மக்களை ஒடுக்குவதற்கும், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதற்கும் டிஜிட்டல் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதே சமயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு நல்ல விஷயங்களும் நடக்கின்றன.
ஈக்வேடார் நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் நிறைந்து காணப்படும் இயற்கை வளங்கள் பெருமுதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளன. அவற்றை அந்நாட்டு அரசாங்கம் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துள்ளது. இந்த அமேசான் மழைக்காடுகளில் நூற்றுக்கணக்கான பழங்குடியின குழுக்களும் வாழ்ந்து வருகின்றனர். எண்ணெய் துரப்பனப் பணிகள் நடப்பதாலும், காடுகள் அழிக்கப்படுவதாலும் இப்பழங்குடியின மக்கள் தங்கள் பூர்வீக நிலத்தை விட்டு வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி ஈக்வடார் நாட்டிலுள்ள 70% அமேசான் காடுகள் எண்ணெய் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதலான நிலங்களைக் கையகப்படுத்த அந்நாட்டு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
படிக்க :
♦ பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !
♦ ஜய் பொல்சானரோ : அமேசான் பழங்குடிகளை அழிக்க வந்த பிரேசிலின் மோடி
இவற்றில் வாவ்ரனி எனப்படும் பிரதேசமும் அரசின் ஆக்கிரமிப்புக்குள்ளாகக் கூடிய அபாயம் நிலவுகிறது. பிளாக் 22 என்றழைக்கப்படும் இந்தப் பகுதி 18 வகைப்பட்ட வாவ்ரனி இனக்குழுக்களின் பூர்வீக நிலப்பகுதியாகும். அரியவகை மூலிகைகள், உயிரினங்கள் மற்றும் இவர்களின் மூதாதையர்களின் கல்லறைகள் போன்றவற்றை உள்ளடக்கிய பகுதிதான் இது.
The Waorani people are one day away from saving half-a-million acres of forest from oil drilling. Watch the video and send a message to Ecuador’s government: protect indigenous rights & the Amazon. https://t.co/EMnWv8Bqng @AFrontlines #WeLoveTheEarth #WaoraniResistance pic.twitter.com/qlv5uY6Pg0
— Leonardo DiCaprio (@LeoDiCaprio) April 25, 2019
நான்கு வருடங்களுக்கு முன்பு, வாவ்ரனி பழங்குடிகள் தங்களின் பூர்வீக நிலங்கள் குறித்து ஒரு வரைபடமொன்றைத் தயாரிக்கும் முடிவெடுத்தார்கள். இவர்களின் பிரதான நோக்கம் தங்களுடைய நிலத்தைப் பாதுகாப்பது மட்டுமன்றி, அரிய வகை இயற்கைச் செல்வங்களைப் பாதுகாப்பது மற்றும் தங்கள் மூதாதையர்களின் அனுபவ அறிவை ஆவணப்படுத்துவது என்பதாகும்.
நான்கு வருடங்களுக்குள்ளாக அதி நவீன ஜி.பி.எஸ் கருவிகள், இரகசிய கேமராக்கள், டிரோன்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட 1,80,000 ஹெக்டேர் நிலப்பரப்புக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கண்கானிக்கும் வண்ணம் வளர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் தயாரித்துள்ள வரைபடத்தில் 10,000 ஜி.பி.எஸ் நிலைநிறுத்தப்பட்டுள்ள இடத்தையும் உள்ளடக்கியுள்ளது.
ஒஸ்வாண்டோ நென்கிமோ என்ற வாவ்ரனி பழங்குடியின நபர்தான் இவையனைத்துக்கும் பொறுப்பேற்றுச் செயல்படுகிறார். 52 வகையான வாவ்ரனி இனக்குழுக்கள் மத்தியில் சென்று ஜி.பி.எஸ் கருவியின் செயலாக்கம் குறித்தும் வரைபடத்தை செழுமைப்படுத்துவது குறித்தும் அவர்களின் சொந்த மொழியிலேயே கற்றுக்கொடுக்கிறார்.
ஒருபுறம் மக்களைத் தயார்படுத்தும் அதே நேரத்தில், சட்டரீதியாகவும் அரசுக்கெதிராகப் போராடி வருகின்றனர். மே 15, 2019-ம் தேதியன்று இவர்கள் அரசுக்கெதிராகத் தொடுத்த வழக்கில் தீர்ப்பு இவர்களுக்குச் சாதகமாக வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதிலும் இயற்கை வளங்களை தமது லாபவெறிக்காக வேட்டையாடி வருகிறது முதலாளித்துவம். இதன் விளைவாக பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள் என சாதாரண மக்கள் நேரடியாகவே பாதிக்கப்படுகின்றனர். முதலாளித்துவ பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டாமல் இதற்கு நிரந்தரத் தீர்வு கிடையாது.
-வரதன்
நன்றி : Disclose.tv