ர்.டி.ஐ. செயல்பாட்டாளரை கொன்ற வழக்கில் முன்னாள் பாஜக எம்.பி. உள்ளிட்ட ஆறு பேர் குற்றவாளிகள் என அகமதாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் வரும் 11-ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

முன்னாள் பாஜக எம்.பி. தினு போகா சோலன்கி, சிவா சோலன்கி, சஞ்சய் சவுகான், சைலேஷ் பாண்டியா, பச்சன் தேசாய், உதய் தாகூர் மற்றும் போலீசு கான்ஸ்டபிள் பகாதுர்சின் வாதெர் உள்ளிட்டவர்கள் மீது கொலை, கொலை சதி, சட்டவிரோத ஆயுதங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கே. எம். தவே அறிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட ஆர்.டி.ஐ. செயல்பாட்டாளர் அமித் ஜெத்வா குடும்பத்தினருடன் – கோப்புப் படம்.

குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் நடத்திய பாஜக முன்னாள் எம்.பி. தினு போகா சோலன்கியை, ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் செயல்பாட்டாளரான அமித் ஜெத்வா.

ஆசிய சிங்கங்கள் வாழும் ஒரே இந்தியப் பகுதியான கிர் வனப்பகுதியில் சட்டவிரோத சுரங்கத் தொழில் நடத்தப்படுவது குறித்து பொதுநலன் வழக்கு ஒன்றை குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் அமித் ஜெத்வா. 2010-ம் ஆண்டு இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து அமித் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கு தொடக்கத்தில் அகமதாபாத் குற்றப்பிரிவு விசாரித்து, இரண்டு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்தது. இரண்டிலும் முக்கியக் குற்றவாளியான அன்றைய எம்.பி. சோலன்கியின் பெயர் இல்லை. அமித்தின் தந்தை, சிறப்பு புலனாய்வுப் பிரிவு அல்லது சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என வழக்கு தொடுத்த பின், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

படிக்க:
நாட்டின் சக்திவாய்ந்த நபருக்கு எதிராக நின்றதுதான் சஞ்சீவ் பட் செய்த ஒரே குற்றம் !
♦ மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !

சோலன்கி, தன்னுடைய உறவினரான சிவா சோலன்கியின் பெயரில் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டதும், அமித்தின் நடவடிக்கைகளால் சுரங்கத் தொழில் முடங்கியதும் கொலைக்கான பின்னணி காரணங்கள் என சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி சோலன்கி குற்றச்சாட்டிலிருந்து தப்பிவந்தார்.

முன்னாள் பாஜக எம்.பி. தினு போகா சோலன்கி

இந்த நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதித்துறைக்கும் அரசியலமைப்புக்கும் கிடைத்த வெற்றி என அமித்தின் தந்தை பிகாபாய் கருத்து தெரிவித்துள்ளார். “இது நீதி அமைப்பின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. குண்டர்களும் தோற்றக்கடிக்கப்படுவார்கள் என்பதை தீர்ப்பு நிரூபித்துள்ளது” என தெரிவித்துள்ளார் அவர்.

முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. எம். தவே, வழக்கு விசாரணையின்போது போதிய பாதுகாப்பு வேண்டும் என சிபிஐ இயக்குனருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. 24 மணி நேர பாதுகாப்புக்கிடையே, நீதிமன்ற வளாகத்துக்குள் நடந்த கொலைக்கு தீர்ப்பு எழுதியிருக்கிறார் நீதிபதி. பாராட்டப்பட வேண்டியதுதான்.

ஆனால், குஜராத் காவிகளை, நாடு முழுவதும் கொலை – குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட காவிகளை விடுவிக்க உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் இருக்கும்போது, இதுதான் இறுதி தீர்ப்பு என எப்படி கொண்டாடுவது?


கலைமதி
செய்தி ஆதாரம்: த வயர்,   இந்தியன் எக்ஸ்பிரஸ் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க