பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது காங்கிரஸ் அல்ல, பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள்!

இந்தியா கூட்டணியை ஆதரிப்பதாக சொல்லிக்கொள்ளும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள், மக்கள் பிரச்சினையில் தலையிட்டு ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி; அம்பானி - அதானி பாசிசக் கும்பலை களத்தில் விரட்டியடிக்க மக்கள் முழக்கங்களை எழுப்ப வேண்டும். அத்துடன் மாற்றை முன்வைத்து செயல்பட வேண்டும்.

ந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க-வும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரசும், மிசோரம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தேர்தல் வெற்றியை மோடி அலைக்கு கிடைத்த வெற்றியாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் கொண்டாடுகிறது. காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பலதரப்பு கட்சி தலைவர்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் கூறி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் “சனாதனம்” குறித்த பேச்சுதான் காரணம் என காங்கிரஸ்காரர்களே பேசியுள்ளனர். இதனை, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலும் பெரும் விவாதமாக கிளப்பியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் “சனாதன ஒழிப்பு” பேச்சுக்கு எதிரான ஹேஷ்டேக்-களை சங்கிகள் உருவாக்கி டிரெண்ட் செய்தனர். ஆனால், இதையெல்லாம் மறுத்து ‘முற்போக்கு’ ஐ.டி விங்குகள் வாயைத் திறக்கவில்லை.

படிக்க : பெருமுதலாளிகளின் பேராசை! அரசின் அலட்சியம்! மிதக்கும் சென்னை | தோழர் மருது

மக்கள் பிரச்சினையை பேச துணிவில்லாமல் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் பின்னால் ஒளிந்துக்கொண்டு பாசிசத்திலிருந்து மக்களை காப்பாற்றுவதாக கூறுவது மக்களை பாசிசத்திற்கு பலி கொடுப்பதில்தான் முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது.

சத்தீஸ்கரில் மாநில தேர்தல் பிரச்சாரத்திலும் கூட, பழங்குடியின மக்கள் மீது மோடி அரசு நடத்திய அரச பயங்கரவாதம், அதற்கெதிரான போராட்டங்கள் குறித்து காங்கிரஸ் கட்சி வாய்திறக்கவில்லை. இத்தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் இந்துத்துவ அரசியலுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் காங்கிரஸ் மிதவாத, மென்மையான இந்துத்துவ அரசியல் என்ற லாவனியில் இறங்கியிருந்தது.

காங்கிரஸ் தோல்விக் குறித்துப் பேசிய கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், “காங்கிரஸ் தலைவர் கமல்நாத் போன்றவர்கள் மதவாத செயல்களை எதிர்க்காமல், அதற்கு ஆதரவாக செயல்பட்டு பா.ஜ.க-வின் “பீ டீம்”-ஆக இருந்தனர். மென்மையான இந்துத்துவ நிலைப்பாடு தீவிர இந்துத்துவத்தை தோற்கடிக்க உதவும் என்று நினைப்பது ஒரு மாயை” என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ், இந்தியா கூட்டணி கட்சிகள் காவி வேசம் போடாமல் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்குமா? அப்படியே தேர்தலில் பங்கேற்று இந்தியா கூட்டணி வெற்றிப் பெற்றாலும் காவிக்கு ஆதராவான நிலையெடுக்காமல் ஆட்சியை தக்க வைக்க முடியுமா? இந்த காவி வேசம் போட்டுத்தான் பாசிசத்தை வீழ்த்த போவதாக கூறுகிறீர்கள்.

ஓட்டுக்காக என்ன வேசம் வேண்டுமானாலும் போடலாம் என்பது தான் இந்த ஓட்டு கட்சிகளின் நிலைப்பாடு. அவையாவையும் எதிர்க்காமல் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதுதான் பாசிச எதிர்ப்பாளர்களின் நிலைப்பாடு. இதுதான் உங்களது நிலைப்பாடு என்றால், நீங்கள் மக்களுக்கு எதிராக நிற்கிறீர்கள் என்றே அர்த்தம்.

ம.ஜ.க. பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பேசும்போது, “இந்தி பேசும் வட மாநிலங்களில் வாழும் மக்களிடம் சிந்தனை மாற்றங்கள் ஏற்படாதவரை இந்திய அரசியலில் மாற்றம் ஏற்படாது” என்று கூறுகிறார். இன்னும் மேலே சென்று சிலர் வட மாநில மக்களை இழிவாக “அறிவில்லாதவர்கள்” என்று ஊடகங்களில் பேசுகின்றனர்.

மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருக்க ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. மதவெறி, சாதிவெறி, இனவெறி, மூட நம்பிக்கைகள் போன்ற கருத்துகளை மக்கள் மனதில் விதைக்கின்றன. அதனை ஓட்டுகளாக அறுவடையும் செய்து கொள்கின்றன. பாசிசக் கும்பலை எதிர்க்கும் இந்தியா கூட்டணியோ, பிற எதிர்கட்சிகளோ மக்களிடம் புதைந்துள்ள இந்துத்துவ கருத்துகளை உடைக்கும் விதமான போராட்டங்களில் ஈடுபட வேண்டும். ஆனால், காங்கிரஸ் மென்மையான இந்துத்துவத்தை கையிலெடுத்து பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலை வீழ்த்திவிடலாம் என கனவுக் காண்கிறது.

கடந்த ஒன்பதரை ஆண்டுகால பாசிச மோடி ஆட்சியில் உழைக்கும் மக்கள் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்து கொண்டும், அதற்கெதிரான பல்வேறு களப் போராட்டங்களை நடத்திக் கொண்டும் இருக்கின்றனர். இப்போராட்டங்களையெல்லாம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசக் கும்பலுக்கு எதிரானப் போராட்டமாக கட்டியமைக்கப் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் முன்வர வேண்டும்.

மக்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் “பா.ஜ.க-வை வீழ்த்துவோம்”, “இந்தியா கூட்டணியை ஆதரிப்போம்”, “பாசிசத்தை வீழ்த்துவோம்” என்று சிந்திப்பது பாசிசக் கும்பலுக்கு சாதகமாகவே அமையும்.

“காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் இருக்காது, மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டங்கள் கட்டியமைத்து அழுத்தம் கொடுப்போம்” என்று பாசிச எதிர்ப்பில் சிலர் பேசி வருகின்றனர். இதைபோல் தான் 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்றால் “மூச்சு விடுவதற்கான இடைவெளி கிடைக்கும்” என்று கூறினர்.

படிக்க : மிக்ஜாம் புயல் வெள்ளம்! ‘வளர்ச்சி’யின் கொடூரம்! அரசே குற்றவாளி! | தோழர் வெற்றிவேல்செழியன்

தற்போது தி.மு.க-வின் கார்ப்பரேட் சுரண்டல் திட்டங்கள், காவிக் கும்பலுடன் சமரசம் போன்றவற்றிற்கெதிரானப் போராட்டத்தைக் கட்டியமைக்காமல், “தி.மு.க-விற்கு எதிராக போராடினால் பாசிசம் வந்துவிடும்” என்று வாய்பொத்தி கொண்டு அமைதியாக இருக்கின்றனர். இதையே தான் இந்தியா கூட்டணி வெற்றிப் பெற்றாலும் செய்ய போகிறீர்கள்.

மக்கள் பிரச்சினையை பேசாமல் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிசக் கும்பலை தேர்தலில் கூட வீழ்த்த முடியாது. இந்தியா கூட்டணியை ஆதரிப்பதாக சொல்லிக்கொள்ளும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள், மக்கள் பிரச்சினையில் தலையிட்டு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசக் கும்பலை களத்தில் விரட்டியடிக்க மக்கள் முழக்கங்களை எழுப்ப வேண்டும். அத்துடன் மாற்றை முன்வைத்து செயல்பட வேண்டும். ஆக, இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது காங்கிரஸ் அல்ல, பாசிச எதிர்ப்பாளர்கள்.

சிபி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க