ந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு பொது முடக்கத்தையும் தாண்டி சுமார் 64 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 4.74 இலட்சம் கோடி) மதிப்பிலான அந்நிய முதலீடு போடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வணிகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கியநாடுகளின் காங்கிரஸ் தனது உலக முதலீட்டு அறிக்கை – 2021-ல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் 21 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின் படி உலகில் அதிக அளவில் முதலீட்டை ஈர்த்த நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் அந்நிய முதலீடுகளின் அளவு கடந்த 2019-ம் ஆண்டை விட 2020-ம் ஆண்டு 35% அளவிற்குக் குறைந்துள்ளது. அதாவது 2019-ல் உலகம் முழுவதும் பாய்ந்த அந்நிய முதலீட்டின் மதிப்பு 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். 2020-ம் ஆண்டில் அதன் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலராக குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவிலோ கடந்த 2019-ம் ஆண்டை விட சுமார் 27 % அதிக அந்நிய முதலீடு வந்திருக்கிறது.

பிற நாடுகளை விட, பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு சூழலிலும் அந்நிய முதலீடு நமது நாட்டில் அதிகரித்துள்ளது குறித்து முதலாளித்துவ ஊடகங்கள் போற்றிப் புகழத் துவங்கியிருக்கின்றன.

படிக்க:
♦ ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?
♦ அனைத்திலும் அந்நிய முதலீடு ! சுதந்திர தினம் ஒரு கேடு !

இந்த அந்நிய முதலீடுகளின் அதிகரிப்பு இந்தியாவுக்கு நன்மை பயக்குமா அல்லது தீமை பயக்குமா என்பது குறித்துப் பார்ப்பதற்கு முன்னர், இந்த முதலீடுகள் எல்லாம் எந்தத் துறையில் போடப்பட்டுள்ளன என்பது குறித்துப் பார்ப்பது அவசியமானது.

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் போடப்பட்ட ஊரடங்கு நிலைமையானது, மின்னணு வணிகம் இணைய சேவைகள் மற்றும் அவற்றுக்கான உட்கட்டமைப்பு வசதிகளின் தேவைகளை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துறையில் போடப்படும் அந்நிய நேரடி முதலீடும் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் இத்துறையிலான அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டை விட 22% அதிகரித்துள்ளது. அப்படி செய்யப்பட்டிருக்கும் முதலீட்டின் மதிப்பு சுமார் 81 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

இந்தியாவில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துறை சார்ந்த உட்கட்டமைப்புகளில் பெரிய அளவிலான முதலீடாக 2.8 பில்லியன் டாலரை அமேசான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை ஏற்படுத்துள்ள பாதிப்பின் காரணமாக, வெளிநாட்டு பெருநிறுவனங்கள் இந்தியாவில் தங்களது கிளைகளை உருவாக்குவதன் மூலம் போடப்படும் முதலீடுகள் கடந்த ஆண்டை விட 19% சரிந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

தெற்கு ஆசியாவில் பாய்ச்சப்பட்டிருக்கும் அந்நிய மூலதனத்தின் அளவு 2019-ம் ஆண்டை விட 20% அதிகரித்திருக்கிறது என்றும் அதற்கு முக்கியக் காரணம் இந்தியாவில் அதிகமாக நடைபெற்ற ஒன்றிணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் (Merger and Acquisition) வகையிலான மூலதனத்தினால் தான் என்கிறது இந்த அறிக்கை.

இந்தியாவில் இந்த வகையிலான ஒன்றிணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் வகையிலான அந்நிய மூலதனம், தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துறை, சுகாதாரம், உட்கட்டமைப்பு மற்றும் ஆற்றல் துறை ஆகியவற்றின் அதிகம் போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடந்த இத்தகைய கையகப்படுத்துதல் மற்றும் ஒன்றிணைத்தல் வகையிலான அந்நிய முதலீடுகளில் அதிகப்படியான தொகை கொண்ட முதலீடுகள் எந்தத் துறையில் நடந்திருக்கின்றன என்று பார்க்கலாம்.

ஜியோவின் மின்னணு தளத்தின் (Jio Digital Platform) பங்குகளில் அமெரிக்காவைச் சேர்ந்த முகநூல் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜாது எனும் நிறுவனம் 5.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை கையகப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் க்ளாக்சோ ஸ்மித் க்ளைன் எனும் மருந்து நிறுவனம் அதே இங்கிலாந்தைச் சேர்ந்த யூனிலீவர் நிறுவனத்தின் இந்திய பிரிவினை முழுமையாக தம்மோடு ஒன்றிணைத்துக் கொண்டது. இதன் மூலம் வந்த அந்நிய முதலீட்டின் மதிப்பு 4.6 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

அதாவது மிகப்பெரும் அந்நிய முதலீடுகள் மின்னணு தகவல் தொழில்நுட்பத்துறையிலும் மருந்துத் துறையிலும் தான் வந்திருக்கின்றன. இவ்வளவு பெரும் தொகையை இந்தியாவில் அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி இப்போது எழுகிறது.

இந்த கொரோனா கால பொது முடக்கத்தின் போது, நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினரின் நுகர்வு இணையதளங்கள் மற்றும் மின் வணிகச் சேவைகளைச் சார்ந்தே அதிகமாக இருக்கிறது. கொரோனா பெருந்தொற்றுச் சூழலில், மருந்து சந்தை என்பது சாதாரண ஏழை மக்கள் வரையில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

ஆகவே இந்த இரு துறைகளிலும் கொழிக்கவிருக்கும் பெரும் இலாபத்தை  அள்ளிச் செல்வதற்காகவே அந்நிய நிறுவனங்கள் நமது நாட்டில் மூலதனத்தைக் குவிக்கின்றனவே அன்றி, இந்தியர்களின் கலாச்சார அழகில் மயங்கியோ அல்லது இந்தியர்களின் ஏழ்மையைக் கண்டு வருந்தியோ அல்ல.

படிக்க :
♦ எல்.ஐ.சி. தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் நம் காப்பீடு
♦ வங்கி மறுமுதலீடு : தரகு முதலாளிகளுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி !

10 ரூபாய் முதலீடு போட்டால் 1000 ரூபாயாவது திருப்பியெடுப்பதுதான் முதலாளிகளின் சிந்தனை. இத்தனை பில்லியன் டாலர் தொகையை இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் இந்நிறுவனங்கள் பல ட்ரில்லியன் டாலர்களை இந்தியாவில் இருந்து படிப்படியாக இலாபம் என்ற பெயரில் அள்ளிச் செல்லப் போகிறார்கள். அந்நிய முதலீடுகள் பற்றி பெருமை பேசும் முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்கள் யாரும் இப்படி அள்ளிச் செல்லப்படப் போகிற பெரும் செல்வத்தைப் பற்றி வாய் திறப்பதில்லை.

அந்நிய முதலீட்டை உள்ளீர்க்கும் நாடுகளில் இந்தியா உலக அளவில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் நிலையில், பிற நாடுகளில் அந்நிய முதலீடுகளை இடும் 20 பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா 18-வது இடத்தில் பின்தங்கி இருக்கிறது.

அதாவது, இந்தியா சுரண்டப்படும் நாடாக இருப்பதில் முன்னணியில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. பிற நாடுகளில் மூலதனமிட்டு அங்கிருந்து சுரண்டி வரும் நாடுகளில் பின்னிருந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது. பிற நாட்டை சுரண்டுவதில் நமக்கு ஒருபோதும் விருப்பம் இருக்கப் போவதில்லை. ஆனால் நாம் சுரண்டப்படுவதில் நமக்கு விருப்பம் இருக்கிறதா ?

இப்போது சொல்லுங்கள் ! உலக அளவில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் அதாவது பிற நாடுகளால் சுரண்டப்படுவதில் ஐந்தாம் இடத்தைப் பெற்றதில் பெருமை கொள்ளப் போகிறோமா ?

சரண்
செய்தி ஆதாரம் : Business Standard

1 மறுமொழி

  1. வெறும் அறிக்கைகளை வைத்து கணிக்கப்பட்டுள்ள செய்திகளை தாண்டி பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது முதலீடுகள்… வாழ்க்கைக்காக பணமா பணத்திற்காக வாழ்க்கையா… கொடுங்கோன்மை முதலாளித்துவ சர்வாதிகார அமைப்பு முறையின் தகிடதத்தங்களுக்கு மக்களை ஆட்கொள்ள பழக்கும் வித்தையே இவையனைத்தும்…!!!???

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க