ராஜ், சமூக அரசியல் விமர்சகர்.

நாடெங்கிலும் பசுப்பாதுகாவலர்களின் கும்பல் வன்முறை அதிகரித்துள்ளது. அது பற்றிய செய்திகள் அன்றாடம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஓர் முசுலீம் அல்லது தலித் ஒரு மாட்டை அழைத்துக் கொண்டு வெளியே வந்தால் அவர் மறுபடியும் வீடு திரும்ப முடிவதில்லை. அவர் மீது கும்பல் வன்முறை உடனடியாக ஏவப்பட்டு மிகவும் கொடூரமாக கொல்லப்படுகிறார்.

ஒரு பசுவையும், முசுலீமையும் ஒன்றாக பார்த்த மாத்திரத்தில் கொல்லப்படுவதால் பசு தொடர்பாக – பசுவை வளர்ப்பது, பால் கறப்பது, உழவுப் பயன்பாடு என்று – எந்த உரிமை கோரலும் ஓர் முசுலீமுக்கு எதார்த்தத்தில் மறுக்கப்படுகின்ற கால நிலைமையை நாம் அடைந்திருக்கிறோம். சமீபத்திய ஒரு புள்ளிவிவரத்தின்படி 2010 -லிருந்து எடுக்கப்பட்ட கணக்கீட்டில் 98% பசுக்காவல் கும்பல் வன்முறை கடந்த நான்காண்டுகளில் நடைபெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 86% பேர் முசுலீம்கள். இது குறித்த செய்திகள் உரிய ஊடக கவனம் பெற்றாலும் இந்த பிரச்சினை அதனோடு சம்பந்தப்பட்ட அரசியலிலிருந்து தொடர்பறுத்து சித்தரிக்கப்படவும், விவாதிக்கவும் படுகிறது.

” 2010 -லிருந்து எடுக்கப்பட்ட கணக்கீட்டில் 98% பசுக்காவல் கும்பல் வன்முறை கடந்த நான்காண்டுகளில் நடைபெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 86% பேர் முசுலீம்கள்.”

மோடி அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான உரையிலும் இந்த பிரச்சினையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பினார். ‘படா … படா… ஹே’ என்று மோடி பதிலளித்துக் கொண்டிருந்த அந்த பின்னிரவில் தான் ரக்பர்கான் ராஜஸ்தானின் ஆல்வாரில் அடித்துக் கொல்லப்பட்டார். தனது பேச்சில் பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் கும்பல் வன்முறை பற்றி எந்த பதிலும் மோடி வழங்கவில்லை. இந்தத் தாக்குதல் சம்பவங்கள் உள்ளார்ந்து ஆழமான அரசியல் நெருக்கடி மற்றும் அமைப்பு நெருக்கடி பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன. இவை அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறவில்லை என்பது நாம் மேலே பார்த்த கணக்கெடுப்பு விவரத்திலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.

இச்சம்பவங்கள் ஏன் ஒரு அரசியல் நெருக்கடி பற்றிய புரிதலை கொண்டிருக்கிறதென்றால் இவை ஒரு அரசியல் அனுசரணையுடன் நடைபெறுவதால் தான் சொல்ல முடிகிறது. ரக்பர்கான் குற்றுயிராக்கப்பட்ட பிறகு அவரை ஏற்றி சென்ற வாகனத்தை வழியில் நிறுத்திய போலீசார் சாவகாசமாக தேனீர் அருந்தியுள்ளனர். ரக்பர்கான் கொல்லப்பட வேண்டியவர் என்ற கருத்து போலீசுக்கு இருந்துள்ளதை இது காட்டுகிறது.

கடந்த ஏப்ரலில் இதே ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் அடித்துக் கொல்லப்பட்ட பெக்லூகான் தனது மரண வாக்குமூலத்தில் பெயர் குறிப்பிட்ட நபர்கள் இப்போது ஜாமீனில் வெளியே இருக்கின்றனர். கோவை கலவரச் சூழலில் நாம் பார்த்தது போன்று இந்துத்துவ (பசுப்பாதுகாப்பு) கும்பலுக்கும் போலீசுக்குமிடையே ஆழமான நெருக்கம் வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. அல்லது இந்துத்துவத்தின் நேரடி ஆதிக்கத்துக்கு கட்டுப்பட்டு போலீஸ் இயங்குகிறது என்றும் புரிந்து கொள்ளலாம்.

“ரக்பர்கான் குற்றுயிராக்கப்பட்ட பிறகு அவரை ஏற்றி சென்ற வாகனத்தை வழியில் நிறுத்திய போலீசார் சாவகாசமாக தேனீர் அருந்தியுள்ளனர். ரக்பர்கான் கொல்லப்பட வேண்டியவர் என்ற கருத்து போலீசுக்கு இருந்துள்ளதை இது காட்டுகிறது.”

இரண்டாவது இந்த சம்பவத்தை எதிர்கொள்வது பற்றிய அரசு, அதிகாரத் தரப்பு புரிதல் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. பசுப்பாதுகாப்பாளர்களின் கும்பல் வன்முறையை தடுக்கும் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கேட்டுக் கொண்டதற்கு முன்பு வரையிலும் ‘அது மாநில விவகாரம்; சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது மாநில அரசுகளின் கடமை’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி வந்தார். இந்துத்துவ வன்முறை நடவடிக்கைகள் நாடு தழுவிய கவன ஈர்ப்பை பெறுவது பற்றிய எச்சரிக்கை உணர்வு அது. தமது இருப்பையும், அதிகாரத்தையும் உறுதி செய்ய சமூக முனைவாக்கத்தின் அவசியத்தை நன்குணர்ந்தவர்கள் அவர்கள்.

தலைமை நீதிபதியின் அறிவிப்புக்கு பின்னர் இரண்டு உயர்நிலைக் குழுக்களை அமைத்துள்ளது மத்திய அரசு. அதன்படி ஒன்றின் தலைவராக ராஜ்நாத் சிங்கும், இன்னொன்றின் தலைவராக மத்திய உள்துறை செயலாளரும் இருப்பார்கள். இந்த இரண்டு குழுக்களும் இந்த தாக்குதல் சம்பவங்களை ஆராய்ந்து, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் பரிந்துரைத்து தத்தமது அறிக்கையை அமைச்சரவை குழு ஒன்றுக்கு அளிக்கும். அந்த குழு இரு அறிக்கைகளையும் சரிபார்த்து புதிதாக ஒரு அறிக்கையை தயாரித்து பிரதமருக்கு சமர்ப்பிக்கும் என்பது தான் ஏற்பாடு.

எவ்வளவு சுற்றி வளைத்து, முற்றிலும் மனமில்லாமல் பசுக் காவல் என்ற இந்துத்துவ வன்முறை வெறியாட்டத்துக்கு ஒரு ‘தீர்வை’ யோசித்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. இத்தனைக்கும் இந்த சம்பவங்கள் ஒரு அமைப்பு நெருக்கடியை புறநிலையில் புதிதாக தோற்றுவித்திருக்கிறது. பசுப்பாதுகாப்பு என்ற இந்துத்துவ நிகழ்ச்சி நிரல் முதற்கொண்டு குழந்தை கடத்தல் என்ற வதந்திக்கான எதிர்வினை வரையிலும் கும்பல் வன்முறை கையாளப்படுவது இந்திய சட்டநெறிகளின் செயலாக்கத்துக்கு பெருஞ்சவாலாக உருவெடுத்துள்ளது. தலைமை நீதிபதியின் திடீர் கவலை கூட இதை கருத்தில் கொண்டதாக நம்ப முடிகிறது. உண்மையில் இந்த கும்பல் வன்முறையை கட்டுப்படுத்த தனிச்சட்டம் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான ஒரு பிரச்சினைக்கு நிர்வாக ரீதியான ஒரு தீர்வை வழங்கும் பாசாங்கை தான் தலைமை நீதிபதியின் பரிந்துரை முன்வைக்கிறது. மேலும் இது போலி நிறைவை பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கும் தந்திரத்தையும் கொண்டுள்ளது.

பசுவின் பெயரால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து, அகமதாபாத்தில் நடைபற்ற ஆர்ப்பாட்டம்.

பசுக்காவல் வன்முறை கும்பல் தமது செயல்பாட்டில் முழுக்க உடன்பட்டு அதில் ஈடுபடுகிறது. தமது செயல்பாட்டின் மீது எள்ளளவும் குற்றவுணர்ச்சி அடைய வாய்ப்பில்லாத சித்தாந்த போதை ஊட்டப்பட்டுள்ளது. ஆழமான முசுலீம் வெறுப்பு அதன் இயக்குவிசை. எனவே சட்டங்களை அடுக்குவதல்ல; அரசியல் உறுதிப்பாடு மிக்க நடவடிக்கைகள் தான் முக்கியத்தேவையாகின்றன.

ஏற்கனவே இருக்கும் சட்டங்களின் மூலமே கூட இந்த கும்பல் வன்முறையை கட்டுப்படுத்த முடியும் என்று கருதுகிறார்கள் விருந்தா க்ரோவர் போன்ற மனித உரிமைகள் சார்ந்த முன்னணி வழக்கறிஞர்கள். ஆனால் அதற்கு போலீசை இந்துத்துவ நச்சுநீக்கம் செய்வது முன்நிபந்தனையாக இருக்கிறது. இந்துத்துவ நச்சுநீக்கப் பணியும், மோடியை அப்புறப்படுத்துவதும் வேறுவேறு செயல்பாடுகளா என்ன?

  • ராஜ்.

(சமூக அரசியல் விமர்சகர்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க