மேசான் காடானது சுமார் 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது; மூன்று மில்லியன் தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் வீடாக உள்ளது. அமேசான் காடுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 13 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில், பத்து லட்சம் மக்கள் பூர்வீகக்குடி மைந்தர்கள்; இங்கு சராசரியாக 200 மொழிகள் பேசப்படுகின்றன.

Amazon Tribesஇந்த பூமியில் மனிதர்களால் வெளியேற்றப்படும் கார்பன்-டை-ஆக்ஸைட் (CO2) வாயுவில் 5 சதவிகிதத்தை இந்த காடுகள் ஒளிச்சேர்க்கை (photosynthesis) சுழற்சிக்காக தன்னகத்தே இழுத்துக்கொண்டு ஆக்ஸிஜன் வாயுவை வெளியேற்றுகிறது. இதனால்தான் இந்தக் காடுகள், பூமியின் நுரையீரலாக மற்றும் காற்று குளிரூட்டிகளாகவும் (Air Conditioner) செயல்படுகின்றன. அதுமட்டுமன்றி உலக வெப்பமயமாக்குதலையும் (Global Warming) கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

எவ்வாறு புயல், வெள்ளம், பூகம்பம் என இயற்கை சீற்றம் ஏற்படுகிறதோ, அதேபோல் காட்டுத்தீயும் இயற்கையின் ஒரு அங்கம்தான். கோடை காலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும்போது மரங்கள் ஒன்றோடொன்று மோதும்போதும், இடி-மின்னல்களாலும் காட்டுத்தீ ஏற்படுகிறது. ஆய்வுகளின்படி, 94 சதவிகித காட்டுத் தீயானது, மனிதர்களின் கேடுகளால் மட்டுமே உருவாகிறது.

காட்டுத்தீ ஒருவிதத்தில் நல்லதும் கூட; ஏனெனில் காய்ந்த இலைகள், சருகுகள், மரங்கள் எரிந்து மண்ணில் புதைந்து கால்சியம், பொட்டாசியம், மக்னிசீயம் போன்ற கனிமங்களை மண்ணில் அதிகப்படுத்துகிறது. வடஅமெரிக்கக் கண்டத்தில், ஆண்டுக்கு 1,00,000 ஏக்கர் நிலம் காட்டுத் தீயால் அழிகிறது. காட்டுத் தீயானது ஒருவகையில் காட்டின் வளர்ச்சியை புதுப்பிக்கப் பயன்படுகிறது.

படிக்க :
♦ அமேசான் : பற்றியெரியும் பூமிப்பந்தின் நுரையீரல் !
♦ பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !

பிரேசிலின் INPE நிறுவனம் (National Institute for Space Research) பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் மட்டும், இந்த ஆண்டு (2019) ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 72,843 தீ கொழுந்துவிட்டு எரியும் இடங்களை (Fire Hotspot) கண்டுபிடித்துள்ளனர். அமேசான் காட்டுத் தீயினால் எழும்பிய புகையானது 3000 கிலோ மீட்டர் கடந்து சென்றுள்ளது. உலகின் சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களிடம், அமேசான் காடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீ பற்றிய தகவல்கள் 2013-ம் ஆண்டிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி மற்ற ஆண்டுகளைவிட, 2019-ம் ஆண்டு மட்டும் காட்டுத்தீயானாது 85% அதிகமாக உள்ளது.

Amazon Forest Fireஅமேசான் காட்டுத்தீ இதுவரை 200 மில்லியன் டன்கள் (Tonnes) கார்பன்-டை-ஆக்ஸைட் வாயுவை வெளியேற்றியுள்ளது. இது கடந்த வருடம் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் வெளியேற்றப்பட்ட கார்பன்-டை-ஆக்ஸைட் வாயுவின் அளவைவிட மூன்று மடங்கு அதிகமாகும். நாசா (NASA)-வின் ஆய்வின்படி, கடந்த வருடம் ஜூலை மாதத்தை விட, 2019-ம் வருடம் ஜூலை மாதம் காட்டுத்தீயானது 90 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் கருத்தின்படி இந்த காட்டுத்தீக்கு முக்கிய காரணம் காடழிப்பு (Deforestation) தான். கிளைமேட் வாட்ச் (Climate Watch) என்கிற அமெரிக்க ஆராய்ச்சி நிறுவன கணக்குப்படி, 2000-ம் முதல் 2009-ம் ஆண்டு வரை 320 லட்சம் ஏக்கர் பரப்பளவு அமேசான் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடங்களை விட, இந்த வருடம்தான் அதிக காடழிப்பு நடந்துள்ளது என்று INPE நிறுவனமும் தகவல் வெளியிட்டுள்ளது.

நாசா(NASA)-வால் இந்த வருடம் மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் எவ்வாறு காடழிப்பு அதிகமான அளவில் ஏற்பட்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டது. (Bio-Sphere Sciences Laboratory, NASA). சட்டவிரோதமான காடழிப்புகள் தான் இந்த காட்டுத்தீக்கு மிகமுக்கியக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 2019-ம் ஆண்டுக்கு பிறகு கனரக வாகனங்களை (Bulldozer, Trucker) கொண்டு மரங்கள் மிகப்பெரிய அளவில் அழிக்கப்பட்டுள்ளன.

படிக்க :
♦ கேள்வி பதில் : டாலர் மட்டும் உலகம் முழுவதும் இருப்பது ஏன் ? 
♦ ஜய் பொல்சானரோ : அமேசான் பழங்குடிகளை அழிக்க வந்த பிரேசிலின் மோடி

பிரேசிலின் முந்தைய ஆட்சி (2009 – 2012) காலங்களில், சட்டவிரோத காடழிப்பு, தீவைத்தல் ஆகிவற்றிற்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு காடழிப்பு 75 சதவிகிதம் குறைக்கப்பட்டிருந்தது. பிரேசிலின் வலதுசாரிக் கொள்கைகொண்ட ஜனாதிபதியான ஜய் போல்சானரோ, தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, நாட்டின் பெருளாதாரத்தை உயர்த்துவதற்கு அமேசான் காடுகளின் வளங்கள் பயன்படுத்தப்படும் என்றார். போல்சனாரோ பதவியேற்றபின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக சட்டவிரோத காடழிப்பு அதிக அளவில் ஊக்குவிக்கப்பட்டது.

Amazon Forest Fire Data
அமேசான் காட்டுதீ குறித்த புள்ளி விவரம் (2018 மற்றும் 2019)

சிறை தண்டனை மற்றும் அபராதம் ஆகியவை நிறுத்தப்பட்டன. மரங்களை வெட்டுதல், காட்டை அழித்தல், விவசாயம் முடிந்தபிறகு நிலத்தை தீவைத்தல் முறை (Slash and Burn method) என போல்சனாரோ பதவி ஏற்ற பிறகு பல கேடுகள் அதிக அளவில் ஊக்குவிக்கப்பட்டன. மாட்டிறைச்சி ஏற்றுமதிக்காகவும், விவசாயத்திற்காகவும், மரம் வெட்டும் தொழில்களுக்காகவும் அமேசான் காடுகள் இந்த 2019-ம் ஆண்டு கடந்த ஒன்பது மாதங்களில் 20% அழிக்கப்பட்டுள்ளன.

INPE நிறுவன இயக்குனர், முக்கிய தகவல்களை வெளியிட்டதால் போல்சனாரோ அவரை இயக்குனர் பதவியிலிருந்து நீக்கிவிட்டார். நூறு நிபுணர்களை கொண்ட பிரேசிலின் National Enviornment Council குழுவை கலைத்துவிட்டு, ஜனாபதியால் நியமிக்கப்பட்ட ஐந்து நிபுணர்கள் கொண்ட குழுவாக மாற்றியமைத்தார். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வேண்டுமென்றே அமேசான் பற்றி பொய்யான தகவல்களை பரபரப்புகின்றன என்கிறார் போல்சனாரோ. உலக வெப்பமயமாகுதல் பற்றி சிறு கவலையும் கொள்ளாதவர்.

2010-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் போதும் கூட 60,000 தீ கொழுந்துவிட்டு எரியும் (Fire Hotspot) இடங்கள் பிரேசிலில் கண்டறியப்பட்டன. ஆனால், இந்த வருடம் 2019-ல் கடந்த எட்டு மாதங்களுக்குள் 72,843 கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2010-ம் ஆண்டை ஒப்பிடும் போது, இந்த வருடம் மிதமான வெப்பம் தான் வீசியது. இந்த வருட காட்டுத்தீக்களால் இதுவரை 2000 லட்சம் டன்கள் கார்பன்-டை-ஆக்ஸைட்(CO2) வாயு வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள் 5000 லட்சம் டன்கள் வெளியேற்றப்பட்டிருக்கும்.

Jair-Bolsonaro
பிரேசில் ஜனாதிபதி ஜய் போல்சானரோ.

சட்டவிரோத காடழிப்பு ஒன்றே அமேசான் காட்டுத்தீக்கு காரணம் என உறுதியாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த வருடத்திற்குள் காட்டுத்தீயானது இன்னமும் பலமடங்கு பெருகும் என்பதால், இந்த மழைக்காடானது (Rain Forest) பாலைவனமாக மாறும் அபாயம் உருவாகியுள்ளது. சட்டவிரோத காடழிப்பும், உலக வெப்பமயமாக்குதலும் அமேசான் மழைக்காடுகளை மூன்றில் இரண்டு பங்கை பாலைவனமாக்கும். அமேசான் காடுகளில் ஏற்படும் பருவகால மாறுதல்கள் பிரேசில் மட்டுமின்றி தென்அமெரிக்க, வடஅமெரிக்க மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கும் கடுமையான பாதிப்புகளை மிக விரைவில் ஏற்படுத்தும்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காடுகளை இந்தியாவின் அமேசான் காடுகள் என்றால் மிகையில்லை. மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுவதுமாக பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என மாதவ் காட்கில் அறிக்கை கூறியது. ஆனால், அதை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, உல்லாச விடுதிகள்(Resorts), மிகப்பெரிய வணிக வளாகங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களும் மேற்குத் தெடர்ச்சி மலைகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. அதனால்தான், வருடாவருடம் கேரளாவில் பெருவெள்ளத்தினால் மிகப்பெரிய சேதம் ஏற்படுகிறது. அதே, மேற்குத் தெடர்ச்சி மலையில்தான் நியூட்ரினோ திட்டத்திற்கு மலையை குடைந்து மிகப்பெரிய ஆராய்ச்சி மையம் கட்ட முனைகிறார்கள்.

இயற்கையை நாம் அழித்தால், இயற்கை நம்மை மட்டுமில்லாது, நம் சந்ததினரையும் நிச்சயம் அழிக்கும். இயற்கையோடு இசைந்து வாழப் பழகுவோம்!
இயற்கையைக் காத்து, நமையும், நம் சந்ததினரையும் காப்போம்!

Dr.சேதுபதி ஆறுமுகம், Phd (Geology)
சுற்றுச் சூழல் ஆர்வலர்.

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க