Tuesday, March 21, 2023
முகப்புசமூகம்சாதி – மதம்ஸ்வச் பாரத் : வெறும் வாய்ச்சவடாலும் அவமானப்படுத்துதலுமே - காணொளி !

ஸ்வச் பாரத் : வெறும் வாய்ச்சவடாலும் அவமானப்படுத்துதலுமே – காணொளி !

-

தூய்மை இந்தியா திட்டத்தின் இலக்குகளை அடைவதே காந்திஜிக்கான உண்மையான அஞ்சலி” என்று காந்தியின் பிறந்தநாளன்று இந்தியக் குடியரசுத் தலைவரான இராம்நாத் கோவிந்த் உரையாற்றியிருக்கிறார். ஆயினும் நடைமுறைக்கும் தூய்மை இந்தியாவின் குறிக்கோளுக்கும் இட்டு நிரப்பவே முடியாத பெரும் இடைவெளி இருப்பதை ’கபார் இலஹரியா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் எடுத்த இந்த காணொளி ஆய்வு அம்பலப்படுத்துகிறது.

ஸ்க்ரோல் இணையதளம் இந்த காணொளியோடு, ஒரு கட்டுரையையும் வெளியிட்டுள்ளது. அதன் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பும் இறுதியில் தூய்மை இந்தியா குறித்த ஒரு பார்வையும் ! ..

***

இன்று அக்டோபர் 2. ஒரு தேசியத்தலைவரின் பிறந்த நாள். அநேகமாக நமது நாட்டு வரலாற்றில் மிக மோசமான ஒரு மோசடி தினமாகவும் இது இருக்கிறது.

2014-ம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் வெற்றிப்பெற்ற பிறகு பாஜக அரசால் அவ்வாண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் முதலில் கிராமப்புறங்களில் வீடுகளில் கழிப்பறைகளை கட்டுவதையும், பின்னர் திறந்தவெளி கழிப்பிடமில்லா கிராமப்புறங்களை உருவாக்குவதையும் மையமாகக் கொண்டிருந்தது.

ஆண்டுக்கு 9,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, கடந்த மூன்று ஆண்டுகளில் 5 கோடி கழிப்பறைகள், 2.53 இலட்சம் கிராமங்களையும், ஆறு மாநிலங்களையும் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற மாநிலங்களாக அறிவித்தது என கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்வச் பாரத் இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டத் திட்டங்களைப் பார்த்தால் நமக்கு தலையே சுற்றுகிறது.

இந்தச் சுயதம்பட்டம்  மூடிய கதவுகளுக்கு பின்னால்  மறைந்திருக்க முடியாது என்ற உண்மை  கிராமப்புறங்களில் சில காலம் செலவழித்திருந்தாலே தெரியவரும். கழிப்பிடத்தைப் பொறுத்தமட்டில், தூய்மை இந்தியா திட்டத்தை நடைமுறைப்படுத்த சாதி, பாலினம், இடம், நீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு சமூக உட்கட்டமைப்புப் பிரச்சினைகள் , தடையாக இருக்கின்றன என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். இருந்தபோதிலும் திறந்தவெளி கழிப்பிடப் பிரச்சினைக்கான இந்த சிக்கலான காரணங்கள் மூடி மறைக்கப்படுகின்றன.

சான்றாக, பண்டல்கண்டைச் சேர்ந்த பண்டா மாவட்டத்தில் “தூய்மையான பண்டா, அழகு பண்டா” என்ற விளம்பரம் முழுவீச்சில் ஆக்ரோசமாய் சென்று கொண்டிருக்கிறது. “திறந்தவெளி கழிப்பிடமில்லா” மாவட்டத்திற்கான கலங்கரை விளக்கமாக இருக்க அம்மாவட்டத்தின் இளம் ஆட்சியரான மகேந்திர பஹதூர் சிங் விரும்புகிறார். அதற்காக எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை. சுவரெழுத்து, சுவரொட்டிகள், பதாகைகள், வகுப்பறைகளில் திடீர் கூட்டம் மற்றும் ஒரு டஜன் கழிப்பறை பாங்குகளில் இருந்து எதைத் தெரிவு செய்வது  என பல்வேறு வகைகளில் முயற்சிக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் என்ன செய்தாலும் திறந்தவெளியில் மட்டும் மலம் கழிக்காதீர்கள் என்கிறார். சுவச் பாரத் இணையதளம், பண்டா மாவட்டத்தின் 62.5 விழுக்காட்டு பகுதிகளுக்கு தூய்மை இந்தியா திட்டம் சென்றடைந்திருப்பதாகக் கூறுகிறது.

தொடர்ந்து, பண்டா மாவட்டத்தின் “திறந்த வெளிக் கழிப்பிடமில்லா” கிராமங்களிலும், ஒரு சில முக்கிய பிரச்சாரங்களிலும்,  ஒரு மாதகால காணொளி ஆய்வினை கபார் இலஹரியா தொடங்கியது. திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்திற்காக குற்றம்சாட்டப்பட்டு கிண்டலடிக்கப்படும் மக்களின் வெறுப்பும், விரக்தியையும் அதிகரித்து வருவதையே அந்தக் காணொளி ஆய்வு அம்பலப்படுத்துகிறது. சாதிக்கப்பட்டதாகக் கூறப்படுபவை எல்லாம் பித்தலாட்டமே என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

பெரும்பாலான சமயங்களில், கழிப்பறைக் கதவுகளும் இருக்காது. கூரைகளுக்கான பொருட்கள் வந்து சேர்ந்திருக்காது. விண்ணப்பதாரர்களுக்கு வந்து சேர வேண்டிய பணம் எப்பொதுமே தாமதப்படுத்தப்படுகிறது.

ஒரு கழிப்பறைக்கு விண்ணப்பிப்பதற்கான இணைய செயல்முறை என்பது, இணையம் பயன்படுத்தத் தெரியாத ஒரு சராசரி நபர் திறன் நகரத்தில் சமாளிப்பதை விட குழப்பம் மிக்கதாக உள்ளது.

“திறன் நகர”த்தின் இணையம் பயன்படுத்தா சராசரியான நாட்டுப்புற மக்களுக்கு, மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாத பஞ்சாயத்துகள் போன்ற பிரச்சினைகளை விட ஒருக் கழிப்பறைக்கு விண்ணப்பிக்கும் இணைய செயல்முறையே மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. இந்த செயல்முறை தண்ணீர், மின்சாரம் இல்லாத பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த மக்களை தனிமையில் நிறுத்தியுள்ளது.

***

மத்தியில் மோடி ஆட்சியில் அமர்ந்தது முதல் பலவகையான திட்டங்கள், ’வளர்ச்சி’ என்ற பெயரில் நம் மீது திணிக்கப்படுகின்றன. அனைத்துத் திட்டங்களுக்கும் விளம்பரங்கள் மட்டும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிற்குச் செய்யப்படுகின்றன. ஆனால் அனைத்துத் திட்டங்களுமே வெறும் வாய்ச்சவடால்களோடே முடிந்து விடுகின்றன.  தூய்மை இந்தியா திட்டத்தைப் பொருத்தவரையில் மக்களை தொலைக்காட்சி விளம்பரங்களில் தொடங்கி, திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களைப் படம் எடுப்பது வரை எவ்வளவு வகைகளில் முடியுமோ, அவ்வளவு வகைகளில் மக்களை அவமானப்படுத்தியிருக்கிறது பார்ப்பன பாசிச மோடி கும்பல். ஆனால் வளர்ச்சி, தூய்மை என எவ்வளவு தான் ‘ஜாக்கி’ வைத்துத் தூக்கினாலும் ’சுவச் பாரத்’ திட்டம் என்பது வெறும் மோசடியே !

செய்தி ஆதாரம்:
Watch: This district shows why India’s journey to being ‘open defecation free’ has a long way to go

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

 

 

  1. ஒரு இடத்தை சுத்தப்படுத்தி இன்னொரு இடத்தில் குப்பையைக் கொட்டி அசுத்தப்படுத்தும் நிலையைத்தான் பார்க்கிறோம். VIPக்கள் நடமாடும் இடங்கள் பளீச் என்றிருக்கும். சாதாரண மக்கள் வாழும் பகுதிகள் என்றோ ஒரு நாள் சுத்தம் செய்யப்படுகிறது. முதலில் குப்பைக் கூளங்கள் உருவாகும் நிலை மாற வேண்டும். குப்பை கொட்டுவது, சேகரிப்பது, மறு சுழற்சி செய்வது – இவற்றில் தக்க கவனம் செலுத்துவது அவசியம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க