லகம் முழுவதும் வலதுசாரிகள் புதிய எழுச்சி கண்டுள்ளனர்.  இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆரம்பித்து இப்போது பிரேசிலும் வலதுசாரிகள் கை ஓங்க ஆரம்பித்துள்ளது. தீவிர வலதுசாரியான ஜய் பொல்சானரோ புதிய அதிபராக பதவி ஏற்றுள்ளார். கிறித்துவ மத அடிப்படைவாதம் பேசும் பொல்சானரோ, மோடியைப் போல மக்கள் ஆதரவின் பேரில் ஆட்சியைப் பிடித்தபோதும் பெருந்திரளான மக்கள் அவருக்கு எதிரான போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.

மத அடிப்படைவாதியாக மட்டுமல்ல, மண்ணின் மைந்தர்களை அழித்தொழித்து கார்ப்பரேட்களிடம் வளங்களை கொட்டிக்கொடுப்பதில் மோடிக்கு இணையானவராக பொல்சானரோ செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அமேசான் பழங்குடிகள் பாதுகாத்து வந்த மழைக் காடுகளை வேளாண் தொழில்களுக்கும் சுரங்கம் அமைக்கவும் தாரை வார்க்க தயாராகிவருகிறது புதிய அரசு.

தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திலேயே பொல்சானரோ அமேசான் நிலங்களின் பெரும்பகுதியை நீர்மின்சாரம் தயாரிக்கவும் சுரங்கம் அமைக்கவும் விற்றுவிடப்போவதாக பேசினார்.

“சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை பின்பற்றவேண்டும். அல்லது காணாமல் போய்விடவேண்டும். என்னுடைய ஆட்சியின் பிரேசிலின் கீழ் ஒரு சென்டிமீட்டர் கூட, பழங்குடிகளுக்கு ஒதுக்கப்படாது” என ஒரு பாசிஸ்டுக்கே உரிய தொனியில் பேசினார் பொல்சானரோ. இது பழங்குடிகளை இனப்படுகொலை செய்யவிடுக்கப்பட்ட பகிரங்க மிரட்டல் என விமர்சனங்கள் எழுந்தன.

பிரேசிலின் மொத்த பரப்பளவில் 13 சதவீதம் அமேசான் மழைக்காடுகள் பரவியுள்ளன. இந்த மழைக்காடுகள் பிரேசிலின் பொக்கிஷம் மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருக்காகவும் உயிர்மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது. இங்கேதான் உலகத்தின் தொடர்புக்கு வராத பழங்குடிகள் வசிக்கிறார்கள். இவர்களை விரட்டிவிட்டு, அனைத்து நிலங்களையும் ஏலத்தில் விடப்போவதாக தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னார் பொல்சானரோ.

தான் அதிபரானால் வேளாண்துறை அமைச்சகத்தையும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும் இணைக்க இருப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார்.  அதிகாரம் பொருந்திய இந்த அமைச்சரவையில் பழங்குடி மக்களின் நில பாதுகாப்பை எதிர்த்தவர்களும், வேளாண் நிலங்களுக்காக காட்டழிப்பை ஆதரிப்பவர்களும் கொத்தடிமை சட்டங்களை தகர்க்க வேண்டும் என பேசியவர்களும் இடம் பெறுவார்கள் என அறிவித்தார்.

படிக்க:
இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம் ! சிறப்புக் கட்டுரை
தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

“இது பழங்குடிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் மட்டுமல்ல, உலக வனத்தை பாதுகாக்க முயன்றுகொண்டிருக்கும் அனைவர் மீதான தாக்குதலும்கூட” என்கிறார் தி எகாலஜிஸ்ட் இதழைச் சேர்ந்த சூழலியல் பத்திரிகையாளரான பெக்கா  வார்னர்.

“வளிமண்டலத்திலிருந்து கார்பனை உறிஞ்சும் வனங்களை நம்மால் முடிந்தவரை பாதுகாக்க வேண்டும். மாசுக்களை குறைக்க செய்யவேண்டிய அவசர நடவடிக்கையில், காட்டழிப்பை நிறுத்துவதே முதன்மையானது என்பதை அறிவியலாளர்கள் ஒத்துக்கொள்வார்கள்” என்கிறார் அவர்.

ஜய் பொல்சானரோ.

வேளாண் தொழில் சார்ந்தவர்கள், மத அடிப்படைவாதிகள், இராணுவ நடவடிக்கைகளை ஆதரிப்போர் என மூன்றுவிதமான கொள்கை உள்ளவர்களுடன் கூட்டணி அமைத்துள்ள புதிய அதிபர், தன்னுடைய நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

பழங்குடி மக்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் பாதுகாப்பட்ட வனப்பகுதிகளை வேளாண் மற்றும் சுரங்கப் பணிகளுக்காக திறந்துவிடுவது, வெளிப்படையான இனப்படுகொலைக்கான செயல்திட்டம் என்கிறார்கள்.

இந்த ஆண்டு மட்டும் 20-க்கும் அதிகமான நில உரிமை போராளிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தப் படுகொலைகளில் பெரும்பாலானவை வேளாண் தொழில் மற்றும் மரம் வெட்டுதலை எதிர்த்ததன் காரணமாக நடத்தப்பட்டவை.

சட்டவிரோத மரம் வெட்டுதல், கால்நடை மேய்ச்சல் மற்றும் சோயாபீன்ஸ் விளைவிக்க  நிலங்களை ஆக்கிரமித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 50 நில உரிமை போராளிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் பழங்குடிகள் பாதுகாத்து வரும் வனங்களை அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் தாரைவார்க்க விரும்புகிறார், மோடி. குஜராத்தின் பெருமைமிகு சிங்கங்களும் மகாராஷ்டிராவில் புலிகளும் கார்ப்பரேட்டுகளுக்காக பலியிடுவதை இந்துத்துவ அடிப்படைவாதம் பேசும் அரசுகள் செய்கின்றன. பிரேசிலின் அதிபராக பதவியேற்றிருக்கும் பாசிஸ்டும் அதையேதான் செய்கிறார். பாசிஸ்டுகள் சமூகத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கே கேடானவர்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க