மல்லசமுத்திரம் – முகலப்பள்ளி இடையே போடப்பட்ட சாலை தார் சாலை அல்ல பேப்பர் சாலை ! – மக்கள் போராட்டம்

பாகலூருக்கு அருகே உள்ள மல்லசமுத்திரம், குடிசெட்லு, ஒத்தரப்பள்ளி, கணகண்டப்பள்ளி, ஆலூர் மற்றும் முகலப்பள்ளி ஆகிய கிராம உழைக்கும் மக்கள் புழங்கக்கூடிய சாலைகள் முழுவதும் தற்போது தார்ச்சாலைகளாக மாற்றப்பட்டதாக சொல்லப்படுகின்றன. ஆனால், உண்மையில் இந்த தார்ச்சாலைகள் மக்கள் பயன்பாட்டுக்கு சிறிதும் பயன்படாதவண்ணம் அதிகாரிகளின் கொள்ளைகளுக்கு கணக்குக் காட்டுவதற்கென்றே போடப்பட்ட சாலைகளாக உள்ளன.

“இங்கே இப்பகுதியில் போடப்பட்ட சாலை தார் சாலை அல்ல பேப்பர் சாலை!” என்று கோபத்துடன் குமுறுகின்றனர் இப்பகுதிவாழ் உழைக்கின்ற மக்கள். இந்நிலையில் மக்களின் கோபக்கனலை எதிரொலிக்கும் வண்ணம் இப்பகுதியில் செயல்பட்டு வருகின்ற மக்கள் அதிகாரத்தின் செயல்வீரர்கள் நேரில் சென்று மக்களை சந்தித்தும், கள ஆய்வு செய்தும் மக்களை திரட்டி போராடிவருகின்றனர்.

அந்தவகையில் மல்லசந்திரம் – முகலப்பள்ளி இடையே போடப்பட்ட சாலை தார் சாலை அல்ல! பேப்பர் சாலை! – என்ற முழக்கத்தை முன்வைத்து ஆயிரக்கணக்கில் துண்டறிக்கைகள் தமிழிலும், தெலுங்கிலும் அச்சிட்டு அப்பகுதி மக்களிடையே விநியோகித்து பிரச்சாரம் செய்தனர்.

அதன் அடிப்படையில் திட்டமிட்டப்படி கடந்த 20.06.2019 அன்று காலை 11.00 மணியளவில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தை பாகலூர் சர்க்கிள் அருகே நடத்தினர். பாகலூர் பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பினை சேர்ந்த தோழர் இரவிச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு-வைச் சேர்ந்த தோழர் சங்கர், மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் இராமசாமி, முகலப்பள்ளி கிராம விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயி திரு. இராமசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக, மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த தோழர் ஜெயராமன் நன்றியுரையாற்றினார்.

தோழர் இரவிச்சந்திரன் தனது தலைமையுரையில்; “ஆர்ப்பாட்டம் மக்களின் ஆதரவுடன் நடத்தப்படவுள்ள செய்தியறிந்த அதிகாரிகள். உடனே தொடர்பு கொண்டு விரைவில் தரமான தார்ச்சாலையாக போடப்போகிறோம் என்றும், அதனால் தாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டாம் என நைச்சியமாக பேசிச் சென்றதை அம்பலப்படுத்திப் பேசினார்.

மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் இராமசாமி தனது உரையில், போடப்பட்ட தார்ச்சாலையின் அவலத்தை படம்பிடித்து மனுவாக தந்தும், வாட்சப்பில் அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தும் பலமுறை வற்புறுத்தியும் பலனில்லாமல் போன அனுபவத்தை பட்டியலிட்டு பதிவுசெய்து பேசினார்.

விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயி திரு. இராமசாமி தனது உரையில் இப்பகுதிவாழ் உழைக்கின்ற மக்கள் இச்சாலையினால் அவதியுறும் கிராம மக்களின் துன்ப துயரங்களை பட்டியலிட்டு பகிர்ந்துச்சென்றார்.

படிக்க:
எட்டு வழிச் சாலைன்னு நிலத்த பிடுங்குறான் ராமர் சிலைன்னு வீட்ட இடிக்கிறான் !
♦ தேசிய கல்விக் கொள்கை 2019 | CCCE கலந்துரையாடல் – செய்தி | படங்கள்

தோழர் சங்கர் தனது கண்டன உரையில் மக்களிடம் வரி வாங்கி வயிறு வளர்க்கும் இந்த அரசு, சாதாரண தார்ச்சாலைக்கூட ஒழுங்காக அமைத்துத் தராது தோற்றுப் போயிருக்கிறது. இதுவே கார்ப்பரேட்டிற்கு என்றால் ஓடோடிச்சென்று எட்டுவழிச்சாலை முதற்கொண்டு அனைத்தும் செய்து கொடுத்து கார்ப்பரேட்டின் அடியாளாகத் தன்னை காட்டிக்கொள்கிறது என்பதை விவரங்களுடன் பேசினார்.

இந்நிலையில் மக்களாகிய நம்மிடையே உள்ள ஒரே ஆயுதம் இதனை நாம் மக்கள் அதிகாரமாக ஒன்றுபட்டு எதிர்த்துப் போராடுவது ஒன்றுதான் நம்மிடையே உள்ள தீர்வு என்று பேசினார்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

***

துண்டறிக்கை :

மல்லசந்திரம் – முகலப்பள்ளி இடையே போடப்பட்ட சாலை தார் சாலை அல்ல பேப்பர் சாலை!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், குடிசெட்லுவிலிருந்து மல்லசமுத்திரம் வரை 40 லட்சத்துக்கு மேல் செலவு செய்து தார்சாலை போடப்பட்டுள்ளது.

மேடு, பள்ளங்கள் நிறைந்ததாகவும், பல இடங்களில் தடுப்புச் சுவர் கட்டப்படாமலும், தரமற்றதாகவும் இருக்கிறது இந்தச் சாலை. ஒரு நாள் பெய்த மழைக்கே சாலையில் அரிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே விரிசல் விட்டு, சாலையோரத்தில் போடப்பட்ட மண் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

அதிக பள்ளம் உள்ள இடங்களில் சிறு பாலங்கள் அமைக்காததால் மேட்டு நிலத்தில் இருந்து வரும் மழைநீர், ரோட்டின் மேல் ஓடி 200 அடி தூரத்திற்கு தார்ச்சாலை சேறும் சகதியுமாக மாறுவதும், ரோடு அறுந்து காணாமல் போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 28 லட்சம் செலவில் முகலப்பள்ளியில் போடப்பட்டிருக்கும் ஒரு கிலோ மீட்டர் சாலையோ இதைவிட மோசமான நிலையில் இருக்கிறது.

இதுமட்டுமன்றி மல்லசந்திரத்துக்கும் முகலப்பள்ளிக்கும் இடையில் 200 அடி தூரத்திற்கு மட்டும் சாலை அமைக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். இருபுறமும் புதுரோடு போட்டுவிட்டு, இடையில் ஏன் போடவில்லை என ஊர்மக்கள் கேட்டால், 2 கிலோ மீட்டருக்கு மட்டும்தான் ரோடு போட ஒப்பந்தமாகியுள்ளது என்கிறார்கள். 200 அடி தூரத்திற்கு மட்டும் தனியாக டெண்டர் விட்டு, தாரும் ஜல்லியும் வாங்கி, ரோலர் கொண்டு வந்து வேலை செய்வார்களா? இந்த லட்சணத்தில்தான் அரசாங்க வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகளும் காண்ட்ராக்டர்களும்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் போடப்பட்ட துண்டறிக்கைகள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

விதை, உரம், பூச்சிக்கொல்லி, டிராக்டருக்கு டீசல் என எல்லாவற்றுக்கும் வரி கட்டி, விளைந்த பொருளை எடுத்துச் செல்லும்போது டோல்கேட்டிலும் தண்டம் கட்டும் விவசாயிக்கு, முதுகெலும்பை பதம்பார்க்கும் தரமற்ற சாலை! சேலம் உருக்காலையை விழுங்கி, காடுகள், மலைகளை அழித்து கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் ஜிண்டால் கார்ப்பரேட் கம்பெனிக்கோ எட்டு வழிச்சாலை! இப்போது தெரிகிறதா, இந்த அரசு யாருக்காக வேலை செய்கிறது என்று?

மல்லசந்திரம் வழியாகத்தான் ஒத்தரப்பள்ளி, கணகொண்டப்பள்ளி, முகலப்பள்ளி ஆகிய ஊர்களை சேர்ந்த விவசாயிகள் தினம்தோறும் காய்கறிகள் எடுத்து செல்கிறார்கள். பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பல பள்ளி வாகனங்களும் செல்கின்றன. இப்படி விவசாயிகள் அன்றாடம் பயன்படுத்தும் சாலைகளைத் தரங்கெட்ட வகையில் போடுவதுதான் புதிய இந்தியாவா?

படிக்க:
காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா ?
♦ நாசகாரத் திட்டங்களை கைவிடு ! கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்

குடிசெட்டிலு – மல்லசந்திரம் இடையிலான இந்த சாலையை தரமான தார்சாலையாக போட வேண்டும். பக்கவாட்டில் தடுப்பு சுவர் அமைத்துத் தரவேண்டும். சிறுபாலங்கள் அமைத்து மழை நீர் ஓடுவதை முறைப்படுத்த வேண்டும். என பல மாதங்களாக பி.டி.ஓ -வுக்கு போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்புவது, நேரிலேயே அழைத்துச் சென்று காட்டுவது என எல்லாவற்றையும் செய்த பிறகும், இப்படி தரமற்ற சாலை அமைத்து உள்ளனர் என்றால் அந்த தைரியம் எங்கிருந்து வந்தது?

ஏன் இந்த அலட்சியம்? சாலைக்காக உத்தரவில் கையெழுத்துப் போடும் அதிகாரிகளோ சாலை போடும் காண்டிராக்ட்ரையோ மக்கள் கேள்வி கேட்க முடியாது. மீறி கேட்டால் போலீசை வைத்து பொய் கேஸ் போட்டு மிரட்ட முடியும் என்கிற தைரியத்தில்தான் கொள்ளையடிக்கிறார்கள். கேள்வி கேட்போரை மிரட்டுகிறார்கள். நமது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும், அரசு அதிகாரிகளை கேள்வி கேட்கவும், தவறு செய்தால் தட்டிக் கேட்கவும் மக்கள் வீதிக்கு வராமல் இந்த இழிநிலைக்கு முடிவு கட்ட முடியாது.! வாருங்கள் அணிதிரள்வோம்!

  • அதிகாரிகள் – காண்ட்ராக்டர்கள் கூட்டு கொள்ளையடிப்பதையும், தரமற்ற பேப்பர் சாலை போடுவதையும் தடுத்து நிறுத்துவோம்!
  • கிராமங்கள்தோறும் தரமான சாலைகள் அமைக்கப் போராடுவோம்!
  • 40%, 50% கமிஷன் வாங்கும் அரசு அதிகாரிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்யப் போராடுவோம்!

போராட்டத்தின் போது எழுப்பப்பட்ட முழக்கங்கள் :

மக்கள் அதிகாரம், வாழ்க!
மக்கள் அதிகாரம், வாழ்க!

பேப்பர்சாலை! பேப்பர்சாலை!
மல்லசந்திரம் – முகலப்பள்ளியில்
போடப்பட்டது தார்ச்சாலை அல்ல!
பேப்பர்சாலை! பேப்பர்சாலை!

செல்லூர் ராஜு-வின் தெர்மாக்கோலு
காத்துல பறந்தது, காத்துல பறந்தது!
மல்லசந்திரத்தில் போட்ட சாலை,
மக்கள் வரிப்பணத்தில் போட்ட சாலை,
மழையில் கரையுது, மழையில் கரையுது!

ஓட்டு போட்டு, வரிப்பணம் கட்டி
ஊருக்கே சோறு போடும்
விவசாயிக்கு மரணச்சாலை!
காடு, மலையை வெட்டியெடுத்து
கனிம வளத்தைக் கொள்ளையடிக்கும்
கார்ப்பரேட்டு கம்பெனிகளுக்கு
ஆறுவழி, எட்டுவழி!
யாரு கேட்டா? யாரு கேட்டா?

கூட்டுக் கொள்ளை! கூட்டுக் கொள்ளை!
அதிகாரிகள், அரசியல்வாதிகள்
சேர்ந்து நடத்தும் கூட்டுக் கொள்ளை!
டெண்டருக்கே பத்து பர்சண்டு!
ரோடு போட்டா அம்பது பர்சண்டு!
அநியாயக் கொள்ளை! அநியாயக் கொள்ளை!

அம்பலப்படுத்துவோம்! அம்பலப்படுத்துவோம்!
ஏசி ரூம்ல உக்காந்துகிட்டு,
ஓசி சோத்த தின்னுகிட்டு,
ஊர்க்காசுல மஞ்ச குளிக்கும்,
ஊழல்பேர்வழிகளை அம்பலப்படுத்துவோம்!

தட்டிக் கேட்போம்! தட்டிக் கேட்போம்!
வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி,
லஞ்ச ஊழலில் மூழ்கித் திளைக்கும்
அதிகாரிகளைத் தட்டிக் கேட்போம்!

வரவைப்போம்! வரவைப்போம்!
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல
ஆணவம் பிடித்த அதிகாரிகளை,
அதிகாரத் திமிர் பிடித்த அதிகாரிகளை
வீதிக்கு வரவைப்போம்!
தகர்த்தெறிவோம்! தகர்த்தெறிவோம்!
ஆளும் தகுதி இழந்துவிட்ட,
மக்கள் எதிரி ஆகிவிட்ட
மக்கள்விரோத அரசமைப்பைத்
தகர்த்தெறிவோம்! தகர்த்தெறிவோம்!

கையில் எடுப்போம்! கையில் எடுப்போம்!
மக்கள் அதிகாரத்தைக் கையில் எடுப்போம்!

மக்களுக்கு சேவை செய்ய மறுக்கின்ற,
பதில் சொல்ல மறுக்கின்ற
அதிகாரிகள், அரசியல்வாதிகளைத்
தேர்ந்தெடுக்க – திருப்பியழைக்க
மக்களுக்கு அதிகாரம் உள்ள
அரசமைப்பைக் கட்டியமைப்போம்!

மக்கள் அதிகாரம், வாழ்க!
மக்கள் அதிகாரம், வாழ்க!

தகவல் :
மக்கள் அதிகாரம்
பாகலூர் பகுதி, 
தருமபுரி மண்டலம்.
தொடர்பு எண்: 9790138614, 9942953018.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க