privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்குஜராத் : அரசமைப்பையே குற்றக் கும்பலாக்கும் சட்டம் !

குஜராத் : அரசமைப்பையே குற்றக் கும்பலாக்கும் சட்டம் !

-

டந்த மார்ச் மாத இறுதியில் குஜராத் சட்டமன்றத்தில் ஒரு கருப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அச்சட்டத்தின் பெயர் குஜராத் பயங்கரவாத மற்றும் அமைப்புரீதியான குற்றங்களைக் கட்டுப்படுத்தல் சட்டம் “(GCTOC)”. தடா, பொடா மற்றும் ஊபா போன்ற கருப்புச் சட்டங்களின் வரிசையில் களமிறக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்டத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், இச்சட்டத்தின் தோற்றப் பின்னணியைப் பார்ப்போம்.

அக்சர்தாம் கோவில் தாக்குதல் வழக்கு
குஜராத் மாநிலத்திலுள்ள அக்சர்தாம் கோவில் தாக்குதல் வழக்கில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பல ஆண்டு சிறைவாசத்துக்குப் பின் ஒன்றுமறியா நிரபராதிகள் என உச்சநீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முசுலீம்கள் (கோப்புப்படம்)

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பெருந்திரளான அப்பாவி இஸ்லாமியர்களைக் கொன்று குவித்து வெறியாட்டம் போட்ட மோடி கும்பல், அதன் தொடர்ச்சியாக பல நூறு இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்துக் கைது செய்து பல போலி மோதல் கொலைகளையும் அரங்கேற்றியது. அக்காலகட்டத்தில்தான் பல்வேறு அப்பாவி இஸ்லாமியர்கள் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பொடா சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் நடத்திய போராட்டங்களின் விளைவாக 2004-ம் ஆண்டில் மத்திய அரசால் பொடா சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் பொடாவிற்கு சற்றும் குறையாத விதிகளைக் கொண்டதொரு கருப்புச் சட்டத்தை “குஜராத் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் கட்டுப்படுத்துதல் சட்டம்” என்ற பெயரில் இயற்றியது மோடி அரசு. இச்சட்டம் முறையே 2004, 2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் அரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட போதிலும், அவரால் நிராகரிக்கப்பட்டு திருப்பியனுப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தச் சட்டம் நான்காவது முறையாக புதிய அவதாரமெடுத்து அரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காலாவதியான தடா மற்றும் பொடா போன்ற ஆள்தூக்கிச் சட்டங்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் இயற்றப்பட்டிருக்கும் இந்தச் சட்டத்தின்படி, போலீசார் சந்தேகப்படும் எவருடைய தொலைபேசியையும் ஒட்டுக்கேட்பதோடு, மின்னஞ்சல்களையும் நோட்டமிட்டு அவற்றை ஆதாரமாகக் காட்டலாம். எஸ்.பி. பதவிக்கு குறையாத தகுதி உள்ள போலீசு அதிகாரியின் முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் அளிக்கும் வாக்குமூலம் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும். அதாவது, குற்றம் சாட்டப்பட்டவரை சித்திரவதை செய்து பெறப்படும் வாக்குமூலம் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும். கிரிமினல் சட்டவிதிகளின் படி 90 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்பதற்கு மாறாக, இச்சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களைக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமலேயே போலீசின் விசாரணையில் 180 நாட்கள் வரை வைத்திருக்கலாம்.

விசாரணைக் காலம் முடிந்த பின்னர் இயல்பாகவே பிணை வழங்கப்படும் என்று எதிர்பார்த்து இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மனு செய்ய முடியாது. இக்குற்ற வழக்கை விசாரிக்கும் நீதிபதியிடம் பிணை கோருவதற்கான காரணங்களைத் தெரிவித்து, அவருக்கு அது ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே பிணை வழங்கப்படும். இல்லையேல், குற்றம் சாட்டப்பட்டவர் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைபட்டுக் கிடக்க வேண்டும்.

தீவிரவாதத்தைத் தடுத்து நாட்டு மக்களைக் காப்பாற்றக் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் தடா சட்டத்தின் கீழ் குஜராத்தில் 1993-க்கு முன்பு வரை மட்டுமே சுமார் 19,263 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் யாரும் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அல்லர். மாறாக, நர்மதை அணை எதிர்ப்புப் போராட்டம் மற்றும் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற விவசாயிகளும், மலைவாழ் மக்களும், தொழிலாளர்களும், சிறுபான்மையினரும் தான். தடா பரிசீலனைக் கமிட்டியின் ஆய்வறிக்கையின்படி இந்தியா முழுக்க தடாவின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சுமார் 75,000 பேர். ஆனால், இவர்களில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் சுமார் 750 பேர் மட்டுமே.

இந்நிலையில் குஜராத்தில், இந்துவெறி பாசிச மோடியின் ஆட்சியில் பொடா சட்டம் எப்படிச் செயல்பட்டிருக்கும் என்பதைச் சொல்லவே தேவையில்லை. கோத்ரா இரயில் எரிப்பு, அக்சர்தாம் கோவில் மீதான தாக்குதல் வழக்கு, ஹரேன் பாண்டியா கொலை வழக்கு ஆகியவற்றில் பொடா சட்டம் ஏவப்பட்டது. அனைத்து வழக்குகளிலும் சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி இருந்த அப்பாவி சிறுவர்கள் உள்ளிட்ட பல நூறு இஸ்லாமியர்களைக் கைது செய்து பல ஆண்டு காலம் சிறையில் அடைத்தது மோடி அரசு. பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் இதனைச் சுட்டிக் காட்டி கண்டித்துள்ளது. பொடா சட்டம் குஜராத்தில் நடைமுறையில் இருந்த 2002-2004 காலகட்டத்தில் அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 240 பேர்களில் 239 பேர் இஸ்லாமியர்கள். மீதி இருந்த ஒருவர் சீக்கியர். ஆனால் 3 நாட்களில் 1,500-க்கும் அதிகமான இஸ்லாமியர்களை வெட்டியும் எரித்துக் கொன்றும் வெறியாட்டம் போட்ட எந்த இந்து பயங்கரவாதியின் பக்கமும் திரும்பவில்லை இந்தப் பொடா.

எனவே, தற்போது புதிய பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இக்கருப்புச் சட்டத்தின் உண்மையான நோக்கத்தை கடந்தகால தடா, பொடா சட்டங்களின் அனுபவத்திலிருந்து எவரும் புரிந்து கொள்ள முடியும். சிறுபான்மை இஸ்லாமியர்களையும், மறுகாலனியாதிக்கத்துக்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கும் எதிராகப் போராடும் உழைக்கும் மக்களையும் ஒடுக்கும் இந்துத்துவ போலீசு ராஜ்ஜியமாக குஜராத் மாற்றப்பட்டுள்ளதையே இப்புதிய கருப்புச் சட்டம் மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது.

– கதிர்
____________________________
புதிய ஜனநாயகம், மே 2015
____________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க