கேள்வி : // சட்டமன்ற உறுப்பினர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் யாரும் இல்லாமல் இவ்வளவு காலம் வெறும் பேச்சு அரசியல் செய்யும் சீமானின் எதிர்காலம் எப்படி இருக்கும்? //

நவின்

ன்புள்ள நவின்,

எதிர்காலம் சூனியமாகத்தான் இருக்கும். தமிழகம் முழுவதும் ஊருக்கு ஊர் அலைந்து திரிந்து நாம் தமிழர்தான் மாற்று என்று முழங்கிய தனக்கும் 3 சதவீதம், சொகுசாக அரசியல் செய்யும் கமலுக்கும் மூன்று சதவீதம் வாக்குதான் என்ற கேள்வி சீமானிடம் இருக்கிறது. இப்போது கமலோடு ரஜினியும் சேர்ந்தோ தனித்தோ போட்டியிட்டு சும்மா வீட்டுக்கு வெளியே காமெராக்களிடம் நாலு வார்த்தை பேசி பத்தோ பதினைந்தோ சதவீத வாக்கை வாங்கி விட்டால் என்ன செய்வது? இந்தக் கேள்வியும் சீமானின் மனதைக் குடைகிறது. அதனால்தான் மதுரையில் பதட்டத்தோடு வாக்காளப் பெருமக்களை பாய்ந்து குதறும்வண்ணம் அண்ணன் பொங்கியிருக்கிறார்.

ஆளும் வர்க்கங்களும், பார்ப்பனிய ஊடகங்களும் எப்படி மோடியை முன்னிறுத்தி நிலைநாட்டினவோ அப்படி ரஜினிக்கும் முயலும். மேலதிகமாக தி.மு.க., அ.தி.மு.க., இரண்டு கட்சிகளும் தத்தமது வாங்கு வங்கிகளை கூட்டியோ குறைத்தோ பராமரித்து வருகின்றன. இந்த சூழலில் ரஜினி, பா.ம.க., அ.தி.மு.க, என்றொரு கூட்டணியை உருவாக்க பாஜக முயலும். இல்லை ரஜினியை தனியே நிற்க வைத்தாலும் அது தி.மு.க வாக்குகளை பிரித்து தனது அடிமைக் கூட்டணியை வெல்ல வைக்கும் என்று அமித்ஷா அணி நினைக்கிறது.

இந்நிலையில் இந்த வாக்கு வங்கி அரசியலில் சீமானுக்கு ஒளிமயமான எதிர்காலம் ஏதுமில்லை. மேலும் அவர் வைக்கும் மாற்று அரசியல், திட்டங்கள் அனைத்தும் ஆர்ப்பட்டமான உதார் என்பதைத் தாண்டி இந்த அரசியல் கட்டமைப்பில் ஒரு மாற்றத்தையும் கொண்டு வரும் தகுதி படைத்தது அல்ல. தனியார்மய – தாராளமய – உலகமய காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை தீர்க்கும் மருந்து வாக்கு வங்கி அரசியலில் இல்லை. இது சீமானுக்கும் தெரியாமல் இல்லை. அதனால்தான் தமிழ், இனம், சொந்தம், ஆடு, மாடு, கடல் வளம், மலை வளம் என்று உணர்ச்சிகரமான அரசியலை பேசுகிறார். இதில் சிலவற்றை மக்கள் ரசிக்கலாம். பலவற்றை வேலைக்காகாது என்று புறந்தள்ளலாம். பட்டிமன்றப் பேச்சுக்களை ரசிக்கும் தமிழ் மரபும், மனதும் சீமானின் பேச்சையும் ரசிக்கிறது. அதற்கு மேல் அண்ணன் ஊழல் செய்யாதவர், அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று சில மக்கள் எண்ணினாலும் அந்த எண்ண ஓட்டத்தில் ரஜினியும், கமலும் கூட இன்னும் கொஞ்சம் அதிகமாக மக்களிடம் கலந்து விடுகிறார்கள்.

படிக்க :
♦ சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !
♦ ஓம் சீமான் ! ஜெய் சீமான் !

எனவே காலம் செல்லச் செல்ல சீமானின் பதட்டம் அதிகரித்து அவரது வாய் வீச்சுக்களில் கோபமும், குரோதமும் அதிகரிக்கும். ஒன்று அவரும் கூட்டணி என்று செட்டிலாகி சில எம்.எல்.ஏக்களோடு தானும் ஒரு தலைவரே என்று செட்டிலாகலாம். இல்லை தனித்தே இருப்பதாக வைத்துக் கொண்டாலும் நான்கு கார் பின் தொடர்ந்து, நாற்பது காமெராக்களுக்கு முன்னே நேர்காணல் தரும் தகுதி கொண்ட ஒரு தலைவராக மிச்சமிருக்கும் வாழ்க்கையைக் கழிக்கலாம்.

ஆட்டுக்குட்டி எவ்வளவு துள்ளினாலும் ஆனை உயரம் வருமா?

நன்றி!

+++

கேள்வி: // ஒருவாரமாக பரபரப்பாக பேசப்பட்ட மகாராஷ்டிரா அரசியலைப் பற்றியும், சிவசேனா-வின் காங் – தே.காங் கூட்டணி பற்றிய உங்கள் பார்வை என்ன? //

அகிலன்

ன்புள்ள அகிலன்,

சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக் கடிதத்தை திருடிச் சென்ற அஜித் பவாரை நம்பி நள்ளிரவுக் கூத்தை நடத்தி ஒரு நாளிலேயே பாஜக மூக்கறுபட்டது. பதவி வெறிக்காக பாஜக எந்த எல்லைக்கும் செல்லும், பெயரளவில் இருக்கும் அரசியல் சாசன மரபைக் கூட கொல்லும் என்பதற்கு இந்த அதிகாலை பதவியேற்பு ஒரு சான்று. ஆளுநர், குடியரசுத் தலைவர், பிரதமர் மூவருக்கும் வெட்கம் மானம் ரோசமில்லை என்பதை இந்நிகழ்வு நிரூபித்திருக்கிறது. அமித்ஷாவின் ராஜதந்திரம் அம்மணமாக அடிபட்டுப் போனது.

பால்தாக்கரே மரணத்திற்கு பிறகு இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் சிவசேனா இழந்த நிலையில் பாஜக அந்த இடத்தை நிரப்பியிருந்தது. சிவசேனா – பாஜக இரண்டும் இந்துத்துவ அரசியலை மையப்படுத்திய இயல்பான கூட்டாளிகள் என்றாலும் மகாராஷ்டிராவைப் பொருத்தவரை சிவசேனா பெரிய பங்காளியாகவும், பாஜக சின்ன பங்காளியாகவும் இருந்தன. பிறகு பங்காளிகளின் இடங்கள் தலைகீழாக மாறுகின்றன. பாஜக-வும் மைய அரசாக தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டது. இந்த நிலையில் தேர்தல் கூட்டணியில் சிவசேனாவிற்கு குறைந்த இடங்களே கொடுக்கப்படுகின்றன. ஆனால் தேர்தல் முடிவில் பாஜக எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதனால் சிவசேனா சுழற்சிமுறை முதல்வரைக் கோரியது. இதை பாஜக ஏற்கவில்லை. இந்தியாவின் அதிக மாநிலங்களை ஆளும் கட்சி என்ற பெயரை ஈட்ட விரும்பி மூக்கில் கரி பூசிக் கொண்டது.

பாஜக-விற்கு இந்துத்துவ அரசியல் மையமென்றால் சிவசேனாவிற்கு அது இரண்டாம் பட்சமானதுதான். மராத்தா சாதியினரை மையப்படுத்திய மராட்டிய இன உணர்வே முதன்மையானது. கட்சி என்ற முறையில் சிவசேனாவின் தன்மை லும்பன் தன்மையுடையது. கட்சியின் தலைவர்கள், தளபதிகள் பெரும் பணக்காரர்களாகவும், தொண்டர்கள் உதிரிப் பாட்டாளிகளாகவும் இருக்கிறார்கள். சரத்பவாரின் தேசியவாத காங்கிரசு நடுத்தர, பணக்கார விவசாயிகளையும், மராத்தா சாதியினைரையும் மையமாகக் கொண்டது. மாநிலத்தின் சிலபகுதிகளில் சரத்பவாருக்கு இன்னமும் செல்வாக்கு இருக்கிறது. காங்கிரசோ தனது பழைய நிலையின் எச்ச சொச்சங்களை வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது.

படிக்க :
♦ மாநில தேர்தல்கள் : சுருங்குகிறதா பாஜகவின் சாம்ராஜ்ஜியம் ?
♦ ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து ! பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் !!

பாஜக எதிர்ப்பு என்ற முறையில் இவர்களை ஒன்றிணைய வைத்ததும் பாஜகதான். அதேநேரம் இவர்களுக்கிடையே தோன்றவிருக்கும் முரண்பாட்டிற்கும் பாஜக-தான் காரணமாக இருக்கும். கர்நாடகாவில் குமாரசாமியை நேரம் பார்த்து உதைத்து வெளியேற்றிய வைபவத்தை இங்கேயும் நடத்த பாஜக நேரம் பார்த்துக் கொண்டிருக்கும். அப்படி ஒரு அனுபவம் இருப்பதால் உத்தவ் தாக்கரே அரசு கொஞ்ச காலம் எச்சரிக்கையுடன் இருக்கலாம். பாஜக-வும் நள்ளிரவு வைபவத்தால் அம்பலப்பட்டு போயிருப்பதால் தனது கவிழ்ப்பு வேலைகளை உடனடியாக நடத்த வாய்ப்பில்லை. இந்நிலையில் சிவசேனா தன்னை மீண்டும் ஒரு ஆளும் கட்சியாக நிறுத்தும் வண்ணம் பண பலத்தையும், அரசியல் பலத்தையும் பெருக்க முயற்சிக்கும். இதைத்தாண்டி நாட்டிலேயே அதிக விவசாயிகள் தற்கொலை செய்யும் மராட்டிய மாநிலத்தில் மக்களுக்கு இந்த புதிய அரசு என்ன புதியதாக சாதிக்க முடியும்?

நன்றி!

4 மறுமொழிகள்

 1. ஆட்டுக்குட்டியை பார்த்து ஏன் திராவிட ஊடகம் பதறுகிறது

 2. ஆட்டுக்குட்டியை பார்த்து ஏன் திராவிட ஊடகம் பதறுகிறது.

  பன்றி புலி வேடம் தரித்து இதுவரை தமிழகத்தை ஆண்டு இருக்கலாம், அது இப்பொழுது தமிழ் தேசிய அரசியல் என்னும் மழையில் நனைந்து வேடம் கலைந்து போனது இனி திராவிடம் ஒருபோதும் புலியாக வாய்ப்பில்லை.

  நீங்கள் குறிப்பிட்டது போல சீமான் பதட்டப் படுவதற்கு காரணங்கள் இருக்கலாம் ஆனால் சீமானை பார்த்து திராவிட ஊடகம் பதற்றம் அடைய காரணம் என்னவோ.

  • “இனி திராவிடம் ஒருபோதும் புலியாக வாய்ப்பில்லை…”
   உண்மைதான்,சுயமாக வேட்டையாட தகுதியற்ற கழுதைப்புலிகள் வேட்டை மிருகங்களின் விருந்தை சுற்றி எச்சில் ஒழுக காத்திருக்கும்.
   முதலாளிகளின் விருந்துக்காக, உழைக்கும் மக்கள் மீதான சுரண்டல், அடக்குமுறைக்கு சட்டப்பூர்வ முத்திரை குத்தும் ஓட்டரிசியலை சுற்றி காத்திருக்கும் தமிழ் தேசிய அண்ணன்,
   தர்பார் நாற்காலிக்காக புளித்துப்போன சாட்பூட் ஆட்டத்தை தம்மளவுக்கு ஆரவாரமாக மாற்றுகிறார். அந்த ஆட்டத்தின் போக்கைப்பற்றிதான் கட்டுரை பேசுகிறது. ஆட்டத்தின் விதி அண்ணனுக்கு இப்போதே கண்ணைக்கட்டுகிறது. அதுதான் மதுரை மாவீரர்தினம் அண்ணன் உளறல்.

 3. ரோட்டல குறுக்கமறுக்க போற பைத்தியக்காரன பாத்து மக்கள் பதட்டமடையத்தான செய்வாங்க தாமரைக்கண்ணன்.
  வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டு அப்பப்ப வெளியே வர்ற பைத்தியக்காரனுங்களவிட ரோட்டுல திரியிற பைத்தியக்காரன்கிட்ட நமக்கு கொஞ்சம் பதட்டம் அதிகமாத்தான இருக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க