மோடியின் தூய்மை இந்தியா திட்டம், மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையைக் கொண்டிருக்கவில்லை என்று ’பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்கான மனித உரிமைகளின் ஐ.நா. சிறப்பு செய்தித் தொடர்பாளர் லியோ ஹெல்லர் தெரிவித்துள்ளார். அக்கருத்துக்கு இந்திய அரசு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது.
இந்திய அரசின் அழைப்பை ஏற்று, அக்டோபர் 27 முதல் நவம்பர் 10 வரை நடத்தப்பட்ட ஆய்வின் கடைசி நாளில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் திட்ட முடிவு அறிக்கையை வெளியிட்டிருந்தார் லியோ ஹெல்லர்.
கிட்டத்தட்ட 5.3 கோடி கழிப்பறைகள் கிராமப்புறங்களில் கட்டப்பட்டிருப்பதாக தூய்மை இந்தியா இணையதளத்தில் கூறப்பட்டிருப்பதை பாராட்டிய அவர், கிராமப்புறம் மற்றும் நகர்புறப்பகுதிகளில் இன்னமும் கையால் மலமள்ளும் அவலம் நீடிப்பதைச் சுட்டிக்காட்டினார். அதனால்தான் தூய்மை இந்தியா திட்டம் மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
மோடி அரசினால் திறந்த வெளி கழிப்பிடமில்லா இடம் என்று சான்று அளிக்கப்பட்ட பல இடங்கள் அவ்வாறு இல்லாமல் இருப்பதை தான் கண்கூடாக பார்த்ததாக ஹெல்லர் கூறியிருக்கிறார். “காந்தியின் கண்ணாடி சின்னத்தை நான் சென்ற எல்லா இடங்களிலும் தூய்மை இந்தியா திட்டத்தில் பார்த்தேன். திட்டத்தின் மூன்றாவது ஆண்டில் அதை மனித உரிமைகளுக்கான கண்ணாடியாக மாற்றுவதற்கான நேரம் இது” என்று ஹெல்லர் செய்தி ஊடகங்களிடம் கூறினார்.
மேலும் தகவல், கல்வி மற்றும் தொழில்நுட்ப (IEC) வழிமுறையானது சரியாக பின்பற்றப்படவில்லை. வெறுமனே நிதியை ஒதுக்குவது மட்டுமே போதாது. இந்திய அரசு IEC மூலம் தூய்மை இந்தியா திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
ஹெல்லரின் கருத்துக்கு இந்திய அரசு உடனே எதிர்வினையாற்றியது. மனித உரிமைகளின் முன்னோடி மகாத்மா என்பதை உலகம் அறியும் என்றும் தூய்மை இந்தியா சின்னத்தை மாற்ற சொன்னது தேச தந்தையை அவமதிப்பதாகும் என்றும் மோடி அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ”சனாதன தர்மம் இல்லையேல் இந்து மதம் இல்லை. சனாதனத்தின் காவலன் நான்” என மார் தட்டிய காந்தியை உண்மையில் ஹெல்லர் அவமதித்திருக்கிறார் தான்.
மேலும் இந்தியாவின் சில மாநிலங்களில் அதுவும் வெறும் இரண்டே வாரங்கள் மட்டுமே பயணம் செய்து திரட்டிய துண்டு துண்டான விபரங்களை வைத்து தூய்மை இந்தியா திட்டத்தை விமர்சிப்பது சரியல்ல என்று அந்த அறிக்கை கூறியிருக்கிறது. இந்திய அரசு சொல்வது போல, இந்தியாவின் நீள அகலத்தையும் அது ’ஒளிர்வதையும்’ இரண்டு வாரங்களில் ஹெல்லரால் பார்த்திருக்க முடியாது என்பது உண்மைதான்.
ஆனால் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, தூய்மை இந்தியா திட்டம் ஒரு கண் துடைப்புத் திட்டம் என்பதை சமூக ஆர்வலர்களும், பத்திரிக்கையாளர்களும் அம்பலப்படுத்தியதில் ஒரு சிறு பகுதியையே ஹெல்லரின் இரண்டுவார ஆய்வறிக்கை காட்டுகிறது.
மேலும் மனித உரிமைகள் விசயத்திலும், குறிப்பாக சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்குவதிலும் இந்திய அரசு ஆழ்ந்த கவனம் செலுத்துவதாகவும் இந்திய அரசின் அறிக்கை மேலும் கூறியிருக்கிறது. ஆனால் இந்தியாவில் கிட்டத்தட்ட 80% நீர்நிலைகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன
இந்தியாவில், தூய்மை இந்தியா திட்டத்தை வியந்தோதுபவர்களின் குப்பைகளையும், கழிவுகளையும் சேர்த்துச் சுமப்பது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஏழை எளிய மக்கள் தாம். மனித மலத்தை மனிதனே அள்ளும் இழிநிலை இன்றும் இந்தியா முழுவதும் இருக்கிறது.
இரயில் நிலையங்களில் வைஃபை போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களைப் புகுத்தியிருக்கிறது மோடி அரசு. ஆனால் இன்றளவும் இரயில் நிலையங்களில் உள்ள தண்டவாளங்களில் மனிதக்கழிவை அள்ள தாழ்த்தப்பட்ட மக்களே பணியமர்த்தப்படுகின்றனர்.
செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் மலக்குழிக்குள் மனிதன் தான் இறங்க வேண்டும் என்பதில் பார்ப்பனீயம் உறுதியாக இருக்கிறது.
இராஜஸ்தானில் திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களை, விடிகாலையில் காத்திருந்து அரசே புகைப்படம் எடுத்த கதை ஹெல்லருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அன்றாடம் மலக்குழிக்குள் இறங்கி வாயு தாக்கி மரணமடையும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களின் சோகக் கதையும் ஹெல்லருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஒருவேளை இவற்றை ஹெல்லர் அறிந்திருந்தால், தூய்மை இந்தியா திட்டத்திற்கு மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறை தேவை எனக் கூறியிருக்க மாட்டார். மாறாக, இந்திய அரசிற்கே மனித உரிமைகள் குறித்த அறிவு தேவை என அறிக்கையில் தெரிவித்திருப்பார்.
மேலும் :
- Mission Statement by Special Rapporteur on Human Rights : 10 November 2017
- UN expert says Modi’s Swachh Bharat Mission, logo flawed, govt takes exception
-
ஸ்வச் பாரத் : வெறும் வாய்ச்சவடாலும் அவமானப்படுத்துதலுமே – காணொளி !
ஒரு பத்திரிக்கையாளனாய் பல மாநிலங்கள் பார்வையிட்டு விட்டோம்.
யாம் அறிந்த இந்தியா – சுத்தம் எனும் வேஷம் தரித்த அசுத்தம்.
ஜனநாயகம் எனும் வேஷம் தரித்த சர்வாதிகாரம்.
உண்மை அல்லது வெளிப்படை எனும் வேஷம் தரித்த ஊழல் மயம்.
எஸ், மருதுபாண்டியன் – உசிலம்பட்டியிலிருந்து