”ஏழு பேர் கொண்ட அந்த கும்பல் எனது இரண்டு சக்கர வாகனத்தை மறித்தது. நீ எங்கேயிருந்து வந்திருக்கிறாய் எனக் கேட்டார்கள். எனது ஆறாவது அறிவு பொய் சொல்லி விடுமாறு சொன்னது. நான் ராஜஸ்தானில் இருந்து வந்தவன் என்று சொன்னேன். அவர்கள் மேலும் விசாரித்த போது ராஜஸ்தானைச் சேர்ந்த ஏதோவொரு மாவட்டத்தின் பெயரை உளறிக் கொட்டினேன். நல்ல வேளையாக அவர்கள் நான் பீகார் உ.பி. அல்லது மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவன் அல்ல என்று நம்பி என்னை போகுமாறு விட்டு விட்டனர். நான் அங்கிருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே அங்கே ஒரு வாகனத்தை அவர்கள் எரித்தார்கள்” என்கிறார் 27 வயதான மஞ்சு சிங். பெயிண்டரான அவர், குஜராத்தில் தங்கி வேலை பார்ப்பவர்.

கடந்த செப்டம்பர் 28-ம் தேதி குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 14 மாதமே ஆன குழந்தை ஒன்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட செய்தி வெளியானது. பாதிக்கப்பட்ட குழந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அபாயக்கட்டத்தை தாண்டி விட்டது என்கின்றன பத்திரிகைச் செய்திகள். இந்த சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து வட குஜராத்தின் நான்கு மாவட்டங்கள் பற்றியெறியத் துவங்கின. தாக்கூர் சேனா மற்றும் சர்தார் பட்டேல் குரூப் போன்ற இனவாத இயக்கங்கள் வட மாநில கூலித் தொழிலாளிகளுக்கு எதிரானத் தாக்குதல்களைத் தூண்டி விட்டனர். பல இடங்களில் வடமாநில கூலித் தொழிலாளிகள் விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 11 முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாகவும், 105 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காந்திநகர் ஐ.ஜி. மகேந்திர சிங் சாவ்டா தெரிவித்துள்ளார். எனினும் கும்பல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

”Sab bhaiyya log nikal jao nahin toh mar-peet karenge” (எல்லா வடக்கத்தியான்களும் ஓடிப் போய் விடுங்கள். இல்லையென்றால் வெட்டிக் கூறு போட்டு விடுவோம்) என்று கூச்சலிட்டுக் கொண்டே 50-60 பேர் கொண்ட கும்பல் ஒன்று தங்களது குடியிருப்புக்குள் நுழைந்ததாகச் சொல்கிறார் ஊர்மிளா. “அவர்கள் எங்களது பானி பூரி கடைகள் அத்தனையையும் எரித்து சாம்பலாக்கி விட்டார்கள். எனது மருமகனுக்கு கை உடைந்திருக்கிறது. எங்கள் வீட்டு முதலாளி உடனடியாக வீட்டை காலி செய்து விடச் சொல்லி இருக்கிறார்” என்கிறார் ஊர்மிளா.

இது ஓரிருவருக்கு நிகழ்ந்த தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல. அகமதாபாத்தின் சாணக்யபுரி மேம்பாலத்தின் அடியில் தங்கள் குழந்தை குட்டிகளோடும் பெட்டி படுக்கைகளோடும் நூற்றுக்கணக்கான வடமாநிலத் தொழிலாளிகள் பேருந்துக்காக காத்து நிற்கிறார்கள். அங்கிருந்து உத்திரபிரதேசத்திற்கோ பீகாருக்கோ அவர்கள் பேருந்தைப் பிடித்து ஏறினால் சுமார் 24-ல் இருந்து 30 மணி நேரம் தொடர்ந்து பயணிக்க வேண்டியிருக்கும். போகுமிடத்தில் பிழைப்பும் இல்லை; மீண்டும் குஜராத்துக்கு திரும்பி வருவதும் நிச்சயமில்லை. பலர் தாங்கள் சம்பாதித்து சேர்த்த சொற்ப பொருட்களை அவர்களின் வாடகை வீடுகளிலேயே பூட்டி வைத்து விட்டுச் செல்கின்றனர். ஒருவேளை  திரும்பி வந்தால் அவையெல்லாம் மிஞ்சுமா என்கிற நம்பிக்கையும் கிடையாது.

பின்ந்த் மாவட்டத்தைச் சேர்ந்த மகாதேவ் நகரில் மட்டும் உ.பி. பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 1500 கூலித் தொழிலாளிகள் சொந்த ஊருக்குத் திரும்பி விட்டனர் என்கிறார் பெயிண்டரான தர்மேந்திர குஷவாகா. குஜராத்தில் இருந்து இந்த மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் குறைவு. பொதுவாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செல்லும் பேருந்தில் அதிகபட்சம் 25 பயணிகள் செல்வார்கள் என்கிறார் சத்யம் தோமர் டிராவல்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தும் பிண்டூ சிங். இதே வழித்தடத்தில் பல வருடங்களாக பேருந்துகளை இயக்கி வரும் பிண்டூ சிங், கடந்த அக்டோபர் 6-ம் தேதி மட்டும் சுமார் 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்றதாகவும் ஒவ்வொன்றிலும் 80-ல் இருந்து 90 பேர் பயணித்ததாகவும் குறிப்பிடுகிறார்.

இது ஒரு மாவட்டத்தில் இருந்து பேருந்தில் சென்றவர்களின் தோராயமான கணக்கு. வேறு பல மாவட்டங்களில் இருந்தும், பேருந்து தவிர இரயில்களில் தப்பித்துச் சென்றவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை. நிச்சயம் இலட்சத்துக்கும் குறையாமல் இருக்க வேண்டும்.

படிக்க:
பசுக்காவல் கும்பல் வன்முறை : கட்டுப்படுத்தும் வழியென்ன ?
சென்னையில் மோர் விற்கும் ஒரிசாவின் அமர் பிரசாத்

இதற்கிடையே வடமாநிலத்தவர்களின் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள் குறித்து அம்மாநில காங்கிரசு கமிட்டி தலைவர் அமித் சாவ்டா குறிப்பிடும் போது “வேலையில்லாத் திண்டாட்டத்தின் விளைவாக இளைஞர்களின் மத்தியில் அதிருப்தி உருவாகி வந்தது. குழந்தை பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட செய்தி, தாக்குதல் துவங்குவதற்கான ஒரு காரணத்தை மட்டும் வழங்கியிருக்கிறது என்கிறார்”. இதில் ஓரளவு உண்மை இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் இட ஒதுக்கீடு கோரி பட்டிதார் இன மக்களும், தாக்கூர்களும் நடத்திய போராட்டங்கள் குஜராத்தை கிடுகிடுக்க வைத்தன. அப்போதே மோடி வகையறாக்களால் பீற்றிக் கொள்ளப்பட்ட குஜராத் மாடல் வளர்ச்சி என்பது வெறும் பொய்மான் என்றும், பாரம்பரியமாக பாரதிய ஜனதாவின் வாக்குவங்கியாக இருந்த பட்டேல் சாதி இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் திணறி வருவதும் அதன் தொடர்ச்சியாகவே இட ஒதுக்கீடு கோரிக்கை எழுந்திருப்பதும் செய்திகளாக வெளியாகின.

இன்னொரு புறம் ஒரே இந்தியா, நாடு தழுவிய இந்துக்கள் ஐக்கியம் என்றெல்லாம் பாரதிய ஜனதாவும் இந்துத்துவ பரிவாரங்களும் முன்வைக்கும் முழக்கங்களின் யோக்கியதையை இந்தக் கலவரங்கள் மொத்தமாக அம்பலப்படுத்தியுள்ளன. பீகார், உ.பி.யைச் சேர்ந்த சக இந்துக்களை குஜராத்தைச் சேர்ந்த இந்துக்களே அடித்து விரட்டுகின்றனர். இந்துத்துவத்தின் சோதனைச் சாலையிலேயே இதுதான் நிலவரம் என்றால், இவர்களின் தத்துவம் நாடெங்கும் பரவினால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இருக்கிறதோ இல்லையோ – இந்துக்களுக்கே முதலில் பாதுகாப்பற்ற நிலைமை தோன்றும் என்பது மட்டும் உண்மை.

மேலும்:
Sabarkantha rape case: Rape of 14-month-old sparks protests against migrants, over 100 arrested
Gujarat rape backlash: Fearing for lives after mob attacks, UP, MP and Bihar migrants flee

4 மறுமொழிகள்

  1. திருப்பூர், கோவை பகுதிகளிலும் இதே போன்றதொரு நிலையே இப்போது நிலவுகிறது.தொழில் நெருக்கடியால் வேலையில்லாப் பிரச்சனை காரணமாகவும், பான்பராக், ஹான்ஸ் பயன்படுத்துவது, ஜவுளி, மின்சானப்பொருட்கள் விற்பனை சந்தையை கைப்பற்றுவதால், குறைந்த கூலி என்று அளவிற்கதியமான நபர்களை வைத்துள்ள நிறுவனங்களின் நடைமுறைச்செலவுகளை ஈடுகட்ட முடியாத நிலையாலும் ,நல்ல முறையில் தரமான ஆடையை குறித்த நேரத்தில் தயாரிக்க முடியாத சூழலும் நிலவுகிறது.தமிழக தொழிலாளிகளுக்கும் பிறமாநில தொழிலாளிகளுக்குமிடையே சிறு சிறு பிரச்சனை ஏற்படுகிறது.

    மேலும் அதிகப்படியான பிறமாநில மக்கள் குடியேறுவதற்கு தகுந்த எந்த உட்கட்டமைப்பு வசதிகளும் இந்த அரசால் ஏற்படுத்தவும் இல்லை.

    குறிப்பாக குடிநீர், குடியுருப்புகள்.

  2. இந்த குஜராத்தி இனவாத மூடர்களுக்கு அறிவு என்றால் என்ன என்பதே தெரியாது.
    16 வருடங்களுக்கு முன்னாள் செய்த முட்டாள்தனத்தை நீட்சிதான் இது, அப்பொழுதே தக்க தண்டனை கொடுத்து வாலை ஓட்ட நறுக்கி இருந்தால் இது போல் நிகழாது

  3. இந்தி பேசும் வட இந்திய உயர்குடியினர் இந்தி பேசாத மாநிலங்களில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் போய் உட்கார்ந்துகொண்டு அந்த பகுதிகளின் மொழி கலாச்சாரம் உள்ளிட்ட அடையாளங்களையும் அப்பகுதி மக்களின் வாழ்வு,வளம் ஆகியவற்றையும் சீரழித்தும் சூறையாடியும் வருகிறார்கள். இதே இந்தி பேசும் மாநிலங்களில் பெருவாரியாக இருக்கும் அடிமட்ட மக்கள் இயல்பில் விலங்குகளை ஒத்தவர்கள். இவர்கள் மற்ற மாநிலங்களுக்கு ஈசல்களைப் போல் படையெடுத்துப் போய் உள்ளூர் தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலியையும் குலைத்து அங்கிருக்கும் குறைந்தபட்ச சட்டம் ஒழுங்கையும் கெடுத்து விடுகிறார்கள். இரண்டு தரப்பினரும் தங்களுடைய இந்தி பேசும் மாநிலங்களுக்கே போய்த் தொலைய வேண்டும். உலகில் பிழைப்பதற்காக மனிதர்கள் அனாதி காலம் தொட்டு புலம் பெயர்ந்து தான் வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த மாதிரி படையெடுத்துப் போய் ஆக்கிரமிப்பு செய்த போதெல்லாம் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. முன்னர் பெங்களூரிலும் மும்பையிலும் ஏற்பட்டது. இப்போது குஜராத்தில் ஏற்பட்டுள்ளது. இப்போதாவது குஜராத்திகள் விழித்துக் கொண்டார்கள் என நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

  4. The comment by Mr Periyasamy is very uncharitable and unreasonable.Indian Constitution permits every Indian citizen to go anywhere in India for their livelihood.If he talks like that,what will happen to Tamils working and living in other states.His description of the downtrodden people of Northern states is simply inhuman.By describing fellow human beings as animals,can he be human?His argument stating that the people of north snatching the job opportunities of locals is wrong.Let him count the number of Tamils engaged in construction,hotels,small tea shops,super-markets etc..Let him also answer as to where the semi-literate and illiterate Tamil teenagers have gone?Just enjoying the free rations etc offered by the TN govt,these youth are not ready to do any manual work.Just because one Bihari labourer is suspected to have committed the rape,you cannot call all Biharis as rapists.All these type of trouble in the past at Bangalore and Mumbai and now at Gujarat is man-made by anti-social and misguided elements.I think MrPeriyasamy must have forgotten the plight of Tamils in Mumbai during the 60s.Mumbai will stink if the northeners are chased away.Shivsena and now MNS is doing these mischief for vote bank politics.Gujarat Government should have protected the migrant labourers.MrPeriyasamy talks like a well inhabited frog.Our own Indian community could not repair their houses damaged by cyclone and floods in Houston last year since all those skilled Mexican plumbers,electricians have been chased away by Trump.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க