Saturday, June 15, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்இந்தியாகுஜராத் : இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்தக்கூடியவர்கள் யார் ?

குஜராத் : இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்தக்கூடியவர்கள் யார் ?

-

தேர்தல் அரசியலில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் சரி, காங்கிரசு கட்சியின் இந்துத்துவ எதிர்ப்பு பேச்சுகளில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் சரி, ஒரு சிறிய ஏமாற்றம். “குஜராத்தில் மோடி தோற்றிருக்க கூடாதா?” என்ற அங்கலாய்ப்பு.

பாஜக எப்படி வென்றது என்ற கேள்விக்கு பல பதில்கள் உள்ளன :

முதலாவது பதில் – ஓட்டுப்பதிவு எந்திர மோசடி. 2002 -இல் தேர்தல் வெற்றிக்காக ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொலை செய்யக் கூசாத கொடியவர்களும், பொய் வீடியோ, பொய் புகைப்படம், பொய் செய்தி ஆகியவற்றை பரப்புவதில் கைதேர்ந்தவர்களுமான காவி கிரிமினல்கள், இத்தகைய தில்லுமுல்லுகளை செய்யமாட்டார்கள் என்று கருத இடமேயில்லை. இருப்பினும், மிசின் தான் பிரச்சினையா, மற்றப்படி குஜராத் மக்கள் இந்துத்துவத்தின் பிடியிலிருந்து மீண்டுவிட்டார்களா, என்பதுதான் நாம் விடை காண வேண்டிய கேள்வி.

காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்திருக்கின்றன. அதன் முன்னேற்றம் என்பது, இந்துத்துவ அரசியலிடம் சரணடைந்து பெற்ற முன்னேற்றம் என்பதை பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். ராகுல் காந்தி கோயில் கோயிலாகப் போனார் என்பது மட்டுமல்ல, மதச்சார்பின்மை என்ற சொல்லையோ, முஸ்லிம்கள் என்ற சொல்லையோ குஜராத்தில் அவர் தவறிக்கூட உச்சரிக்கவில்லை. அது “இந்து பெரும்பான்மையின் மனதை புண்படுத்தி விடும்” என்பது காங்கிரசின் அச்சம். இந்திராவும், ராஜீவும் பயன்படுத்திய மிதவாத இந்துத்துவம் என்ற துருப்புச் சீட்டுதான் இது.

தோல்வி பீதிக்கு ஆளான மோடி, “பாகிஸ்தான் – ஔரங்கசீப்” என்று வெறிக்கூச்சலை கிளப்பிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் “பாபு பஜ்ரங்கி, பிரவிண் தொகாடியா போன்ற படேல் சாதியினரை மோடி பலி கொடுத்துவிட்டாரென்றும் அவர்கள்தான் ஒரிஜினல் இந்துத்துவவாதிகள் என்றும்” ஹர்திக் படேல் பேசிக் கொண்டிருந்தார்.

“பாஜக இந்துத்துவக் கட்சி என்று எல்லோருக்கும் தெரியும். ஒரிஜினல் நாங்கள் இருக்கும்போது, குஜராத் மக்கள் டூப்ளிகேட்டுக்கு எப்படி ஓட்டுப்போடுவார்கள்?” என்று சொல்லி ராகுலின் கோயில் யாத்திரையை கிண்டல் செய்தார் அருண் ஜேட்லி.

ஒருவேளை காங்கிரசு வெற்றி பெற்றிருந்தால் அந்த வெற்றியின் “தன்மை” எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு இது ஒரு சோற்றுப்பதம்.

***

ங்கில இந்து நாளேட்டின் 19.12.2017 தேதியிட்ட இதழின்  நடுப்பக்கத்தில், குஜராத்தை பாஜக வெற்றி கொண்டது எப்படி என்ற தலைப்பில் சிரேயஸ் சர்தேசாய், சஞ்சய் குமார் ஆகியோர் எழுதியிருக்கும் கட்டுரையில் கூறப்பட்டுள்ள சில விசயங்கள் கவனிக்கத்தக்கவை. லோக்நிதி, சி.எஸ்.டி.எஸ் ஆகிய அமைப்புகளின் சார்பில் அவர்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளில் சேகரித்த விவரங்களை அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்கள்.

“ஐந்தில் இரண்டு வாக்காளர்கள் யாருக்கு ஓட்டுப்போடுவது என்பதை கடைசி வாரத்தில்தான் முடிவு செய்தார்கள். அவர்களில் 53% பாஜகவுக்கும், 38% காங்கிரசுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். இந்த கடைசி நாட்களில்தான் மதவெறியைத் தூண்டுகின்ற சங்கேத மொழியிலான பிரச்சாரம் மோடியால் முடுக்கி விடப்பட்டது” என்று கட்டுரையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இது மட்டுமல்ல, எந்த தொகுதிகளில் முஸ்லிம் மக்கள்தொகை குறைவாக இருக்கிறதோ அங்கெல்லாம் இந்துக்களின் வாக்கு மேலதிகமாக காங்கிரசுக்கு விழுந்திருக்கிறது என்றும், முஸ்லீம்களின் மக்கள்தொகை சற்று அதிகமாக உள்ள இடங்களில் இந்து வாக்குகள் பாஜக -வுக்கு சென்றிருக்கின்றன என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தங்களது வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கின்ற பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, வேலைவாய்ப்பின்மை போன்ற பல பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றைப் புறந்தள்ளும் அளவுக்கு, இந்து சமூகத்தின் கணிசமான பிரிவினர் மதவெறிக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதற்கு இது சான்று.

திருச்சியிலிருந்து ஒரு நண்பர் சொன்னார். குஜராத் தேர்தல் முடிவுகளைப் பார்த்து ஆத்திரமடைந்த காந்தி மார்க்கெட் சிறுவியாபாரிகள், “என்னய்யா குஜராத் மக்கள் இவனுங்களுக்கு அறிவு சொரணை இருக்கா?” என்று கொந்தளித்தார்களாம். 2002 -இல் ஒரு மிகப்பெரிய இனப்படுகொலையை நேரடியாக கண்ணால் பார்த்த பின்னரும் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல், இதே குஜராத் மக்கள் இந்துத்துவ கொலைகாரர்களுக்கு வாக்களித்தபோது, இப்படியொரு கேள்வி இவர்களிடமிருந்து வரவில்லை. 2014 -இல் அந்தப் படுகொலையின் நாயகன் பிரதமரானபோதும் இந்தக் கேள்வி வரவில்லை. பண மதிப்பழிப்பு – ஜி.எஸ்.டி. -க்கு பிறகுதான் இந்த தேசத்தின் சொரணையற்ற நிலை குறித்து நம் வியாபாரிகளுக்கு உறைக்கிறது என்பதை அவர்களுக்கு நாம் உரைக்க வேண்டியுள்ளது.

இந்த வியாபாரிகளுக்கான பதிலை டிசம்பர் 6 -ம் தேதியன்றே பத்திரிகையாளர் ராணா அயூப், (குஜராத் ஃபைல்ஸ் நூலின் ஆசிரியர்} கூறிவிட்டார். ஜி.எஸ்.டி. -க்கு எதிராக சூரத்தில் தர்ணா போராட்டம் நடத்திக் கொண்டிருந்த வைர வியாபாரி ஒருவரிடம், “உங்களுடைய இந்தக் கோபம் வர இருக்கும் தேர்தலில் மோடிக்கு எதிராக பிரதிபலிக்குமா?” என்று கேட்டாராம். அதற்கு அந்த வியாபாரி சொன்னாராம். “இது வேறு, அது வேறு. நான் சொத்தை வித்தாவது மோடியை ஜெயிக்க வைப்பேன்” என்றாராம்.

குஜராத் தேர்தல் முடிவு பற்றி ஜிக்னேஷ் மேவானி கூறியிருக்கும் கருத்தும் (தமிழ் தி இந்து, 19.12.2017) நம் கவனத்துக்குரியது. “குஜராத்திகள் பாஜக மீது வைத்திருப்பது பாசமல்ல, பயம். தோல்வியடைந்தால் பாஜக -வினரே மதக்கலவரத்தை ஏற்படுத்துவார்கள். அதன் காரணமாகவே வணிகர்களும் நடுத்தர மக்களும் பாஜக -வுக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள்” என்கிறார் ஜிக்னேஷ் மேவானி.

பாசமும் இருக்கிறது பயமும் இருக்கிறது என்பதுதான் உண்மை. தமது உடனடி வர்க்க நலன்கள் (வேலை வாய்ப்பு முதல் வணிகம் வரை) பாதிக்கப்பட்டாலும், அவற்றையும் மீறி மோடியை ஆதரிக்கும் அளவுக்கு இந்துத்துவ பாசம் இருக்கிறது. அதாவது, தானாடாவிட்டாலும் தசையாடும் என்று கூறுமளவுக்கு அந்தப் பாசம் குஜராத்தில் கணிசமான மக்கட் பிரிவினரிடம் இயல்பாகியிருக்கிறது.

அதேபோல பயமும் இருக்கிறது. ஜிக்னேஷ் மேவானி குறிப்பிடும் அந்தப் பயத்தை பெரும்பான்மை சமூகத்திடம் ஏற்படுத்துவதுதான் பாசிஸ்டுகளின் நோக்கம். கல்புர்கி, பன்சாரே, தபோல்கர், கவுரி லங்கேஷ் முதலானோரின் கொலையில் தொடங்கி நீதிபதி லோயாவின் மர்ம மரணம் வரையிலான அனைத்தின் நோக்கமும் இதுதான்.

***

ந்துத்துவ பாசிசத்தின் மீதான இந்தப் பாசத்திலிருந்து சித்தாந்த ரீதியாகவும், அவர்கள் மீதான பயத்திலிருந்து நடைமுறை ரீதியாகவும் மக்களை விடுவிக்கின்ற சாத்தியம் தேர்தல் அரசியலில் இருக்கிறதா?

இந்தக் கேள்விக்கு பல முற்போக்காளர்களிடம் தயாரான பதில் இருக்கிறது. “தேர்தல் அரசியலுக்கு அப்பால் என்று பேசுவதெல்லாம் உடனடியாக ஆகக்கூடிய காரியங்கள் அல்ல. அதெல்லாம் வெறும் வாய் வீச்சு. நடைமுறையில் ஆகக்கூடியது தேர்தலில் பாஜக -வை தோற்கடிக்க வேலை செய்வது ஒன்றுதான்”

இந்தப் பதிலை நமது சமீபத்திய அனுபவத்துடன் சேர்த்துப் பரிசீலித்துப் பார்ப்போம். 2014 மோடியின் வெற்றிக்குப் பிறகு, கேஜ்ரிவால் டில்லியில் பெற்ற வெற்றி மிகவும் முக்கியமானதாக கொண்டாடப்பட்டது.

அரசியல் கட்சிகள் அரசு எந்திரம் உள்ளிட்ட இந்த அரசமைப்பின் தோல்வி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை மையப்படுத்தி, “ஜனாதன சர்க்கார்” என்ற அரசியலற்ற என்.ஜி.ஓ. முழக்கத்தை முன்வைத்த கேஜ்ரிவால், தவறியும் இந்துத்துவ எதிர்ப்பு பேசவில்லை. நல்லிணக்கம் பேசுகின்ற இந்துவாகவே தன்னை முன்நிறுத்திக் கொண்டது மட்டுமல்ல, ஜாட் சாதிவெறியர்களின் காப் பஞ்சாயத்தை நமது பண்பாட்டின் அங்கம் என்று கூறி சொறிந்து விடும் வகையிலும், காஷ்மீர் விவகாரத்தில் பாஜக -வை வழிமொழியும் வகையிலும் இருந்தது அவருடைய அரசியல்.

தேர்தல் அரசியலில் இந்துத்துவ எதிர்ப்புக்கு கிடைத்த அடுத்த நம்பிக்கை நட்சத்திரம், லாலு – நிதீஷ் கூட்டணி. சாதிய பிழைப்புவாதிகள், சாதி வெறியர்கள், ஊழல் பேர்வழிகள், நிரூபிக்கப்பட்ட அரசியல் சந்தர்ப்பவாதிகள் ஆகியோரெல்லாம் சேர்ந்து அமைக்கும் கூட்டணி என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும், “இப்போதைக்கு இதுதான் சாத்தியம்” என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டு, இந்துத்துவத்தை வீழ்த்துவதற்கான மாபெரும் முன்மாதிரி என்று இந்தக் கூட்டணியைக் கொண்டாடினார்கள் பல முற்போக்காளர்கள். எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த பலூனில் நிதீஷ் ஊசியைக் குத்தினார்.

“ராகுல் அகிலேஷ் ஆகியோர் மாயாவதியுடன் இணைந்து கூட்டணி அமைத்திருந்தால் உ.பி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வை வீழ்த்தியிருக்க முடியும்” என்று, வாக்குப்பதிவு குறித்த புள்ளி விவரங்களைக் கையில் வைத்துக்கொண்டு, தேர்தலுக்குப் பின் அங்கலாய்த்துக் கொண்டார்கள் பல முற்போக்காளர்கள்.

“நடைமுறையில் ஆகக்கூடிய ஒரே வழி” என்று பெரிதும் நம்பப்படும் தேர்தல் அரசியலில், இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் என்று நம்பப்படும் கட்சிகளின் உண்மையான நிலை இதுதான்.

காங்கிரசும் பாஜக -வும் ஒன்றல்ல, சமாஜ்வாதியும் பாஜக -வும் ஒன்றல்ல அதேபோல ஆம் ஆத்மியும் பாஜக -வும் ஒன்றல்ல என்பதென்னவோ உண்மைதான். ஆனால், “இந்துத்துவவாதிகள் அல்லர்” எனப்படுவோரெல்லாம் “இந்துத்துவ எதிர்ப்பாளர்”களாகி விடுவார்களா? அவ்வாறு நாம் கற்பிதம் செய்து கொள்வது இந்துத்துவ பாசிசத்தை எதிர்ப்பதற்கு உதவுமா, ஊறு விளைவிக்குமா என்பதே கேள்வி.

இது “ஓட்டுப்போடுவதா, தேர்தலைப் புறக்கணிப்பதா” என்ற கேள்வியல்ல, இந்துத்துவ பாசிசத்தை முறியடிக்க தேர்தல் அரசியல் பயன்படுமா? என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையை எதார்த்தமாக நம் கண் முன்னே இருக்கும் உண்மை விவரங்களிலிருந்து பரிசீலிக்க வேண்டும்.

***

ந்துத்துவ பாசிசம் என்பது “முஸ்லிம் எதிர்ப்பு அல்லது பன்முகத்தன்மை எதிர்ப்பு” என்று மட்டுமே பொதுப்புத்தியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சாதிய, இன, மொழி ஒடுக்குமுறைகள் அடங்கிய பார்ப்பனிய உள்ளடக்கமும் தரகு முதலாளித்துவ, ஏகாதிபத்திய சார்பு உள்ளடக்கமும் பிரிக்கவொண்ணாத வகையில் பிணைந்திருப்பதுதான் இந்துத்துவ பாசிசத்தின் அரசியல்.

மோடியின் பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. மற்றும் பிற நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மக்களில் பெரும்பான்மையினர் இந்துக்கள்தான். இப்படி விவசாயிகள், பழங்குடிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், சுய தொழில் செய்வோர் என இந்த நாட்டின் ஆகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்களை சூறையாடுகின்ற மோடியின் “வளர்ச்சிப் பாதை”க்கான (விகாஸ்) சித்தாந்த நியாயம் பார்ப்பனியத்தில் இருக்கிறது.

பெயரளவிலான ஜனநாயகத்தைக் கூட சகித்துக் கொள்ளவியலாது என்கின்ற புள்ளியில், “வர்க்கச் சுரண்டலும், ஏற்றத்தாழ்வும் தவிர்க்கவியலாத விதிகள்” என்று தலையெழுத்தைப் போல சகித்துக் கொள்ளச் சொல்கின்ற புள்ளியில், புதிய தாராளவாதமும் பார்ப்பனியமும் ஒன்று கலக்கின்றன.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்துத்துவம் என்ற சொல்லையே உச்சரிக்காமல் “விகாஸ் விகாஸ்” என்று முழங்கிய மோடி, 2017 குஜராத் தேர்தலில் விகாஸ் பற்றியோ, குஜராத் மாடல் பற்றியோ மூச்சு விடாமல், இந்துத்துவம் பேசிவிட்டு, இப்போது தேர்தலில் வெற்றி பெற்றவுடன் இது “என்னுடைய சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றி” என்கிறார்.

“இந்துத்துவம் – விகாஸ்” ஆகிய இரண்டையும் பிரித்துக் கையாள்வது எப்போதுமே மோடிக்குத்தான் சாதகமாக இருந்து வருகிறது. ஆனால் மோடியை எதிர்ப்பதற்கு தேர்தல் கட்சிகளை சார்ந்திருப்பவர்களும்கூட இரண்டையும் பிரித்தே கையாள்கிறார்கள். அவ்வாறு பிரித்துக் கையாளாவிட்டால் ராகுலை முன்னிறுத்தி மோடியை எதிர்ப்பது அவர்களுக்கு சாத்தியமற்றதாகிவிடும்.

இந்துத்துவ எதிர்ப்பை தேர்தல் அரசியலின் வரம்புக்கு உட்படுத்தும்போது தோன்றும் முரண்பாடு இது ஒன்று மட்டுமல்ல.

அரசியல் கட்சிகள் கொள்கையற்ற பிழைப்புவாதிகள் ஆகியிருப்பதைப் போலவே, நீதித்துறை, போலீசு, அதிகார வர்க்கம், ஊடகங்கள் ஆகியவை உள்ளிட்ட ஒட்டு மொத்தக் கட்டமைவும் தானே வகுத்துக் கொண்ட விதிகளுக்கு கட்டுப்பட மறுப்பவையாக மாறிவிட்டன. உச்ச நீதிமன்றம் தொடங்கி கீழமை நீதிமன்றங்கள் வரையில் சந்தி சிரிக்கும் ஊழல், முறைகேடான தீர்ப்புகள், அதிகார வர்க்கம் போலீசின் கிரிமினல் நடவடிக்கைகள் ஆகியவை, ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் பார்ப்பன பாசிசம் தன் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கின்றன. அரசமைப்பின் இந்த உறுப்புகள் இந்துத்துவ சார்பாக மாறும் போக்கையும் துரிதப்படுத்தியிருக்கின்றன.

இவையெதுவும் சிக்கலான கோட்பாட்டு விவகாரங்கள் அல்ல. தன்னைப் பேச அனுமதிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தை விட்டு வெளியறுகிறார் பிரசாந்த் பூஷண். வழக்கறிஞர் தொழிலை விட்டு விலகுகிறார் ராஜீவ் தவான். குஜராத் படுகொலைகளின் நாயகர்களான காக்கி உடைக் கிரிமினல்கள் பதவி உயர்வு பெறுகிறார்கள். பிரபல ஊடகவியலாளர்கள் நேரடியாக மிரட்டப்படுகிறார்கள். ஊடகங்கள் அடாவடியாக இந்துத்துவப் பொய்களை கடை விரிக்கின்றன. அதிகார வர்க்கத்தின் கேந்திரமான பதவிகளில் சங்க பரிவாரத்தினர் அமர்த்தப்படுகிறார்கள். தேர்தல் ஆணையமும், சிபிஐ-யும், வருமானவரித்துறையும், வருவாய் புலனாய்வுத்துறையும் நேரடியாக பாபு பஜ்ரங்கியைப் போலவும், வன்சாராவைப் போலவும் செயல்படுகின்றன.

“எந்த நிறுவனத்தையும் நம்ப முடியவில்லை” என்று கையறு நிலையில் நின்று தேர்தல் கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள். “இந்துத்துவ பாசிசத்தின் மீதான பயம்” என்பது ஜிக்னேஷ் மேவானி கூறுவதைப் போல மக்களிடம் மட்டும் நிலவவில்லை. மக்களைக் காட்டிலும் அந்தப் பயம் தேர்தல் கட்சிகளைத்தான் அதிகமாகப் பிடித்தாட்டுகிறது.

***

“புலிக்குப் பயந்தவர்கள் என்மீது படுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறும் நிலையில் இருக்கும் தேர்தல் கட்சிகள், புலியிடமிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடுமா?

அக்லக், பெஹ்லு கான் கொலைகளுக்கு எதிராக இந்த தேர்தல் கட்சிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? லவ் ஜிகாத் என்று பொய்க்குற்றம் சாட்டி அப்ரசூல் என்ற முஸ்லீமைக் கொன்ற கொலைகாரனுக்கு ஆதரவாக ஒரு கூட்டம் ராஜஸ்தான் நீதிமன்றத்தில் காலித்தனம் செய்கிறது. நீதிமன்றக் கூரையின்மீது காவிக்கொடி ஏற்றுகிறது. எந்தக் கட்சி இதனை எதிர்த்து மோதியது?

இந்துத்துவத்துக்கும் மறுகாலனியாக்கத்துக்கும் ஏற்ப இந்த அரசமைப்பு தன்னைத் தகவமைத்துக் கொண்டு வருகிறது. இந்த அரசமைப்பின் வரம்புக்குள் நின்று இவற்றுக்கு எதிராக கருத்து கூறுவதற்கான வாய்ப்புகளே கூட குறைந்து கொண்டு வருவதையே எல்லா நிகழ்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.

யார் களத்தில் நேருக்கு நேர் நின்று இந்துத்துவ பாசிஸ்டுகளை எதிர்கொள்கிறார்களோ அவர்கள்தான் இந்த பாசிசத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும்.

யார் களத்தில் நேருக்கு நேர் நின்று இந்துத்துவ பாசிஸ்டுகளை எதிர்கொள்கிறார்களோ அவர்கள்தான் இந்த பாசிசத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும். இந்துத்துவ பாசிச நடவடிக்கைகளாக இருக்கட்டும், புதிய தாராளவாதக் கொள்கைகளின் தாக்குதல்களாக இருக்கட்டும் அவற்றை எதிர்த்து சமரசமில்லாமல் களத்தில் நின்று போராடுபவர்கள் கட்சி சார்பற்ற தன்னார்வலர்களும் மக்களும்தான். நெடுவாசல், கதிராமங்கலம், குமரி முதல் நாடெங்கும் நாம் காணும் உண்மை இது. இத்தகைய போராட்டங்களுக்கு வருகை புரிந்து வாழ்த்துரை வழங்கும் வேலையை மட்டுமே தேர்தல் கட்சிகள் செய்து வருகின்றன. அது அவர்களுடைய வரம்பு.

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் கைக்கூலி என்று நூறு முறை அறிக்கை விடுவார்கள். நூற்று ஒன்றாவது முறையும் ஆணையத்திடம் முறையிடுவார்கள். பின்னர் மீண்டும் புலம்புவார்கள். ஏனென்றால் அவர்களுடைய நலன் அதில் இருக்கிறது. ஆகப்பெரும்பான்மையான கட்சிகள் இந்துத்துவ எதிர்ப்பு என்ற கொள்கை அடிப்படையில் கட்டப்பட்டவை அல்ல. சாதி, பிழைப்பு, பதவி என்பவைதான் அவர்கள் நோக்கம். எனவே, இந்த அரசமைப்பு விதிக்கின்ற எல்லைக்கு உட்பட்டுத்தான் செயல்பட வேண்டும் என்ற வரம்பு அவர்களுக்கு இருக்கிறது.

அத்தகைய வரம்பு எதுவும் மக்களுக்கு இல்லை. இந்த வரம்புக்குள் நின்றால் வாழவே முடியாது என்ற நிலையை நோக்கி மக்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள். எனவேதான் தன்னியல்பாக அவர்கள் பல இடங்களில் வரம்புகளை மீறுகிறார்கள்.

***

க்கி புயலால் தாக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள், காணாமல் போன தங்கள் சொந்தங்களை மீட்டுத்தருமாறு கெஞ்சினார்கள், கதறினார்கள், போராடினார்கள் – பயனில்லை. எடப்பாடி அரசுக்கும், மோடி அரசுக்கும், கடற்படைக்கும், கடலோர காவல் படைக்கும் அது குறித்த அக்கறை கடுகளவும் இல்லை.

சில நாட்களுக்கு முன் விசைப்படகுகளில் குமரி மாவட்டத்திலிருந்து புறப்பட்ட மீனவர்கள் லட்சத்தீவுக்கு அருகே, புயலில் பழுதாகி நின்று கொண்டிருந்த ஒரு படகில் தவித்துக் கொண்டிருந்த மீனவர்களை நேற்று மீட்டிருக்கிறார்கள். இன்னும் எங்கெல்லாம் மீனவர்கள் இருக்கக் கூடுமோ அங்கெல்லாம் தேடியும் வருகிறார்கள்.

இந்த அரசிடம் முறையிட்டுப் பயனில்லை என்ற கருத்துக்கு ஒரு சில நாட்கள் முன்னரே வந்திருந்தால் ஒருவேளை அவர்கள் மேலும் சிலரை மீட்டிருக்க முடியும்.

விமானமும், ஹெலிகாப்டரும், கப்பல்களும் இந்த மீனவர்களின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டவையாக இருந்திருந்தால் மேலும் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்.

“மீனவர்களின் அதிகாரத்தின் கீழ் கப்பல்களா, அதெல்லாம் சாத்தியமா?” என்று மீனவர்களே கூட எண்ணக் கூடும். கப்பல்படை பயன்படாது என்று மீனவர்கள் பிரகடனம் செய்து விட்டார்கள். நடைமுறையில் தங்களைத் தாங்களே மீட்டுக் கொண்டுவிட்டார்கள். எதை அவர்களே சாத்தியமாக்கிவிட்டார்களோ, அதுவே ஒரு கருதுகோள் என்ற வகையில் சாத்தியமற்றதாகத் தெரிகிறது.

‘தேர்தல் அரசியலுக்கு வெளியே இந்துத்துவ பாசிசத்தை முறியடிக்க முடியுமா?’ என்ற ஐயமும் இதைப் போன்றதுதான்.

“Be Realistic, Demand the Impossible!” என்பது 1968 இல் நிகழ்ந்த பிரெஞ்சுக் கிளர்ச்சியில் மாணவர்கள், தொழிலாளர்கள் எழுப்பிய முழக்கம்.

ஆம். “சாத்தியமற்றது” என்பது ஒரு மதிப்பீடு மட்டுமே. “உண்மை” என்பது உங்களுடைய அல்லது என்னுடைய “மதிப்பீடு” அல்ல – அது உண்மை!

உண்மையை எதிர்கொள்! சாத்தியமற்றதைக் கேள்!

– மருதையன்


 

 1. எத்தனை முற்போக்காளர்களை இது சென்றடையப் போகிறது? எத்தனை முற்போக்காளர்கள் இதை உணரப்போகிறார்கள்?

  இதோ ஆரம்பித்துவிட்டார்கள் ஜிக்னேஷ் மோவானி என்று..

 2. //விமானமும், ஹெலிகாப்டரும், கப்பல்களும் இந்த மீனவர்களின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டவையாக இருந்திருந்தால் மேலும் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்.//

  These area fishermen are mostly Christian & Muslims,
  that is why this RSS/BJP Modi Government not used the aircraft,Helicopters and ships of Navy& Coast Guards.

 3. /“சாத்தியமற்றது” என்பது ஒரு மதிப்பீடு மட்டுமே. “உண்மை” என்பது உங்களுடைய அல்லது என்னுடைய “மதிப்பீடு” அல்ல – அது உண்மை!/

  நல்ல கட்டுரை என்று பதிவிட்டு, புளகாங்கிதம் அடைவது அயோக்கியத்தனம்.

  /‘தேர்தல் அரசியலுக்கு வெளியே இந்துத்துவ பாசிசத்தை முறியடிக்க முடியுமா?’/

  இன்றைய பிரச்சனை – இந்தக் கேள்விக்கு விடைகாண்பது ஒன்றே.

  சமூகத்திலுள்ள எல்லா சாதி, மத, இன மக்கள்திரளிலும் உள்ள ‘மனிதர்களை’ தற்போது உள்ள கருவிகளைப் பயன்படுத்தி இணைப்பதெவ்வாறு? (குறிப்பாக தமிழ்நாட்டு எல்லைக்குள்) இதைப்பற்றிய ஆலோசனைகளை விவாதித்தால் இந்தக்கட்டுரையின் நோக்கம் நிறைவேரக்கூடும்.

 4. அதிகாரம் படைப்பது சாத்தியமே என்று மக்களின் போராட்ட நிலைகளிலிருந்தே எளிமையாக விளக்கியிருப்பது கட்டுரையின் சிறப்பு.ஆம் போராடுவதற்கு எந்த வரம்பும் மக்களுக்கில்லை.தங்களால் சாத்தியமாகும் ஒன்றையே சாத்தியமாகாது என்று தவறாய் எண்ணியிருக்கும் அதன் உண்மையை மக்களுக்கு உணர்த்திவிட்டால் போதும் கப்பல்கள் மீனவர் வசம் போல் நாடும் நமதாகும்.

 5. பார்ப்பன இந்து மத வெறி பாசிச அரசு கட்டமைப்பை,உழைக்கும் மக்களை ஒடுக்கும் இந்தக் கூட்டணியை வெறும் தேர்தல் கூட்டணிகளால் எதிர்கொள்ள முடியாது.இந்து மதவெறி அரசியலின் தீ நாக்குகளால் அச்சுறுத்தப்படும் பல கட்சிகள், இயக்கங்கள் ஒற்றுமை- ஐக்கியம் பற்றி மேடைகள் தோறும்,பல்வேறு சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அறைகூவல் விடுவது இப்போது அதிகரித்திருக்கிறது.அது, வெற்று வெளிகளில் நின்று ஓலமிடுவதைப் போல இருக்கிறது.எதிரியை வீழ்த்த வேண்டுமென்றால் நெருங்கிச் செல்ல வேண்டும்.யார் அவர்கள்?எப்படிச் சாத்தியம்?என்பதைத் தெளிவாக முன் வைக்கிறது தோழர் மருதையனின் ஆய்வுரை.மோடித்துவத்திற்கு எதிராக வாள் வீசுகிறவர்கள் தங்களின் வாள் எவ்வளவு கூர் மழுங்கிப் போயுள்ளது என்பதைச் சோதித்துப் பார்க்கவே முன்வைக்கப்பட்டுள்ள ஓர் உரைகல்லாக இருக்கிறது இந்தக் கட்டுரை.இன்றைய அரசியல் நிலை பற்றிய ஒரு சாசனம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க