24.07.2022
கலகம் பிறக்காமல் நீதி கிடைக்காது !
ஆளும் வர்க்கக் கைக்கூலிகளே அஞ்சி நடுங்குங்கள் !
கள்ளக்குறிச்சி அருகே கனியமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த சிறீமதி மர்மமான முறையில் இறந்தார். அவர் இறந்து பல மணி நேரங்கள் கழித்தே பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்த பெண்ணை உடனே பார்ப்பதற்கு கூட பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. வழக்குரைஞர்களின் தொடர் முயற்சிகளுக்குப் பின்னரே இறந்த மகளை பெற்றோர்கள் பார்த்தனர். மகளின் உடலில் இருந்த காயங்கள் பெற்றோர்களுக்கு இது கொலையாக இருக்குமோ என்ற எண்ணத்தை வரவழைக்கிறது. பெற்றோர்களின் நியாயமான சந்தேகத்தை தீர்க்க வேண்டிய போலீசும் மாவட்ட நிர்வாகமும் பள்ளி நிர்வாகத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விசாரிக்கிறோம் என்று கூறி வழக்கை இழுத்தடித்து வந்தனர். மகளின் உடலை மறுகூராய்வு செய்ய வேண்டும், மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்பதே வைக்கப்பட்ட கோரிக்கை.
இந்த மிகச் சாதாரணமான கோரிக்கையைக் கூட நிறைவேற்றாத போலீசும் மாவட்ட நிர்வாகமும் இப்பிரச்சினையை இழுத்தடிப்பதன் மூலம் பெற்றோர்கள் கோரிக்கையை கைவிட்டு பெண்ணின் உடலை வாங்கிக்கொண்டு ஒப்பாரி வைப்பார்கள் என்று நினைத்தது. ஆனால் நடந்ததோ வேறு, சிறீமதி அம்மா தன்னுடைய மகளின் இறப்புக்கு நீதி கேட்டு வெளியிட்ட கண்ணீர் வீடியோ கேட்காதவரையும் கேட்க வைத்தது, மனம் உருகாதவரையும் உருக வைத்தது. சாதி வித்தியாசமின்றி பலரும் கடந்த 17.07.2022 அன்று காலை தன்னெழுச்சியாக வந்திருக்கின்றனர். குறிப்பாக சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர் என்பதை முகநூல் பதிவுகள் வழியே கண்டறிய முடிகின்றது. இதைத்தான் முற்போக்கு சொம்புகள் கலவரத்துக்காக வெளியே இருந்து திரட்டிய கூட்டம் என்கின்றன.
2005-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இப்பள்ளிக்கு எதிராக போராடி இருக்கிறார்கள். இப்பள்ளியில் இதுவரை 7 மாணவர்கள் மர்மமான இறந்து போயிருக்கிறார்கள் என்பதை பலரும் தெரிவிக்கின்றனர். இப்பள்ளியின் மீது பல புகார்கள் உள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும், இப்பள்ளியின் தாளாளர் ஆர்.எஸ்.எஸ்-ன் முக்கியநபராக உள்ளார். இப்பள்ளி ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்கு தளமாக இருந்திருக்கிறது. இந்த பள்ளியின் மீது சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்கனவே இருந்த வெறுப்பு, மாணவியின் மர்ம மரணத்தை மூடி மறைக்கும் பள்ளி நிர்வாகம், அதற்கு அடியாள் செய்யும் போலீசு – மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள், சிறீமதி தயாரின் கதறல் ஆகியவையே மக்களை அணிதிரட்டியிருக்கிறது.
படிக்க : கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | Press Meet
மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு சாலை மறியல் செய்த மக்களை போலீசு விரட்டியடிக்க செய்த நடவடிக்கை, அவர்களின் கோபத்தை அப்பள்ளிக்கு எதிராகத் திருப்பியது. மாணவியின் பிணம் அழுகிக் கொண்டிருக்கிறது, காரணமான பள்ளியோ கம்பீரமாக வீற்றீருக்கிறது என்ற கோபம், பெருந்தீயாக மாறி பள்ளியை சுட்டுப்பொசுக்கியது. காலை 11 மணிக்குமேல் தொடங்கிய சூறையாடல் ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட போலீசுப்படை கடும் தாக்குதல் நடத்திய பிறகே நின்றது.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வோம், உடனே போராட்டகாரர்கள் கலைந்து வேண்டும், ஆசிரியப் பெருமக்களை எல்லாம் எடுத்தவுடன் கைது செய்ய முடியாது என போலீசு டிஜிபி அன்று பகல் 12 மணியளவில் நேரலையில் பேசினார். ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் சென்ற அதிரடிப்படை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொடூரமாகத்தாக்கி கைது செய்தது. மேலும் வீடியோவை வைத்து பலரையும் வீரப்பன் தேடுதல் வேட்டை போல தேடித்தேடி கைது செய்தது.
மாணவிக்கு நீதி வேண்டும் என்று யாரெல்லாம் போராடினார்களோ, அவர்கள் எல்லாம் கைது செய்து அதை பரபரப்பு செய்தியாக்கியது. இனி மக்கள் பிரச்சினைக்கு யாரும் குரல் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தை விதைக்கும் விதமாக, தொலைக்காட்சி, ஊடகங்கள், போலீசு, நிர்வாகம், நீதிமன்றம் என அனைத்துமே செயல்பட்டன.
ஜூலை 17-ம் தேதி அன்று மாலை பள்ளி செயலாளர் சாந்தி என்பவர், இப்பள்ளியில் ஏற்பட்ட சேதாரத்துக்கு சிறீமதியின் அம்மாதான் பொறுப்பு என்றும், இதற்கெதிராக அனைவரும் குரல் கொடுக்கவும் வேண்டும் என்றார். உடனே சொல்லி வைத்தாற்போல தனியார் மெட்ரிக் பள்ளியின் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார், பள்ளியின் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து அனைத்து தனியார் பள்ளிகளும் மூடப்படும் என்று தெரிவித்தார். அதற்கு பள்ளிக் கல்வித்துறை எதிர்ப்பு தெரிவிக்கவே 18.07.2022 அன்று தனியார் பள்ளிகளை மூடி எதிர்ப்பு தெரிவிப்போம் என்றனர். தமிழ்நாட்டு அரசின் எதிர்ப்பை மீறி 987 பள்ளிகள் மூடப்பட்டன. அப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், அப்பள்ளி முதலாளிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம், செய்த மு.க.ஸ்டாலின், அப்பெண்ணின் பெற்றோர்களிடம் போனிலாவது பேசியிருக்கலாமே?
மாணவி இறந்த பிரச்சினையில் போலீசு பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றும் வேலையில் செயல்பட்ட நடவடிக்கை அம்பலமானதால் 17.07.2022 அன்று இரவே பள்ளி நிர்வாகிகள் 3 பேரை போலீசு கைது செய்தது. அடுத்த நாள் காலை மேலும் ஆசிரியர்களை கைது செய்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட, போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த 400 பேருக்குமேல் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். சிலரின் கைகளை உடைத்து போலீசு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக கூற, அதை அப்படியே ஊடகங்கள் வாந்தி எடுத்தன.
மறுகூராய்வின் போது தங்கள் தரப்பு மருத்துவர் இடம் பெற வேண்டும் என்ற சாதாரண கோரிக்கையை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் மறுத்ததுடன், பெற்றோர்களை மிரட்டி மாணவியின் பிணத்தை வாங்க வைத்தன. காலை 6–7 மணிக்குள் பிணத்தை வாங்க வேண்டும், இறப்புக்கு வெளியூர்காரர்கள் வரக்கூடாது என்பது போன்று இன்னமும் பல கொடூரமான தடைகளை விதித்து சிறீமதிக்கு நீதி வழங்கியது நீதிமன்றம். இது யோகி ஆதித்யநாத் ஹத்ராஸில் கொடுத்த காவி நீதிக்கு கொஞ்சமும் குறைவானதல்ல.
சிறீமதியின் தந்தையோ “எந்த மருத்துவக் கல்லுரியில் படிக்க வேண்டுமென்று என் குழந்தை ஆசைப்பட்டதோ அக்கல்லூரியிலேயே பிணமாக இருக்கிறது, என் மகளுக்கு நீதி கிடைக்க வில்லை” என்று சவ ஊர்வலம் முழுவதும் கதறியபடியே வந்தார். இத்தனை பேர் போராடியும் சிறைபட்டும், உதைபட்டும் ஒரு மாணவிக்கு நீதியை பெற்றுத்தர முடியவில்லை என்ற வேதனை நம் நெஞ்சை எல்லாம் அறுக்கிறது.
***
ஒரு ஆர்.எஸ்.எஸ் நிறுவனத்துக்காகவும் தனியார் பள்ளி முதலாளிகளுக்காகவும் தமிழ்நாடு முழுக்க மக்களை வேட்டையாட சேலம் சரக டிஐஜி தலைமையில் 18 பேர் கொண்ட குழு, பள்ளியில் மாணவி இறந்ததை கண்டறிய 3 பேர் கொண்ட குழு. இதுதான் ஸ்டாலினின் சமூக நீதியோ!
கோவை சின்மயா பள்ளியில் மாணவி ஒருவர் இறப்புக்கு எதிராக அம்மாணவியின் பெற்றோரும் மக்களும் போராடினர். பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்ட உடனே போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் அப்படி ஓர் நடவடிக்கையை இப்பள்ளி நிர்வாகத்தின் மீது ஏன் தமிழ்நாட்டு அரசு எடுக்கவில்லை என்பதுதான் இப்பிரச்சினையின் மையம். ஆக, அதிகாரவர்க்கம் – ஆர்.எஸ்.எஸ் கூட்டுடன் தன்னுடைய எல்லா அயோக்கியத்தனங்களையும் மூடிமறைத்து கல்விக்கொள்ளையடித்து வந்த பள்ளி நிர்வாகத்தினை காப்பாற்றுவதே அரசின் நோக்கம்.
தமிழ்நாட்டில் இதுவரை கல்வி தனியார்மயத்தால் கொல்லப்பட்ட எந்த ஒரு மாணவருக்கும் நீதி கிடைத்தது இல்லை என்பதை அனுபவங்கள் மூலமாக உணர்ந்த மக்கள் தங்களுக்கு வேறு வழிஇல்லை என்பதையே சக்தி மெட்ரிக் பள்ளில் காட்டினார்கள். சக்தி மெட்ரிக் பள்ளியின் மீது உடனே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்திருந்தால் பள்ளி எரிந்திருக்க வாய்ப்பில்லை. வழக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் இருப்பதன் மூலம் மக்கள் அமைதியாக புலம்பிக்கொண்டு போவார்கள் என்று நினைத்த அரசின் எண்ணத்துக்கு மாறாக எரிமலையாய் வெடித்து இருக்கிறார்கள் மக்கள்.
***
ஒரு அமைப்பின் கீழ் இல்லாமல், தன்னெழுச்சியாக மக்கள் இப்படி போராடியது போலீசுக்கும் அரசுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் நெருக்கடியையும் உருவாக்கி இருக்கின்றது. அதன் விளைவாக உருவானதே ஊடுருவல்காரர்கள் எனும் மந்திர வித்தை. இப்படிப்பட்ட தன்னெழுச்சியாக போராட்டத்தை இப்போது கொடூரமாக ஒடுக்கிக்கொண்டு இருக்கிறது ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாட்டு அரசு.
முட்டுக்கொடுக்கும் முற்போக்குகள்
இந்தப்போராட்டமே திட்டமிட்ட வன்முறை என்றும் அமைதியான மக்கள் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தி தடயங்களை அழித்துள்ளனர் என்றும் திமுக ஆட்சியை கலைப்பதற்கான சதி என்றும் போலீசுக்கு ஆதரவாக பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்வதுடன் போராட்டம் நடத்தவும் துணிந்து இருக்கின்றனர். மர்ம மரணம் நடந்து 4 நாட்கள் வரை நிர்வாகம் தடயங்களை அழிக்காமல் இருந்ததாம். அதை அழிக்க நிர்வாகம் ஏற்பாடு செய்ததாம். கேட்கிறவன் கேணை என்றால் கேப்பையில் நெய் வழியும்!
மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினார்களாம். வெளியிலிருந்து சிலர் – கலவரக்காரர்கள் – கலவரம் செய்தார்களாம். மாவட்ட நிர்வாகம் – ஆர்.எஸ்.எஸ் கூட்டு உள்ளதாம். ஆனால் இதற்காக ஸ்டாலினின் திமுக அரசை கண்டிக்க மாட்டார்களாம். முகநூலில் பதிவிட்டவர்களை எல்லாம் தேடித்தேடி கைது செய்வதெல்லாம் திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் தெரியாது என்பதுபோல இவர்கள் கொடுக்கும் முரட்டு முட்டுக்கு அளவே இல்லை.
சிறீமதிக்கு நீதி கிடைக்கவில்லை என்பது நமது கவலையாக இருக்கின்றது. ஆனால், முற்போக்கு சங்கிகளுக்கோ எப்படி இவ்வளவு பேர் கூடினர் என்பதே பெருங்கவலை. மக்கள் பெருமளவில் போராட்டங்களில் தன்னெழுச்சியாக பங்கு பெறக்கூடாது என்பது இரு தரப்பினருக்கு சொந்தமான கருத்து. 1.புரட்சியின் எதிரிகள் 2.புரட்சியின் மீது நம்பிக்கையற்றவர்கள். இருவருமே ஆளும் வர்க்க்க சித்தாந்தத்திற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களே!
போராட்டங்கள் அமைதியாக நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆளும் வர்க்கத்தை கெஞ்சுகின்ற போராட்டமாக இருக்க வேண்டுமே ஒழிய, ஆளும் வர்க்கத்தை அசைக்கின்ற போராட்டமாக இருக்கக்கூடாதென்றே விரும்புகின்றனர். அதுவும் சமூக நீதி ஆட்சி அமைய தன்னையே அர்ப்பணித்த / தங்களை அடிமாட்டு விலைக்கு விற்றுக்கொண்ட முற்போக்காளர்களுக்கு’ ஸ்டாலின் தலைமையில் ஆன அரசு அம்பலப்பட்டுப்போய், ஆர்.எஸ்.ஸ்-க்கும் தனியார் பள்ளி முதலாளிகளுக்கும் அடியாள் வேலை பார்ப்பது அம்மணமாக மக்களுக்கு தெரிந்துவிட்டதென்று மக்கள் மீது பாய்கிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் டிஜிபி சைலேந்திரபாபுவும் இதுவரை வெளியிடாத “ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல்” என்ற தகவல் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ரஜினி கூறிய ”சமூகவிரோதிகள்” கருத்துக்கு நிகராக இருக்கிறது என்றால் மிகையல்ல. வழக்கம்போல இதற்கு ஒரு கமிசன் போட்டு முற்போக்கு முட்டுகளை விசாரித்தால் உண்மை தெரியவும் வாய்ப்பு இருக்கிறது.
படிக்க : தனியார் கல்விக்கு எதிராக கள்ளக்குறிச்சி மக்கள் போராட்டம் : கேள்விகளும் பதில்களும் | மருது வீடியோ
போராடிய மக்களுக்குள் பிரிவினை ஏற்படுத்துகிறார்கள். அமைதியாக போராடிய மக்களுக்கு இவர்கள் ஆதரவு கொடுப்பார்களாம், ஆத்திரங்கொண்டு எரித்தவர்களுக்கு ஆதரவு கொடுக்காமல் காட்டிக்கொடுக்கும் வேலையை செய்வார்களாம். கேட்டால் இதுவும் ஒரு முற்போக்குப் பணியாம். இருக்கட்டும்!
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கலவரம் செய்தார்கள் என்பதை போலீசும் அரசும் எங்கேயும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால், திமுகவுக்கு முட்டு கொடுக்கும் முற்போக்குகள்’ இப்படி பிதற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இது வரை செய்யப்பட்ட 400-க்கு மேற்பட்டவர்களில் எத்தனைபேர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர்கள் என்பதை இவர்கள் தெரிவிக்க வேண்டும்.
தன்னெழுச்சியான போராட்டம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என்பது தொடர்பான எவ்வித இயங்கியல் பார்வையுமற்ற ஆளும் வர்க்க எடுபிடிகள் இவர்கள்.
கலகம் இல்லாமல் நீதி கிடைக்காது
சீயோன் மெட்ரிக் பள்ளிப் பேருந்து ஓட்டையில் விழுந்து ஸ்ருதி என்ற மாணவி இறந்து போனார். அப்பள்ளி தாளாளர் விஜயன் கைது செய்யப்படவில்லை. பல மணி நேரம் சாலையை மறித்தார்கள் பிறகே விஜயன் கைது செய்யப்பட்டார்.
சென்னை கே.கே நகரில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞனை லத்தியால் போலீசு அடித்ததில் தடுப்பில் மோதி அவர் இறந்து போனார். 100 ரூபாய்க்காக கொலை செய்து விட்டாயே என்ற மக்களின் கோபத்துடன் அந்தப்போலீசின் சட்டையை கிழித்து அடித்து உதைத்தனர். அவர்கள் எல்லாம் வன்முறையாளர்களா என்ன?
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மெரீனாவில் இருந்து தப்பிய மாணவர்களுக்கு அடைக்கலம் தந்து போலீசோடு மோதியது மீனவர்களும் உழைக்கும் மக்களும்தான் அவர்கள் எல்லாம் வன்முறையாளர்களா?
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேரை சுட்டுக்கொன்ற பின்னர் மக்கள் வெகுண்டெழுந்து போராடவில்லையா? போலீசுடன் மோதவில்லையா? அவர்கள் வன்முறையாளர்களா என்ன?
சொளரி சொளரா சம்பவத்தில் ஈடுபட்ட மக்கள் வன்முறையாளர்களா என்ன? அவர்கள் கலவரக்காரர்கள் என்றால் அந்த வழிமுறையைத்தான் இப்போது நாம் தியாகிகள் என்று கூறும் பகத்சிங்கள் முதலானவர்கள் வரவேற்றார்கள்.
ஆளும் வர்க்கத்தின் வன்முறை சட்டப்பூர்வமானது, மக்களின் பதில் வன்முறை சட்ட விரோதமானதா? ஆளும்வர்க்கத்தின் ஆசீர்வாதத்தில் இருந்து புரட்சி செய்யவும் சமூக மாற்றம் செய்ய முடியும் என்று நம்பும் சிலர் உருவாக்கும் கருத்து இது. இது மக்களை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையே!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, விசிக போன்ற அமைப்புகள் இப்பிரச்சினையில் மக்களுக்கு எதிராக – போராடிய மக்கள் வேறு, வன்முறையில் ஈடுபட்டவர்கள் வேறு – என்று தெரிவித்து இருக்கிறார்களா என்ன? ஏனெனில் அவர்கள், மக்களை இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இறக்கிவிட்டதே இந்த அரசின் நடவடிக்கைகள்தான் என்பதை அறிவார்கள். கூட்டணிக்கட்சி தர்மம் என்று இச்சூழலில் திமுகவுக்கு முட்டுக்கொடுத்தால் அது கட்சியின் அடித்தளத்தையே பாதிக்கும் என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள்.
சமூக வலைதளத்திலும் பரபரப்பு அரசியலிலும் கோலோச்சும் முற்போக்கு முகமூடிகளுக்கு மக்கள் அடித்தளத்தைப் பற்றிய கவலை ஒருபோதும் இல்லை. ஏனெனில் அவர்களின் கவலை எல்லாம் ஆளும்வர்க்க ஏஜெண்டாக மாறும் தனது படிக்கல்லுக்கு தடை ஏதும் வரக்கூடாது என்பதே!
போராட்ட ஒழுங்கு’ என்னும் ஒட்டுண்ணித்தனம்
இலங்கையில் அதிபர் மாளிகையை மக்கள் எரித்தார்கள். கையில் கிடைத்த பொருட்களை கொண்டு சென்றனர். அங்கேயே தின்று தீர்த்தனர். பல நாடுகளில் ஏழை மக்கள் பணக்காரர்களின் சொத்துக்களை சூறையாடி இருக்கின்றனர்.
தெலுங்கானா போராட்டத்தில் தப்பி ஒடும் ஒரு ஜமீன்தாரை ரயில் நிலையத்தில் மறித்து அடிப்பார்கள். அப்போது ஒரு வயதான பெண் அந்த ஜமீன்தாரின் முகத்தில் மூத்திரம் பெய்வார். என்னதான் இருந்தாலும் முகத்தில் மூத்திரம் பெய்யலாமா என்று கேட்பவன் யார்? அவனுக்கு பதில் முகத்தில் மூத்திரம் பெய்வதை தவிர வழியே இல்லை.
படிக்க : கள்ளக்குறிச்சி : கொலைகார சக்தி பள்ளியை காப்பாற்ற வன்முறையை தூண்டுவது அரசுதான்! | மருது வீடியோ
போராட்டத்தில் மக்கள் திருடுவார்களா? உழைக்கும் மக்கள் போராட்டத்தில் திருட மாட்டார்கள் என்று சில கரடியாய் கத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆளும் வர்க்க கைகூலிகளே!
ஜார்ஜ் ப்ளாய்ட் போராட்டத்திலும் பிரிட்டன் – பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களிலும் மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை பறித்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள்.
ஒரு போராட்டத்தின் ஒட்டு மொத்த நியாயத்தில் இருந்து அது சரியா தவறா என்பதை பார்க்க வேண்டுமே தவிர பொருட்களை தூக்கிச்சென்றனர், தீவைத்தனர் என்பதில் இருந்து பார்க்கக்கூடாது.
உழைக்கும் மக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தங்களை சுரண்டிய ஆளும் வர்க்கம், முதலாளிகளின் சொத்துக்களை சூறையாடவும் அழிக்கவும் கூட உரிமை பெற்றவர்கள். அவர்களுக்கு எது தேவையோ அதை தேவையான நேரத்தில் செய்வார்கள். மக்களின் அந்த உரிமையை மறுப்பவர்கள் எல்லாம் வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசப்படுவார்கள்.
பணக்காரர்களின் ஆளும் வர்க்கத்தின் மீதான தங்கள் கோபத்தை மக்கள் தங்களுக்கு தெரிந்த வகையிலெல்லாம் வெளிப்படுத்துவார்கள். இதில் நாகரீகத்தை எதிர்ப்பார்ப்பவன் யார் என்றால் அவன் ஆளும் வர்க்க அடிவருடியாக இருக்க மட்டுமே தகுதி படைத்தவன்.
***
கள்ளக்குறிச்சி போன்ற சாதி – பிற்போக்கு கோலோச்சும் ஒரு பகுதியில் சாதிக்கு அப்பாற்பட்ட போராட்டம் எப்படி நடந்தது. அப்போராட்டத்தின் நியாயம் என்ன? என்பதை கண்டறிந்து அதில் உள்ள குறைகளை தவிர்த்து வளர்த்தெடுப்பதுதான் நம்முடைய பணி. அதை விட்டுவிட்டு மக்களை பிளவுபடுத்துவது ஆளும் வர்க்க அரியணை கனவுகளில் மிதப்போரின் வேலை.
அப்பள்ளி சேதமாக்கப்பட்டதில், முற்போக்கு முட்டுகளுக்கு என்ன பிரச்சினை? மாணவியின் மரணத்தை மூடி மறைத்த நிர்வாகம் – அதற்கு ஆதரவாக இருந்த போலீசு நடவடிக்கைகள் இருந்தால் அப்படித்தான் நடக்கும் என்று ஏன் இவர்களால் கூற முடியவில்லை? இவர்கள் இப்போது அப்பள்ளி முதலாளியின் இதயமாக மாறிவிட்டனர். ஆளும்வர்க்கத்தின் எண்ணமாக மாறிவிட்டனர்.
அப்பள்ளி எரிபடும்போது அவர்கள், தங்கள் சொத்துக்களுக்கு சேதம் ஆகுமோ என்றெண்ணுகிறார்கள்.
கல்வி தனியார்மயத்தின் அராஜகத்துக்குப் பதிலாக மனநல ஆலோசனைகளை சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இப்படி ஒரு பிரச்சினை தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் ஏற்பட்டால் பள்ளியை விட்டு எங்கே போவது என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதையெல்லாம் விட தங்கள் புரவலர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சலால் வரவேண்டிய வரத்து நின்றுவிடுமோ என்று கவலை கொள்கிறார்கள்.
இப்படி ஒரு சம்பவம் அதிமுக ஆட்சியில் ஏற்பட்டிருந்தால், இவர்களின் செயல்பாடு என்னவாக இருந்து இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்? தமிழ்நாடு போர்க்களமாகி இருக்காதா? திமுக ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்று எதையும் செய்யத் துணிந்து விட்டார்கள். இவர்களுக்கும் சவுக்கு சங்கருக்கும் வித்தியாசம் ஏதும் உள்ளதா என்று இனிதான் கண்டறிய வேண்டும்.
சென்னையில் கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணத்தை ஒட்டி ஆர்ப்பாட்டம் நடத்த எங்கேயும் தடை, அரங்கக்கூட்டம் நடத்தக்கூட அனுமதி கொடுக்க பயப்படுகிறார்கள், தொலைக்காட்சிகளில் இது தொடர்பான விவாதங்கள் எல்லாம் தடைவிதிக்கப்படுகின்றன. கல்லூரிகளின் வாசலில் போலீசு குவிக்கப்படுகின்றது. மெரீனாவில் போலீசு பாதுகாப்பு பலப்படுத்தப்படுகின்றது. யூடியூப், முகநூல், வாட்ஸ் அப் கண்காணிக்கப்படுகின்றன.
எடப்பாடிக்கு தூத்துக்குடி மாடல் என்றால் ஸ்டாலினுக்கு கள்ளக்குறிச்சி மாடல் என்று சொல்ல இவர்களை எல்லாம் எது தடுக்கிறது? உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கன் களைவதாம் நட்பு என்பது போல திமுகவின் கூட்டணிக் கட்சியினரே அமைதியாக இருக்கும் போதும் கூட இவர்கள் ஓடி வந்து அவிழ்ந்து போன வேட்டியை கட்டிவிட ஓடி வருகிறார்கள். திமுக அரசை விமர்சித்தால், ஸ்டாலினை விமர்சித்தால் கிடைக்க வேண்டிய வெகுமதிகளும் பதவிகளும் கிடைக்காமல் போகலாம் என்னவோ!
***
திசை திருப்பும் ஆளும் வர்க்கம்
மாணவி காதல் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டார்; குடும்பப் பிரச்சினையால் மன உளைச்சலோடு இருந்தார்; சாதிக் கட்சியினர் திரட்டி வந்து கலவரம் செய்தனர்; ஆர்.எஸ்.எஸ் முன்னேற்பாட்டின்படி கலவரம் நடந்தது; இப்படி பல்வேறு திசைதிருப்பல்கள் மாணவி மரணித்தது முதல் இப்போது வரை நீடித்துக்கொண்டே இருக்கின்றன.
படிக்க : கள்ளக்குறிச்சி : கொலைகார பள்ளியை பாதுகாப்பதே திமுக அரசின் நோக்கம்! | தோழர் ப. ராமலிங்கம்
தனியார்மயக் கல்விப் படுகொலைகளால் இறந்துபோன எண்ணிலடங்காதோரில் இந்த சிறீமதியும் ஒருவர்தான். வழக்கம்போல தனியார்கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக, நிறுவனத்தின் தவறை மூடிமறைத்து அரசு செயல்பட்டதைப் போலவே இங்கேயும் செயல்பட்டது. அப்பள்ளி நிர்வாகத்தை காப்பாற்ற போலீசும் மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் அம்பலமாகிப்போயின.
ஜூலை 17-ம் தேதி போராட்டத்துக்கு பின்னர் மொத்த அரசு நிர்வாகமும் கவனம் குவிந்து இவ்வழக்கை எதிர்கொண்டு தீர வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாநில முதல்வரும் டிஐஜியும் நேரடியாக தலையிட்டு ஒரு மர்ம மரணத்தை விசாரிக்கும் அளவுக்கு மாவட்ட போலீசும் – நிர்வாகமும், ஆர்.எஸ்.எஸ் – தனியார்மய கல்விக்கொள்ளை நிர்வாகத்துக்கு அடியாளாக இருக்கின்றன. அதற்கு பின்னரும் ஆர்.எஸ்.எஸ் தனியார்கல்விக் கொள்ளையர்களை பாதுகாப்பதற்காகவே மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை – சிறப்பு புலனாய்வுகுழு என்ற அரசபயங்கரவாதம்.
இந்த அரச பயங்கரவாதத்தை எதிர்க்காமல் ஆளும்வர்க்கம் விரும்பும் திசை திருப்பும் விவாதங்களை மேற்கொள்வோர் ஆளும்வர்க்க கைக்கூலிகள் மட்டுமல்ல; எதிர்ப்புரட்சி கும்பலும்தான் என்பதை ஒரு போதும் மறக்கக்கூடாது.
தோழர் சாந்தக்குமார்,
தலைமைக்குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.