பிரதமர் நரேந்திர மோடியின் ஆசிபெற்று, சி.பி.ஐ. சிறப்பு இயக்குனராக பதவி வழங்கப்பட்ட ராகேஷ் அஸ்தானா மீது, சி.பி.ஐ. லஞ்ச வழக்கு பதிவு செய்துள்ளது. சி.பி.ஐ. அதிகாரி மீது சி.பி.ஐ.யே வழக்கு பதிவு செய்திருப்பது இன்றைய ஆங்கில நாளிதழ்களில் தலைப்பு செய்தியாகியுள்ளது. தொழிலதிபர் மொயின் குரேஷியை பணபரிவர்த்தனை வழக்கிலிருந்து  விடுவிக்க ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் அஸ்தானா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்கில் அஸ்தானா மற்றும் குரேஷிக்கு சட்டவிரோத ஒப்பந்தத்துக்கு உதவி செய்ததாக ‘ரா’ உளவு அமைப்பின் சிறப்பு இயக்குனரான சமந்த் குமார் கோயல் பெயரும் இடம் பெற்றுள்ளது. கூடவே 1984-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று வெளியேறிய பாஞ்சாப் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கிறது.

ஊழல் தடுப்புப் பிரிவால் அக்டோபர் 16-ம் தேதி கைது செய்யப்பட்ட மனோஜ் பிரசாத் என்பவர் மேஜிஸ்ரேட் கோர்டில் அளித்த வாக்குமூலத்தில், குரேஷிக்காகா அஸ்தானாவுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளார். கோயலின் பெயரையும் இவர் குறிப்பிட்டுள்ளார்.  அஸ்தானாவுக்கு  இந்த குற்றத்தில் உள்ள தொடர்புக்கு ஆதாரங்களாக தொலைபேசி உரையாடல்கள், வாட்சப் குறுந்தகவல்கள், பணப்பரிவர்த்தனை,  பரிமாற்ற அறிக்கைகள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. ஒப்படைத்துள்ளதாக கூறுகிறது.

இறைச்சி ஏற்றுமதியாளரான குரேஷியின் அலுவலகத்தை 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், வருமான வரித் துறை சோதித்தது. இந்த சோதனையில் குரேஷியின் பிளாக்பெர்ரி மெசேஞ்சர் குறுஞ்செய்திகள், முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் ஏ. பி. சிங்குடன் குரேஷிக்கு நேரடி தொடர்பிருந்ததைக் காட்டின. ஓய்வுபெற்ற பின் சி.பி.எஸ்.சி. உறுப்பினராக இருந்த சிங், தனது பதவியை ராஜினாமா செய்யும் கட்டாயத்துக்கு உள்ளானார்.  2017 பிப்ரவரி மாதம், வழக்குப் பதிவு செய்து இந்த வழக்கை அஸ்தானா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளித்தது.  2017 ஆகஸ்டு மாதம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அமலாக்க இயக்குனரகம் குரேஷியை கைது செய்கிறது. அரசு அதிகாரிகள் பலரின் பணத்தை மோசடி செய்தார் என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது வைக்கப்பட்டது.

ராகேஷ் அஸ்தானா.

அஸ்தானா தலைமையிலான குழு வழக்கை விசாரிக்கும்போது அவருக்கு எதிராகவே குற்றம் சாட்டப்பட்டது. ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சனா சதீஷ் என்பவர், குரேஷி வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரிக்கப்பட்டவர். இவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கிறார். சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் அஸ்தானா, குரேஷி மீதான வழக்கை இல்லாமல் ஆக்க முயற்சிக்கிறார் என பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறார்.

சதிஷ் தனது உறவினர் மனோஜ் பிரசாத், அஸ்தானா, சோமேஷ் ஸ்ரீவத்சவா ஆகியோர் பெயரை குறிப்பிட்டதோடு, சி.பி.ஐ. வழக்கிலிருந்து தப்பிக்க பத்து மாதங்களில் 3 கோடி ரூபாயை அளித்ததை நீதிமன்றத்தில் சொன்னார். இதுபோதாது, இன்னும் அதிக பணம் வேண்டும் என அஸ்தானா மிரட்டியதை நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையிலிருந்து தப்பிக்க ரூ. 25 லட்சத்தை மனோஜ் பிராத் கொடுத்ததும் அதன் பின் மீதி ரூ. 1.75 கோடியை திரட்ட துபாயிலிருந்து டெல்லி வந்தபோது சி.பி.ஐ.-ஆல் கைது கைதுசெய்யப்பட்டார். கைதான பிரசாத், குரேஷியின் சார்பாக அஸ்தானாவுக்கு லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டார். ‘ரா’ உளவு அதிகாரியாக மேற்கு ஆசியா பிரிவில் உள்ள கோயல், துபாயில் தன்னை வந்து சந்தித்ததையும் அவர்தான் அஸ்தானாவிடன் பழக்கம் ஏற்படுத்திக் கொடுத்தார் என்பதையும் பிரசாத் கூறியுள்ளார். இந்தியாவின் முதன்மையான புலனாய்வு அமைப்பாக உள்ள சி.பி.ஐ.யின் இரண்டாவது பெரிய பதவியை வகிக்கும் ஒரு நபர் இத்தகைய லஞ்ச புகாரில் சிக்கியிருப்பது அதிகார வட்டாரத்தில் புருவங்களை உயர்த்தியுள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகளுக்குள்ளே இருக்கும் அதிகாரி போட்டியால்தான் இந்த விவகாரம் வெளியே தெரிந்திருக்கிறது. சி.பி.ஐ. இயக்குனராக உள்ள அலோக் வர்மாவுக்கும் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் அஸ்தானாவுக்கு அதிகாரப் போட்டி இருந்துவருகிறது. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீதான ஊழல் புகார் விசாரணையில் சி.பி.ஐ. இயக்குனர் தலையிடுவதாக அஸ்தானா குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் அலோக் வர்மா, அஸ்தானா தன் மீதான ஆதாரங்களின் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்களை மறைக்கவே இதுபோன்று குற்றம்சாட்டி திசைதிருப்ப பார்ப்பதாக குறிப்பிடுகிறார்.

சமன்ந் குமார் கோயல்.

வர்மாவின் அஸ்தானா மீது குரேஷி வழக்கு உள்பட ஆறு வழக்குகளில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார். ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்று, பத்திரிகையாளர் உபேந்திரா ராயை சிக்கவைத்த வழக்கும் அதில் ஒன்று. மத்திய கண்காணிப்பு ஆணையத்துக்கு ஜூலை மாதம் சி.பி.ஐ. எழுதியிருந்த கடிதத்தில் அஸ்தானா பல்வேறு வழக்குகளில் கண்காணிப்புக்குள் இருப்பதால் சி.பி.ஐ. இயக்குனர் வர்மா இல்லாத நேரங்களில் அஸ்தானாவுக்கு அதிகாரிகளை பணிக்கும் அதிகாரம் இல்லை என சொல்லப்பட்டிருந்தது.  அஸ்தானா தனது சி.பி.ஐ. சிறப்பு அதிகாரி என்கிற பதவியை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

குஜராத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி அஸ்தானாவுக்கு சர்ச்சைகள் புதிதல்ல. சி.பி.ஐ.யின் சிறப்பு இயக்குனராக இவர் நியமிக்கப்பட்டபோது, ஒரு தொண்டு நிறுவனம் இந்த நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தது. ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்திடமிருந்து 2011-ம் ஆண்டு கைப்பற்றப்பட்ட டைரியில் அஸ்தானா ரூ. 3.5 கோடி லஞ்சம் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த டைரியை அடிப்படையாகக்கொண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில் அஸ்தானாவில் பெயர் சேர்க்கப்படவில்லை. ஆனாலும் சி.பி.ஐ. அஸ்தானாவின் ஈடுபாடு குறித்து விசாரிக்கிறது.

இத்தகைய சர்ச்சைக்குரிய பின்னணியில் 2017, அக்டோபர் 22-ஆம் தேதி அஸ்தானா சி.பி.ஐ. சிறப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டார்.  மத்திய கண்காணிப்பு ஆணையர் கே. வி. சவுத்ரி – இவர் மீது சஹாரா பிர்லா டைரி தொடர்பான குற்றச்சாட்டு உள்ளது – மேலும் இரண்டு கண்காணிப்பு ஆணையர்கள், உள்துறை அமைச்சக செயலாளர்கள் இணைந்து தன்னிச்சையாக இவரை நியமித்தார்கள். தனக்கு கீழே நியமிக்கப்படும் அதிகாரியை தேர்வு செய்யும் குழுவில் சி.பி.ஐ. இயக்குனர் இடம்பெறமுடியாது. ஆனாலும் யார் நியமிக்கப்பட இருக்கிறார் என்பது குறித்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அஸ்தானா விஷயத்தில் அது மீறப்பட்டதாக சி.பி.ஐ. இயக்குனர் வர்மா குற்றம்சாட்டினார்.

உச்சநீதிமன்றம் அரசின் செயல்பாட்டில் தலையிட முடியாது என அஸ்தானா வழக்கில் சொல்லிவிட்டது. சி.பி.ஐ. இயக்குநராக வர்மா நியமிக்கப்படும் முன், அஸ்தா இடைக்கால இயக்குனராக இருந்தார். அப்போதே அவருடைய நியமனம் குறித்து கேள்வி எழுந்தது. பத்தாண்டுகளில் முதன்முறையாக அப்போதுதான் சி.பி.ஐ. முழுநேர இயக்குனர் இல்லாமல் செயல்பட்டது. சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அனில் சின்ஹா ஓய்வுபெற, அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ஆர்.கே. தத்தா இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அனில் சின்ஹா ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக தத்தா உள்துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டார். தத்தாவுக்கு வழங்கப்பட்ட பதவி, அவருடைய தகுதியை குறைப்பதாக இருந்தது என விமர்சனங்கள் எழுந்தன.  மோடி அரசில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அஸ்தானா உயர் பதவிகளை அடைந்ததாக பல ஊடகங்கள் எழுதின.

படிக்க:
மோடியின் எடுபிடிகளே சி.பி.ஐயின் இயக்குநர்கள்
♦ ஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி ! புதிய கலாச்சாரம் மின்னூல்

மோடியின் பிரதமர் அலுவலகத்தில் நம்பிக்கைக்குரிய நபராக உள்ள மேற்குவங்க ஐ.ஏ.எஸ். அதிகாரி பாஸ்கர் குல்பே மீது நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட பாஸ்கர் குல்பே-ஐ, அஸ்தானா சாட்சியாக்க முனைந்ததாக கூறப்பட்டது. பிரதமர் அலுவலகத்தில் செயலாளராக உள்ள பாஸ்கர் குல்பே, நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரிய நபர். அவர்தான் மத்திய அதிகாரிகளின் பணிமாற்றம், பணியமர்த்தல் முழுவதையும் பார்த்துக்கொள்கிறார். பிரதமரின் கூடுதல் முதன்மை செயலாளரான பி.கே. மிஸ்ராவுக்கு நெருக்கமானவர் என த வயர் கூறுகிறது.  அஸ்தானா சி.பி.ஐ. சிறப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டதை ஆதரித்தவர்களில் மிஸ்ராவும் ஒருவர். இவரும் குஜராத்தைச் சேர்ந்த அதிகாரியே.

அறுபதாண்டுகால காங்கிரஸ் அரசின் ஊழல்களை துடைத்துக்கொண்டிருப்பதாக தம்பட்டம் அடிக்கும் மோடியால் நியமிக்கமிக்கப்பட்ட அதிகாரிகள் ஊழல் பெருச்சாளிகளாக உள்ளனர். அதுவும் தன் பதவி காலத்திலேயே குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். இவை எல்லாவற்றையும் துடைத்துவிட்டு, நாங்கள் ஊழலை ஒழிக்கவந்தவர்கள் என வெட்கமே இல்லாமல் முழங்க இவர்களால் எப்படி முடிகிறது?

செய்தி ஆதாரம்:
• FIR Against Rakesh Asthana, Top Modi Appointee in CBI, a Setback to Govt Image

1 மறுமொழி

  1. மோடியை குற்றம் சொல்வது மிக எளிது சில அடிப்படை தகுதிகளை வைத்து அரசு குழுமம் பறிந்துரைபடிதான் உயர் பதவி ஆணையர்கள் நியாமனம் ஆகிறார்கள்.. நியமனத்தின் நல்ல சான்றிதழில் இருப்பவர்கள் பின்னர் குற்றம் செய்தால் ஏன் மோடி அரசு இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்..
    மீடியா தனது பவர் மூலம் துஷ்பிரயோகம் செய்கிறது என்று நான் கருதுகிறேன்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க