டைசியாக நஸீம் தனது கணவர் காசிமிடம் வீட்டு விசயங்களைக் குறித்துப் பேசியுள்ளார். தினசரி செலவுகள், வாடகை மற்றும் குழந்தைகளுக்கான சாப்பாட்டுச் செலவுகள் பற்றி பேசி 100 ரூபாயை வாங்கிக் கொண்டார். நஸீம் மிக மெலிதான சரீரம் கொண்டவர், அகண்ட கண்களும் கொண்டவர். மறுமுறை சுமார் எட்டு மணி நேரம் கழித்து நஸீம் தனது கணவரை அந்த வீடியோ காணொளித் துண்டில்தான் பார்த்தார். அந்த வீடியோ அதற்குள் உத்திரபிரதேசத்தின் உள்ளொடுங்கிய சிறுநகரமான ஹபூரில் இருந்து நாடெங்கும் பரவியிருந்தது.

வெறும் ஒரு நிமிடம் ஓடும் அந்தக் காணொளி காசிமுக்கு நேர்ந்த கொடூரமான மரணத்தைப் பதிவு செய்து வைத்திருந்தது. முசுலீம்கள் அதிகம் வசிக்கும் மதூர்பூருக்கும் தாக்கூர் சாதி ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பஜேரா குர்த் கிராமத்துக்கும் இடையே உள்ள விவசாய நிலம் ஒன்றில் வைத்து காசிமைத் தாக்கியுள்ளனர் ஹிந்துக்கள்.  பசுமாடு ஒன்றை அறுப்புக்காகத் திருட வந்தார் என்று குற்றம் சாட்டியே காசிமைத் தாக்கினர்.

அடிபட்டு உடலெங்கும் காயங்களோடும், வழியும் இரத்தத்தோடும், உடைகள் கிழிக்கப்பட்டும், வலியில் அரற்றிக் கொண்டே தனது கணவர் வயலின் மத்தியில் விழுந்து கிடப்பதைப் பார்த்தார் நஸீம். மரணத்தின் தருவாயில் தாகத்தால் அலறிக் கொண்டிருந்த காசிமுக்கு அந்தக் கொலைகாரக் கூட்டம்  தண்ணீர் கூட கொடுக்கவில்லை.

காசிம் படுகொலை
காசிமின் மனைவி நஸீம்

”எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நீங்கள் நேசிக்கும் யாருக்காவது இப்படி நடந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?” எனக் கேட்கிறார் நஸீம். “அந்தக் காணொளியும் புகைப்படங்களும் நாடெங்கும் பரவிவிட்டதாகப் பேசிக் கொள்கிறார்கள். இந்த நாடு அதைப் பார்க்கிறதா? உங்களுக்கெல்லாம் அதைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது என கேட்க நினைக்கிறேன்”

காசிம் குரேஷி இனத்தைச் சேர்ந்தவர். பாரம்பரியமாக கால்நடை வியாபாரமும், கசாப்பும் தான் இவர்களது தொழில். காசிம் தங்கள் மாடுகளைக் கடத்தப் போகிறார் என்கிற சந்தேகம் இருந்ததாகவும், இந்த நிலையில் வயலுக்குப் பக்கமாக காசிமைப் பார்க்கநேரவே ஆத்திரத்தில் கிராமவாசிகள் அவரை அடித்திருக்க வேண்டும் எனவும் சொல்கிறார்கள் பஜேரா குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், காசிமின் குடும்பம் இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுக்கிறது. காசிம், ஆடுகளையும் எருமைகளையும் தான் வியாபாரம் செய்தார் என்கிறார்கள் அவர்கள்.

”அப்படியே அவர்கள் எதையாவது சந்தேகப்பட்டிருந்தால் இரண்டு அடியைப் போட்டு காவல் துறையிடம் அல்லவா ஒப்படைத்திருக்க வேண்டும். அல்லது வெறுமனே காவல்துறையிடம் புகாரளித்திருக்க வேண்டும் தானே. இப்படி எங்கள் குடும்பத்தையே நாசமாக்க வேண்டுமா?” எனக் கேட்கிறார் நஸீம். ”அவர்கள் அவரை ஏற்கனவே அடித்து நொறுக்கி விட்டார்கள். அவர் செத்துக் கொண்டிருக்கிறார். அப்புறம் ஏன் நாய் பூனை மாதிரி மிருகங்களை இழுப்பதைப் போல் அவரது உடலை தெருத்தெருவாக இழுத்துக் கொண்டு போனார்கள்?” என்கிறார் நஸீம்.

சம்பவம் நடந்த இடத்தில் ஆம்புலன்சு வாகனங்கள் ஏதும் இல்லை என்பதால் சீக்கிரம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய காசிமை போலீசு வாகனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்கிற அவசரத்தில் அந்த மூன்று காவலர்களும் பொறுப்பின்றி செயல்பட்டு விட்டதாக விளக்கமளித்துள்ள உத்திரபிரதேச மாநில காவல்துறை ‘மன்னிப்பு’ ஒன்றையும் தெரிவித்துள்ளது.

“ஏன் இப்படி நடப்பதை மோடி அனுமதிக்கிறார்? அவர்கள் எங்களுடைய வாழ்வாதாரத்தையே தாக்கிச் சிதைக்கிறார்கள். எங்கள் வீடுகளில் சுள்ளி விறகுகள் கூட எரிந்து விடக் கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள்”

“மன்னிப்பா, யாருக்கு வேண்டும் இந்த மன்னிப்பு? வெறும் மன்னிப்பு மட்டும் போதுமென்றால் எனது கணவர் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பாரே. அவரும் கூட தன்னை அடிக்க வந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டிருப்பார். தன்னை போலீசிடம் ஒப்படைத்து விடுமாறு கேட்டிருப்பார். தண்ணீர் தாருங்கள் என்று கேட்டிருப்பார். ஆனால், தண்ணீர் கூடக் கொடுக்காமல் அடித்தே கொன்று விட்டார்களே” என்கிறார் நஸீம்.

அந்தப் புகைப்படங்களும் காணொளியும் வெளியானதில் இருந்து கொடுமையான நினைவுகளோடே வாழ்ந்து வருகிறார் நஸீம். “நான் அந்த வீடியோக்களைப் பார்க்க விரும்பவில்லை. ஆனால், எனது இதயம் கேட்க மறுக்கிறது. உங்கள் கணவரைப் பார்க்க வேண்டும் என்கிற விருப்பத்தை இதயம் கேட்டுக் கொண்டா இருக்கும்? அவரால் எப்படி அந்த வலியைப் பொறுத்துக் கொள்ள முடிந்தது என்பதை நான் பார்க்க வேண்டும். இறுதி நேரத்தில் அவர் என்ன வார்த்தைகளைச் சொன்னார் என்பதைக் கேட்க வேண்டும். மரணிக்கும் போது அவர் எதை நினைத்துக் கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரிய வேண்டும்” என்கிறார் நஸீம்.

இத்தனைக்கும் மோடி தான் காரணம்.

‘இந்தியாஸ்பெண்ட்’ இணையதளம் நடத்திய ஆய்வு ஒன்றின் படி 2010-ஆம் ஆண்டில் இருந்து பசு பயங்கரவாதத்தால் உயிரிழந்தவர்களில் 84 சதவீதம் பேர் இசுலாமியர்கள். இதில் 97 சதவீத தாக்குதல்கள் மோடியின் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பின் நடந்துள்ளன.

காசிம் படுகொலை
மரணத் தருவாயில் தண்ணீருக்காக மன்றாடும் காசிம்

”மோடி ஆட்சிக்கு வந்த பின் முசுலீம்கள் மாடுகளைக் கொல்வதாக குற்றம்சாட்டப்பட்டு கொல்லப்படுகின்றனர். இதெல்லாம் மோடியால் தான் நடக்கிறது. அவர் இந்துக்களை கட்டுப்படுத்த தவறிவிட்டார். அதனால் இசுலாமியர்கள் கொல்லப்படுகின்றனர்” என்கிறார் நஸீம். காசிமின் மரணத்தைத் தவிர பிரச்சினைக்குரிய எதையும் பேச வேண்டாம் எனத் தடுக்கும் மகளையும் மீறிப் பேசிக் கொண்டிருக்கிறார் நஸீம்.

இந்துக்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையே கால்நடை வியாபாரம் பல ஆண்டுகளாக நடந்து கொண்டு தான் இருப்பதாகக் குறிப்பிடும் நஸீம், தங்களது சமூகம் முன்னெப்போதும் இப்படி அஞ்சி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டதில்லை என்கிறார். “ஏன் இப்படி நடப்பதை மோடி அனுமதிக்கிறார்? இந்தக் கொலைகள் எல்லாம் பசுக்களை காப்பாற்றுவதற்காக நடக்கவில்லை. அவர்கள் எங்களுடைய வாழ்வாதாரத்தையே தாக்கிச் சிதைக்கிறார்கள். நாங்கள் ஏழ்மையிலும் வறுமையிலும் வாடுவதைப் பார்க்க விரும்புகிறார்கள். எங்கள் வீடுகளில் சுள்ளி விறகுகள் கூட எரிந்து விடக் கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள்” என்கிறார் நஸீம்.

உ.பி போலீசு அடித்த பல்டி

இந்தக் கொடூர படுகொலை குறித்த செய்தி பரவுவதால் மக்கள் அதிருப்தி அடைவதை அறிந்த உத்திரபிரதேச போலீசு, நடந்த மரணத்திற்கு ‘சாலை விபத்தே’ காரணம் என்கிறது. போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் பசுக் காவலர்கள் பற்றியோ, கும்பல் கொலை பற்றியோ குறிப்பிடப்படவே இல்லை. ஆனால், கடந்த 23-ஆம் தேதி ஹஃபிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் பேசிய ஹபூர் போலீசு சூப்பிரண்டு சர்மா, காசிமின் மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அதைப் பற்றி இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு அந்தக் குற்றவாளிகள் தூக்கிலேற்றப்பட வேண்டும். எனக்கு நீதி வேண்டும். அதற்காக நான் விடாமல் போராடுவேன். நீதி கிடைக்காவிட்டால் நான் யாரையும் சும்மா விடமாட்டேன்”

காசிம் தாக்கப்படும் காணொளியும் அதில் அவரைக் காப்பாற்ற தலையிடும் மதார்பூர் கிராமத்தைச் சேர்ந்த சமியுத்தீன் என்பவரும் தாக்கப்படும் காட்சிகளும் இந்த வழக்கில் மிக முக்கியமான சாட்சியங்கள். “நாங்கள் எல்லா கோணத்திலும் விசாரிக்கத் தயாராகவே இருக்கிறோம்” என்கிறார் சர்மா.

முதலில் வெளியான காணொளியில் காசிம் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடக்கிறார். அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மாட்டைக் கொல்வது தொடர்பாக கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவன், ‘அடித்த வரை போதும். விளைவுகள் மோசமாகி விடப்போகிறது’ என்கிறான். அதற்கு பதிலளிக்கும் மற்றொருவன் “நாம் இரண்டு நிமிடம் தாமதமாக வந்திருந்தால் இவன் மாட்டைக் கொன்றிருப்பான்’ என்கிறான். “இவன் ஏன் மாட்டைக் கொல்கிறான்” என்கிறான் மற்றொருவன்.

காசிம் படுகொலை
சமியுத்தீன்

இரண்டாவதாக வெளியான காணொளி, உ.பி. போலீசாரின் கட்டுக்கதையை நொறுக்கிப் போடுவதாக இருக்கிறது. அதில் சமியுத்தீனை கொலைகார கும்பலைச் சேர்ந்த சிலர் மோசமாக ஏசுகின்றனர். உடலெங்கும் இரத்தம் வழிந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த வயதான மனிதரால் நிற்கக் கூட முடியவில்லை. கும்பலைச் சேர்ந்த ஒருவன் சமியுத்தீனின் நரைத்த தாடியைப் பற்றி இழுக்கிறான். அந்தக் கும்பல் இவர்களை மாட்டைத் திருட வந்ததாக ஒப்புக் கொள்ளச் சொல்லி மிரட்டுகிறது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் எப்படியோ பிழைத்துக் கொண்ட சமியுத்தீன் தற்போது ஹபூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பஜேரா குர்த் கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் சிசோதியா மற்றும் யுதிஷ்ட்ர சிங் எனும் இருவர் காசிமின் மரணத்தில் தொடர்புடையவர்கள் எனக் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 20-25 நபர்களைத் தேடிவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் மாடுகளையோ, கசாப்பு செய்யும் கத்திகளையோ போலீசார் கண்டெடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள சர்மா, பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே காவலர்கள் பார்த்ததாகச் சொல்கிறார்.

விரக்தியான சூழல்

நஸீம் பள்ளிக்குச் சென்றதேயில்லை. அவருக்கு 12 வயதாகும் போது தன்னை விட 15 வயது மூத்த காசிமைத் திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர்கள் மொத்தம் ஏழு பிள்ளைகள். அதில் ஒரே ஒரு ஆண் பிள்ளையைத் தவிர மற்ற யாரும் பள்ளிக்குச் செல்லவில்லை. தனது கணவர் தினசரி 200 இல் இருந்து 500 வரை கூலியாகச் சம்பாதிப்பார் என்றும், இதை வைத்துக் கொண்டு வீட்டுக்கு 1500 ரூபாய் வாடகையும் கொடுத்த பின் அத்தியாவசிய தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாது என்கிறார் நஸீம். “எங்களிடம் தொலைக்காட்சி கூட கிடையாது. எங்களால் எந்த ஆடம்பரச் செலவும் செய்ய முடியாது” என்கிறார், நஸீம்.

அந்த வீட்டுக்கு அக்கம் பக்கமாக உள்ளவர்கள் தாத்ரியில் கொல்லப்பட்ட முகமது அக்லக்கையும் தாசனா எனும் நகரில் கொல்லப்பட்ட மற்றொரு கால்நடை வியாபாரியையும் நினைவு கூர்ந்தனர். “எங்களுக்கு மூச்சு முட்டுகிறது. நாங்கள் பாதுகாப்பாகவே உணரவில்லை” என்கிறார் நஸீம். அங்கிருந்த மற்றொரு பெண்ணோ, “எங்களை இந்துக்கள் அடியோடு வெறுக்கிறார்கள் என்றால், ஏன் எங்களிடம் கால்நடைகளை விற்கிறார்கள்?” எனக் கேட்கிறார். “முசுலீம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு பதிலாக நாங்கள் பொறுமையையே காட்டிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் புர்கா அணிந்த மற்றொரு பெண். “அவர்கள் காசிமைக் கொன்றதால் பெரிதாக சாதித்து விட்டதாக கருதிக் கொண்டிருக்கலாம். ஆனால், அல்லா அவர்களுக்கு கருணை காட்ட மாட்டான்” என்கிறார், ஒரு வயதான பெண்.

”நாங்கள் பொறியில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த அரசாங்கம் எங்களைப் பற்றியெல்லாம் கவலையே படாது என்பது தெரியும். ஆனாலும், இந்தச் சூழ்நிலையில் நாங்கள் அரசாங்கத்திடம் தான் உதவிக்காக ஓட வேண்டியிருக்கிறது. அவர்கள் காசிமைக் கொன்றவர்களை தண்டிக்க வேண்டும். இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஏதாவது நட்ட ஈடு கொடுக்க வேண்டும்” என்கிறார், அருகில் உள்ள மதார்பூரில் இருந்து வந்திருந்த வயதான முசுலீம் பெண்மணி.

காசிம் படுகொலை
சமியுத்தீனின் மகள்கள், சையீதா, ஷாய்தா

பசு பயங்கரவாதிகளால் நிகழும் கொலைகளைக் குறித்து கேள்விபட்டிருந்தும் கால்நடை வியாபாரத்தைக் கைவிடுமாறு தனது கணவரிடம் நஸீம் கேட்கவில்லை. “எங்களுக்கு பயமாகத் தான் இருந்தது. ஆனால், நாங்கள் வேறு என்ன செய்ய முடியும்? வாழ்வதை நிறுத்தி விட முடியாதே” என்கிறார் நஸீம்.

மதார்பூரைச் சேர்ந்த ஷாய்தாவும் சையீதாவும் தங்களது வயதான தந்தை அடிவாங்குவதையும் அவரது தாடி இழுக்கப்படுவதையும் புகைப்படங்களாகப் பார்த்து இன்னமும் நடந்த சம்பவத்தை சீரணிக்க முடியாமல் தவிக்கின்றனர். இவர்கள் இருவரும் சமியுத்தீனின் மகள்கள். அந்தக் காணொளியில் இருந்த அனைத்துமே கொடூரமானவை எனக் குறிப்பிடும் அவர்கள் தங்கள் தந்தையின் தாடியைப் பிடித்து இழுத்த காட்சி தங்களை நொறுக்கி விட்டது என்கின்றனர்.

“அல்லாவுக்கே வெளிச்சம். தாடி என்பது பெரியவர்களுடைய மரியாதையின் அடையாளம். எனக்கு முன்பாக அப்படி நடந்திருந்தால் என் கையாலேயே அந்தக் கயவர்களைக் கொன்றிருப்பேன். அதற்குப் பின் எனக்கு என்ன ஆனாலும் கவலையில்லை” என்கிறார் சையீதா. 17 வயதான சையீதாவுக்கும், 20 வயதான ஷாய்தாவுக்கும் எழுதப்படிக்கத் தெரியாது. நடந்த சம்பவத்தை தனது உறவினர்கள் காட்டிய காணொளியின் மூலமே அறிந்து கொண்டனர். விவசாயம் செய்து கொண்டிருக்கும் தங்கள் தந்தையால் பசுமாடுகளைக் கொல்ல முடியாது என்கிறார்கள் அந்தச் சகோதரிகள்.

”அவருக்கு ரொம்பவே வயதாகிவிட்டது. ஒரு மாட்டை வெட்டிக் கொல்லும் அளவுக்கான ஒரு பொருளைப் பிடித்துத் தூக்கவே அவருக்கு சக்தியில்லை” என்கிறார் ஷாய்தா. மேலும், “அப்படியே அவர்கள் தப்பு செய்ய திட்டமிட்டார்கள் என்பது உண்மையாக இருந்தாலும், அவர்கள் போலீசிடம் தானே புகார் அளித்திருக்க வேண்டும்? இவர்களாக எப்படி அடித்துக் கொல்லாம்” என்கிறார்.

உ.பி. போலீசு பொய் சொல்கிறதா?

பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒரே ஒரு விசயம் மட்டும் பொதுவாக உள்ளது. அவர்கள் இருதரப்பினருமே உ.பி. போலீசாரின் விசாரணையை நம்பவில்லை. போலீசால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை காசிமையும் சமியுத்தீனையும் இருசக்கர வாகனம் ஒன்று இடித்து விட்டதாகவும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறு காரணமாகவே இருவரும் தாக்கப்பட்டர்கள் என்றும் குறிப்பிடுகிறது. சாலை விபத்து என வழக்கை முடிக்க போலீசார் முனையவில்லை என்றும், சமியுத்தீனின் சகோதரர் யாசின் சொன்னதன் பேரிலேயே அவ்வாறு அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்றும் சொல்கிறார் சூப்பிரெண்டு சர்மா.

ஆனால், கடந்த 21-ஆம் தேதி தில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சமியுத்தீனின் மற்றொரு சகோதரர் மெகருத்தீன், தனது சகோதரர் யாசின் எப்படி புகார் தரவேண்டும் என போலீசார் தான் சொல்லிக் கொடுத்தார்கள் என்கிறார். “எங்களுக்குத் தேவை நீதி. இப்படி புகார் கொடுத்தால் நியாயம் பெற்றுத் தருகிறோம் என்று போலீசார் சொன்னதாலேயே யாசின் கையெழுத்துப் போட்டார்” என்கிறார் அவர்.

காசிம் படுகொலை
கொல்லப்பட்ட காசிமை தலைகுப்புற தூக்கி இழுத்து வரும் காட்சி

அதே போல் கைது செய்யப்பட்டுள்ள ராகேஷ் சிசோதையாவின் சகோதரர் உதய், சம்பவம் நடப்பதற்கு முன்பே தனது சகோதரர் காவல் நிலையத்துக்கு தொலைபேசியில் அழைத்து வன்முறை நிகழப் போவது குறித்து எச்சரித்ததாக குறிப்பிடுகிறார். மேலும் பிரச்சினை தொடங்கியதற்கு ஒரு மணி நேரம் கழித்து தான் போலீசார் வந்ததாக குறிப்பிடும் உதய், “எனது சகோதரனின் தொலைபேசிப் பதிவுகளை போலீசார் வெளியிட வேண்டும். அப்படி வெளியிட்டால் எனது சகோதரன் போலீசாரை அழைத்ததும் அவர்கள் தாமதமாக வந்ததும் நிரூபணமாகும்” என்கிறார்.

குற்றம் நடந்த இடத்தில் ஒரு பசுவையும் கன்றையும் கைப்பற்றிய போலீசார், அவற்றை கிராமவாசி ஒருவரிடம் ஒப்படைத்ததாகவும், இப்போது அனைத்தையும் மூடி மறைக்க முயல்வதாகவும் பஜேரா குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் போலீசாரின் மேல் குற்றம் சாட்டுகின்றனர்.

ஹஃபிங்டன்போஸ்டின் நிருபர்கள் கிராமவாசிகளிடம் பேசிய போது தங்களது அடையாளத்தை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட ஒரு தந்தையும் மகனும், ஜூன் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அந்தப் பசுவும் கன்றும் தங்கள் பாதுகாப்பில் தான் இருந்ததாக குறிப்பிடுகின்றனர்.

நீதி எங்கே?

தனது கணவரின் மரணத்தை அடுத்து இசுலாமிய முறைப்படி நான்கு மாத துக்கம் அனுஷ்டிக்கும் நஸீம், இந்த வழக்கை தான் அத்தனை சுலபத்தில் விட்டு விடமாட்டேன் என்கிறார். தனது 17 வயது மகன் ஆசிஃபை இரண்டு வருடங்களுக்கு முன் விபத்து ஒன்றில் பறிகொடுத்த நஸீம் ஏற்கனவே மனதொடிந்து போயிருந்த நிலையில் தற்போது கணவரின் மரணத்தால் நிலைகுலைந்து போயிருக்கிறார்.

“எனக்கு அந்தக் குற்றவாளிகள் தூக்கிலேற்றப்பட வேண்டும். எனக்கு நீதி வேண்டும். அதற்காக நான் விடாமல் போராடுவேன். நீதி கிடைக்காவிட்டால் நான் யாரையும் சும்மா விடமாட்டேன்” என்கிறார் நஸீம்.

காசிமின் சடலம் போலீசாரின் முன்னிலையிலேயே இழுத்துச் செல்லப்படும் புகைப்படங்கள் பரவிய பின் போலீசார் ”வருத்தம்” தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் மேற்படி ‘வருத்தத்தை’ தெரிவிக்க எந்தப் போலீசாரும் நேரில் வரவில்லை என்கின்றனர் காசிமின் குடும்பத்தார். ”இதே போல் போலீசாரைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றால் அவர்களுக்கு எப்படி இருக்கும்? அவர்களது குழந்தைகளும் இதே போல் அனாதைகளாகி விட்டால் எப்படி உணர்வார்கள்? இந்தப் போலீஸ்காரர்களை என்ன தான் செய்வது? எங்கே இருக்கிறது நீதி” எனக் கேட்கும் நஸீம், “இனிமேல் எந்த முசுலீமுக்கும் இப்படி நடக்காது என்று மோடியே சொல்ல வேண்டும்” என்கிறார்.

நன்றி: ஹஃபிங்டன் போஸ்ட்
(Huffingtonpost.in இணையதளத்தில் பெத்வா சர்மா அவர்கள் எழுதிய கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்)
தமிழாக்கம்: சாக்கியன்
I Blame Modi, Says The Muslim Woman Who Watched Her Husband Lynched And Dragged By A Hindu Mob In Hapur

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க