ஃப்ரான்ஸ் நாட்டிலிருந்து 36 ரஃபேல் விமானங்கள் வாங்குவது சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் உடனடியாக மக்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று கடந்த புதன்கிழமை, (08-08-2018) முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஸ்வந்த் சின்கா மற்றும் சமூக செயற்பாட்டாளர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

ரஃபேல் விமானம் , மோடி அரசின் ஊழல் , ரஃபேல் விமான ஊழல்
பிரசாந்த் பூசன், அருண் ஷோரி, யஸ்வத் சின்கா (இடமிருந்து வலமாக)

இந்த பரிவர்த்தனையில் மோசடி நடந்ததாக அவர்கள் கூறும் கணக்கு சுமார் 35,000 கோடி ரூபாய் ஆகும். கடந்த 2015-ம் ஆண்டு ஃப்ரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதில், நாட்டின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாக அவர்கள் மூவரும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரஃபேல் நிறுவனத்துடன் கூட்டு அமைத்துள்ள ரிலையன்ஸ் பாதுகாப்பு மற்றும் வான்வெளி நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ராஜேஷ் திங்கராவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

அந்த அறிக்கையில் “36 ரஃபேல் விமானங்கள் வாங்கியது தொடர்பாக ரிலையன்சின் எந்த ஒரு குழுமத்திற்கும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தால் எந்த ஒரு ஒப்பந்தமும் வழங்கப்படவில்லை.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த 36 விமானங்களில் எதுவும் இந்தியாவில் தயாரிக்கப்படப் போவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியோடு நெருக்கமாக இருப்பதனால்தான் அனில் அம்பானி குழுமம் இந்திய இராணுவத்தின் தொழில் கூட்டாளியாக இருப்பதாக அவர்கள் மூவரும் கூறுவதை மறுத்திருக்கின்றது அந்நிறுவனம்.

ரஃபேல் விமானம் , மோடி அரசின் ஊழல் , ரஃபேல் விமான ஊழல்“இராணுவ கொள்முதல் நடைமுறையின் படியே, வெளிநாட்டு வழங்குனர்கள், தங்களது இந்திய கூட்டாளியைத் தேர்வு செய்வதில் பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு எவ்வித பங்கும் கிடையாது. கடந்த 2005-ம் ஆண்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் இந்தியக் கூட்டு, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே இதுதான் நிலை.” என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் குற்றம்சாட்டியுள்ள அருண் சோரி, “குற்றவியல் துர்நடத்தை, அரசுப் பதவியை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் நாட்டின் பாதுகாப்பை சீர்குலைத்தல் உள்ளிட்டவை நடந்திருப்பதை அப்பட்டமாகக் காட்டும் ஒரு எடுப்பான முறைகேடுதான் இந்த ஒப்பந்தம். இதற்கு முன்னால் போபர்ஸ் ஊழல் எல்லாம் ஒன்றுமேயில்லை” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “அன்றும் (போபர்ஸ்) அரசாங்கத்தின் தடம் பிரண்ட அறிக்கைகளே தடயமாக இருந்தன. இன்றும் அரசாங்கத்தின் தடம் பிரண்ட அறிக்கைகளே தடயங்களாக இருக்கின்றன.” என்று கூறினார்.

மேலும் ”பாஜக போபர்ஸ் ஊழலை பின் தொடர்ந்தது போன்றே” இரக்கமற்ற முறையில் இதைப் பின் தொடர வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார். மேலும் அரசாங்கம் தரும் செய்திகளை அப்படியே போடுவதோடு சுருங்கிக் கொள்ளாமல், கொஞ்சம் ஆழமாக ஆய்வு செய்யுமாறும் ஊடகங்களையும் கேட்டுக்கொண்டார் அருண்சோரி.

ரஃபேல் விமானம் , மோடி அரசின் ஊழல் , ரஃபேல் விமான ஊழல்
இராணுவ இரகசியம் என பூச்சாண்டி காட்டுகிறார் நிர்மலா சீதாராமன்

இதுகுறித்து பிரசாந்த் பூஷன் கூறுகையில், ரஃபேல் விமானக் கொள்முதல்தான் இந்த நாடு இதுவரை கண்டிருக்கும் மிகப்பெரும் ஊழல். கடந்த 2015 ஏப்ரலில் மோடியின் ஃப்ரான்ஸ் பயணத்தின்போது விமானப்படையிலிருந்தோ பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்தோ யாரையும் கலந்தாலோசிக்காமல், அரசாங்கங்களுக்கு இடையிலான கொள்முதல் அறிவிக்கப்பட்டது.

மேலும் விமானப்படையின் தற்போதைய தலைமை மார்ஷலும் அப்போதைய துணைத் தலைமை மார்ஷலுமான பி.எஸ். தனோவா-வும் இந்த உடன்படிக்கை அறிவிக்கப்படும்போது பாரீசில்தான் இருந்தார். ஆனால் அவருக்கு ஏற்கனவே பரிசீலனையில் இருந்த 126 ரஃபேல் போர் விமானங்களுக்கான பேரம் நிறுத்தப்பட்டு 36 விமானங்கள் மட்டுமே வாங்கப் போவதாக எடுக்கப்பட்ட முடிவு குறித்துத் தெரியாது. அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கும் அதுகுறித்து எதுவும் தெரியாது என்று கூறினார்.

நவம்பர் 18, 2016 அன்று பாராளுமன்றத்தில் ஒவ்வொரு ரஃபேல் விமானமும், சுமார் 670 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது என்றும், அனைத்து விமானங்களும் ஏப்ரல் 2022-ல் இந்தியாவில் சேர்க்கப்படும் என்றும் மோடி அரசாங்கம் அறிவித்தது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

*****

கார்கில் போரில் சவப்பெட்டியிலேயே ஊழல் செய்த பா.ஜ.க, விமான பேரம் என்றால் சும்மா விடுமா என்ன ? காங்கிரசு ஆட்சிக்காலத்தில் 126 விமானங்கள் வாங்கப் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஒப்பீட்டளவில் குறைவான விலையில் வாங்கவேண்டிய விமானங்களை அதிக விலை கொடுத்து 36 விமானங்களை வாங்கியுள்ளது பாஜக அரசு.

இது மோசடி எனக் குற்றம்சாட்டுவோருக்கு, இராணுவ இரகசியம் என பூச்சாண்டி காட்டுகிறார் நிர்மலா சீதாராமன். வெளிப்படையான அரசாங்கம் என கூப்பாடு போட்ட மோடி தற்போது கல்லுளிமங்கனாக வாய்மூடித் திரிகிறார்.

– வினவு செய்திப் பிரிவு

இது குறித்து அருண்சோரி, யஸ்வந்த் சின்கா மற்றும் பிரசாந்த் பூசன் ஆகியோர் அளித்துள்ள அறிக்கையின் மொழியாக்கம் விரைவில் வினவு தளத்தில் வெளியிடப்படும்

 -வினவு செய்திப் பிரிவு

தி இந்து ஆங்கில இணையதளத்தில் வெளியான செய்திப் பதிவின் தமிழாக்கம்.
நன்றி: தி இந்து

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க