Friday, September 13, 2024
முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்பேரிடர் மேலாண்மை : உலகமே ! க்யூபாவிடம் கற்றுக் கொள் !

பேரிடர் மேலாண்மை : உலகமே ! க்யூபாவிடம் கற்றுக் கொள் !

-

டந்த ஆண்டு  சூறாவளி மேத்யூ கியூபாவை தாக்கிய பொழுது, நான்கு கியூபர்கள் இறந்து போனார்கள். அதே வகையிலான நான்காம் எண் சூறாவளி  ஹைதியைக் கடந்த பொழுது அங்கு இறப்பு எண்ணிக்கை 1,000 -த்தை தாண்டியது.

ஹைதியின் வெறுமையான உள்கட்டமைப்புக்கும், கியூபாவின் சூறாவளிக்கு எதிரான தயார்ப்படுத்தலுக்குமான பெரும் வேறுபாட்டை இது பிரதிபலிக்கிறது. பேரழிவு மேலாண்மையின் தரம் பல உயிர்களை காக்க முடியுமென்பது, வெள்ளியன்று இர்மா சூறாவளி கியூபாவின் கரையை கடக்கும் பொழுது மீண்டும் உறுதியானது.

மேத்யூ புயலின் கோரத்தாண்டவம்

கியூபத் தீவு நெடுகிலும் ‘மேத்யூ’ புயலால் நாசமாக்கப்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சாலைகள் இன்னமும் புணரமைக்கபட்டு கொண்டிருக்கும் சூழலில், உடமைகள் இழப்பே குறிப்பிடத்தக்க அளவில் இருக்குமென எதிர்பார்க்கப்பட்டாலும், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் இறப்பு விகிதம் கியூபாவின் சூறாவளி ஆயத்த நடவடிக்கைகளால் குறைவாக இருக்குமென எதிர்பார்க்கபட்டது.

அமெரிக்க பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் அயலகக் கொள்கைகளின் பேராசிரியர் வில்லியம் லியோகிராண்டே கூறுகையில், “பொது சுகாதாரத்தின் பல்வேறு துறைகளைப் போலவே, மீட்பைக் காட்டிலும் தடுப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கே கியூபர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ஒருபுறம், உங்களுக்கு சமூக ஒற்றுமை உணர்வு இருக்க வேண்டும். அது பல ஆண்டுகாலமாக அந்த அரசாங்கமே ஊட்டிவளர்த்த விசயங்களில் ஒன்று. மற்றொன்று,  மக்களுக்கு அணுக்கமான மட்டம் வரையில் தமது உறுப்புகளைப் பரப்பியுள்ள, சிறப்பாக முறைமைப்படுத்தப்பட்ட ஒரு ஒருமித்த அரசு  இருக்கவேண்டும்” என்று கூறுகிறார்.

வெள்ளிக்கிழமை வீசிய சூறாவளிக்கு,  அதனைப் பற்றிய தகவல்களை அது கடக்கும் பாதையிலுள்ள மக்களுக்குப் பரப்பும் நடவடிக்கையை உள்ளடக்கிய, தனது முதல் கட்ட நடவடிக்கையை செவ்வாயன்றே, கியூபா தொடங்கியது.

மேத்யூ சூறாவளி குறித்து க்யூபா வெளியிட்ட எச்சரிக்கை படம்

சூறாவளி முன்கணிப்பில், துல்லியத்திற்குப் புகழ்பெற்ற அதன் வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தை, தொடரச்செய்ய மக்களை ஊக்குவிக்கிறது கியூப அரசாங்கம்.

தகவல்களே, சூறாவளிக்கு எதிரான கியூபாவின் தயார்நிலைக்கு முக்கிய காரணியாகும். குழந்தைகளுக்கு ஆரம்பப் பள்ளியிலிருந்தே நடத்தப்படும் ஆபத்து காலங்களில் வெளியேறும் பயிற்சியானது, மேல்நிலைப் பள்ளி வரை தொடர்கிறது. “அம்மாணவர்கள் அருகிலுள்ள பலவீனமான மரங்கள் மற்றும் இதர ஆபத்துக்களையும் கண்காணிக்கின்றார்கள்” என நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறுகிறது.

கியூபர்கள் இந்த தகவல்களை எடுத்து கொண்டு, சூறாவளியின் போது குடிமை பாதுகாப்பு அமைப்பின் நீட்டிப்பாக அதனை பிரயோகிக்கின்றனர். பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட பொது நிறுவனங்களின் தலைவர்கள்,  ஆபத்துக் காலங்களில் அந்தந்தப் பகுதி மக்களின் அவசர வெளியேற்றுதல் மற்றும்  பாதுகாப்பிற்கு உதவிட பொறுப்பெடுத்து கொள்கின்றனர்.

“அதனால் குடிமைப் பாதுகாப்பு அமைப்பைத் திரட்ட தகவல் வரும்பொழுது, அதற்கான பொறுப்புள்ள நபர்கள் ஒவ்வொரு இடத்திலும் அக்கம்பக்கமெங்கும் இருக்கின்றனர். அண்டை, அயலாரை நகர்வதற்கு தயார்ப்படுத்துவதற்கான பொறுப்பையும்  அவர்கள் அறிவார்கள். அவர்கள் விரிவான வெளியேற்றும் மையங்களை அமைக்கின்றனர், பதினோரு மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில், அவர்களால் ஒரு மில்லியன் மக்கள் வரை வெளியேற்ற முடியும்”.என்று லியோ கிராண்டே கூறுகிறார்.

இர்மா புயலின் சேதங்கள்

இந்த அளவு தயார்ப்படுத்தல் மற்றும் இடப்பெயர்வை அமெரிக்காவுடன் ஒப்பிடுங்கள். சூறாவளியில் மக்கள் பலியாவதில்,  கியூபர்களை விட அமெரிக்கர்கள்  பதினைந்து மடங்கு அபாயம் அதிகம் (சர்வதேச கொள்கை மையத்தின் அறிக்கையின் படி) என்பது ஏனென்று வெளிப்படையாகத் தெரியும். கியூபாவின் தகவல் மற்றும் அமைப்புமுறை, திறன்மிக்க வெளியேற்றத்திற்குப் பங்களிக்கிறது. மேலும் வெளியேற்றும் நடவடிக்கையின் போது அரசாங்கம் மக்களுக்கு வெளியேற்று நிலையங்களில் தங்குவதற்கான வசதியளிப்பதுடன், அவர்களது பொருட்கள் மற்றும் வளர்ப்புப் பிராணிகளுக்கும் இடமளிக்கிறது.

அமெரிக்காவில், உடைமைகள் சேதாரம் மற்றும் கொள்ளை குறித்த பயமும், வெளியேற்றும் உத்தரவை அமலாக்குவதில் இருக்கும் தொய்வும்தான்,  கணிசமான அளவு மனித மற்றும் விலங்குகளின் உயிரிழப்பிற்குக் காரணமாகிறது.

“ஒரு வகையில் இது ஒரு உளவியல் சார்ந்த விசயம், ஆனால் மக்கள் இதன் விளைவாக தங்கள் வாழ்வை இழக்க  விரும்பவில்லை”

ஆனால், இந்த மனநிலையும்,  சூறாவளியின் அபாயங்கள் குறித்த பொதுக் கல்விக் குறைபாடும், ஒரு பெரும் புயலின் சமயத்தில்  அமெரிக்க மக்களை அபாயத்திலேயே விட்டுச் செல்லும்.

மொத்தத்தில், அமெரிக்காவில் வெளியேற்றுதல் நடவடிக்கையானது சுயவிருப்பம் சார்ந்ததே. ஆனால் இந்த தன்னுரிமை, நாம் ஏற்கனவே இந்த ஆண்டு பார்த்தது போல் மிக அதிகமான மனித இழப்புகளுடன் சேர்ந்து வருகிறது.
பெரும் மக்கள் தொகைக்கான  முறையான வெளியேற்றுதல் திட்டங்களில்லாவிடில், கடந்த மாதம் ஹூஸ்டன் அனுபவித்த நிகழ்வுகளையே, நீங்களும் சந்திப்பீர்கள். அந்நகரில், தானே முன்வந்தோ அல்லது கட்டாயத்தின் அடிப்படையிலோ வெளியேற்றும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இதனால் பலரும் வெள்ள அபாயம் இருப்பினும்,  தங்க முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டாலும், குறைந்தபட்சம் 70 பேர் புயலால் கொல்லப்பட்டனர்.
மொழிபெயர்ப்பு : சீனிவாசன்

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. ஆனால் பிபிசி யில் கியூபா அரசாங்கம் மிகவும் திண்டாடுவதாக அதுவும் ‘கம்யூனிச’ அரசாங்கம் என குறிப்பிட்டு சொன்னார்களே…
    ஹ்ம்ம் வழமையான ஒன்றுதானே ….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க