Sunday, October 13, 2024
முகப்புசெய்திஉலகம்அமேசான் : பற்றியெரியும் பூமிப்பந்தின் நுரையீரல் !

அமேசான் : பற்றியெரியும் பூமிப்பந்தின் நுரையீரல் !

அமேசான், 7 நாடுகளில் பரவி விரவியுள்ள பல்லுயிர்களின் தனியுலகம். உலகிற்குத் தேவைக்கான 20 விழுக்காடு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது. தற்போது அது பற்றி எரிகிறது.

-

பிரேசில் நாட்டின் வடக்குப் பகுதியில் அடர்ந்திருக்கும் அமேசான் காடுகளில் கடந்த சில மாதங்களில் பல்வேறு இடங்களில் பற்றி எரியும் காட்டுத்தீ உலகம் முழுவதும் உள்ள சுற்றுச் சூழல் ஆர்வலர்களைப் பெருமளவில் கவலையடையச் செய்திருக்கிறது. வானில் உள்ள செயற்கைக்கோள்கள் எடுத்து அனுப்பும் புகைப்படங்களில் தெளிவாகத் தெரியுமளவுக்கு அதிக அளவிலான காட்டுத் தீ பரவியிருக்கிறது.

இந்த பிரச்சினை குறித்து ஜி7 மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் விவாதிக்க வேண்டுமென்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் கூறியதை ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்கெல் வரவேற்றுள்ளார். பிரேசில் அரசு, காட்டழிப்பிற்கு துணை போவதாகக் கூறி பிரேசிலிற்கு இதுவரை கொடுத்து வந்த நிதியை ஜெர்மனியும் நார்வேயும் நிறுத்தியிருக்கின்றன. காட்டழிப்பிற்குத் துணை போவதாக பிரேசிலின் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுவதன் பின்னணி என்ன தெரியுமா ?

விபத்துக்கான காரணம் :

பிரேசில் அதிபர் செயிர் பொல்சனரோ கடந்த ஜனவரி மாதம் ஆட்சியில் அமர்ந்ததும் சில மணிநேரங்களுக்குள்ளாகவே அமேசான் காடுகளை கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்படைக்கும் நிர்வாக ஆணையில்தான் கையெழுத்திட்டார்.அமேசான் காடுகளில் குடியிருக்கும் சில லட்சம் பழங்குடியினருக்காக, பிரேசிலின் மிகப்பெரிய வளத்தை அப்படியே விட்டு வைத்திருக்க முடியாது என அறிவித்தார் பொல்சனரோ.

ஆட்சியில் அமர்ந்தது முதல் தற்போது வரை, அமேசான் காடுகளைக் காக்க போராடிவரும் பழங்குடியின மக்களின் மீது அரச வன்முறையை ஏவிவிடுவதும், கார்ப்பரேட் கனிம வளக் கொள்ளையர்களுக்காக அமேசான் காட்டை அழிப்பதற்குமான வேலைகளைச் செய்து வந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அமேசான் காட்டுப் பகுதிகளுக்கு அருகில் இருக்கும் கிராம விவசாயிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க பற்ற வைத்த நெருப்புதான் தற்போதைய தீப்பரவலுக்குக் காரணமாக பிரேசிலிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. ஆனால், தீ ஆங்காங்கே பல்வேறு இடங்களில் அல்லவா பற்றி எரிகிறது? ஏதோ ஒரு மூலையில் பற்ற வைத்த தீ எப்படி வெவ்வேறு பகுதிகளுக்குப் பரவும்?

மின்னல், காய்ந்த மரங்கள் மோதிக்கொள்வது, பயிர் நிலங்களை பற்ற வைப்பது, வேறு சில காரணங்களுக்காக மனிதர்கள் வைக்கும் தீ போன்றவை காடுகளில் தீப்பிடிப்பதற்கு காரணங்களாக உலகம் முழுவதும் சொல்லப்படுகின்றன.

இது அமேசான் காடுகளை அழிப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கை என அமேசான் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எந்த அளவிற்கு காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்பது இந்த ஆண்டு இறுதியில்தான் தெரியுமென்றாலும் செயற்கைகோள் புகைப்படங்களின் படி சென்ற ஆண்டைவிட 278 விழுக்காடு அளவிற்கு காடழிப்பு நடந்துள்ளதாக பிரேசிலின் தேசிய வின்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது சந்தேகமில்லாமல், கார்ப்பரேட் வணிக சூறையாடலின் எதிரொலியாகவே இருக்கிறது.

காட்டுத் தீயின் விளைவுகள் :

Amazon Rainforest fire
பற்றி எரியும் அமேசான் மழைக்காடு.

அமேசான் மழைக்காடுகளில் பரவத் தொடங்கிய தீயினால் வடக்கு பிரேசிலின் வடக்கில் உள்ள ரோரைமா, ஏக்கர், ரொண்டோனியா மற்றும் அமேசானாஸ் பகுதிகள் கடுமையாக பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. தீயினால் ஏற்பட்ட கடுமையான புகைமூட்டம் காரணமாக 3,200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஸா பாலோவில் வானம் இருண்டது. ஐரோப்பிய மையத்தின் வானிலை முன்னறிவிப்புகளுக்கான கோபர்னிக்ஸ் வளிமண்டல கண்காணிப்பு அமைப்பின் படி இதன் தாக்கம் அயிரக்கணக்கான கிலோமீட்டருக்கும் அப்பாலுள்ள அட்லாண்டிக் வரைக்கும் சென்றுள்ளது.

2013-ம் ஆண்டை ஒப்பிடும் போது விபத்துகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட 83 விழுக்காடு அதிகரித்துள்ளதாக பிரேசிலின் வின்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் நடந்த தீவிபத்துக்களின் எண்ணிக்கை 72,843.

இத்தீவிபத்துக்கள சுமார் 228 மெகா டன் அளவிற்கான கரியமில வாயுவை வெளியிட்டிருக்கின்றன. மேலும் விசத்தன்மை கொண்ட கார்பன் மோனாக்ஸைடு அதிகளவில் தென்னமெரிக்காவின் கடற்கரையும் தாண்டி பயணித்துள்ளது. இந்த தீவிபத்துக்களின் காரணமாக வெனிசுலா, பொலிவியா, கொலம்பியா, பெரு உள்ளிட்ட மற்ற தென்னமெரிக்க நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

படிக்க:
♦ தற்கொலை தேசமா நம் இந்தியா ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ தொழில்நுட்பம் கொண்டு மழைக்காடுகளை காக்கும் அமேசான் பழங்குடிகள் !

நாமும் ஏன் கவலை கொள்ள வேண்டும் ?

உலகம் முழுவதும் காடுகள் அழிக்கப்படுவதும், தீவிபத்து ஏற்படுவதும் அதை அந்தந்த நாடுகளின் அமைப்புகள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பதும் அவர்கள் கொல்லப்படுவதும் நடந்துகொண்டுதானிருக்கிறது. ஆனால் அமேசான் தீவிபத்திற்கு ஒட்டுமொத்த உலகே பதறுகிறது.

Amazon-Lungs-of-the-Earthபூமிப் பந்தின் பாதி மழைக்காடுகளை தன்னகத்தே கொண்டுள்ள அமேசான் ஏழு நாடுகளில் பரவி விரவியுள்ள பல்லுயிர்களின் தனியுலகம். உலக நுரையீரல் தேவைக்கான 20 விழுக்காடு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது. எங்கிலும் காணக் கிடைக்காத உயிரினங்கள் அங்கே வாழ்ந்து வருகின்றன.

அமேசான் ஆற்றுப்படுகையிலுள்ள நாடுகள் வெளியிடும் கரியமில வாயு அனைத்தையும் அமேசான் மழைக்காடுகள் உள்ளிழுத்துக் கொள்வதாக 2017-ம் ஆண்டு லீட்ஸ் பல்கலைக்கழகம் ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளது.

அமேசான் மழைக்காடுகள் உலகம் முழுதுக்குமான நீர் சுழற்சியில் பங்களிக்கின்றன. அது உற்பத்தி செய்யும் மழை ஆண்டிஸ் மலைத்தொடருக்கு கூட செல்கிறது. அட்லாண்டிக்கிலிருந்து வரும் ஈரப்பதம் மழைக்காடுகளில் விழுந்து, எழுந்து ஆவியாகி வளிமண்டலத்திற்கு செல்கிறது.

பெற்றுக் கொள்ளும் மழையில் பாதியையாவது மறு உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருப்பதாக நேசனல் ஜியோகிராபிக் ஆய்வு ஒன்று கூறுகிறது. இது இயற்கையின் இயங்கியலில் மிகநுட்பமான ஈடிலா சமநிலை.

படிக்க:
♦ பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !
♦ ஜய் பொல்சானரோ : அமேசான் பழங்குடிகளை அழிக்க வந்த பிரேசிலின் மோடி

சூழல் பாதுகாப்புச் சட்டங்களும் சீரழிவுகளும் :

அமேசான் மழைக்காடுகளில் விவசாயிகள் நிலம் வாங்கலாம் ஆனால் 20 விழுக்காடு மட்டுமே வேளாண்மை செய்ய முடியும் என்றது பிரேசில் வனப்பாதுகாப்பு சட்டம் 1965.  இராணுவ ஆட்சிக்குப் பிறகு, 1988-ல் பழங்குடிகளின் பகுதிகளில் [கார்ப்பரேட்] வளர்ச்சிப்பணிகளை தடுப்பதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் 2012-ல் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியின் அளவு குறைக்கப்பட்டு காட்டழிப்பிற்கான அபராதமும் குறைக்கப்பட்டது. அதை 2018 -ல் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

அமேசானை கார்ப்பரேட்டிற்கு திறந்து விடும் பொல்சனரோ :

கால்நடை வளர்ப்பு, மரம் வெட்டுதல், மின் திட்டங்கள், சுரங்கம் மற்றும் வணிக விவசாயம் என 1960-க்கு பிறகு, மிகப்பெரும் அளவிலான காட்டழிப்பு நடவடிக்கைகள் அமேசானில் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

brazil president bolsonaro
பிரேசில் அதிபர் பொல்சனரோ.

தான் அதிபரானால் தங்கமும், தாதுப்பொருள்களும் கொள்ளையாக கிடக்கும் அமேசானை கார்ப்பரேட் வளர்ச்சிப்பணிகளுக்காக திறந்து விடுவதாக கூறி 2019 -ல் பொல்சனரோ அதிபரானார். பழங்குடிகளுக்கென காட்டுப்பகுதி பாதுகாக்கப்படுவதை அவர் கடுமையாக எதிர்த்தது மட்டுமல்லாமல் சட்டவிரோதமாக நடைபெற்று வந்த காட்டழிப்பை சட்டபூர்வமாக்கினார். ‘அமேசானிலிருக்கும் கையளவு பழங்குடிகளுக்காக தன்னுடைய இயற்கை வளங்களை பயன்படுத்தாமல் பிரேசில் இருக்காது” என்று தேர்தலில் வென்ற பிறகு அவர் கூறியிருந்தது நினைவு கூறதக்கது.

அமேசானில் காட்டழிப்பு நடவடிக்கைகளின் வேகத்தை செயற்கைக்கோள் புகைப்படங்களைக் கொண்டு  அம்பலப்படுத்தியதற்காக, ஜூலை மாதம் பிரேசில் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளரான ரிகார்டோ கால்வாவோவை வேலையிலிருந்து பொல்சனரோ நீக்கினார். அந்த புகைப்படங்கள் இட்டுக்கட்டியது என்ற அவரது குற்றஞ்சாட்டை ஆய்வு மையம் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடி முற்றிய இக்காலகட்டத்தில் பல்வேறு நாடுகளிலும் வலதுசாரிகளின் வளர்ச்சி  தலைதூக்கியுள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதில் மக்களை ஒழித்துக் கட்டுவதோடு மட்டுமல்லாமல், இந்த பூமியையும் சீரழிப்பதில் மோடிக்குச் சற்றும் சளைத்தவரில்லை பொல்சனரோ. பாசிஸ்டுகள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களா என்ன ?


தமிழாக்கம் :
சுகுமார்
நன்றி :  பி.பி.சி, த கார்டியன், இந்தியன் எக்ஸ்பிரஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க