காவி பயங்கரவாதிகள் 2002 -ல் குஜராத்தில் நடத்திய முசுலீம் இனப்படுகொலைக்கு அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடி தூண்டுதலாகவும் துணையாகவும் இருந்தார் என ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட், உச்சநீதிமன்றம் வரை சாட்சியளித்தார்.

ஏகபோகமாக பதவியில் அமர்ந்திருக்கும், குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்கள் சஞ்சீவ் பட்-ஐ பழிவாங்க, இது போதுமான காரணமாக இருக்கிறது. அரதப்பழசான ஒரு வழக்கு தூசித்தட்டப்பட்டு, அந்த வழக்கில் 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றுவிட்டார் சஞ்சீவ் பட்.

அவருடைய நண்பரும் சமூக செயல்பாட்டாளருமான ஹர்ஸ் மந்திர், அரச அதிகாரத்துக்கு எதிராக எதிர்த்து நின்ற சஞ்சீவ் பட்டின் மன உறுதியை கடிதமாக எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம் இங்கே…

*****

அன்புள்ள சஞ்சீவ்,

ங்களிடம் இந்தக் கடிதம் படிக்கக் கொடுக்கப்படுமா, அப்படி கொடுக்கப்பட்டால் எப்போது கிடைக்கும் என்பது குறித்தெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஈடில்லாத உங்களுடைய வாழ்க்கை இணையர் ஸ்வேதா பட் மூலம் இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைக்கலாம் என நினைக்கிறேன். ஆனால், இந்தக் கணத்தில் எதிர்த்து நிற்கவும் சமாளிக்கவும் ஏராளமான விசயங்கள் உள்ளன. எனவே, இந்தக் கடிதத்தில் இருக்கும் அற்பமான விசயங்களை அவர் மறக்கக்கூடும்.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் அவருடைய குடும்பத்தாருடன். (கோப்புப் படம்)

இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைக்குமானால், ஜாம்நகர் மாவட்டத்தின் எங்கோ உள்ள கடுமையான சிறைக் கம்பிகளுக்கு பின்னால் நின்று தனிமையில் இந்தக் கடிதத்தை படிப்பதாக கற்பனை செய்கிறேன், துக்கம் கொள்கிறேன். என்னுடைய பல ஆண்டுகால ஆட்சிப்பணியில், இந்தியாவின் பல சிறைச்சாலைகளைக் கண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக இருக்கும், தரையில் படுப்பது கடினமாக இருக்கும், நாற்றமடிக்கும் கழிப்பறையை பயன்படுத்த நேரிடும், ஈக்கள், கொசுக்கள் தொல்லை கொடுக்கும்… எனவே, சிறை என்பது எத்தகைய கடுமையானதாக இருக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

நீங்கள் ஏற்கனவே ஒன்பது மாதங்கள் சிறையில் கழித்துவிட்டீர்கள். ஆனாலும், இது கடினமாகவே இருந்திருக்கும். உங்களுக்கு இன்னும் சில நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இருக்கலாம் – மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது, அகமதாபாத் அல்லது டெல்லியில் உள்ள இந்தியாவில் உயரிய நீதிமன்றங்கள் உங்களுக்கு நீதியை வழங்கலாம்.

ஜாம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதற்கு எதிரான நிலைப்பாட்டை அவை எடுக்கக்கூடும். எப்படியாயினும் நீங்கள் மன உறுதி மிக்கவர், போராட்ட குணம் மிக்கவர் என்பதை நான் அறிவேன். நீதிக்காக நீங்கள் தொடர்ந்து போராடுவீர்கள், நீங்கள் அப்பாவி என்பதை நிரூபிக்க தொடர்ந்து போராடுவீர்கள். ஒரு நாள் சுதந்திரமாக வெளிவருவீர்கள்.

கடுமையான சிறையின் பின்னால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் உங்களுக்கு, இந்தியாவில் சிறந்த மனிதர்கள், உலகம் முழுமைக்கும் உள்ளவர்கள் உங்களுக்கு ஆதரவாக, உங்களுடைய வாழ்க்கையின் கடினமான போராட்டத்தில் ஆதரவாக நிற்கிறார்கள் என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அப்பாவி என்பதை நாங்கள் நம்புகிறோம். இந்த நாட்டின் சக்திவாய்ந்த ஒரு நபருக்கு எதிராக சாட்சி சொன்ன தைரியத்தின் காரணமாக நீங்கள் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதையும் அறிவோம். இந்திய சுதந்திரத்துக்குப் பின் 2002 -ல் நடந்த மிகக் கொடூரமான படுகொலைகளில் அந்த நபருக்கும் இருந்த தொடர்பை நீங்கள் வெளிக்கொண்டுவந்தீர்கள்.

படிக்க:
பாஜக : ஞானஸ்நானத்துக்கு தயாராகும் சாத்தான்கள் | வில்லவன்
♦ சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு !

இந்த நாட்டின் முதலாவது, இரண்டாவது சக்தி வாய்ந்த நபர்களின் தீவிர கர்வத்தின் வெளிப்படையான விளைவுகளை நீங்கள் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். சிறிய விசயங்கள் பேரில் உங்களின் தைரியத்துக்கு எதிராக அரசு அதிகாரம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. இந்தியாவில் அரசு அதிகாரத்தில் இருப்பவர்களின் தவறுகளை வெளிக்கொண்டு வந்ததால் உங்களைப் போல பாதிக்கப்பட்ட நபர் வேறு எவரும் இல்லை. உயர்ந்த அதிகாரம் கொண்ட அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் ஒருவரை எதிர்த்து குரல்கொடுத்ததற்காக முப்பது ஆண்டுகள் தனது வாழ்நாளை சிறையில் கழிக்க தண்டனை விதிக்கப்பெற்றவர் உங்களைத் தவிர எவரும் இல்லை.

இந்த வழியில் நீங்கள் தண்டிக்கப்படலாம் என்பது இந்தியாவின் குற்றவியல் நீதி – புலன்விசாரணை முகமைகள், நீதிமன்றங்கள் மற்றும் மனித உரிமை முகமைகளின் நேர்மை மற்றும் சுதந்திரத்தின் வீழ்ச்சியை கண்ணாடி போல காட்டுகிறது. நீங்கள் வீழ்த்தப்பட்டிருப்பது காக்கிச் சீருடையில் உள்ள உங்களுடைய சகோதர, சகோதரிகளை பெரிதும் புண்படுத்தும், உங்களுடைய ஆயுள் சிறை தண்டனைக்குப் பிறகு, அவர்கள் மவுனமாவார்கள்.

ஊடகங்களில் இதுகுறித்து எந்தவொரு குறிப்பிட்ட சீற்றமும் இல்லாதிருப்பது, அரச அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை அது வெளிப்படையாக எந்தவித கோபமோ எதிர்ப்போ இல்லாமல் வெளிப்படையாகவே பார்க்க விரும்புகிறது என்பதைத்தான் பிரதிபலிக்கிறது.

அரசு அமைப்புகளின் நிலைகுலைவு, UPSC போன்ற அரசியலமைப்பு அமைப்புகளும்கூட உங்கள் விசயத்தில் அவமானகரமாக காட்சியளிக்கின்றன. 2015 -ஆம் ஆண்டு நீங்கள் உங்களுடைய பணியிலிருந்து அனுமதி இல்லாமல் விடுப்பு எடுத்ததாகக்கூறி நீக்கப்பட்டபோது, அரசியலமைப்பின் 315 பிரிவு குடிமை பணி அதிகாரிகளின் சுதந்திரத்தை பாதுகாக்கிறது, அந்த அடிப்படையிலாவது UPSC பேசியிருக்கலாம். ஆனால், மவுனம் சாதித்தது அதை அப்போது எழுதினேன்.

பணிநீக்கம் என்பது ஒரு அதிகாரியைக் கையாளக்கூடிய மிகப் பெரிய நிர்வாக ரீதியிலான தண்டனையாகும். இது மிகவும் அரிதான வழக்குகளில் அரசு அதிகாரிகளின் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகும். ஆனால், UPSC உங்களிடம் உரிய விளக்கத்தைக்கூட பெறாமல், பணிநீக்கம் செய்தது. எனக்குத் தெரிந்த பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஆண்டுக்கணக்கில் அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்து, தனியார் நிறுவனங்களுக்காக பணியாற்றியவர்கள், தண்டனையிலிருந்து தப்பியுள்ளனர். அவர்கள், ஒருபோதும் பணியிலிருந்து நீக்கப்பட்டதில்லை.

நீங்கள் அனுமதியில்லாமல் விடுப்பு எடுத்தது உண்மைதான் எனில், எச்சரிக்கை கடிதமோ அல்லது விடுப்பு எடுத்த காலத்துக்கு சம்பள பிடித்தமோ, அந்தக் குற்றத்துக்கு ஏற்ற தண்டனையோ தரப்பட்டிருக்கலாம் என அப்போது நான் எழுதினேன்.

நாட்டின் உயர்ந்த இடத்தில் உள்ளவர்களால் நீங்கள் ஏன் பணியிலிருந்து நீக்கப்பட்டீர்கள் என்கிற மர்மத்தை, நீங்கள் அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்த நாட்களை எதற்காக பயன்படுத்தினீர்கள் என்பதிலிருந்து அறியலாம். குஜராத்திலிருந்து இந்திய போலீசு சேவை பணிக்கு வந்த நீங்கள், நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, படுகொலைகளை நடத்தியதில் உள்ள பங்கு குறித்து சாட்சியளித்தீர்கள்.

உச்சநீதிமன்றத்தின் சிறப்பு புலனாய்வு குழுவின் முன், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் முன் சாட்சியமளித்தீர்கள். பின்பு இது எழுத்துப்பூர்வமாகவும் உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. சிறப்பு புலனாய்வு குழுவும் ராஜூ ராமச்சந்திரனும் ஜாக்கியா ஜஃப்ரி (குல்பர்க் சொசைட்டியில் 2002 மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட 70 பேரில் முன்னாள் எம்.பி. இஷான் ஜஃப்ரியும் ஒருவர். அவருடைய மனைவி ஜாக்கியா )அளித்த புகாரை விசாரித்தனர். ஜாக்கியா ஜஃப்ரி, குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி முதல் குற்றவாளி என்றும், வெளிப்படையாகவும்; வேண்டுமென்றும், உயிர்களை – உடைமைகளை காக்கத்தவறியவர் என்றும்; தன்னுடைய அரசியலமைப்பு கடமையை ஆற்றத்தவறியவர் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

உங்களை பணிநீக்கம் செய்தது அனுமானிக்க முடியாதததாக இருந்தது, அதிர்ச்சியளித்தது. ஆனால், அவர்கள் உங்களுக்கு மோசமானதைச் செய்தார்கள் என நாங்கள் நினைத்தோம். அதையும் காட்டிலும் மோசமான விளைவு உங்களுக்கு வரும் என எதிர்ப்பார்க்கவில்லை. நீங்கள் வாழ்நாள் வரை சிறையில் கழிக்கும் தண்டனை பெறும்வரை அவர்கள் ஓயப்போவதில்லை என நினைக்கவில்லை.

சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான வகுப்புவாத படுகொலையில் நீங்கள் ஒரு சாட்சியாக வலிமையான மற்றும் அச்சுறுத்தலாக இருக்கிறீர்கள் என்பதையே உங்கள் தண்டனை பிரதிபலிக்கிறது. நீங்கள் வெளிக்கொண்டுவந்த ஆதாரங்கள் எவ்வளவு ஆபத்தானவை. உங்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் எந்தவொரு நபரும் சக்திவாய்ந்த நபர்களுக்கு எதிராக வாள் சுழற்றினால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு செய்தியை சொல்ல விரும்பினார்கள். மூத்த காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண குடிமகனின் நிலைமை என்னவாகும்?

2002- ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி மோடி தலைமையில் நள்ளிரவில் நடந்த சர்ச்சைக்குரிய அந்தக் கூட்டத்தில் போலீசு அதிகாரிகளும் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அப்போது என்ன பேசப்பட்டது என நினைவில்லை என்றும் மோடி என்ன அறிவுறுத்தல்களை கொடுத்தார் என்பது குறித்தோ தெரியவில்லை என கூறினார்கள். நீங்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும் கூறினார்கள். ஆனால், உங்களுடைய ஓட்டுநரும், பிபிசி செய்தியாளரும் இந்தக் கூட்டத்துக்கு நீங்கள் செல்லும் முன் உங்களிடமிருந்து விடைப்பெற்றார்கள், அவர்கள் நீங்கள் கூட்டத்தில் கலந்துகொண்டதை உறுதி படுத்தினார்கள்.

படிக்க:
குஜராத் கலவரத்தில் மோடிதான் குற்றவாளி – விசாரணைக்கு வருகிறது வழக்கு !
♦ ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை ! பழிவாங்கும் மோடி அரசு !

மூத்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மோடி சொன்ன அறிவுறுத்தல்கள் குறித்து பேசினால் என்ன நடக்கும் என்பதுகுறித்து நீங்கள் அறிவீர்கள். ஆனாலும் நீங்கள் பேசத் துணிந்தீர்கள். உயர்ந்த மன உறுதியுடன் என்ன சொல்ல வேண்டுமோ, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தீர்கள்.

நீங்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடமும் உச்சநீதிமன்றத்திடமும் “இந்துக்கள் மிக மிக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதாகவும், அவர்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டியது அவசியம் என்றும் மோடி பேசினார்” எனத் தெரிவித்தீர்கள். இந்துக்களின் ஆத்திரம் – கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது மோடி வெளிப்படுத்திய கருத்து இது.

“குஜராத்தில் வகுப்புவாத கலவரங்களின் போது, குஜராத் போலீசு இந்துக்கள் மற்றும் முசுலீம்களை சமநிலையில் அணுகும் போக்கை கடைப்பிடித்து வந்திருக்கிறது. இந்த சூழ்நிலை, முசுலீம்களுக்கு பாடம் கற்பிக்க தகுந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, அதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காது” என மோடி மீது குற்றச்சாட்டுகளை வைத்தீர்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் ஏற்கப்பட்டிருந்தால் மோடி மீது கிரிமினல் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டிருகும்.

உங்களுடன் பணிபுரிந்த சிறப்பு புலனாய்வு அதிகாரிகள், சக போலீசு அதிகாரிகள் உங்களுடைய குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார்கள். நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் இல்லை எனவும் அந்தக் கூட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ளவே இல்லை எனவும் அவர்கள் கூறினர். புலனாய்வு குழு நிராகரித்த உங்களுடைய குற்றச்சாட்டின் மீது, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன், உங்களுடைய வார்த்தைகள் சட்டத்தின் முன் நிரூபிக்கப்பட வேண்டும் என சொன்னார். அவருடைய கருத்து ஏற்கப்பட்டிருந்தால் இந்தியாவின் வரலாறும் உங்களுடைய தலைவிதியும் மாறியிருக்கும்.

நரேந்திர மோடி பிரதமரான பிறகு சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் ஓய்வுக்குப் பிறகு மதிப்பிற்குரிய போலீசு அதிகாரி பதவியைப் பெற்றார். நீங்கள் வாழ்நாள் சிறைவாசத்தை பெற்றிருக்கிறீர்கள். இரண்டும் எதிர்பாராதவை.

நாட்டின் மிக சக்தி வாய்ந்த இடத்தில் இருக்கும் நபருக்கு இந்தக் காரணங்களே உங்களைப் பழிவாங்கப் போதுமானவை. ஆனால், இந்திய அமைப்புகள் சிறு குற்றங்களுக்கு பழிவாங்கும் வகையில் அரச அதிகாரத்தால் பயன்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தடுப்பு காவலில் வைத்திருந்த ஒருவர் இறந்துவிட்ட வழக்கில் நீங்கள் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, உங்களுக்கு ஆதரவாக பேசுவதை எதிர்த்து எவரேனும் வழக்கு தொடுக்கலாம்.

படிக்க:
நரவேட்டை மோடியை எதிர்த்து நிற்கும் சஞ்சீவ் பட்’டை ஆதரிப்போம்!
♦ மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !

குடிமைப் பணியில் என்னுடைய பல வருடங்களை கழித்த நான், தடுப்பு காவல் வன்முறைகள் மற்றும் நீதிக்கு அப்பாற்பட்ட கொலைகளை எதிர்த்தே வந்திருக்கிறேன். எப்படியாயினும் 2001 – 2016 வரை குஜராத்தில் 180 தடுப்பு காவல் மரணங்கள் நடந்திருப்பதாக தேசிய குற்ற பதிவு பணியகம் தெரிவிக்கிறது. ஆனால், ஒரே ஒரு காவல் அதிகாரிகூட இந்த மரணங்களுக்காக தண்டிக்கப்பட்டதில்லை. உங்களுக்கு எதிரான நடவடிக்கையை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

தடுப்பு காவல் மரணங்களில் எத்தனை விசாரிக்கப்பட்டிருக்கின்றன, எத்தனை போலீசு அதிகாரிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? அப்படி நடந்திருந்தால் உங்கள் மீதான நடவடிக்கையையும் நான் ஆதரித்திருப்பேன். ஆனால், தடுப்பு காவலிலிருந்து விடுதலையான 30 நாட்களுக்குப் பிறகு, இறந்த ஒருவருக்காக நீங்களும் மற்றொரு போலீசு அதிகாரியும் மட்டும் தண்டனை பெற்றிருக்கிறீர்கள்.

சுதந்திர இந்தியா கண்ட மிக சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவருக்கு எதிராக, மிகக் கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளை எழுப்பிய உங்களின் மன தைரியத்தை இந்தியாவில் உள்ள ஏராளமான மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பது உங்களுடைய கடுமையான சிறை வாழ்க்கையை ஒருபோதும் குறைத்துவிடாது. எனக்குத் தெரியும், உங்களுக்கும் தெரியும், ஸ்வேதா, உங்களுடைய குழந்தைகளுக்கும் தெரியும் நீதிக்காக போராட்டம் நீண்டது, எதிர்பாராது, ஏராளமான ஏமாற்றங்களாலும் நிரம்பியது.

ஆனால், நீங்கள் உண்மை, நீதி என நம்புகிற ஒன்றுக்காக தொடர்ந்து உறுதியுடன் போராடுவீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். மேலும், ஒரு நாள்… ஒரு நாள் நிச்சயமாக நீங்கள் சுதந்திரமாக நடப்பீர்கள். ஸ்வேதாவுடனும் உங்கள் குழந்தைகளுடனும், நாட்டின் பெருந்திரளான ஆண்கள் பெண்களுடனும் நடப்பீர்கள். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன்.


தமிழாக்கம் : அனிதா
செய்தி ஆதாரம்: த வயர்.