சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா, “பிரதமர் அலுவலகம் சட்டவிரோதமாகவும் உள்நோக்கத்துடனும் தன்னைப் பதவியிலிருந்து அகற்றியிருப்பதாக” மோடி அரசின் மீது உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார்.
“ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிட்டால் அர்ஜென்டினாவைப் போன்ற பொருளாதார- அரசியல் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்” என்று மோடி அரசை எச்சரிக்கிறார் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா. “வாராக்கடன் என்று பல்லாயிரம் கோடி நிலுவை வைத்திருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் பட்டியலைக் கொடுக்குமாறு” ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும், பிரதமர் அலுவலகம் மற்றும் நிதியமைச்சகத்துக்கும் நோட்டீசு அனுப்புகிறார் தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆசார்யா.
2014 -இல் மோடி பிரதமர் நாற்காலியில் அமர்ந்தபோது அரங்கேற்றிய நாடகங்களை இப்போது சற்று நினைவு படுத்திப் பாருங்கள். “ஊழலற்றவர், உறுதியானவர், விரைந்து முடிவெடுப்பவர், மந்திரிகளையும் அதிகாரிகளையும் கண்ணில் விரல் விட்டு ஆட்டக்கூடியவர், ஒவ்வொரு நாளும் அவர்கள் என்ன உண்கிறார்கள், என்ன உடுத்துகிறார்கள் என்பது வரை கண்காணித்து இயக்கக் கூடியவர்” என்றெல்லாம் ஆளும் வர்க்க ஊடகங்களால் ஊதி உப்ப வைக்கப்பட்ட மோடியின் பிம்பம் காற்றுப் போன பலூனாக மாறிவருகிறது.
***
“மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷியிடம் 5 கோடி ரூபாய் இலஞ்சம் வாங்கியதாக” தனக்குக் கீழே உள்ள சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்கிறார், சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா. அஸ்தானாவின் கீழிருந்த டி.எஸ்.பி. தேவேந்திரகுமாரை, “மிரட்டிப் பணம் பறித்த குற்றம், ஆவணங்களைத் திருத்திய குற்றம்” ஆகியவற்றுக்காக கைது செய்து, சி.பி.ஐ. அலுவலகத்துக்குள்ளேயே சி.பி.ஐ. ரெய்டு நடத்துகிறது. இதை எதிர்கொள்ள, “அலோக் வர்மாவும் இலஞ்சம் வாங்கியிருப்பதாக” ஊழல் கண்காணிப்பு இயக்குநர் கே.வி.சவுத்ரியிடம் புகார் கொடுக்கிறார் அஸ்தானா.
அஸ்தானா மீது அலோக் வர்மா தாக்கல் செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையில், துபாயில் மொயின் குரேஷி ஆட்களிடம் இலஞ்சம் வாங்கிய விவகாரத்தில் “ரா” நிறுவனத்தின் சிறப்பு இயக்குநர் சமந்த் குமார் கோயலின் பெயர் இருக்கிறது. இதற்குப் பதிலடியாக, “அலோக் வர்மாவுக்கு நெருக்கமான அமலாக்கத்துறை (Enforcement Directorate) இணை இயக்குநர் ராஜேஸ்வர் சிங்கிற்கு பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. உடன் தொடர்பு இருப்பதாக”க் குற்றம் சாட்டுகிறது “ரா’’. “ஊழல் பேர்வழிகளுடன் சேர்ந்து கொண்டு தன்னைப் பழிவாங்குவதாக” வருவாய்த்துறை செயலர் ஹஸ்முக் அதியா மீது குற்றம் சாட்டுகிறார் அமலாக்கத்துறை இணை இயக்குநர் ராஜேஸ்வர் சிங்.
படிக்க :
♦ சிக்கினார் மோடியின் எடுபிடி சிபிஐ இயக்குனர் அஸ்தானா !
♦ பிர்லா – சஹாரா ஆவணங்கள் : மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது !
கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், ஊழல் ஒழிப்பாளர்கள் என்றும் கூறப்படும் அமலாக்கத்துறை, ஊழல் கண்காணிப்புத் துறை, ரா, சி.பி.ஐ. போன்ற நிறுவனங்களின் உண்மையான யோக்கியதையையும், மோடியால் எல்லா பதவிகளிலும் திணிக்கப்பட்டுள்ள குஜராத்தைச் சேர்ந்த கூலிப்படை அதிகாரிகளின் யோக்கியதையையும் மேற்சொன்ன நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.
***
தற்போது குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் மோடியின் ‘குஜராத் இறக்குமதி’ யான அஸ்தானா, கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு வழக்கையும் லாலுவுக்கு எதிரான வழக்கையும் கையாண்டவர்; மல்லையா வழக்கைக் கையாள்பவர்.
6000 கோடி வங்கிக்கடனை ஏமாற்றி விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிய குஜராத் முதலாளி சந்தேசராவின் லஞ்ச டயரியில் இடம்பெற்றவர்; தனது மகள் திருமணத்தை சந்தேசராவுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் நடத்தியவர்.
ஊழல் கண்காணிப்பு இயக்குநராக மோடியால் நியமிக்கப்பட்டிருக்கும் கே.வி சவுத்திரி, வருமானவரித் துறையின் தலைமை இயக்குநர் பதவியில் இருந்த போது, ராடியா டேப் , ஸ்டாக் குரு ஊழல், எச்.எஸ்.பி.சி. கருப்பு பண வழக்குகள் போன்றவற்றைக் கிடப்பில் போட்டவர்.
மோடியின் இன்னொரு ‘குஜராத் இறக்குமதி’யான வருவாய்த்துறை செயலர் ஹஸ்முக் அதியா என்பவரோ, வங்கி மோசடி குற்றவாளிகளான நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோருக்கு உதவி செய்ததாக குற்றம் சாட்டப்படுபவர்.
மோடியின் நம்பகமான அதிகாரிகள் எனப்படுவோர், குஜராத் தரகு முதலாளிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் அதிகார வர்க்கத்துடன் கொண்டிருக்கும் நேரடி உறவுக்கான நிரூபணங்கள். சரியாகச் சொல்வதெனில், இப்போதைக்கு நமக்குத் தெரிய வந்திருக்கும் சில நிரூபணங்கள்.
***
இயக்குநர் அலோக் வர்மா, சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் அஸ்தானா மீது இலஞ்ச வழக்குப் பதிவு செய்து, அவர் விசாரித்து வந்த வழக்குகளான அகஸ்தா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வழக்கு, மல்லையா வழக்கு, நிலக்கரி ஊழல், ராபர்ட் வத்ரா வழக்கு, தயாநிதி மாறன் வழக்கு ஆகியவற்றை அவரிடமிருந்து பறித்தவுடனே, அலோக் வர்மா, அஸ்தானா ஆகிய இருவரின் பதவிகளையும் முடக்குவதாக நள்ளிரவு 12.30-க்கு உத்தரவு பிறப்பிக்கிறார் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சவுத்திரி.
அந்த இடத்தில் சி.பி.ஐ. இன் தற்காலிக இயக்குநராக நாகேஸ்வர ராவை நியமித்து நள்ளிரவு 1 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கிறார் மோடி. உடனே நள்ளிரவில் ஐ.பி., ரா ஆட்களுடன் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரால் சி.பி.ஐ. அலுவலகம் முற்றுகை யிடப்படுகிறது. அலோக் வர்மாவின் பதவி முடக்க உத்தரவு இரவு 2.30-க்கு அவரது வீட்டில் வழங்கப்படுகிறது.
இரவு ஒரு மணிக்குப் பதவியேற்ற நாகேஸ்வர ராவ், அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த 11 அதிகாரிகளுக்கும் இரவோடு இரவாக மாற்றல் உத்தரவு பிறப்பிக்கிறார். அதிகாலையில் அலோக் வர்மாவின் வீட்டை ஐ.பி. அதிகாரிகள் உளவு பார்க்கிறார்கள். அவர்களை விரட்டிப் பிடித்து, டெல்லி போலீசிடம் ஒப்படைக்கின்றனர் அலோக் வர்மாவின் பாதுகாப்பு அதிகாரிகள்.
நடந்திருக்கும் இந்த சம்பவங்கள் அனைத்தும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் நடைபெறும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதவை. “ஒரு ஜனநாயக நாட்டில் நடக்க முடியாதவை” எனக் கருதப்படுபவை.
***
தங்களது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், கிரிமினல் நடவடிக்கைகளை மறைத்துக் கொள்ளவும் பார்ப்பன பாசிசக் கும்பல் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை நிரூபிப்பதற்கான சான்றுகள் வந்தவண்ணமிருக்கின்றன.
அஸ்தானாவின் ஊழல் குறித்து நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த சதீஷ்பாபு சனா என்பவர், “தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து விட்டுத் தலைமறைவாகியிருக்கிறார்.
படிக்க :
♦ சி.பி.ஐ. ராகேஷ் அஸ்தானா வழக்கில் உயிருக்கு ஆபத்தென சனா புகார் !
♦ குஜராத் : அரசமைப்பையே குற்றக் கும்பலாக்கும் சட்டம் !
இந்த வழக்கை விசாரித்த அதிகாரியும் தற்போது அந்தமானுக்கு மாற்றப்பட்டிருப்பவருமான டி.எஸ்.பி. அஜய் குமார் பஸ்ஸியும் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். “அஸ்தானாவின் ஊழலுக்கும் அதில் “ரா” அதிகாரிகள் தொடர்புக்கும் ஆதாரம் இருப்பதாகவும், தான் மாற்றல் செய்யப்பட்டுவிட்டதால், தற்போது அந்த வழக்கைக் கையாளும் அதிகாரிகள் சாட்சியங்களை அழித்து விடுவார்கள் என்றும், தன்னுடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும்” தனது மனுவில் அவர் கூறுகிறார்.
இந்த நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் இதே வேளையில், “குஜராத் பா.ஜ.க. அமைச்சர் ஹரேன் பாண்டியாவை கொலை செய்யும் காண்டிராக்டை டி.ஜி.பி. வன்சாராதான் தனக்கு ஒப்படைத்தார்” என்று சோரபுதீன் சிறையில் தன்னிடம் கூறியதாக, சோரபுதீன் கொலை வழக்கை விசாரித்து வரும் மும்பை நீதிமன்றத்தில் நவம்பர் 5 ஆம் தேதியன்று கூறியிருக்கிறார் அரசு தரப்பு சாட்சியான ஆசம்கான்.
சனாதன் சன்ஸ்தா பயங்கரவாதிகளும், பா.ஜ.க. அரசும் வேறு வேறு என்றும், என்ன இருந்தாலும் அரசமைப்பு சட்டத்துக்கும் மரபுகளுக்கும் கட்டுப்பட்டுத்தான் பா.ஜ.க. அரசு ஆட்சி நடத்தியாக வேண்டும் என்றும் நம்பிக் கொண்டிருந்த பல பேருடைய மூட நம்பிக்கைகளையும் மோடி – அமித் ஷா கும்பல் தகர்த்து வருகின்றது.
அரசமைப்பின் எல்லா நிறுவனங்களும் பார்ப்பன பாசிஸ்டுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மோடி – அமித் ஷா கும்பலின் கூலிப்படையாக செயல்பட்ட குஜராத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மைய அரசின் அதிகாரத்தை ஆக்கிரமித்திருக்கின்றனர். அந்த வகையில், 2014 தேர்தலின்போது மோடி அளித்த ஒரு வாக்குறுதி நிறைவேறியிருக்கிறது. “குஜராத் மாடல்” அதன் உண்மையான பொருளில் இந்தியாவின் மீது திணிக்கப்படுகின்றது.
***
மற்றப்படி எல்லா வாக்குறுதிகளும் பொய்த்துவிட்டன. எல்லா முனைகளிலும் தோல்வி! பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் இருந்த நிலையிலிருந்தும் அழிக்கப்பட்ட சிறுதொழில்கள் – விவசாயம், அதிகரிக்கும் வேலையின்மை, விவசாய விளைபொருட்களின் விலை வீழ்ச்சி, பெட்ரோல் விலையில் மோடி நடத்தும் கொள்ளை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அரசு ஆசியுடன் அடுத்தடுத்து தப்பியோடும் வங்கிக் கொள்ளையர்கள், ரியல் எஸ்டேட் வீழ்ச்சி… எனப் பொருளாதாரம் பேரழிவின் விளிம்பில் நிற்கிறது.
அம்பானி உள்ளிட்ட குஜராத்தி பனியா முதலாளிகளுக்குக் கஜானாவைக் கொள்ளையடித்து வழங்குவதுதான் மோடி – அமித் ஷா கும்பலின் நோக்கம் என்பதைத் துலக்கமாக நிரூபிக்கிறது ரஃபேல் ஊழல்.
படிக்க :
♦ மோடி அரசின் ரஃபேல் ஊழலுக்கு முன்னால் போபர்ஸ் எல்லாம் ஜுஜூபி !
♦ ரஃபேல் விமானம் : மூட்டைப் பூச்சி மிசின் தயாரிக்க அம்பானிக்கு அள்ளிக் கொடுக்கும் மோடி
2013-இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அடைந்த தோல்விகளைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான தோல்வியை மோடி அரசு எதிர்கொண்டிருக்கிறது. சொல்லிக்கொள்ளப்படும் ஜனநாயக நிறுவனங்களை ஆக்கிரமிப்பதையும், சிதைப்பதையும் அப்பட்டமாகவும் திமிர்த்தனமாகவும் அரங்கேற்றி வருகிறது.
ஆளும் வர்க்கம் விரும்பியவாறு பொருளாதாரத்தைத் தேக்க நிலையிலிருந்து மீட்பதற்கும் மோடியால் இயலவில்லை. இவையனைத்தும் நிரூபிக்கப்பட்ட பின்னரும், ஆளும் வர்க்கம் மோடியைக் கைவிடவில்லை. மோடி – அமித் ஷா கும்பலின் குற்றங்கள், தோல்விகள் அனைத்தையும் மறைத்து, இந்த அரசைப் பாதுகாக்க முனைந்து நிற்கின்றன கார்ப்பரேட் ஊடகங்கள்.
“இந்தச் சூழலில், நாடு முன்னேற வேண்டுமென்றால் இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது உறுதியான ஆட்சி தேவை” என்று கூறியிருக்கிறார் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல். இதனை பாசிசக் கும்பலின் கருத்து என்று மட்டும் கருதி ஒதுக்கிவிட முடியாது. அது ஆளும் வர்க்கத்தின் கருத்தும்கூட.
பொதுச்சொத்துகள், வங்கிப்பணம், அரசு கஜானா ஆகியவற்றின் மீது அவர்கள் நடத்திவரும் தீவட்டிக் கொள்ளையைத் தலைமை தாங்கி நடத்திக் கொடுப்பதற்கும், மக்களை ஒடுக்குவதற்கும், திசை திருப்புவதற்கும் அவர்களின் முதல் தெரிவு பார்ப்பனப் பாசிசம்தான்.
எனினும், மோடி அரசு மக்களின் வெறுப்புக்கு இலக்காகி இருப்பதை ஆளும் வர்க்கத்தினரால் மறுக்கவியலவில்லை. “என்ன செய்வது, மோடிக்கு வேறு மாற்று இல்லையே” என அவநம்பிக்கையைப் பரப்புவதன் மூலம், பார்ப்பன பாசிசத்தை ஏற்றுக் கொள்வதற்கு மக்களுடைய மனதைப் பக்குவப்படுத்துகிறார்கள்.
***
மக்களைத் திசை திருப்புவதற்கும், இந்து தேசவெறி, மதவெறிக்கு பலியாக்குவதற்கும் வேறொரு உத்தியை ஆர்.எஸ்.எஸ். கையாள்கிறது. உச்ச நீதிமன்றத்தின் சபரிமலை தீர்ப்பு, பட்டாசு தீர்ப்பு போன்றவற்றையும், அயோத்தி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாததையும் காட்டி, “இந்த ஜனநாயகத்தின் நிறுவனங்கள் இந்துக்களின் உணர்வுக்கு எதிராக இருப்பதாக” பரப்புரை செய்கிறது.
உத்திர பிரதேசத்தில் ஊர்களுக்கு சமஸ்கிருத பெயர் மாற்றம், ராமன் சிலை, அயோத்தி கோயில் என்று மதவெறியைக் கிளப்புகிறது. “நிறுவனங்களைப் பாதுகாப்பது முக்கியம்தான். ஆனால் நிறுவனங்களை விடத் தேசம் பெரிது” என்று எச்சரிக்கிறார் அருண் ஜெட்லி.
“அர்பன் நக்சல்களால் தேசத்துக்கு ஆபத்து” என்று தொடங்கி, இப்போது, தான் கோரிய வண்ணம் பணத்தை விடுவிக்க மறுக்கும் ரிசர்வ் வங்கி, தனக்குக் கட்டுப்பட மறுக்கும் சி.பி.ஐ. தலைமை, தொந்தரவு கொடுக்கும் தகவல் ஆணையம், இந்துக்களின் உணர்வை மதிக்காத நீதிமன்றம், பிறகு எதிர்க்கட்சிகள் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நிறுவனங்களை”த் ‘தேசத்தின் எதிரி’யாகச் சித்தரிக்கும் திசையில் பார்ப்பன பாசிசத்தின் அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
₹15.00Add to cart |
₹15.00Add to cart |
₹15.00Add to cart |