காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில், தமிழகத்துக்கு ஜூலை மாதத்தில் தர வேண்டிய 31 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளைக்கூட மதிக்காத கர்நாடக அரசு, ஆணையத்தின் இந்த உத்தரவைப் பிசகாமல் நடைமுறைப்படுத்துமா என்பதுதான் இப்பொழுது தமிழகத்தின் முன்நிற்கும் கேள்வி. ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்த மறுத்தால், ஆணையமும் மைய அரசும் உடனடியாகத் தலையிட்டுத் தமிழகத்திற்கு நியாயம் வழங்குமா என்பது மற்றொரு கேள்வி.

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட்டிருக்கும் ஆணையம், கர்நாடக அணைகளைத் திறந்துவிடக் கூடிய சுதந்திரமான, தன்னதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாக்கப்படவில்லை. மைய நீர்ப்பாசன அமைச்சகத்தின் துணை அமைப்புப் போன்று உருவாக்கப்பட்டிருக்கிறது” எனத் தமிழகத்தின் எதிர்க்கட்சிகளும், தமிழ்த் தேசிய மற்றும் புரட்சிகர அமைப்புகளும் அம்பலப்படுத்தியிருக்கும் நிலையில், இந்தக் கேள்விகளை யாரும் புறந்தள்ளிவிட முடியாது.

கடந்த ஜூலை – 2 அன்று தில்லியில் நடைபெற்ற
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதலாவது கூட்டம்.

இந்தக் கேள்விகள் அனுமானத்தின் அடிப்படையில் எழவில்லை. ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க கபினி, கிருஷ்ணசாகர் அணைகளிலிருந்து ஜூலை மாதத்திற்குரிய நீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிடுவதற்குப் பதிலாக, அதற்கு சவால்விடும் விதத்தில், ஆணையத்தின் உத்தரவு வெளியான ஓரிரு நாட்களிலேயே கபினி அணையிலிருந்து தமிழகத்திற்குத் திறந்துவிடப்பட்ட உபரி நீரின் அளவைக் குறைத்து, ஆணையத்திற்கு பெப்பே காட்டியிருக்கிறது, கர்நாடக அரசு.

கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றம் ஆகியவற்றின் உத்தரவுகளை, தீர்ப்புகளை மதிக்காமல் நடந்துகொள்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்த கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குப் பின் நாட்களைக் கடத்தும் சூழ்ச்சியிலும் இறங்கியிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் முன்பே காவிரி ஆணையத்தை அமைத்திட உத்தரவிட்டாலும், கர்நாடகத்தின் சூழ்ச்சியாலும் அதற்கு அணுசரணையாக பா.ஜ.க. அரசு நடந்து கொண்டதாலும் ஆணையம் அமைப்பதும் ஒரு மாதம் தாமதமாகி, அதன் முதல் கூட்டமே ஜூலை 2 நடைபெற்றது. இந்த சூழ்ச்சியின் மூலம் ஜூன் மாதத்திற்குரிய தண்ணீரை உரிய தேதியில் திறந்துவிடுவதை கர்நாடக அரசு தவிர்த்துவிட்டது.

இன்னொருபுறம், தென்மேற்குப் பருவ மழை அபரிமிதமாகப் பெய்து, கர்நாடகத்தின் அணைகளில் தேக்கி வைக்க முடியாத நீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிட்டுவிட்டு, ஜூன் மாதத்தில் தமிழகத்திற்குத் தர வேண்டிய நீரின் அளவிற்கு மேல் தந்திருப்பதாக ஆணையக் கூட்டத்தில் வாதிட்டிருக்கிறது. ஆணையமும் கர்நாடகத்தின் அந்தச் சூழ்ச்சியான வாதத்தை ஏற்றுக்கொண்டு எவ்வளவு நீர் அதிகமாகத் திறக்கப்பட்டிருக்கிறதோ, அதனை ஜூலை மாதப் பங்கில் கழித்துக் கொள்ள கர்நாடகத்திற்கு அனுமதி வழங்கியிருக்கிறது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது தொடர்பாக கடந்த ஜூன் 17 அன்று மோடியைச் சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி.

இப்படி கர்நாடகத்தின் தார்மீக நியாயமற்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள ஆணையம், ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்திற்குத் தர வேண்டிய நீரை ஏன் கொடுக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்பவில்லை. அந்த நீரை இப்பொழுது சேர்த்துக் கொடுக்குமாறு கட்டளையும் இடவில்லை. இந்த ஒருதலைப்பட்சமான அநீதியைக் கேட்டால், ஆணையத்தின் செயல்பாடுகள் ஜூலையில் தொடங்கியிருக்கிறது என்ற சால்ஜாப்பைச் சொல்லவும் தயங்கமாட்டார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவிலும், அதனை நடைமுறைக்குக் கொண்டுவருவதிலும்கூட இத்தகைய காலந்தாழ்த்தும் சூழ்ச்சிகளையும் சால்ஜாப்புகளையும் நெடுகக் காணமுடியும்.

முதலாவதாக, நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரில் 14.75 டி.எம்.சி. நீரை அபகரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் அபரிமிதமாக இருப்பதாக சால்ஜாப்பு சொல்லி, தனது அநீதியை நியாயப்படுத்தியது. மேலும், நடுவர் மன்றத் தீர்ப்பின் உயிர்நாடியையேப் பிடுங்கிப்போடும் வண்ணம், தன்னதிகாரம் கொண்ட வாரியம் அமைப்பது பற்றித் தனது தீர்ப்பில் குறிப்பிடாமல், நதி நீரைப் பங்கிட்டுக் கொள்ளும் செயல்திட்டத்தை 29.03.2018 உருவாக்க வேண்டும் என்ற மட்டோடு நின்றுகொண்டது. யானையைக் குருடர்கள் தடவிப் பார்த்த கதையாக, இந்தச் செயல்திட்டத்திற்கு ஒவ்வொரு விசாரணையின் போதும் விதவிதமான விளக்கங்களை அளித்தது. 

இந்தச் செயல்திட்டத்தை உருவாக்குவதற்கு ஆறு வார காலம் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தபோதும், மைய பா.ஜ.க. அரசு அக்காலக்கெடுவிற்குள் செயல்திட்டத்தை உருவாக்காமல் சண்டித்தனம் செய்தது. மேலும், கால அவகாசம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து, 31.3.2018 அன்று செயல்திட்டம் என்றால் என்ன? என விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவிலேயே செயல்திட்டத்தை உருவாக்க மேலும் மூன்று மாத கால அவகாசமும் கேட்டது. தமிழகத்தின் உரிமைகளை கேலிப் பொருளாகக் கருதும் பா.ஜ.க. அரசின் திமிரும் அலட்சியமும் இந்த மனுவின் மூலம் வெளிப்பட்டது.

இந்த மனுக்களை சாவகாசமாக 09.04.2018 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், பா.ஜ.க. அரசின் இழுத்தடிப்பைக் கண்டிப்பது போல ஒருபுறம் பாவனை செய்துவிட்டு, இன்னொருபுறமோ செயல்திட்டத்தைச் சமர்ப்பிக்க மே 3 வரை மீண்டும் கால அவகாசம் அளித்தது. மே 12 அன்று கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடக்கவிருந்த நிலையில் மே 3 வரை அளிக்கப்பட்ட கால அவகாசம், உச்ச நீதிமன்றம் பா.ஜ.க.விற்குக் காலத்தினால் செய்த பேருதவியாகும்.

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்.

உச்ச நீதிமன்றம் அளித்த இரண்டாவது கால அவகாசம் முடிந்த பின்னும் பா.ஜ.க. அரசு செயல்திட்டத்தை உருவாக்கவில்லை. இது தொடர்பாக மே 3 அன்று நடந்த விசாரணையில், ‘‘செயல்திட்டம் உருவாகிவிட்டதென்றும், கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் உள்ளிட்டோர் அம்மாநிலத்திற்குச் சென்றுவிட்டபடியால், வரைவு செயல்திட்டத்தை மைய அமைச்சரவை கூடி விவாதித்து இறுதி செய்ய முடியவில்லை” என்ற சால்ஜாப்பை நீதிபதிகளின் முன்வைத்தது, பா.ஜ.க. அரசு.

இதுவொரு வடிகட்டிய பொய். இந்தக் கெடு தேதிக்கு முதல் நாள்தான் மைய அமைச்சரவை கூடி, சென்னை உள்ளிட்ட மூன்று விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்திருந்தது. கர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிந்து, அங்கு அதிகாரத்தைக் கைப்பற்றும் வரையிலும் செயல்திட்டத்தை உருவாக்கக் கூடாது என்ற தீயநோக்கம் அன்றி இதற்கு வேறு காரணம் கிடையாது. எனினும், உச்ச நீதிமன்றம் செயல்திட்டத்தை வகுப்பது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி மே 8 அன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு கூறி, வழக்கை ஒத்திவைத்தது. பா.ஜ.க. அரசிற்கு மூன்றாவது முறையாக அளிக்கப்பட்ட சலுகை இது.

செயல்திட்டத்தை உரிய தேதியில் வகுக்காமல் சால்ஜாப்புகளைச் சொல்லிவந்த பா.ஜ.க. அரசு, இன்னொருபுறத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்புப் போராட்டங்களை வேவு பார்ப்பதற்கும், அவற்றை ஒடுக்குவது குறித்துத் திட்டமிடுவதற்கும் ஏற்ப அதிவிரைவுப் படையை அனுப்பி ஒத்திகை பார்த்தது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்து மே 14 அன்று வரைவு செயல்திட்டத்தைத் தாக்கல் செய்த பா.ஜ.க. அரசு, அதன் கீழ் அமைக்கப்படும் ஆணையம் மைய நீர்வளத் துறையின் எடுபிடி அமைப்பாகச் செயல்படும் நோக்கில், ‘‘காவிரி ஆணையத்தின் முடிவை ஒரு மாநிலம் ஏற்கவில்லையென்றால், அதில் இந்திய அரசு எடுக்கும் முடிவே இறுதியானது. இந்திய அரசு எந்தக் கட்டளை இட்டாலும் அதை காவிரி ஆணையம் செயல்படுத்த வேண்டும்” என இரு விதிகளை உருவாக்கியிருந்தது.

1990 தொடங்கி இன்றுவரையிலும் காவிரிப் பிரச்சினையில் இந்திய தேசிய அரசு எப்படி ‘நடுநிலையோடு நடந்து வந்திருக்கிறது என்பதை நினைவுகூர்ந்தாலே, இந்த விதிகளின் பின் ஒளிந்திருக்கும் அபாயத்தை யாரும் புரிந்துகொள்ள முடியும். புதுச்சேரி மாநில வழக்குரைஞர் இவ்விதிகளை நீக்கக் கோரி வாதாடிய பின்தான், தமிழக அரசிற்குச் சொரணை வந்தது.

மயிலாடுதுறையில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற
காவிரி நதிநீர் உரிமைப் போராட்ட வெற்றிப் பொதுக்கூட்டம்.

இவ்விதிகள் நீக்கப்பட்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகிய இரு அமைப்புகளைத் தென்மேற்கு பருவ மழை தொடங்கு முன்பே அமைக்க வேண்டுமென 18.05.2018 அன்று தீர்ப்பளித்தது, உச்ச நீதிமன்றம்.

இந்த ஆண்டிற்கான தென்மேற்குப் பருவ மழை மே 29 அன்று தொடங்கியது. இடைப்பட்ட இந்த 10 பத்து நாட்களில் செயல்திட்டத்தை அரசிதழில் வெளியிட்டு, ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுக்களுக்கான உறுப்பினர்களையும் நியமித்து, தமிழகத்தில் குறுவை சாகுபடி தொடங்குவதற்கு ஏற்ப செயல்திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், மைய அரசோ வேண்டுமென்றே காலதாமதம் செய்து ஜூன் 1 அன்று இரவில்தான் செயல்திட்டத்தை அரசிதழில் வெளியிட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநிலங்கள் அடுத்தடுத்து தமது உறுப்பினர்களை அறிவித்த நிலையில், கர்நாடகம் தனது உறுப்பினர்களை அறிவிக்காமல் சண்டித்தனத்தில் இறங்கியது.

இதனிடையே மைய அரசும் கர்நாடகாவும் பேசி வைத்துக் கொண்டாற்போல ஒரு நாடகத்தை அரங்கேற்றின. ஜூன் 12 கர்நாடகம் தனது உறுப்பினர்களை அறிவிக்க வேண்டும் என மைய அரசு கர்நாடகாவிற்குக் கட்டளையிட்டது. வழமைபோலவே அந்த உத்தரவை கர்நாடக அரசு ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. மைய அரசும் அது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாகப் பெய்யத் தொடங்கும் முன்புகூட அம்மாநில (காவிரி) அணைகள் காய்ந்துபோய்க் கிடக்கவில்லை. விகிதச்சார முறைப்படித் தமிழகத்திற்குத் தண்ணீரை திறந்துவிடும் அளவிற்கு கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டுகளில் நீர் இருப்பு இருந்தது (தினமணி, 9.6.2018, பக்.9). இந்த இருப்பிலிருந்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய பங்கைப் போராடிப் பெறும் வக்கும் தெம்பும் இல்லாத எடப்பாடி பழனிச்சாமி, மழை பெய்து மேட்டூர் நிரம்பினால் தண்ணீரைத் திறந்துவிடுவோம் எனக் கூறி, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார். மதுரைக்குச் சாமி கும்பிட்டுப் போக வந்த கர்நாடக முதல்வரும் இதையே கூறினார். எதிரியும் துரோகியும் எவ்வித ஒளிவுமறைவுமின்றி ஒரே படகில் பயணித்ததைத் தமிழகம் கண்டது.

ஜூன் மாத மத்தியிலேயே தமிழகத்திற்கு தண்ணீரைத் திறந்துவிடக் கூடிய கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டிவிட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பக்கூடிய நிலைக்கு வந்துவிட்டது. மைய அரசு நியாயமாக நடந்திருந்தால், தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில அரசுகள் அறிவித்திருந்த உறுப்பினர்களைக் கொண்டே காவிரி ஆணையத்தை முன்கூட்டியே அமைத்து, அதன் கூட்டத்தை நடத்தி, ஜூன் மாதத்திற்குரிய பங்கைத் தமிழகத்திற்குத் திறந்துவிடும்படி கர்நாடகாவிற்கு உத்தரவிட்டிருக்க முடியும். ஆனால், கர்நாடகம் தனது உறுப்பினர்களை அறிவிக்காததைக் காரணமாகக் காட்டியே ஆணையம் அமைப்பதைத் தள்ளிப்போட்டு தமிழகத்தை வஞ்சித்தது.

ஜூன் மாதத்தில் கபினியிலிருந்து தமிழகத்திற்கு அதிகப்படியாகத் திறந்துவிடப்பட்டதாகக் கூறப்படும் காவிரி நீர், அந்த அணையில் தேக்க முடியாத உபரி நீரேயொழிய, தமிழகத்திற்குரிய சட்டப்படியான பங்கு அல்ல. கர்நாடகம் தமிழகத்தை வடிகால் பூமியாகத்தான் கருதுகிறது, நடத்தி வருகிறது என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் உறுதிபட்டிருக்கிறது.

மேலும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பத்து நாட்களுக்கு ஒருமுறை கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பை அளவிடும் உத்தரவை மாற்ற வேண்டும் எனக் கோரிவரும் கர்நாடக அரசு, இதன் காரணமாக கர்நாடகாவில் சட்டம் பிரச்சினை ஏற்படும் என மிரட்டியும் வருகிறது. கர்நாடக அணைகளில் தேக்கப்படும் காவிரி நீரை ஏரி, குளங்களுக்கு மடை மாற்றிவிட்டுவிட்டு, அணைகளில் போதிய நீரே இல்லை என முதலைக் கண்ணீர் வடிக்கும் நாடகத்தை கர்நாடக அரசு நீண்ட காலமாகவே நடத்தி வருகிறது. ஏறக்குறைய 30 டி.எம்.சி. தண்ணீர் இப்படி மடைமாற்றி விடப்படுவதாகத் தமிழக விவசாயிகள் குற்றஞ்சுமத்தி வருகின்றனர். காவிரியிலிருந்து 30 டி.எம்.சி. நீரைக் கர்நாடகம் சாமர்த்தியமாகத் திருடி வருகிறது. இந்தத் தண்ணீர் திருட்டைத் தொடரவும், மூடிமறைக்கவும்தான் பத்து நாட்களுக்கு ஒருமுறை அணைகளில் உள்ள நீர்மட்டத்தை ஆய்வு செய்வதை கர்நாடகா எதிர்க்கத் தொடங்கியிருக்கிறது.

இதோடு, காவிரி நீர்ப் பங்கீடு குறித்த செயல்திட்டம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமலேயே அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பதால், அது ஏற்புடையதல்ல என்ற முட்டுக்கட்டையையும் போட்டு வருகிறது, கர்நாடகம். ஏறக்குறைய ஓராண்டிற்கு முன்பாக, காவிரி மேலாண்மை வாரியத்தை மூன்று நாட்களுக்குள் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் பா.ஜ.க. அரசிற்கு உத்தரவிட்டபோது, ‘‘அதற்கான அதிகாரம் நீதிமன்றத்திற்குக் கிடையாது, நாடாளுமன்றத்திற்குத்தான் உண்டு” என வாதிட்டு, தமிழகத்தை வஞ்சித்தது, மோடி அரசு. அந்த வஞ்சகம் நிறைந்த வாதத்தை இப்பொழுது பா.ஜ.க.விற்குப் பதிலாக, காங்கிரசுமதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.

கர்நாடகா மாநில அதிகாரத்தைக் கைப்பற்ற எலியும் பூனையுமாக மோதிக் கொண்ட பா.ஜ.க.வும், காங்கிரசு கூட்டணியும் தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிடக் கூடாது என்பதில் ஒன்றாக நிற்கின்றன. நடுவண் பா.ஜ.க. அரசு ஜூலை 2 இல் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை நடத்தும் அறிவிப்பை வெளியிடுகிறது. அதேசமயத்தில், கர்நாடக பா.ஜ.க. தலைவர் எடியூரப்பாவும், கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க.வின் மைய அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்தகவுடாவும் கர்நாடகா அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்திற்குத் தண்ணீரைத் தருவதைத் தடுக்கும் தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்கள்.

“ஜூலை 10 அணை திறக்கப்பட்டால்தான், குறுவை சாகுபடியை உத்தரவாதப்படுத்த முடியும்; இல்லையென்றால், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஏழாவது ஆண்டாக குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாவது நிச்சயம்” என எச்சரிக்கின்றன தமிழக விவசாய சங்கங்கள். டெல்டா மாவட்ட விவசாயிகள் வாழ்வா, சாவா என்ற இக்கட்டில் மீண்டும் நிறுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அதன்படி அமைக்கப்பட்டிருக்கும் ஆணையத்தின் அதிகாரம் ஆகியவை சோளக்காட்டு பொம்மைகளா, இல்லையா என்பதைத் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வெகுகாலம் காத்திருக்கத் தேவையில்லை.

மின்னூல்:

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com