கொரோனா நோய்த்தொற்று, குறிப்பாக உழைக்கும் பெண்களை உயிரோடு வதைக்கிறது. குடும்பத்தின் மொத்த பாரத்தையும் தனியொருவராக தன்மீது சுமக்கிறார்கள். எப்போது இந்தப் பாரம் இறங்கும் என்று திசை தெரியாமல் கலங்கி நிற்கிறார்கள்.

***

சத்தியவாணி என்ற அமுலு, இளநீர் விற்பவர்.

வாங்க இளநீர் வேணுமா? என்று கத்தியை லாவகாமக பிடித்தார். நாம் வந்த விசயத்தை அவரிடம் சொன்னோம்.

ஏற்கெனவே சங்கத்துக்காரங்க வெவரமா கேட்டு எழுதிட்டுப் போனாங்க. ஆதார், ரேஷன், சங்கக் கார்டுன்னு எல்லாத்தயும் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்தேன். ஒன்னும் காணல. நீங்க எழுதி என்ன பண்ணப் போறீங்க? என்றார்.

கொரோனா நோய்த்தொற்றுனால சாவுறவுங்க கம்மியா போச்சு என்கிறாரே நம்ம முதலமைச்சர் எடப்பாடி…! உண்மையா? என்றோம்.

ஒரு நாளைக்கு 4, 6 காய்தான் விக்குது. இப்ப பகல் 2 மணியாகுது. இதுவரைக்கும் 2 காய்தான் வியாபாரம் செஞ்சிருக்கேன் என்கிறார், சத்தியவாணி என்ற அமுலு, இளநீர் விற்பவர்.

தொழிலும் பண்ண முடியல, ஒன்னும் செய்ய முடியல. என்னையே எடுத்துக்குங்க. 15 ஆயிரம் ரூபாய்க்கு சரக்கு போட்டு உட்கார்ந்திருக்கேன். ஒரு நாளைக்கு 4, 6 காய்தான் விக்குது. இப்ப பகல் 2 மணியாகுது. இதுவரைக்கும் 2 காய்தான் வியாபாரம் செஞ்சிருக்கேன். சாயாந்திரம் வரைக்கும் உக்காந்து என்னத்த வியாபாரம் பண்றது, எத வீட்டுக்கு எடுத்துப் போறது. இத வச்சு மொத்த குடும்பமும் 3 வேளை எப்படி சாப்பிடுறது?

உழைச்சாலும் சரியான சோறு இல்ல, நாக்கு செத்துப்போயி பல மாசங்களாகுது. ரேசன் அரிசி மொச்சக்கொட்டை மாதிரி இருக்குது. இத சமைச்சமுன்னா நாலே நாள்ல சிலிண்டரு காலியாயிடுது. காரஞ்சாரமா கொழம்பிருந்தா ஒருவழியா சாப்பிட்டு முடிக்கலாம். ரசம் வச்சி சாப்பிட்டா நம்மளுக்கே எறங்க மாட்டேங்குது; குழந்தைங்க எப்படி சாப்பிடும்?

வகைதொகையா கறி சாப்பிடுறத விடுங்க, வாரத்துக்கு ஒரு நாள் மீன் கூட இப்ப வாங்க முடியல. சரி கருவாட்ட வச்சி ஓட்டலாமுன்னு பாத்தா தம்மாத்தூண்டு பாக்கெட் முப்பது ரூபா சொல்றான். ரெண்டு பாக்கெட் வாங்கினாத்தான் கருவாட்டு வாசனையே வருது.

ஒரு வாரம் ஆனா, விக்காத இளநீரின் கண்ணுல இருக்குற தொப்பி கழண்டுரும். அவ்வளவுதான் காய் அழுகிடும். அத குப்பையில போடனுமுன்னாலும்கூட வண்டிக்கு கூலி வச்சாகணும்.

வியாபாரம் இல்ல, வாங்கின சரக்கு அழுகிப் போகுது. இளநீரைப் பொறுத்தவரைக்கும் 5 நாளைக்கு  மேல தாங்காது, தண்ணீ டேஸ்ட் இருக்காது. ஒரு வாரம் ஆனா, விக்காத இளநீரின் கண்ணுல இருக்குற தொப்பி கழண்டுரும். அவ்வளவுதான் காய் அழுகிடும். அத குப்பையில போடனுமுன்னாலும்கூட வண்டிக்கு கூலி வச்சாகணும். இந்த லட்சணத்துல கொரோனாவை நாங்க எங்கே கொல்றது. அதுக்கு முன்னே நாங்க போய் சேந்துடுவோம் போல என்றார்.

படிக்க:
திருச்சி லால்குடி : நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் தாசில்தாரை கண்டித்து சுவரொட்டி பிரச்சாரம் !
முகக்கவசம் விற்கும் தொழிலாளிகள் ! படக்கட்டுரை

செல்வி (வயது 60), செருப்புத் தைக்கும் தொழிலாளி

இயல்பாகவே நடக்க முடியாதவர். தாங்கித் தாங்கி நடந்து வீட்டுக்கும் வேலைக்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்.

என் வீட்டுக்காரருக்கு சுகர் இருந்தது. அதுக்குமேல குடிச்சிக் குடிச்சியே செத்துட்டாரு. அவருக்கும் செருப்பு தைக்கிறதுதான் தொழில். புள்ளைங்களுக்கு மூனு வயசாகும்போதே அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டாரு. நான் இதே எடத்துல உட்கார்ந்து செருப்பு தச்சுதான் அவங்கள கட்டிக்கொடுத்தேன். இந்தத் தொழில்கூட நான் விரும்பி வரல. அது ஒரு பெருங்கதை.

செல்வி (வயது 60), செருப்புத் தைக்கும் தொழிலாளி

என் வீட்டுக்காரரு ஒழுங்காவே வேலை செய்யிறதில்ல. வேலைக்கு வந்தாருன்னா, ஒரு நாளைக்கு நாலு தடவ எழுந்துப் போயிடுவாரு. அந்த நேரமெல்லாம் கடைய நான்தான் பாத்துக்குவேன். அப்போ வர்ற கஷ்டமரை சமாளிக்கிறது பெரும்பாடாயிடும். இப்படியே விட்டா குடும்பத்த காப்பாத்த முடியாதுன்னு, கொஞ்சம் கொஞ்சமா கூட இருந்து கவனிச்சேன். அப்படி கத்துகிட்டதுதான் இந்த வேலை. இப்ப கஞ்சி ஊத்துது.

சைதாப்பேட்டை மாட்டாஸ்பத்திரி காவா ஓரம் ஒரு குடிசையில இருக்கிறேன். ஆம்படியான் சரியில்லன்னு என்னோட பெரிய பொண்ணு கிருஷ்ணாயில் ஊத்திட்டு செத்துட்டா. அவளுக்கு பொறந்த 2 பேரப்பசங்க, என்னோட சின்னப் பையன், கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணு… இவ்வளவு பேரையும் வச்சு நான்தான் கஞ்சி ஊத்தணும்.

இதுவரைக்கும் கவுரவமாத்தான் தொழில் பண்ணி வந்தோம். இப்போ கொரோனா வந்து எங்கள பிச்சை எடுக்க வச்சிடுச்சு. 4 மாசமா ரோட்டுல போறவங்க கொடுக்குற சோறுதான் நாங்க சாப்பிடுறோம். வேலையே இல்லன்னாலும் தினமும் இங்கே வந்து உட்கார்ந்திடுவேன். சின்ன பேரன், எங்கூடவே வருவான். அவன பாக்குறவங்க, மனசு இறங்கி 5, 10ன்னு கொடுப்பாங்க. அத எடுத்துப்போனாத்தான் ஒருவேள சோறு எங்களுக்கு.

இதுவரைக்கும் கவுரவமாத்தான் தொழில் பண்ணி வந்தோம். இப்போ கொரோனா வந்து எங்கள பிச்சை எடுக்க வச்சிடுச்சு. 4 மாசமா ரோட்டுல போறவங்க கொடுக்குற சோறுதான் நாங்க சாப்பிடுறோம் என்கிறார் செல்வி.

லாக்டவுன் எடுத்ததுனால அதுவும் போச்சு. இப்ப யாரும் இங்கே சோறு போடுறதில்லை. ரோட்டுலயும் முன்னமாதிரி யாரும் நடக்குறதில்ல. பல மாதங்களாகுது நல்ல சாப்பாடு சாப்பிட்டு. வாய் காரஞ்சாரமா கேக்குது. ஆனா வீட்டுல ரசம் வக்கக்கூட ஒரு துரும்பு இல்ல. நேத்து நைட்கூட தண்ணி சோறுதான். சாப்பிட புடிக்கல. அதனால சரியான தூக்கமுமில்ல.

ஏற்கெனவே எனக்கு பிரஷரு வேற. ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில அட்டைபோட்டு மாசமானா மருந்து வாங்கி வருவேன். இப்ப பஸ் இல்ல, மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு. இந்த உயிசுரு எப்ப போவுமுன்னு தெரியல. நான் போன பிறகு பேரப்புள்ளைங்க எங்கே போயி நிக்குமுன்னு வேதனையா இருக்கு. அதனால உயிர இழுத்துப் புடிச்சு வச்சிருக்கேன் என்று உடைந்து போயி பேசினார்.

படிக்க:
பறி போகும்  பாரியின்  பறம்பு மலை : வி.இ.குகநாதன்
நான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் ? ஜெய் கோலியாவின் அனுபவம்

ஆயிஷா, துணி வியாபாரம்

நகராட்சி மருத்துவமனையின் பிரசவப் பிரிவு நுழைவு வாயில். அதன் அருகில் உள்ள சிறிய தரைக்கடை.

பிறந்த குழந்தைகளுக்கு, தாய்மார்களுக்குத் தேவையான அவரசத் துணிகளை தட்டுக்கடையில் வைத்து விற்கும் முஸ்லீம் மூதாட்டி. போட்டோவெல்லாம் எடுக்காதீங்க. போங்க என்று நம்மை எரிச்சலுடன் விரட்டினார்.

கொரோனாவுக்கு பயந்துகிட்டு வர்ற சனங்ககூட, இந்தக் கடைய சந்தேகமாவே பாக்குறாங்க. இதுலவேற போலீசு தொந்தரவு, இப்ப நீங்க… என்று இழுக்கிறார், துணி வியாபாரம் செய்யும் ஆயிஷா.

இப்பத்தான் போலீஸ்காரங்க வந்தாங்க, கொரோனா வந்துடப் போகுது, தூக்குத் தூக்குன்னு சொல்லி விரட்டுனாங்க. எவ்வளவு கெஞ்சினாலும் விடல. கொரோனாவே எங்களாலதான் வருதுங்குற மாதிரி அசிங்கப்படுத்துறாங்க. இப்படியே 4 மாசமாக பொழப்பு இல்ல. எதாவது வித்தாத்தான் கொழந்தைங்கள காப்பாத்த முடியும். இப்படியே பண்ணினா சாவுறத தவிர எங்களுக்கு வேற வழியில்லை.

முழுசா 500 ரூபா எடுத்துப் போயி பல மாதங்களாயிடுச்சு. பிரசவம் ஆகி வெளியே போறவுங்க பின்னால ஓடி கெஞ்சினாத்தான் ஏதோ பாவம் பாத்து ஒரு துண்டாவது வாங்குறாங்க. உள்ளே போறவுங்களும் அப்படித்தான்.

இந்தக் கொரோனாவுக்கு பயந்துகிட்டு வர்ற சனங்ககூட, இந்தக் கடைய சந்தேகமாவே பாக்குறாங்க. காலையிலேருந்து இன்னும் பச்சத் தண்ணிகூட குடிக்கல. கண்ணைக் கட்டுது. இதுலவேற போலீசு, இப்ப நீங்க… இப்படியே போனா நான் எப்பத்தான் வியாபாரம் பண்றது என்று சலித்துக்கொண்டார்.

அங்கம்மாள், உதிரிப் பொருட்கள் விற்பவர்

தெருவோரமாகக் கிடந்தார் வயதான மூதாட்டி அங்கம்மாள். அவர்தான் இந்தத் தரைக்கடைக்கு ஓனர். பிளாஸ்டிக், நைலான், ரப்பர் புஸ்கள். நாற்காலி, மேசை, ஸ்டூல், பெஞ்ச், கட்டில் என்று பல வீட்டு – அலுவலக சாமான்களின் கால்கள் தேயாமல் இருக்க, அடியில் போடும் புஸ்களை விற்று வருகிறார். பல வடிவங்களில், பல அளவுகளில் இறைந்து கிடந்தன. வண்ண வண்ண பிளாஸ்டிக் பாட்டில் மூடிகளும் குவிந்து கிடந்தன.

வியாபாரம் சுத்தமா இல்ல. அதான் ரோட்டுலயே சுருண்டு கிடக்கிறேன். யாராவது என்னை எழுப்பி கேட்டா, கேக்குறத கொடுப்பேன் என்கிறார் வயதான அங்கம்மாள்.

இதோட விலையே 5, 10, 20 ரூபாதான். வர்றவங்க அதுக்கும் கம்மியா கேக்குறாங்க, பேரம் பேசுறாங்க. 10 ரூபா பொருள் விக்கிறதுக்குல்ல பேரம் பேசியே தொண்ட தண்ணி வறண்டுபோகுது. இப்ப வியாபாரம் சுத்தமா இல்ல. அதான் ரோட்டுலயே சுருண்டு கிடக்கிறேன். யாராவது என்னை எழுப்பி கேட்டா, கேக்குறத கொடுப்பேன். உடம்பு படுத்துது, தெம்பு போயிடுச்சு. ரோட்டுல நின்னு வியாபாரம் பாக்க முடியல. இப்ப உங்களுக்கு என்ன வேணும். ஏதாவது எடுங்க, நீங்க கொடுக்குறத கொடுங்க என்று அவர் கேட்ட விதம் எவரையும் உலுக்கிவிடும்.

சிறு வியாபாரம் அழிந்து அதன் இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டதை உணர்த்தியது அந்தக் கோரச் சூழல்.

மேலும் படங்களுக்கு :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

1 மறுமொழி

  1. வறுமையும், விரக்தியும் கண்களிலும், வார்த்தைகளிலும் தேங்கி கிடக்கின்றன…

    இவர்களைப் போன்ற கோடிக்கணக்கான அடித்தட்டு மக்களை எப்படி ஒருங்கிணைக்க போகிறோம், புரட்சிகர பணியில் ஈடுபட வைக்கப்போகிறோம் என்கிற சிந்தனைக்கும், செயலுக்கும் பிடித்து தள்ளுகிறது…

    வினவுக்கு நன்றி…

    உங்கள் பணி இன்னும் சிறக்க பலரிடம் நிதி அளிக்ககோரி, நிதியை அனுப்பிவைக்கச் சொல்கிறோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க