ம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்துத்துவ தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 68 பேர் உயிரிழந்தார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அசீமானந்தா உள்ளிட்ட நால்வர் சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆக மொத்தத்தில் நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில் 68 பேர் உயிரிழக்கக் காரணமான குண்டுவெடிப்புக்கு எவரும் காரணமில்லை; தானாகவே குண்டுகளை வைத்துக்கொண்டு அவர்கள் இறந்துவிட்டார்கள் போலும்!

2007-ம் ஆண்டு டெல்லி – லாகூர் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடிப்பை நடத்தியது இந்தூரை மையமாகக்கொண்ட காவி தீவிரவாத கும்பல். இந்த குண்டுவெடிப்பில் 68 பேர், பெரும்பாலும் பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் அபினவ் பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்த அசீமானந்தா என்ற காவித் தீவிரவாதிக்கு முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது. லோகேஷ் சர்மா, கமல் சவுகான், ராஜீந்தர் சவுத்ரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பின்போது, இந்திய புலானய்வு முகமை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறிவிட்டதாக நீதிமன்றம் கூறியுள்ளது.  பொதுவாக, இந்துத்துவ தீவிரவாத தாக்குதல்கள் என வரும்போது மட்டும் சி.பி.ஐ., தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் போதிய ஆதாரங்கள் கொடுப்பதில்லை என தொடர்ந்து நீதிமன்றம் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் வெளியான சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 22 பேரையும்கூட இதே காரணம் சொல்லித்தான் நீதிமன்றம் விடுதலை செய்தது. மோடி ஆட்சி ஏற்பதற்கு முன்பாகவே, இந்தப் போலி மோதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான அமித் ஷா இதே காரணம் காட்டி விடுவிக்கப்பட்டார். நரோடா பாட்டியா படுகொலைகள் வழக்கில் சதித்திட்டம் தீட்டிய மாயா கோட்னானியும் இதே காரணத்தைக்  காட்டி விடுவிக்கப்பட்டார்.  ஆஜ்மீர் குண்டுவெடிப்பு, மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அசீமானந்தா அந்த வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

படிக்க:
ஆன்டி இன்டியன்ஸ் வாக்குகள் தேவை இல்லை | பாஜக தேர்தல் அறிக்கை
நூல் அறிமுகம் : பகத்சிங் சிறைக் குறிப்புகள்

சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்றம் சாட்சியங்களைப் பார்க்க மறுத்தாலும் குற்றத்தைச் செய்த அசீமானந்தாவே தனது குற்றத்தை ‘பெருமை’யோடு பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.  2010-ம் ஆண்டு தான்தான் குண்டுவெடிப்புக்குக் காரணம் என சொன்ன அசீமானந்தா 2011-ம் ஆண்டு போலீசு தன்னை டார்ச்சர் செய்து வாக்குமூலம் வாங்கியதாகச் சொன்னார்.

அசீமானந்தா

கேரவன் இதழுக்கு பேட்டியளித்தபோது, தனக்கு போலீசு டார்ச்சர் எதுவும் தரவில்லை என்றும்  தான் செய்த பல்வேறு வன்முறை வெறியாட்டங்கள் குறித்து ‘பெருமை’ யோடு பகிர்ந்துகொண்டார்.  அதே பேட்டியில், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மோகன் பகவத் மற்றும் இந்திரேஷ் குமார் ஆசியுடன் நாட்டின் பல்வேறு இடங்களில் முசுலீம்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதையும் சொன்னார்.

2006-ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு; 2007-ல் நடந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, அதே ஆண்டில் மெக்கா மசூதி, ஆஜ்மீர் ஷாரீபில் நடந்த தாக்குதல், 2008-ம் ஆண்டு மீண்டும் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை திட்டமிட்டு இந்துத்துவ தீவிரவாதிகள் நடத்தினர்.  சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் வழக்கின் முதல் மூன்று ஆண்டு விசாரணையை நடத்திய விகாஷ் நரேன் ராய், இந்தத் தாக்குதல்களில் ஒரு பிணைப்பு இருப்பதாக சொன்னார்.

சம்ஜவுதா ரயிலில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிக்காத ஒரு குண்டு எங்கு தயாரிக்கப்பட்டது என்பதை புலனாய்ந்தபோது, அது இந்தூரில் இருந்த ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் சுனில் ஜோஷியால் தயாரிக்கப்பட்டது என்பதை இவர் தலைமையிலான குழு கண்டறிந்தது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே சுனில் படுகொலை செய்யப்பட்டார்.  வெடிகுண்டு தயாரிப்பில் அவருடன் தொடர்புடைய இருவர் குறித்த தகவல் கிடைத்தும்கூட, அதற்கு மேல் விசாரணையை எடுத்துச் செல்ல முடியவில்லை என்கிறார் ஓய்வுபெற்ற இந்த அதிகாரி.

படிக்க:
அசீமானந்தா விடுதலை – இதுதாண்டா ஆர்.எஸ்.எஸ் ஆட்சி !
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் – அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் – 1

அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கண்ட குண்டுவெடிப்பு சம்பவங்களில் ‘பாகிஸ்தானுக்கு தொடர்பிருக்கிறதா?’ என்கிற கோணத்தில் மட்டும் விசாரிக்க விரும்பியது என்பதை சுட்டிக்காட்டும் விகாஷ்,  மெக்கா மசூதி குண்டுவெடிப்பு ஆஜ்மீர் ஷாரீப் குண்டுவெடிப்பு, மலேகான் குண்டுவெடிப்புகளில் பயன்படுத்திய குண்டுகள் அனைத்தும் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்டவை என்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் ! அசீமானாந்தாவின் ஆதாரம் !!
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் ! அசீமானாந்தாவின் ஆதாரம் !!

2011-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை கையிலெடுத்த பிறகு, வழக்கு வேறு திசையில் செல்ல ஆரம்பித்தது. இப்போது அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட புரோகித், இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் அரசு தரப்பு வழக்கறிஞர் ரோகினி சாலியன், 2014-ம் ஆண்டு மோடி பதவியேற்றபின் காவி தீவிரவாத வழக்குகளில் ‘மென்மை’யான போக்கை கடைபிடிக்கும்படி தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாக கூறியிருந்தது இங்கே நினைவுகூரத் தக்கது.

தவறான குற்றச்சாட்டில் அப்பாவி முசுலீம்கள் பலர் பத்தாண்டுகளுக்கும் மேலாக கடும் சிறைவாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையில், வெளிப்படையாகத் தாங்கள் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டிருக்கும் காவி தீவிரவாதிகள் சட்டத்தாலும் நீதிமன்றத்தாலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். காவி பயங்கரவாதத்தை முன்னாள் காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை என்பது ஒரு புறமிருக்க, தற்போது பதவியில் உள்ள காவி அரசு குற்றவாளிகளை மாலை போட்டு வரவேற்றுக் கொண்டாடுகிறது. இதுதான் காவிப் பாசிசம்.

வினவு செய்திப் பிரிவு
கலைமதி
நன்றி: ஸ்க்ரால், த வயர்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க