Friday, February 3, 2023
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தமிழினவாதம் குறித்து வட இந்திய தொழிலாளிகள்

தமிழினவாதம் குறித்து வட இந்திய தொழிலாளிகள்

-

சென்னை ஒரகடம் – ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் லட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களும் பன்னாட்டு நிறுவனங்களால் சுரண்டி துப்பப்படும் இடம்.

ஆந்திரா, மேற்கு வங்கம், பீகார், உத்தர பிரதேசம் என்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சொந்த ஊரில் வாழ்வாதாரங்களை தொலைத்த உழைக்கும் மக்கள் இங்கு வந்து சேர்கின்றனர். இந்த வடமாநிலத் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி, தமிழினவாதம் குறித்து என்ன கருதுகிறார்கள் இவற்றை அறிய ஒரகடத்தில் இயங்கும் ஞாயிற்றுக் கிழமை சந்தையில் பொருள் வாங்க வரும் தொழிலாளர்களிடமும், வியாபாரிகளிடமும் பேசி தகவல் திரட்டினோம்.

நேரம் தவறாமல் திறக்கப்பட்டிருந்த ஒரு டாஸ்மாக் கடை முன்பு வந்த தொழிலாளர்கள் 4 பேரை நிறுத்தி பேசினோம்.

டாஸ்மாக் கடை
நேரம் தவறாமல் திறக்கப்பட்டிருந்த ஒரு டாஸ்மாக் கடை
கொல்கத்தா தொழிலாளர்கள்
“கொல்கத்தா சணல் தொழிற்சாலையிலிருந்து சென்னைக்கு பிய்த்து எறியப்பட்டோம்”

அவர்கள் கொல்கத்தா ஜூட் (சணல்) ஆலையில் வேலை பார்த்தவர்கள். ஆலை மூடப்பட்ட பிறகு தெரிந்தவர் மூலம் இங்கு வந்திருக்கிறார்கள். அப்பல்லோ தொழிற்சாலையில் துப்புரவு பணி செய்கிறார்கள். மாதம் 9,900 ரூபாய் சம்பளம். அதில் 7,000 ரூபாய் ஊரிலுள்ள குடும்பத்துக்கு அனுப்புகிறார்கள். 5,000 ரூபாய் வாடகைக்கு எடுத்த வீட்டில் 11 பேர் தங்கியிருக்கின்றனர்.

தமிழர் அல்லாதவரை வெளியேற்ற வேண்டும் என்று சொல்வதைப் பற்றிக் கேட்டதும், “அதெல்லாம் தெரியாதவங்க பேசுற பேச்சு. எல்லாரும் சேர்ந்துதான் வேலை செய்யணும்” என்றார்கள்.

“பொழுதுபோக்காக தொலைக்காட்சி இல்லை, ஆனால் மொபைலில் படம் பார்ப்போம்” என்றார்கள். மொழி புரியாத மண்ணிலும் அவர்களது ஓட்டை செல்பேசி மூலம் திரைப்படங்களை பார்க்கும் வசதியை தொழில் நுட்பம் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

மேற்கு வங்க தொழிலாளர்
“அதெல்லாம் தெரியாதவங்க பேசுற பேச்சு. எல்லாரும் சேர்ந்துதான் வேலை செய்யணும்”

6 மாதத்துக்குப் பிறகு ஊருக்குப் போய் விட்டு திரும்பி வருவார்களாம். வேலையில் நிற்கச் சொல்லும் வரை வேலை செய்வார்களாம். அடுத்த வேலை என்ன, எங்கே போக வேண்டும் என்ற கவலையெல்லாம் அவர்களிடத்தில் இல்லை. எப்படியாவது பிழைத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கை கொஞ்சம் சலிப்புடனாவது இருந்தது.

எதிரில் லாட்ஜ் அல்லது மேன்சன் போலத் தெரிந்த கட்டிடத்துக்குள் போனோம். நூற்றுக்கணக்கான தேனீக்கள் தங்கியிருக்கும் தேன்கூடு போல தென்பட்டது அந்த கட்டிடம். ஒரு அறைக்குள் நுழைந்தோம். கொஞ்சம் நடுத்தர வயதான 2 பேர் ஸ்டவ்வில் குழம்பு வைக்க தாளித்துக் கொண்டிருந்தார்கள். அறை முழுவதும் கமறலாக இருந்தது. இளைஞர்கள் அல்லது சிறுவர்கள் என்று சொல்லக் கூடிய 3 பேர் மொபைலில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார்கள். 2 பேர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

தொழிலாளர் தங்குமிடம்
நூற்றுக்கணக்கான தேனீக்கள் தங்கியிருக்கும் தேன்கூடு

உத்தர பிரதேசத்தில் வாரணாசியிலிருந்து வந்தவர்கள் நிசான் நிறுவன கேன்டீனில் சமைக்கும் வேலை செய்கிறார்கள். சோடக்சோ என்ற நிறுவனம் இந்தப் பணிக்கு ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ளது. காலையில் 7 மணிக்கு புறப்பட்டு போனால், இரவுதான் திரும்புவார்களாம். ஞாயிற்றுக் கிழமை மட்டும் தேன்கூட்டு சிறையில் சமைத்து சாப்பிடுகிறார்கள்.

தேன்கூட்டு சிறை சமையல்
ஞாயிற்றுக் கிழமை மட்டும் தேன்கூட்டு சிறையில் சமையல்

“மாசம் 5,000 ரூபாய் தர்றாங்க, இங்க இந்த இடத்தில (10க்கு 15 அடி) 14 பேருக்கு தங்க இடம் கொடுத்திருக்காங்க. படுக்க ஒழுங்கான போர்வை கூட இல்ல பாருங்க” என்றார் ஒருவர்.

வாரணாசி தொழிலாளர்
“படுக்க ஒழுங்கான போர்வை கூட இல்ல”

தமிழினவாதிகள் பிற மாநில தொழிலாளர்களை எதிர்ப்பது பற்றிக் கேட்டதும் “போகவா சொல்றாங்க? நாங்க நாளைக்கே கிளம்பிர்றோம். வேலை செய்ற எங்களுக்கு எங்க போனாலும் பொழைப்பு உண்டு. ஆனா, இங்க உள்ளவங்கல்லாம் பட்டினி கெடக்க வேண்டியதுதான். எங்க மேனேஜர் 60,000 ரூபா சம்பளம் வாங்குறாண்ணா நாங்கள்ளாம் அவனுக்கு வேல செய்றதாலதான் வாங்குறான். நாங்க போயிட்டா அவன் என்ன செய்வான்.”

அப்போது குண்டாக ஒருவர் உள்ளே வந்தார். அவர்தான் இந்த கட்டிடத்துக்கு மேனேஜர். சோடக்சோவில் மேனேஜராக இருக்கிறார்.

உழைக்கும் கைகள்
“எங்க மேனேஜர் 60,000 ரூபா சம்பளம் வாங்குறாண்ணா நாங்கள்ளாம் அவனுக்கு வேல செய்றதாலதான் வாங்குறான்”

“நீங்க இப்படில்லாம் வந்து பேசக் கூடாது. கம்பெனில பெர்மிசன் வாங்கிகிட்டுதான் பேசணும்” என்றார். மும்பையில் பல ஆண்டுகள் வேலை செய்த இவருக்கு இந்தி நன்கு தெரியும்.

“நான் ஒரு தமிழன்ங்க, தமிழனுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன். ஆனா, இவங்க இல்லைன்னா நமக்கு வேலை நடக்காது. நம்ம ஆளுங்க இந்த மாதிரி வேலை செய்ய கிடைக்க மாட்டாங்க” என்றார். “தமிழ் ஆளுங்களை எடுக்க மாட்டேன்னா சொல்றோம். அவங்க யாரும் வேல கேட்டு வர்றதில்ல. போன வாரம் கூட பேப்பர்ல விளம்பரம் போட்டோம். யாரும் வரவில்லை. இவங்கதான் வர்றாங்க, அதான் எடுக்கிறோம்.” என்றார்.

“சோடெக்சோ நிறுவனம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தது. சென்னையில் மட்டும் 40,000 பேர் வேலை செய்கிறார்கள். பல பெரிய நிறுவனங்களுக்கு ஹாஸ்பிடாலிட்டி (அலுவலக பராமரிப்பு) சேவைகளை இந்நிறுவனம் செய்து வருகிறது” என்றார்.

இப்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு கான்டீன் காண்டிராக்ட் எடுக்கக் கூட சோடக்சோ என்ற பன்னாட்டு நிறுவனம் வந்து விட்டது. இந்நிறுவனத்தில் சென்னையில 40,000 பேர் வேலை செய்கிறார்கள். நிசானில் மட்டும் 500 பேர் என்று கூறினார். மலிவான விலைக்கு மனிதர்கள் எங்கே கிடைப்பார்கள் என்ற விவரங்கள், ஆவணங்கள், தொடர்புகள், எல்லாவற்றிலும் பன்னாட்டு நிறுவனங்கள் கச்சிதம். அவர்களுக்கு எவ்வளவு சம்பளம், எங்கே தங்க வைப்பது, அதற்கு உள்ளூர் தரகர்கள் என்று விரிந்திருக்கிறது இந்த வலைப்பின்னல். அதில் சிக்கிக் கொண்டு உழைப்பே வாழ்க்கை என ஓடுகிறார்கள் இந்த தொழிலாளிகள்.

ஆஸ்பெஸ்டாஸ் தங்குமிடங்கள்
தனி வீட்டு லட்சணம்

“இவர்கள் குடும்பத்தினருடன் இங்கே வீடெடுத்து வாழ முடியுமா” என்று அந்த மேனேஜரைக் கேட்டால் அது அவர்களது சொந்த பொறுப்பில் செய்யலாம் என்றார். அதுவும் கணவன், மனைவி இருவரும் அருகருகே வேலை செய்ய வேண்டும்.

இந்தக் கட்டிடத்துக்கு எதிரில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட வீடுகளுக்கு வெளியே சில இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். நிசான் கார் தொழிற்சாலையில் கான்கிரீட் தொட்டி கழுவும் வேலை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு ரூ 200 சம்பளம்.

“பொழுதுபோக்கெல்லாம் கிடையாது. வேலை முடிஞ்சு வந்து எல்லாரும் சேர்ந்து பேசிக் கொண்டிருப்போம், அப்புறம் படுத்து தூங்கி விடுவோம்” என்கிறார்கள். ஒரு டிவி பெட்டி அல்லது சினிமா பார்க்கும் வசதி கூட கிடையாது.

“மகாராஷ்டிராவில் ஏன சாதிக் கொடுமைகள் அதிகமாக இருக்கிறது” என்றால்,

மகாராஷ்டிரா தொழிலாளர்கள்
நிசான் கார் தொழிற்சாலையில் கான்கிரீட் தொட்டி கழுவும் வேலை

“நாங்க எல்லாம் பாபா சாஹிப் அம்பேத்காரின் பிள்ளைகள்” என்றார் ஒருவர். அவர்களில் ஒரு சிலர் தெலுங்கு பேசுபவர்கள், ஒரு சிலர் மராத்தி மொழி பேசுபவர்கள். சாப்பாடு சமைத்துக் கொள்கிறார்கள். மொத்தமாக மளிகை சாமான்கள் வாங்கிக் கொடுத்து சமைப்பதற்கு என்று 4 பெண்களை அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்.

ஒரு அறை/வீட்டில் இருந்த லாரி ஓட்டுனர்களிடம், “தமிழ்நாட்டுக்குள் அன்னியர்கள் வரக்கூடாது” என்ற முழக்கத்தைப் பற்றிக் கேட்டதும்,

வடஇந்திய தொழிலாளர்கள்
“நிசானும், நோக்கியாவும், சாம்சங்கும் தமிழனா என்ன?”

“பஞ்சாப்ல எத்தனை தமிழன் இருக்கிறான், அவங்களை எல்லாம் திருப்பி கூப்பிட்டுக்கலாமா?” என்றார் ஒருவர்.

“மனுசங்க எங்க வேணும்னாலும் போகலாம். வேலை செஞ்சு பொழைக்கத்தானே போறாங்க. அது போல பிசினஸ் மேனை போகக் கூடாதுன்னு சொல்லுவாங்களா. நிசானும், நோக்கியாவும், சாம்சங்கும் தமிழனா என்ன?” என்று ஒரே போடாக போட்டார் இன்னொருவர்.

தமிழினவாதிகளை விட வட இந்தியத் தொழிலாளிகள் முற்போக்கானவர்கள்தான். என்ன இருந்தாலும் தொழிலாளிகள் அல்லவா!

வட இந்தியத் தொழிலாளிகளுக்காக நடக்கும் ஞாயிற்றுக் கிழமை சந்தை தெரு.

ஞாயிற்றுக் கிழமை சந்தை தெரு
ஞாயிற்றுக் கிழமை சந்தை தெரு

செல்போன் ரீசார்ஜ் கடையில் வேலை செய்பவர் இடைவெளியில்லாமல் வேலையில் மூழ்கியிருந்தார். அடுத்தடுத்து யாராவது வந்து கொண்டிருந்தனர்.

“வட நாட்டுக் காரங்களுக்காகத்தான் நாங்க ஞாயிற்றுக் கிழமை கடையை தொறந்து வெச்சிருக்ககோம். 10 ரூபா, 20 ரூபான்னு அவங்க வசதிக்கேற்ப போடுவாங்க. சம்பளம் வந்த ஒரு வாரத்துக்கு கொஞ்சம் அதிகமா ரீசார்ஜ் பண்ணுவாங்க” என்றார்.

“இவங்க வந்ததால நமக்கு வேலை வாய்ப்புகள் இல்லாம போனது உண்மைதான். ஆனா இவங்க கிட்டதான குறைஞ்ச சம்பளம் கொடுத்து நிறைய வேலை வாங்க முடியும். சாப்பாடு போட்டு கொஞ்சம் பணமும் கையில கொடுத்திட்டா போதும். நம்ம ஆளுங்க அப்படி வேலை செய்ய மாட்டாங்க” என்றார்.

குறைந்த சம்பளத்தில் வேலை
“இவங்க கிட்டதான கொறைஞ்ச சம்பளம் கொடுத்து வேலை வாங்க முடியும்”

ஒரு ரெடிமேட் துணிகள் கடையில் விற்பனையாளராக 3 பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

“வடமாநிலத் தொழிலாளர்கள் வருவாங்க. நாங்களும் 1 வருஷத்தில அவங்களோட பேசி ஹிந்தி பேச கத்துக்கிட்டோம். உடனே எல்லாம் வாங்க மாட்டாங்க. நிறைய கேள்வி கேட்டு பேரம் பேசுவாங்க. அப்புறம்தான் வாங்குவாங்க. இதுவரைக்கும் எந்த தகராறும் வந்ததில்ல”

வட இந்தியத் தொழிலாளர்
“நாங்களும் 1 வருஷத்தில அவங்களோட பேசி ஹிந்தி பேச கத்துக்கிட்டோம்.”

“அவங்கள எப்படி சார் இங்க வரக்கூடாதுன்னு சொல்ல முடியும். நம்ம ஆளுங்க எவ்வளவு பேரு மத்த இடத்துக்கு போய் வேலை செய்றாங்க, வெளிநாடுகளுக்குப் போய் வேலை செய்றாங்க. அவங்களை எல்லாம் துரத்திட்டா ஒத்துப்போமா. அது போலத்தான் இதுவும். அவங்களே பாவம், ஊர்ல நல்லா இருந்தவங்க, இங்க வந்து கஷ்டப்படுறாங்க. அவங்களை போய் விரட்டணும்னு ஏன் சொல்றாங்க” என்றார்கள். ஆக தமிழ் பெண்களும் கூட வட இந்திய தொழிலாளிகளை புரிந்து கொள்கிறார்கள்.

அருகிலேயே காய்கறி/சிக்கன் கடை போட்டிருந்தார் சலாம் என்பவர். “எழுதுங்க சார், நல்ல ஃபோட்டோ புடிங்க. போன வருசம் இந்த கடைகள எல்லாம் ஹைவேஸ்காரன இடிச்ச போது வந்திருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும். நிறைய கடைகள்லாம் இருந்திச்சி, பின்னால வீடுங்க இருந்திச்சி. எல்லாத்தையும் பணம் கொடுத்து இடிக்க வைச்சான் அந்த ஆளு. அவன் அதிமுக.ல இருக்கான்னு சொல்றாங்க.

காய்கறிக் கடை
“எழுதுங்க சார், நல்ல ஃபோட்டோ புடிங்க”

நிறைய ரூம் கட்டி விட்டு ஒரு ஆளுக்கு 1000 ரூபான்னு சம்பாதிக்கிறான் சார். எங்க கடைகளை இடிக்கறதுக்கு முந்தின நாள்தான் சொன்னாங்க. 1.5 லட்சம் ரூபாய் சரக்கு எல்லாம் போச்சு. பின்னால பாருங்க எத்தனை வீடுகள இடிச்சிருப்பாங்க. ஆனா, இன்னும் ரோடு போடல. எதுக்காக இடிச்சானுங்க” என்றார்.

ஒரகடம் மார்க்கெட்
பல்வேறு இடங்களில் ஆளும் கட்சி புரோக்கர்கள் பிழைக்க வந்த மக்களை வைத்து கல்லா கட்டுகிறார்கள்.

இது போல பல்வேறு இடங்களில் ஆளும் கட்சி புரோக்கர்கள் பிழைக்க வந்த மக்களை வைத்து கல்லா கட்டுகிறார்கள். அது தனிக்கதை.

“வியாபாரமே கொறைஞ்சு போச்சு சார். ஒரு வருசத்துக்கு முன்ன நல்லா இருந்தது. இப்போ எல்லாம் திரும்பப் போய்ட்டாங்க. இந்த காண்டிராக்டருங்க ஒழுங்க பணம் கொடுக்கறது இல்லை. இவங்க சம்பாதிக்கிறதே 200 ரூபாதான். அதையும் கொடுக்காம ஏமாத்தியிருக்கானுங்க. எல்லாம் போயிட்டானுங்க.” என்றார் சலாம்.

ஒரு ஷேர் ஆட்டோ டிரைவர் “ஆவோ பாய், ஆவோ, ஜல்தி சலே ஜாயேங்கே, பைட்டோ” என்று இந்தியில் பொளந்து கட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் இந்தத் தொழிலாளர்களை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று சொல்பவர்களைப் பற்றி கேட்டால் “அவன் கெடக்குறான். ஏதோ பொழைப்புக்கு வந்திருக்காங்க, அவங்கள துரத்தி என்ன செய்யப் போறாங்க” என்று வண்டியை கிளப்பினார்.

வடஇந்திய தொழிலாளர்
“அவன் கெடக்குறான். ஏதோ பொழைப்புக்கு வந்திருக்காங்க, அவங்கள துரத்தி என்ன செய்யப் போறாங்க”

ஒரகடம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன். சலூன் கடை நடத்துகிறார்.

“அப்பா 40 வருசமா கடை நடத்தினார், அப்புறம் நான் நடத்துகிறேன்” என்றார்.

“நான் ஐடிஐ படிச்சேன் சார். வெல்டிங் மெக்கானிக். எம்எஃப்எல்-ல அப்ரண்டிசா 2 வருசம் வேலை செஞ்சேன். அதுக்கப்புறம் நம்ம தொழிலையே செய்யலாம்னு வந்துட்டேன்.” என்றார்.

வட இந்தியத் தொழிலாளர்கள்
“இந்த கம்பெனிங்க வந்ததில ஊருக்கு எந்த உபகாரமும் இல்ல, உபத்திரவம்தான் மிச்சம்”

“ஒரு சுனாமி போல வந்துச்சு சார், 2007-லேர்ந்து 4 வருசம் கொஞ்சம் வருமானம் வந்திச்சி. இப்போ பழையபடி ஆயிப் போச்சி. இந்த கம்பெனிங்க வந்ததில ஊருக்கு எந்த உபகாரமும் இல்ல, உபத்திரவம்தான் மிச்சம்”

“2 வருசமா எல்லாம் போச்சு. நோக்கிய கம்பெனி மூடினதுல 28,000 பேருக்கு வேலை போச்சி. பி.ஒய்.டி கம்பெனில லாக்-அவுட் பண்ணிட்டாங்க. இவங்களுக்கெல்லாம் வேற எந்த கம்பெனிலையும் வேலையும் கிடைக்காது.”

அஜய் போரா, ஜாது சைக்கியா இருவரும் அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள், இங்கு செக்யூரிட்டியாக வேலை செய்கிறார்கள்.
ரூ 91-க்கு செல் ரீசார்ஜ் செய்து கொண்டால் 2-3 படங்கள் டவுன்லோட் செய்து கொள்வார்களாம். “ஒருத்தரை இன்னொரு ஊருக்கு வரக் கூடாது என்றெல்லாம் சொல்ல முடியாது. எல்லாரும் சேர்ந்து வாழணும்.” என்றார்கள்.

அசாம் தொழிலாளர்கள்
“ஒருத்தரை இன்னொரு ஊருக்கு வரக் கூடாது என்றெல்லாம் சொல்ல முடியாது. எல்லாரும் சேர்ந்து வாழணும்

கடைத்தெரு தமிழ் வியாபாரிகள் “சஸ்தே மேம் பிக்தா ஹை, கரீத் லோ, ஆவோ பாய் ஆவோ” என்று இந்தியில் பொருட்களை வாங்க அழைப்பதும், “பேன்ட் 30 ரூபாய்க்கு தருவீங்களா. 50 ரூபாய்க்கு குறையாதா. சரி இந்தாங்க 50 ரூபாய்” என்று இந்தி தொழிலாளர்கள் தமிழில் பேரம் பேசுவதும் என்று களை கட்டியிருந்தது.

பேரம் பேசும் தொழிலாளர்கள்
“பேன்ட் 30 ரூபாய்க்கு தருவீங்களா. 50 ரூபாய்க்கு குறையாதா. சரி இந்தாங்க 50 ரூபாய்”

ஆந்திராவைச் சேர்ந்த சிவா ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்கிறார். பி.ஏ/பிஎட் படித்திருக்கிறார். வெளியில் கடைகளில் விலை அதிகம், அதுவும் சிவில் வேலைக்கு இது போன்ற உடைகள் போதும் என்று இங்கு வாங்க வந்திருக்கிறார்.

ஆந்திர தொழிலாளர்
“சிவில் வேலைக்கு இது போன்ற உடைகள் போதும்”

தண்ணீர் புகாத வாட்ச் வாங்க இரண்டு தொழிலாளர்கள் முயன்று கொண்டிருந்தார்கள். “செவன்டி ரூபீ வாட்ச், ஓகே” என்று அருகில் நின்ற நம்மிடம் ஆலோசனை கேட்டார்கள். இரண்டு பேரும் ஆளுக்கு ஒன்று வாங்கிக் கொண்டார்கள். “நேரத்துக்கு டூட்டிக்கு போகணுமே, அதுக்கு தேவைப்படுது” என்றார் ஒருவர். அவர் பெயர் புனிலால் சௌத்ரி. அவரது மகன் பிரபோத் சௌத்ரியும் இங்குதான் வேலை செய்கிறார்.

“எங்க ரூமுக்கு வாங்க, மொத்தம் 400 பேரு சேர்ந்து வந்திருக்கோம். எல்லாத்தையும் பார்த்து பேசுங்க” என்று அழைத்தார்கள்.

பீகார் தொழிலாளர்
“பொண்டாட்டி பிள்ளைங்களை விட்டுட்டு இருக்கறது எந்த மனுசனுக்கும் கஷ்டமானதுதான் சார்”

“பீகார்ல படகு ஓட்டியா இருந்தேன். இப்போ ஆத்துக்கு குறுக்கே 3 பாலம் கட்டிட்டாங்க, அதனால் படகு வேல இல்ல. அப்புறம் நோய்டா, லூதியானான்னு போய்ட்டு இப்போ இங்க இருக்கேன். அப்பல்லோ கம்பெனில துப்புரவு வேலைல இருந்தேன். இப்போ பக்கத்து கம்பெனில” என்றார்.

எந்த ஊர் என்று விசாரித்ததும் “நாங்க பீகார் பாகல்பூரை சேர்ந்தவங்க” என்றார்கள்.

ஓலைக் கூரை வேய்ந்த ஒற்றை அறை
ஓலைக் கூரை வேய்ந்த ஒற்றை அறை

பாகல்பூரில் முஸ்லீம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது குறித்து கேட்டதும் ஒருவர், “ஹிந்து முசல்மான் க்யா பாத் ஹை, ஐசா காட்கே தேகா தோ சப் கா கூன் ஏக் ஜைசா ஹீ ஹை” (இந்து, முசுலீம் எல்லாம் என்ன பேச்சு. இப்படி வெட்டி பார்த்தா எல்லா ரத்தமும் ஒரே மாதிரிதான்) என்றார்.

வயதானவர் ராமாயண கதை சொல்ல ஆரம்பித்தார். “கோயிலுக்கெல்லாம் போவீங்களா” என்று கேட்டதும்.

“இங்க கோயிலுக்கெல்லாம் எங்க சார் போறது. கம்பெனி, ரூம், தூக்கம் என்று போகிறது” என்றார்.

“வெளியூர்க்காரனுங்கன்னா எல்லாரும் ஏமாத்துறாங்க, ஒரு காய்ச்சல்னு டாக்டர்கிட்ட போனா நம்மள பார்த்ததுமே வெளியூர் காரன்னு தெரிஞ்சு, ஒரு ஊசி போட்டு 200 ரூபா வாங்குறாரு. அதுவே தமிழ்காரங்களா இருந்தா குறைச்சு வாங்குவாங்களா இருக்கும்”. மருத்துவக் கொள்ளை என்பது மொழி பேதம் பார்ப்பதில்லை என்று அவருக்கு தெரியவில்லை, பாவம்.

வடஇந்தியத் தொழிலாளர்கள்
இவர்களைத்தான் விரட்ட வேண்டுமென்கிறார்கள்.

மாடியில் ஓலைக் கூரை வேய்ந்த ஒற்றை அறைக்குள் அழைத்துச் சென்றார்கள். அதற்கு வாடகை மாதம் ரூ 3,000. 11 பேர் தங்கியிருக்கிறார்கள். வீட்டு சொந்தக்காரரின் சுமார் 7 வயதான குழந்தை மேலே வந்து பேசிக் கொண்டிருந்தது, இந்தியில்.
“எங்க கூட சேர்ந்து ஹிந்து கத்துக்கிச்சு” என்றார்கள்.

“கெரசின் ஒரு லிட்டருக்கு 55 ரூபாய்க்கு வாங்குறோம். அரிசி கிலோ 32 ரூபா. கீழ் வீட்டில ரேஷன் அரிசி கிலோ 11 ரூபாய்க்கு தருவாங்க. குடிக்க தண்ணீ கீழ பிடிச்சிப்போம்” என்றார்.

“தண்ணிய கொதிக்க வைச்சி குடிப்பீங்களா”

“55 ரூபாய கெரசின் வாங்கி சூடு பண்ணி எல்லாம் எப்படி குடிக்கிறது. அப்படியேதான் குடிக்கிறோம்”

வடஇந்தியத் தொழிலாளர்கள்
இவர்களைத்தான் விரட்ட வேண்டுமென்கிறார்கள் தமிழினவாதிகள்.

“பொண்டாட்டி பிள்ளைங்களை விட்டுட்டு இருக்கறது எந்த மனுசனுக்கும் கஷ்டமானதுதான் சார். தீவாளி அன்னைக்கு சிலர் ஊருக்கு போனாங்க. நாங்க போக முடியல. ஒண்ணும் செய்யலை. சாப்பிட்டுட்டு படுத்து தூங்கினோம், வேற என்ன செய்ய முடியும்”.

“சமைச்சுருவோம், சாப்பிட்டு விட்டு போங்க” என்று வற்புறுத்தினார்கள், அந்த தொழிலாளிகள்.

இவர்களைத்தான் விரட்ட வேண்டுமென்கிறார்கள் தமிழினவாதிகள்.

– வினவு செய்தியாளர் குழு

 1. மனதை நெகிழவைக்கும் கருத்து மற்றும் காட்சி உலா.

  நாம் எல்லோரும் இவ்வுலகின் சக உயிர்கள். மதம் மொழி போன்றவைகள் நமது தடைகள். தடைகளை விரைவில் தகர்க்க வேண்டும். பொது வழி போடவேண்டும்.

  // தமிழ் வியாபாரிகள் *** இந்தியில் பொருட்களை வாங்க அழைப்பதும்//
  //இந்தி தொழிலாளர்கள் தமிழில் பேரம் பேசுவதும்.//
  //7 வயதான குழந்தை மேலே வந்து பேசிக் கொண்டிருந்தது, இந்தியில்.//

  அருமையான பரிமாற்றங்கள்.

 2. வினவுக்கு புத்தி பேதலித்து விட்டதா??
  வினவின் ரசிகனான எனக்கு இந்தக் கட்டுரை எரிச்சல் ஊட்டுகிறது.

  வெளி மாநிலத்தவர் உள்ளே வரக் கூடாது என்று வினவிடம் சொன்னது யார்?
  தமிழர்கள் இவ்வாறு சொல்வதாக வெளி மாநில நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்??
  ஏன் இந்த சிண்டு முடியும் வேலை??

  வேலைவாய்ப்பில் தமிழனுக்கு முன்னுரிமைக் கொடு என்றுதானே கேட்கிறோம்.
  அதில் என்ன தவறு?
  பல நாடுகளிலும் உள்ள நடைமுறைதானே!!
  குறைந்த விலைக்கு அழைத்துவரும் நபர்களை சென்று நேர்காணல் எடுக்கலாமே!
  அவர்கள்தானே தமிழனையும், வெளிமாநில நண்பர்களையும் சுரண்டுகிறார்கள்.
  அது குறித்த விழிப்புணர்வை வெளியாட்களுக்கு ஊட்டலாமே!
  அவர்கள் கையிலும் சிவப்புக் கோடியைக் கொடுக்கலாமே!
  அதை விடுத்து ஏன் இந்த சிண்டு முடியும் வேலை?

  குறைந்த வேலைக்கு வெளியாட்கள் வருவதால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழர்கள் அல்ல, வெளியாட்கள்தான்.
  அவர்களின் குடும்பம், குழந்தைகளின் படிப்பு எல்லாம் கேள்விக்குறியாக நிற்கிறது..
  அவ்ர்கள் தங்கள் ஊரிலேயே நிம்மதியா வாழ்வு வாழ வழிவகை செய்யல்லாமே!
  வெளிமாநில நபர்கள் இங்கே வர என்ன காரணம்? அம்மாநிலங்களில் நிலவும் வறுமைதானே!
  அதனை நீக்க என்ன வழி சொல்கிறீர்??
  வெளிமாநிலங்களில் உள்ள சிவப்புக் கோடி ஆட்கள் என்ன செய்கிறார்கள்?
  இல்லாத இந்தியாவுக்கான புரட்சிக்கு ஆள் சேர்க்கிறார்களா??

  அளவுக்கு அதிகமான வெளியாட்கள் வரவால் தமிழ்நாட்டு தொழிலாளிகள் பாதிக்கப்படுவார்களே! அதற்கு என்ன பதில் இருக்குது?

  சீனாவில் வெளியாட்கள் வேலை பார்க்க அடையாள அட்டை வேண்டும்.
  அதுவும் நிரந்தர வேலை கிடையாது. பல கட்டுப்பாடுகள் உள்ளன.
  அந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்த சொல்லி உங்க சீனா பொதுவுடைமைவாதிகளிடம் சொல்லுங்க..

  அது என்ன மாயமோ, மர்மமோ தெரியல.
  தமிழன் தன்னை தமிழன் என்று சொல்லிக் கொண்டால் வினவுக்கு வயித்தெரிச்சல்!!
  ஒருவேளை இறுதிவரைக்கும் சாதி, மத சண்டை போட்டுக்கிட்டே இருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களா?

  வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது வெளியாட்களுக்கு புரியும்.
  ஆனால் இதுபோன்ற சிண்டு முடியும் வேலையை வினவு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

  • ”வினவின் ரசிகனான எனக்கு இந்தக் கட்டுரை எரிச்சல் ஊட்டுகிறது” —-
   ரசிகனாக இருக்காதீர்கள். மாணவனாக இருந்துபாருங்கள். எரிச்சல் போய்விடும்.

  • வாங்க குருநாதன்,இது மாதிரியான பதிவுகளில் முன்னல்லாம் தமிழினவாத வெறியை கக்குவதற்கு பெரியசாமி என்று ஒரு அண்ணன் வந்து சேருவாறு.அவர் இல்லாத குறையை தீக்க வந்துருக்கீங்க,வாங்க.

   வெளி மாநிலத்தவர் உள்ளே வரக் கூடாது என்று சொல்ரது யார்னு கோவப்படுறீங்க.தமிழ் தேசிய பேரியக்கத்தின் அண்ணன் மணியரசன் சொல்றது உங்களுக்கு தெரியாதா.இது பற்றி முன்னர் நடந்த விவாதம் உங்கள் பார்வைக்கு.

   https://www.vinavu.com/2012/07/16/tamil-fascists-3/#comment-65064

   https://www.vinavu.com/2012/07/16/tamil-fascists-3/#comment-65174

   பெரியசாமி இந்த விவாதத்திற்கு மவுனத்தையே விடையாக தந்தார்.நீங்களாவது ஏதாவது பதில் சொல்லுங்களேன்.

   https://www.vinavu.com/2012/08/22/raj-thackarey/#comment-66512

   • மணியரசனெள்ளாம் ஓரு பெரிய ஆளா?. தமிழ்நாட்ல அவர 99.99% யாருக்குமெ தெரியாது.

    தொழிளாலர்களுக்கு ஏது இணம், மொழி,நாடு? அணைவரும் தொழிளாளர்களே….!

  • அருமையான பதிலடி. இதை விடத் தெளிவாக இந்தக் கட்டுரைக்கு யாராலும் பதிலளிக்க முடியாது. நன்றி.

  • குரு நாதன் கருத்து சரியானது வெளி மாநில தொழிலாளிக்கு வீடு வாடகைக்கு குடுத்து அவங்க சாப்பிடிவதற்க்கு ரேசன் அரிசி வாங்கி குடுத்து இருக்கிற தமிழர்கள் நிறைய பேரை எனக்கு தெரியும் அதே நேரத்தில் கட்டிட வேலை ,மரவேலை போன்ற அடிப்படை தொழிலாளர்கள் வேலை சரியாக கிடைக்க வில்லை என்று புலம்புவதையும் கேட்டு இருக்கிறேன் எனது பக்கத்து வீட்டில் வெல்டர் வேலை பார்க்கும் ஒருவர் வேலை சரியாக கிடைக்க வில்லை என்பார், வெளி மாநில தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் வேலை செய்வதால் இவர்களின் பிழைப்பில் பெரிய அடி விழுந்து விட்டது என்றே சொல்லலாம் ,வெளி மாநில தொழிலாளர்களுக்கு தாங்கள் கொத்தடிமைகள் என்பதை புரிய வைத்து அவர்கள் மீதான உழைப்பு சுரண்டலுக்கு எதிராக போராட தூண்டலாம் அவர்களின் உழைப்பு சுரண்டலை அவர்கள் சார்ந்த மாநில அரசுகளின் கவன த்துக்கு கொண்டு போகும் பணியை வினவு செய்யலாம,வெரும் இனவாதம் பேசுவதால் தமிழர்களுக்கும் விடிவு கிடைக்காது அந்த வட மாநில தொழிலாளர்களுக்கும் விடிவு கிடைக்காது , பாதி சோசலிஸ நாடா இருந்த இந்தியாவ அரசியல் வாதிகளும் முதலாளிகளும் மீண்டும் அடிமை தேசமாக மாற்றி விட்டார்கள் வளர்ச்சி என்ற பெயரில் இனி இதில் இருந்து அவர்கள் திரும்ப மாட்டார்கள் மக்கள் தான் உணர வேண்டும் எதுக்கெதுக்கோ கருத்தரங்கு நட்த்தும் நீங்கள் வெளி மாநில ,தமிழ் நாட்டு தொழிலாளிகளுக்கு கருத்தரங்கு நடத்தி முதலாளிகளிம் மோசடியை புரிய வைக்கலாம்,

  • குருநாதன்ஸ்

   //வேலைவாய்ப்பில் தமிழனுக்கு முன்னுரிமைக் கொடு என்றுதானே கேட்கிறோம்.

   அய்யா உங்க தமிழ் பாசம் புல்லரிக்க வைக்கிறது. உங்க கேள்விக்கான பதில் இந்தக் கட்டுரையிலே இருக்கு.

   “நான் ஒரு தமிழன்ங்க, தமிழனுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன். ஆனா, இவங்க இல்லைன்னா நமக்கு வேலை நடக்காது. நம்ம ஆளுங்க இந்த மாதிரி வேலை செய்ய கிடைக்க மாட்டாங்க” என்றார். “தமிழ் ஆளுங்களை எடுக்க மாட்டேன்னா சொல்றோம். அவங்க யாரும் வேல கேட்டு வர்றதில்ல. போன வாரம் கூட பேப்பர்ல விளம்பரம் போட்டோம். யாரும் வரவில்லை. இவங்கதான் வர்றாங்க, அதான் எடுக்கிறோம்.” என்றார்.”

   சும்மா முன்னுரிமை குடுன்னா எதுல …கெவுருமெண்டு வேலையிலா? அமாம் இதை யாருக்கிட்ட கேக்கணும். அந்த கெவுருமெண்டுக்கிட்டதான? அதா உட்டுபுட்டு சும்மா முன்னுரை பின்னுரைன்னு பினாத்திகிட்டு.

  • குருநாதன்ஸ்

   //குறைந்த வேலைக்கு வெளியாட்கள் வருவதால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழர்கள் அல்ல, வெளியாட்கள்தான்.//

   //அளவுக்கு அதிகமான வெளியாட்கள் வரவால் தமிழ்நாட்டு தொழிலாளிகள் பாதிக்கப்படுவார்களே! அதற்கு என்ன பதில் இருக்குது?//

   ஏன் இப்படி?

   அடிப்படையைப் புரிந்துக் கொள்ளாமல் பொளந்துக் கட்டுவது எதற்காக. தமிழகத் தொழிலாளர்கள் துபாய், குவைத்துன்னு போவதும், வட இந்தியத் தொழிலாளர்கள் இங்கே வருவதும் ஒன்னும் நாடு புடிக்கவல்லவே. அவர்களுடைய சமூகப் பொருளாதாரம் இட்டவரம்பு அவர்களை வெளித் தள்ளுகிறது. இதுவொன்றும் அவர்கள் திட்டமிட்டு செய்வது அல்ல. இது நிகழ்ச்சிபோக்கு, உலகமயமாக்குதலுக்கு முன்பு எந்தத் தமிழன் இப்படி உலகின் மூலைகளுக்கு இப்படி ஓடினான். அதே போல தான் வட இந்தியத் தொழிலாளியும்.

   அப்புறம் இங்கே இருக்கிற பச்சை தமிழ் மென்பொருள் பொறியாளர்கள் எல்லாம் ஆன்சைட் போகனும்முன்னு தவியாய் தவிக்கிரார்கலாமே அவன்கிட்ட போய், நீங்க இப்படி அங்க போறனால அமெரிக்காவுல,இங்கிலாந்துல இருக்குற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கபடுதாமே அதனால நீங்க அமெரிக்க எல்லாம் போகக் கூடாதுன்னு சொல்லிப் பாருங்களே என்ன சொல்றாங்கன்னு கேட்டுச் சொல்லுங்க.

   சரி வினவுக் கதை தான் நமக்கு தெரிந்தது,. சும்மா சிவப்பு, கம்யுனிசம், தொழிலாளிகல்னு பினாத்திட்டு இருப்பாங்க. உங்களை மாதிரி தமிழ் மக்கள் மீது மிகவும் அக்கறைக் கொண்ட பச்சைத் தமிழர்கள், தமிழ் முதலாளிகளிடம் சென்று கொஞ்சம் கூலி உயர்வு கேட்டு வாங்கிக் கொடுக்கலாமே. இதனால் தமிழக தொழிலாளிகள் இங்கேயே வேலைப் பார்ப்பார்கள் இல்லையா. அதேப் போல தமிழ் தொழிலாளிகளிடமும் சென்று, என்ன இருந்தாலும் இது நம்மோட மண்ணு, இங்க தான் நாம பொறந்தோம். இந்த மண்ணிற்காக தான் நாம உழைக்கனும். இத விட்டுட்டு வெளிநாடு எல்லாம் போக கூடாது ன்னு அறிவுரை சொல்லலாமே.

   அப்புறம் இந்த இணைய சூரப் புலிகளும், இந்த தமிழ் தேசியம்னு பம்மாத்து காமிச்சுட்டு இருக்குற தமிழ் புலிகளும் தாம் இத கலந்து கட்டி அடிச்சிட்டு இருக்காங்க. ஹ்ம்ம் என்ன இருந்தாலும் அல்லல்படுகிரவர்கள் தொழிலாளர்கள் தானே. அவர்களுக்கு மொழி பேதம் கிடையாது, சாதி மதமும் அப்புறம் தாம். குறுக்கும் நெடுக்குமாய் நாட்டின் அடிக் கட்டுமானத்துக்காக தம்மைக் களப் பலியாக்கும் அவர்களுக்கு நிறம் ஒன்று தான் அதாங்க சிவப்பு நிறம்.

   நன்றி.

   • சிவப்பு அண்ணாச்சி அவர்கள் தமிழ்த்தேசியத்துக்கும், ‘தமிழ்ப்புலி’களுக்கும் எதிராகக் காட்டும் காழ்ப்புணர்வைப் பார்க்கும் போது, இவருக்கும் தமிழுக்கும், ஏன் தமிழர்களுக்கும் கூட பெரிய தொடர்பிருக்கும் போலத் தெரியவில்லை.

    //அடிப்படையைப் புரிந்துக் கொள்ளாமல் பொளந்துக் கட்டுவது எதற்காக. தமிழகத் தொழிலாளர்கள் துபாய், குவைத்துன்னு போவதும், வட இந்தியத் தொழிலாளர்கள் இங்கே வருவதும் ஒன்னும் நாடு புடிக்கவல்லவே. ///

    சிவப்பு அவர்களுக்கு அடிப்படையே புரியவில்லை என்பதைத் தான் மேலேயுள்ள அவரது கருத்துக் காட்டுகிறது. துபாய்க்கும், குவைத்துக்கும் போகும் தமிழர்கள் , நினைத்தவுடன், போட்டிருக்கும் உடுப்புடன், ஒரு வழிப்பயணச் சீட்டுடன் கூட்டம், கூட்டமாகக் கிழம்ப முடியாது மட்டுமல்ல, அவர்கள் அங்கு நினைத்தால் தங்கவும் முடியாது. ஆனால் இந்த வட இந்தியத் தொழிலாளர்களால் தமது குடும்பங்களையும், உறவினர்களையும், ஏன் அவர்களின் ஊரவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் நிரந்தரமாகத் தங்கவும் முடியும். அது தான் துபாய்க்கும், தமிழ்நாட்டுக்குமுள்ள வேறுபாடு. 🙂

    • அய்யா வியாசரே

     நீங்க இப்போ எந்த நாட்டுல இருக்கீங்கன்னுத் தெரியாது. ஆனா கண்டிப்பாக இலங்கைல இல்லன்னு தெரியுது. தமிழ்நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படாதீர். உம்மை விட இந்நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படவும் இங்கேயே இருந்து போராடவும் இங்கே ஆட்கள் இருக்கிறார்கள்.அப்புறம் இங்க வட இந்தியத் தொழிலாளர்கள் எதற்கு அழைத்துவரப்படுகிரார்கள் என்ற அடிப்படையே புரிந்துக் கொள்ளாமலோ அல்லது கண்டுகொள்ளாமலோ சும்மா வட இந்தியாக்காரன் இங்க வரான் சொம்ப எடுத்து உள்ள வைன்னு ஏன்யா பம்மாத்து காட்டுறீங்க.

     அவர்கள் எதற்காக இங்கு வருகிறார்கள், அவர்கள் தனதுக் குடும்பத்தை விட்டு விசிறியடிக்கபடுகிரார்களோ ஒழிய, வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற எண்ணத்திலோ அல்லது உல்லாசப் பயணம் மேற்கொள்ளவோ அல்ல. நீர் மட்டுமல்ல எந்த ராஜராஜ சோழன் நினைத்தாலும் அவர்கள் இங்கு வருவதை தடுக்க முடியாது. ராஜராஜனின் வாரிசுகள் மட்டும் சொகுசான வாழ்க்கைக்காக வெள்ளைக்காரனின் காலை நக்க சென்று விட்டதால், குறைந்தக் கூலிக்கு வட இந்தியத் தொழிலாளர்களை விட்டால் இங்கே ஆளில்லை. அதே வேலையை இங்கேயுள்ள தமிழ் தொழிலாளர்கள் ஏன் செய்யவில்லை? அவர்கள் ஏன் வெளிநாட்டிற்கு கட்டுமான வேலைக்காக செல்கிறார்கள்.ஒவ்வொரு முதலாளியும் தொழிலாளிக்கு சேவை மனப்பான்மையோட வேலைக் கொடுப்பதில்லை. இலாப நோக்கிற்காக தான் வேலைக் கொடுக்கிறான். வெளிநாட்டுக்காரன் அவன் நாட்டுத் தொழிலாளிக்கு வேலைக் கொடுப்பதைக் காட்டிலும் கீழைத் தேய நாடுகளின் தொழிலாளிகளுக்கு முன்னுரிமைக் கொடுக்கிறான். தன் நாட்டின் தொழிலாளிகளை விட இந்திய நாட்டுத் தொழிலாளிகள் எந்த விதத்தில் சிறந்தவர்கள்.ஒன்றேயொன்று தான் , குறைந்த கூலியும் ஏன் என்ற கேள்வி கேட்காமல் செய்யும் வேலையும் தான்.

     அப்புறம் உங்கக் கற்பனை மித மிஞ்சி உள்ளது. அவர்கள் இங்கே வருவார்களாம்.வீடு வாங்குவார்களாம். தொகுதிக் கேட்பார்களாம்.ஆட்சி அதிகாரத்தில் பங்குக் கேட்பார்களாம். கேட்பதற்கே கேவலமாய் இருக்கிறது. இதுல வேற தமிழர்களின் வெள்ளைத் தொலாசையாம். ராஜராஜனுக்கு இல்லாத வெள்ளைத் தொலாசையா இங்கு இருக்கும் தமிழர்களுக்கு உள்ளது.

     தமிழ்நாட்டு அரசுக்கு மனுப் போடுவது இருக்கட்டும், முதல்ல ராஜராஜனின் வாரிசுகள் எல்லாம் வெளிநாட்டுச் சுற்றுபயனத்தை முடித்துக் கொண்டு இங்கே வரட்டும்.வந்து நாங்களே கட்டடம் கட்டுறோம், பாலம் கட்டுரோம்னு சொல்லட்டும் அப்புறம் வட நாட்டுக்காரனைப் போக சொல்லலாம்.என்ன சரி தானே?

     நன்றி.

    • வியாசன்,

     கிட்டத்தட்ட தமிழ் தேசியம் இலங்கையில் அரசியல் ரீதியில் அழிவுற்ற நிலையில், அதற்க்கு அரசியல் முலாம் பூசிய வெள்ளாள தமிழ் தேசியவாதிகள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட, அதற்கு ராணுவ முலாம் பூசிய விடுதலைப் புலிகளும் அழிபட்டுப்போக, தமிழ் தேசியம் , தமிழ் புலிகள் மேலக் காழ்ப்புணர்வுக் கொள்ள யாதொருக் காரணமும் எனக்கில்லை. அப்புறம் தமிழ் தேசியத்திற்கு எதிராக நான் என்ன பேசினேன்? உங்கள் கருத்துக்கு எதிர்க் கருத்திட்டால் உடனே தமிழுக்கும் எனக்கும் சம்மந்தமில்லையா, நல்ல வேடிக்கை. ஈழத் தமிழ் மக்களுக்காக உலக நாடுகளின் ஆதரவைப் பெற வெளி நாட்டு பயணம் மேற்கொண்ட ராஜராஜனின் வாரிசுகள் இன்னும் ஈழம் திரும்பியபாடில்லை. பாவம், இவர்களின் அரசியலுக்கு இராணுவ முலம் பூசிய புலிகளோ மண்ணிற்குள். ஆனால் நான் அப்படியல்ல. இன்னும் இதே தமிழ்நாட்டுல தான் இருக்கேன். இங்கே தான் வேலை செய்கிறேன்.இந்த மக்களோட தான் உறவாடுகிறேன்.
     உங்களை விட தமிழ் மீதும்,தமிழ்நாட்டின் மீதும் உரிமைக் கொள்ள எனக்கு அனைத்து உரிமையும் உள்ளது.அப்புறம் என்னதான் உள்ளுக்குள்ள டெரர் மாதிரு இருந்தாலும் எல்லா புன்னூட்டத்திர்ற்கும் முற்றுப் புள்ளியாய் ஒரு சிரிப்பு போட்டுரீங்கள்ளே அது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.

     • தோழர் சிவப்பு,

      //தமிழ் தேசியம் இலங்கையில் அரசியல் ரீதியில் அழிவுற்ற நிலையில்…..அரசியல் முலாம் பூசிய வெள்ளாள தமிழ் தேசியவாதிகள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட, அதற்கு ராணுவ முலாம் பூசிய விடுதலைப் புலிகளும் அழிபட்டுப்போக, …..இந்த தமிழ் தேசியம்னு பம்மாத்து காமிச்சுட்டு இருக்குற தமிழ் புலிகளும்…..அப்புறம் தமிழ் தேசியத்திற்கு எதிராக நான் என்ன பேசினேன்?///

      மேலே கூறிய உங்களின் கருத்துக்களை மீண்டும் படித்துப் பாருங்கள், நான் உங்களுக்கும் தமிழுக்கும் தொடர்புண்டா என்று சந்தேகப்பட்டதன் காரணம் புரியும்.

      ///நான் அப்படியல்ல. இன்னும் இதே தமிழ்நாட்டுல தான் இருக்கேன். இங்கே தான் வேலை செய்கிறேன்.இந்த மக்களோட தான் உறவாடுகிறேன்.///

      தமிழர்களைத், தமிழை, தமிழ்நாட்டில் தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பதைக் கூட எதிர்க்கும், கூட இருந்தே தமிழர்களுக்குக் குழிபறிக்கும், பல லட்சக்கணக்கான தமிழெதிரிகள் தமிழைப் பேசிக்கொண்டே தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எல்லோரும் தமிழர்களாகி விடுவார்களா?

      //உங்களை விட தமிழ் மீதும்,தமிழ்நாட்டின் மீதும் உரிமைக் கொள்ள எனக்கு அனைத்து உரிமையும் உள்ளது.///

      உண்மையில் பார்க்கப்போனால், வட இந்தியக் கூலிகளுக்குள்ள உரிமைகள் கூட தமிழ்நாட்டில் எங்களுக்குக் கிடையாது. அது எங்களுக்கும் தெரியும். ஆனால் தமிழர்கள் என்ற முறையில், தமிழ்நாட்டின் மீது எங்களுக்குள்ள உணர்வு பூர்வமான, வரலாற்றுத் தொடர்புக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், எங்களுக்குமுள்ள இனரீதியான பாசத்துக்கும் தடையாக இருக்க முடியாது. நாங்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் மட்டும் தான், தமிழ்நாட்டில் தமிழர்களின் நலன்களில் எங்களின் கருத்தைத் தெரிவிக்கிறோம், உரிமையுடன் விமர்சிக்கிறோம், அதை எந்த இந்தியனும் தடுக்க முடியாது.

      //எல்லா புன்னூட்டத்திர்ற்கும் முற்றுப் புள்ளியாய் ஒரு சிரிப்பு போட்டுரீங்கள்ளே அது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.//

      இந்த தளத்திலேயே முதல் முறையாக சில நிமிடங்களுக்கு முன்னர், அம்பி அவர்களின், இலங்கைத்தமிழ் மண் சம்பந்தமான கருத்து மட்டும் தான், எனக்கு உண்மையில் எரிச்ச்சலையூட்டி, கொஞ்சம் உணர்ச்சி வசப்படும் படி செய்து விட்டது. அதைத் தவிர. உண்மையில் நான் இங்கு பதிலெழுதும் போது சிரித்துக் கொண்டு தான் எழுதுகிறேன், சிலரின் வாதங்கள் உண்மையில் சிரிப்பையூட்டுகின்றன. அதைக் குறிப்பது தான், இது 🙂

      • வியாசன் அய்யா,

       உங்க மூத்திரப் பரிசோதனை(உபயம்: தோழர் தென்றல்) அவ்ளோ தானா? உங்களை என்னமா நெனெச்சிட்டு இருந்தேன் கடைசியா இப்படி கவுத்துபுட்டீங்களே. உங்க மூத்திரச் சோதனைப் படி நான் தமிழன் தானுங்கோ. ஆனா இப்போ நீங்க சொன்ன சோதனை எனக்கு புச்சா இருக்கு. ஈழம் மலரா விட்டால் நான் தமிழன் இல்லையா. ராசாரசனை மதிக்காவிட்டால் நான் தமிழன் இல்லையா, தமிழ் புலிகளை மதிக்காவிட்டால் நான் தமிழன் இல்லையா. இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றுக் கூறி அம்மாவையே மறத் தமிழச்சி ஆக்கினார்களே, நான் என்ன ஈழம் அமைவதை தடுத்தேனா?அல்லது உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் தான் போனேனா? பிறந்தது முதல் ஒன்னு ரெண்டு தடவ பெங்களூருக்கு போயிருக்கேன். அவ்ளோ தான் அப்புறம் இங்க தான் இருக்கேன். ஆனால் உம்மைப் போன்ற தமிழ் தேசியம் பேசுபவர்களின் யோக்கியதை என்ன? தேசியம் பேசிக்கொண்டே வெள்ளையனிடம் சரணாகதி அடைந்து விட்டீர்கள். ஆனால் அதை சொன்னா என்னை தமிழனே இல்லை என்கிரீர்கள். ஈழம் மலர தற்சமயம் தங்கள் கைவசம் இருக்கும் திட்டங்கள் என்ன என்பதை ஐயம் திரிபுறத் தெரிவித்து விட்டால் நலம்.

       என்னைத் தாங்கள் தமிழன் இல்லை என்று கூறியதால் நான் ஆச்சரியப் படமாட்டேன். அதிர்சியடையவும் மாட்டேன். ஏனென்றால் ராஜராஜனின் வாரிசுகளுக்கு மட்டுமே அது நேந்துக் கொடுக்கப்படவில்லை என்பது எனக்குத் தெரியும். அப்புறம் தமிழ் நாட்டின் மீதான தங்களது பாசத்திற்கு எனது வந்தனங்கள். அப்புறம் அந்த வட இந்தியத் தொழிலாளர்களைப் பற்றிய டீலிங்க் இன்னும் முடியலையே.

       அவுங்களை உள்ள விடக் கூடாது, வருகையை கட்டுபடுத்த வேண்டும் , கண்காணிக்க வேண்டும், குடும்ப அட்டையைக் கொடுக்க கூடாதுன்னு சொன்னீர்கள் என்றால், முதலில் அவர்களுக்கான வாழ்வுரிமைக்காக தார்மீக ரீதியில் குரல் கொடுக்க வேண்டும். அப்புறம் இந்த தமிழ்நாட்டிற்கு ஒரு குண்டுமணியாவது உங்களால் ஏதாவது பயன் இருந்ததா என்பதையும் தாங்கள் விளக்க வேண்டும். அவர்கள் இல்லையென்றால் வளர்ச்சி என்ற பம்மாத்தும் இல்லை.அவர்களின் வருகை ஏன் உலகமயமாதலுக்குப் பின்பு அதிகரித்தது என்பதோடு சேர்த்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

       வட இந்தியத் தொழிலாளர்கள் ஒன்னும் இங்க வந்து குளுகுளுன்னு ஏ.சி அறையில உக்காந்து வேலை பார்க்கவில்லையே . அது மட்டுமலாமல் அவர்கள் இங்கு வருவது அவர்களே திட்டமிட்டு செய்வது அல்ல மாறாக தூக்கியடிக்கபடுகிரார்கள். இதையேத் தான் மகாராஷ்டிராவிலும் நடந்தது, அங்கு பால் தாக்கரே என்ற பாசிஸ்டு அவர்களை அடித்து விரட்டினான். இங்கே வியாசன் அங்கே பால் தாக்கரே. இங்கே தமிழன் அங்கெ மராட்டியன் வேறுபாடு அவ்ளோ தான்.

       நீங்கள் நினைத்தாலும் யார் நினைத்தாலும் அவர்கள் இந்தியாவெங்கும் விசிறியடிககபடுவதை தடுக்க இயலாது. ஏனென்றால் குறைந்தக் கூலிக்காக அவர்கள் தேவைப்படுகிறார்கள். நீங்க வேண்டுமென்றால் இங்கே வந்து அதைத் தடுக்க முயற்சி செய்து பாருங்கள்.

       அப்புறம் தாங்கள் சிரிப்பது, கருத்துத் தெரிவிப்பது போன்ற உரிமைகளை நான் மதிக்கிறேன்.

       நன்றி.

 3. போலி தமிழ் தேசியம் பேசும் சிமான், மணியரசன், வியாசன்! போன்றவர்களின் வடநாட்டு -தொழிலாளர் எதிர்ப்பு குரலுக்கு பதில் குரல் கொடுப்பாதாக நினைத்துக்கொண்டு இந்த கட்டுரையை எழுதிய வினவு சவுகார்பேட்டைக்கு பேயிருக்கலாமே ! வட இந்திய பானியாக்களின் முகதிரையை கிழித்து இருக்கலாமே ! அதை விட்டு விட்டு நம் தமிழ் மக்களிடம் ரேசன் அரிசியை rs 3 க்கு வாங்கி உண்ணும் அவல நிலையில் ,வறுமை நிலையில் உள்ள வடநாட்டு தொழிலாளர்களிடம் பேட்டி எடுக்கின்றேன் என்ற பெயரில் தமிழ் மக்களிடம் கொஞ்சம் நஞ்சம் உள்ள தமிழ் இன உணர்வையும் மட்டு படுத்தும் முறையில் வினவு அரசியல் சதி செய்கின்றது. வடநாட்டு தொழிலாளர்களிடம் பேட்டி எடுத்த போது தமிழ் மக்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்கின்றனர் என்ற கேள்வியை கேட்டு இருந்தால் தமிழரின் ஈர நெஞ்சம் வெளிப்பட்டு இருக்குமே ! வினவுக்கு வட இந்திய பானியாக்களை அம்பலபடுத்த , சவுகார்பேட்டை நுழைய அரசியல் மனோவலிமை இருக்கின்றதா ? வயிற்று பிழைப்புக்கு உழைக்கு வடநாட்டு -தொழிலாளர் floating population வகைமை சார்தவர்கள். தமிழ் நாட்டில் வீடு ,நிலம் ,தொழில் செய்யும் வகைப்ட்டவர்கள் அல்ல. வேலை ,கூலி ,ஆறு மாதம் கழித்து டாட்டா பாய்பாய் செல்லும் நிலையில் உள்ளவர்கள் இவர்கள். இவர்களால் தமிழ் சமுகத்துக்கு துயரம் ஏதும் ஏற்படுவது இல்லை. அதே சமையம் வட இந்திய பானியாக்களின் ஊடுறுவல் மிகவும் அச்சம் ஏற்படுத்துவதாக உள்ளது. தமிழ் மக்களின் சமுக பொருளாதார நிலைகளை சீர்குலைப்பதாக இருகின்றது .

  • வியாசன் ,

   தமிழ் நாட்டுக்கு வந்து உள்ள வட இந்திய தொழிலார்களை நாம் தமிழ் நாட்டில் தமிழர் உழைப்பில் பிழைத்து ஒட்டுண்ணியாக வாழும் பார்பன்ர்கலுடன் ஒப்பிட முடியாது. ஆனால் சவுகார்பேட்டையில் டேரா போட்டு தமிழ் மக்களை சுரண்டும் வட இந்திய பானியாக்களை வேண்டுமானால் தமிழ் நாட்டு பார்பனர்களை ஒப்பிடலாம். நான் முன்பே கூறியது போல வயிற்று பிழைப்புக்கு உழைக்கும் வடநாட்டு -தொழிலாளர் floating population வகைமை சார்தவர்கள். தமிழ் நாட்டில் வீடு ,நிலம் ,தொழில் செய்யும் வகைப்ட்டவர்கள் அல்ல. வேலை ,கூலி ,ஆறு மாதம் கழித்து டாட்டா பாய்பாய் சொல்லி செல்லும் நிலையில் உள்ளவர்கள் இவர்கள். ஆனால் தமிழ் நாட்டினுள் வட இந்திய பானியாக்களின் ஊடுறுவல் மிகவும் அச்சம் ஏற்படுத்துவதாக உள்ளது. அத்தகைய ஊடுருவல் தமிழ் மக்களின் சமுக பொருளாதார நிலைகளை சீர்குலைப்பதாக இருகின்றது. உங்கள் மாற்று அல்லது ஏற்பு கருத்துகளை எதிர்பார்கின்றேன்

   • நண்பர் தமிழ்-தாகம்,

    அப்புறம் நீங்க நம்ம தமிழ்குடிதாங்கியும், வட இந்தியத் தொழிலாளிகளிடம் மிக்க மதிப்பும் மரியாதையும், வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் சார்பாக அவர்களை கருத்தியல் ரீதியாக நொங்கி எடுக்கும் திருவாளர் வியசரிடமா கேட்கிறீர்கள். நீங்கள் யாரைப் பற்றிக் கருத்து கேட்கிறீர்கள்? தாங்களே சொல்வது போல இந்தியா முழுமைக்கும் ஓட்டச் சுரண்டிக் கொளுத்த பார்ப்பன பணியாக்களையா இல்லை தமது வியர்வையைக் கலந்து அடிக்கட்டுமான பணிகளில் ஈடுபடுத்தப்படும் அந்த தொழிலாளர்கலையா? முன்னவரைக் கூட வியாச பகவான் ஏற்றுக் கொள்வார் ஆனால் பின்னவர்களை ஹ்ம்ம். முடியவே முடியாது.

    நன்றி.

  • தமிழ்-தாகம்,

   தமிழருடைய மட்டுமல்ல எவருடைய ஈர உணர்விற்கும் மொழிக்கும் திழியும் சம்மந்தமில்லை. இல்லை த்மைலருடைய ஈர உணர்வை வினவுப் பதிவு செய்யவில்லை என்று தாங்கள் கருதினால், பின்வரும் ஒரு வரியே அதற்கு பதில் சொல்கிறது,,

   //“அவங்கள எப்படி சார் இங்க வரக்கூடாதுன்னு சொல்ல முடியும். நம்ம ஆளுங்க எவ்வளவு பேரு மத்த இடத்துக்கு போய் வேலை செய்றாங்க, வெளிநாடுகளுக்குப் போய் வேலை செய்றாங்க. அவங்களை எல்லாம் துரத்திட்டா ஒத்துப்போமா. அது போலத்தான் இதுவும். அவங்களே பாவம், ஊர்ல நல்லா இருந்தவங்க, இங்க வந்து கஷ்டப்படுறாங்க. அவங்களை போய் விரட்டணும்னு ஏன் சொல்றாங்க” என்றார்கள். ஆக தமிழ் பெண்களும் கூட வட இந்திய தொழிலாளிகளை புரிந்து கொள்கிறார்கள்.//

   வினவில் தொழிலாளர்களைப் பற்றி ஏற்க்கனவே பல கட்டுரைகள் வந்து இருந்தாலும், குறிப்பாக வட இந்தியத் தொழிலாளர்களை நெருங்கி நாடிப் பிடித்து பார்க்கும் தனித்துவமானக் கட்டுரை இது தான். இப்படி வட இந்தியத் தொழிலாளர்களைப் பற்றிய கட்டுரையில் செட்டுகளைக் கேள்விக் கேட்டு கிழிக்க சொல்வது முட்டாள்தனமானது.

   கட்டுரைத் தெளிவாக வட இந்தியத் தொழிலாளர்கள் பற்றி தமிழினவாதிளின் கருத்திற்கு ஒரு பதிலடி தானேயொழிய சேட்டுகளைப் பற்றியது அல்ல.

   நன்றி.

   • நண்பர் சிகப்பு ,

    முட்டாள் தனமாக சிந்திப்பது யார் என்று பார்ப்போமா சிகப்பு ?

    ஒரு மொழியும் அதன் ஊடாக வளரும் ஒரு மண்ணின் நாகரிகமும் மனிதனை சொழுமை படுத்தாது என்றா சொல்ல வரீங்க ? திரு லெனின் அவர்கள் தன் ருஷ்ய மொழியை சொர்கத்துக்கு இணையாக உருவக படுத்திய நிகழ்வை நினைத்து பார்க்க எல்லாம் நண்பர் சிகப்புக்குநேரமில்லாமல் இருப்பது ஏன் ?

    பொத்தாம் பொதுவாக யாரை தமிழினவாதிகள் என்று நீங்களும் ,வினவும் கூருகின்றிர்கள் ? சீமானா ? மணியரசனா ? தியாகுவா ? எதையெல்லாம் இக் கட்டுரை அம்ப்பல படுத்தாமல் பொத்தாம் பொதுவாக பேசுவது என்பது யாருக்கு பயன் ? தமிழினவாதிககளை காச்சு காச்சு என்று காட்டும் இக்கட்டுரை தமிழின எதிரிகளான [பார்பன ,பானியாக்களை],ஏன் இந்தியாவின் பல்வேறு பட்ட தேசிய இனங்களின் ஊடாக ஊடுருவி , அத் தேசிய இனங்களின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பார்பன ,பானியாக்களை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது சரியா ? வினவின் நோக்கம் இனவாதத்தை அம்பல்ப்டுதுவது என்றால் அதே வினவுக்கு இந்திய தேசிய இனங்களின் மீது பொருளாதார மோலன்மை செய்யும் பார்பன ,பானியாக்களை அம்பல படுத்துவதும் தானே நோக்கமாக இருக்க வேண்டும்.?

    இப்போது முட்டாள் தனமாக சிந்தித்தது யார் என்று விளங்கியதா சிகப்பு ?

    • நண்பர் தமிழ்-தாகம்,

     மீண்டும் தவறாக புரிந்துக் கொள்கிறீர்கள்.
     கிழே உள்ள வரிகள் தான் வினவுக் குழு அவர்களின் ஆய்வின் சாரமாகத் தொகுத்து அளித்து உள்ளனர்.

     //ஆந்திரா, மேற்கு வங்கம், பீகார், உத்தர பிரதேசம் என்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சொந்த ஊரில் வாழ்வாதாரங்களை தொலைத்த உழைக்கும் மக்கள் இங்கு வந்து சேர்கின்றனர். இந்த வடமாநிலத் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி, தமிழினவாதம் குறித்து என்ன கருதுகிறார்கள் இவற்றை அறிய ஒரகடத்தில் இயங்கும் ஞாயிற்றுக் கிழமை சந்தையில் பொருள் வாங்க வரும் தொழிலாளர்களிடமும், வியாபாரிகளிடமும் பேசி தகவல் திரட்டினோம்//

     உங்களுக்கு என்னப் பிரச்சினை. அவர்கள் தெளிவாக கூறி விட்டார்கள் இந்த ஆய்வு எதற்காக என்று.

     உங்கள் பிரச்சினை தமிழ் மக்