கேள்வி : //பண்பாட்டு மற்றும் அரசியல் தளங்களின் மீட்டெடுப்பில் திராவிடர் இயக்கத்தார் காட்டும் அக்கறையை, இந்திய பொருளாதார கட்டமைப்பை விளக்கும் வகையான விழிப்புணர்வு தளங்களில் ஏற்படுத்த மறந்துவிட்டனவோ?//

– பிரபாகரன்

முரசொலி மாறன் எழுதிய “மாநில சுயாட்சி” (1974-ம் ஆண்டில் வெளியானது) நூலின் முன்னுரையில் அவர் தி.மு.கவின் இலட்சியங்களாக நான்கைக் குறிப்பிடுகிறார்.

  • இந்தி ஆதிக்க ஒழிப்பு
  • தமிழ் மொழி – தமிழ் இன – தமிழ் மரபின் மேம்பாடு
  • தமிழ்நாட்டின் உரிமைகள்; அதன் நியாயமான பங்கு
  • சுரண்டல் ஒழிப்பு
    – ஆகியவைதான் அந்த இலட்சியங்கள்

1962-இல் சீனப் படையெடுப்பையொட்டி இந்திய ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து, தி.மு.க. பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டு விட்டதைக் குறிப்பிடுகிறார் மாறன். மேற்கண்ட இலட்சியங்களை நிறைவேற்றவே பிரிவினை கோரிக்கையை வைத்திருந்ததாகவும் அதன் பிறகு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அடைய வேண்டிய இலட்சியங்களாக அவை மாற்றப்பட்டது என்கிறார் அவர்.

அவற்றில் முதல் மூன்று இலட்சியங்கள் மொழி, பண்பாடு, மாநில சுயாட்சி என்ற வகைப்பாட்டில் வருகிறது. நான்காவது பொருளியல் துறையில் வருகிறது. தி.மு.க. முதல் மூன்றுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை நான்காவதில் ஏன் கொடுக்கவில்லை என்பது உங்கள் கேள்வி!

Murasoli Maran
கருணாநிதி – முரசொலி மாறன்

ஆனால் முதல் மூன்றிலுமே தி.மு.க. தனது இலட்சியத்தை அடைந்து விடவில்லை. இன்றும் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, அதிகார வர்க்க, நீதிமன்ற மொழியாக இல்லை. கல்வியிலும் அது பயிற்று மொழியாக அனைத்து துறைகளிலும் இல்லை. காங்கிரசு ஆட்சி துவங்கி இன்றைக்கு மோடி ஆட்சி வரை இருந்த கொஞ்ச நஞ்ச மாநில உரிமைகள் கூட பறிபோய்விட்டன. நீட் தேர்வு திணிப்பு, தபால் துறை இந்தி தேர்வு ஆகியவை சமீபத்திய சான்றுகள்.

பொருளாதார தளத்தில் தி.மு.க.வும் சரி பொதுவில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு என்று இட ஒதுக்கீடு, சமூக நலத்திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. மதிய உணவு, இலவசக் கல்வி, வேலை வாய்ப்பு, பொது மருத்துவம், தாலிக்கு தங்கம், ஒரு ரூபாய் அரிசி, திருமணப் பெண்களுக்கு நிதி, லேப்டாப், சைக்கிள், டிவி என்று தமிழகம் மற்ற மாநிலங்களை விட வாழ்க்கைத் தர வரிசையில் முன்னுக்கிருப்பது உண்மைதான். ஆனால் இவை மட்டும்தான் பொருளியல் தளமா? இன்று கல்வி தனியார் மயமாகிவிட்டது. மருத்துவமும் கார்ப்பரேட் மயமாகிவிட்டது. இரண்டிலும் செல்ல முடியாத மிக வறியவர்கள்தான் அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு, அரசு மருத்துவமனைகளில் வைத்தியம் பார்க்கிறார்கள்.

படிக்க :
♦ அழிவை நோக்கி அமேசான் மழைக் காடுகள் | முனைவர் சேதுபதி
♦ கேள்வி பதில் : ஆணாதிக்க சமூகத்தின் அலங்காரங்களை ஒரு பெண் துறப்பது எப்படி ?

இந்தி பேசும் மாநிலங்களை விட இங்கே நிலமற்ற விவசாயிகளின் விகிதம் அதிகம். அதே போன்று தொழிற்துறையில் நிரந்தரத் தொழிலாளர்களை விட ஒப்பந்த தொழிலாளர்களே அதிகம் பணி செய்கின்றனர். இடையில் நடுத்த வர்க்கம் அதிகரித்திருக்கிறது. நகரமயமாக்கம் அதிகரித்திருக்கிறது. நகரத்தில் ஈட்டப்படும் பணத்தை வைத்து விவசாயம் கிராமத்தில் உயிர் பிழைத்திருக்கிறது.

இந்த சூழலை உருவாக்கிய உலகமயம், தாராளமயம், தனியார் மயத்தை தி.மு.க.வும் சரி, அதிமுகவும் சரி அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இரு கட்சிகளைச் சேர்ந்த சிலர் தரகு முதலாளிகளாக இருக்கின்றனர். தனியார் உயர் கல்வி நிறுவனங்களை நடத்துகின்றனர்.

எனவே பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, சமூக நீதி, மாநில சுயாட்சி, மொழி உணர்வு என்று ஆரம்பத்தில் திராவிட இயக்கத்தின் இலட்சியங்கள் இருந்தாலும் காலம் செல்லச் செல்ல அவை நீர்த்துப் போய்விட்டன. அதே போன்று 1969-க்கு முந்தைய கம்யூனிச இயக்க வரலாற்றில் மேற்கண்ட பார்ப்பனிய – சாதிய சமூகத்தின் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டன. ஒன்றுபட்ட கம்யூனிசக் கட்சியும், அதிலிருந்து பிரிந்த மார்க்சியக் கம்யூனிசக் கட்சியும் வர்க்கப் போராட்டம், உழைக்கும் மக்களிடம் வேலை செய்தல் என்று பேசினவே அன்றி இந்தியாவில் இருக்கும் இந்தி ஆதிக்கம், பார்ப்பனிய ஆதிக்கம், தேசிய இன ஒடுக்குமுறை குறித்து ஆய்வோ, திட்டமோ, விழிப்புணர்வோ கொண்டிருக்கவில்லை. அவர்களது வர்க்க அமைப்புகளும் பெயரளவு போராட்டங்களை நடத்துவதைத் தாண்டி புரட்சிக்கான திட்டத்தை கொண்டிருக்கவில்லை. 1969-ம் ஆண்டில் பிரிந்த மார்க்சிய லெனினிய இயக்கம்தான் பின்னாட்களில் இந்தத் தவறுகளை திருத்திக் கொண்டது.

எனவே இலட்சியம் என்ற வகையில் பார்த்தால் திராவிட இயக்கம் பொருளியல் துறையை புறக்கணித்தது, ஒன்றுபட்ட பொதுவுடமை இயக்கம் பண்பாட்டு துறையை புறக்கணித்தது. இந்த புறக்கணிப்பிற்கு இந்த இயக்கங்களுக்கு தலைமை வகித்த சிறு முதலாளி – நடுத்தர வர்க்க தலைமையும் ஒரு காரணம்.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க