05.01.2025
தொடரும் தனியார்மயப் படுகொலைகள்!
தனியார் கல்வி நிறுவனங்களைப் பாதுகாக்கும் அரசே முதல் குற்றவாளி!
கண்டன அறிக்கை
விக்கிரவாண்டி செயின்ட் மேரீஸ் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்த மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமியின் மரணச்செய்தி கேட்போர் அனைவரையும் கலங்கச் செய்திருக்கிறது. பள்ளி நிர்வாகம் சொல்லும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள், அவர்களுக்கு ஒத்தூதும் ஊடகங்கள், இழவு வீட்டில் காசோலையை நீட்டி வாயடைக்க நினைக்கும் அரசாங்கம், நேரில் ஆய்வு செய்யாமலே தரச்சான்று வழங்கியிருக்கும் அதிகார வர்க்கம் என இப்படுகொலைக்குப் பின்னிருக்கும் காரணங்களும், கைகளும் பல கோணங்களில் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. கோணங்கள் பலவாயினும், கொலைக்குக் காரணம் தனியார்மயம்தான் என்பதை ஆண்டாண்டு காலமாகத் தொடரும் நம் பிள்ளைகளின் மரணங்கள் உரத்துச் சொல்கின்றன.
கேள்விகளுக்கு யார் பதில் சொல்வது?
மதியம் உணவு இடைவேளைக்குப் பின் கழிவறைக்குச் சென்ற குழந்தை லியா லட்சுமி வகுப்பறைக்குத் திரும்பவில்லை; தேடினோம்; கழிவுத் தொட்டியில் கண்டெடுத்தோம்; மருத்துவமனையில் சேர்த்தோம்; முன்பே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தார்கள் என பள்ளி நிர்வாகம் சார்பாக இந்த மரணத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
சுமார் இரண்டாயிரம் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் கழிவுத் தொட்டி, இற்றுப்போன தகரத்தாலும் காகிதத்தாலும் மூடப்பட்டிருந்தது ஏன்? உதவியாளர் துணை இல்லாமல் மூன்றரை வயது குழந்தையை தனியே கழிவறைக்குச் செல்ல அனுமதித்தது ஏன்? குழந்தையைத் தூக்க முயற்சி செய்வது போன்ற காணொளியை வெளியிட்ட பள்ளி நிர்வாகம், குழந்தை அந்தப் பகுதிக்குச் செல்லும் காட்சியை வெளியிடவில்லையே ஏன்? கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் பள்ளிக்கு தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. முறையாகப் பராமரிக்கப்படாத கழிவுநீர்த் தொட்டியை எட்டிப்பார்க்காமல், இலஞ்சம் வாங்கிக் கொண்டு தரச்சான்று வழங்கிய அதிகாரியை கைது செய்யவில்லையே ஏன்? இந்த கேள்விகளுக்கெல்லாம் யார் பதில் சொல்வது?
பதில் சொல்ல வேண்டிய பள்ளி நிர்வாகிகள், தங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வந்துவிட்டதாக நாடகமாடி, மருத்துவமனைக்குச் சென்று படுத்துக்கொண்டு சிறைக்குப் போகாமல் தப்பிக்க நினைப்பது ஒருபக்கம். மறுபக்கத்தில், அரசாங்கத்தின் சார்பில் பதில் சொல்ல வேண்டிய அமைச்சரோ, இழவு வீட்டில் குழந்தையின் பிணத்துக்கு மேல் காசோலையை நீட்டி சத்தமின்றி பிரச்சினையை அமுக்க நினைக்கிறார். தவறு செய்திருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுப்போம் என்கிறார். தவறு நடந்திருக்கிறதா என்பதையே இனிதான் விசாரித்து முடிவு செய்யப் போகிறார்களாம். இதுதான், குழந்தைகளின் உயிரின் மீது தனியார் பள்ளி நிர்வாகங்களும் அரசாங்கமும் காட்டும் அக்கறையின் யோக்கியதை. உயிரைப் பற்றியே மயிரளவுக்கும் கவலைப்படாத இந்தக் குற்றக்கும்பல்தான், ‘தரமான’ கல்வி தந்து வளமான எதிர்காலத்தை உருவாக்கித் தரப் போகிறார்களாம்.
குழந்தை காணாமல் போனவுடன் உடனே பெற்றோருக்கு தகவல் சொல்லவில்லை. பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல வரும்போது கூட உண்மையை முழுமையாகச் சொல்லாமல், குழந்தையை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவே சொல்லியிருக்கின்றனர். ஆனால், அதற்கு முன்பே போலீசுக்கும் தாசில்தாருக்கும் விசயம் தெரிந்து பள்ளி வளாகத்தில் இருந்திருக்கிறார்கள். கழிவுநீர்த் தொட்டியினுள்ளே விழுந்திருந்தால் குழந்தையின் உடலில் காயங்கள் இல்லையே ஏன், தொட்டியின் உள்ளே விழுந்த குழந்தையின் துணிகூட ஈரமாகவில்லையே ஏன், அத்தொட்டி இருக்குமிடத்திற்குக் குழந்தை போனது எப்படி? என அடுக்கடுக்காய் கேள்விகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. பதில் சொல்லத்தான் யாரும் தயாராய் இல்லை.
தொடரும் கொலைகள் – குற்றவாளிகள் யார்?
2004 ஆம் ஆண்டில் கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் 94 குழந்தைகள் தீயில் கருகி மாண்டு போயினர். 2012 ஆம் ஆண்டில் சேலையூர் சீயோன் பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியே விழுந்து, பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார் ஆறு வயது குழந்தை ஸ்ருதி. அதன் பிறகு, கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் கல்லூரியில் மூன்று மாணவிகள் மரணத்தின் ‘மர்மம்’ இன்றும் நீடிக்கிறது. அதே கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதியின் படுகொலை தமிழ்நாட்டையே உலுக்கியது. இவையெல்லாம் சட்டென நினைவுக்கு வரும் சம்பவங்கள் மட்டுமே. இவை போல நூற்றுக்கணக்கான ‘விபத்துகள்’, ‘தற்கொலைகள்’ தனியார் கல்வி நிறுவனங்களில் நடந்துகொண்டே இருக்கின்றன. இரண்டு நாட்கள் செய்தியாகிப் பின் காணாமல் அடிக்கப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் பின்னிருந்து இயக்கிவரும் அந்த சக்தி எது?
அரசின் தனியார்மயக் கொள்கை தான் முதன்மைக் காரணம் என்பதை உரத்துச் சொல்ல வேண்டும். இத்தனை நூறு குழந்தைகளைக் காவு வாங்கிய பின்னும் தனியார் கல்வி நிறுவனங்களை அனுமதித்து, பொதுமக்களின் கோபாவேசத்தில் இருந்து காலமெல்லாம் காப்பாற்றி வரும் அரசு தானே முதல் குற்றவாளியாக இருக்க முடியும்.
ஆயிரங்கள், இலட்சங்கள் என பெற்றோரிடம் கொள்ளையிட்டாலும் கூட பேருந்தின் ஓட்டையையும், கழிவுநீர்த் தொட்டியின் மூடியையும் கூட சரிசெய்ய வக்கில்லாத நிலையிலா தனியார் பள்ளிகள் இயங்குகின்றன? அத்தனை சிரமப்பட்டு கல்விச்சேவை ஆற்ற வேண்டிய அவசியம் என்ன? எத்தனைக் குறைபாடுகள் இருந்தாலும் இவர்களுக்கு அனுமதியும் தரச்சான்றும் அரசு அதிகாரிகள் வழங்குவது எப்படி? பாளையங்கோட்டை அரசு சித்தமருத்துவக் கல்லூரியில் போதிய இடமில்லை என மாணவர் சேர்க்கை அங்கீகாரத்தை இரத்துச் செய்யத் துணிவிருக்கும் அரசுக்கு, இந்தத் தனியார் பள்ளிகள் மீது கைவைக்க துணிவு வருவதில்லையே ஏன்?
அரசு கல்வி நிறுவனங்களை ஒழித்துக் கட்டி, தனியாரைக் கொழுக்கை வைப்பதையே கொள்கையென அறிவித்துக் கொள்ளும் அரசிடம் துணிவை எதிர்பார்க்க முடியுமா? பயிரை மேயும் வேலியிடம், பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாதல்லவா!
இப்படி ஆயிரம் ஓட்டைகளை வைத்துக் கொண்டிருக்கும் தனியார் பள்ளிகள் எல்லாம் சங்கம் அமைத்து, அதற்கு விழா நடத்துவார்களாம். அதற்கு பள்ளிக்கல்வி அமைச்சர் வாழ்த்திப் பேச போவாராம். அமைச்சரோ, அனைவருக்கும் கல்வி தருவதில் தனியாரின் பங்கு மகத்தானது என்பராம். தனியார் கல்விக் கொள்ளையர்களோ, கழிவறைக்கும் வகுப்பறைக்கும் வக்கற்று கிடக்கும் அரசுப் பள்ளிகளுக்கு, தமது கொள்ளையில் இருந்து பிச்சையிடுவதாக அறிவிப்பார்களாம். அமைச்சர் மகிழ்ந்து போய் பாராட்டுவாராம். இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் நிலைமை. ‘கல்வியில் சிறந்த’ தமிழ்நாட்டின் நிலைமையே இப்படி என்றால், இதர மாநிலங்களைப் பற்றி சொல்லவா வேண்டும்.
என்ன செய்யப் போகிறோம்?
விக்கிரவாண்டி செயின்ட் மேரீஸ் பள்ளி உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் எல்லாம், கல்வி வாசனையே அறியாது புறக்கணிக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கு கல்விச் சேவையாற்றியது எல்லாம் அந்தக் காலம். இன்றோ, பெரும்பாலான சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தனியார்மயத்தை தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, கல்வியைக் கொழுத்த வியாபாரமாக மாற்றிவிட்டனர் என்பதே உண்மை. தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசே கையகப்படுத்தி, அனைவருக்கும் இலவசக் கல்வியை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையைத்தான் இப்போதும் நாம் முழங்க வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்பதாகச் சொல்லிக் கொண்டே, அதன் பல்வேறு அம்சங்களை வெவ்வேறு பெயர்களில் புகுத்திக் கொண்டிருக்கும் திமுக அரசாங்கத்தின் போக்கினை எதிர்த்துப் போராடுவதும், கல்வியில் தனியார்மயத்தை ஒழிக்கப் போராடுவதும் தனித்தனியானவை அல்ல என்பதை லியா லட்சுமியின் மரணம் மீண்டும் நமக்கு உணர்த்துகிறது.
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram