இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அரசியல் நேரத்தையும் உழைப்பையும் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த விசயங்களுக்காக செலவழித்துள்ளார். “அவர்கள் மகாத்மா காந்திக்காகவும், தங்கள் நாட்டுக்காகவும் இதைச் செய்வதில் பெருமிதம் கொண்டார்கள்” என யுனிசெஃப் அமைப்பின் செயல் இயக்குநர் ஹென்ரிட்டா ஃபோரே (Hentietta Fore) குறிப்பிட்டுள்ளார். அதாவது, பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டம் குறித்தும் அதனால் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு குறித்துமே மேற்படி பாராட்டுதல்.
இந்தியளவில் சுமார் 80 சதவீத பரப்பளவு சுகாதார திட்டங்களுக்குள் தனது அரசு கொண்டு வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் மோடி. இது முன்பு 38 சதவீதமாக இருந்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் தூய்மை இந்தியா திட்டம் எவ்வாறு செயல்படுகின்றது என்பதை அவரது சொந்த மாநிலத்தின் உதாரணத்தைக் கொண்டே நாம் புரிந்து கொள்ளலாம்.
கடந்த பிப்ரவரி மாதம் (2018-ம் ஆண்டு) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அரசின் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலின் படி, குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் படி திறந்தவெளிக் கழிப்பிடங்கள் ஒழிக்கப்பட்ட மாநிலங்களாக அறிவிக்கப்பட்டது. எனினும், சென்ற வருடமே தமது மாநிலத்தில் திறந்த மலம் கழிக்கும் முறை ஒழிக்கப்பட்டதாக குஜராத் அரசு அறிவித்தது. இந்நிலையில் தூய்மை இந்தியா திட்டம் குஜராத்தில் அமல்படுத்தப்பட்ட விதம் மற்றும் திறந்த வெளிக்கழிப்பிடங்கள் ஒழிப்பு குறித்த அரசு அறிவிப்பு உள்ளிட்டவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்தது மத்திய கணக்குத் தணிக்கைத் துறை.
கணக்குத் தணிகைத் துறையின் ஆய்வறிக்கை கடந்த செப்டெம்பர் மாதம் 19ம் தேதி குஜராத் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி, அரசின் அறிவிப்பு பொய்யானது என்பது தெரிய வந்துள்ளது. கணக்குத் தணிக்கை அதிகாரிகள் குஜராத்தின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 120 கிராம பஞ்சாயத்துகளை ஆய்வுக்கு எடுத்து சோதித்ததில், 29 சதவீத வீடுகளில் கழிவறை கட்டப்படவில்லை என்பதோடு இந்த இடங்களில் பொதுக் கழிவறைகளும் கட்டப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 54,008 வீடுகளில் 38,280 வீடுகளில் மட்டுமே கழிவறை வசதி இருந்தது தெரியவந்துள்ளது. சுமார் 12,728 வீடுகளில் (29.12 சதவீதம்) கழிவறைகள் கட்டப்படவில்லை. தூய்மை இந்தியாவுக்கு முன்னோடியாக மோடி குஜராத் முதல்வராக இருந்த போது ”நிர்மல் பாரத் அப்யான்” எனும் திட்டத்தின் அடிப்படையில் எல்லா வீடுகளுக்கும் கழிவறை அமைக்க வேண்டும் என்கிற இலக்கை 2012ல் நிர்ணயித்ததாகவும், இலக்கை எட்ட வேண்டும் என்கிற அவசரத்தில் மாவட்ட அதிகாரிகள் தவறிழைத்து விட்டார்கள் என்றும் சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. பின்னர் மோடி பிரதமராகி தூய்மை இந்தியா திட்டம் அறிவித்த போது, பழைய பட்டியலை சரிபார்க்காமல் அப்படியே சேர்த்துக் கொண்டனர் என்கிறது தணிக்கை அறிக்கை.
மேலும், கணக்குத் தணிக்கைத் துறை ஆய்வின் படி, குஜராத்தின் பனாஸ்கந்தா மாவட்டத்தில் அதிகபட்சமாக 56.37 சதவீத வீடுகளிலும், தாஹோத் மாவட்டத்தில் 40.83 சதவீத வீடுகளில் கழிவறை வசதி ஏற்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அடுத்து அரசு திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பொதுக் கழிவறைகளும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 120 கிராமங்களில் சுமார் 41ல் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகளில் தண்ணீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை. சுமார் 15 கிராமங்களில் கழிவறைகள் கட்டப்பட்டிருந்தாலும் கழிவுத் தொட்டிகள் அமைக்கப்படவில்லை. வல்ஸாத் மாவட்டத்தைச் சேர்ந்த காப்ராடா தாலூக்காவில் கட்டப்பட்ட மொத்தம் 12,646 கழிவறைகளில் சுமார் 17, 423 கழிவறைகள் செயல்படும் நிலையிலேயே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
படிக்க:
♦ மோடியின் தூய்மை இந்தியா! காறி உமிழ்ந்த ஐ.நா !
♦ கக்கூசுக்கு இரட்டைவேடம் போடும் சுவச் பாரத் !
தற்போது வெளிவந்துள்ள மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகத்தின் ஆய்வறிக்கை தூய்மை இந்தியா திட்டம் வெறும் கழிவறைக் காகிதத்தில் எழுதப்பட்ட டுபாக்கூர் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. எனினும், அதிகாரிகள் இலக்கை அடைவதற்காக கள்ளக்கணக்கு காட்டியுள்ளதாக பழியை அதிகாரிகளின் மீது விழும் வகையில் அறிக்கையை எழுதியுள்ளது. உண்மை என்னவெனில், எப்போதும் அதிகார வர்க்கத்தைக் கண்மூடித்தனமாக நம்புவதே பாசிஸ்டுகளின் வழக்கம். அதிகார வர்க்கம் என்பது மக்களுக்கு பதில் சொல்லும் கடமையற்றது எனும் போது அரசின் திட்டங்கள் என்னதான் ஜிகினாக்களோடு அறிவிக்கப்பட்டாலும் அவை அதிகாரிகளால் அமல்படுத்தப்படும் போது என்ன லட்சணத்தில் நிறைவேற்றப்படும் என்பதை இந்த ஆய்வறிக்கை அம்பலமாக்குகிறது.
கடந்த நான்காண்டுகளில் இந்திய சமூகத்தின் பன்முகத்தன்மை துவங்கி நாட்டின் பொருளாதாரம் வரை சகல துறைகளையும் சூறையாடியுள்ள ஆட்சியாளர்கள் தங்களின் சாதனையாக பீற்றிக் கொள்ளும் தூய்மை இந்தியா திட்டத்தின் யோக்கியதையே இவ்வளவு தான் என்றால், பிற திட்டங்களின் நிலை என்னவென்பதை விளக்காமலேயே புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?
செய்தி ஆதாரம்:
- Unicef praises PM Modi for investing political time in ‘Swachh Bharat’
- CAG report picks holes in Gujarat’s Open Defecation-free claim
