தூத்துக்குடி மக்களின் கோரிக்கை என்ன ? களத்திலிருந்து வழக்கறிஞர் மில்டன்

தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக சொல்வது உண்மையல்ல. உண்மையில் அமைதியை நிலைநாட்ட அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவிக்கிறார் மில்டன்.

டந்த 22.05.2018 அன்று நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில், அமைதியாக போராடிய மக்கள் மீது முன்திட்டமிட்டு 13 பேரை சுட்டுக் கொன்ற காவல்துறையின் நடவடிக்கையால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அமைதி குலைந்துள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் மிரட்டப்பட்டு அவர்களிடமிருந்து கையொப்பம் பெறப்பட்டு, பிரேதப் பரிசோதனை நடந்துள்ளது. இந்நிலையில் மீதமுள்ளவரின் உறவினர்கள், நேற்று (27.05.2018) மருத்துவமனையில் பிரேத விசாரணை நடைபெறவுள்ளதற்கான சம்மன் வழங்க அழைக்கப்பட்டனர்.

அவர்கள் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்திற்கு வருகை தந்து அங்கிருந்த வழக்கறிஞர்களிடம் சட்ட உதவி கோரினர். அதன் பேரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ள நான் உட்பட நூற்றுக்கணக்கான தூத்துக்குடி வழக்கறிஞர்கள், அரசு மருத்துவமனைக்கு சுட்டுகொல்லப்பட்டவர்களின் உறவினர்களுடன் வந்துள்ளோம்.

தூத்துக்குடி மருத்துவமனையில் வழக்கறிஞர் குழு.

இராணுவ முகாம் போன்று, காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை அமைந்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தகுதிவாய்ந்த தனியார் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவர் குழுவால் பிரேத விசாரணை நடத்தப்பட வேண்டும். பிரேத விசாரணை முழுவதும் ஒளிப்பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

தூத்துக்குடி மக்களின் இறுதி கோரிக்கையான ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதற்கான உரிய, இறுதியான உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்து மக்களிடம் பிரகடனப்படுத்த வேண்டும். துப்பாக்கி சூடு நடந்ததியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

போராட்டம் நடைப்பெற்று 5 நாட்களுக்கும் பின்பு பொய் வழக்குகளில் கைது செய்வதை நிறுத்த வேண்டும். போராட்டத்தை ஒருங்கிணைந்த கிராம கமிட்டி மற்றும் நகர மக்களின் முன்னணியாளர்கள் வீடு திரும்ப இயலாத சூழ்நிலை காவல்துறையின் தேடுதல் வேட்டையால் தொடருவது நிறுத்தப்பட வேண்டும், அமைதி நிலை திரும்ப இனி கைதுகள் கிடையாது என காவல்துறையும், தமிழக அரசும் அறிவித்திட வேண்டும்.

சட்டவிரோத காவலில் பல்வேறு காவல் நிலையங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுதலை செய்ய வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் முழுமையான இயல்புநிலை திரும்பும் வகையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தினை ஒருங்கிணைத்து வரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு அனைத்து மக்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அழைத்து தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப்சிங்பேடி மற்றும் டேவிதாரும் மாவட்ட நிர்வாகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

தூத்துக்குடி
27/05/2018

இவண்
(ஜிம்ராஜ் மில்ட்டன் )
வழக்கறிஞர் உயர்நீதிமன்றம்,
சென்னை தொடர்புக்கு : 9842812062

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க