Saturday, December 7, 2024
முகப்புஉலகம்ஈழம்தேசிய இனப் பிரச்சினையும் பாட்டாளி வர்க்கமும் - லெனினியம்

தேசிய இனப் பிரச்சினையும் பாட்டாளி வர்க்கமும் – லெனினியம்

-

எதிர்கொள்வோம் – 8

தேசிய இனப் பிரச்சினையில் பு.ஜ.-ம.க.இ.க. -வினரின் மறுக்க முடியாத மாபெரும் அரசியல் – சித்தாந்தத் தவறுகளைக் கண்டுபிடித்து விட்டதாகப் பாவித்துக்கொண்டு சமரன் குழு பின்வருமாறு எழுதியுள்ளது:

வடமாநிலக் கூலித் தொழிலாளர்கள்.
அடிப்படை வசதிகளின்றி தகரக் கொட்டகையில் உழலும் புலம்பெயர்ந்த வடமாநிலக் கூலித் தொழிலாளர்கள். முதலாளித்துவ ஊடகங்களுடன் சேர்ந்து கொண்டு தமிழின வெறியர்களால், கொலை-கொள்ளைக்காரர்களாக அவதூறு செய்யப்படும் இவர்கள் தமிழர்களின் எதிரிகளா?

“தேசிய இனப் பிரச்சினை குறித்துப் பாட்டாளி வர்க்கப் புரட்சிகர அமைப்பு மேற்கொள்ள வேண்டிய மார்க்சிய-லெனினிய கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த நிலைப்பாடு பற்றி புதிய ஜனநாயகம் குழுவின் கருத்துக்கள் புரட்சிகரச் சக்திகளும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள்வதற்குத் தடைகளாக இருக்கின்றன. புரட்சிகரச் சக்திகளும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள்வதைச் சாத்தியமாக்கும் பொருட்டு அக்கருத்துக்களை விமர்சனம் செய்வது அவசியம் எனக் கருதுகிறோம்.” (சமரன் குழு வெளியீடு, பக்.218)

– இவ்வாறு சொல்லிக்கொண்டு 1990- ஆம் ஆண்டு ஜனவரி பு.ஜ.வில் எழுதப்பட்டிருந்த சில கருத்துக்களைச் சமரன் குழு எடுத்துக் காட்டியிருக்கிறது. அவை: “தேசிய இனப் பிரச்சினை என்பது தேசிய முதலாளித்துவத்தின் முழக்கம் தானே தவிர, பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல”; “ஒரு தேசத்துக்கோ நாட்டுக்கோ எதிராக ஏகாதிபத்தியம் “நேரடி’ ஆதிக்கம் என்று வரும்போதுதான் அந்த முழக்கத்தை முதன்மையாக எடுத்துக் கொள்கிறோம்”; “ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பிரிந்து போவது சரியா, இல்லையா என்ற விவகாரத்தில் நாம் நடுநிலை வகிக்கிறோம்.”

 இவையெல்லாம் இந்தியாவில் தேசிய இனப் பிரச்சினை குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலாக எழுதப்பட்டவை. ஆனால் இவை, “ஈழ விடுதலைப் புலிகள் மீதும் இந்திய மக்கள் யுத்தக் குழு மீதும் இந்திய அரசு விதித்துள்ள தடைகளை எதிர்த்துப் போரிட “புரட்சிகரச் சக்திகளும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள்வதற்குத் தடைகளாக” எப்படி இருக்கின்றன என்று சமரன் குழு கூறவேயில்லை. அப்படியே இருந்தாலும், பு.ஜ.-ம.க.இ.க.-வினரை ஒதுக்கிவிட்டுப் பிற புரட்சிகரச் சக்திகளும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள்வதைச் சாத்தியமாக்கி” இருக்கலாமே! செய்தார்களா? அது ஒருபுறமிருக்கட்டும்.

பொதுவில் தேசிய இனப் பிரச்சினை மற்றும் ஈழ இனச் சிக்கலில் பு.ஜ.-வின் நிலைப்பாடுகளை மறுத்து, சமரன் குழு கூறும் கருத்துக்கள் யாவை? “ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இனப் பிரச்சினை என்பது தேசிய முதலாளித்துவத்தின் முழக்கம் அல்ல; பாட்டாளி வர்க்கத்தினுடையதுதான். ஆகவே, அந்த முழக்கத்தைப் பாட்டாளி வர்க்கம் முதன்மையானதாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று தேசிய முதலாளிகளின் வாதங்களை (இவைதாம் தமிழினவாதிகளின் வாதங்கள்) சமரன் குழு தானும் முன்வைக்கிறது. ஆனால், லெனின் இவற்றைத்தான் முன்வைத்தார் என்று சொல்லி, அக்குழு தனது வழமையான மேற்கோள் பித்தலாட்டத்தைச் செய்கிறது. ஆனால், அதற்கு மாறாக தேசிய இனப் பிரச்சினையில் பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து லெனினியம் போதித்தவற்றை இனிபார்ப்போம்:

ஒடுக்கும் சிங்களப் பெருந்தேசியவாதம் அநீதியானது, ஒடுக்கப்படும் ஈழ சிறுந்தேசியவாதத்தின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை நீதியானதுதான். அதற்காக இரண்டு தேசியங்களுமே முதலாளியப் பொருளாதார அடிப்படை கொண்டவை என்பது மறைந்துபோய் விடுவதில்லை. ஒடுக்கும் பெருந்தேசியவாதமானாலும் ஒடுக்கப்படும் சிறுந்தேசியவாதமானாலும் இரண்டுக்குமான பொருளாதார அடிப்படை ஒன்றுதான்.

ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகள் இலங்கையிலிருந்து வெளியேறி, அதிகார மாற்றம் நிகழ்ந்த பிறகு, இலங்கை முழுவதும் தனது பொருளாதார ஆதிக்கத்தை நிறுவிக் கொள்வதில் சிங்களப் பெருந்தேசிய முதலாளிகள் இறங்கினர்; அதற்கு எதிராகத் தமது சொந்தப் பொருளாதார நலன்களைக் காத்துக் கொள்ளவும் அவற்றைத் தடைகளின்றி வளர்த்தெடுக்கவும் ஈழத் தமிழ்த் தேசிய முதலாளிகள் போராடினர். மொழி, இலக்கியம், பண்பாடு, இனவுரிமைக் கோரிக்கைகள், போராட்டங்கள் எல்லாம் இந்த அடிப்படையில்தான் எழுகின்றன. மேலும், அரைக்காலனிய, அரை நிலப்பிரபுத்துவ இலங்கை நாட்டில் தேசிய முதலாளிகளின் மேல்தட்டுப் பிரிவினர் இயல்பாகவே தரகு முதலாளிகளாவர்.

த.தே.பொ.க ஆர்ப்பாட்டம்
தமிழ்தேசியத்தின் பெயரால் பாசிசி இனவெறி : வெளிமாநிலத்தவருக்குக் குடும்ப அட்டை தரக்கூடாது எனக் கோரி த.தே.பொ.கட்சியின் இளைஞர் அமைப்பினர் தஞ்சையில் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப்படம்).

ஈழத்தில் முகிழ்ந்த தமிழ்த் தேசியமும் தேசிய இனப் பிரச்சினையும் முதலாளியத் தன்மையற்றது என்று கருத முடியுமா? செல்வநாயகம் – பொன்னம்பலம் தலைமையிலான ஈழத் தமிழ்த் தேசிய இயக்கங்களும் அதன் பிறகு, விடுதலைப் புலிகள் உட்பட ஈழப் போராளி அமைப்புகள், “மார்க்சியம்”, “சோசலிசத் தமிழீழம்”, “இடதுசாரி அரசியல்” என்று என்னதான் பேசியிருந்தாலும், அவர்கள் நடத்திய ஈழத் தமிழ்த் தேசிய இயக்கங்களும் ஈழ விடுதலைப் போரும் வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவையா, அல்லது பொதுவில் ஈழத் தமிழர்களின் தேசிய இயக்கம் என்று அதைப் பார்க்க வேண்டுமா? இனவாத முதலாளி வர்க்கங்கள் தமது வர்க்க அடையாளங்களை மூடி மறைத்துக் கொண்டாலும், பாட்டாளி வர்க்கம் அவற்றை வெளிக்கொண்டு வந்து அதற்கேற்பத் தனது அணுகுமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், ஈழத் தேசிய இயக்கத்தின் முதலாளிய வர்க்கத் தன்மையையும் அதன் வரம்புகளையும் தமிழினவாதிகள் மட்டுமல்ல, இனவாதிகளாகச் சீரழிந்துபோன போலிப் புரட்சியாளர்களும் அடையாள அரசியலில் தஞ்சம் புகுந்து ஆதாயம் தேடுபவர்கள் என்பதால், இது குறித்துப் பேச மறுக்கின்றனர். புலிகளின் இராணுவவாதத்தில் மயங்கிப் போய் போலிப் புரட்சியாளர்களும் புலிகளின் குறுந்தேசியவாதத்தின் சகபாடிகளான தமிழினவாதிகளும் ஈழத் தேசிய இயக்கத்தின் முதலாளிய வர்க்கத் தன்மையைக் காணத் தவறுகிறார்கள்.

“சரக்கு உற்பத்தியின் முழுவெற்றிக்கு உள்நாட்டுச் சந்தையை முதலாளிகள் கைப்பற்ற வேண்டியது அவசியம்; ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட, அரசாங்க ரீதியில் ஐக்கியப்படுத்தப்பட்ட நிலப்பரப்புகள் அதற்கு வேண்டும். அம்மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்றுத் திகழ்வற்கும் முட்டுக்கட்டையாக உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும். இங்கேதான் தேசிய இயக்கங்களின் பொருளியல் அடித்தளம் இருக்கிறது” என்றார், லெனின். அதாவது தேசிய இயக்கம், மொழி, இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சி முதலாளித்துவத்துடனும் அதன் சரக்கு உற்பத்தி மற்றும் பண்டப் பரிவர்த்தனையின் தேவையுடனும் நெருங்கிய தொடர்புடையன என்றார், லெனின்.

மேலும், முதலாளிய வளர்ச்சியின் வரலாறில் தேசிய இயக்கங்களின் இரண்டு பொதுவான போக்குகளையும் அவற்றின்பால் பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகளையும் லெனின் பின்வருமாறு வரையறுத்துள்ளார்.

“வளர்ந்து செல்லும் முதலாளித்துவமானது, தேசிய இனப் பிரச்சினையில் இரண்டு போக்குகளை அறிந்திருக்கிறது. ஒன்று: தேசிய இன வாழ்க்கையும் தேசிய இன இயக்கங்களும் துயிலெழுதலும், எல்லாவிதமான தேசிய இன ஒடுக்குமுறைக்கும் எதிராய்ப் போராட்டம் மூளுதலும், தேசிய இன அரசுகள் அமைக்கப்படுதலும். இரண்டாவது: எல்லா வடிவங்களிலும் தேசிய இனங்களிடையே ஒட்டுறவு வளர்ந்து, மேலும் மேலும் துரிதமாதலும், தேசிய இனப் பிரிவினைச் சுவர்கள் தகர்க்கப்படுதலும், மூலதனத் தின், பொதுவாகப் பொருளாதார வாழ்வின், அரசியல், விஞ்ஞானம் முதலானவற்றின் சர்வதேச ஒற்றுமை உண்டாக்கப்படுதலும்.

ராஜ் தாக்கரேவின் குண்டர் படை.
மும்பையையும், இந்தியாவையும் சேர்த்துச் சூறையாடும் மராட்டியர் அல்லாத டாடா, பிர்லா, அம்பானி போன்ற முதலாளிகளிடம் நன்றியோடு வாலாட்டி விட்டு, மும்பையில் பிழைக்க வந்த ஒரு பீகாரியைச் சுற்றி வளைத்துத் தாக்கும் ராஜ் தாக்கரேவின் குண்டர் படை.

“இவ்விரு போக்குகளும் முதலாளித்துவத்துக்குரிய உலகு தழுவிய விதியாகும். முன்னது, முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்பத்தில் ஆதிக்க நிலையில் உள்ளது. பின்னது, முதிர்ச்சியடைந்து சோசலிச சமுதாயமாக உருமாற்றம் பெறுவதை நோக்கிச் செல்லுகின்ற முதலாளித்துவத்தின் இயல்பினை வெளிப்படுத்துவதாகும். மார்க்சியவாதிகளின் தேசிய இன வேலைத் திட்டம் இவ்விரு போக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, பின்வருவனவற்றுக்காகப் பாடுபடுகிறது: முதலாவதாக, தேசிய இனங்களின், மொழிகளின் சமத்துவத்துக்காகவும், இங்கு எந்தவிதமான தனியுரிமைகளும் அனுமதிக்கப்படலாகாது என்பதற்காகவும் (மற்றும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் – இது பற்றிப் பிற்பாடு தனியே பரிசீலிப்போம்); இரண்டாவதாக, சர்வதேசியவாதம் என்னும் கோட்பாட்டுக்காகவும் முதலாளிய தேசியவாதத்தால் – மிகமிக நயமானதானாலுங்கூட- பாட்டாளி வர்க்கம் நச்சுப்படுத்தப்படுவதை எதிர்த்து இணக்கத்துக்கு இடமில்லாப் போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காகவும்.”

லெனினுடைய மேற்கண்ட வரையறுப்புகளின்படி, தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங் களானாலும் தேசிய இன அரசுகள் அமைத்துக் கொள்வதற்கான முன்னெடுப்புகளானாலும் சரி, எல்லா வடிவங்களிலும் தேசிய இனங்களிடையே ஒட்டுறவை வளர்த்து, அதைத் துரிதமாக்குதலும் தேசிய இனப் பிரிவினைச் சுவர்களைத் தகர்த்தலும் மூலதனத்தின், பொதுவாகப் பொருளாதார வாழ்வின், அரசியல், விஞ்ஞானம் முதலானவற்றின் சர்வதேச ஒற்றுமை உண்டாக்குதலும் சரி, “இவ்விரு போக்குகளும் முதலாளித்துவத்துக்குரிய உலகு தழுவிய விதியாகும்.”

லெனினுடைய இந்த வரையறுப்பின் சாரம்தான் “தேசிய இனப் பிரச்சினை என்பது தேசிய முதலாளித்துவத்தின் முழக்கம் தானே தவிர, பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல” என்கிற முடிவு. ஈழத் தேசிய இயக்கமானது முதலாளிய தேசிய இயக்கம் என்பது லெனினுடைய மேற்கண்ட பொது வரையறுப்புகளுக்குப் பொருந்தாததோ, விதிவிலக்கானதோ அல்ல.

“முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாகப் பரிணமித்து விட்டபடியால், முதலாளித்துவம் புரட்சிகரக் குணத்தை இழந்து பிற்போக்காக மாறிவிட்டபடியால், உலக முதலாளித்துவப் புரட்சிக் கட்டம் முடிவுக்கு வந்து உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கட்டம் தொடங்கிவிட்டபடியால், பழைய வகை முதலாளித்துவப் புரட்சிக் கட்டத்தின்போது தீர்க்கப்படாதிருந்த புரட்சிக் கடமைகளைப் பாட்டாளி வர்க்கம் எடுத்து நிறைவேற்ற வேண்டியுள்ளதால், தேசிய இனப் பிரச்சினைகளும் உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பகுதியாக மாறிவிட்டதால், இனி தேசிய இனப் பிரச்சினை என்பது முதலாளித்துவத்தின் முழக்கம் அல்ல; அது பாட்டாளி வர்க்கத்தினுடையதாகும்” என்று இனவாதிகளாகச் சீழிந்துவிட்ட சமரன் குழு உள்ளிட்ட சில போலி புரட்சியாளர்கள் வாதிடுகின்றனர். இந்தத் திரிபின் அடிப்படையில், “தேசிய இனப் பிரச்சினையைப் பாட்டாளி வர்க்கம் முதன்மையான பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்கின்றனர், அவர்கள்.

சமரன் குழுவினர் சொல்கின்றனர், “(இது) ஏகாதிபத்தியம் மற்றும் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் சகாப்தமாக இருப்பதால், அந்தந்த (காலனி, அரைக் காலனி நாடுகளின்) தேசிய விடுதலை இயக்கங்களுக்கு அந்தந்த நாட்டு முதலாளி வர்க்கங்கள் தலைமை தாங்க முடியவில்லை. ஆகவே, இவ்வியக்கங்கள் உலகப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் பகுதியாக, அந்தந்த நாடுகளில் நடைபெறும் புதிய வகைப்பட்ட ஜனநாயகப் புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதிகளாக மாறின. இப்புரட்சி முற்றுப்பெற்ற இடங்களில் இத்தேசிய இனப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டன.” (சமரன் வெளியீடு, பக்.70-71)

இந்த நிலைப்பாடு சரி என்றால், சமரன் குழு என்ன செய்யவேண்டும்? இதை ஈழப் பிரச்சினைக்கும் அப்படியே பிரயோகிக்க வேண்டாமா? ஈழத்தில் மட்டும் புலிகளின் முதலாளித்துவம் புரட்சிகரக் குணத்தை இழக்காமல், பிற்போக்காக மாறாமல் இருக்கிறதா? ஈழத் தேசிய விடுதலை இயக்கத்துக்கு விடுதலைப் புலிகள் உட்பட ஈழ முதலாளி வர்க்கம் தலைமை தாங்க முடிகிறதா? அதனால்தான் ஈழத் தேசிய இனப் பிரச்சினையைப் பாட்டாளி வர்க்கம் புதிய வகைப்பட்ட ஜனநாயகப் புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதிகளாகக் கொண்டு தீர்வு காண முயலாமல், விடுதலைப் புலிகள் உட்பட ஈழ முதலாளி வர்க்கம் தலைமை தாங்கட்டும், பாட்டாளி வர்க்கம் அவர்களின் தலைமைக்கு ஆதரவு தரவேண்டும் என்றார்களா? இவ்வாறு பு.ஜ.- ம.க.இ.க.-வினர் செய்யவில்லை என்று தானே சமரன் குழு பிரச்சாரம் செய்கின்றது!

வடகிழக்கு மாநில தொழிலாளர்களும் இளைஞர்களும்.
இனவெறியர்களின் பீதியூட்டலால் கடந்த 2012 ஆகஸ்டில் உயிருக்கு அஞ்சி தென்மாநிலங்களிலிருந்து வெளியேறும் வடகிழக்கு மாநில தொழிலாளர்களும் இளைஞர்களும்.

ஆனால், முதலாளித்துவம் புரட்சிகர குணத்தை இழந்து பிற்போக்காகிவிட்டது; தேசிய விடுதலை இயக்கங்களுக்கு முதலாளி வர்க்கம் தலைமை தாங்க முடியவில்லை; ஆகவே, தேசிய இனப் பிரச்சினையை புதிய வகைப்பட்ட ஜனநாயகப் புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதிகளாகக் கொண்டு புரட்சி நடத்தி அதற்குத் தீர்வு காணப்பட்டன. இது தான் உலக வரலாற்று அனுபவம்” என்று சொல்லிக்கொண்டே, ஈழத் தேசிய விடுதலை இயக்கத்துக்குத் தலைமை தாங்கும் விடுதலைப் புலிகள் உட்பட முதலாளி வர்க்கத்தை ஆதரிக்கவில்லை என்று பு.ஜ. – ம.க.இ.க.-வினரைச் சாடுகின்றனர்.

இந்தக் கட்டத்தில் பாட்டாளி வர்க்கம் தன் கையிலெடுத்து நிறைவேற்ற வேண்டிய புரட்சிக் கடமைகள், அடிப்படையில் பழையவகை முதலாளித்துவப் புரட்சிக் கட்டத்தின்போது முதலாளி வர்க்கங்களால் தலைமை தாங்கித் தீர்க்க முடியாமற் போய்விட்டவைதாம். அதாவது, தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிராகவும் தேசிய இன அரசுகள் அமைத்துக் கொள்ளும் உரிமைக்காகப் போராடுவதும், எல்லா வடிவங்களிலும் தேசிய இனங்களிடையே ஒன்று கலத்தலை வளர்ப்பதும், பிரிவினைச் சுவர்களைத் தகர்த்து மூலதனத்தின், பொதுவாக பொருளாதார வாழ்வின், அரசியல், விஞ்ஞானம் ஆகியவற்றின் சர்வதேச ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியவைதாம். இவையெல்லாம் அடிப்படையில் முதலாளி வர்க்கப் போக்குகள்தாம். இந்தக் கடமைகளை அந்த வர்க்கம் நிறைவேற்றத் தவறுவதால் – முதலாவது ஜனநாயகக் கடமை, இரண்டாவது சோசலிசப் புரட்சிக்கான சமூக அடித்தளத்தை உருவாக்குவது என்கிற காரணங்களால் -பாட்டாளி வர்க்கம் கையிலெடுத்துக் கொள்கிறது.

இருந்த போதும், தேசிய இயக்கங்களின் முதலாளித்துவ உள்ளடக்கம், தன்மைகள், வரம்புகளைத் தாண்டி பாட்டாளி வர்க்கம் தனது சொந்தக் கடமையாகிய சோசலிசப் புரட்சிக்கான தளம் அமைத்துக் கொள்ளும் வகையில் தேசிய இயக்கப் பிரச்சினையில் தலையிட்டுக் கையாளுகிறது. அதாவது, அது தேசிய இனப் பிரச்சினையைப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஒரு பகுதியாகக் கொள்கிறதே தவிர, பாட்டாளி வர்க்கப் புரட்சியை தேசிய இனப் பிரச்சினையின் ஒரு பகுதியாகக் கொள்வதில்லை.

சாரமாக, “முதலாளித்துவ ஜனநாயக உரிமை” யாகிய அனைத்து தேசிய இனங்களுக்குமான சம உரிமையை ஆதரிக்கும் அதேசமயம், தேசிய இனப் போராட்டத்துக்கு வர்க்கப் போராட்டம் கீழானதாக இருக்க வேண்டும் என்ற முதலாளியப் பார்வையைப் பாட்டாளி வர்க்கம் கடுமையாக எதிர்க்கிறது. இதைத்தான் “முதலாளிகள் எப்போதும் தேசியக் கோரிக்கையைத் தீர்மானகரமான முறையில் முன்வரிசையில் வைக்கிறார்கள். பாட்டாளிகளைப் பொருத்தவரை இந்த கோரிக்கைகள் வர்க்கப்போராட்ட நலன்களுக்குக் கீழானவையாகும்.” என்கிறார், லெனின். (லெ.தொ.நூல்20, 410)

லெனினுடைய இந்தப் போதனைக்கு மாறாக போலி புரட்சியாளர்கள், பாட்டாளி வர்க்கப் புரட்சியைத் தேசிய இனப் பிரச்சினையின் ஒரு பகுதியாகவும் கீழானதாகவும் பார்க்கிறார்கள். அதனால்தான், சமரன் குழுவின் தாய்க் கட்சியிலிருந்து பிரிந்துபோன திருச்சி முற்போக்கு இளைஞர் அணியினர், “தேசிய இனத்துக்கொரு தனித்தனி கம்யூனிசக் கட்சி வைத்துக் கொண்டு, தனித்தனி தேசியப் புரட்சி நடத்தி, தனித்தனி தேசிய அரசு அமைக்க வேண்டும்” என்று 1984-இல் ஒரு பிரசுரம் போட்டனர். அதை மறுத்து, “தேசிய சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையும் முதலாளித்துவ தேசியவாதமும்” என்ற பிரசுரம் ஒன்றை சமரன் குழு அப்போதே வெளியிட்டது. அதில், “ஒரே அரசின் கீழ் வாழும் எல்லா தேசிய இனங்களும் ஒரே கட்சி, ஒரே போர்த்தந்திரம் வைத்துப் புரட்சி நடத்துவதே சரி” என்று எழுதினார்கள்.

திருச்சி முற்போக்கு இளைஞர் அணியின் கருத்தை மறுத்து அப்போது சமரன் குழு முன்வைத்த வாதங்களை இலங்கை-ஈழ இனச் சிக்கலுக்குப் பொருத்தினார்களா? அப்படிப் பொருத்தியிருந்தால் இலங்கை முழுவதற்கும் ஒரே கட்சி, ஒரே போர்த்தந்திரம் வைத்துப் புரட்சி நடத்துவதைத்தானே சிங்கள, ஈழ இனங்களைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும்? அந்தக் கட்சியும் போர்த்தந்திரமும் சிங்களப் பாட்டாளிகளிடையே ஈழத் தமிழரின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையையும் ஈழத் தமிழரிடையே சிங்களப் பாட்டாளிகளுடன் இணைந்திருப்பதையும்தானே வலியுறுத்தியிருக்க வேண்டும்?

இந்தப் பணியைத்தான் பு.ஜ.-ம.க.இ.க.-வினர் செய்கின்றனர். ஆனால், ஈழம் பிரிந்து போவதை மட்டுமே ஒரே தீர்வென வைப்பதன் மூலமும், அதையே பாட்டாளி வர்க்கத்தின் நிலைப்பாடு என்று வாதிடுவதன் மூலமும் உண்மையில் புலிகள் மற்றும் தமிழ்நாட்டு இனவாதிகளின் குறுங்தேசியத்தையே சமரன் குழு உட்பட போலி புரட்சியாளர்கள் உயர்த்திப் பிடிக்கின்றனர். பு.ஜ.-ம.க.இ.க.-வினர் அவ்வாறு செய்யவில்லையென அவதூறும் பொழிகின்றனர்.

மேலும், புதிய ஜனநாயகப் புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதிகளாகத் ‘தீர்வு காணப்பட்டாலும் கூட’ அத்தோடு முதலாளிய தேசியத்தால் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக எழும் எதிர்மறைப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிடுவதில்லை. ஏனெனில், புதிய ஜனநாயகப் புரட்சி தேசிய முதலாளியத்தையும், அதற்கு அடிப்படையான ‘சிறு’ உற்பத்தியையும் ஒழித்து விடுவதில்லை. அவை நீடிக்கவே விடப்படுகின்றன. அவ்வாறு விடப்படும் முதலாளியம்தான் உயிர்த்தெழுந்து சோசலிச நாடுகளில் அதிகாரத்தைக் கைப்பற்றி, முதலாளியத்தை மீட்கும் எதிர்ப்புரட்சிகளை நடத்துகின்றன. அதனால்தான் சோசலிச நாடுகளில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் அதன் கீழான வர்க்கப் போராட்டங்களும் மாபெரும் கலாச்சாரப் புரட்சிகளும் அவசியமாகின்றன. இந்தக் கண்ணோட்டத்தில் பின்வரும் கருத்தையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

முதலாளிய தேசியத்துக்கும் பாட்டாளிய சர்வதேசியத்துக்கும் இடையிலான இவ்வாறான வேறுபாடுகளையும், தேசியப் பிரச்சினையில் பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை பற்றியும் மேலும் லெனின் பின்வருமாறும் போதித்துள்ளார்; லெனினுடைய இந்தப் போதனை ஈழ முதலாளிய தேசியவாதத்துக்கும் பொருந்தும்.

“முதலாளிய தேசியவாதமும் பாட்டாளி வர்க்கச் சர்வதேசியமும் இணக்கம் காணமுடியாத பகைமை கொண்ட இருவேறு முழக்கங்களாகும். இவை முதலாளித்துவ உலகம் முழுமையிலும் நிலவும் மாபெரும் இருவேறு வர்க்க முகாம்களுக்கு ஏற்ப அமைந்தது. தேசிய இனப் பிரச்சினை இருவேறு கொள்கைகளின் (இல்லை, இருவேறு உலகக் கண்ணோட்டங்களின்) வெளிப்பாடுகளாய் விளங்குகின்றன.

"கற்க கசடற" கர்நாடக இசைநிகழ்ச்சி.
பிற்போக்கு தேசியவாதப் பெருமிதம் : தமிழர்களின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து வளர்க்க, இலண்டனிலுள்ள தமிழ் இளையோர் அமைப்பு (TYO) எனும் புலிகள் ஆதரவு புலம்பெயர் ஈழத் தமிழர்களால் “கற்க கசடற” எனும் பெயரில் 2012-ல் நடத்தப்பட்ட கர்நாடக இசைநிகழ்ச்சி.

“தேசியவாதம் எவ்வளவுதான் ‘நியாயமானதாய்’ , ‘பரிசுத்தமான’, ‘நயமான நாகரிக வகைப்பட்டதாய்’ இருப்பினும், அதனுடன் மார்க்சியத்தை இணக்கமுடையதாக்க முடியாது. எல்லாவகையான தேசியவாதத்துக்கும் மார்க்சியம் சர்வதேசியவாதத்தை முன்வைக்கிறது; எல்லா தேசிய இனங்களும் உயர்நிலை ஒற்றுமையில் ஒன்றிணைவதை முன்வைக்கிறது – இந்த ஒற்றுமை ஒவ்வொரு மைல் ரயில்பாதை போடப்படுவதையும் தொடர்ந்து, ஒவ்வொரு சர்வதேச டிரஸ்டும் உருவாவதைத் தொடர்ந்து, ஒவ்வொரு தொழிலாளர் சங்கம் நிறுவப்படுவதைத் தொடர்ந்து, (தொழிலாளர் சங்கமானது அதன் பொருளாதாரச் செயல்களிலும் மற்றும் அதன் கருத்துக்களிலும் நோக்கங்களிலும் சர்வதேசியத் தன்மை வாய்ந்தது) நமது கண்ணெதிரே வளர்ந்து வருகிறது” என்கிறார், லெனின். (தொகுதி 24)

தொழிலாளர்களின் இத்தகைய ஒன்றுகலத்தல், ஒற்றுமை மற்றும் சர்வதேசிய மயமாகுதல் நமது நாட்டில் தற்போது, கிழக்கு, வடக்கு, வடகிழக்கு மற்றும் நேபாளத் தொழிலாளர்களின் புலம் பெயர்வு காரணமாக அதிவிரைவாக நடக்கிறது. இந்தப் போக்குக்கு எதிராக த.தே.பொ.க. மணியரசன் கும்பல், பார்ப்பன – பாசிச அரசு மற்றும் போலீசுடன் கைகோர்த்துக் கொண்டு, குறுந்தேசிய இனவெறியுடன் கடுமையாகப் போராடுகிறது. தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கு எதிராக மராட்டிய பாசிச சிவனோவின் அடியொற்றி குறுந்தேசிய இனவெறியைத் தூண்டி ஆதாயம் அடைய எத்தனிக்கிறது. இதைத் தமிழகத்தில் பு.ஜ.- ம.க.இ.க.-வினர் மட்டுமே தனி இயக்கமாக நின்று எதிர்ப்பதோடு, புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடுவதுடன் பிற இன தொழிலாளர்களுடனான ஒற்றுமையை நிறுவி வளர்க்கின்றனர்.

த.தே.பொ.க. மணியரசன் கும்பலின் இந்தக் குறுந்தேசிய இனவெறிக்கு எதிராகச் சமரன் குழு உட்பட எந்தவொரு போலிப் புரட்சிக் குழுவும், மார்க்சிய வேடதாரிகளான தமிழினவாதக் குழுக்களும் குரலெழுப்பவில்லை. வெட்கக்கேடான முறையில் அமைதி காத்து மறைமுகமாக ஆதரிக்கின்றன.

மேலும் லெனின் சொல்கிறார்: “தேசிய இனம் என்கிற கோட்பாடு முதலாளிய சமுதாயத்தில் வரலாற்று வழியில் தவிர்க்க முடியாதது. இந்தச் சமுதாயத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு மார்க்சியமானது, தேசிய இன இயக்கங்கள் வரலாற்று வழியில் நியாயமுடையவை என்பதை முழு அளவுக்கு அங்கீகரிக்கிறது. ஆனால், இந்த அங்கீகாரம் தேசியவாதத்துக்கான ஆதரவு விளக்கமாக ஆகி விடாதிருக்கும் பொருட்டு, இந்த இயக்கங்களில் முற்போக்கான அம்சமாய் இருப்பதற்கு மட்டுமானதாய் இந்த அங்கீகாரம் கண்டிப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் – அப்போதுதான் பாட்டாளி வர்க்க உணர்வு முதலாளிய சித்தாந்தத்தால் மழுங்கடிக்கப்படுவதற்கு இந்த அங்கீகாரம் இட்டுச் செல்லாதிருக்கும்.

“தேசிய இனப் பிரச்சினையின் எல்லாக் கூறுகளிலும் மிகவும் வைராக்கியமான, கிஞ்சித்தும் முரணற்ற ஜனநாயகத்துக்காகப் பாடுபடுவது மார்க்சியவாதியின் கட்டாயமான கடமையாகும். இந்தப் பணி பிரதானமாய் எதிர்மறையானது. ஆனால், தேசியவாதத்துக்கு ஆதரவளிப்பதில் பாட்டாளி வர்க்கம் இதற்குமேல் செல்வது சாத்தியமன்று. ஏனெனில், இதற்கு மேல் முதலாளி வர்க்கத்தின் ‘நேர்முகச்’ செயற்பாடு, தேசியவாதத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சி ஆரம்பமாகி விடுகிறது.

“முதலாளிய தேசியவாதத்துக்கு ஆதரவளிப்பதில் கண்டிப்பான வரம்புகளுக்கு – வரலாற்று வழியில் அமைந்த திட்டவட்டமான எல்லைகளுக்கு அப்பால் செல்வது, பாட்டாளிகளது வர்க்கத்துக்குத் துரோகம் புரிந்து முதலாளி வர்க்கத்தின் பக்கம் சேர்ந்து கொள்வதாகிவிடும்.

“பிரபுத்துவ ஆதிக்கம் அனைத்தையும், தேசிய இன ஒடுக்குமுறை அனைத்தையும் எந்தவொரு தேசிய இனத்துக்கோ, எந்தவொரு மொழிக்கோ உள்ள எல்லாத் தனி உரிமைகளையும் ஒழித்துக் கட்டுதல் ஜனநாயக சக்தி என்ற முறையில் பாட்டாளி வர்க்கத்துக்கு உள்ள கட்டாயமான கடமையாகும், பாட்டாளிகளது வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு நிச்சயமாய் உகந்ததாகும். (திருவையாறிலும் சிதம்பரத்திலும் தமிழ் மொழிக்கு எதிரான தீண்டாமையை எதிர்த்தும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்தும், வட மொழிக்கும் பார்ப்பனருக்குள்ள ஆதிக்கத் தனியுரிமையையும் எதிர்த்தும் போராடுவதன் மூலம் இந்தக் கடமையை நிறைவேற்ற பு.ஜ.- ம.க.இ.க. -வினர் முயற்சிக்கின்றனர். ஆனால், இதைச் சந்தர்ப்பவாதமாகவும் உள்நோக்கம் கருதியும் பு.ஜ.- ம.க.இ.க.-வினர் செய்வதாகத் தமிழினவாதிகளும் போலி புரட்சியாளர்களும் அவதூறு புரிகின்றனர். -பு.ஜ.)  தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமான பூசல்கள் இவ்வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிப்பவை, தடுத்து மட்டுப்படுத்துகிறவை. ஆனால், முதலாளிய தேசியவாதத்துக்கு ஆதரவளிப்பதில் கண்டிப்பான இந்த வரம்புகளுக்கு  வரலாற்று வழியில் அமைந்த இந்தத் திட்டவட்டமான எல்லைகளுக்கு  அப்பால் செல்வது, பாட்டாளி வர்க்கத்துக்குத் துரோகம் புரிந்து முதலாளி வர்க்கத்தின் பக்கம் சேர்ந்து கொள்வதாகிவிடும். இங்கு எல்லை வரம்பு இருக்கிறது, பல சந்தர்ப்பங்களிலும் இது மெல்லியதாய் இருக்கக் கூடியது …”

“எந்தவிதமான தேசிய இன ஒடுக்கு முறையையும் எதிர்த்துப் போராடுதல்  இது அவசியம் செய்யப்பட வேண்டிய காரியம். எந்த தேசிய இன வளர்ச்சிக்காகவும், பொதுவாகத் தேசிய இனக் கலாச்சாரத்துக்காகவும்” இதை ஒருபோதும் செய்யலாகாது. முதலாளித்துவச் சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சியானது, உலகெங்கும் நமக்கு முதிர்ச்சியடையாத தேசிய இன இயக்கங்களுக்கு உதாரணங்களையும், பல சிறிய இனங்களிலிருந்து பெரிய தேசிய இனங்கள் உருவாவதற்கு, அல்லது சிறியனவற்றில் சிலவற்றுக்குப் பாதகமாய் இவை உருவாவதற்கு உதாரணங்களையும், தேசிய இனங்கள் ஒன்று கலத்தலுக்கு உதாரணங்களையும் அளிக்கிறது. பொதுப்பட தேசிய இனத்தின் வளர்ச்சி – இது முதலாளிய தேசியவாதத்தின் கோட்பாடாகும். எனவேதான், முதலாளிய தேசியவாதம் தனித்தன்மை வாய்ந்ததாய் இருக்கிறது; எனவேதான், தேசிய இனப் பூசல்கள் ஓயாமல் நடக்கின்றன. ஆனால், பாட்டாளி வர்க்கம் ஒவ்வொரு தேசிய இனத்தின் தேசிய இன வளர்ச்சிக்கும் ஆதரவாக நிற்கத் தயாராய் இல்லை என்பது மட்டுமல்ல ; இதற்கு மாறாய் இம்மாதிரியான பிரமைகளுக்கு எதிராய் மக்கள் பெருந்திரளினரை எச்சரிக்கிறது; முதலாளித்துவ ஒட்டுறவுக்கு முழு அளவு சுதந்திரம் வேண்டுமென்பதை ஆதரிக்கிறது; வன்முறை அல்லது தனியுரிமைகளின் அடிப்படையில் அமைந்ததைத் தவிர்த்து, தேசிய இனங்களது ஏனைய எல்லா விதமான ஒன்று கலத்தலையும் வரவேற்கிறது.

“நியாயமான முறையில் ” வரம்பிடப்பட்ட குறிப்பிட்ட அரங்குக்குள் தேசியவாதத்தை உறுதிபெறச் செய்தல், தேசியவாதத்தை அரசியல் சட்டவழிப்பட்டதாய்” ஆக்குதல், எல்லாத் தேசிய இனங்களுக்கும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிப் பிரிந்திருத்தலை விசேச அரசு நிறுவனத்தின் மூலம் உறுதியாக்கி, கெட்டி பெறச் செய்தல் ஆகிய இவைதான் கலாச்சார-தேசிய இனத் தன்னாட்சியின் சித்தாந்த அடிப்படையும் உள்ளடக்கமும் ஆகும். இந்தக் கருத்து முழுக்க முழுக்க முதலாளியத் தன்மை வாய்ந்தது, முழுக்க முழுக்கத் தவறானது. எவ்விதத்திலும் தேசியவாதம் நிலைநாட்டப்படுதலைப் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க முடியாது. இதற்கு மாறாக, தேசிய இன வேறுபாடுகளைக் குறையச் செய்து, தேசிய இனப் பிரிவினைச் சுவர்களை அகற்ற உதவுகிறவை யாவற்றையும், தேசிய இனங்களுக்கு இடையிலான பந்தங்களை மேலும் மேலும் இணைய வைப்பவை யாவற்றவையும் அது ஆதரிக்கிறது. இவ்வாறின்றி வேறுவிதமாய்ச் செயல்படுதல், பிற்போக்கான தேசியவாத அற்பர்களின் பக்கம் சென்று விடுவதையே குறிக்கும்” என்கிறார் லெனின். (தொகுதி 24)

இன்றைய உலகம் ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்கப் புரட்சியுமான சகாப்தமாக மாறிவிட்டது, தேசிய இனப் பிரச்சினைகளும் உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பகுதியாக மாறிவிட்டது, முதலாளி வர்க்கங்களால் தீர்க்கப்படாதிருந்த புரட்சிக் கடமைகளைப் பாட்டாளி வர்க்கம் எடுத்து நிறைவேற்றுகிறது போன்ற காரணங்களைக் கூறி லெனினுடைய மேற்கண்ட போதனைகளை நிராகரித்து விட முடியாது. முதலாளி வர்க்கங்களால் தீர்க்கப்படாதிருந்த புரட்சிக் கடமைகளைத்தான் பாட்டாளி வர்க்கம் எடுத்து நிறைவேற்ற வேண்டுமே தவிர, லெனின் மேற்கண்டவாறு போதித்த வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த பாட்டாளிகளின் ஒன்று கலத்தலுக்கு, அதாவது சர்தேசியக் கடமைகளுக்கு எதிரான முதலாளிய தேசியவாதத்தின் சுயநலப் பிற்போக்குகளைச் சமரசமின்றிக் கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும்.

ஆனால்,போலிப் புரட்சியாளர்களும், இனவாதிகளும் தேசியம் என்றாலே அதன் எல்லாப் போக்குகளும் புரட்சிகரமானவை என்று சித்திரம் தீட்டுகிறார்கள். முதலாளிய பாசிசக் குறுந்தேசியவாதிகளான விடுதலைப் புலிகள் பாட்டாளிகள் தொழிற்சங்கம் அமைத்துச் செயல்படுதல், மேதினம் கொண்டாடுதல் போன்ற தொழிலாளர் நடவடிக்கைகள் மற்றும் ஈழப் பாட்டாளிகள் பிற இனப் பாட்டாளிகளுடன் ஒன்று கலத்தலைத் தேசிய இனத் துரோகமாக அறிவித்துத் தடை செய்தனர். ஆனால், தாமே ஏகாதிபத்திய, மேலாதிக்க-விரிவாதிக்கச் சக்திகளுடன் சமரசம் கொண்டனர். தேசியக் கலாச்சாரம் என்ற பெயரில் சேர, சோழ, பாண்டிய பாரம்பரிய உரிமை பாராட்டினர். பாட்டாளி வர்க்கம் எதிர்க்க வேண்டிய இவற்றை, சமரன் குழு உட்பட போலிப் புரட்சியாளர்கள் தாமும் கண்டும் காணாமல் விடுவதோடு, இவற்றை எதிர்ப்பதற்காக பு.ஜ.-ம.க.இ.க.-வினர் மீது அவதூறு பொழிகின்றனர்.

“உள்நாட்டில் ஜனநாயகவாதியா, பிற்போக்குவாதியா என்று பாராமல் ஆப்கானின் அமீரையும் தேசிய இனப் பிரச்சினையில் ஆதரிக்கும்படி ஸ்டாலின் கூறினார்; பாசிஸ்டுகள் என்றாலும் தேசிய இனப் பிரச்சினையில் விடுதலைப் புலிகளை ஏன் ஆதரிக்கக் கூடாது” என்று கேட்கிறார்கள். பிற்போக்காளராக இருந்தாலும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த தேசியப் போராட்டத்தில்தான் ஆப்கானின் அமீரை ஆதரிக்க வேண்டும் என்றார் ஸ்டாலின். விடுதலைப் புலிகள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தார்களா? அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் இந்திய விரிவாதிக்கத்துடனும் சமரசம் செய்துகொள்ளத் தானே எத்தனித்தார்கள்?

“ஏகாதிபத்தியத்தின் “நேரடி’ ஆதிக்கம் வரும்போது தான் தேசிய இன முழக்கத்தை முதன்மையாக எடுத்துக் கொள்ள முடியும்” என்ற பு.ஜ. வின் நிலைப்பாடு காரணமாக புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஓரணியில் அணிதிரள முடியாமல் போனது என்கிறார்கள். ஏகாதிபத்தியத்தின் ‘நேரடி’ ஆதிக்கம் வரும் முன் உள்ள ஒரு அரைக் காலனிய, அரை நிலப்பிரபுத்துவ நாட்டில் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான புதிய ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகத் தேசிய இனப் பிரச்சினை அமையும். அவ்வாறான நிலையில் தேசிய இனப் பிரச்சினை எப்படி முதன்மையானதாக இருக்கும்? ஆனால், ஏகாதிபத்தியத்தின்'”நேரடி’ ஆதிக்கம் வரும்போது இயல்பாகவே ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலைப் புரட்சி என்கிற முறையில் தேசிய இனப் பிரச்சினை முதன்மையானதாகிறது. இப்படிச் சொல்வதால் ஏதோ தேசிய இனப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை நாம் அறியாதவர்கள் என்பதாக இனவாதிகள் காட்டுகிறார்கள்.

“இலங்கையின் தேசிய இனச் சிக்கலில் தமிழீழத் தனியரசு காண்பதுதான் ஒரே தீர்வு” என்ற முடிவைத் தமிழ்த் தேசிய இனவாதிகளும் போலி புரட்சியாளர்களும் நியாயப்படுத்துவற்காக, ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையை லெனின் வலியுறுத்தும் ஒரு அம்சத்தை மட்டும் எடுத்துக் காட்டுகிறார்கள். லெனின் வலியுறுத்தினாலும் இந்த அம்சம் தேசிய முதலாளிகளுக்குச் சாதகமானது என்றாலும், எல்லா ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்பது, ஜனநாயகத்துக்காக நிற்பது என்கிற முறையில் இதைப் “பாட்டாளி வர்க்கம் எதிர்மறையில் மட்டுமே ஆதரிக்கிறது” என்றார், லெனின். பாட்டாளி வர்க்க ஒன்றிணைவுக்காகவும் புரட்சிக்குச் சாதகமானது என்பதாலும் இணைந்திருக்க வேண்டிய இன்னொரு அம்சத்தையும் லெனின் வலியுறுத்துகிறார்; ஆனால், இதை அவர்கள் ஒதுக்கிவிடுகிறார்கள்.

எனவேதான், “சுரண்டலை எதிர்த்து வெற்றிபெறும் வகையில் போராட வேண்டுமானால் பாட்டாளி வர்க்கம் தேசியவாதத்தில் இருந்து விடுபட்டு நிற்கவேண்டும். பல்வேறு தேசிய இனங்களின் முதலாளி வர்க்கத்தாரிடையே மேல்கை பெறுவதற்காக (மேலாதிக்கத்திற்காக) நடந்து வரும் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் முற்றும் முழுதான நடுநிலை வகிக்க வேண்டும்” என்றார், லெனின். (தொகுதி 20, பக்.424)

“ஒவ்வொரு தேசிய இனத்தின் காரியத்திலும் பிரிந்துபோவது பற்றிய பிரச்சினைக்கு “சரி” அல்லது :கூடாது” என்று பதிலளிக்குமாறு கோருவது மிகவும் “செயல்பூர்வமான” ஒன்றாகத் தோன்றலாம். ஆனால், உண்மை யில் அது அபத்தமானது, தத்துவத்தில் இது இயக்க மறுப்பியல் வகைப்பட்டது. நடைமுறையிலோ இது முதலாளி வர்க்கத்தின் கொள்கைக்குப் பாட்டாளி வர்க்கத்தைக் கீழ்ப்படுத்துகிறது. முதலாளி வர்க்கம் தனது தேசிய இனக் கோரிக்கைகளை எப்போதும் முன்னணியில் வைக்கிறது; மிகவும் ஆணித்தரமான முறையில் முன்வைக்கிறது. பாட்டாளி வர்க்கத்தைப் பொருத்தவரை இந்தக் கோரிக்கைகள் வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்குக் கீழ்ப்பட்டவை. முதலாளிய ஜனநாயகப் புரட்சி (இதுவரையிலான ஈழ விடுதலை இயக்கம் இந்த வகையைச் சேர்ந்தது என்பதைப் போலி புரட்சியாளர்கள் மறுக்க முடியாது-பு.ஜ.) சம்பந்தப்பட்ட ஒரு தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்திலிருந்து பிரிந்து செல்வதில் போய் முடியுமா அல்லது அதனுடன் சமத்துவத் தகுதிநிலை பெறுவதில் போய் முடியுமா என்பதைத் தத்துவரீதியாக முன்கூட்டியே யாரும் சொல்லமுடியாது; முடிவு இரண்டில் எதுவாயினும், தனது வர்க்கத்தின் முன்னேற்றத்துக்கு உத்தரவாதம் செய்வதுதான் பாட்டாளி வர்க்கத்துக்கு

முக்கியமான காரியம். முதலாளி வர்க்கத்துக்கோ ‘தனது சொந்த’ தேசிய இனத்தின் நோக்கங்களைப் பாட்டாளி வர்க்க நோக்கங்களுக்கு முந்தி முனைப்பாகத் திணிப்பதன் மூலம் இந்த முன்னேற்றத்தைத் தடை செய்யவேண்டும் என்பது முக்கியமானது.

“தனது கோரிக்கைகள் ‘செயல்பூர்வமானவை’ என்ற முகாந்திரத்தால், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் முதலாளி வர்க்கமானது, அதன் சொந்த நலன்களை நிபந்தனையின்றி ஆதரிக்குமாறு பாட்டாளி வர்க்கத்தைக் கேட்டுக் கொள்ளும். எல்லாத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமை உண்டு என்பதை ஆதரிப்பதை விட, ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் பிரிந்து போவதற்கு ஆதரவாக “சரி” என்று தெளிவாகக் கூறுவதுதான் மிக அதிகமாக நடைமுறை ரீதியானதாகும்!” (என்று முதலாளி வர்க்கம் கூறும்).

“பாட்டாளி வர்க்கம் இத்தகைய செயல்பூர்வத் தன்மையை எதிர்க்கிறது. சமத்துவமும் ஒரு தேசிய இன அரசுக்கு சம உரிமைகளும் வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேசமயத்தில், அது எல்லா தேசிய இனங்களின் பாட்டாளி மக்களின் கூட்டிணைப்பை எல்லாவற்றுக்கும் மேலாக மதித்து அதிமுக்கியமானதாக முன்வைக்கிறது; எந்த ஒரு தேசிய இனக் கோரிக்கையையும் எந்த ஒரு தேசிய இனப் பிரிவினையையும் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டம் என்ற கோணத்திலிருந்தே மதிப்பிடுகிறது” என்றார், லெனின்.

ஒடுக்கும் பெருந்தேசியவாதத்தின் கட்டாய இணைப்பு, ஒடுக்கப்படும் தேசிய பிரிவினைக் கோரிக்கை இரண்டையும் சமமானதாகக் கருத முடியாது. ஆனாலும், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் பாட்டாளி வர்க்கம் தெரிந்தெடுக்க வேண்டும் என்று லெனின் போதிக்கவில்லை. இரண்டிலிருந்தும் மாறுபட்ட மூன்றாவதாக உள்ள தொழிலாளர்களின் ஒன்றிணைப்பு மற்றும் வர்க்கப் போராட்டப் புரட்சி நலன்களுக்குத்தான் பாடுபட வேண்டும் என்றார். ஆனால், இதை வலியுறுத்துவதற்காகத்தான் பு.ஜ. – ம.க.இ.க.-வினர் மீது தமிழினவாதிகளும் சமரன் குழு உட்பட போலி புரட்சியாளர்களும் அவதூறு பொழிகின்றனர்.

– ஆர்.கே.

___________________________________
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2014
___________________________________

எதிர்கொள்வோம் ! – 1
எதிர்கொள்வோம் ! – 2
எதிர்கொள்வோம் ! – 3
எதிர்கொள்வோம் ! – 4
எதிர்கொள்வோம் ! – 5
எதிர்கொள்வோம் ! – 6
எதிர்கொள்வோம் ! – 7

  1. அடிப்படை வசதிகளின்றி தகரக் கொட்டகையில் உழலும் புலம்பெயர்ந்த வடமாநிலக் கூலித் தொழிலாளர்கள். முதலாளித்துவ ஊடகங்களுடன் சேர்ந்து கொண்டு தமிழின வெறியர்களால், கொலை-கொள்ளைக்காரர்களாக அவதூறு செய்யப்படும் இவர்கள் தமிழர்களின் எதிரிகளா?

    Answer:

    உமா மகேஸ்வரி கொலை வழக்கில் நேற்று நான்கு பேர் கைதானதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகிய இரு காம வெறியர்கள் மட்டுமே கைதாகியுள்ளதாகவும், 2 பேர் தப்பி விட்டதாகவும், அவர்களைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    http://tamil.oneindia.in/news/tamilnadu/uma-maheshwari-was-raped-murdered-chiding-eve-teasing-194359.html

    Vinavu whats is your stand on this issue?

    • உங்கள் கேள்விக்கு பதில்:
      செய்தி: வாழப்பாடி அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், பா.ம.க., பிரமுகர் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் மகரபூஷணத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
      பாலியல் வன்முறையில் தமிழன் அல்லது வட இந்தியர்கள் என்ற பாகுபாடு இல்லை. வட இந்தியர்களெல்லாம் பாலியல் வன்முறை செய்யும் அயோக்கியர்கள் என்றால் தமிழினத்திற்காக குரல் கொடுக்கம் பாமகவை வைத்து தமிழர்கள் அனைவரும் பாலியல் வன்முறை செய்பவர்கள் என்று முடிவு செய்யலாமா? நிற்க, உமா மகேஸ்வரி கொலை குறித்து பதிவு வெளியிடுவோம். நன்றி

  2. இன்னொரு மாநிலத்துக்கு முதலில் தொழிலாளர்கள் என்னும் போர்வையில் போய் குந்துவது. பின்னர் தங்கள் மாநிலத்தின் அரசியலை, கலாச்சாரத்தை, மொழியை கொண்டு போய் திணித்து ஆதிக்கம் செய்ய முயல்வது. இது தான் வட இந்திய வந்தேறிகளால் மராட்டியத்திலும் வட கிழக்கு மாநிலங்களிலும் நடத்தப்படுகிறது. அங்கு உள்ளூர் மக்கள் இவர்களால் படாத தொல்லைகள் இல்லை. தமிழ்நாட்டில் இருந்து போய் விவசாயிகளாகவும் தொழிலாளர்களாகவும் கர்நாடகத்தில் குடியேறிய பல தமிழர்கள் இந்த மாதிரி தான் ஆதிக்கம் செய்ய முனைந்தார்கள். ஆனால் இவர்களின் வால் ஒட்ட அறுக்கப்பட்டது. தமிழகத்தில் காம வெறியர்கள் உண்டு தான். ஆனால் கால்நடைகளை கூட இச்சைக்கு பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்கு இங்குள்ளவர்கள் காட்டுமிராண்டிகள் அல்ல. உங்களுக்கு வட இந்திய தொழிலாளர்களின் நிலை குறித்து கவலை இருந்தால் அவர்களின் மாநிலங்களுக்கு போய் போராடுங்கள். இவர்களின் மிகப்பெரிய சதியின் ஒரு அங்கம். இந்த வினவு கும்பல் தமிழக மக்களின் கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் கெடுக்க சதி செய்கிறது. தமிழக மக்களும் ஈழ மக்கலை அகதிகளாக அலைய வேண்டும் போலும். உங்களுக்கு தொழிலாளர்களின் நலன் மீது அக்கறை இருந்தால் உள்ளூர் தொழிலாளிகளுக்கு போராடுங்கள். வந்தேறிகளால் உள்ளூர் உழைக்கும் மக்கள் தான் குறைந்த கூலி என்னும் பெயரில் பாதிக்கப்டுகிறார்கள்.

  3. அதாவது,

    பாலஸ்தீனப் பகுதிகளில் இசுரேலிய அரசு, யுத உழைக்கும் மக்களை கொண்டு போய் குடியேற்றினால் நாங்கள் ஆதரிப்போம். பாலத்தீனத் தாயகம் இருந்தாலென்ன மறைந்தால் என்ன?

    தமிழீழத்திலே, சிங்கள உழைக்கும் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக குடியேற்றினால், அதை ஆதரிப்போம். தமிழீழம் இருந்தாலென்ன மறைந்தால் என்ன?

    தமிழ்நாட்டிலே, வடநாட்டு உழைக்கும் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக குடியேற்றினால், அதை ஆதரிப்போம். தமிழ்நாடு இருந்தாலென்ன மறைந்தால் என்ன?

    எங்கே உழைக்கும் மக்கள் வந்தாலும், அவர்களை நாங்கள் ஆதரிப்போம். எந்த தேசிய இனமும் அதன் தாயகமும் சிதைந்தால் கூட, அதை நாங்கள் ஆதரிப்போம் – இது தான் எமது நிலைப்பாடு என வினவால் அறிவிக்க முடியுமா?

    • அதிரடியான், திரும்பவும் முதல்ல இருந்தா? முடியல….

      மக்களை கொண்டு போய் குடியேற்றினால் – இதுவும்
      உழைக்கும் மக்கள் வந்தாலும் – இதுவும் ஒன்னா ???
      இதை கொஞ்சம் சொல்லுங்களேன்…

      ஈழத்தமிழ் மக்கள் வேறு தேசங்களில் (வெளிநாடுகளில்) போய் குடியேறுவதை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று அதிரடியானோ அல்லது அவர் சார்ந்திருக்கும் கட்சியோ அறிவிப்பார்களா?

      அப்படி குடியேறினால் அவர்களை எந்த உரிமைகளுமின்றி இரண்டாம்தர குடிமக்களாக நடத்துவது சரிதான் என்பதை அறிவிப்பார்களா?

      இங்கு தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழ் மக்கள் அகதிமுகாம் என்ற பெயரில் ஒடுக்கப்படுவது சரிதான் என்று பகிரங்கமாக அறிவிப்பீர்களா?

      ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட வேற்று தேசிய-இன மக்கள் குடியேறுவதால் தங்களது தேசிய இனத்தையும் தாயகத்தையும் சிதைக்கிறார்கள் என்று ஐரோப்பாவின் நவீன நாசிச கட்சிகள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறீர்களா? ஏற்றுக்கொள்கிறோம் என்று அறிவிப்பீர்களா?

      உங்கள் பின்னூட்டத்தின் மூலம் நவநாசிஸ்டுகளின் கொள்கைதான் உங்கள் கொள்கை என கொள்ளலாமா? அல்லது உங்கள் கொள்கை இடத்திற்கு இடம் மாறும் என எடுத்துக்கொள்ள வேண்டுமா?

      • அமெரிக்கா, கனடா, ஜெர்மனி,ஃபிரான்ஸ்,யு.கே போன்ற வெளிநாடுகளில் எல்லாம், தமிழ்நாட்டைப் போன்ற நிலையில் அந்தந்த நாட்டு மக்கள், சுகாதார வசதியின்றி, சாதிப்பிரச்சனையுடன்,சேரிகள் நிறைந்து போய், வேலைவாய்ப்பின்றி, முதல்தர மருத்துவ வசதிகள் இல்லாமலும், அந்தந்த நாட்டு மக்களில் பெரும்பாலானோர் அடுத்த வேளைக்கு உணவுக்கு வழி தெரியாத நிலையிலிருந்தால், வேலைவாய்ப்பின்றி இருந்தால், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி,ஃபிரான்ஸ்,யு.கே போன்ற எந்த மேலை நாடுமே அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பும், குடியுரிமையும் கொடுத்திருக்க மாட்டார்கள். தனக்கு மிஞ்சித் தான் தானமும் தர்மமும் என்பது மேலை நாட்டவர்களுக்குத் தெரியும்.

        அதை விட அவர்களது நாட்டு மக்களின் நிலை, தமிழ்நாடு மக்களின் நிலை போல இருந்திருந்தால்,, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஒப்பந்தத்தில் அவர்கள் கைச்சாத்திட்டிருக்கவும் மாட்டார்கள். அந்த அகதி ஒப்பந்தக் கையெழுத்து தான், அவர்களை ஈழத்தமிழ் அகதிகளுக்கு மட்டுமல்ல, எல்லா நாட்டு குடியுரிமை கொடுக்குமாறு வற்புறுத்துகிறது. வசதியற்ற நாடாகிய இந்தியா, அந்த அகதிகளுக்காக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. அதனால், தான் தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு, அவர்கள் விரும்பினாலும் கூட, இந்தியக் குடியுரிமை பெறும் உரிமை கிடையாது. அதனால், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி,ஃபிரான்ஸ்,யு.கே போன்ற நாடுகளுக்குச் செல்லும் அகதிகள் குடியுரிமை, தொழில் செய்யும் உரிமை என்பவற்றைப் பெறுவதை, தமிழ்நாட்டுடன் ஒப்பிடுவது வெறும் அபத்தம்.

        இந்திய அரசியலமைப்பின் படி, இந்தியர்கள் அனைவருக்கும், இந்தியா முழுவதும் நடமாடும், குடியேறும் உரிமை உண்டென்பது எனக்கும் தெரியும். ஆனால், பல மொழிகளைப் பல தேசிய இனங்களை ஒன்றிணைத்து, அவர்களின் விருப்பு, வெறுப்புக்களை கேட்டறியாமல், செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்தியா போன்ற நாடுகளில், இன்னொரு மொழி அல்லது இனக்குழுவினர் குறிப்பிட்ட இன்னொரு மொழி வழி மக்களின் மாநிலத்தில் கூட்டம், கூட்டமாகக் குடியேறுவது எதிர்காலத்தில் இன, மொழிப் பிரச்சனைகளையும், கலவரங்களையும் உண்டாக்கும் என்பதை யாவருமறிவர்.

        ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்புகளில் எல்லோருக்கும் சமமான உரிமை கொடுக்கப்படுவதில்லை. ஒருவர் அகதியாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றால், அவரிடம் வேலை செய்யும் உரிமைப்பத்திரம் இருந்தாலும் கூட, அந்த மாநிலத்தை வதிவிடமாகக் கொண்ட அந்த நாட்டுக் குடிமகனுக்கு, முதலுரிமை, அதற்கடுத்து அந்த நாட்டுக் குடிமகனை மணந்தவருக்கு, அதற்கடுத்து ஐரோப்பிய நாடுகளைச சேர்ந்தவருக்கு (Schengen countries) இப்படி பலருக்கு முன்னுரிமை கொடுத்த பின்பு, அப்படி எவருமே அந்த வேலையை ஏற்றுக் கொள்ளாமல் விட்டால் தான், புதிதாக அந்த நாட்டுக்குச் சென்றவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்படும். கனடாவில் சில அரசாங்க தொழில் வாய்ப்புகளுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்கிறவர்கள் மட்டும் தான் விண்ணபிக்கலாம். அதனால், தமிழ் நாட்டில் வதிவிடத்தை குறிப்பிட்ட வருடங்களுக்கு மேல் கொண்டவர்களுக்குத் தொழில் வாய்ப்பில் முன்னுரிமை கொடுத்த பின்னர் தான் மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதை அல்லது தமிழ்நாட்டு மக்கள் கூடிய சம்பளம் கேட்கிறார்கள் என்பதற்காக, அவர்கள் வேலையில்லாமல் இருக்க, மற்றவர்களை குறைந்த சம்பளத்தில் வேலைக்கமர்த்துவதை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்தலாம், அதில் தவறேதுமில்லை.

        அதை விட, கனடாவிலும், அமெரிக்காவிலும் மட்டுமல்ல, இந்தியாவைப் போன்ற மாநிலங்களின் கூட்டடமைப்பைக் கொண்ட ஜேர்மனி போன்ற நாடுகளிலும் கூட தொழிலாளர் இடம்பெயர்வு, வர்த்தக பண்டமாற்று, போக்குவரத்து, தொழிற்சாலைகள் அமைத்தல், இடம்பெயர்தல், மாநிலம் விட்டு மாநிலம் முதலீடு செய்தல் போன்ற பல விடயங்களில் கட்டுப்பாடுகளும், சட்டங்களும், மாநில அரசு சம்பந்தமான விடயங்களில் மாநிலங்களுக்கிடையே ஒப்பந்தங்களும் பேச்சுவார்த்தைகளும் நடை பெறுவதுண்டு. குறிப்பாக கனடாவின் ஒரு மாகாணத்திலிருந்து, அல்லது அமெரிக்காவின் ஒரு மாநிலத்திலிருந்து மக்கள் பெருமளவில் இன்னொரு மாகாணத்தையோ அல்லது மாநிலத்தையோ நோக்கி கூட்டம் கூட்டமாக மக்கள் இடம்பெயர்வார்களேயானால், அந்த மாநிலங்கள் அதற்கான காரணத்தை அறிந்து கொண்டு, அந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும். அல்லது, இன்னொரு மாநில மக்களின் இடம்பெயர்வை ஏற்றுக் கொள்ளும் அடுத்த மாநிலம், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அல்லது அந்தச் செலவுகளை ஈடு செய்ய, மத்திய அரசிடம் மானியம் (Transfer Payment) கேட்டுப் பெற்றுக் கொள்ளும். இந்த வட இந்திய, நேபாளி, வங்காளி மக்களின் சேவைகளுக்கு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் செல்வழிக்கப்படுவதை ஈடுசெய்ய, இந்திய மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு உதவுவதாகத் தெரியவில்லை.

        • ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சாத்திடவில்லை அதனால் தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழ்ர்களுக்கு குடியுரிமை பெறும் உரிமை கிடையாது என்பது சரிதான், ஏனெனில் இந்தியா வசதியற்ற நாடு – என்று சொல்கிறீர்கள் அப்படி தானே ?

  4. ஈழத் தமிழர்கள் பற்றிப் பேசும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய ஆவணப்படம்

  5. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மராட்டியம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் இந்த வந்தேறிகளால் பெரும் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்தியாவின் அரசியல் அதிகார அமைப்பை நோக்கினால் வட இந்தியாவில் இருந்து வரும் வந்தேறிகள் மிகவும் ஆபத்தானவர்கள். மிகப்பெரிய சதி திட்டத்தின் ஒரு பகுதியாக தான் அவர்கள் தொழிலாளர்கள் என்ற பெயரில் இங்கு வந்து குவிவது. மற்றபடி வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள் இங்கு வருவதற்கு எந்த தடையும் இல்லை. அவர்களும் நம்மைப்போல இந்தியாவின் மையப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பினாலும் வந்தேறிகளாலும் பாதிக்கப்பட்டவர்கள். ஈழத்தமிழர்கள் எண்ணிக்கையில் சிறுபாண்மையினர். அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் சொற்ப எண்ணிக்கையில் தான் அகதிகளாக உள்ளார்கள். மேலும் தங்கள் அரசியலை கொண்டு போய் குடியிருக்கும் நாட்டில் அவர்களால் திணித்து ஆதிக்கம் செய்ய முடியாது. இந்தி மற்றும் வங்காள பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு அரசியல் ஆதிக்க உணர்வு அதிகம். ஆகையால் தமிழ்நாட்டு மக்கள் முன்பே உஷாராக இருந்து கொள்வது நல்லது. மும்பை மாநகராட்சியின் ஆட்சி மொழியாக இந்தி ஆக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டதால் தான் மராட்டியர்களின் இன வெறி வளர்ந்தது. அரசியல்வாதிகள் அதை பயன்படுத்திக்கொண்டார்கள். இந்தி பேசும் பகுதிகளில் இருந்து மராட்டியத்தில் அதிகம் பேர் குடியேறியதால் தான் இந்த நிலை.

  6. /அரசியலை கொண்டு போய் குடியிருக்கும் நாட்டில் அவர்களால் திணித்து ஆதிக்கம் செய்ய முடியாது//
    கனடாவில் ஒரு தமிழ் பெண் எம்.பி ஆகிட்டார்ன்னு தைய தையன்னு ஆடிய தமிழினவாதிகள், இமயம் வென்றான், கடாரம் வென்றான்னு சொல்லி மன்னர்களை கொண்டாடுற தமிழினவாதிகள் இப்படி சொல்றதெல்லாம் ரெம்ப ஓவர்..

    • கனடா உலகில் இரண்டாவது பெரிய நாடு அத்துடன் அது பல்வேறு நாட்டு மக்களின் குடியேற்றத்தால் உருவாகிய நாடு, இன்றும் நாட்டின் சனத்தொகை வீழ்ச்சியடையாமலிருக்க, வேறு நாட்டு மக்களைக் குடியேற்றுவதைக் கொள்கையாகக் கொண்ட நாடு, அது மட்டுமன்றி இயற்கை வளங்கள் நிறைந்ந்த, பணக்கார நாடு. அதை தமிழ்நாட்டுடன் ஒப்பிடுவது தவறு.

      அதே வேளையில் தமிழ்நாடு தனிநாடல்ல. இந்தியாவின் ஒரு மாநிலமாக இருப்பதால், எண்பது மில்லியன் பீகாரிகளும் ஒரே நாளில் தமிழ் நாட்டில் குடியேறினாலும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் வாயைப் பொத்திக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இந்தியா போன்று மாநில கூட்டமைப்பைக் கொண்ட வேறு நாடுகளில், ஒரு மாநிலத்தின் மக்கள், கூட்டம் கூட்டமாக, பெட்டி, படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு, ஒருவழிப் பயணச் சீட்டுடன் இன்னொரு மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தால், அந்தந்த மாநில அரசுகள் அதற்கான காரணத்தை அறிய முனைவர், அத்துடன் அதற்கு தீர்வு காண ஆலோசிப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் இந்தியாவில் நடப்பதாகத் தெரியவில்லை.

      மொழிவழி மாநிலங்கள், அந்த மொழி, இன மக்களுக்கு தமது மொழியையும், கலாச்சாரத்தையும் தமது மாநிலங்களில் பாதுகாத்துக் கொள்ளும் அதே வேளையில் ஒரு இந்தியனாக இருக்கவும் வாய்ப்பளிக்கின்றன. அதனால் தான் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் பிரிவினைக் கோரிக்கைகள் இல்லை. என்னுடைய அனுபவத்தில், தமிழ்நாட்டில் யாருக்குமே தமிழ்நாடு பிரிய வேண்டுமென்பதில் விருப்பமில்லை, ஏனென்றால், ஈழத்தமிழர்கள் சிங்களக் குடியேற்றங்களால், அவர்களது சொந்த பாரம்பரிய கிராமங்களிலும், நகரங்களிலும், அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, சிறுபான்மையினராகிப் போன அனுபவம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குக் கிடையாது. அவர்களின் மாநிலத்தில் அவர்களின் மொழிக்கும் பெரிதாக ஆபத்து ஏதும் ஏற்படவில்லை. ஆனால் கூட்டம், கூட்டமாக, பெருமளவில் தமிழரல்லாதவர்கள் தமிழ் நாட்டில் குடியேறினால், இன்னும் சில வருடங்களில் தமிழ்நாட்டுத் தமிழர்களும், ஈழத்தமிழர்கள் ஏன் இப்படியான, கட்டுப்பாடற்ற குடியேற்றங்களை எதிர்த்தார்கள் என்பதை உணர்வார்கள்

  7. இந்த வட இந்திய, நேபாளி, வங்காளி இளைஞர்கள் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் திருமணம் முடிந்ததும், தமது மனைவி, குழந்தைகளையும் தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவார்கள். இப்பொழுதே இவர்களில் பலர் தமிழ் பேசுவார்கள். அதனால், அவர்கள் எல்லோரும் தமிழர்கள் தான் என்று பல வலைப்பதிவர்கள் பதிவிடுவார்கள். எத்தனையோ தமிழர்கள் வேலையில்லாமலிருக்க, ஹோட்டல்கள், உணவகங்கள், Woodland, Bata போன்ற கடைகளில் கூட சென்னையில் இவர்கள் வேலை செய்கிறார்கள்.

    தமிழ்நாட்டிலுள்ள ஏழைகளுக்கே ஒழுங்கான, வீடு, சுகாதார, கல்வி வசதிகள் கிடையாது. இனிமேல் இவர்களுடனும் இருக்கிற வசதிகளைப் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் மற்ற மாநில மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படும். இவர்கள் தமிழ்நாட்டில் வேரூன்றிய பின்னர், இன்னும் 20 -30 வருடங்களில், இவர்களும் தமது பிரதிநிதிகளை சட்டசபைக்கு அனுப்புவார்கள், அவர்களும் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வர ஆசைப்படுவது மட்டுமல்ல, அப்படி வரக்கூடிய சாத்தியக்கூறும் உண்டு. ஏனென்றால் வெள்ளைத் தோலைக் கொண்ட இவர்களின் குழநதைகள் நடிகர், நடிகைகளாகினால் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக வாக்களிப்பார்கள்.

    தமிழ்நாடு அரசு தமிழர்கள் மத்தியில் குடும்பக்கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்திக் கொண்டு, இப்படி தமிழரல்லாதவர்களை எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி, தமிழ்நாட்டில் குடியேற அனுமதித்தால், இன்னும் சில வருடங்களில் தமிழ்நாட்டின் நகரங்களில் தமிழர்கள் சிறுபான்மையினராவர்கள். தமிழ்நாட்டு வேலைவாய்ப்ப்புகளில், தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அல்லது அந்த வேலைக்கு தமிழ்நாட்டில் ஆளில்லை என்றால் மட்டுமே, தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருபவர்களை வேலைக்கு அமர்த்தலாம், என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வரவேண்டும். தமிழ்நாட்டு மக்கள் கூடிய சம்பளம் கேட்கிறார்கள் என்பதற்காக, அவர்கள் வேலையில்லாமல் இருக்க, மற்றவர்களை குறைந்த சம்பளத்தில் வேலைக்கமர்த்துவதை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

    • வியாசன் அவர்களே,

      இவ்வாறு கனடா, இங்கிலாந்து, நார்வே மக்கள் எண்ணி இருந்தால் இலங்கை தமிழர்கள் இன்னும் கொத்து கொத்தாக இலங்கையிலேயே செத்திருப்பார்கள். இந்தியர்கள் லட்சக்கனக்கில் அமெரிக்காவை தேடி போய் இருக்க முடியாது. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இப்படி தான் இலங்கை தமிழரையும் இங்கு வாழ வைத்திருக்கிறது. பால் தாக்கரே போன்ற யோசனைகள் தமிழகத்திற்கு வேண்டாமே!

      • ///இவ்வாறு கனடா, இங்கிலாந்து, நார்வே மக்கள் எண்ணி இருந்தால் இலங்கை தமிழர்கள் இன்னும் கொத்து கொத்தாக இலங்கையிலேயே செத்திருப்பார்கள்.///

        1. சனத்தொகை குறைந்த, செல்வம் நிறைந்த கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுவது முட்டாள்தனமாகும்.

        2. எந்த மேலை நாடுகளிலும் தமிழ்நாட்டைப் போல், பெரும்பான்மையான சொந்த நாட்டு மக்கள் வறுமையிலும், வேலைவாய்ப்பில்லாமலும், அடிப்படை கல்வி, மருத்துவ வசதிகளுக்குக் கூட தட்டுப்பாடான நிலையில் இருப்பதுடன் அடுத்த வேளைச் சோறு எங்கிருந்து வருமென்று கூடத் தெரியாத நிலையில் இருந்தால், எந்த மேலை நாடும் வெளிநாட்டவர்களை வரவேற்று, அங்கு குடியேற அனுமதிக்காது. தனக்குப் பின்பு தான் தானமும் தருமமும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

        3. தமிழர்களைப் போல் “வந்தாரை வாழவைக்கும்” என்ற பத்தாம் பசலித்தனம் எல்லாம் அவர்களிடம் கிடையாது. அவர்கள் வெளிநாட்டவர்களின் உழைப்பும், மூளையும் தமது நாட்டின் வளர்ச்சிக்கு தேவை என்பதாலும், வெளிநாட்டவர் செய்யும் வேலைக்கு உள்நாட்டில் ஆள் இல்லாத காரணத்தாலும், பிறப்பு வீதம் குறைவாக இருப்பதால், சனத்தொகை வீழ்ச்சி ஏற்படாமலிருக்கவும் தான் வெளிநாட்டவர்களை அங்கு குடியேற அனுமதிக்கிறார்கள்.

        4. அகதிகளை மேலைநாடுகள் அனுமதிப்பதன் காரணம் அவர்கள் ஐக்கியநாடுகளின் அகதிகள் சம்பந்தமான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட காரணத்தால் தான் அல்லது ஒருவரைக் கூட அங்கு தங்க விடாமல் நாடுகடத்தி விடுவார்கள். இந்தக் காரணங்கள் எல்லாம், தமிழ்நாட்டில் கிடையாது.

        5. இந்த பீகாரிகள் (வடக்கர்கள்) எல்லாம் இந்தியர்கள், தமிழ்நாடு தனிநாடல்ல, அதனால் தமிழரல்லாத வேறு மாநில மக்கள் தமிழ் நாட்டில் குடியேறுவதை தமிழ்நாட்டு தமிழர்கள் விரும்பினாலும் தடுக்க முடியாது.

        6. நான் கூறுவதெல்லாம், இவ்வாறு ஒவ்வொரு நாளும், வேறு மாநில மக்கள் தமிழ்நாட்டில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் குடியேற அனுமதித்தால், ஏற்கனவே பல குறைபாடுகளுடனும், தட்டுப்பாட்டுடனும் வாழும் தமிழ்நாட்டு மக்கள், இப்போதுள்ள வீடு, வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவ வசதிகள், போக்குவரத்து, பாதுகாப்பு போன்ற எல்லா சேவைகளையும் அவர்களுடன் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்பது தான்.

        7. இந்தியாவிலுள்ள தேசிய இனங்களிலொன்றாகிய தமிழ்நாட்டுத் தமிழர்கள், அவரகளின் மொழி, கலாச்சாரம் என்பதை அழியாமல் பாதுகாத்துக் கொண்டு, ஒரு இந்தியனாகவும் உணர வாய்ப்பளித்த தமிழ்நாடு மாநிலத்தில் தமிழரல்லாதாவர்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்தால், தமிழ்நாட்டுத் தமிழர்களும் தாம் தமது சொந்த மாநிலத்திலேயே சிறுபான்மையினராக்கப்படுவதை, நாளடைவில் உணர்வார்கள். அதுவேஇந்தியாவின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

        8. ஈழத்தமிழர்களின் பிரச்சனையிலிருந்து தமிழ்நாட்டுத் தமிழர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். சுதந்திரத்தின் பொது, இலங்கை மாநிலங்களாகப் பிரிக்கப்படுவதையே எதிர்த்து, இலங்கை எந்த வகையிலும் பிரிக்கப்படாமலிருக்க வேண்டுமென விரும்பிய ஈழத் தமிழர்கள் தனிநாடு கேட்டு இரத்தம் சிந்தும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு முதல் காரணம், இலங்கை அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால், தமிழர்கள் வரலாறு பூர்வமாக வாழும் வடா-கிழக்கு மண்ணில், சிங்களக் குடியேற்றங்களால், அவர்களின் நகரங்களிலும், கிராமங்களிலும் திடீரென்று அவர்கள் சிறுபான்மையினராக்கப் பட்டது தான்.

        9. உதாரணமாக சுதந்திரத்துக்கு முன்பு திருகோணமலையில் அறுதிப் பெரும்பான்மையினராக இருந்த தமிழர்கள், சிங்களக் குடியேற்றங்களால் இன்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அம்பாறை மாவட்டத்திலும் இதே நிலை தான்.

  8. தேசிய இனப் பிரச்சனையில் லெனினிய நிலைப்பாட்டை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது கட்டுரை. பாராட்டுகள். ஆயினும் பின்வருமாறு ஓரிடத்தில் கட்டுரை கூறுவது விவாதத்திற்கு உரியது. /ஆனால், ஏகாதிபத்தியத்தின்’”நேரடி’ ஆதிக்கம் வரும்போது இயல்பாகவே ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலைப் புரட்சி என்கிற முறையில் தேசிய இனப் பிரச்சினை முதன்மையானதாகிறது./ இந்த இடத்தில் கூட தேசிய இனப் பிரச்சினை எப்படி முதன்மை பெற முடியும்? அப்பொழுதும் கூட பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கு உட்பட்டே அப்பிரச்சினை வைக்கப்பட வேண்டும் என்பது உண்மை இல்லையா? பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் ஒரு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசிய விடுதலைப் போர் ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஜனநாயகம் , போன்ற கோரிக்கைகளுடன் சோசலிசத்தையும் அல்லவா உள்ளடக்கி இருக்க வேண்டும். அப்பொழுது தேசிய இனத்தின் பிரச்சனை பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கு உட்பட்டுத்தானே இருக்க முடியும்?

  9. இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள ஒரு கருத்து பற்றி எனது ஐயத்தை மேலே எழுப்பியிருந்தேன். வினவோ அல்லது கட்டுரை ஆசிரியரோ எனது ஐயத்தைத் தீர்த்து வைப்பார்கள் என நம்புகிறேன்.

    • புவிமைந்தன், ஒரு எளிமையான உதாரணம் மூலம் விளக்க முயலுகின்றேன்

      வால்மார்ட் Vs தமிழ் தேசிய முதலாளிகள்

      இது பாட்டாளி வர்க்க பிரச்சனை மட்டுமா? இல்லை தமிழ் தேசிய முதலாளிகள் பிரச்சனை?

      நேரடியாக தமிழ் தேசிய முதலாளிகளையும் , மறைமுகமாக பாட்டாளிகளையும் வால்மார்ட் வருகை பாதிக்கும் இல்லையா ?

      இன் நிலையீல் தமிழ் தேசிய முதலாளிகளும் ,பாட்டாளிகளும் தம் தம் வர்க்க நலன்களை சிறிதாவது தமக்குள் விட்டுககொடுத்து ,இவர்கள் இருவரும் ஒருங்கினைந்து வால்மார்ட்டை வீழ்த்த போரடவேண்டுமா இல்லையா ?

  10. செந்தில்குமரன், ஏகாதிபத்திய எதிர்ப்புத் தேசிய விடுதலைப் புரட்சியை நீங்கள் வெறுமனே வால்மார்ட்டுக்கு எதிரான போராட்டமாகச் சுருக்கி விட்டீர்கள். நல்லது, உங்கள் வாதப்படியே வருவோம். வால்மார்ட்டுக்கு எதிராகத் தமிழ் தேசிய முதலாளிகளுடன் இணைந்து போராடும் பாட்டாளி வர்க்கம் எந்தத் திட்டத்துடன் அதில் இணைந்து போராடும். தேசிய இன முதலாளிகள் வைக்கும் திட்டத்தின் கீழ் இணைந்து போராடுமா அல்லது பாட்டாளி வர்க்கம் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ஒரு திட்டத்தை வைத்து அதன் கீழ் தேசிய முதலாளிகளை இணைத்துப் போராடுமா? இதுதான் எனது கேள்வி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க