Monday, December 6, 2021
முகப்பு இதர புகைப்படக் கட்டுரை திருப்பூர் : நரகத்திலிருந்து ஒரு ரிப்போர்ட் !

திருப்பூர் : நரகத்திலிருந்து ஒரு ரிப்போர்ட் !

-

திருப்பூர் ரிப்போர்ட் – பகுதி 1

“இங்கே தண்ணீ கிடைக்காத நிலைமை இல்லீங்க.. ஆனா, கிடைக்கிற தண்ணீர் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள்னு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலர்ல வருதுங்க.. குடிக்கிற நல்ல தண்ணி தான் அப்படி வருது..”

என அங்கலாய்த்தார் திருப்பூர் ராதா நகரைச் சேர்ந்த லட்சுமி. ஊடகங்களாலும், ஓட்டுக்கட்சி அரசியல் தலைவர்களின் வாயில் புரள்வதாலும் “வரலாறு காணாத வறட்சி” என்கிற வார்த்தைகள் தேய்வழக்காகிப் போன நிலையில் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் படும் பாடுகளை நேரில் கண்டுணர்ந்து மக்களுக்கு அறியத்தரும் நோக்கில் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் கள ஆய்வுகள் திட்டமிடப்பட்டு அதன் ஒரு பகுதியாக வினவின் செய்தியாளர் குழு திருப்பூரில் களமிறங்கியது.

“இப்போவெல்லாம் குடி தண்ணீர் காசு கொடுத்து வாங்கறாங்களே?” என்றோம்.

“காசு குடுத்து வாங்கலாம்… அதுக்கு முதல்லே காசு வேணுமே சார்? வாங்குற 200 ரூவா கூலிக்கு தண்ணீருக்கு செலவழிக்க முடியுமா? வீட்ல நாங்க நாலு பேரு இருக்கோம்.. வாரத்துக்கு ஆறு கேன் தண்ணீ ஆவும்.. ஒரு கேன் இப்ப 40 ரூபா வரைக்கும் விக்கிறாங்க. மாசத்துக்கு ஆயிரம் ரூபா குடி தண்ணிக்கு மட்டும் செலவழிச்சிட்டா சாப்பாட்டுக்கும் மத்ததற்கும் எங்கே போவோம்?” என்கிறார் லட்சுமி.

கணவருடன் லட்சுமியும் வேலைக்குச் செல்கிறார். கணவருக்கு நானூறு ரூபாயும், லட்சுமிக்கு இருநூறு ரூபாயும் கூலி. இரண்டு பிள்ளைகள். கணவரின் சம்பளத்தில் பெரும்பகுதி டாஸ்மாக் மூலம் அரசுக்கே சென்றடைந்து விடுவதால், லட்சுமியின் சம்பளத்தை நம்பியே குடும்பம் நடக்கிறது.

“தண்ணீர் பஞ்சம்” எனச் சொல்லப்பட்டாலும், அது வெவ்வேறு வர்க்கப் பிரிவைச் சேர்ந்த மக்களை வெவ்வேறு விதத்தில் பாதித்துள்ளது. தொழிலாளர்களிலேயே சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், குடும்பத்தோடு தங்கியிருப்பவர்கள், திருமணமாகாமல் நண்பர்களோடு சேர்ந்து தங்குகிறவர்கள், வடமாநிலத் தொழிலாளர்கள் என ஒவ்வொரு தரப்பினருக்கும் சில குறிப்பான மற்றும் பொதுவான பிரச்சினைகள் உள்ளன.

கூலித் தொழிலாளிகள் காசு கொடுத்து நல்ல தண்ணீரை வாங்கும் சக்தியற்ற நிலையில் குழாயில் விசமே வழிந்தாலும், அதைத் தண்ணீராய் பாவித்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். சுகாதாரமற்ற நீரால் ஏற்படும் நோய்களை சந்திக்கும் நிலையிலும் அதைத் தங்களது தலைவிதியாய் நினைத்துக் கடந்து செல்கின்றனர்.

“பாருங்க சார், எல் & டி தண்ணீல துணி தோய்ச்சி கையெல்லாம் செரங்கு” என்றார் லட்சுமி. லட்சுமிக்கு அருகில் அமர்ந்திருந்த மூதாட்டி ஒருவர்,  “அந்த கெரகம் புடிச்ச தண்ணீல குளிச்சி உடம்பு முழுக்க ஒரே அரிப்புங்க” என்கிறார்.

சிதிலமடைந்து போயுள்ள கங்கா நகர் நீரேற்று நிலையம்

ராதா நகரைச் சேர்ந்த அக்கம்மாளுக்குச் சொந்த வீடு உள்ளது. ஐந்து செண்ட் இடத்தில் ஒரு படுக்கையறையுடன் கட்டப்பட்ட மூன்று வீடுகள் உள்ளன – அதில் ஒன்றில் அவரது குடும்பம் தங்கியிருக்க, மற்ற இரண்டும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

“நாங்க ரெண்டு பைப் கனெக்சன் வாங்கியிருக்கோம்.. பத்து நாளுக்கு ஒரு வாட்டி குடி தண்ணியும் தினசரி உப்புத் தண்ணியும் விடறாங்க. ஆனா, நாங்க புழங்குறதுக்கும், குடிக்கிறதுக்கும் காசு குடுத்து தான் தண்ணி வாங்கிக்கறோம்” என்றார்.

“புழங்குவதற்கு” என்றால், பாத்திரம் கழுவ, துணி துவைக்க, சமையல் செய்ய என்று பொருள். இதற்கு லாரித் தண்ணீர் வாங்கிக் கொள்கின்றனர். ஒரு லோடு தண்ணீர் 850 ரூபாய். தவிர குடிப்பதற்கு கேன் தண்ணீர் – அதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் தனியே செலவாகும். மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டம் எனப்படும் பவானி-கூடுதுறை குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் இணைப்பு பெற்றுள்ளார் ராதாம்மாள். இத்திட்டத்தின் குடிநீர் வழங்கல் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால், இதற்கென வருடம் 3000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். வருடம் சுமார் முப்பதாயிரம் வரை தண்ணீருக்கே செலவழித்தாக வேண்டும். இந்த வாய்ப்புகள் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கு வாய்ப்பதில்லை.

“சாணிப் பவுடரு கலந்த மாதிரி தண்ணீர் வரும். அதுல தான் சமைச்சாகனும். வேற வழி? நல்ல தண்ணியை காசு குடுத்து வாங்கனும்னு ஆசை தான்.. ஆனா முடியனுமே? என்கிறார் லட்சுமி.

மூன்றாம் கூட்டுக் குடிநீர் வழங்கல் மற்றும் பராமரிப்பு மகிந்திரா & மகிந்திரா நிறுவனத்திடம் உள்ளது. ஆனால், அந்த திட்டத்திற்கான வேலைகளை காண்டிராக்ட் எடுத்து செயல்படுத்தியது எல் & டி என்பதால் மக்கள் பொதுவாக எல் & டி தண்ணீர் என்றே அழைக்கின்றனர். பொதுவாக குடிநீரில் உள்ள பி.பி.எம் (Parts per million) அளவு 50ல் இருந்து 100 வரை இருக்கலாம். பி.பி.எம்மின் அளவு 500க்கும் அதிகமாக இருந்தால் பயன்படுத்தக்கூடாது என்கிறது அமெரிக்க சூழல் பாதுகாப்பு மையம். மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் திருப்பூரில் விநியோகிக்கப்படும் தண்ணீரின் பி.பி.எம் அளவு 700ல் இருந்து 800 வரை இருக்கின்றது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே தனியார் கிளினிக் ஒன்றை நடத்தி வரும் மருத்துவர் இளங்கோவைச் சந்தித்தோம். தோல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவரான இளங்கோவிடம் தண்ணீர் தொடர்பாக வரும் நோய்கள் குறித்த கேள்விகளை முன்வைத்தோம்.

தோல் நோய் நிபுணர் மருத்துவர் இளங்கோ

“திருப்பூரில் உள்ள தண்ணீரின் காரணமாக சொரியாசிஸ் நோய் அதிகமாக உள்ளது எனச் சொல்லப்படுகிறதே?” என்றோம்.

“அது தவறான தகவல் சார். சொரியாசிஸ் நோய்க்கு மரபணு சார்ந்த மற்றும் மன அழுத்தப் பிரச்சினைகளுக் தான் காரணம். ஆனால், கெட்ட நீரால் ஏற்படும் பிற நோய்கள் அதிகமாக இருப்பது உண்மை தான்”

“அப்படியென்றால், திருப்பூரில் சொரியாசிஸ் நோயாளிகள் அதிகம் என்று சொல்லப்படுவது பொய்யா?” என்றோம்.

“சொரியாசிஸ் இங்கே அதிகம் தான். ஏன்னா இங்கே மக்கள் அடர்த்தி அதிகம். அதே மாதிரி வேலை தொடர்பான அழுத்தங்களும் அதிகம். மற்றபடி தண்ணீரால் சொரியாசிஸ் அதிகரிப்பது என்பது மருத்துவ ரீதியாக சரியான தகவல் அல்ல” என்றார்.

“மக்களிடம் பேசியபோது தண்ணீரால் அரிப்பு சிரங்கு போன்ற பிரச்சினைகள் இருப்பதாக சொல்கிறார்களே?”

“அது கடின நீரைப் பயன்படுத்தும் போது ஏற்படும் ஒவ்வாமை. இர்ரிட்டண்ட் டெர்மடிடஸ் என்பார்கள். இந்நோய் சாய பட்டரைகளில் வேலை செய்கிறவர்களுக்கும் ஏற்படும்.  சொரியாசிஸைப் போல் இது நிரந்தரமானதல்ல. இந்த சூழலில் இருந்து நல்ல தண்ணீர் கிடைக்கும் பகுதிகளுக்கு மாறிச் சென்றால் பிரச்சினை தீர்ந்து விடும்”

“நல்ல சூழலுக்குச் செல்வதென்றால், திருப்பூரை விட்டே வெளியேறியாக வேண்டுமே. அவர்களது ஊரில் பிழைக்க வழியின்றி தானே இங்கே வந்துள்ளனர்?”

“நோயில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அப்படித் தான் செய்ய வேண்டும். ஆனால், வெளியே பிழைக்க வழியில்லை என்றால் நோயோடு திருப்பூரில் காலம் தள்ளுவதைத் தவிற வேறு வழியில்லை”

“தண்ணீர் பயன்பாடு, அல்லது திருப்பூருக்கென்றே பிரத்யேகமாக உள்ள தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏதாவது உள்ளதா?”

“ஸ்கேபிஸ் (Scabies) நோயை அப்படிச் சொல்லலாம். இது பெரும்பாலும் அடைந்து வாழ்வதாலும், சுகாதாரமற்று இருப்பதாலும் வரும் நோய். இது திரூப்பூரில் அதிக அளவில் உள்ளது”

“சுகாதாரமற்று என்றால்?”

“தினசரி குளிக்காமல், துவைக்காத ஆடைகள் அணிவதாலும் இந்த நோய் வரும்”

விரல் இடுக்குகளிலும், புறங்கையிலும் சிரங்காக பரவும் இந்நோயின் தாக்கம் திருப்பூரில் மிக அதிகமாக இருப்பதற்கான காரணத்தை மருத்துவர் விளக்கினார். வெளியூர்களில் இருந்து – குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து – திருமணமாகாத இளைஞர்கள் பலர் திருப்பூர் பனியன் கம்பெனிகளில் கீழ்மட்ட கூலி வேலைகளுக்கு வருகின்றனர். பத்துக்குப் பத்து அளவுள்ள அறைகளில் ஐந்தாறு பேர்களாக அடைந்து வசிக்கின்றனர். வாரத்துக்கு ஒருமுறை குளியல், துவைக்காத துணிகளைகளே நாள் கணக்கில் போட்டுக் கொள்வது என்பதாக இவர்களது சூழல் உள்ளது.

நாங்கள் அருணாச்சல பிரதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்து திருப்பூரில் தொழிலாளியாக உள்ள ஜெகத்திடம் பேசினோம்.

ஜெகத்

“கூட்டமாகச் சேர்ந்து வாழ்வதை விட வேறு வழியில்லை. இந்த அறையில் நாங்கள் இரண்டு பேர் வசிக்கிறோம்.. மாதம் 1600 ரூபாய் வாடகை. வசதியாக இருக்க வேண்டுமென்றால் ஐயாயிரத்துக்கு மேல் வாடகைக்கு வீடு பிடிக்க வேண்டும்.. அப்படியென்றால் ஊருக்கு பணம் அனுப்ப முடியாதே?” என்றார்.

“சேர்ந்து வாழ்வதைத் தவிற வேறு வழியில்லை என்றால், குளிப்பதற்கும் துவைத்த துணிகளை அணிவதற்கும் என்ன பிரச்சினை” என்றோம். அவர் எங்களை தாங்கள் தங்கியிருக்கும் அறையினுள் அனுமதித்தார்.

எங்கள் கேள்விக்கான பதிலை அவர் சொல்லாமலே நாங்கள் புரிந்து கொண்டோம். திருப்பூரில் நல்ல தண்ணீரைச் சேகரித்து வைப்பதற்கே நிறைய மெனக்கெட வேண்டும். அஸ்பெஸ்டாஸ் கூரை இடப்பட்ட அந்த பத்துக்குப் பத்து அறையில் ஐந்தாறு குடங்கள் வைப்பதற்கே போதுமான இடம் இருந்தது. மேலும், உள்ளூர் தொழிலாளிகளே ஒரு சிப்டுக்கு 12 மணி நேரங்கள் வேலை செய்யும் நிலையில், வடமாநில தொழிலாளர்களுக்கோ நேர வரையறை ஏதும் இருப்பதில்லை – இவர்கள் பீஸ் ரேட் அடிப்படையில் வேலை செய்கின்றனர். எவ்வளது நேரம் வேலை செய்கிறார்களோ அவ்வளவு கூலி – இவர்களது உழைப்புக்கு வழங்கப்படும் குறைந்த கூலியை அதிக நேரம் வேலை செய்வதன் மூலம் ஈடுகட்டிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம். எனவே, நல்ல தண்ணீரைத் தேடியலைந்து சேகரிப்பதற்கு நேரமும் இருப்பதில்லை.

அருணாச்சல பிரதேசத்திலிருந்து இங்கு வந்து வேலை செய்வது எப்படி இருக்கிறது என்று ஜெகத்திடம் கேட்டோம்.

“அங்க காசு கிடையாது. ஆனா அது சொர்க்கம். இங்க காசு கிடைக்கிறது. ஆனா இது நரகம்” என்றார். திருப்பூர் குறித்த சித்திரத்திற்கு இக்கவிதையே போதுமானது.

ஜெகத் குடியிருக்கும் வீட்டின் உள்தோற்றம்

தண்ணீர் விடப்படும் நேரம் இன்னொரு பிரச்சினை. சில பகுதிகளில் வாரம் ஒருமுறையும், வேறு சில பகுதிகளில் பத்து நாட்களுக்கு ஒருமுறையும் நல்ல தண்ணீர் விடப்படுகின்றது. அதுவும், ஒரு மணி நேரம் தான் வரும். அந்த ஒரு மணி நேரம் எப்போது என்பது யாருக்கும் தெரியாது.

“திடீர்னு தண்ணி விடுவாங்க. நாள் பொழுதெல்லாம் கிடையாதுங்க.. ராத்திரி கூட வரும். தண்ணி விட்டு ஒரு வாரம் ஆச்சின்னா வீட்டுக்கு ஒருத்தர் குழாய் மேல ஒரு கண்ணு வச்சிகிட்டே இருப்போம். காலைல மூணு மணிக்கு கூட வரும். முழிச்சிருந்தா கிடைக்கும் இல்லேன்னா இல்ல” என்கிறார் கங்கா நகரைச் சேர்ந்த சுமதி.

தொழிலாளர்களின் வரிசை வீடுகள்

தண்ணீரைச் சேமித்து வைப்பதில் வேறு சிக்கல்கள் உள்ளன. பொதுவாக திருப்பூரில் தொழிலாளிகள் லைன் வீடுகளில் வசிக்கின்றனர். ஒரு காம்பவுண்டில் சுமார் நான்கு அல்லது ஐந்து குடித்தன வீடுகள் இருக்கும் – இத்தனை வீடுகளுக்கும் சேர்த்து இரண்டு குடிநீர்க் குழாய்கள் இருக்கும். ஒரு மணிநேரமே தண்ணீர் வருவதால், ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சம் பதினைந்திலிருந்து இருபது குடம் தண்ணீர் வரை கிடைக்கும். இந்த தண்ணீரை சிறு சிறு குடங்களில் சேமிப்பதென்றால், வீட்டில் பாதி இடத்தை அடைத்துக் கொள்ளும் – எனவே பல வீடுகளில் பிளாஸ்டிக் டிரம்களை வாங்கி வைத்துள்ளனர்.

பிளாஸ்டிக் டிரம்களில் சேமிக்கப்படும் நீர் இரண்டு அல்லது மூன்று நாட்களில் புழு பிடித்துக் கொள்ளும். எனவே மூன்று நாட்களுக்குப் பின் காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டும் – அல்லது, துவைக்க வேண்டிய அழுக்குத் துணிகளை அடுத்த நான்கு நாட்களுக்கு எங்காவது குவித்து வைக்க வேண்டும். நாங்கள் பேசிய பலரும், குடிநீர் தட்டுப்பாட்டை ஒரு பாரிய பிரச்சினையாக கருதாமலே பேசினர். சம்பாத்தியத்தில் கணிசமான பகுதியை தண்ணீர் வாங்க செலவழிப்பதை முன்னிட்டு எவருக்கும் ஆத்திரமோ கோபமோ ஏற்படவில்லை என்பது எங்களுக்கு வியப்பளித்தது. ஆனால், இதற்கான காரணத்தை விளக்கினார் முன்னாள் சி.பி.ஐ பிரமுகரும், பஞ்சாயத்து தலைவராக இருந்தவருமான தோழர் மோகன்.

“மக்களை இதுக்கு மெல்ல மெல்ல பழக்கப் படுத்தினாங்க தோழர். மூன்றாம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் அமல்படுத்தும் வரை தண்ணீரைக் காசு கொடுத்து வாங்க வேண்டிய ஒரு நிலை இங்கே இல்லாமல் தான் இருந்தது. கேன் தண்ணீர் என்பதெல்லாம் மிக அபூர்வம்” எனக் குறிப்பிட்ட தோழர் மோகன் தற்போது சி.பி.ஐ கட்சியிலிருந்து விலகி மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைந்துள்ளார்.

தோழர் மோகன்

திருப்பூர் பிழைக்க வருகின்றவர்களின் ஊராக இருக்கிறது. மண்ணின் மைந்தர்கள் சொந்த இடம் வைத்துள்ளனர் – அதில் வீடோ கடையோ கட்டி வாடகைக்கும் விடுகின்றனர். பார்க்கும் வேலையில் குறைந்தபட்ச சம்பளம் கிடைத்தாலும், வாடகை வருமானம் அதை ஓரளவுக்கு ஈடுகட்டி விடுவதால் மண்ணின் மைந்தர்களுக்கு தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவது பொருளாதார ரீதியில் பெரியளவுக்கு நெருக்கடி அளிப்பதில்லை. வெளியூரில் இருந்து வந்தவர்களோ – அதிலும் குறிப்பாக வாடகை வீடுகளில் குடியிருக்கும் தொழிலாளிகள் – பிழைக்க வந்த ஊரில் போராட்டம், வம்பு தும்பு என இறங்குவதை விட தண்ணீருக்கு செலவழிக்கும் தொகையை ஈடுகட்ட அதிக நேரம் உழைப்பது, குடும்பத்தில் எல்லோரும் உழைப்பது என்கிற ரீதியிலேயே சிந்திக்கின்றனர்.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வருகின்றவர்களாவது தண்ணீர் பிரச்சினைக்காக எப்போதாவது போராடினாலும், வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றவர்களோ நிலைமையை அப்படியே சகித்துக் கொள்கின்றனர். மெல்ல மெல்ல நல்ல குடிநீர் என்றாலே காசு கொடுத்து தான் வாங்கியாக வேண்டும் என்கிற நிலைமையை நிலை நாட்டியுள்ளது அரசு. காசுக்கேற்ற தோசையாக குடிநீரையும் சந்தையின் பண்டமாக நிலைநாட்டுவதில் வெற்றி பெற்றுள்ளது அரசு.

நாங்கள் சந்தித்த மக்களில் பெரும்பாலனவர்கள் காசு கொடுக்கவும் தயார், ஆனால் நல்ல குடிநீர் கிடைத்தாலே போதும் என்கிற மனநிலைக்கு வந்து விட்டனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு மேலும் மேலும் திருப்பூரின் குடிநீர் வழங்கலை தனியாருக்குத் தாரை வார்க்கத் தயாராகி வருகின்றது அரசு. முதல் இரண்டு கூட்டுக் குடிநீர் திட்டத்தை திட்டமிட்டு சீர்குலைப்பது, திருப்பூரின் அனைத்துப் பகுதிகளையும் மூன்றாம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து மொத்தமாக தனியார் முதலாளிகளின் கையில் கொடுத்து விடுவது என்பதை நோக்கி அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

இந்த நிலையை பின்னலாடை நிறுவனங்கள் எவ்வாறு சமாளிக்கின்றன? திருப்பூரில் அமல்படுத்தப்பட்ட குடிநீர் திட்டங்கள் உண்மையில் மக்களுக்குப் பலனளித்ததா? திருப்பூரின் நீராதாரங்கள் திட்டமிட்டு பாழாக்கப்பட்ட வரலாறு என்ன?

( தொடரும் )

– வினவு செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க