மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் உள்ள பாவ்கேதி என்ற கிராமத்தில் திறந்தவெளியில் மலம் கழித்த 12 வயது தலித் சிறுமி மற்றும் 10 வயது தலித் சிறுவனை அடித்து கொன்றுள்ளது சாதி வெறி பிடித்த குடும்பம் ஒன்று.
ஹக்கிம் யாதவ் மற்றும் ரமேஷ்வர் யாதவ் என்ற அந்த சாதிவெறி பிடித்த கொலைக்கார சகோதரர்களை மத்திய பிரதேச போலீசு கைது செய்துள்ளது. இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி கொலை மற்றும் எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திறந்தவெளி மலம் கழிப்பது ஒழிக்கப்பட்ட கிராமமாக அறிவிக்கப்பட்டாலும், தங்கள் வீட்டில் கழிப்பிடம் இல்லை என்கிறார் கொல்லப்பட்ட சிறுவர்களின் தந்தை வால்மீகி. சாதிய பாகுபாடுகளுக்கு பெயர் போன இந்தக் கிராமத்தில் குழாயில் தண்ணீர் பிடிக்கக்கூட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என்கிறார் அவர்.
இந்த சம்பவம் நடந்த காலை 6.40 மணியளவில் தனது தந்தையுடனும் சகோதரனிடமும் பேசிக்கொண்டிருந்ததாக குறிப்பிடுகிறார்.
“ரமேஷ்வரும் ஹக்கீமும் கட்டையை எடுத்துக்கொண்டு குழந்தைகளை நோக்கி ஓடிவந்தார்கள். ஏன் சாலையில் மலம் கழிக்கிறீர்கள் என கேட்டார்கள். ரமேஷ்வர் ரோஷிணியின் தலையின் பின்புறம் இரண்டு முறையும் கண்கள் அருகே ஒரு முறையும் அடித்தான். ஹக்கீம் மகனின் தலையில் இரண்டு முறை அடித்தான். அவர்கள் இரத்தவெள்ளத்தில் மூழ்கினர்” என்கிறார் தினச் சம்பளத்துக்கு பணியாற்றும் 35 வயதான வால்மீகி.
சம்பவம் நடந்த இடத்திற்கு குடும்பத்தினர் செல்வதற்குள் சிறுவர்கள் இருவரும் உயிரிழந்திருந்தனர். சிறுவன் அவினாஷ், வால்மீகியின் மகன். சிறுமி ரோஷிணி வால்மீகியின் உடன்பிறந்த தங்கை. நான்காண்டுகளுக்கு முன்பு அவருடைய தாயார் இறந்தபின், வால்மீகியுடனே வசிக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வால்மீகிக்கும் கொலைகார சகோதரர்களுக்கும் மரத்தின் கிளையை வெட்டுவதில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் அப்போது அவர்கள் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வால்மீகி தெரிவித்துள்ளார். ஆனால், போலீசு தரப்பில் முன்பகை ஏதுவும் இருந்ததில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், குவாலியர் ஐ.ஜி. ராஜாபாபு சிங், ஹக்கீம் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல இருப்பதாகக் கூறுகிறார். இந்தக் கொலை திறந்த வெளி மலம் கழிக்கும்போது நிகழவில்லை என்றும் சிறுவர்கள் தங்களுடைய தாத்தா வீட்டிற்குச் செல்லும்போது நடந்ததாகவும் அவர் கூறுகிறார். உள்ளூர் போலீசு ஹக்கீம் மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்ல என்று கூறுகிறது.
சாதிவெறிக்கு பலியாகியுள்ள இரு சிறுவர்களின் மரணங்கள் இதயத்தை பிளப்பதாக ம.பி. முதலமைச்சர் கமல்நாத் கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் வால்மீகி குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ. 50,000 வழங்கியிருப்பதாகவும் குழந்தைகளின் இறுதி சடங்குக்கு ரூ. 10,000 வழங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார். வன்கொடுமை சட்டப்படி ரூ. 4 இலட்சம் வழங்கப்படும் எனவும் ஆட்சியர் கூறியுள்ளார்.
படிக்க:
♦ அண்ணா பல்கலை பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதை திணிப்பு | பு.மா.இ.மு. கண்டனம்
♦ காஷ்மீரின் சிறப்புரிமை ரத்து : இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம் !
அற்பக் காரணங்களுக்காக மனிதர்கள் அடித்துக் கொல்லப்படுவது சாதி நோய் பிடித்த இந்திய சமூகத்தில் மட்டுமே சாத்தியம். சாதியின் இழிபெருமையை தூக்கிச் சுமக்கும் இந்துத்துவ ஆட்சியதிகாரம் இருக்கும்வரை சாதியின் கொடுமைகளிலிருந்து எவருக்கும் விடுதலை கிடைக்கப் போவதில்லை.
கலைமதி
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்