கத்சிங்கின் சிறைக் குறிப்புகள் என்னும் இந்நூல், பொதுவாக புரட்சிக்காரர் என அறியப்பட்டுள்ள பகத்சிங், சிறந்த சிந்தனையாளரும், ஆழ்ந்த படிப்பாளியும் ஆவார் என்பதை பிரகடனம் செய்கிறது.

… பகத்சிங்கின் சிறைக் குறிப்புகளையும், எழுத்துக்களையும் அளப்பரிய முயற்சிகள் செய்து சேகரித்த… சமன்லாலின் கடும் முயற்சியின் விளைவாக தொகுக்கப்பட்ட பகத்சிங் மற்றும் அவரது சக தோழர்களின் மனுக்கள், கோரிக்கைகள், சிறைப் போராட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்த சிறை ஆவணங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன …

இந்த சிறை ஆவணங்கள், சிறைக்குள்ளிருந்து கொண்டே அன்றைய சட்டரீதியான முறையில் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தங்களுடைய லட்சியங்களுக்காகப் போராடினார்கள் என்பதை எடுத்துரைப்பதுடன் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் தனது சட்டங்களைத் தாமே மீறி அவர்களின் உரிமைகளை ஒடுக்கியது என்பதையும் அம்பலப்படுத்துகின்றன.

…சோசலிஸம்தான் மக்களுக்கான இறுதியான லட்சியமாக இருக்க முடியும். அதுதான் மக்களின் உரிமைகளுக்கும், வாழ்க்கைக்கும் பாதுகாப்பு அரணாகவும் வழிகாட்டியாகவும் இருக்க முடியும் என்ற உறுதியான முடிவுக்கு காலப் போக்கில் வந்தவர். அவரது இந்தச் சிந்தனைப் போக்குகள் அவரது சிறைக்குறிப்புகளிலும் இழையோடுவதை பார்க்க முடியும். மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்பட்டு ஈடுபாடு கொண்டிருந்த பகத்சிங், தாம் தூக்குக் கயிற்றை சந்திப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு கூட, தோழர் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் நூலைப் படித்ததன் மூலம் ஒரு புரட்சிக்காரனின் கடைசி சந்திப்போடு புரட்சிக்காரராகிய பகத்சிங் தூக்குக் கயிற்றை எதிர் கொள்கிறார்.

… இந்தப் பின்னணியில் பகத்சிங்கின் சிறைக் குறிப்புகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. பகத்சிங் தாம் சிறையில் இருந்தபோது ஏராளமான நூல்களைப் படித்தார். அந்நூல்கள் ஒவ்வொன்றின் மையக்கருத்தை அல்லது நோக்கத்தை ரத்தினச் சுருக்கமாக ஒரு 400 பக்க நோட்டில் எழுதி வைத்தார். மேலும், அந்நூல்கள் பலவற்றின் உள்ளடக்கங்களை அவற்றின் ஆசிரியர்களின் வார்த்தைகளிலும் எடுத்துரைத்துள்ளார்.

மேலும், அவர் படித்த நூல்கள் பலவற்றிலிருந்து எளிய தகவல்களையும் அரிய தகவல்களையும் தமது சிறைக் குறிப்புகளில் குறித்துள்ளார். மிக முக்கியமான நூல்களின் உள்ளடக்கத்தை ரத்தினச் சுருக்கமாக தெரிவித்துள்ளார். உதாரணமாக மார்க்சிய மூலவர்களில் ஒருவரான ஏங்கல்ஸின் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற பெரும் நூலின் உள்ளடக்கத்தை சில பக்கங்களில் சித்தரிக்கிறார். பகத்சிங்கின் ஆழ்ந்த அறிவுப் புலமையின் பின்னணியில் தாம் படித்த புத்தகங்களை அறிமுகப்படுத்தும் விதம் குறிப்பாக இளைஞர்கள் புத்தகங்களை வாசிப்பதற்கான ஆர்வத்தை அளிப்பதாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும். சமூக மாற்றங்களுக்கான அறிவு ஞானங்களை பெருக்கிக் கொள்ள வேண்டுமென்ற லட்சிய நோக்கத்திற்கு இளைய தலைமுறையினருக்கு பகத்சிங் வழிகாட்டியாகத் திகழ்கிறார். இந்திய வரலாற்றில் முக்கியமான காலக் கட்டத்தை புரிந்து கொள்வதிலும் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். (நூலின் பதிப்புரையிலிருந்து)

அவரது அரசியல் மற்றும் அறிவு வளர்ச்சியில் ஒரு முக்கியமான காரணியாக இருந்தது லாகூரில் உள்ள துவாரகா தாஸ் நூலகமாகும்; 1920-களின் மத்தியப் பகுதியில் அது மார்க்சிய நூல்களைப் பெறத் தொடங்கியிருந்தது. அப்போது மனிதகுல விடுதலைக்கான ஒரு முழுமையான தத்துவத்தை அவர் தேடிக் கொண்டிருந்தார் என்பது தெளிவு. அது அவரை மார்க்சியத்திடம் இட்டுச் சென்றது. பஞ்சாபின் கத்தார் புரட்சியாளர்கள் இந்தத் தேடலுக்கு உதவினர். கீர்த்தி என்கிற அவர்களது பஞ்சாபி இதழில் அவர் தொடர்ந்து எழுதினார். வகுப்புவாதமும் தீர்வுகளும், தீண்டாமைப் பிரச்சனை; மதமும் நமது விடுதலைப் போராட்டமும்’ உள்பட பல்வேறு பொருள்கள் குறித்து அவர் எழுதினார்.

1928-ம் ஆண்டு வாக்கில் பஞ்சாபில் சுக்தேவ், பகவதிச்சரன் வோரா மற்றும் ஐக்கிய மாகாணத்தில் சிவ வர்மா, ஜெய்தேவ் கபூர் ஆகியோருடன் சேர்ந்து உண்மையிலேயே புரட்சிகரமான ஒரு கட்சிக்கு சோஷலிசத் திட்டம் இருக்க வேண்டும் என்கிற முடிவிற்கு பகத்சிங் வரத் தொடங்கியிருந்தார். அது எப்படி இருக்கும் என்பது குறித்து தெளிவுபடுத்துவதற்காக 1928-ம் ஆண்டு செப்டம்பர் 8, 9 தேதிகளில் டெல்லியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பெரோஷா கோட்லாவில் எச்ஆர்ஏ அமைப்பின் மத்தியக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. அங்கு நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் பகத்சிங் கூறிய ஆலோசனையின்படி எச்.ஆர்.ஏ. தன்னுடைய பெயருடன் ‘சோஷலிஸ்ட்’ என்கிற சொல்லை சேர்த்து ‘இந்துஸ்தான் சோஷலிசக் குடியரசு அமைப்பு ஆனது. சந்திரசேகர் ஆசாத் மிக அதிகமாகப் படித்தவர் இல்லை. ஆயினும் பகத்சிங்கை அவர் முழுமையாக நம்பியதால் இதற்கு அவரது ஒப்புதலும் இருந்தது.

1970-களின் தொடக்கத்தில் இந்திரா காந்தி சோஷலிஸ்டாக மாறினார் என்று கூறப்படுவதைப் போல, எச்ஆர்ஏ அமைப்பின் பெயருடன் சோஷலிஸ்ட் என்கிற சொல் சேர்த்துக் கொள்ளப்பட்டதானது மக்களைக் கவர்வதற்காகவோ அல்லது அலங்காரச் சொல்லாகவோ சேர்க்கப்படவில்லை. ஆனால், இந்திய இளைஞர்களின் மிகவும் முன்னேறிய பகுதியினரில் உண்மையாகவும், பண்பளவிலும் ஏற்பட்ட மாற்றத்தை இது குறித்தது. (நூலிலிருந்து பக்.11-12)

மாடர்ன் ரிவீவ்யூ பத்திரிகையின் ஆசிரியர் இன்குலாப் ஜிந்தாபாத் என்கிற முழக்கத்தைப் பரிகசித்தபோது பகத்சிங்கும், தத்தாவும் 1929-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி தி டிரிபியூன்’ பத்திரிகையில் வெளியான அவர்களது கடிதம் ஒன்றில் பதில் அளித்தனர்.

‘புரட்சி என்றால் கண்டிப்பாக ரத்தம் சிந்தப்பட வேண்டும் என்று பொருளல்ல. அது வெடிகுண்டு, துப்பாக்கிக் கலாச்சாரமல்ல. சில இயக்கங்களில் அவை முக்கிய பாத்திரம் வகிக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அந்தக் காரணத்தினாலேயே அவையே ஒரு இயக்கமாக ஆகிவிடுவதில்லை. கலகம் என்பது புரட்சியல்ல. இறுதியில் அது புரட்சிக்கு இட்டுச் செல்லலாம். ‘அந்த சொற்றொடரில் புரட்சி என்கிற சொல் ஓர் உணர்வு, நல்ல மாற்றத்திற்கான ஒரு பெருவிருப்பம் என்கிற பொருளிலேயே பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக மக்கள் ஏற்கனவே நிலை பெற்றுவிட்ட சமூக அமைப்பிற்குப் பழகிவிடுகிறார்கள். மாற்றம் என்கிற சொல்லைக் கேட்டாலேயே நடுங்க ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த சோம்பேறித்தனத்தை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாகப் புரட்சிகர உணர்வை ஊட்ட வேண்டியிருக்கிறது. இல்லை எனில் சீர்கேடு மேலோங்கி மொத்த மனிதகுலமும் பிற்போக்கு சக்திகளால் தவறாக வழிநடத்தப்படும். அத்தகைய ஒரு நிலைமை மனிதகுல முன்னேற்றத்தில் தேக்கத்தை ஏற்படுத்தி அதை முடக்கிப் போட்டுவிடும். மனித குலத்தின் முன்னோக்கிய பீடுநடையைத் தடுப்பதற்குத் தேவையான பலத்தை பிற்போக்கு சக்திகள் பெறாத வண்ணம் மனிதகுலத்தின் ஆன்மாவெங்கும் புரட்சிகர உணர்வு எப்போதும் பரவியிருக்க வேண்டும். பழைய அமைப்பு, மாற வேண்டும்; புதிய அமைப்பிற்கு இடமளிக்க வேண்டும். ஒரு ‘நல்ல’ அமைப்பு உலகைக் கெடுத்து விடாமல் இருக்கும் வண்ணம் எப்போதும் மாறிக் கொண்டே இருக்க வேண்டும்; இந்த அர்த்தத்தில்தான் ‘புரட்சி வாழ்க’ என்ற முழக்கத்தை நாங்கள் எழுப்புகிறோம். (நூலிலிருந்து பக்.20-21)

ராஜகுரு, சுக்தேவ் பகத்சிங் ஆகியோரை தூக்கிலிட்டது நீதிமன்றம் நிகழ்த்திய படுகொலையேயன்றி வேறில்லை. அதுவும் காலனிய அரசு அச்சத்தால் படபடத்த அவசர கதியில் செய்யப்பட்ட படுகொலைகள். மறுநாள் காலையில் அந்த மூன்று புரட்சியாளர்களும் தூக்கிலிடப்படுவார்கள் என்று அஞ்சிய நவ்ஜவான் பாரத் சபா மார்ச் 23-ம் தேதி லாகூரில் பெரும் பேரணி நடத்தியது. மக்கள் கூட்டம் சிறைக்கு வருவதற்கு முந்திக் கொள்வதற்காக பிரிட்டிஷ் அதிகாரிகள் 22-ம் தேதி மாலை 7 மணிக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்று தீர்மானித்தனர்.

படிக்க:
தம்பி தங்கைகளே ! உங்களுக்கு தோழர் பகத்சிங்கை தெரியுமா ? காணொளி
பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் – காம்ரேட்

மரண தண்டனைகள் அதிகாலையில்தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற சர்வதேச விதிக்கு மாறாக அரசு அப்படி தீர்மானித்தது. புரட்சியாளர்களின் உடல்கள் அவசர அவசரமாக துண்டு துண்டாக வெட்டப்பட்டன. சாக்குப் பைகளுக்குள் போட்டு கட்டப்பட்டன. சிறையின் பின்வாசல் வழியாக சட்லஜ் நதிக்கரைக்குக் கடத்திச் செல்லப்பட்டன. அங்கு அவை எரித்து, அழிக்கப்பட்டன. புரட்சியாளர்களின் குடும்பத்தினர், தோழர்கள், மற்றும் அவர்களைப் பின்பற்றுகிறவர்கள் கொடுக்கின்ற முறையான இறுதி மரியாதை அல்லது இறுதிச் சடங்குகளைப் பெறுகின்ற கெளரவமும் அனுமதிக்கப்படவில்லை . (நூலிலிருந்து பக்-26)

நூல்:பகத்சிங் சிறைக் குறிப்புகள்
சிறைக்குறிப்புகள் தொகுப்பு: பூபேந்திர ஹூஜா
தமிழில்: சா. தேவதாஸ்
ஆவணத் தொகுப்பு மற்றும் அடிக்குறிப்புகள்: சமன்லால்
தமிழில் : அசோகன் முத்துசாமி

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி: 044 – 24332424, 24332924.
மின்னஞ்சல்:thamizhbooks@gmail.com
இணையம்:thamizhbooks.com

பக்கங்கள்: 176
விலை: ரூ 110.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க:  panuval

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க