட்டுமல்ல, வியாபார நோக்கில் கல்வியைப் பார்க்கிறவர்களும் விரும்புகிறார்கள். உலகத்திலேயே கல்வி பெற்ற நடுத்தர வர்க்கம் அல்லது கல்வி பெறுகிற நடுத்தர இளைஞர் சமுதாயம் அதிகமான எண்ணிக்கையில் இருக்கிற நாடு இந்தியா. இந்நிலையில் அவர்கள் கண்ணோட்டத்தில் இலாபம் ஈட்டக்கூடிய கல்வி வியாபாரத்துக்கு பொருத்தமான இடமிது. தங்கள் இலாபத்தை உறுதிப்படுத்துகிற வகையில், அதிகப்படுத்துகிற வகையில் மாற்றங்களைக் கொண்டுவர (கல்வி வியாபாரிகள்) விரும்புகிறார்கள்.
நம்மைப் பொருத்தவரை கல்வி என்பது மக்கள் முன்னேற்றத்துக்கான ஒரு கருவி. சிந்தனை மற்றும் பொருளியல், சமூக முன்னேற்றத்துக்கான கருவி. அதை நோக்கிய பயணத்தில் இருக்கிற குறைகளைப் பற்றித்தான் நாம் பேசுகிறோம்.
அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது, இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கை என்பது கல்வி வியாபாரத்துக்கு மிகப் பொருத்தமான சீர்திருத்தங்களை கொண்டு வருகிறது. ஆனால், மக்கள் கல்விக்கு இது முரண்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய கல்வி முறையாக இருக்கிறது. ஆகவே, இந்தக் கல்விக் கொள்கை ஏமாற்றத்தை மட்டுமல்ல, எதிர்ப்பை விளைவிக்கக்கூடிய கல்விக் கொள்கை.
♦ பொதுவெளியில் பின்லாந்து மாதிரி பற்றிப் பேசப்படுகிறது. அந்நாட்டில் 6 வயதுக்கு மேல்தான் கல்விக்கூடங்களில் குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆயின், தேசியக் கல்விக் கொள்கை மூன்றாவது வயதிலேயே இந்தியக் குழந்தைகளைக் கட்டாயக் கல்வி வளையத்திற்குள் கொண்டு வருகிறது. மேலும், அவ்விளம் பருவத்திலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை அக்குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டுமென்று பரிந்துரைப்பதோடு, இதற்கு அறிவியல் அடிப்படை இருப்பதாகவும் கூறுகிறது. இப்பரிந்துரையை நேர்மறையாகப் பார்க்க இயலுமா?
◊ அறிவுள்ள யாரும் நேர்மறையாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், மனித வாழ்க்கையில் சில பருவங்கள் உண்டு. மழலைப் பருவம், குழந்தைப் பருவம், விடலைப் பருவம், அதன் பிறகு வாலிபப் பருவம் என்றவாறு… அந்தப் பருவத்துக்கு ஏற்பத்தான் செயல்பாடுகளைத் தீர்மானிக்க வேண்டும். கல்விக்காக மனிதன் கிடையாது. மனிதனுக்காகத்தான் கல்வி.
மழலைப் பருவக் கல்வி (Pre Education) என்பது கார்ப்பரேட்டுகளின் சதி, கார்ப்பரேட்டுகளின் வியாபாரம். பிரீ பிரைமரி, பிரீ ஸ்கூல் என்பவையெல்லாம் வணிக நோக்கத்துக்காக கார்ப்பரேட்டுகள் உருவாக்கியவை. சொல்லப்போனால், 1985 பிறகுதான் இவையெல்லாம் வருகின்றன.
இந்த கார்ப்பரேட் யுகம் வரவர, தனியார்மயம் (LPG) பெரிதாகப் பெரிதாகக் கல்வியை அதற்கு ஏற்றாற்போலக் கொண்டுவருகிறார்கள்.
உடல் பக்குவத்தோடுதான் அறிவுப் பக்குவம் வருகிறது. கையைச் சரியாக மடிக்க வராத குழந்தைக்கு, பேனாவைக்கூடப் பிடிக்க முடியாத குழந்தைக்கு முறைசார்ந்த கல்வியைத் தொடங்குவது எந்த விதத்தில் நியாயம்? எதைச் சொல்லியாவது குழந்தையை இந்த வணிகத்துக்குள் கொண்டு வந்துவிடப் பார்க்கிறார்கள். குழந்தைகளுக்கு அது தேவையில்லை. மழலைப்பருவம் மகிழ்வான பருவம். அந்த மகிழ்வு உறுதியாக வேண்டுமென்றால், குடும்பப் பிணைப்புடன் பெற்றோர் பிணைப்புடன் அதை இணைத்துப் பார்க்க வேண்டும்.
அதனாலேயே முன்னேறிய நாடுகள் மழலைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. குழந்தைக் கல்வியின் தொடக்கம் என்பது, முறைசார்ந்த கல்வியின் தொடக்கம் என்பது மழலைப் பருவம் கடந்த பிறகுதான் வரவேண்டும். இது உலகளாவிய உண்மை. இவன் வியாபாரத்துக்காக (அவ்வுண்மையை) மாற்ற முடியாது.
மழலைப் பருவத்திலேயே பல மொழிகளை கற்றுக்கொள்ளும் திறமை இருப்பதாகச் சொல்வது, இவர்களது வேறு உள்நோக்கத்துக்கு இசைவாகப் புதிய கற்பிதங்களை உருவாக்கி வருகிறார்கள். இதற்கு எந்தவிதமான சயின்டிபிக் எவிடென்ஸ்” (அறிவியல் ஆதாரம்) கிடையாது.
♦ முந்தைய காங்கிரசு அரசு கொண்டுவந்த கல்வி உரிமைச் சட்டம், இடைநிற்றலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எட்டாவது வரையிலும் எந்தவொரு மாணவனையும் ஃபெயிலாக்கக்கூடாது எனக் கூறியது. பின்னர் வந்த மோடி அரசு அக்கொள்கை மாணவர்களின் கல்வித் திறனைப் பாதிப்பதாகக் கூறி ரத்து செய்தது. தேசியக் கல்விக் கொள்கையோ 3, 5, 8- வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப் பரிந்துரைப்பதோடு, ஒன்பதாம் வகுப்பு தொடங்கி 12-ம் வகுப்பு வரையிலும் நான்கு ஆண்டுகளில் எட்டு பருவத் தேர்வுகளைப் பரிந்துரை செய்கிறது. இது பள்ளிக் கல்வியில் எந்தவிதமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்?
◊ இடைநிற்றலுக்கான காரணங்கள் ஒன்று அல்ல, பல உண்டு. முக்கியமான காரணம் வறுமையாக இருந்தது. அதற்காகத்தான் மதிய உணவுத் திட்டத்தை காமராஜும், அதற்கு முன்னர் நீதிக்கட்சியைச் சேர்ந்தவர்களும் கொண்டுவந்தார்கள்.
இரண்டாவது, மனதில் ஏற்படக்கூடிய அழுத்தம். கூண்டுக்குள் இருப்பது போன்ற மனநிலை. அந்த மன அழுத்தத்தில் மாணவர்கள் வெளியேறுகிறார்கள்.
மூன்றாவதாக, இந்த வறுமைதான் அங்கேயும் வருகிறது. ஏதோ ஒன்று செய்து நமது குடும்பத்திற்கு உதவியாக இருப்போம், ஏதாவது ஒரு தொழில் செய்வோம் என எண்ணிப் படிப்பைக் கைவிட்டுச் சாதாரண பெட்டிக் கடைகளிலும் போய்ப் பணிபுரிகின்றனர். படிப்பைக் கைவிடும் மாணவனைப் பொருத்தவரை என்ன மனநிலை என்றால், ஏதாவது ஒரு வகையில் நமது பெற்றோருக்கு நாம் உதவியாக இருக்கிறோம் என்பதுதான். இப்படிப் பல காரணிகள் உண்டு.
மற்றொரு காரணி என்னவென்றால், சமூகத்தின் பன்முகத் தன்மை. அங்கே வரக்கூடிய குழந்தைகளின் சமூக, பொருளியல், பண்பாட்டுக் களங்கள் வேறுவேறானவை. குறிப்பாக, இந்தியாவில் உள்ளது போன்ற சமூக ஏற்றத்தாழ்வு நாம் வேறு எங்கும் காண முடியாது.
சாதி உணர்வோடு ஆசிரியர் இருந்தாலோ, பள்ளி நிர்வாகம் இருந்தாலோ நிச்சயமாக அதனுடைய விளைவுகள் மாணவர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒற்றைச் சமூகமாக மாறுவதற்குப் பதிலாக சமூக இடைவெளிகள் நிலைப்படுத்தப்படுவதையும் இறுகிப்போவதையும் இந்தக் கல்விக்கூடங்களில் பார்க்கிறோம். இதன் விளைவாகவும் இந்த இடைநிற்றல் ஏற்படுகிறது.
இந்த இடைநிற்றலை மாற்றுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒன்று மதிய உணவு. அடுத்து சீருடை போன்ற பல விடயங்கள். இவையெல்லாம் மருந்துதான். இறுதியாக கல்விச்சுமை. கல்வியைச் சுமையாக மாற்றக்கூடாது. இங்குதான் சீர்திருத்தம் வேண்டும் என்கிறோம். நிறைய பளுவைச் சேர்த்து எம்.எஸ்சி., படிக்கக்கூடிய பையனின் பளுவை மூன்றாம் வகுப்பு மாணவனுக்கு திணித்துவிட்டு, அதில் தேறி வந்தால் சிறப்பான கல்வியுடைய மாணவன் என்று சொல்வது, வயதுக்கு ஏற்ற கல்வி என்பதையும் மறந்துவிட்டார்கள். சமூகச் சூழலுக்கு ஏற்ற நிலைமை என்பதையும் மறந்துவிட்டார்கள். இதைச் சீர் செய்வதற்கு ஒற்றைக் கல்வி கொள்கையால் முடியாது. இதனை அந்தந்தப் பகுதிகளில் உள்ள அமைப்புகள் மூலம்தான் சீர்செய்ய முடியும்.
ஒருமைப்படுத்தப்பட்ட கல்விமுறையில் இவையெல்லாம் தீர்க்கப்படாத பிரச்சினைகளாகவே மாறிவிடும். இவர்களின் திட்டத்தில் 3, 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டு என்கிறார்கள். நாம் முன்னரே கூறியது போன்று பொதுத்தேர்வு என்று ஒன்று வந்தாலே, அதற்கான தயாரிப்பு முறை என்று வந்துவிடும். சிறு வயதில் பொதுத்தேர்வு என்பது பெரும் மனச்சுமை. அப்புறம் இதை வியாபாரமாக ஆக்குவார்கள். சாதாரண ஆசிரியராக இருந்தால், இதற்காக டியூசன் ஆரம்பிப்பார். பின்பு இது நிறுவனமயப்படும். இது கல்வியை வியாபாரம் ஆக்குவதற்கு மேலும் துணை செய்கின்ற அமைப்பு. இது மழலைக் கல்வியைக்கூட வியாபாரமாக ஆக்குவதற்குத் துணை செய்கின்ற அமைப்பு.
குழந்தைகளுக்குக் கல்வியை புகுத்துவது என்பது, தேனில் மருந்து கொடுக்கும்படிதான் இருக்க வேண்டும். அந்தச் சுமை தெரியக்கூடாது. இந்த இடத்தில்தான் ஆசிரியர் – விகிதம் என்பது மிக முக்கியமான விசயம். 40 மாணவர்களை வைத்துக்கொண்டு ஒரு ஆசிரியர் தாக்குப் பிடிக்கணும் என்றால், அவரால் எப்படிச் சீர்படுத்த முடியும்? இவையெல்லாம் இப்புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்படவில்லை. மாணவர் விகிதம் 1:30 என்ற அளவிலேயே நிற்கிறார்கள்.
இதைச் சரி செய்வதை விட்டுவிட்டு, மேலும் பளுவைச் சேர்ப்பதனால், இந்த இடைநிற்றல் அதிகமாகும். ஏற்கனவே இந்த இடைநிற்றல் படிப்படியாக அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. மேலும், இந்த கல்விக் கொள்கையிலேயே வெளியேற்றம் – மல்டிபில் எக்சிட்” குறித்துப் பேசப்படுகிறது. இந்தத் தேர்வுகள் எல்லாமே வெளியேற்றத்திற்கான, இடைநிற்றலுக்கான கதவுகள்.
இதில் 9,10,11,12 வகுப்பை ஒரு யூனிட்டாக வைத்துவிட்டு, அதனை secondary education எனக் கூறுகிறார்கள். இதில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு செமஸ்டர்கள் (பருவத் தேர்வு); கிட்டத்தட்ட 8 செமஸ்டர்கள். இந்த எட்டு செமஸ்டரிலும் வொகேஷனல் (vocational)- தொழில் பாடமும் வருகிறது.
ஐந்தாம் வகுப்பிலிருந்தே தொழில் பாடத்தைக் கொண்டுவருகிறது, வரைவு அறிக்கை. ஒன்பதாம் வகுப்புக்கு வரும் மாணவன் பருவத் தேர்வுகளால் அயர்ச்சியுற்றோ, வேறு காரணங்களாலோ வெளியேறினால் (exit), அம்மாணவன் அதுவரை படித்துவந்த தொழில்கல்வியை அடிப்படையாக வைத்து, நல்லது செய்வதைப் போல ஒரு சான்றிதழை வழங்கி அனுப்பிவிடுவார்கள்.
எனில், கட்டாயப் பள்ளிக்கல்வி என்பது என்ன ஆகிறது? இலவசப் பொதுக்கல்வி, கட்டாயக் கல்வி 18 வயது வரைக்கும் வந்திருக்க வேண்டும்; வரவில்லை. 13 வயதிலேயே வெளியே போய்விடுகிறோமே? அப்படியென்றால், கட்டாயப் பள்ளிக்கல்வி என்பது கேள்விக்குறியாகி விடுகிறது. அப்படியென்றால், மாணவர் சேர்க்கை விகிதம் General Enrollment ratio (GER)” என்பது குறையக்கூடிய வாய்ப்பு உள்ளதேயன்றி, கூடக்கூடிய வாய்ப்பு இல்லை.
♦ பள்ளிகளை ஒருங்கிணைத்துப் பள்ளி வளாகங்களை உருவாக்க வேண்டும் என்கிறது, வரைவு அறிக்கை. இப்பரிந்துரை, குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளைப் பக்கத்திலுள்ள பள்ளிகளோடு இணைக்க வேண்டும் என்ற நிதி ஆயோக் ஆலோசனையின் நீட்சியா?
◊ இரண்டுக்கும் ஒரு இணைப்பு இருக்கிறது. நிதி ஆயோக் புதிய பள்ளிகளைத் திறப்பதற்கோ, மேம்படுத்துவதற்கோ எந்த நிதியும் ஒதுக்கத் தயாராக இல்லை.
இவர்கள் சொல்கிறபடி ஸ்கூல் காம்ப்ளக்ஸ்” (பள்ளி வளாகம்) என்பது செகண்டரி எஜூகேசன்” இருக்கின்ற பள்ளி. அந்தப் பள்ளியோடு, பிரைமரி மற்றும் பிரீ பிரைமரியை இணைக்கிறார்கள். வொகேஷனலைசேஷனைச் (Vocationalisation) சேர்க்கிறார்கள். பல்வேறு மொழிகள் கற்பதைத் திணிக்கிறார்கள்.
ஒரு தாலுக்காவில் 16 பள்ளிகள் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். 16 பள்ளிகளை பிசிக்கல்லா” – அப்படியே பெயர்த்து வேறொரு இடத்துக்குக் கொண்டுபோக முடியாது. ஆசிரியரை அங்கே, இங்கே எனச் சுழற்சி முறையில் அனுப்பப் போகிறார்களா? இல்லை, மாணவர்களை ரொட்டேட்” செய்யப் போகிறார்களா? இல்லை, இந்தக் கல்விக்கான சாதனங்களை ரொட்டேட்” செய்யப் போகிறார்களா? சாதனங்களையும் ஆசிரியர்களையும் உரிய அளவுக்குப் பெருக்குவதற்குப் பதிலாக, இருக்கின்ற ஆசிரியர்களை வைத்துக்கொண்டு மேனேஜ் செய்யப் போகிறார்கள். அதற்கு வசதியாகத்தான் ஸ்கூல் காம்ப்ளக்ஸ் சிஸ்டம்” இருக்கிறதே தவிர, மக்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அல்ல.
இந்த காம்ப்ளக்ஸ் ஸ்கூல் சிஸ்டம் புதிய கல்வி நிறுவனங்களை உருவாக்குவதிலிருந்து அரசு தன்னை விடுவித்துக் கொள்ளும் ஏற்பாடு.
இருக்கின்ற பள்ளிகளை மேம்படுத்துவது, சீர்படுத்துவது, வசதிகளைத் தருவது, அதன் தரத்தை மேம்படுத்துவது, எண்ணிக்கையை அதிகப்படுத்துவது – இவைதான் நமது தேவையே!
♦ தமிழகத்தில் மேநிலைப் பள்ளிக் கல்வியில் நடைமுறையில் இருக்கும் தொழிற்கல்விக் கட்டமைப்பும், வரைவுக் கொள்கை பரிந்துரைக்கின்ற பொதுக்கல்வியோடு தொழிற்கல்வி என்பதும் ஒரே அடிப்படையைக் கொண்டிருக்கின்றனவா? அல்லது வேறுபட்ட பார்வையைக் கொண்டவையா?
◊ இந்த Vocationalization எத்தனை வொக்கேஷன்ஸ் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். நிச்சயமாகப் பாரம்பரியத் தொழில்களை இதில் கொண்டுவரக்கூடாது, முடியாது.
இந்த வொக்கேஷனலைசேஷனுக்கு இன்வெஸ்மென்ட் அதிகம் தேவைப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வகம் வேண்டும்; தொழிற்கூடம் வேண்டும்; தொழில்கருவிகள் வேண்டும்; தொழில்கல்வி ஆசிரியர் வேண்டும்; தொழில்படிப்புகளைப் பட்டியலிட வேண்டும். அதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். அந்தச் சுமையை மாணவர்கள் மேல் திணிக்கக்கூடாது. அரசு இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், மாணவனுக்கு பொதுக்கல்வியோடு திறன் கல்வியும் கிடைத்துவிடும். நாம் விரும்புவது அதைத்தான். அத்தகைய எந்தவிதமான ஒரு அறிவியல்பூர்வமான திட்டத்தையும் கல்விக்கொள்கை தரவில்லை.
தொழில் கல்வியைப் பொதுப்படையாக வைத்துள்ளார்கள். மாணவனின் விருப்பம் எனப் பொதுவாகக் கூறுகிறார்கள். எட்டு வயது மாணவனுக்கு என்ன விருப்பம் இருக்க முடியும்? அறிதலுடன் கூடிய விருப்பமா? புரிதலுடன் கூடிய விருப்பமா? அந்த விருப்பம் மாயையின் அடிப்படையில்கூட வரலாம், இல்லையா? ஆடு-மாடு மேய்ப்பதுகூட அவனுடைய விருப்பத்தின் பேரில் வந்துவிடலாம். இதனால் வரைவு அறிக்கை கூறும் தொழில் கல்வி, திறன் கல்வி என்பதெல்லாம் ஏறக்குறைய ராஜாஜியின் (குலக்கல்வி) கொள்கையை வலியுறுத்துவது போலத்தான் இருக்கிறது.
♦ கல்விக்கொள்கை திறனை வளர்ப்பது பற்றிப் பேசுகிறது. தொழில்துறை முதலாளிகளின் தேவைகளை ஈடுசெய்யும் வண்ணம் மாணவர்களைப் பயிற்றுவிப்பது, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது என்ற பரிந்துரைகள் கல்வி புலத்திலும், மாணவர்களின் அறிவுத் திறன், பண்பாடு ஆகியவற்றிலும் என்ன மாதிரியான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்?
◊ முன்பு வேலைக்குச் சென்றவர்களெல்லாம் பொதுக்கல்வித் திட்டத்தில் பயின்றவர்கள் தான். திறன் கல்வி அடிப்படையில் போகவில்லை. ஒருவருடைய திறன் எங்கே வளர்ச்சி பெறுகிறது? படிக்கும் இடத்தில் அல்ல, பயிற்சிகளின் மூலமாகத்தான் திறன் வளர்ச்சி பெறுகிறது.
இப்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் தமக்குத் தேவையான தொழிலாளிகளுக்குப் பயிற்சி அளிக்கும் செலவையும் மிச்சம் பண்ண விரும்புகின்றன. ஒரு குறிப்பிட்ட துறையில் ஆட்கள் தேவை என்றால், அதைக் கல்வி நிறுவனங்களையே தயார் செய்து கொடுக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கிறார்கள். இன் சர்வீஸ் டிரைய்னிங்” கிடையாது. வேலையில் சேரும்போதே பயிற்சி கொடுக்கும் முறையெல்லாம் இப்போது கிடையாது. எல்லாச் செலவையும் செய்து கல்வி நிறுவனங்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். அதில் சில பேரை கார்ப்பரேட்டுகள் வேலைக்கு எடுத்துக்கொள்வார்கள், வேண்டாமென்றால், தூக்கியெறிந்துவிடுவார்கள். கார்ப்பரேட் இலாபத்திற்காக அளவுக்குமீறி வற்புறுத்தப்படுகின்ற ஒன்றுதான் திறன் மேம்பாடு.
♦ பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு அப்பால் தன்னார்வலர்களை வகுப்பெடுக்க அனுமதிக்கலாம் எனப் பரிந்துரை செய்யப்படுகிறது. இத்தன்னார்வலர்களைப் பயிற்றுவிக்க தேசிய விரிவுரையாளர் திட்டம் என்றொரு அமைப்பை உருவாக்கக் கோருகிறது. இது ஆர்.எஸ்.எஸ். கும்பலைப் பள்ளிக்குள் திணிக்கும் சதி என விமர்சிக்கப்படுவது குறித்துத் தங்களின் கருத்தென்ன?
◊ தன்னார்வலர்கள் என்பது கல்விக்குப் புறம்பான சக்திகளைக் கல்விக்கூடங்களில் நுழைய வைப்பது என்று அர்த்தம். கல்விக்கூடங்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்பதைத்தான் நாமும் விரும்புகிறோம். அந்நியர்கள் ஆசிரியர்கள் என்ற போர்வையில் உள்ளே நுழையும்போது எப்படிக் கல்விக்கூடங்கள் சுதந்திரமாக இயங்க முடியும்? அவர்களைக் கண்டு அஞ்சுகின்ற சூழல் தானே இருக்கும்.
அந்நிய சக்திகள், இன்னும் சொல்லப்போனால் உள்நோக்கம் கொண்டவர்கள் கல்விக்கூடங்களில் நுழைந்து மாணவர்களை மனமாற்றம் அல்லது மூளைச்சலவை செய்வதற்கு அல்லது முரட்டுத்தனமாகத் தங்கள் பால் இழுப்பதற்குமான வழி இது. கல்விக்கூடங்களை மோசமான சமூக அரசியலுக்குப் பயன்படுத்துவதற்கான வேலை இது.
♦ கட்டணங்களைத் தீர்மானிப்பதற்கு கமிட்டிகள் அமைக்கப்படுவதைப் போல, இந்த வரைவு அறிக்கையில் ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா?
◊ இவர்கள் நேரடியாக அதில் வரவில்லை. கட்டணங்களைச் சீரமைப்பது என்றால், அதற்கு அறிவியல்பூர்வமான அடிப்படைகள் இருக்க வேண்டும், இல்லையா? இரண்டாவது, என்ன கட்டணம் வேண்டுமானாலும் சீரமைத்துக் கொள்ளட்டும். பத்து ரூபாய்கூட வைத்துக்கொள்ளட்டும். பத்து ரூபாய் கொடுக்கமுடியாத அளவிற்குக்கூடப் பையன் இருக்கிறான் என்றால், அவனுக்கு என்ன ரெமிடி- (தீர்வு)? இதில் சமூகநீதி பற்றி எதுவுமே பேசவில்லை. புறக்கணிக்கப்பட்ட, இயலாத வர்க்கத்தினர் கல்வியை எட்டுவதற்குக் கூடுதல் உதவி என்பதைப் பற்றியும் எந்தக் குறிப்பும் கிடையாது.
தேசிய ஆராய்ச்சி அமைப்பு (நேஷனல் ரிசர்ச் பவுண்டேஷன்) – குறித்துப் பேசப்படுகிறது. ஆய்வுகள் அதன் கீழே இருக்குமாம். அதற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப் போவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாராய்ச்சி அமைப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தகுதி, திறமை பற்றிப் பேசுகிறார்களே தவிர, சமூக நீதி (இட ஒதுக்கீடு)பற்றிச் சொல்லவில்லை. இன்குளுசிவ் பற்றி, அனைவரையும் உள்ளடக்குவது பற்றிப் பேசாமால், அயல்நாட்டு மாணவர்கள் இந்தியாவிற்கு வந்து ஆய்வு செய்வதற்கு இந்த நிதி பயன்படும் எனக் கூறப்படுகிறது.
ஸ்டடி இன் இந்தியா” இந்தியாவில் கல்வி பயிலுவோம் என ஆவணம் பேசுகிறது. அதற்கு ஒரு உள்நோக்கம் இருக்கிறது. இயற்பியல் படிப்பதற்கோ, தொழில்நுட்பம் படிப்பதற்கோ எந்தவொரு அந்நிய மாணவனும் இந்தியாவிற்கு வரப்போவது இல்லை. இங்கே வருபவர்கள் பெரும்பாலும் சமூக அறிவியல் தொடர்பாக, மொழியியல் தொடர்பாக, பண்பாடு கல்வி தொடர்பாகத்தான் வருகிறார்கள்.
இவர்கள் சமஸ்கிருதத்திற்குக் கொடுக்கக்கூடிய முக்கியத்துவம், இந்திக்குக் கொடுக்கும் 50 கோடி வைத்துப் பார்த்தால், அயல்நாட்டிலிருக்கும் உயர் வர்க்க இந்தியர்கள் அல்லது இந்திய மாயைக்கு உட்பட்ட வெள்ளைக்காரர்களின் பிள்ளைகளை இந்திய மோகத்தில் ஈடுபடுத்துவதற்காக, இங்கே இண்டாலஜி படிங்க, சமஸ்கிருதம் படிங்க” எனத் தூண்டுவதற்கான ஒரு வாய்ப்பாகத்தான் இந்த ரிசர்ச்சைக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் அடிமட்ட மக்கள் ஆய்வுப் படிப்பிற்கு வருவதைப் பற்றி அக்கறை கொள்ளவேயில்லை.
♦ டெல்லி பல்கலைக்கழகம் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்பு என்ற முறையைப் புகுத்த முயன்றபோது, அது மாணவர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. வரைவு அறிக்கை மீண்டும் அதனைப் பரிந்துரைப்பது ஏன்?
◊ முன்பு ஹானர்ஸ் என்று இருந்தது. பி.ஏ. (ஹானர்ஸ்) என்பார்கள். பி.ஏ. மூன்றாண்டுகள் படிப்பார்கள். ஒரு வருடம் கூடுதலாக ஒரு சப்ஜெக்டை எடுத்து படித்தால் ஹானர்ஸ் என்பார்கள். இந்த மூணு நாலு, அல்லது நாலு மைனஸ் ஒன்னு என்பது எல்லாம் நம்மை ஏமாற்றுவதற்கான தகிடுதத்தங்கள். நான்கு ஆண்டு பட்டப்படிப்பு என ஆண்டைக் கூட்டுகின்றபொழுது சாதாரண பொருளாதார வசதிகூட இல்லாத மாணவர்கள் அயர்ச்சி அடைந்து விடுவார்கள். இன்னொருபுறம் அவர்கள் கல்வியைப் பாதியிலேயே கைவிட்டு வெளியேறுவதற்காக எக்ஸிட்” என்ற வாய்ப்பு. ஆக, இறுதி நிலைக்குச் செல்பவர்கள், இவர்கள் விரும்புகின்ற, இவர்களுக்கு அக்கறையுள்ள சமூகப்பிரிவினராக மட்டுமே இருப்பார்கள். எனவே, இதுவொரு சதி.
♦ உயர்கல்வி வளாகங்களில் நிலவுகின்ற சாதியப் பாகுபாட்டை நீக்குவதற்கு, அவ்வளாகங்களில் வன்கொடுமைகளில் ஈடுபடுவோரைத் தண்டிப்பதற்கு வரைவு அறிக்கை ஆலோசனைகள் கூறியிருக்கிறதா?
◊ சமூக நீதி, இன்க்லுசிவ்னஸ் பற்றி இது பேசவில்லை. இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசவில்லை. நீங்கள் யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்று சில இடங்களில் சொல்கிறார்கள். மொழிச் சிறுபான்மையினர் பற்றி வரும் போது மாநில அரசு அவர்களை அடையாளப்படுத்த வேண்டும் என்கிறார்கள். ஆனால், இந்தச் சட்டவரைவில் சமூக இடைவெளிகள், சமூக மோதல்கள் இவற்றை எப்படித் தீர்க்க வேண்டும் என்பது குறித்து எந்தக் கருத்தும் வரவில்லை. ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதைக் குறிப்பிடும் இந்த ஆவணம், மைய அரசின் கல்வி நிறுவனங்களில் சமூக நீதி முறையாக அமல்படுத்தப்படாமல் இருப்பது பற்றிய கேள்வியை எழுப்பவில்லை. சமூக நீதியைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத ஒரு ஆவணம் இது.
♦ தனியார் கல்லூரிகள், தமது நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களைச் சேர்ப்பதில்லை. அனைத்துக் கல்லூரிகளையும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளாக மாற்ற வேண்டும் என வரைவு அறிக்கை பரிந்துரைத்திருக்கும் நிலையில் இட ஒதுக்கீடு கொள்கையின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?
◊ இப்போதைய சூழலில் தன்னாட்சி நிறுவனங்களுக்கும் சமூக நீதிச் சட்டங்கள் பொருந்தும். ஆனால், இதனை நெடுநாளாகவே நீர்த்துப்போகச் செய்துகொண்டிருக்கிறார்கள். (அரசு) உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் உதவி பெறாத பாடத்துறைகள் அல்லது மாலை நேர வகுப்புகளில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவது கிடையாது. இட ஒதுக்கீட்டைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்று 1993 கல்வித்துறையிலிருந்து ஒரு கடிதம் வந்தது. ஒரு நிதி உதவி பெறும் கல்லூரி நிதி உதவி பெறாத துறைகளுக்குக்கூட இட ஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவித்து இருக்கிறார்கள். ஆனால், யாரும் அதைப் பின்பற்றுவது கிடையாது. யாரும் அது குறித்துக் கவலையே பட்டது கிடையாது. அரசுத்துறையும் அதில் தலையிட்டது கிடையாது.
இந்தச் சூழ்நிலையில்தான் அப்சொல்யூட்” – முற்றொருமை கொண்ட தன்னாட்சி எனக் கல்விக் கொள்கை கூறுகிறது. உங்களை மாநிலச் சட்டங்கள் கட்டுப்படுத்தாது என்று சொன்னால், என்ன அர்த்தம்? இனி, 42,000 கல்லூரிகள் என்பது 42,000 தனி நிறுவனங்கள். உங்களை எந்த ரெகுலேசனும் கட்டுப்படுத்தாது. நேரா” – உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் மட்டுமே கட்டுப்படுத்தும் எனக் கூறுகிறார்கள். இன்றைக்கும் கொஞ்சமாவது இடஒதுக்கீடு இருக்கிறது என்றால், அதற்கு யார் காரணம்? மாநிலச் சட்டங்கள்தான் காரணம். அந்த மாநிலச் சட்டங்களைக் காலி செய்து விட்டு, சமூக நீதியை எப்படிக் கொண்டு வர முடியும்? கிடைத்து வருகின்ற சமூக நீதிக்கான வாய்ப்புகளைக்கூட மறுக்கின்ற வரைவு இது.
♦ இந்த அறிக்கை Philanthropist கொடையாளர்கள் பற்றிப் பேசுகிறதே ….
◊ பச்சையப்பன் கல்லூரிகள் பச்சையப்பன் முதலியாருடைய கொடைத்தன்மையால் வந்தன. புதுக் கல்லூரியை இசுலாமியப் பெருமக்களில் வசதியானவர்கள் பணம் கொடுத்து ஆரம்பித்தார்கள். அந்த கல்வியெல்லாம் இலாப நோக்கமில்லாமல் தரப்பட்ட கல்வி. குறைந்த கட்டணம் அல்லது அரசு மானியத்தில் கட்டணமில்லாமல் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், கார்ப்பரேட் யுகத்தில் Philanthropy கிடையாது. Philanthropy is a business commodity. கொடை என்பது இன்று ஒரு வணிகச் சரக்கு. கொடை என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் எல்லா வரியிலிருந்தும் விலக்குப் பெறுகிறார்கள். அண்ணாமலைச் செட்டியார், வேந்தர் என்ற முறையில் கார்ப்பரேட் வரிகூடக் கொடுக்கக்கூடாது என்று உட்கார்ந்திருந்தார். சொத்தைச் சம்பாதிக்க தான் கல்வி நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். அதை எப்படி நாம் Philanthropy கொடை என்று சொல்ல முடியும்? பண முதலைகளுக்குக் கொடையாளர்கள் என்று பேர் கொடுப்பதால், தேவனாகிவிட மாட்டார்கள். அம்பானியும் அதானியும் நுழைவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். கல்விக் கொடையாளர்கள் என்ற முகாந்திரத்தில் எல்லா வரிகளிலிருந்தும் அவர்களுக்கு விலக்குக் கொடுக்கப் போகிறார்கள்.
♦ அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழி வழியில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவரும் வேளையில், வரைவு அறிக்கை தாய்மொழி வழிக் கல்வி குறித்து என்ன பார்வையை, ஆலோசனைகளை முன்வைக்கிறது?
◊ எட்டாவது வரைக்கும் தாய்மொழியில் கல்வி வழங்க வேண்டுமென்றும், வட்டார மொழிகளிலும் வழங்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அதெல்லாம் சரிதான். ஆனால், தாய்மொழியோடு நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மும்மொழி என்று கூறப்படுவதோடு, நான்காவது மொழியை வேறு வடிவில் திணிக்கிறார்கள். தாய்மொழியைப் பற்றி சொல்லும்போது பீடிகையில் ஆரம்பித்துவிட்டு, இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது சமஸ்கிருதம் என்றும் இந்திய மொழிகளெல்லாம் சமஸ்கிருதத்தால் வளம் பெற்றுள்ளதாகவும் சொல்கிறார்கள். இவ்வாறான வரைவுக்கொள்கை எப்படி நியாயமான வரைவுக்கொள்கையாக இருக்க முடியும்?
எந்தவொரு இடத்திலும் தமிழின் சிறப்பைக் குறிப்பிட்டுப் பேசவில்லையே? கௌடில்யன் பற்றிப் பேசுபவன் திருவள்ளுவரைப் பற்றிப் பேசவில்லையே, ஏன்? அவர்களுக்கு முன்னோடிகளெல்லாம் அவர்கள் தான். இந்தியாவில் பல பண்பாடுகள் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், பண்பாட்டு மோதல்கள் நடந்து வருகின்றன. ஒரு பண்பாட்டுத் திணிப்பை எதிர்த்து மற்றொரு பண்பாடு போராடிக்கொண்டேயிருக்கிறது. இதையெல்லாம் பிரதிபலிக்க வேண்டும் கல்விக்கொள்கை. அதைவிட்டுவிட்டு, ஒரு குறிப்பிட்ட தரப்பை மட்டும் பெருமைப்படுத்துவதென்பது பிறரைச் சிறுமைப்படுத்துவதற்கு ஒப்பாகும். எனவே, தாய்மொழியைப் பற்றிய விருப்பம் என்பது நியாயமான முறையில் அமையவில்லை, அறிவியல்பூர்வமாக அமையவில்லை. வட்டார மொழிகளை மேம்படுத்துவதற்கான எந்தத் திட்டமும் வரைவு அறிக்கையில் இல்லை.
இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை வளர்ப்பதெற்கென்று 50 கோடி கொடுத்தார்கள் அல்லவா? அதைப் போன்றே சமஸ்கிருதத்திற்கும் தனித்தொகையை ஒதுக்கியிருக்கிறார்கள் அல்லவா? ஆனால், வட்டார மொழிகளை நவீன பாடங்களுக்கு இசைவாக முன்னேற்றுவதற்காக ஒரு பைசாகூட ஒதுக்காத மைய அரசு, தாய்மொழியைப் பற்றி பேசவில்லை என்று நாம் வருத்தப்படுவதில் பொருள் கிடையாது. இதில் கொஞ்சம்கூட நேர்மையையும் பார்க்க முடியவில்லை.
♦ பிரதம மந்திரி தலைமையில் ராஷ்டிரிய சிக்ஷா ஆயோக். அதனை மாதிரியாகக் கொண்டு மாநிலங்களில் முதலமைச்சர்கள் தலைமையில் மாநில சிக்ஷா ஆயோக்குகள் அமைக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கிறது வரைவு அறிக்கை. கல்வி அமைச்சகங்களுக்கு மேலாக இத்தகைய அமைப்புகளை அமைக்க வேண்டிய அவசியம் என்ன?
◊ ராஷ்டிரிய சிக்ஷா ஆயோக் (தேசியக் கல்வி கமிசன்) தான் இனி கல்வி குறித்த கொள்கை முடிவெடுக்கும் ஒரே அமைப்பு. பிரதம அமைச்சர் மற்றும் சக அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட அமைப்பாக இது உருவாக்கப்படுகிறது.
நாடெங்கும் உள்ள 820 பல்கலைக்கழகங்கள் 42,000 கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இவர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். ஒற்றைக் கட்டுப்பாடு.
உயர்கல்வியை பொருத்தவரைக்கும் நேஷனல் ஹையர் எஜூகேஷன் ரெகுலேட்டரி அத்தாரிட்டி தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம். இது மைய அரசால் உருவாக்கப்படுகின்ற, அதிகாரிகளை அதிகமாகக் கொண்ட அமைப்பு. புதிய கல்வி நிறுவனங்களைத் தொடங்கவிருக்கும் தனியார்கள், இனி, பல்கலைக்கழக இணைப்புக்குப் போக வேண்டாம். மாநில அரசின் அனுமதிக்குக் காத்திருக்க வேண்டாம். மாநில அரசு புதிய கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் அதிகாரத்தை இழக்கிறது. அந்த அதிகாரத்தை நேரா என்கிற தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் எடுத்துக்கொள்கிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி, மாநில அரசின் கண்காணிப்பின் கீழ் உள்ள அத்துணை கல்வி நிறுவனங்களையும் மைய அரசின் அதிகாரிகள் அமைப்பான நேராவுக்கு கொண்டு போவதால், மாநில அரசிற்கு உயர்கல்வி மீது எவ்வித உரிமையும் பொறுப்பும் இருக்காது.
இனி, ரெகுலேஷன்ஸ் இருக்காது, ஒழுங்காற்று விதிகள் இருக்காது. ஆனாலும், ஒழுங்கான ஒழுங்காற்றுதல் (light, but tight) இருக்கும் என்கிறார்கள். தனிநபர்கள்தான் ஒழுங்காற்றுதல் செய்வார்கள் என்கிறார்கள். ஆக, விதிகள் மூலமாகக் கட்டுப்படுத்துவதை விட்டுட்டுத் தனி நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே இனி இது நடக்கும்.
♦ பாடத்திட்டங்களையாவது மாநில அரசுகள் வடிவமைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றதா?
◊ மாநிலத்தில் முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்படுகின்ற மாநிலக் கல்வி கமிசன் என்பது மைய அரசின் ராஷ்டிரிய சிக்ஷா ஆயோக் அமைப்பிற்குக் கட்டுப்பட்ட ஒன்றே தவிர, சுதந்திரமாக இயங்க முடியாது. மாநில அமைப்புக்கள் மத்திய அரசின் கிளை அங்கமாகும்போது பாடத்திட்டத்தை அவர்களின் வரையறைக்குட்பட்டு அமைக்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆரம்பக்கல்வித் திட்டத்தில் என்னென்ன இடம்பெற வேண்டும் என்று மைய அரசு சொல்கிறதோ, அதை மீறி மாநில அரசுகள் வேறெதுவும் சொல்லிக்கொடுக்க முடியுமா? செகண்டரி எஜுகேஷனைப் பொருத்தவரை
8 செமஸ்டர், 4 வருடங்கள் என்பதை மாநில அரசுகள் மாற்றமுடியுமா? கூடுதலாகத் தொழிற்கல்வி வரவேண்டுமென்பதை, மாநில அரசுகளால் மாற்றமுடியுமா? கூடுதல் மொழிப்பாடம் என்பதை மாநில அரசுகளால் நிராகரிக்க முடியுமா?
இவையனைத்தையும் எதிர்க்கின்ற, மறுக்கின்ற மாநில அரசு ஒன்று இருந்தால்தான் நல்லது. துரதிருஷ்டவசமாக அப்படி ஒரு அரசை நாம் பார்க்கவில்லை. உரிமைகளை யாரும் நீங்கள் கேட்காமல் தருவதில்லை, நாமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படித் துணிச்சலில்லாத அரசுகள் எப்படி மாநில அமைப்புக்களைப் பாதுகாக்க முடியும்? எனவே, மாநில பாடத்திட்டங்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியுமா என்பது ஐயத்திற்குரியதாக அமைந்துள்ளது. ஏனென்றால் இது ஒற்றைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
மேலும், இந்த வரைவு அறிக்கை அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பே அதனின் ஆலோசனைகள் கொல்லைப்புற வழியில் நடைமுறைக்கு வந்துவிட்டன. உதாரணமாக, யு.ஜி.சி. அமைப்பு முன்பெல்லாம் தனது பரிந்துரைகளை மாநில அரசிற்குதான் அனுப்பி வைக்கும். இப்பொழுது ஒவ்வொரு கல்லூரியிலும் சமஸ்கிருத வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்ற பரிந்துரையை மாநில அரசிற்கு அனுப்பாமல், நேரடியாகக் கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது, யு.ஜி.சி.
♦ இந்தியாவைப் பொருத்தவரை பல்வேறு தேசிய இனங்கள், பண்பாடு எனப் பன்முகத்தன்மையுடையதாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தேசியக் கல்விக் கொள்கை என்ற ஒற்றைக் கல்விக்கொள்கையை அறிவியல்பூர்வமானதாகப் பார்க்க முடியுமா?
◊ மத்திய அரசு சீரான ஒற்றைக் கல்விக்கொள்கை வேண்டும் எனச் சொல்கிறது. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதை நம் போன்றவர்கள் ஏற்றுக்கொள்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்று இந்த தேசத்தின் மூத்த தலைவர்கள் சொல்லிவிட்டுப் போனார்கள். ஆனால், மத்திய அரசின் கல்விக்கொள்கை இதை மறுத்துவிட்டு யூனிட்டி த்ரூ யூனிஃபார்மிட்டி” என்கிறார்கள். அதாவது ஒற்றைக் கல்வித்திட்டத்தின் மூலம் ஒற்றுமை! இதற்குத் திணிப்பு என்றுதானே அர்த்தம். இது தேசிய இனங்களின் உரிமை மறுப்பு ஆகும்.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை 1967- இருந்து அமல்படுத்தி வருகிறோம். இதனால் நமக்கு என்ன இழப்பு ஏற்பட்டது? வெளிநாடுகளில் ஆராய்ச்சித்துறை, உயர்பதவிகள் வகிப்போரில் பெரும்பாலானோர் இருமொழித் திட்டத்தில் பயின்றவர்கள்தான்.
படிக்க:
♦ கல்வியில் தனியார்மயம் – ஒரு இந்திய வரலாறு! – பேரா அ. கருணானந்தம்
♦தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிப்போம் ! – ஒரு நாள் கருத்தரங்கச் செய்திகள் படங்கள்
மும்மொழி என்று வந்துவிட்டால் சமனற்ற தளம் உருவாக்கப்படுகிறது. இந்தி பேசுபவர்களுக்கு அதிக ஆதாயம், இந்தி தெரியாதவர்களுக்குச் சற்றுப் பின்னடைவு ஏற்படக்கூடிய சூழல். இது ஒரு சமனற்ற சூழல். மும்மொழி என்பது சமன் தன்மையைச் சமனற்றத் தன்மையாக மாற்றிவிடுகிறது. எனவே, ஒரே தேசியக் கல்விக் கொள்கை என்பது ஏற்கமுடியாதது, நடைமுறை சாத்தியமற்றது.
கல்விக்கொள்கையைப் பெரும்பாலும் மக்களுடன் நெருக்கமாக உள்ள மாநில அரசுகள் தான் உருவாக்க வேண்டும். மத்திய அரசின் பொறுப்பு ஒருங்கிணைப்பது, ஆலோசனைகள் தருவது, உதவி செய்வது என்ற அளவில் நிறுத்திக்கொள்ளவேண்டும். இப்போது அப்படி கிடையாது. இப்பொழுது சோல் அத்தாரிட்டி.” அனைத்தையும் ஒற்றைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருகின்றனர். இது வரம்பு மீறிய செயல், இந்தியாவையே சீரழிக்கக்கூடிய செயல்.
நேர்காணல் : பிரகாஷ், இளங்கதிர்.
புதிய ஜனநாயகம் மின்னூல் வாங்க :
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
₹15.00Add to cart |
₹15.00Add to cart |
₹15.00Add to cart |
அவரின் பார்வை மிக சரியானது