Saturday, July 13, 2024
முகப்புகட்சிகள்பா.ஜ.கமோடியின் எடுபிடிகளே சி.பி.ஐயின் இயக்குநர்கள்

மோடியின் எடுபிடிகளே சி.பி.ஐயின் இயக்குநர்கள்

-

ந்தியாவை ஆளும், அதிகார வர்க்கத்தைப் பொறுத்தவரை, மத்திய புலனாய்வுத்துறை ஆன சி.பி.ஐ (Central Bureau of Investigation) ‘கூண்டுக்கிளி’ என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆங்கிலப் பத்திரிகைகளால் Caged Bird என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த சி.பி.ஐ இன்றைக்கு மோடி கும்பலால் ‘குட்டி குஜராத்தாக’ மாற்றப்பட்டிருக்கிறது.

சி.பி.ஐ - மோடியின் கூண்டுக்கிளி
சி.பி.ஐ இயக்குனர் ஏ.கே சின்ஹா, இணை இயக்குனர் ஏ.கே ஷர்மா, கூடுதல் இயக்குனர் ஒய்.சி. மோடி மற்றும் சோராபுதீன் கொலை வழக்கை குஜராத்துக்கு வெளியில் நடத்த உத்தரவிட்டதால் தனது உறவினர் ஜாவீத் அகமது சி.பி.ஐ கூடுதல் இயக்குனர் கொள்கை பதவியிலிருந்து நீக்கப்பட காரணமாக இருந்த நீதிபதி அப்தாப் ஆலம் (படம் : நன்றி outlookindia.com)

மிகச் சமீபத்தில் ஒய்.சி. மோடி, சிபிஐயின் கூடுதல் இயக்குநரகாவும் அருண் குமார் சர்மா இணை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

யார் அந்த ஒய்.சி மோடியும் அருண் குமார் சர்மாவும்?

ஒய்.சி.மோடி அசாம்-மேகாலயாவிலிருந்து ஐ.பி.எஸ் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர். மோடியின் கூட்டாளியான இவர் குஜராத் படுகொலைகளை விசாரிக்கும் அமைப்பிலும் ஹரேன் பாண்டியா கொலை வழக்கிலும் புலனாய்வு அதிகாரியாகச் செயல்பட்டவர்.

ஹரேன் பாண்டியா குஜாரத்தின் உள்துறை அமைச்சராகவும், மோடியின் கூட்டாளியாகவும் இருந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். மோடியின் இரத்தக் கவுச்சி வெளிவந்த நேரத்தில் மோடியின் கூட்டாளியான ஹரேன் பாண்டியா காந்திநகர் பூங்கா ஒன்றின் அருகில்  போட்டுத் தள்ளப்பட்டார். இந்தக் கொலை வழக்கை விசாரிக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட சி.பி.ஐ விசாரணைக்குழுவின் தலைவராக இருந்தவர் ஒய்.சி.மோடி!

ஒய்.சி. மோடியின் திருவிளையாடலால் ஹரேன் பாண்டியன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் குஜராத் உயர் நீதி மன்றத்தால் 2011-ல் விடுவிக்கப்பட்டனர். தீர்ப்பு எழுதிய நீதிபதி வெளிப்படையாக சி.பி.ஐயைக் காறித்துப்பும் விதத்தில் கண்டனங்களை பதிவு செய்தார்! ஹரேன் பாண்டியன் குடும்பத்தினர், சி.பி.ஐதான் இந்த வழக்கை ஊற்றி மூடியது என்று குற்றம் சாட்டினர்.

ஒய்.சி.மோடியின், மோடி சேவை இத்தோடு நிற்கவில்லை. 2010 குஜராத் படுகொலைகளை விசாரிக்கும் பொருட்டு ஆர்.எஸ்.எஸ் சுயம் சேவக்கான ஆர்.கே. ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழுவிலும் அங்கம் வகித்தவர் இந்த ஒய்.சி.மோடி! குறிப்பாக கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பிற்பாடான கலவரங்கள், நரோடா பாட்டியா, நரோடா காம் படுகொலைகள் தொடர்பான மூன்று விசாரணைக் கமிசன்களிலும் விசாரணை அதிகாரியாகச் செயல்பட்டிருக்கிறார்.

விளைவு!? கோத்ரா ரயில் எரிப்புக்கு பிற்பாடான கலவரங்களை மோடி தடுத்து நிறுத்தவில்லை என்பதற்கோ கலவரங்களை திட்டமிட்டு நடத்துவதற்கு வாய்மொழி உத்தரவுகளை மோடி வழங்கினார் என்பதற்கோ போதிய ஆதாரமில்லை என்று கச்சிதமாக வேலையை முடித்தது மோடியின் கைக்கூலிக்கும்பலான ராகவன்-ஒய்.சி.மோடி கும்பல். இந்த குஜராத் கும்பல் சி.பி.ஐக்குள் நுழைந்த கதையின் ஒரு பரிமாணம் மட்டுமே இது!

இரண்டாவது பரிமாணம் அருண் குமார் சர்மாவினுடையது! கடந்த ஏப்ரலில் சி.பி.ஐக்குள் இணை இயக்குநராக கொண்டுவரப்பட்ட இந்த அருண் குமார் சர்மா யார்?

மோடியின் கட்டளைப்படி பெங்களூரைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளாரன பெண்ணை அமித் ஷா தலைமையில் குஜராத்தின் ஒட்டுமொத்த புலனாய்வுத்துறையே வேவு பார்த்ததில்லையா? அப்படி வேவுபார்த்த புலனாய்வுத்துறைக்கு தலைமை தாங்கிய ஐ.ஜி தான் அருண் குமார் சர்மா.

2013-ல் கோப்ரா-போஸ்ட் (cobrapost) மற்றும் குலைல் (Gulail.com) இணையதளங்கள் வெளியிட்ட ஆடியோ பேச்சுகள் அருண் குமார் சர்மா, மோடியின் உளவாளி (Snoopgate) என்பதை அம்பலப்படுத்தியது.

230 தொகுதிகளாக வெளியிடப்பட்ட அமித் ஷாவிற்கும் குஜராத் உளவுப்பிரிவிற்கும் இடையே நடைபெற்ற உரையாடல்களில், அமித் ஷா, “என்னை விட, மோடி சாஹிப் தகவல்களை முன் கூட்டியே தெரிவதில் வல்லவராக இருக்கிறார்” என்று பேசிய வரலாற்று ஆவணமும் அடக்கம்!

பொதுவெளியில் அம்பலமான ஆடியோ பேச்சுக்கள், பெண்ணை உளவு பார்ப்பது குஜராத்தில் மட்டுமன்றி கர்நாடகவிலும் தொடர்ந்ததை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இதைத் தலைமைதாங்கி நடத்திய அருண் குமார் ஷர்மா தான் சி.பி.ஐ.யில் தற்பொழுது இணை இயக்குநராக அமர்த்தப்பட்டிருக்கிறார். அதுவும் சுலபத்தில் முடிந்துவிடவில்லை.

அருண் குமாருக்கு சி.பி.ஐ.யின் கொள்கைத் துறையின் இணை இயக்குநர் (JD (policy) பதவி வழங்க வேண்டும் என்று ஆளும் கும்பல் அழுத்தம் கொடுத்திருக்கிறது. அந்தப் பதவி மத்திய அமைச்சரவையின் அனைத்து இலாக்காக்களையும் சி.பி.ஐயையும் இணைக்கும் பதவியாகும். இந்த பதவிக்கு வருபவர் சி.பி.ஐயில் ஏற்கனவே பணியாற்றியவராகவும் அனுபவம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும் என்கிறது பணிநியமன ஒழுங்குமுறைகள். இதைக்காரணம் காட்டி, சி.பி.ஐ இயக்குநர் எதிர்த்ததால், சி.பி.ஐயோடு தொடர்பில்லாத அருண் குமார் ஷர்மா இணை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

சி.பி.ஐ, குட்டி குஜராத்தாக மாறியது இத்தோடு நிற்கவில்லை. மோடி கும்பல் பதவியேற்றவுடனயே அப்பொழுது சி.பி.ஐ.யின் இணை இயக்குநராக (கொள்கைத் துறை) இருந்த ஜாவித் அகமத் உத்தர பிரதேசத்திற்கு தூக்கியடிக்கப்பட்டார். இத்துணைக்கும் அடுத்த கூடுதல் இயக்குநராக பதவிபெறும் நிலையில் இருந்த ஜாவித் அகமத் தூக்கியடிக்கப்படுவதற்கு ஒரே காரணம், இவர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அப்தாப் ஆலமின் தூரத்துச் சொந்தம் என்பதுதான்.

நீதிபதி அப்தாப் ஆலம், கிரிமினல் அமித் ஷா திட்டமிட்டு செய்த ‘சோரபூதின் போலி எண்கவுண்டர்’ தொடர்பான வழக்கில் ஓய்வு பெறுவதற்கு முன் விசாரணை நீதிபதியாக இருந்தவர். (பின்னர் வந்த சதாசிவம் அமித் ஷாவை விடுவித்து, கேரள கவர்னர் பதவியைப் பெற்றுக்கொண்டது தனிக்கதை!)

நீதிபதியின் தூரத்துச் சொந்தமான ஜாவித் அகமத்தின் பணியிட மாற்றம் அமித் ஷாவின் நிபந்தனையின் பேரிலேயே நடைபெற்றதாக உள்துறை செயலர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்!

நம்ம ஊரில் பத்ரி சேசாத்ரி, துக்ளக் சோ, தரகு வைத்தி, மாமா மணியன், போன்றவர்கள் ‘குஜராத் மாடல்’ ‘குஜராத் மாடல்’ என்று கூவியது இன்றைக்கு சி.பி.ஐ குட்டி குஜாராத்தாக மாறியிருப்பதில் இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் கறாராக சொல்வதென்றால் அழுகி நாறும் ஓர் உண்மை நிரூபணம் என்று சொல்லிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தோற்றுப்போன இந்த அமைப்பில் சி.பி.ஐ, ஏன் குட்டி குஜராத்தாக மாற்றப்பட வேண்டும்? என்பதில் முக்கிய நிகழ்ச்சி நிரலே அடங்கியிருக்கிறது.

கேள்விக்கான விடையை நாம் நம்பர் போட்டு பரிசீலிக்க வேண்டும்.

1. லலித்மோடி விவாகரம் தொடர்பாக வசுந்தரா ராஜே அமித் ஷாவை சந்தித்திருக்கிறார்!

2. ஒட்டுமொத்த ஆர்.எஸ்.எஸ் கும்பலும் சேர்ந்து கொள்ளையடித்த வியாபம் ஊழல் இன்றைக்கு சி.பி.ஐ.யின் கையில்!

3. மத்திய பிரதேசத்தின் முதலமைச்சர் பா.ஜ.க.வின் ஆர்.எஸ்.எஸ் வெறியரான சிவராஜ் சிங் சவுகான் வியாபம் தொடர்பாக மோடியை டில்லியில் சந்தித்திருக்கிறார்!

4. மகாராஷ்டிராவின் பங்கஜ முண்டா ஊழல் வழக்கு சி.பி.ஐக்கு எதிர்காலத்தில் மாற்றப்படலாம்!

5. ராம் ஜென்ம பூமியில் ஆர்.எஸ்.எஸ் வானரங்கள் கோயில் கட்டுகிறேன் பேர்வழி என்று வி.ஹெச்.பியின் அசோக் சிங்கால் கூட்டம் 1400 கோடி ரூபாயை சுருட்டியிருக்கிறது. இந்துத்துவத்தின் இரு முகமைகள் (இந்து மகாசபா, வி.ஹெச்.பி) தங்களுக்குள் பங்கிடுவதில் சண்டை காரணமாக இன்றைக்கு விசயம் வெளியே நாறிக்கொண்டிருக்கிறது.

6. தமிழ்நாட்டில் வேலூர், கோவை, இராமநாதபுரம், கன்னியாகுமரி போன்றவை பா.ஜ.கவின் ஏ சென்டர்களாக அறிவித்து அமித் ஷா களப்பணி காணவிருப்பதாக நாளேடுகள் சொல்கிறன. அமித் ஷாவின் களப்பணி பாணியின் படி இங்கெல்லாம் இரத்த ஆறு ஓட வேண்டும். ஏற்கனவே ஆம்பூரில் இந்து-முசுலீம்களுக்கிடையே முனைவாக்கம் மிகத் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தென்மாவட்டங்களில் இன்னுமோர் சாதிக்கலவரம் நடைபெறுவதற்கு, முன்தயாரிப்பு வேலைகள் ஆப்ரேசன் 100 எனும் பெயரில் நடைபெறுவதாக தமிழ் இந்துவின் பத்திரிக்கையாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

அனைத்து அரங்குகளிலும் அம்பலப்பட்டு அழுகிநாறும் மோடி கும்பலுக்கு இனி பிரச்சனைகளை திசை திருப்புவதற்கும் மேலும் தாக்குப் பிடிப்பதற்கும் எஞ்சியிருக்கும் வழிமுறைகள் கலவரமும் இந்து-முசுலீம் பிரச்சனையும் மட்டுமே!

இதில் சி.பி.ஐ, குட்டி குஜராத்தாக இருக்க வேண்டியது இந்துத்துவ கும்பலின் வழமையான வாடிக்கைதான்.

இந்த நேரத்தில் மோடியின் குஞ்சு குளுவான்கள், ரசிக சிகாமணிகள், கார்ப்பரேட் கொள்ளைக் கும்பல், பத்திரிகை தரகு மாமாக்கள் இவர்களை இன்னும் அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் அறியாமையில் இருப்பதாக நடிப்பவர்கள், வளர்ச்சி என்று வேசம் போடுகிற மோடியின் முதலாளித்துவ ஜாக்கிகள் போன்றவர்கள் தான் அடுத்த புலனாய்வுக்குழுவில் சிறப்பு அதிகாரிகளாக இருக்கப்போகிறவர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது!!!

இருந்தபோதிலும் இந்த ஊழிக்கூத்தை நாம் இனிமேலும் அனுமதிக்கப்போகிறோமா? என்பது தான் இத்தருணத்தில் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி!

– இளங்கோ

மேலும் படிக்க

  1. சி.பி.அய் என்றாலே யாருக்கும் வளிந்து கொடுக்காத
    வம்சம் என்று ஒரு மாய பிம்பம்….
    ஆளும் கட்சிக்கு வளைந்து, நெளிந்து….
    சொல்ல நாக்கு கூசுது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க