உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளைக்கூடப் பின்பற்ற மறுப்பதன் மூலம் கர்நாடகாவிற்குச் சாதகமாகச் செயல்படுகிறது, காவிரி ஆணையம்.
“காவிரியில் தமிழகத்திற்குரிய ஜூன் மாத ஒதுக்கீடான 9.19 டி.எம்.சி. நீரைக் கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும்” என மே மாத இறுதியில் நடந்த காவிரி ஆணையக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. எனினும், ஜூன் மாதம் தொடங்கிப் பத்து நாட்கள் கடந்த பிறகும் ஒரு டி.எம்.சி. தண்ணீர்கூடக் கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கு வந்துசேரவில்லை. இதுவரை வந்த நீரின் அளவு 0.76 டி.எம்.சி.தான் எனப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. வந்து சேர்ந்த நீரின் அளவைப் பார்த்தால், அது கர்நாடக அணைகளில் இருந்து கசிந்து வெளியேறிய நீராகத்தான் இருக்குமேயொழிய, திறந்துவிடப்பட்ட நீராக இருக்க வாய்ப்பேயில்லை.
காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள், தீர்ப்புகளைக்கூடக் கழிப்பறைக் காகிதம் போலத் துடைத்துப் போடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் கர்நாடக அரசு, ஒரு பல்லில்லாத ஆணையத்தின் உத்தரவுக்கு என்ன மதிப்பைத் தந்துவிடப் போகிறது? காவிரி ஆணையத்தின் கூட்டம் முடிந்த மறுநிமிடமே, கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.சிவக்குமார், ஆணையத்தின் முடிவு குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும்” என அறிவித்தார். இதன் பொருள், தண்ணீரைத் திறந்துவிட முடியாது என்பது தவிர வேறெதுவுமாக இருக்க முடியாது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தும் பொறுப்பும் கடமையும் காவிரி ஆணையத்திற்கு மட்டுமே உண்டு. எனினும், இவ்வாணையம் காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் உள்ள அணைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தோடு அமைக்கப்படவில்லை. மேலும், இவ்வாணையம் அமைக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு வருடம் முடிந்துவிட்ட பிறகும்கூட, ஆணையத்திற்கான முழுநேரத் தலைவரை மோடி அரசு நியமிக்கவில்லை. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைமையகம் பெங்களூருவில் அமைக்கப்படவில்லை. இவற்றைச் செய்து முடிப்பதற்கான அறிகுறிகளும் இதுவரை தென்படவில்லை. காவிரி ஆணையம் தப்பித்தவறிக்கூடத் தமிழகத்திற்குச் சாதகமாக நடந்துவிடக் கூடாது என்பதுதான் இந்த இழுத்தடிப்பின் பின்னுள்ள உள்நோக்கம். காவிரி ஆணையமும் மோடி அரசின் இந்த உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில்தான் செயல்பட்டு வருகிறது.
காவிரி ஆணையம் சூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் முடிய பத்து நாட்களுக்கு ஒருமுறை கூடி, கர்நாடகம் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுவதைக் கண்காணித்து, அதற்கேற்ப உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், ஆணையமோ கடந்த ஆண்டில் ஜூலையில் ஒருமுறை கூடியது. அதன் பின்னர் டிசம்பரில்தான் மற்றொருமுறை கூடியது. தமிழகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் குறுவை சாகுபடிக்காக ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும் எனக் கோரிய பிறகுதான் கடந்த மே மாத இறுதியில் ஆணையம் கூடியிருக்கிறது.
படிக்க :
♦ காவிரி : தொடருகிறது வஞ்சனை !
♦ காவிரி : வஞ்சிக்கப்படும் தமிழகம் !
காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் உள்ள அணைகளில் காணப்படும் நீர்வரத்து எவ்வளவு, எவ்வளவு நீரை, எதற்காக கர்நாடக அரசு வெளியேற்றுகிறது, அணையின் நீர் இருப்பு எவ்வளவு என்பதையெல்லாம் ஆணையம் மாதாமாதம் கண்காணித்துப் பதிவு செய்ய வேண்டும். ஆனால், இந்த விதிமுறையை ஆணையம் நடைமுறைப்படுத்துவதேயில்லை.
குறிப்பாக, கர்நாடக அரசு கோடை கால சாகுபடிக்குக் காவிரியிலிருந்து எவ்வளவு நீரை எடுத்துப் பயன்படுத்துகிறது என்பதை ஆணையம் கண்காணிப்பதேயில்லை. மேலும், அம்மாநில அரசு காவிரி நீரைச் சட்டவிரோதமான முறையில் ஏரிகளுக்குக் கடத்திக்கொண்டு போய் பதுக்கி வைப்பதையும் ஆணையம் கண்டுகொள்வதேயில்லை.
கடந்த ஐந்து மாதங்களில் காவிரி ஆணையம் ஒருமுறைகூடக் கூடவில்லை. கடந்த அக்டோபர் 2018 தொடங்கி மே 2019 முடியவுள்ள எட்டு மாதங்களில் கர்நாடகம் தர வேண்டிய 51.61 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்குப் பெற்றுத் தருவது குறித்து ஆணையம் அக்கறை கொள்ளவில்லை. பா.ஜ.க.-வின் பினாமியான எடப்பாடி அரசும் அந்நிலுவை நீர் குறித்து வாய் திறக்கவில்லை.
கடந்த மே மாத இறுதியில் நடந்த ஆணையத்தின் கூட்டத்தில் இந்த நிலுவை நீர் பற்றி விவாதிக்க முன்வராத ஆணையம், மேகேதாட்டு அணை தொடர்பாக விவாதிப்பதை நிகழ்ச்சி நிரலில் ஒன்றாக முன்வைக்க முயன்று, பின்னர் தமிழக அரசின் எதிர்ப்பின் காரணமாகப் பின்வாங்கிக் கொண்டது.
இப்படி மைய அரசும் காவிரி ஆணையமும் கர்நாடகாவிற்குச் சாதகமாகவே நடந்து வருவதால்தான், தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்குரிய பங்கைத் திறந்துவிடும் அளவிற்குத் தனது அணைகளில் தண்ணீர் இல்லை” எனத் துணிந்து சொல்கிறது, கர்நாடக அரசு. வறட்சி காலத்திலும்கூட, கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பை அதற்கேற்ற விதத்தில் (distress formula) காவிரிப் பாசன மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், கர்நாடகாவோ காவிரி ஆற்றைத் தனக்கு மட்டுமே பாத்தியப்பட்ட சொத்தாகவும், அதில் தமிழகத்திற்கு எள்ளளவும் உரிமை கிடையாது என்றும் திமிர்த்தனமாகவே நடந்து வருகிறது.
கர்நாடக அரசு கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்திற்குக் காவிரியில் திறந்துவிட்டுள்ள நீரின் அளவையும், அந்நீர் திறந்துவிடப்பட்ட காலமுறையையும் அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், தன்னால் தேக்க முடியாத உபரி நீரைத் திறந்துவிட்டிருக்கும் உண்மையையும், காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையை மறுத்து, தமிழகத்தை உபரி நீரை வெளியேற்றும் வடிகாலாக மாற்றியிருக்கும் அவலத்தையும் யாரும் விளங்கிக் கொள்ள முடியும்.
உச்ச நீதிமன்றம் காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்குப் பாதகமான தீர்ப்பை அளிக்கிறது. மைய அரசோ ஒரு பல்லில்லாத ஆணையத்தை அமைக்கிறது. கர்நாடகமோ எதற்கும் கட்டுப்படாமல் அடாவடித்தனமாகச் செயல்படுகிறது. இந்த ஆட்டத்தைத் தமிழகம் இன்னும் எத்துணை நாட்களுக்குச் சகித்துப் போக முடியும்?
தமிழகம் குறுவை சாகுபடியை முற்றிலுமாகக் கைவிட்டுவிட வேண்டும் என்பதுதான் கர்நாடகாவின் இறுதி நோக்கம். ஏனென்றால் குறுவை சாகுபடி நடக்கும் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் முடியவுள்ள மாதங்களில்தான் கர்நாடகம் தனது அணைகளிலிருந்து 143 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
“தனது அணைகளில் போதிய அளவு நீரில்லை” என்ற காரணத்தைக் கூறியே, கடந்த ஏழு ஆண்டுகளாகத் தனது நோக்கத்தை வெற்றிகரமாகத் தமிழகத்தின் மீது திணித்துவிட்டது, கர்நாடகா. இந்த ஆண்டாவது குறுவை பயிரிடுவதற்குரிய நீரைக் கர்நாடகாவிடமிருந்து பெற்றுத் தருமாறு டெல்டா விவசாயிகள் கோரிவரும்போது, அதனை உத்தரவாதப்படுத்தாத மைய அரசு, கிருஷ்ணா நதி நீர் இணைப்புப் பற்றி வாய்ப்பந்தல் போடுகிறது.
தமிழகம் தனக்குரிய காவிரி நீரைக் கேட்டால், மோடி அரசோ கானல் நீரைக் காட்டும் மோசடியில் இறங்குகிறது. இந்த நதி நீர் இணைப்பு என்பது காவிரியில் தமிழகத்திற்குரிய வரலாற்றுரீதியான, நியாயமான, சட்டரீதியான பங்கை மறுக்கும் நயவஞ்சகமாகும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படிக் கர்நாடகம் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடாவிட்டால், அது குறுவை சாகுபடியில் ஈடுபடும் டெல்டா மாவட்ட விவசாயிகளை மட்டும் பாதிக்கப் போவதில்லை. குடிநீருக்குக் காவிரியை நம்பியிருக்கும் தமிழகத்தின் 24 மாவட்ட மக்களையும் நா வறண்டு சாகச் செய்யும்.
படிக்க:
♦ அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?
♦ அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் !
காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கை கர்நாடகம் திறந்துவிடுவதை உத்தரவாதப்படுத்த மறுக்கும் மைய அரசுதான், டெல்டா மாவட்டங்களின் நிலத்திலும், கடலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அடுத்தடுத்துத் திணிக்கிறது. தமிழக மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்ற மறுக்கும் மைய அரசுதான் தமிழக விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்து எரிவாயுக் குழாய்களைப் பதிக்கிறது, மின்கோபுரங்களை அமைக்கிறது.
இவை ஒவ்வொன்றும் தனித்தனியான பிரச்சினைகள் அல்ல. தனித்தனியான போராட்டங்களுக்குப் பதிலாக ஒருங்கிணைந்த முறையில் தமிழகம் தழுவிப் போராடுவது மூலம்தான் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசைப் பணிய வைக்க முடியும்.
ரஹீம்
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
₹15.00Add to cart |
₹15.00Add to cart |
₹15.00Add to cart |