ஆசிய சிங்கங்கள் குஜராத் மாநிலத்தின் கிர் வனப்பகுதிகளில் மட்டுமே. இவற்றின் எண்ணிக்கை 600க்குள் இருக்கலாம். சிங்கங்கள் வாழ்வதற்கேற்ப உயிர்ச்சூழல் உள்ள மத்திய பிரதேச மாநில வனப்பகுதியில் வளர்க்க, சில ஆண்டுகள் முன் முயற்சி நடந்தது. ‘கிர் சிங்கங்கள் குஜராத்தின் பெருமை’ எனக்கூறி அப்போது அம்மாநில முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி மறுத்துவிட்டார். 2013-ஆம் ஆண்டு நீதிமன்றம் தலையிட்டு சிங்கங்களை மத்திய பிரதேசம் கொண்டு செல்ல அனுமதித்தது. ம.பி.யில் ஆட்சி மாற்றம் நடந்ததும் குஜராத் சிங்கங்களை கொண்டு செல்ல இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குஜராத்தின் பெருமை மிகு சிங்கங்களை காத்த நவாப்!
வரலாற்றின்படி ஆசிய நிலப்பரப்பில் சிங்கங்களே இல்லை என்கிறார் ரோமிலா தாப்பர். ஆசிய நிலப்பரப்புக்குள் படையெடுத்து வந்தவர்களால் கொண்டுவரப்பட்டவை என்பது அவருடைய வாதம். அதன்பின், மொகலாய மன்னர்கள் சிங்கங்களையும் சிறுத்தைகளையும் (சிவிங்கிப் புலி அல்ல) செல்லப்பிராணிகளாக தங்கள் ஆட்சிக்குட்பட்ட வனப்பகுதிகளில் வளர்த்திருக்கிறார்கள். அக்பர் 9000 சிறுத்தைகளை வளர்த்ததாக மொகலாய வரலாற்று அறிஞர் யூசுப் அன்சாரி கூறுகிறார். வளர்த்த செல்லப்பிராணிகளை பொழுதுபோக்குக்காக வேட்டையாடி தீர்த்தார்கள். 18-ஆம் நூற்றாண்டில் ஜுனாகட்டின் நவாப்-ஆக இருந்த முகமது ரசூல் கஞ்சி-2, தனது பெருமைமிகு சிங்கங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கருதி, கிர் வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியான அறிவித்தார். ஒரு நவாப்பின் முயற்சியால் காப்பாற்றப்பட்ட சிங்கங்களை தனது மாநிலத்துக்கு மட்டுமே உரிய பெருமை என குறுகிய மனப்பான்மையுடன் வெறுப்பரசியல் செய்யும் இந்துத்துவ கும்பல் பார்க்கிறது. விளைவுகள் இன்று மோசமாகியுள்ளன. கிர் சிங்கங்கள் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி கொத்தாக பலியாகியுள்ளன. கடந்த மாதம் மட்டும் 23 சிங்கங்கள் பலியாகியுள்ளன.
குஜராத் அரசின் அலட்சித்தால் பலியான சிங்கங்கள்!
கடந்த செப்டம்பர் மாதம் நடுவில் 10 சிங்கங்கள் இறந்தபோது, குஜராத் அரசு சிங்கங்களின் இறப்புக்கு எல்லை சார்ந்த பிரச்சினையே காரணம் என்றார்கள். அக்டோபர் 1-ஆம் தேதி இந்த இறப்புகள் இரண்டு மடங்கானபோது, இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளானது. ஆசிய சிங்கங்களை அழிவிலிருந்து காப்பாற்றியதாக தம்பட்டம் அடித்துக்கொண்ட குஜராத் அரசு, அதே சிங்கங்களில் கொத்தான மரணங்களுக்கு என்ன காரணம் என தெரியாமல் விழித்தது. அறிவியலாளர் குஜராத் அரசு பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டுகிறார்கள்.
“எல்லை பிரச்சினை காரணமாகத்தான் சிங்கங்கள் இறந்ததாக முதலில் எங்களுக்குச் சொன்னார்கள். பொதுவாக எல்லை பிரச்சினை தொடர்பாக எழும் சண்டையில் குட்டிகளும், பருவத்தில் உள்ள ஆண் சிங்கங்களும் கொல்லப்படும். ஆனால், இங்கே பெண் சிங்கங்கள் இறந்துள்ளன. சிங்கங்கள் ஏன் கொல்லப்பட்டன என்கிற உண்மையை மறைக்கத்தான் பலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது, அறிவியல்பூர்வமாக இந்த பிரச்சினையை தாங்கள் அணுகவில்லை என ஒப்புக்கொள்கிறார்கள்” என்கிறார் உயிரியலாளர் ரவி செல்லம்.
படிக்க:
♦ விலங்குகளில் செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பம் – ஒரு வதையா ?
♦ நீலகிரி : வனவிலங்குகளை பாதுகாப்பது எப்படி ?
‘கேனைன் டிஸ்டம்பர் வைரஸ்’ என்ற தொற்று தாக்கி உயிரிழந்த 7 சிங்கங்களின் அழுகிய உடலைக் கண்ட பிறகே, இந்த விவகாரம் குஜராத் வனத்துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் கண்கள் மற்றும் மூக்கில் நீர் ஒழுகும். இருமலும் இருக்கும். கண்காணிப்பின் மூலம் வன விலங்குகளின் நோய்க்கூறுகளை கண்டறிய முடியும். கடந்த பல வருடங்களாக கிர் வனப்பாதுகாப்பு பணியாளர்கள் ஒருவர்கூட, வனமேலாண்மை பயிற்சிக்கு அனுப்பப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. சிங்கங்களை காப்பாற்ற கிர் வனப்பகுதிக்குள் போதுமான மருத்துவ வசதிகள் எதுவும் இல்லை என்கிறார் வனப்பணியாளர் ஒருவர். அடிப்படையான மருத்துவ வசதிகள் இல்லை; வனப்பாதுகாவலர்களுக்கு பயிற்சி தரப்படவில்லை. ஆனால், கிடைக்கிற சந்தர்ப்பத்திலெல்லாம் பிரதமர் மோடி, தனது பெருமைமிகு சிங்கங்கள் குறித்து பேசுகிறார்.
“600 சிங்கங்கள் மட்டுமே உள்ள வனப்பகுதியை கண்காணிப்பது அவ்வளவு கடினமான பணி அல்ல. ஆனால் கிர் வனப்பகுதியில் கண்காணிப்புகள் முறையாக இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. உண்மையில் அறிவியல்பூர்மான கண்காணிப்பு தேவை. அது இப்போதைக்கு சாத்தியமற்றதாகவே தெரிகிறது” என்கிறார் விலங்கின சூழலியலாளர் அபி.டி. வனக்.
படிக்க:
♦ குஜராத் பாசிச மோடியை தேர்வு செய்தது ஏன்?
♦ குஜராத் : இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்தக்கூடியவர்கள் யார் ?
சர்வதேச கவனம் பெற்று சர்ச்சைகள் எழுந்தநிலையில், மீதியுள்ள சிங்கங்களை காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது குஜராத் அரசு. நோய் தாக்குதலுக்குள்ளான சிங்கங்களிடமிருந்து நோய்க்கூறின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. உண்மையில் கிர் சிங்கங்களுக்கு வைரஸ் மட்டும் அச்சுறுத்தலாக இல்லை என்கிறது தி இந்து ஆங்கில இதழில் வந்த சிறப்புக் கட்டுரை.
சிங்கங்களை அச்சுறுத்தும் மிதமிஞ்சிய சுற்றுலா மற்றும் சுரங்க நடவடிக்கைகள்!
குஜராத் அரசு கிர் வனப்பகுதியை குறைக்க முயற்சித்தபோது, பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் முதல் கிர் வனப்பகுதிக்கு அருகே சுண்ணாம்புக்கல் எடுக்க அனுமதி வழங்கியிருக்கிறது குஜராத் அரசு. இப்போது நடந்துகொண்டிருப்பதை அதிகாரத்தில் இருக்கிறவர்கள் தருவித்தவையே என்கிறார் வன அதிகாரி ஒருவர். சிங்கங்கள் குறித்தோ வனப்பாதுகாப்பு குறித்தோ குஜராத் அரசுக்கு ஒரு அக்கறையும் இல்லை. துணை வனப் பாதுக்காப்பாளர் சாசன் கிர் ராம் ரட்டன் நல்லா என்ற அதிகாரி, கிர் வனத்துக்குள் இருக்கும் சிங்கோட அணையை ஆழப்படுத்தும் பணியை அனுமதிக்கவில்லை. குஜராத் முதல்வர் வனப்பகுதியில் இருந்த கோயில் வழிபாடு நடத்தவிருந்ததையும் இவர் அனுமதிக்கவில்லை. இதனால் கடந்த மே மாதம் பணிமாற்றம் செய்யப்பட்டார். முரண்பாடாக, சிங்கங்களின் கொத்தான மரணத்துக்குப் பின், மீண்டும் இந்த இடத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
கிர் வனப்பகுதியை ஒட்டி டஜனுக்கு மேலான ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள் முளைத்துள்ளன. சட்டவிரோதமாக சிங்கங்களை வைத்து காட்சிகளை நடத்துவதும் அதிகமாக நடக்கிறது. சுற்றுலா வருகிறவர்கள் சிங்கங்களுக்கு கறித்துண்டுகளை அளித்து வேடிக்கை பார்ப்பதும், அதை வீடியோவாக சமூக ஊடகங்களில் பகிர்வது நடக்கிறது. போதிய கண்காணிப்பு இல்லாததாலேயே இத்தகைய அத்துமீறல்கள் நடப்பதாக உயிரிலாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
படிக்க:
♦ சுற்றுச் சூழல் : மோடி பாணி வளர்ச்சியின் முதல் பலி !
♦ பேரிடர் மேலாண்மை : உலகமே ! க்யூபாவிடம் கற்றுக் கொள் !
23 சிங்கங்கள் இறந்துவிட்டன; 21 சிங்கங்கள் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மங்குனி இந்துத்துவ முதலமைச்சர் விஜய் ரூபானி, நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், கிர் வனப்பகுதியில் முழுமையான பாதுகாப்பில் சிங்கங்கள் இருக்கின்றன. அவற்றை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய தேவை இல்லை என்கிறார்.
ஆனால், நோய்தாக்குதல் இல்லாத ஆரோக்கியமான நிலையில் உள்ள சிங்கங்களை வேறு பொருத்தமான இடத்துக்கு அனுப்ப வேண்டும் என்கிறது இந்திய மருத்துவ கவுன்சில். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிய சிங்கங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ரவி செல்லம், “கிர் சிங்கங்களை வேறு இடத்தில் வளர்க்க அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்குவது குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது. அதோடு, அறிவியல் துறை சார்ந்தவர்களை சுதந்திரமாக பணியாற்றவும் குஜராத் அரசு அனுமதிக்க வேண்டும்” என்கிறார்.
தனது மாநிலத்தின் பெருமையென வாய்ச்சவடால் அடிக்கும் மோடி – பா.ஜ.க. கும்பலின் நிலை அழுகி நாறிக்கொண்டிருக்கிறது. மதவாதிகளால் எந்த பெருமையையும் காப்பாற்ற முடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
செய்தி ஆதாரங்கள்: