தூத்துக்குடி துப்பாக்கி சூடு : ஆணையம் முன்பு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மில்ட்டன் மற்றும் பார்வேந்தன் ஆஜர் !

மாவட்ட ஆட்சியர் திரு. வெங்கடேசன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. மகேந்திரன் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை சட்ட ஆலோசகர் சத்தியபிரியா ஆகியோரின் கூட்டுச் சதியே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் என்று சாட்சியம்!

டந்த ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போரட்டத்தின்பொழுது துப்பாக்கி சூட்டிற்கு பிறகு வழக்கு தொடுத்தவர்களை அழைத்து நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரித்து வருகிறது.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை மாவட்ட செயலாளர் திரு. ஜிம்ராஜ் மில்ட்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி தலைவர் திரு. பார்வேந்தன் மற்றும் வழக்கறிஞர் பாவேந்தன் ஆகியோர் துப்பாக்கி சூட்டிற்கு அடுத்தநாளே (23.05.2018) சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கறிஞர்கள் சட்ட உதவி செய்யவும், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை முறையான பிரேத பரிசோதனை நடத்தவும் உத்தரவு பெற்றனர். அதன்பிறகும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கபட்டவர்களுக்கு தொடர்ந்து பல வழக்குகளை நடத்தி வருகின்றனர்.

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை மாவட்ட செயலாளர் திரு. ஜிம்ராஜ் மில்ட்டன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி தலைவர் திரு. பார்வேந்தன் 15.11.2019 அன்று ஆணையம் முன்பு ஆஜரானார்கள். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஹரிராகவன், வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆணையத்தின் முன்பாக சாட்சியம் அளித்த பின் ஊடகங்களுக்கு பேட்டியளித்த, வழக்கறிஞர் மில்ட்டன் கூறியதாவது,

வழக்கறிஞர் மில்ட்டன் மற்றும் வழக்கறிஞர் பார்வேந்தன் (வலது).

“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போரட்டத்தின்பொழுது துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களிடமும், நண்பர்களிடமும் நேரடியாகத் தெரிந்து கொண்டதன் மூலமும், வழக்கு ஆவணங்கள், உண்மையறியும் குழு அறிக்கைகள், முதல் தகவல் அறிக்கைகள், காவல் அடைப்பு அறிக்கைகள், அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் மற்றும் பிற ஆவணங்கள் மூலமும் 22.05.2018 அன்று காவல்துறை எப்படி துப்பாக்கிச் சூடு நடத்தியது என்பதை எங்களால் துல்லியமாக அறிந்து கொள்ள முடிந்தது. அவையாவன

(i) 22.05.2018 அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை. இது நன்கு திட்டமிட்டு, உரிய முன் தயாரிப்புகளுடன், முதல்நாளே “ஸ்னைப்பர்” – குறிபார்த்து சுடும் வகையிலான காவலர்கள் திட்டமிட்டு அமர்த்தப்பட்டுள்ளனர்.

(ii) துப்பாக்கிச்சூட்டில் பலியான அனைவரும் தலை மற்றும் மார்பு பகுதிகளில் மட்டுமே குறிவைக்கப்பட்டு, ஒரே தோட்டாவினால் குறிபார்த்து சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். எனவே இது பச்சையான படுகொலை.

(iii) ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராடும் மக்களை அச்சுறுத்தி பணிய வைக்கவும், பொதுமக்கள் மத்தியில் போராடும் மக்களை வன்முறையாளர்களாகவும், கலவரக்காரர்களாகவும் சித்தரிக்கவும், துப்பாக்கிச் சூடு நடத்தி ஒடுக்குவதன் மூலம் இனி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராடுவது பற்றி சிந்திக்கவே கூடாது என்ற வகையில் இத்துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.

படிக்க:
பாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல – தொடக்கம் ! – அரங்கக் கூட்டம்
♦ தூத்துக்குடி மக்களின் கோரிக்கை என்ன ? களத்திலிருந்து வழக்கறிஞர் மில்டன்

(iv) ஸ்டெர்லைட் ஆலையுடன், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கூட்டுச்சதி செய்துள்ளனர். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் திரு. வெங்கடேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மகேந்திரன் ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலையின் பணியாளர்களைப் போல செயல்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையின் பொதுமேலாளர் சத்தியப்பிரியா, முன்னாள் மாவட்ட ஆட்சியர் திரு.வெங்கடேசன், முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மகேந்திரன், சிப்காட் காவல் ஆய்வாளர் திரு.ஹரிஹரன் மற்றும் துணை வட்டாசியர் திரு.சேகர் ஆகியோர்களின் 20.05.2018 முதல் 25.05.2018 வரையிலான கைபேசி அழைப்புகளின் பதிவுகளை ஆராய்ந்து, மேற்படி நபர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உள்ளாக்கினால் இவர்களுக்கிடையேயான சதியினை அம்பலமாகும்.

ஆணையத்தின் முன் சமர்பித்த ஆவணம்.

இந்த உண்மையை புரிந்து கொள்ள ஆணையத்தின் முன்பாக எமது தரப்பு சான்றாவணங்களாக சுமார் 400 பக்கங்கள் கொண்ட 62 ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம். மேற்படி ஆவணங்கள் யாவும் பல்வேறு வழக்குகளில் என்னாலும், வேறு சில வழக்கறிர்களாலும் ஆவணங்களாக தாக்கல் செய்யப்பட்டவை.

எனவே மாண்புமிகு இவ்வாணையம்,

(i) அரசு எந்திரத்தை பயன்படுத்தி தனியார் ஆலையான ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு நிராயுதபாணிகளாக, அமைதி வழியில் போராடிய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு, தடியடி, பொய் வழக்கு, தடுப்புக்காவல் என அதிகார துஷ்பிரயோகம் செய்த மாவட்ட ஆட்சியர் திரு.வெங்கடேசன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.மகேந்திரன், ஸ்டெர்லைட் ஆலை சட்ட ஆலோசகர் சத்திய பிரியா, காவல்துறை டி. ஐ. ஜி, உதவி கலெக்டர், தாசில்தார், டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்டவர்கள் மீது கூட்டுச்சதி மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். நடந்துவரும் விசாரணையை இடையூறு செய்யாத வண்ணம், தடுக்கும் பொருட்டு மேற்சொன்ன அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

(ii) ஸ்டெர்லைட் ஆலையின் பிரிவு உபச்சார விழாவில் கலந்துகொண்ட 5 காவல் ஆய்வாளர்கள் மீது நடந்துகொண்டிருக்கும் நடவடிக்கை விசாரணையை கால வரையறை தீர்மானித்து விரைந்து முடிக்க வேண்டும். அந்த ஐந்து அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக காவல்துறை, வருவாய் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை, அரசு அதிகாரிகளை ஊழல்படுத்தி நிர்வாகத்தை செயல்படுத்த முடியாமல் முடக்கிய குற்றம் தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது ஒரு விரிவான விசாரணை நடத்தி குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் என்ன நோக்கத்திற்காக பல்வேறு அரசுத் துறைகள் ஏற்படுத்தப்பட்டனவோ அந்த நோக்கம் நிறைவேறும்.

(iii) ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு ஒரு சிறப்பு சட்டத்தை இயற்றி ஆலையை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கு அதிக அதிகாரம் கொடுக்க, கொடுக்க அதிகார துஷ்பிரயோக, சட்ட விரோத செயல்களும் அதிகரிக்கும். அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டிய இந்த நிறுவனங்கள் தனி ஒரு ஆளாக செயல்படும் போக்கு முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.

(iv) ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போல காவல்துறைக்கு சில கட்டுப்பாடுகளை; சட்டங்களை இயற்றவேண்டும். போராட்டக்காரர்களால் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டால் காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு, தடியடி, துப்பாக்கி சூடு என்று நடத்தி கூட்டத்தைக் கலைக்கலாம் என்று தற்போது இருக்கும் காவல்துறை வழிகாட்டுதல்களை திருத்தி உடமைகளுக்கு சேதம் வரும் வேளைகளில் துப்பாக்கிச்சூடு, உயிர்ச்சேதம் வருவதை தடுப்பதற்கு ஏற்றவகையில் உரிய சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். கொடும் ஆயுதங்களை கொண்டு தாக்கி உயிருக்கு சேதம் விளைவிக்கும் கும்பல்களை தவிர மற்றவர்களிடம் காவல்துறை துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை முற்றிலும் தடை செய்து சட்டம் இயற்றப்பட வேண்டும்.

– ஆகிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்க வேண்டும் என்றும், தங்கள் வாழ்வாதாரத்தை காப்பற்ற அமைதியான முறையில் குடும்பத்துடன் போராடிய மக்களை ஸ்டெர்லைட் ஆலையுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, சதிசெய்து கொடூரமான முறையில் “ஸ்னைப்பர்” மூலம் சுட்டுக் கொலை செய்த காவலர்கள், பொறுப்பான அதிகாரிகள் தண்டிக்கப்படவும், உரிமைக்காக போராடிய மக்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சாட்சிமளித்துள்ளோம்” என்றார்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க