மோடி – அமித் ஷா கூட்டணி அரங்கேற்றிய குஜராத் படுகொலைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியவர்களில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் குறிப்பிடத்தகுந்தவர்.  ஜனநாயகத்தின் அனைத்து அமைப்புகள் முன்பும் முறையிட்டுப் பலனளிக்காத நிலையில்,  இறுதியாக சமூக ஊடகங்களில் மோடி கும்பலுக்கு எதிராக முழங்கிவந்தவர் சஞ்சீவ் பட்.

ஆனால், அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அவர்கள், முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கை தூசி தட்டினார்கள். 1990 -ஆம் ஆண்டு போலீசு காவலில் நிகழ்ந்த ஒரு மரணத்துக்கு தண்டனையாக சஞ்சீவ் பட் மற்றும் அவருடன் பணியாற்றிய காவலர் பிரவீன்சிங் ஸாலா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜாம்நகர் செசன்ஸ் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்.

ஆண்டு தோறும் கணக்கில் வராமல் எண்ணற்ற தடுப்பு காவல் மரணங்கள் நடந்து வரும் நாட்டில் 30 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் போலீசு அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைத்திருப்பது வரவேற்புக்குரியதாக இல்லை. இந்த வழக்கில் மரணமடைந்த பிரபுதாஸ் வைஷ்ணானி, தலித்தோ, பழங்குடியோ, அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவரோ அல்ல. பெரும்பாலான போலீசு தடுப்பு மரணங்களில் இவர்கள்தான் பலிகாடாவார்கள்.

1990 -ஆம் ஆண்டு அத்வானி, ராமர் கோயிலை முன்வைத்து தொடங்கிய ரத யாத்திரை ஜாம்ஜோத்பூர் வந்தபோது, அப்போது கலவரத்தில் ஈடுபட்ட காவி கும்பலில் பிரபுதாஸ் வைஷ்ணானி உள்ளிட்ட 150 பேரை கைது செய்தது காவல் துறை. ஒரு வாரத்தில் பிணையில் விடுதலையான பிரபுதாஸ், அடுத்த பத்து நாட்களில் இறந்துபோனார். தன் சகோதரரின் சாவுக்குக் காரணம் சஞ்சீவ் பட் உள்ளிட்ட எட்டு போலீசு அதிகாரிகள் தடுப்பு காவலில் செய்த சித்ரவதைகளே என புகார் அளித்தார் பிரபுதாஸின் சகோதரர்.

1995 -ஆம் ஆண்டு நீதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கு, குஜராத் உயர்நீதிமன்றத்தால் 2011 -ஆம் ஆண்டு வரை விசாரணைக்கு தடை செய்யப்பட்டிருந்தது. இதே ஆண்டு, குஜராத் படுகொலையில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு போடுகிறார் சஞ்சீவ் பட்.  அந்த மனுவில், முசுலீம்களை பழிவாங்கும் நோக்கில் இந்துக்களின் கோபத்தை தூண்டிவிட்டார் மோடி என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

படிக்க:
வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவரை பழிவாங்கும் மோடி அரசு !
ஆர்.எஸ்.எஸ். கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ?

கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த விசுவ இந்து பரிசத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எரித்துக்கொல்லப்பட்ட நிலையில், அந்தப் பிணங்களை அடக்கம் செய்யாமல் அகமதாபாத் எடுத்து வரச்சொல்லி; அந்த பிரேதங்களை வைத்து இந்துக்களைத் தூண்ட பயன்படுத்தியதையும் மனுவில் குறிப்பிட்டிருந்தார் சஞ்சீவ் பட்.

2002 -ஆம் ஆண்டு குஜராத் படுகொலைகளின்போது, மாநில உளவுப்பிரிவில் பணியாற்றி பட், குஜராத் படுகொலைகளை விசாரித்த நானாவதி கமிஷன் முன், காவி கும்பலால் கொல்லப்பட்ட இஷான் ஜெஃப்ரி தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சியதை மோடிக்கு தானே தனிப்பட்ட முறையில் தெரிவித்ததாக சாட்சியம் அளித்தவர்.

ஆரம்பம் காலம் தொட்டே ‘ஆண்டி – இந்தியனாக’ இருந்த சஞ்சீவ் பட், மீது இந்துத்துவ கும்பல் கடும்கோபத்தில் இருந்திருக்கிறது. மோடியை எதிர்த்து நீதிமன்றம் சென்றது முதல், இந்துத்துவ கும்பலின் பழிவாங்கும் நடவடிக்கை தொடங்கியது. 1990 – ஆண்டு வழக்கு தூசி தட்டப்பட்டு, மறுவிசாரணைக்கு வந்ததோடு, பணிக்கு சரியாக வரவில்லை என்ற காரணம் கூறி சஞ்சீவ் பட் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இறுதியாக கடந்த 2018 செப்டம்பர் மாதம், 1996 – ஆம் ஆண்டு போதை பொருள் கைது குறித்த வழக்கொன்றில் கைதானார் பட். அவருடைய மனைவி ஸ்வேதா பட், தன்னையும் தனது கணவரையும் துன்புறுத்தும் நோக்கில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக பகிரங்கமாக எழுதினார். பல முறை பிணை கேட்டும், சஞ்சீவ் பட் -க்கு பிணை வழங்கப்படவில்லை.

இந்தப் பின்னணியில் 30 ஆண்டு கால வழக்கில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது நீதிமன்றம். முன்னதாக, கடந்த வாரம் சஞ்சீவ் பட் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 300 சாட்சியங்கள் உள்ள வழக்கில் வெறும் 32 பேரிடம் மட்டும் விசாரனை நடத்தப்பட்டுள்ளதாகவும்,  போலீசு தரப்பின் முக்கியமான சாட்சியங்கள் எவரும் விசாரிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார். ஆனால், இந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது உச்சநீதிமன்றம்.

தற்போது, ஆயுள் தண்டனை பெற்றிருக்கும் சஞ்சீவ் பட்டின் எதிர்ப்புக்குரலை நிரந்தரமாக முடக்கியுள்ளது மோடி – அமித் ஷா கூட்டணி தலைமையிலான அரசு. குஜராத் படுகொலைக்கு முன்பும் பின்பும் இந்தக் கூட்டணியை எதிர்த்த பலர் கொல்லப்பட்டனர்; பழிவாங்கப்பட்டனர்.

மோடி-அமித் ஷா கூட்டணியினர் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக கைவிடப்பட்டன. சொராபுதீன் தன்னைதானே மாய்த்துக்கொண்டார் என நீதிமன்றம் அந்தப் போலி மோதல் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலையும் அப்படியே முடிந்தது.

படிக்க:
சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு : குற்றவாளி அசீமானந்தா விடுதலை !
♦ சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு !

மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியான பிரக்யா சிங், பிணையில் வந்து மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் சென்றுவிட்டார். நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்ற சனாதன இந்துத்துவத்தை எதிர்த்தவர்களை கொலை செய்த சனாதன் சன்ஸ்தா இன்னமும் தடை செய்யப்படவில்லை. அடுத்தடுத்த கொலைப் பட்டியலை அது பகிரங்கமாக வெளியிடுகிறது.

சனாதன பார்ப்பனிய மதத்தின் சாதி படிநிலைகளை விமர்சிக்கும் பாடகர் மீது தேச துரோக வழக்குப் பாய்கிறது. மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு, அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டு மாதக்கணக்கில் சிறையில் இருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் அரசை எதிர்க்கும் சாமானியர்கள் கைதாகிறார்கள். ஆமாம், இந்து ராஷ்டிரத்தின் கொடுங்கோல் ஆட்சி அமலுக்கு வந்துவிட்டது. இனி ஒருவரும் தப்பிவிட முடியாது.


அனிதா
செய்தி ஆதாரம்: தி வயர்.


இதையும் பாருங்கள்…

கோத்ரா ரயிலை எரித்தது நாங்கள்தான் ! பெண் சாமியாரின் ஒப்புதல் வாக்குமூலம் | காணொளி

1 மறுமொழி

  1. என்ன செய்வது சஞ்சீவ் பட் வினவு கூட்டங்களை போலவே கூச்சமே இல்லாமல் பொய்களை பரப்பியவர்.

    மோடிக்கு எதிரான அவரது முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று ஹிந்துக்கள் கலவரத்தில் இறங்கினால் காவல்துறையினர் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும் என்று மோடி சொன்னார் என்பது இவரது குற்றசாட்டு… முதலமைச்சர் மோடி கூட்டிய முக்கிய காவலர் கூட்டத்தில் தாமும் கலந்து கொண்டதாக இவர் சொன்னார்…. ஆனால் சுப்ரீம் கோர்ட் நியமித்த விசாரணை கமிஷன் இவர் அந்த கூட்டத்திலேயே கலந்துகொள்ளவில்லை என்று நிரூபித்தது.

    இவரது மனைவி காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்தலில் நின்றவர்.

    வினவு கூட்டங்களை போலவே வக்கிர மனம் கொண்டவராகவே சஞ்சீவ் இருந்து இருக்கிறார், ஹிந்துக்கள் கொடூரமானவர்கள் என்பது போலவும் இஸ்லாமியர்கள் ஹிந்துக்களால் எப்போதுமே துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் என்பது போலவும் பொய்களை பரப்பியவர்.

    இவர் குற்றமற்றவர் என்றால் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியது தானே ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க