பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு சார்பாக தேசிய கல்விக் கொள்கை 2019 பற்றிய கலந்துரையாடல் கூட்டம் 20.06.2019 அன்று பெரியார் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரா. அரசு தலைமை தாங்கினார். பேரா. கதிரவன், பேரா. கருணானந்தன், பேரா. சிவக்குமார், டாக்டர். இரவீந்திரநாத், தோழர். கணேசன் மற்றும் தோழர். தினேஷ் ஆகியோர் உரையாற்றினர்.

பேச்சாளர்கள் தேசிய கல்விக் கொள்கையின் பாதகங்களை விளக்கி பேசினர்.

பேராசிரியர் அரசு

பேராசிரியர் அரசு தனது தலைமையுரையில், தேசிய கல்விக் கொள்கையில் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு (UGC) பதிலாக தேசியக் கல்வி ஆணையம் (NEC) என்ற அமைப்பு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக பிரதமரும் துணைத்தலைவராக கல்வி அமைச்சரும் இருப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இது பேராபத்தானதாகும்.

உயர்கல்வியை தற்போது நிர்வகிக்கின்ற UGC ஒரு தன்னாட்சி அமைப்பு. அதன் தலைவராக கல்வியாளர்களே இருப்பார்கள். ஆனால் கல்விக் கொள்கை பரிந்துரைப்படி NEC ஆளும் அரசின் கைப்பாவையாக இருக்கும். ஏறத்தாழ BJP-யின் கிளை அமைப்பாகவே செயல்படும் என்று விளக்கி பேசினார்.

டாக்டர். இரவீந்திரநாத் பேசும்போது தேசிய கல்விக் கொள்கையில் சிறுவயதிலிருந்தே இந்துத்துவ கருத்துகளை திணிப்பதற்காக திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றார். மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக தொண்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. தொண்டர்கள் என்ற போர்வையில் RSS அமைப்பைச் சேர்ந்த நபர்களை ஆசிரியர்களாக நியமிப்பார்கள்.

மருத்துவக் கல்வியை பொருத்தவரை, நவீன அறிவியல் அடிப்படையிலான மருத்துவமுறைக்கு பதிலாக அறிவியல் அல்லாதவற்றை மருத்துவம் எனக் கூறி நடைமுறைப்படுத்துவார்கள். உதாரணமாக மோடி அரசு அறிவித்துள்ள தேசிய மருத்துவ ஆணையத்தில் உள்ள 24 பேர் குழு மருத்துவக் கல்வியை கட்டுப்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது. அதில் நான்கு பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்.

டாக்டர். இரவீந்திரநாத்

இதனை கட்டுப்படுத்தக்கூடிய மொத்த அதிகாரமும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு உள்ளது. இதன் விளைவாக பிஜேபி அரசு நேரடியாக பழைய புராணங்களில் சொல்லப்பட்டதெனக் கூறி அறியலற்ற விசயங்களை எளிதாக நடைமுறைப்படுத்துவர். உதாரணமாக இராஜஸ்தான் மாநிலத்தின் பிஜேபி ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் லைசாலுக்கு பதிலாக மாட்டு மூத்திரத்தைக் கொண்டு தரையை சுத்தம் செய்ய வேண்டும் என அமைச்சர் கூறினார்.
தேசிய கல்விக் கொள்கையிலே மருத்துவக் கல்லூரிகள் தாங்களே கல்விக்கட்டணத்தையும் பாடத்திட்டங்களையும் முடிவு செய்துகொள்ளலாம் எனக் கூறுகிறது.

மோடி அரசு சமீபத்தில் கார்ப்பரேட்கள் லாப நோக்கில் மருத்துவக் கல்லூரியை தொடங்கலாம் என அறிவித்துள்ளது. அதேபோல 600 மாவட்ட அரசு மருத்துவமனைகளை அரசு – தனியார் கூட்டின் மூலம் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது. இதன்மூலம் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் தனியார்களுக்கு கொடுக்கப்படும்.

தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைப்படி கல்விக் கட்டணத்தையும் பாடத் திட்டத்தையும் அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம். இதன் வாயிலாக சாதாரண மக்கள் மருத்துவப் படிப்பிற்குச் செல்ல முடியாத நிலையே ஏற்படும். எனவே தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் வந்துள்ள இந்த சதியை நாம் முடியடிக்க வேண்டும் எனப் பேசினார்.

பேராசிரியர் கதிரவன் பேசுகையில் தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள தேசிய ஆராய்ச்சி அமைப்பை பற்றி விரிவாகப் பேசினார்.

தற்போது அரசு நடத்துகின்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஆராய்ச்சி நிதிக்கான வரவு செலவு கணக்குகள் மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைக் கொண்டு சரிபார்க்கப்படுகிறது. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்கள் தாங்களே கணக்காளர்களைக் கொண்டு ஆராய்ச்சி நிதியை பயன்படுத்தியதாக கணக்கு காட்டுகின்றனர். இதில் அரசு தலையிடுவதில்லை. தனியார் பல்கலைக்கழகங்கள் நடத்துகின்றவர்கள் அதன் மூலம் வரும் லாபத்தைக் கொண்டு பல்வேறு தொழில்களை செய்கின்றனர் (சினிமா எடுப்பது, ஹோட்டல், போக்குவரத்து).

பேராசிரியர் கதிரவன்

தேசிய கல்விக் கொள்கையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை ஒரே மாதிரி நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்காக 20,000 கோடி ஒதுக்கப்பட்டால் 10,000 கோடி ரூபாய் தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். இது தனியார்களுக்கு சாதகமாகவே அமையும்.

கல்லூரிகள் தாங்களாகவே படிப்புச் சான்றிதழ்களை வழங்கிக் கொள்ளலாம் (degree granting colleges), கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் தனியார் நிறுவனங்களையும் அனுமதிப்பது போன்ற பரிந்துரைகள் உயர்கல்வியின் தரத்தை மேலும் மோசமாக்குவதோடு தனியார் கல்வி நிறுவனங்களின் தீவிரக் கொள்ளைக்கே ஆதரவாக அமையும் என்று விளக்கினார்.

அடுத்து பேசிய பேராசிரியர் கருணானந்தன் இந்துத்துவ கார்ப்பரேட் கூட்டணிதான் இந்த கல்விக் கொள்கை, இது ஒரே நாடு, ஒரே மொழி என்பதற்கான கல்விக் கொள்கை என்றார்.

இந்த கல்விக் கொள்கை முற்றிலுமாக மையப்படுத்துதலையே முன்வைக்கிறது. 40,000-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் 800 பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் பிரதமரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் விளைவாக கல்வி மாநில பட்டியலிருந்து மையப் பட்டியலுக்கு மாற்றப்படும். நமக்கு எவ்விதமான கல்வி வேண்டும் என்று நாம்தான் (மாநில அரசுதான்) முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நமக்கு வேண்டியதைப் பெற முடியும். ஆனால் தற்போது ஆளுகின்ற அடிமை அரசுக்கோ மாநில சுயாட்சி பற்றி எந்த அக்கறையும் கிடையாது. தங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தால் போதும் என்று இருக்கின்றனர்.

பேராசிரியர் கருணானந்தன்

பள்ளி மாணவர்களுக்கு பல மொழிகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இதன் வழியே சமஸ்கிருதத்தை திணிப்பதுதான் இவர்கள் நோக்கம். பழைய பண்பாடு, இந்திய பெருமிதம், பழைய அறிவியல் பற்றியெல்லாம் கல்விக் கொள்கை பேசுகிறது. இவைகளனைத்தும் உண்மை பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை உணர்விலிருந்தும் நம்மை மாற்ற நினைக்கின்ற முயற்சி. எனவே இக்கல்விக் கொள்கையில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்பதெல்லாம் பொருளற்றது.

இக்கல்விக் கொள்கையை முற்றிலுமாக நாம் நிராகரிக்க வேண்டும். நமக்கான கல்விக் கொள்கையை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். மத்தியில் யாரோ ஒருவர் தீர்மானிப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

1986 கல்விக் கொள்கை வந்த போது ஆசிரியர் சங்கங்கள் போராடின. இறுதியில் ஊதிய உயர்வுக்காக கல்விக் கொள்கையை ஒப்புக்கொள்வதாக கையெழுத்திட்டனர். ஆனால் தற்போது ஆசிரியர் சங்கங்கள் கல்விக் கொள்கையைப் பற்றிப் பேசக்கூட இல்லை. இது போன்ற கூட்டங்கள் அவர்களுக்கு உத்வேகத்தை வழங்கலாம் என கூறி முடித்தார்.

அடுத்து பேசிய பேராசிரியர்  சிவக்குமார், சில அமைப்புகள் தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள இந்தி திணிப்பை எதிர்கின்ற அளவிற்கு தனியார்மயத்தை குறித்துப் பேசுவதில்லை. காரணம் அவர்கள் தனியார் கல்லூரிகள் நடத்துகின்றனர். இப்போக்கு தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டத்தை கட்டுவதற்கு தடையாக உள்ளது. 2000-ம் ஆண்டிலிருந்தே கல்வி குறித்து வந்த அறிக்கைகள் கல்வியாளர்களால் உருவாக்கப்படவில்லை.

பேராசிரியர்  சிவக்குமார்

முதலாளிகளை தலைவர்களாகக் கொண்டே உருவாக்கப்பட்டு வருகிறது. இவர்களின் பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்தியும் வருகிறது. பொதுவாக ஒரு நாட்டின் கல்விக் கொள்கைகள் அதன் ஆளும் வர்க்கங்களின் நலன்களை ஒட்டியே உருவாக்கப்படும். அதனடிப்படையில் பார்க்கும்போது தற்போதைய கல்விக் கொள்கை நான்காவது தொழிற்புரட்சியை கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

பொறியியல், அறிவியல் படிக்கும் மாணவர்கள் கலை, சமூக அறிவியல் பாடங்களையும் சேர்த்து சொல்லிக் கொடுக்க வேண்டும் அப்போதுதான் புதியவற்றை படைக்கின்ற ஆற்றல் உள்ள மாணவர்களை உருவாக்க முடியும் என்ற கருத்து உலக வர்த்தகக் கழகத்திலும்(WTO), உலகப் பொருளாதார மன்றத்திலும் (WEF) பேசிவருகிறார்கள். அதையே தற்போது கல்விக் கொள்கையும் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

தோழர் கணேசன்

புரட்சிகர மாணவர் இளைஞர் முண்ணனியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன், தேசிய கல்விக் கொள்கையில் இரு முக்கிய அபாயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று கல்வியை காவிமயமாக்குவது மற்றொன்று இந்திய உயர்கல்வி சந்தையை சர்வதே சந்தையோடு இணைப்பது, அதாவது உயர்கல்வியை சர்வதேசமயமாக்குவது. இதனை முறியடிக்க தேசிய கல்விக் கொள்கை குறித்த அபாயத்தை RSYF மாணவர்களிடம் எடுத்துச் செல்லும் எனக் கூறினார்.

தோழர் தினேஷ்

அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் தேசியச் செயலாளர் தோழர் தினேஷ், தேசிய கல்விக் கொள்கையில் பள்ளிக் கல்வி குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளைப் பற்றி பேசினார். தற்போதுள்ள கட்டமைப்பை மாற்றி பள்ளிக் கல்வியில் 5+3+3+4 என்பதை கல்விக் கொள்கை முன்வைக்கிறது. மூன்று வயதிலிருந்தே கல்வி கட்டாயம் எனக் கூறுகிறது. எட்டாம் வகுப்பிற்கு மேல் தொழிற்கல்வி மற்றும் இளங்கலை படிப்பில் சேர்வதற்கு நீட் போன்ற பொதுத் தேர்வு போன்ற பரிந்துரைகளின் பாதகங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

கூட்டத்தில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். பெரும்பான்மையாக கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியில் பேரா. அரசு அவர்களின் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.

தகவல் :
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, (CCCE)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க