‘உலகம் பூராவும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து முதலாளித்துவம் அடையும் இறுதி வெற்றியின் காலப் பகுதி தேசிய இன இயக்கங்களுடன் இணைந்துள்ளது. பண்ட உற்பத்தி முழு வெற்றி அடைவதற்கு, முதலாளி வர்க்கம் உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்ற வேண்டும், ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட, அரசியல் வழியில் ஒற்றுமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் அதற்கு வேண்டும்.
அந்த மொழியின் வளர்ச்சிக்கும், அதன் இலக்கியம் உருப்பெற்று விளங்கவும், குறுக்கே நிற்கும் தடைகள் யாவும் அகற்றப்பட வேண்டும் – இங்குதான் இந்த இயக்கங்களின் பொருளாதார அடித்தளம் இருக்கின்றது. மனித இடைத் தொடர்புகளுக்கு மிக முக்கியமான சாதனம் மொழியாகும்.
நவீன முதலாளித்துவத்துக்குச் சரியான வீதத்தில் மெய்யாகவே தடையற்ற விரிவான வாணிகத்துக்கும், பல்வேறு வர்க்கங்களைச் சார்ந்த மக்கள் சுதந்திரமான, விரிவான பிரிவுகளாக அமைவதற்கும், இறுதியாக சந்தையுடன் ஒவ்வொரு பெரிய சிறிய உரிமையாளரும், விற்போரும் வாங்குவோரும் பரஸ்பரம் நெருக்கமான தொடர்பு ஏறபடுத்திக் கொள்ளவும் மிக முக்கியமான நிபந்தனைகளில் மொழியின் ஒற்றுமையும் தங்குதடையற்ற வளர்ச்சியும் அடங்கும்.
படிக்க :
நூல் அறிமுகம் : தேசிய இனப்பிரச்சனையில் ஏகாதிபத்தியங்களின் சதி
தேசிய இனப் பிரச்சினையும் பாட்டாளி வர்க்கமும் – லெனினியம்
எனவே, ஒவ்வொரு தேசிய இன இயக்கத்தின் போக்கும் தேசிய இன அரசுகளை நிறுவும் திசையிலானதாகும். அவ்வரசுகளின் கீழ் நவீன முதலாளித்துவத்தின் இந்தத் தேவைகள் மிகவும் நன்றாகப் பூர்த்தி செய்யப்படும். மிகவும் தீர்க்கமான பொருளாதாரக் காரணிகள் இந்த இலட்சியத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன.
எனவே, மேற்கு ஐரோப்பா முழுவதற்கும் ஏன் நாகரீக உலகம் முழுவதற்குமே முதலாளித்துவ காலப் பகுதியில் தேசிய இன அரசு மாதிரிப் படிவமானது சகஜமானது.’
(‘தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை’ என்ற கட்டுரையில் லெனின் இவ்வாறு கூறியிருக்கிறார்)
குறிப்பு :
இங்கே லெனின் ஒரு தேசிய இன இயக்கத்தின் பொருளாதார அடிப்படையையும், அந்த இயக்கத்தின் இறுதி இலட்சிய நோக்கையும், வர்க்க அடிப்படையிலான விஞ்ஞான நோக்கில் மிகவும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.
லெனின் எடுத்துரைத்த கருத்துகளின் அடிப்படையில்தான் ஐரோப்பாவில் பொருளாதார அடிப்படையிலும், மொழி அடிப்படையிலும் தேசிய இன அரசுகள் அமைந்துள்ளதைக் காணலாம். ஆனால், ஐரோப்பாவில் தனித்தனி தேசிய அரசுகள் அமைந்த பின்பும், அங்கு இன்னமும் சில நாடுகளில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது சுய நிர்ணய உரிமைக்காகப் போராடி வருகின்றன. ஏன் அப்படி நடைபெறுகின்றது?
மறுபுறத்தில், ஐரோப்பிய நாடுகள் சிலவற்றால் காலனிகளாக ஆக்கப்பட்டு, பின்னர் நாட்டுச் சுதந்திரம் பெற்ற பெரும்பாலான ஆசிய – ஆபிரிக்க – லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் சிறுபான்மை இனங்கள் பெரும்பான்மை இன ஆளும் வர்க்கங்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகச் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடி வருகின்றன.
அவ்வகையான ஒரு போராட்டம்தான் இலங்கைத் தமிழர்களின் போராட்டமும் என அதன் தலைமைகளும் கூறி வருகின்றன. உண்மையில் லெனின் குறிப்பிட்டவாறு, இலங்கைத் தமிழினம் தனது முதலாளித்துவ சந்தையை உறுதிப்படுத்துவதற்காகத்தான் ஒரு அரசு வேண்டும் என்று போராடுகிறதா? அப்படியான ஒரு சுதேசிய முதலாளித்துவ சந்தை (வளர்ச்சி) இலங்கைத் தமிழினத்தின் மத்தியில் உருவாகி இருக்கிறதா? (அதாவது இரவல் வாங்கிய முதலாளித்துவ சிந்தனை இருக்கிறது, ஆனால் நடைமுறை வளர்ச்சி இருக்கிறதா என்பதே இக் கேள்வியின் அர்த்தம்)
அப்படி ஒரு வளர்ச்சி அடைந்த உள்நாட்டுச் சந்தை இருந்தால் எதற்காக தனது சொந்தப் பலத்தில் நின்று போராடாமல் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளின் தயவை இலங்கை தமிழினம் எதிர்பார்த்து நிற்கிறது.
இலங்கை தமிழினத்தின் போராட்டம் எத்தகையது என்பதைச் சரியாக விளங்கிக் கொள்வதற்கு இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிவது இன்றியமையாதது.
ஃபேஸ்புக் பார்வை
முகநூலில் : Maniam Shanmugam
disclaimer

2 மறுமொழிகள்

  1. தோழரே ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதற்கான லெனினிய கோட்பாடுகளை நிறைவு செய்கிறதா?

  2. தோழரே ஈழத்தமிழர்கள் போராட்டம் பற்றிய போஸ்ட்மார்ட்டம் திடீரென இப்போது எதற்காக?ஒரு இனமே அழிக்கப்பட்டிருக்கிறதே இருப்பவர்கள் உயிரை காப்பாற்றி கொள்வதே பெரும்பாடாக இருக்கிறது-உண்மையில் எதற்காக என்ன சொல்ல வருகிறீர்கள் எனக்கு புரியவில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க