9-2-1943 செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்குச் சென்னை சட்டக் கல்லூரி மண்டபத்தில் ஆரியச் சுவடிகளான கம்ப இராமாயணம், பெரிய புராணம் பற்றிய ஓர் உரையாடல் (டிபேட்) நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்துமத பரிபாலன நிலையத் தலைவர் தோழர் சி.எம். இராமச்சந்திரஞ் செட்டியார், பி.ஏ., ஆர்.பி.எல்., அவர்கள் தலைமை வகித்தார். உரையாடலில் தோழர்கள் சி.என். அண்ணாதுரை எம்.ஏ., ஈழத்தடிகள் பி.ஏ., பி. சேதுப்பிள்ளை பி.ஏ.,பி.எல்., சீனிவாசன் ஆகியவர்கள் கலந்துகொண்டு தத்தம் கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள்.

கூட்டத்தைப்பற்றிய எவ்விதமான விளம்பரமும் செய்யப்படவில்லை என்றபோதிலும், மக்கள் திரளாக வந்து குழுமியிருந்தனர். தன் மதிப்பு இயக்கத் தோழர்கள் நூற்றுக்கணக்கானவர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும், புலவர்களும், தாய்மார்கள் பலரும் மண்டபம் நிறையக் குழுமியிருந்தனர்.

சட்டக்கல்லூரித் தமிழ்க் கழக அமைச்சர் தோழர் வேணுகோபாலன், தலைவரைப் பிரேரேபிக்கையில் “பெரியோர்களே! தமிழருக்குச் செல்வம் போன்ற கம்ப இராமாயணம், பெரிய புராணம் ஆகிய நூற்களைக் கொளுத்த வேண்டும்; அல்லது அழிக்க வேண்டும் என்று பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்கள் கூறியது கேட்டு தமிழ் மக்கள் கோபம் கொள்வது இயற்கை. ஆனால் சுயமரியாதைக்காரர்களின் தீர்மானத்தைப் புறக்கணிப்பது கூடாது. ஆகவே, அதுபற்றி அவர்களின் கருத்தை அறியத் தோழர் சி.என். அண்ணாதுரை அவர்களை அழைத்துள்ளோம். அவர் இந்திரசித்துக்குச் சமம் என்று கூறுவேன். அவருரையை மறுத்துப் பேசத் திருவாளர் சேதுப்பிள்ளை அவர்கள் இராமபிரான் போல் வந்திருக்கிறார்கள். இதற்கு நடுநிலைமையாளராக இருக்க, ஜனக மகாராஜனைப்போல உயர்திரு இராமச்சந்திரஞ் செட்டியார் அவர்கள் வந்திருக்கிறார்கள். விவாதம் மிக மேலான முறையினதாக இருக்கவேண்டுமென விழைகின்றேன் என்று கூறினார். (நூலிலிருந்து பக்.5-6)

கலையை அழிக்கின்றனர், கம்பன் புகழை மறைக்கின்றனர் என்று கூறப்படும் பழிச்சொல்லை நாங்களறிவோம். கலையிலே தேர்ந்து, அதிலே ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, கம்பனின் இராமாயணமும், சேக்கிழாரின் பெரிய புராணமும் கலை என்று கருதும் அன்பர்கள், ஒரு பெரியாரின் பேரால், ஓர் அண்ணாதுரையின் அனலால் அக்கலை அழிந்துவிடும் என்று கருதுவரேல் அவ்வளவு சாமான்யமானது கலையாகாது. அத்தகைய கலை இருத்தலுமாகாது என்றுரைக்க ஆசைப்படுகின்றேன். கலையைக் குலைக்கும் செயலல்ல எமது செயல். கலையிலே புரட்சி உண்டாக்க விழைகின்றோம்…. தக்க காரணங்களோடு.

கலை ஓர் இன மக்களின் மனப்பண்பு. இவ்வின மக்களிடையே தோன்றும் தெளிவு, வீரம் ஆகியவற்றின் எடுத்துக்காட்டு. எனவே, கலை இன வளர்ச்சிக்கு ஏற்றபடி மாறியும் விரிந்தும் வருமென்பதே நுண்ணறிவினரின் துணிபு. கலை உலகில், அவ்வப்போது மாறுதல் உண்டாகும். இனத்துக்கோர் கலையும், இடத்தின் இயல்பு, தட்பவெப்பம் ஆகியவற்றுக்கு ஏற்ற முறையிலும், கலை உண்டாகும், வளரும், மாறும்.

அரபு நாட்டுக் கலையிலே, தென்றலைப்பற்றிய கவிதைகள் அதிகமிருக்க முடியாது. எஸ்கிமோ நாட்டுக் கலையிலே, கதிரோனின் ஒளி பற்றிய கவிகள் அதிகமிராது. ஆப்பிரிக்கா நாட்டு ஜூலு வகுப்பினரின் கலையிலே, அவர்களின் நாட்டியம் கவியிலே இருக்கும், அதுபோலவே ஆரியக் கலையிலே கங்கையின் கவர்ச்சியும், கரையோரக் காட்சியும் சோலை மாட்சியும் என்பன போன்றவைகள் கவிதைகளாக – இலக்கியமாக இருக்கும்.

இந்தியா என்ற இந்த உபகண்டம், பல இனங்கள் வசிக்கும் இடம். ஆகவே இங்கு பல கலைகள் உண்டு. இனத்திற்கோர் கலை என்றுண்டு. எனினும் இரு பெரும் கலைகள் இங்குள்ளன என்று அறிவாளிகள் கூறியுள்ளனர். ஆரியக் கலை ஒன்று; திராவிடக் கலை பிறிதொன்று. இடத்திற்கோர் கலை உண்டென்றும், இனத்திற்கோர் கலை உண்டென்றும் கூறினேன். அவை ஒன்றை ஒன்று தழுவாவிடினும், மோதிக் கொள்ளாமல் இருத்தலுண்டு, அவை தனித்தனி அமைப்புப் பெற்றுத் திகழ்வதால், இந்துக்கலை என்று கூறப்படுவதும், இஸ்லாமியக் கலை என்று கூறப்படுவதும் வேறு வேறு. எனினும் அவை ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளாதபடி தனித்தனி அமைப்புக்களாகி விட்டன.

ஆனால், ஆரியக்கலையும் திராவிடக் கலையும் அப்படியின்றி, ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும், மோதிக்கொள்வதாகவும் இருத்தலை, அறிஞர் ஒப்புக் கொள்கின்றனர். இந்நிலையின் பயனாகத் திராவிடர் கலைமீதும், சட்ட திட்டங்கள் மீதும், ஆரியம் ஆதிக்கம் செலுத்தலாயிற்று. இக்கல்லூரியில் பன்னெடு நாட்களுக்கு முன்பு இருந்தவரும், சட்ட நிபுணருமான மிஸ்டர் நெல்சன் என்பார், இந்து சட்டம் என்பது ஆரியர்களின் மனு, பராசரர், யாக்ஞவல்கியர் ஆகியோரின் நூற்களின் அடிப்படைகளின் மீது அமைக்கப்பட்டிருப்பதாலும், தென்னாட்டு மக்களில் பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்கள் ஆரியரல்லாதார் ஆகையினாலும், அவர்கள் மீது இந்து சட்டத்தைத் திணிப்பது தவறு என்று எடுத்துக் காட்டினார். அவரது பேச்சு, காட்டுக் கூச்சலாகி விட்டது. இந்த சட்டமே, ஆரிய நீதியே இன்று நம்மை ஆள்கிறது. தமிழருக்குத் தேவை வளமை போன்ற சட்டமோ அல்லது குறள் நீதியோ இன்று இல்லை. ஆரியமே சட்டத்தை ஆள்கிறது. கலையிலே, ஆரியத்தை ஆதிக்கம் செய்யவிட்டதனால், நாம் கண்ட பலன் இதுவென்றுரைக்க ஆசைப்படுகின்றேன். (நூலிலிருந்து பக்.7-9)

படிக்க :
சீமானின் எதிர்காலம் – மகாராஷ்டிரா தேர்தல் கூத்து | கேள்வி – பதில் !
தூத்துக்குடி துப்பாக்கி சூடு : ஆணையம் முன்பு வழக்கறிஞர்கள் மில்ட்டன் – பார்வேந்தன் சாட்சியம் !

ஆரிய கலை வேறு, திராவிட கலை வேறு. ஆரியக் கலை நம்பொணாக் கருத்துக்களும் ஆபாசமும் நிரம்பியதுடன், திராவிட இனத்தை அடக்கவும் பண்பை அழிக்கவும் பயன்பட்டுப் பாமரரின் மனத்தைப் பாழாக்குகிறது என்ற குற்றச் சாட்டுகளைக் கூறிக் கம்பராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் கண்டிக்கிறோம். கொளுத்துக என்று கூறுகிறோம். இவைகட்குச் சேதுப்பிள்ளை சமாதானம் கூறிய பின், எனது மறுப்புரை கூறும் சந்தர்ப்பம் கிடைக்குமென்று நம்புகிறேன். பண்டிதர்கள் எங்களைப்பற்றித் தவறாக எண்ணி வருவது சரியல்ல. அவர்களுக்கு நாங்களே துணை. எமக்கு அவர்கள் அரண். நம்மிருவருக்குள் பகை மூட்டி, இராமன் மரத்தின் மறைவிலிருந்து அம்பு எய்ததுபோலச் செய்ய ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கவனமூட்ட விரும்கிறேன். மக்களிடம் இத்தகைய புராணங்கள் கற்பனை என்பது எடுத்துரைக்காது. அவர்கள் மனப்பாங்கைக் கெடுப்பதன் பலனாக, மக்களின் நிலை கெட்டுவிட்டது. திருமூலர் வேறொரு விஷயத்துக்காகக் கூறினார், “குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளாது; குருட்டுக் குருவைக் கொண்டு, குருடுங் குருடுங் குருட்டாட்டமாடிக் குருட்டில் வீழ்ந்தனர்” என்றுரைத்தார். நமது மக்களின் நிலைமை அதுவாக இருப்பதை உணருங்கள்” என்று பேசி முடித்தார். (நூலிலிருந்து பக்.19)

நூல் : தீ பரவட்டும் – அறிஞர் அண்ணா
ஆசிரியர் : சி.என்.அண்ணாதுரை

வெளியீடு : திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,
84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007.
தொலைபேசி எண் : 044 – 2661 8163
இணையம் :dravidianbookhouse.com

பக்கங்கள்: 56
விலை: ரூ 20.00 / ரூ 50.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : commonfolks | noolulagam | dravidianbookhouse

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க