ந்தியா மற்றும் இலங்கையின் பின்னணியில் தேசிய உருவாக்கம் குறித்து மார்க்சியப் பார்வையில் வெளிவரும் இன்னொரு நால் இது. நூலாசிரியர் தோழர் சபா நாவலன் செவ்வியல் மார்க்சியப் பார்வையில் ஊறியவர். ‘சமர்’ இதழின் ஆசிரியர் குழுவில் ஒரு கட்டம் வரை பணியாற்றியவர். மிகவும் சரளமான நடையில், கோட்பாட்டு நூற்களுக்கே உரித்தான மேற்கோள் திணிப்புகள் எல்லாம் இன்றி இதை அவர் எழுதியுள்ளார். ஒரு வரலாற்று நூலைப் படிக்கும் சுவையோடு வாசகர்கள் இதை ஈடுபாட்டுடன் வாசிக்க இயலும்.

மார்க்சியப் பார்வையில் நின்று எழுதப்பட்ட இதர நூற்களிலிருந்து இது வேறுபடும் புள்ளி தேச உருவாக்கத்தில் ஏகாதிபத்தியம் ‘திட்டமிட்டு உருவாக்கிய பிறழ்வுகளைச் சுட்டிக் காட்டுவதில் அடங்கியுள்ளது. முதலாளிய வளர்ச்சியுடன் கூடிய சீரான சந்தைப் பரவல் தேசிய இன உருவாக்கங்களில் முடியும் என்கிற மார்க்சியக் கருத்தாக்கத்தை உறுதிபட ஏற்கும் நாவலன் அத்தகைய வளர்ச்சி காலனிய ஆதிக்கத்தின் விளைவாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தடைபட்டுப் போனதன் விளைவே இன்றைய சிக்கல்கள் என நம்புகிறார். பிரான்சு முதலான ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டு அவர் இதை விளக்குகிறார். நாவலனின் கருத்துப்படி முறையான சந்தை வளர்ச்சி மட்டும் இலங்கையில் உருவாகியிருந்தால் இன்று அங்கே தேசிய முரண்கள் இருந்திருக்காது என்பது மட்டுமல்ல, இலங்கை முழுவதும் ஒரே மொழி பேசுகிற ஒரே தேசிய இனமாகவும் கூட இருந்திருக்கும்!

மொழி மற்றும் வரலாற்றாசிரியர்கள் மத்தியில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேலுக்கு வந்து ஆரிய –  திராவிட முரண்களைப் பொருத்தமட்டில் அது ஐரோப்பியர்கள் திட்டமிட்டு மேற்கொண்ட ஒரு சதி. அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஓரங்கம். அதற்கு இங்கே இருந்த மக்கள் பலியாகிப் போனார்கள். வரலாற்றறிஞர்கள் இன்று ஆரிய இனப் படையெடுப்பு என்கிற கருத்தை ஏற்பதில்லை என்பது உண்மையே. ஆனால் ஆரியம், திராவிடம் என்கிற இரு வேறுபட்ட மொழிக் குடும்பங்கள் இங்கே இருந்ததையோ, ஆரியமொழி பேசியோர் பல நூற்றாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய ஆசியா வழியாக இங்கே குடியேறியதையோ மறுப்பதில்லை. ஆரிய திராவிட என்கிற கருத்தாக்கம் பிரிட்டிஷார் வருகைக்கு முன்னதாகவும் கூட இங்கே இருக்கத்தான் செய்தது. ஆதிசங்கரர் (8-ம் நூற்றாண்டு.) திருஞான சம்பந்தரைத் ‘திராவிட சிசு எனக் கூறுவது ஒரு சான்று.

தவிரவும் இங்கிருந்த பார்ப்பன ஆதிக்கத்தையும், அதற்கெதிராக கனன்றிருந்த எதிர்ப்பையும் நாம் புறக்கணித்துவிட இயலாது. ஆரியப்படை எடுப்பு என்கிற கருத்தாக்கத்தை பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாளர்களான ஜோதிபா பூலே, பெரியார் ஈ.வெ.ரா. போன்றோர் இந்த வகையில் ஒரு ஆக்கப்பூர்வமான அரசியலுக்குப் பயன்படுத்தியவர்களாகவும் விளங்கினர்.

தேசிய இன உருவாக்கத்தில் இன்றளவும் மிகப்பெரிய தடையாக இருப்பது இங்குள்ள சாதி உணர்வு. மதம் குறித்து போதிய கவனம் செலுத்தும் இந்நூல் இந்த சாதியத் தடைகளைக் கணக்கில் கொள்ளாதது ஒரு குறை. புலம் பெயர் சூழலில் ‘தலித்தியம்’ குறித்து விவாதம் இன்று வீச்சுடன் மேலெழுந்துள்ள சூழலில் இதன் அவசியம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இன்று உருவாகியுள்ள தேசியத்தை வரையறுத்தவர்கள் எல்லோரும் ஆதிக்க சாதிகளை, குறிப்பாக வெள்ளாளச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்ததென்பது ஏற்படுத்திய சாதக பாதகங்களும் ஆராயத்தக்கது.

… உலகம் மிகப்பெரிய அளவில் மாற்றமடைந்து வருகிறது. தரகு முதலாளிகள், தேசிய முதலாளிகள், பெரு முதலாளிகள் முதலான வரையறைகளை எல்லாம் நாம் மீண்டும் துவக்கித் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. வெளிநாட்டு நேரடி மூலதனம் இந்தியா போன்ற நாடுகளில் குவிந்து கொண்டுள்ள சூழலில் இங்கு உருவாகும் பெரு முதலாளிகள் தமது மூலதனத்தை வெளிநாடுகளில் முடக்கும் காலம் இது. சபா நாவலன் சொல்வது போல ஏகாதிபத்தியத்தின் பங்காளர்களாக மாறும் நிலை கவனமாக ஆராயப்பட வேண்டியது. இந்த வகையில் தேசிய உருவாக்கத்தில் ஏகாதிபத்தியத்தின் பங்கு குறித்த இந்நூல் தமிழ்ச்சூழலுக்குப் பயனுடைய ஒரு பங்களிப் அமையும் என்பது உறுதி. (நூலின் முன்னுரையில் அ. மார்க்ஸ்)

தேசம் அல்லது தேசியவாதம் தொடர்பான விவாதங்கள் சந்தைப் பொருளாதார உருவாக்கத்தின் பிற்பட்ட காலப்பகுதியிலிருந்து இன்று வரைக்கும் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரந்து கிடக்கும் சமூகவியலாளர்களையும் தத்துவவியலாளர்களையும் அரசியலாளர்களையும் ஆட்கொண்ட முக்கிய கருப்பொருளாகத் திகழ்கின்றது. விஞ்ஞானபூர்வமான சமூகவியலின் தோற்றத்திற்குப் பிறகு பல்தேசிய இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை அணுகுவதில் ஏற்பட்ட முக்கிய மாறுதலானது தேசம் அல்லது தேசிய உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது.

படிக்க:
குஜராத் : காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் ?
சிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை

சந்தைப் பொருளாதார உருவாக்கத்தோடு உருவான தேசியம் தொடர்பான கருத்தானது சரியாகப் புரிந்துகொள்ளப்படாமையாலும் தேசியப் பிரச்சினைகளைச் சரியாகக் கையாளாமையாலும் அது தொடர்பான விஞ்ஞானபூர்வமான ஆய்வு நிராகரிக்கப்பட்டமையாலும் உலகெங்கிலும் ஆயிரக்கணக்கில் மனித உயிர்கள் பலியிடப்படுகின்றன. நியாயமான தேசியப் போராட்டங்களை சமூக விரோதிகளும் பாசிஸ்டுகளும் தமது கைகளில் எடுத்துக்கொண்டு தமது தேசியவாத முகமூடியைக் காட்டி மக்களைப் பலியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

… பல மூன்றாம் உலக நாடுகளில் ஒரு பகுதி பிணக்காடாகவும் மறுபகுதி உள்ளூர் மற்றும் சர்வதேசிய மாஃபியாக்களின் பணக் காடாகவும் மாறிவருகின்றது. ஆயுத வியாபாரிகளிலிருந்து அரசு உட்பட அரசுசாரா உதவி நிறுவனங்கள் (NGO) வரை இந்த மாஃபியாக்களின் அங்கங்களாக மாறிவருகின்றன.

உள்ளூர் மத்தியதர வர்க்க ஜனநாயகவாதிகளும் முற்போக்காளர்களும் அரச அமைப்புகளாலும் NGO-க்களாலும் சர்வதேச பண உதவி அமைப்புகளாலும் சேவை என்ற பெயரில் உயர்ந்த சம்பளத்துடன் உள்வாங்கப்பட்டு சிந்திக்கவிடாமல் தடுக்கப்படுகின்றனர். சமூக அக்கறையுள்ள இளைஞர்கள் சர்வதேச அமைப்புக்களால் விலை கொடுத்து வாங்கப்படுகிறார்கள் அல்லது சவரம் செய்யப்பட்டு தெருவில் வீசப்படுகிறார்கள். மிஞ்சியவர்கள் வளர்ச்சியடைந்த அந்நிய நாடுகளுக்கு அடிமை வேலை செய்வதற்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இலங்கை போன்ற நாடுகளின் தலைமைப் பொறுப்பு தெருச் சண்டியர்களின் கைகளில் ஒப்படைக்கப்படுகின்றது. இவர்கள்தான் அரச பயங்கரவாதத்தை அரங்கேற்றும் நெறியாளர்கள். இவர்களுக்கான எதிர்ப்பு இல்லாத நிலையிலும் எதிர்ப்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த இளைஞர்களும் அறிவுஜீவிகளும் இல்லாமல் போனதாலும் இன்று அப்பாவி மக்கள் அநாதைப் பிணங்களாக அழிக்கப்படுகிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தேசியவாதம் தொடர்பான இந்தக் கட்டுரை பயனுள்ளதாக அமையும் என்று நான் நம்புகின்றேன். (நூலாசிரியரின் உரையிலிருந்து)

நூல் : தேசிய இனப்பிரச்சனையில் ஏகாதிபத்தியங்களின் சதி
ஆசிரியர் : சபா நாவலன்

வெளியீடு : International Tamil Magazine,
P O Box 35806,
London, E11 3JX, UK,
Tel / Fax : 0044 208 279 0354
www.thesamnet.net
jeyabalan.thesam@ntlworld.com

விற்பனை உரிமை :
எதிர் வெளியீடு,
305, காவல் நிலையச் சாலை,
பொள்ளாச்சி – 642 001.
தொலைபேசி எண் : 04259 – 226012.

பக்கங்கள்: 104
விலை: ரூ 45.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க