சென்னை மாதவரம் பால்பண்ணை சாலையோரம் கடந்து சென்றபோது கண்ணில் பட்டது அமர்பிரசாத்தின் ஜூஸ் கடை. வாகை மரத்து நிழலில் ஒரு தள்ளுவண்டி, ரெண்டு மரப்பலகை. அதுதான் அவரது கடை. வெயிலுக்கு இதமாக அவர் கொடுத்த மோரின் குளுமையைவிட, அவரது தமிழ் பேசும் பாங்கு இனிமையாயிருந்தது. வடமாநிலத்தொழிலாளி என்று யூகிக்க முடியாத அளவிற்கு சரளமான பேச்சு. கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்த போது இருவிரல் துண்டாகிப்போன அவரது கை கண்ணில் பட்டது.அமர் பிரசாத்துக்கு வயது 30. திருமணமாகவில்லை. ஒரிசாவையடுத்த கட்டாக் சொந்த ஊர். திருமணமான ஒரு அண்ணன் கல்லூரி படிக்கும் இரண்டு தம்பிகள். சொந்த வீடிருந்தாலும் விவசாய நிலமில்லை. பிளஸ்டூ வரை படித்திருக்கும் அமர்பிரசாத், பிழைப்புக்காக சென்னைக்கு வந்தபோது அவரது வயது 19.

”11 வயசுல அம்மா இறந்துட்டாங்க. என் சின்ன தம்பிக்கு ரெண்டு வயசு. சொந்தக்காரங்க எவ்ளோ சொல்லியும் அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கல. சின்ன வயசில இருந்து நானே சமையல் பண்ணி சாப்ட்டு எல்லா கஷ்டமும் அனுபவச்சிட்டோம். ரெண்டு தம்பிங்க படிக்கணும்னு நான் வெளிய வந்துட்டேன். அப்பா கூட விவசாய வேலை செஞ்சி அந்தளவுக்கு வருமானம் வரல. சரி ரெண்டு தம்பிங்கள படிக்க வைக்கனும்ணு நான் இங்கெ வந்துட்டேன்.”

சென்னைக்கு எப்படி வந்தீங்க?

”இங்க சொந்தக்கார பசங்க இருந்தாங்க. கூப்டாங்க வந்துட்டேன். மெட்ராசுக்கு வந்து 12 வருசம் ஆகுது.”

இந்த 12 வருடத்தில் சொந்த உழைப்பில் தம்பிகளை படிக்க வைத்ததைத் தாண்டி, அமர்பிரசாத் சம்பாதித்தது சில தமிழ் உறவுகளை. இழந்தது, இரு விரல்களை.

கடைசியாக, 9,500 சம்பளத்தில் சில்வர் பாத்திரம் தயாரிக்கும் கம்பெனியொன்றில் பணியாற்றிய அமர்பிரசாத், இரு விரல்களை இழக்க நேரிட்ட அந்த விபத்தைப் பற்றி பேசவே சங்கபடப்படுகிறார். அந்நினைவுகளை வலியோடு கடந்து போகிறார்.

”நடந்தது நடந்து போச்சு. அத மனசுல இருந்து நீக்கிட்டு நானும் முன்னேறி போயிட்டு இருக்கிறேன்.”

யாரு மேல தப்பு?

”வேலை செய்றப்போ. மிஷின்ல ப்ராப்ளம் இருந்திச்சி. ஆக்சிடன்ட் மாதிரி. நாமளே ரோட்ல போறோம் ஆக்ஸிடண்ட் ஆவுதில்லை.”

அது சரி… தலைக்கு ஹெல்மெட், காலுக்கு ஷூ, கைக்கு குளோவ்ஸ் எல்லாம் கம்பெனியில கொடுத்தாங்களா?

”நான் ஒன்னு சொல்லட்டுமா… கம்பெனி நடக்கிறவங்க.. எல்லா பெரிய பெரிய எடத்துல போயிட்டு… பணம் கொடுத்து சரி பண்றாங்க. ஆயிரம் சொன்னாலும் ஒன்னும் நடக்காது. அவங்கதான் பவர்ல இருக்கிறாங்க. கவர்மெண்டு சேப்டிக்கு ரூல்ஸ் போட்டுருக்கலாம். ஆனா, அந்த சேப்டி எல்லோரும் ஃபாலோ பன்றாங்களா? யாரும் பன்னமாட்டாங்க.”

”சின்ன கம்பெனி கூட லைசன்ஸ் வெச்சுகிட்டும் ஓட்றாங்க… இல்லாம ஓட்றாங்க. நாம சாப்டறதுக்கு வழியில்லனுதான் வேலைக்கு வந்திருக்கோம். சம்பாதிக்கிறோம். அவ்ளோதான். நாம அதெல்லாம் கவனிக்க முடியுமா?”

சரி.. கம்பெனில கவனிச்சாங்களா? காசு ஏதும் கொடுத்தாங்களா?

”கொடுத்தாங்கோ. சொல்றதெல்லாம் வேணாம். எல்லாம் முடிஞ்சி போச்சி. அவங்கிட்ட பெரிய பெரிய ஆளுங்கெ இருக்காங்க. நாம என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க. நம்ம உயிருக்கு ஆபத்து இருக்குன்னு எல்லாம் விட்டாச்சு. இதே மாதிரி லட்ச கணக்குல கம்பெனி ஓட்றாங்க. நீங்க எத்தன கம்பெனிய போயி இந்தமாதிரி கேட்க முடியும்.”

”எனக்கு இங்க யாருமே கிடையாது. நான் ஒரு ஆளுதான் இங்க இருக்கிறேன். நான் குடியிருக்கிற வீட்டுக்கு எதிரிலதான் அந்த கம்பெனி இருக்குது. வீட்டு ஓனரு கட்சி காரங்க மூலமா போயி கேசு பைனல் பன்னிட்டேன். இதுக்கு மேல பேசுனா எனக்கே ஆபத்து. எனக்கு மனசு கஷ்டம் ஆயிட்டதால உங்ககிட்ட சொல்லிடறேன். அவ்ளோதான்.”

தமிழ் ஆளுங்க உதவி செஞ்சாங்களா?

”ஆக்ஸிடன்ட் ஆனப்போ எல்லா வந்தாங்க உதவி செஞ்சாங்க அவ்ளோதான். ஹவுஸ் ஓனரு தமிழ் ஆளுங்க எல்லாம் சேர்ந்து கேட்டாங்க. என்னா ஒரு வருத்தம் வருதுன்னா கை கால் அடிபட்டிருது, நமக்கு இ.எஸ்.ஐ., பி.எஃப். இருந்தா ஒரு சேப்டியா இருக்கும் லைப்.

ஸ்டேன்லி ஆஸ்பிட்டல போயி சரிபன்னினேன். ஆறு மாசம் ஆச்சி. வேலைக்கு போவல. வீட்லதான் இருந்தேன். அதுலயே காசும் கரைஞ்சி போச்சி.”

இறுக்கமான அந்தத் தருணங்களை கடந்து வர எங்களுக்கு சிறிது நேரம் பிடித்தது.

இவ்வளவு சரளமா தமிழ் பேசுறீங்களே? எப்படி கத்துக்கிட்டீங்க?

”கம்பெனியிலதான் கத்துகிட்டேன். அப்போ இங்க உள்ள சாப்பாடு கூட பிடிக்கலை. பாசை பேசறதே புரியலை. தமிழு ஆளுங்க கூட வேலை செய்யிறப்போ, அவங்க சொல்றது புரியாது. ஏற்கெனவே இருக்கிற எங்க ஆளுங்க.. இத செய்ய சொல்றாருனு சொல்வாங்க. அப்டிதான் கத்துகிட்டேன். அவங்க சொல்றது புரியும். ஆனா, பதில் பேச முடியாது. அவங்ககிட்ட பதில் பேசனும்னு ஆசை வந்திச்சி. அந்த இன்ட்ரஸ்ட்ல கொஞ்ச கொஞ்சமா  கத்துகிட்டேன்.”

”என்னடா வாடா, போடா”னு பேசுவோம். லேடிஸ்ங்க கிட்ட கூட அப்போ வாடா, போடானு பேசினேன். லேடிஸ் வந்து புரிய வச்சி சொல்லிடுவாங்க. நம்மகிட்ட இதெல்லாம் பேசக்கூடாது. நம்மள அக்கானு கூப்டுனும் சொல்வாங்க. லேடிஸ்கிட்ட எப்படி பேசனும், ஜென்ட்ஸ்கிட்ட எப்படி பேசனும், சின்ன பசங்ககிட்ட எப்படி பேசனும் கத்துகிட்டேன்.”

பார்க், பீச், சினிமா எல்லாம் போவீங்களா?

”25 வயசு வரைக்கும் சினிமா போகலை. இங்க வந்து தண்டையார்பேட்டையில வேல செஞ்சப்போ தியேட்டர்ல போயி படம் பார்த்தேன்.”

”தமிழ் கத்துகிடனுனு இன்ட்ரஸ்ட் வந்துச்சினா அதுக்கு ஒரே காரணம் வடிவேல் சார். காமெடியன். அவங்க காமெடி வந்து எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்கூட இருக்கவங்களோட டி.வி. பார்க்கறப்ப அவங்களுக்கு தமிழ் புரியும். எனக்கு புரியாது. ஆனா, சிரிப்பு வரும்ல.

இப்ப மனசுக்கு கஷ்டமா இருந்தா கூட, அவங்க காமெடிய பாக்கனும்னு எனக்கு தோனும். அவங்கள ஒரே ஒருமுறை மீட் பண்ணலாமானு தோணும்… நானே ஊரு விட்டு வந்துருக்கிறேன், எப்படி பாக்கறது?”

பீடி, சிகரெட்..?

”அந்த பழக்கமில்லை. 6-வது 7-வது படிக்கிறப்பவே எல்லாரும் உட்கார வச்சி நம்ம லைப்ஃல எப்போவுமே இந்த போதை பொருள தொடக்கூடாதுனு காந்தி புஸ்தகத்தில சத்தியம் பண்ணி விட்டாங்க. அது மைண்ட்ல ஏறிடுச்சி. நியூஸ்-ல பார்ப்பேன், தண்ணிலாம் சாப்ட்டு குடும்பத்துல ஒரு ஹாப்பினெஸ் இருக்காது. போதை சாப்ட்டாலே உடம்பு கெட்டு போயிடும். இதெல்லாம் பார்த்து அதுமேல வெறுப்பு வந்திருச்சி.”

”பீர் மட்டும் குடிச்சிருக்கேன். உங்கிட்ட பொய் சொல்லமாட்டேன். பிரண்ட்ஸ் கூட சேர்ந்து. அதுவும் போதை இருக்காது, உடம்புக்கு நல்லதுனு சொல்லவும் குடிச்சிருக்கேன்.”

இதெல்லாம் எப்படி சாத்தியம். உங்க வயசு பசங்க எல்லாம் எப்படியெல்லாமோ லைஃப்ப என்ஜாய் பன்றாங்களே… சொல்லி முடிக்கும் முன்னரே தொடர்ந்தார், அமர்பிரசாத்.

”எல்லாம் சிச்சுவேசன்தான். 11 வயசில அம்மா இறந்தாங்க. அதில இருந்து எவ்ளோ கஷ்டம் பார்த்தாச்சு. 1999-ல சூப்பர் சைக்ளோன் (ஒரிசாவைத் தாக்கிய பெரும் புயல்) வந்தது. வெள்ளி, சனி, ஞாயிறு மூனு நாளக்கி ஒரே இடத்துல தண்ணிக்குள்ள உக்காந்து இருந்தோம். செத்துபோயிருவோம்னு நினைச்சினு இருந்தோம். உசிர் பொழச்சி வந்தோம். அதுல இருந்த வீடும் போயிருச்சி. அதுக்கப்புறம்… என் குடும்பத்து மேல உள்ள பாசத்துல நான் வாழ்ந்துட்டிருக்கேன். அதனாலதான் லவ்வு அதல்லாம் எனக்கு வரல. எனக்கு என் ரெண்டு தம்பிங்க படிச்சி நல்லா வேலையில சேரனும். அம்மா விட்டுட்டு போயிட்டாங்க. குடும்பம் நல்லா இருக்கனும். அந்த நினைப்பில கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை கூட படல நானு.”

தன்னை மறந்து பேசிக்கொண்டிருந்தாலும், அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு மோரும், பால் சர்பத்தும் கலக்கி கொடுத்து கொண்டேயிருந்தார்.

இந்த வியாபாரத்துக்கு எப்படி வந்தீங்க? வியாபாரம் பரவாயில்லியா?

”அடிபட்டதுக்கு அப்புறம் டெய்லர் மெஷின் மெக்கானிக் வேலை கத்துகினேன். சொந்தமா கடைகூட வச்சிருந்தேன். அந்தளவுக்கு வருமானம் வரலை. ரூம் வாடகை 2,500. கடை வாடகை 2,000. அப்புறம் சாப்பாடு செலவு. கணக்கு பார்த்தா 7,000 செலவு ஆகும். வரவுக்கும் செலவுக்கும் சரியா இருந்துச்சு.”

”அடிபட்டதுக்கு அப்புறம் ஊருக்கு சரியா காசு அனுப்பலை. கம்பெனில இருந்தப்போ மாசம் 4,000 ரூபா, 5,000 ரூபா அனுப்புவேன். கம்பெனில ஓவர் டைம் இருக்கும். எக்ஸ்ட்ரா காசு வரும். என் குடும்பத்துக்கு எவ்வளோ சேப்டி பன்னனுமோ அவ்ளோ பன்னினேன்.”

”இப்போ, கடை போட்டு நாலு அஞ்சு மாசம்தான் ஆவுது. அதுல மூனு மாசம் வரைக்கும் அந்தளவுக்கு வருமானம் வரலை. போன மாசம்தான் ஜனங்க வர்ற ஆரம்பிச்சாங்க. டெய்லி முன்னூறு, நானுறுரூபா சம்பாதிக்கிறேன்.”

ஒரு நாளைக்கு எவ்ளோ நேரம் வேலை செய்றீங்க?

”காலைல 5 மணிக்கு எழுந்திருச்சி, எல்லா ரெடி பண்ணிட்டு பத்து மணிக்கு வருவேன். சாந்திரம் 5 மணி வரைக்கும் இருப்பேன். இதெல்லாம் எடுத்து போயி கழுவி வைக்கனும். நாளைக்கு என்னென்ன வேணும்னு கடைக்கு போயி வாங்கனும். ரெஸ்ட் அந்த அளவுக்கு இருக்காது. ஏன்னா சொந்த தொழில் செய்யிறோம் அப்டிங்கிற சந்தோசம் இருக்கிது, அவ்ளோதான்.

இதுல ஒருநாளைக்கு வருமானம் வரும். வராது. நூறு ரூபா சம்பாதிச்சாலும் ஃஹேப்பியா இருக்கிறேன். அவ்ளோதான்.”

உங்களுக்கே உடம்பு சரியில்லாம கடை போட முடியலனா எப்படி சமாளிப்பீங்க?

”ஆமா ஒன்னும் பண்ண முடியாது. நடுவுல மூனு நாள் மழை பேஞ்சிச்சு. கடை போடல. அப்ப என்ன பண்ண முடியும். கடவுள் ஏதாவது ஒரு வழி காட்டுவாரு.”

ஊருக்கு கடைசியா எப்போ போனீங்க?

”ஊருக்கு… வருசத்துக்கு ஒருவாட்டி போயிட்டு ஒருமாசம் தங்கிட்டு வருவேன். மனசு சரியில்ல, ஒரு எமர்ஜென்சினா போவேன். போயிட்டு வர்றனும்னா கையில ஒரு பத்தாயிரம் இருந்தாதான் போயிட்டு வர முடியும். ட்ரெயின் டிக்கெட், நம்ம செலவு, துணிவாங்க, ஹாப்பியா இருக்கனும். தம்பிங்களுக்கு ஒரு பேண்ட் சர்ட் எடுக்கணும், அப்பாவுக்கு, அண்ணா, அண்ணிக்கு எதாவது எடுத்துட்டு போனும்.”

ஊர்ல திருவிழா நடந்தா கிளம்பி போவீங்களா?

”இதுவரைக்கும் திருவிழாவுக்கு போறதுக்கு ஒரு சான்ஸ் வரலை எனக்கு. இங்க ஆயுதபூஜை மாதிரி அங்க தசரானு விழா. ரொம்ப பேமஸ். ஆனா, 12 வருசம் ஆச்சி நான் தசரா பாக்க முடியல. தசரா போனும்னு ஆசை. ஆனா, சிச்சுவேசன் இருக்காது.

ஏன் போ முடியாதுனா. கம்பெனில தீபாளிக்கு போனஸ் தருவாங்க. வேலை செஞ்சா தருவாங்க. ஆயுத பூஜைக்கு 15 நாள் கழிச்சி போனஸ் தருவாங்க. அந்த நேரத்துல வேலை டைட்டா இருக்கும். அந்த நேரத்துக்கு ஊருக்கு போனாலே ஒரு மாசம் ஆயிரும்ல. ஓனரு என்ன நல்ல மனுசனா இருந்தாலும் கோவிச்சிப்பாரு.

ரெண்டு டைம் ஊருக்கு போயி ஓட்டு போட்டுட்டு வந்துட்டேன். ரெண்டு வாட்டி மிஸ் பண்ணிட்டேன். பக்கத்துல இருந்தா நைட் கிளம்பி போயிட்டு வரலாம். ட்ரையின் சீட்டு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். ஒரே எடத்துல நின்னுகிட்டே கூட மெட்ராசுக்கு வந்துருக்கேன்.

ஆயிரம் துயரங்களைக் கடந்து வாழ்வதற்காக கணந்தோறும் போராடிக் கொண்டிருக்கும் அமர்பிரசாத்திடம் விடைபெற்றோம். குடும்பம், மொழி, பண்பாடு, உணவு அனைத்தையும் துறந்து இங்கே அவர் தன்னந்தனியாக போராடிக் கொண்டிருக்கிறார். அவரிடம் குறைகள் ஒன்றுமில்லை. இரு விரல்களை இழந்தாலும், தசராவிற்கு போகவில்லை என்றாலும் பரவாயில்லை. இழப்பதற்கு ஏதுமற்றவர்கள் என்பதால் மட்டுமல்ல, போராட்டக் குணம் அதிகம் இருப்பதாலும் அமர் பிரசாத்தின் பயணம் தொடர்கிறது.

– வினவு களச்செய்தியாளர்கள்.