‘உத்தமர்’ மோடியின் மற்றுமொரு ஊழல் நம் கண்ணெதிரே நடத்தப்பட்டு வருகின்றது. பிரெஞ்சு நாட்டு விமான நிறுவனமான “தஸ்ஸால்டிடம்” (Dassault) இருந்து 36 ரஃபேல் வகைப் போர் விமானங்களை வாங்க சுமார் 57 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றை மோடி உறுதி செய்துள்ளார்.
2015 -ம் ஆண்டு பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த மோடி, தஸ்ஸால்ட் நிறுவனத்திடம் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்திருந்தார்; எனினும், அப்போது அந்த ஒப்பந்த அடிப்படையில் விமானங்களின் உண்மையான விலை வெளியிடப்படாமல் இருந்தது.
2015 -ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட போதே ரஃபேல் விமானங்கள் தகுதி குறைவானது என்பதையும், தஸ்ஸால்ட் நிறுவனம் ஏறத்தாழ போண்டியாக வேண்டிய நிலையில் இருந்ததையும், இந்த ஒப்பந்தம் பிரான்சுக்கு சேவை செய்யும் நோக்கம் கொண்டதாக இருப்பதையும் சுட்டிக்காட்டி வினவில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். (பவர் ஸ்டார் மோடி பாரிசில் வாங்கிய மூட்டை பூச்சி மிஷின்).
தற்போது மேற்படி ஒப்பந்தத்தின் மதிப்பு வெளியாகி இருப்பதோடு மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிதாக வெளியாகி உள்ள தகவல்களின் படி, மோடி செய்து கொண்ட ஒப்பந்தம் ஏகாதிபத்திய பிரான்சுக்கு மட்டுமல்ல உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் வைக்கப்படும் கறி விருந்து என்பது அம்பலமாகியுள்ளது.
மேற்கொண்டு விவரங்களுக்குள் செல்வதற்கு முன் சில அடிப்படைத் தகவல்களைப் பார்த்து விடுவோம்.
இந்திய விமானப்படையில் செயல்பட்டு வந்த மிக் ரக விமானங்கள் தொடர்ந்து பயிற்சியின் போது விபத்துக்குள்ளாவது, ரசிய இந்திய கூட்டுத் தயாரிப்பான சுகோய் ரக விமானங்களும் வயதாகிக் கொண்டிருப்பது போன்ற காரணங்களால், சுமார் 200 மத்திய ரக பல்நோக்குப் போர் விமானங்கள் (MMRCA – Medium Multi-Role Combat Aircraft) தேவைப்படுவதாக 2001 -ம் ஆண்டு இராணுவம் அரசுக்குத் தெரிவித்தது. 2007 -ம் ஆண்டு இராணுவத்தின் இந்தக் கோரிக்கையை அங்கீகரித்த மத்திய அரசு, விமானங்களைக் கொள்முதல் செய்ய டென்டர் அறிவித்தது.
பலநாடுகளைச் சேர்ந்த விமானக் கம்பெனிகள் கலந்து கொண்ட டென்டரின் இறுதியில் சர்வதேச அளவில் நடந்த பல்வேறு போர் பயிற்சிகளில் தொடர்ந்து மோசமாக செயல்பட்ட தகுதி குறைவான ரஃபேல் விமானங்கள் தெரிவு செய்யப்பட்டன. எனினும் அப்போது செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் படி, மொத்தம் 126 விமானங்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அதன் மொத்த மதிப்பு 10.2 பில்லியன் டாலராக இருக்கும் எனவும், ஒரு விமானத்தின் விலை 81 மில்லியன் டாலர்களாக இருக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், இந்தியாவின் பொதுத்துறை இராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு தொழில்நுட்பங்களை மாற்றித் தருவது, 108 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது, இந்த ஒப்பந்தத்தின் மூலம் தஸ்ஸாட் நிறுவனத்திற்கு கிடைக்கும் மொத்த வருவாயில் 50 சதவீதத்தை இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்பன போன்ற விதிகளுக்கு ரஃபேல் நிறுவனம் ஒப்புக் கொண்டிருந்தது. அன்றைய நிலையில் பிற நாட்டு இராணுவங்கள் ரஃபேல் விமானங்களை வாங்கத் தயாராக இல்லாத காரணத்தால் ஏறத்தாழ திவாலாகும் நிலையில் இருந்த தஸ்ஸாட் நிறுவனம், பேரத்தின் போது இந்தியா விதித்த அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்த பின் ரஃபேல் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. கடந்த 2015 ஏப்ரல் 13 -ம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிகர், 126 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு 90 ஆயிரம் கோடி ஆகும் (14 பில்லியன் டாலர்) என தெரிவித்தார். 2012 -ம் ஆண்டு 10.2 பில்லியன் டாலராக இருந்தது, முன்றே ஆண்டுகளில் 14 பில்லியன் டாலராக எதன் அடிப்படையில் அதிகரித்தது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை.
சரியாக ஒரே மாதம் கழித்து 2015, மே 31 -ம் தேதி பத்திரிகையாளர்களிடம் பேசிய பாரிகர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரஃபேல் விமானங்களை வாங்குவதால் நாட்டுக்கு 1.3 லட்சம் கோடி செலவாகும் என தெரிவித்தார். ஒரே மாதத்தில் 40 ஆயிரம் கோடி விலை அதிகரித்த இந்த அதிசயம் எதன் அடிப்படையில் நடந்தது என்பதற்கும் விளக்கமில்லை. இதற்கிடையே ஒப்பந்தம் குறித்தும் விலை குறித்தும் கருத்து தெரிவித்த தஸ்ஸாட் நிறுவனம், தாம் டெண்டருக்கான ஆரம்ப முன்மொழிதல் ஆவணங்களில் (RFP – Request for Proposal) உள்ள விலைகளை உயர்த்தவில்லை என குறிப்பிட்டது.
இதற்கிடையே 2015 -ம் ஆண்டு பிரான்ஸ் சென்ற மோடி, 36 விமானங்கள் மட்டும் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டார். பாதுகாப்புத் துறை சம்பந்தமான ஒரு முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தான இந்த வைபவத்தின் போது அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிகர் உடனிருக்கவில்லை; மோடியே முன்னின்று ஒப்பந்தத்தை நிறைவேற்றினார். பிரான்சில் ஒப்பந்தம் கையெழுத்தாகிக் கொண்டிருந்த போது, கோவாவில் நடமாடும் மீன் கடையைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர். அப்போதே விமானங்களின் விலை குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. அதற்கும் ஓராண்டு கழித்து சத்தமின்றி தனியே அறிவித்துக் கொண்டார்கள்.
மனோகர் பாரிகர் ஆரம்பத்தில் சொன்படி 90 ஆயிரம் கோடி என்று வைத்துக் கொண்டாலும் கூட, ஒரு விமானத்தின் விலை 71.414 கோடியாக இருந்திருக்க வேண்டும் – ஆனால், மோடியின் ஒப்பந்தப்படி ஒரு விமானத்தின் விலை 1666.66 கோடி. அதாவது வெறும் 36 விமானங்களுக்கு 60 ஆயிரம் கோடி தண்டம் கட்டப் போகிறது இந்திய அரசு. மேலும், முந்தைய ஒப்பந்தம் போல் தொழில்நுட்பங்களையும் ரஃபேல் நிறுவனம் இந்தியாவுக்கு மாற்றித் தரப் போவதில்லை.
இந்த இமாலய விலையேற்றத்துக்கு என்ன காரணம்? இடையில் நடந்தது என்ன?
2012 -ம் ஆண்டு தஸ்ஸாட் நிறுவனம் டெண்டரை வென்ற இரண்டே வாரத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தோடும் பின்னர் சில மாதங்கள் கழித்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தோடும் கூட்டுத் தயாரிப்புக்கான (JV) ஒப்பந்தங்களைச் செய்து கொள்கின்றது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தஸ்ஸால்ட்டுக்கு உதிரிபாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் இசுரேல் நிறுவனம் ஒன்றுடனும் கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தியாவில் விமான இரக்கை மற்றும் அதன் இன்ஜினின் பாகங்களைத் தயாரிப்பதற்கு முகேஷ் அம்பானி நிறுவனத்துடனும், பிற உதிரிபாகங்களைத் தயாரிக்க அனில் அம்பானியின் நிறுவனத்தோடும் தனித்தனியே ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது தஸ்ஸால்ட்.
இதன் பின் நடந்த பேச்சுவார்த்தைகளில் தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தொனி மாறத் துவங்குகின்றது. அதற்கு முன் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்சுடன் இணைந்து 108 விமானங்களைத் தயாரிக்கவும், அந்நிறுவனத்துக்கு தொழில்நுட்பங்களை மாற்றிக் கொடுக்கவும் இசைந்திருந்த தஸ்ஸால்ட், அதன்பின் ஏராளமான நிபந்தனைகளை விதிக்கத் துவங்கியது.
குறிப்பாக, சில நவீன ஆயுதங்களை விமானத்தோடு இணைப்பதற்கு கூடுதல் செலவாகும் என ஆரம்பித்த தஸ்ஸால்ட், 126 விமானங்களுக்கான விலையை 14 பில்லியன்களாக்கியது. மேலும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தயாரிக்கும் விமானங்களுக்கான உத்திரவாதத்தை தரமுடியாதெனவும், தொழில்நுட்பத்தை கையளிக்க முடியாதெனவும் பின்வாங்கியது – இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டே அதே சமயத்தில் தான் “மேக் இன் இந்தியா” திட்டத்திற்காக பலூன்களைப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார் மோடி.
தற்போது இந்த ஊழலை முட்டுக் கொடுக்க கையால் கரணம் போட்டுக் கொண்டிருக்கும் மோடி பக்தர்கள் சில வாதங்களை வைக்கிறார்கள். அதில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் கடந்த காலங்களில் (குறிப்பாக தேஜஸ் விமானத் தயாரிப்பில்) சிறப்பாக செயல்படவில்லை என்று புதிதாக கண்டுபிடித்துள்ளனர். ஆனால், விமானத் தயாரிப்பில் எந்த முன் அனுபவமும் இல்லாத அம்பானி சகோதரர்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று வினோதமான தர்க்கத்தை வைக்கிறார்கள்.
அடுத்து, மன்மோகன் சிங் காலத்தில் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் படி நமக்கு கிடைக்கவிருந்த விமானங்கள் அடிப்படை மாடல்கள் எனவும், தற்போது கிடைக்கவிருப்பது கூடுதல் ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருப்பதால் விலை அதிகம் என்கிறார்கள். துப்பாக்கியை விட தோட்டாக்களுக்கு அதிக விலை என்கிற முட்டாள்தனமான தர்க்கத்துக்கு ஒரே உதாரணத்தை மட்டும் பார்க்கலாம்.
விமானத்தில் பொருத்தப்படவுள்ள மெட்டியார் ரக ஏவுகணையின் சந்தை விலையே 2.1 மில்லியன் டாலர் தான். அதே போல் HDMS எனப்படும் ஹெல்மெட்டில் பொருத்தப்படும் வழிகாட்டும் அமைப்பின் விலை 0.4 மில்லியன் டாலர். இவ்வாறு தனித்தனியே விமானத்தில் பொருத்தப்பட உள்ளதாக சொல்லப்படும் ஆயுதங்களின் சந்தை விலையைக் கூட்டினால் ஒரு விமானத்திற்கு 10 மில்லியன் டாலர் அதிகரிக்கலாம். ஆனால், தற்போது ஊதிப் பெறுக்கப்பட்டுள்ள விலையோ 100 சதவீதத்துக்கும் அதிகம்.
ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இவ்வாறு குற்றம் சாட்டுவது வெட்கக்கேடானது என்றும் தேசத்தின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்குவதாகும் என்றும் எச்சரித்துள்ளார். இதே தர்க்கம் காங்கிரசின் போஃபர்ஸ் ஊழலுக்கும் பொருந்துமா என்பதைப் பற்றி நிர்மலா சீதாராமன் தெரிவிக்கவில்லை.
சுருக்கமாகச் சொல்வதானால் – இது பச்சையான ஊழல். அதுவும் தனியார் முதலாளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை எடுத்து கறி விருந்து வைக்கிறார் மோடி. தனது ஊழலைக் கேள்விக்குள்ளாக்குபவர்களை ஒரேயடியாக தேசதுரோகிகளாக சித்தரிக்கும் முயற்சியில் பாரதிய ஜனதா ஈடுபட்டுள்ளது.
மேலும் :
- Defence deals, crony capitalism and PM Modi: Did India’s ‘nationalist’ government compromise national interest?
- Rafale deal: Modi’s Parisian blunder
- After Mukesh Ambani, Anil enters arms business
- Rafale Partners with Reliance
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
நீங்கள் சொல்வது சரியா அல்லது ‘India Today’இல் வந்திருக்கும் இந்த செய்தி சரியா விளக்கவும்?
http://indiatoday.intoday.in/story/modi-government-procures-rafale-fighter-aircraft-15-per-cent-cheaper-than-upa/1/1094655.html
Sources said, blah blah…
where is evidence? evidence in the Government papers?
எப்படி 16% மலிவு? 126 விமானங்களுக்கு என்ன விலை நிர்ணயிக்கப்பட்டது? 36க்கு என்ன விலை? ஏன் விலை மாற்றம்? Specifications Change அதனால் தான் விலை உயர்ந்துள்ளது என்றால் யார் 126 விமானங்களுக்கு என்ன விலை நிர்ணயிக்கப்பட்டது? 36க்கு என்ன விலை? ஏன் விலை மாற்றம்? Specifications Change அதனால் தான் விலை உயர்ந்துள்ளது என்றால் யார் Spec change செய்தது? முந்தைய டீலில் இல்லாத என்ன Spec இந்த டீலில் உள்ளன? அதற்கு Government Doc ஆதாரம்?
எந்த பதிலும் இல்லை.. Sources said, blah blah..
நாங்க சொன்னா நீங்க நம்பனும்.. நாங்க தேசத்துக்கே துரோகம் செஞ்சுட்டு அத தேச பக்தின்னு சொல்லுவோம். நாங்க சொன்னா நீங்க நம்பனும்.. இல்லைன்னா நீங்க தேச துரோகி, ஏன்னா நாங்க தேச பக்தாள்!
நீங்கள் என்ன எதிர்பார்கிறீர்கள்? குந்தியா டுடே சொல்வது போல 16 வீத கழிவுடன் இந்த தண்டகருமாந்திரத்தை வாங்குவது சாதனையா? முந்தய கவர்மெண்டு வாங்கினால் என்ன அழுவது என்னவோ மக்கள் பணம் தானே? இந்தளவு முட்டையில் மயிர்புடுங்கியா இந்த அப்பட்டமான மக்கள் பண கொள்ளைக்கு வெள்ளைபூச வேண்டும்?
அடிவாங்கி ஓர் என்ஜின் நின்றபோதும் மற்றைய எஞ்சினில் வீடு வந்து சேரும் ருசிய, அமெரிக்க ஜெட்கள் இருக்கையில் பரிசோதனை மற்றும் ஒத்திகையின் போதே விபத்துகளில் இரு எஞ்சின்களும் பஞ்சராகும்இரு விமானிகளை பழிவாங்கிய இந்த விமானங்கள் ஏன் வேண்டும் இந்தியாவுக்கு? இதே வகையில் மற்ற நாட்டு தயாரிப்புகளை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு விலை மற்றும் மணிபறப்பு (flight-hour cost) செலவு மிக்கது வேறு . உதாரணம் கீழே தந்திருக்கும் லிங்கில் ஒப்பீடு செய்து பார்க்கலாம் ஒரே வகை ஜெட்களை, கிட்டதட்ட மூன்றில் நான்கில் ஒரு பங்கே விலையுடைய ஜெட்கள் இந்த தண்டத்துக்கு சற்றும் சளைத்தவை அல்ல என்பதை காணலாம். ஆக இந்த டீலில் யார் எந்தளவு சுருட்டலாம் என்பதே முன்னிலை வகிக்கிறது.
லிங்கு http://www.aviatia.net/dassault-rafale-vs-saab-gripen/
மத்திய அரசுக்கு மிக அதிக அதிகாரங்கள் இருப்பதால் மத்திய அரசில் இருப்பவர்கள் (தேசிய கட்சிகள்) அந்த அதிகாரங்களை பயன்படுத்தி புதிய சட்டங்களை கொண்டு வந்தோ அல்லது இருக்கும் விதிகளை திருத்தியோ சட்டப்பூர்வமாகவே ஊழல் செய்கிறார்கள். ஆனால் மாநில அரசியல்வாதிகளுக்கு (அல்லது மாநில கட்சிகளுக்கு) இந்த அளவுக்கு கொடுப்பினை இல்லை. அதனால் தான் சில்லறைத்தனமான ஊழல்களில் ஈடுபட வேண்டியுள்ளது.