privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்காலனிய ஆட்சியில் இலங்கை - சமரன் குழு எழுதிய கதை !

காலனிய ஆட்சியில் இலங்கை – சமரன் குழு எழுதிய கதை !

-

எதிர்கொள்வோம் !-4

“ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும்” என்ற பெயரில்  சமரன்  வெளியீட்டகம் ஒரு நூல் பதிப்பித்திருக்கிறது. அதில் ஈழம், விடுதலைப் புலிகள் தொடர்பான ம.க.இ.க.வினர் நிலைப்பாடுகள் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆதாரப்பூர்வமான அந்நூலுக்கு ஏன் இன்னமும் பதிலளிக்கவில்லை? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

அநாகரிக தர்மபால
மதுவிலக்கு இயக்கத்தை துவங்கி சிங்கள – பௌத்த பேரினவாத மறுமலர்ச்சிக்கு முயற்சித்த அநாகரிக தர்ம்பால

அந்நூல் இலங்கை மற்றும் ஈழத்தைப் பற்றிய உண்மை விவரங்களைக் கொண்டதே அல்ல என்பதற்குச் சில சான்றுகளைக் கடந்த இதழில் எழுதியிருந்தோம். அதன் தொடர்ச்சியாக சமரன் குழுவின் மேலும் சில பொய்மைகளை இங்கே எடுத்துக்காட்ட விழைகிறோம்.

‘இலங்கையைக் காலனியாக்கிக் கொண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் அடக்குமுறை ஆதிக்கத்தோடு சிங்கள, தமிழ் இனங்களுக்கிடையிலான வேறுபாடுகளைப் பயன்படுத்தி, முரண்பாட்டை வளர்த்து,  அவர்கள்  ஐக்கியப்படாமல் இருக்கவும் அவர்களால் புகுத்தப்பட்ட பாராளுமன்ற முறைகளையும் கூட இரு இனங்களுக்கு இடையில் பூசல்களை ஏற்படுத்தவே திட்டமிட்டு செயல்படுத்தினர். அரசு உத்தியோகங்களில் பாரம்பரியத் தமிழர்களைச் சேர்ந்த உயர்குடியினருக்கு அதிக இடங்களைத் தந்தும் இன்னும் பிற சில்லறைச் சலுகைளை வழங்கியும் தமிழ், சிங்கள  மக்கட்களுக்கிடையே ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்தி இனப்பகையை வளர்க்க முயன்றார் கள்.

‘காலனிய இலங்கையின் பொருளாதாரம் ஏகாதிபத்தியவாதிகளிடம் இருப்பினும் ஏற்றுமதி, இறக்குமதி மொத்த வர்த்தகத்தில் இந்தியப் பெருவணிகர்கள் ஆதிக்கம் வகித்தனர்; இவர்களின் ஆதிக்கத்தை சிங்கள சிறு வணிகத்தினரால் உடைத்தெறிந்து முன்னேற முடியவில்லை. சிறு வியாபாரத் துறையில் தமிழர்களுடன் தமிழ்பேசும் முஸ்லீம் மதத்தவர்களும் போட்டியிட வேண்டியிருந்தது.  தமிழக நாட்டுக்கோட்டைச் செட்டியார் களின் பிரத்தியேகமான ஆதிக்கத்திற்குள்தான் இலங்கையின் வட்டித் தொழில் இருந்தது.  இந்நிலைமைகள் யாவும் இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் மீது, அதிலும் குறிப்பாக இந்திய வம்சாவழியினர் மீது சிங்களவர் அவநம்பிக்கை கொள்வதற்கான அடிப்படையாக அமைந்தன.’ (பக். 37, 38) என்கிறது, சமரன் குழு.

‘நாட்டு விடுதலைக்கான போராட்டத்தில் சிங்களவர் மத்தியில் இரண்டு போக்குகள் தோன்றின. இன,மத வேறுபாடுகளைக் கடந்த ஒரு நாடு தழுவிய இயக்கம் என ஒன்றும்; இலங்கை சிங்களருக்கே, தமிழர்களை அதற்கு அந்நியமாகக் கருதும் இரண்டாம் போக்கும் எழுந்து வளர்ந்தது. இலங்கையின் இரு இனங்களுக்கிடையில் பூசல்கள் இருந்தாலும் விடுதலைக்காக ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களில் இரு இன மக்களும் ஒன்றுபட்டார்கள்.  இதன் விளைவாகவும், சர்வதேச சூழ்நிலைமைகளின் மாற்றங்கள் காரணமாகவும் காலனிய ஆட்சி தொடர முடியவில்லை.  ஏகாதிபத்தியம் இலங்கையின் இரு இனங்களையும் பலாத்காரமாக இணைத்து அரசு அதிகாரத்தை சிங்கள-தமிழினத் தரகு முதலாளிகளிடம் மாற்றிக் கொடுத்தது. பின்னர் படிப்படியாக அதைச் சிங்களப் பேரினவாதத் தரகு முதலாளிகள் அபகரித்துக் கொண்டனர்’ என்கிறது, சமரன் குழு.

காலனி, ஏகாதிபத்தியவாதிகள் என்றால் அடக்குமுறைகள், விடுதலைப் போராட்டங்கள், அவற்றில் வெவ்வேறு பிரிவுகள், போக்குகள், முரண்பாடுகள், மோதல்கள், ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகள், ஆட்சியில் நீடிக்க முடியாத நிலை, தரகு முதலாளிகளிடம் அதிகார மாற்றம் – இந்தப் பொதுச் சூத்திரத்தை இலங்கைக்கு அப்படியே பொருத்தி சொந்த வரலாற்றுக் கதை ஒன்றை சமரன் குழு தயாரித்திருக்கிறது.

இங்கே இலங்கையின் காலனிய கால வரலாறு என்ற பெயரில் ஒரு பக்கச் சாய்வாக சமரன் குழு வரலாற்றைத் திரிப்பது சற்றுக் கவனித்தாலே புரிகிறது. இலங்கையின் காலனிய காலத்திலும் சரி, பிறகும் சரி இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஓரே இனமாக அமையவும் இல்லை. இலங்கை வாழ் முஸ்லீம் மக்கள் அனைவரும் தமிழ் பேசுபவர்கள் என்றும் அவர்கள் உள்ளிட்ட இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இலங்கையின் காலனிய காலத்திலேயே, ஒரே தொகுப்பாக, ஒரே இனமாக இருந்ததைப் போலவும், இந்த இனத்துக்கும் சிங்களருக்கும் இருந்த முரண்பாட்டை வளர்த்து பிரித்தாளும் சூழ்ச்சியால்  அவர்களை ஐக்கியப்பட விடாமல் செய்து இலங்கையின் இரு இனங்களையும் பலாத்காரமாக காலனியவாதிகள் இணைத்தனர் என்றும் சமரன் குழு எழுதுகிறது.

ஆர்வி மொழி பேசும் மூர்கள்
15-ம் நூற்றாண்டில் வணிகர்களாக அரபு நாட்டிலிருந்து வந்து இலங்கையில் குடியேறிய அரபுவழி ”ஆர்வி” பேசும் மூர்களின் சந்ததியினர் (கோப்புப் படம்)

முதலாவதாக, உலகின் மற்ற பிற நாடுகளில் நடந்ததைப் போல இலங்கையில் குறிப்பிடத்தக்க காலனிய விடுதலைப் போராட்டங்கள் நடைபெறவில்லை என்பது தான் உண்மை! 19-ம் நூற்றாண்டின் இறுதியில் மேலைநாடுகளில் தோன்றிய கிறித்துவ மதுவிலக்கு இயக்கத்தின் நீட்டிப்பாக  இலங்கையில் மதுவிலக்கு இயக்கத்தைத் தொடங்கி சிங்கள-பௌத்த  மறுமலர்ச்சிக்கு முயன்றார் அநாகரிக தர்மபாலா. பிரிட்டிஷ் காலனியவாதிகளின் எடுபிடிகளும்  சிங்களத் தரகு முதலாளிய மேட்டுக் குடியினருமான சேனநாயகா, பண்டாரநாயகா கும்பல் அநாகரிக  தர்மபாலாவை மதுவிலக்கு இயக்கத்தின் தலைமையிலிருந்து தூக்கியடித்தது; பிறகு நாட்டை விட்டே துரத்தியடித்தது.

சிங்கள-பௌத்த மேட்டுக் குடியினரும், யாழ்ப்பாணத் தமிழ் வேளாள சாதி மேட்டுக் குடியினரும்  இலங்கை காலனிய அரசின் நிர்வாக அமைப்பில் இடம் பிடித்துக் கொண்டு  இங்கிலாந்து முடியரசுக்கு  ஒன்றுபட்டு சேவை செய்தனர்.  இவர்கள் சிங்கள-தமிழ் சமூகங்களின் பெயரால் ஒன்றுபட்டு, அதுவும் யாழ்ப்பாணச்  சீமான்கள் தலைமையில் 1919-இல் அனைத்து இலங்கை தேசியக் காங்கிரசு கட்சியை நிறுவினர். அது இந்தியாவின் காந்தி, காங்கிரசின் அளவுக்குக் கூட காலனிய விடுதலை அடையாளப் போராட்டங்களை நடத்தவில்லை; முழு விடுதலைக்கு மாறாக, காலனிய ஆட்சியின் கீழ் சுயாட்சி அரசமைப்புகளைக் கோரிப் பெற்றனர். காலனியவாதிகள் நிறுவிய நாடாளுமன்றத்திலும் அதிகார மாற்றத்துக்குப் பின்னர் அமைந்த ஆட்சி அமைப்பிலும் சேர்ந்தே பங்கேற்றனர்.

1930-களில் காலனியவாதிகளிடம் இருந்து சுதந்திரம் மற்றும் நீதி கோருவதென  இலங்கையின் பல பகுதிகளில் இளைஞர் அணிக் குழுக்கள் தோன்றின. ஆனால், அவை எதுவும் உண்மையில் விடுதலைக்கான பாரிய இயக்கங்கள் எதையும் கட்டியெழுப்பவில்லை. அவற்றில் முன்னோடியான யாழ்ப்பாண இளைஞர் அணி காந்தி-காங்கிரசுடன் உறவு கொண்டு சமரச வழியை மேற்கொண்டது. தென்னிலங்கையில் தொடங்கிய இளைஞர் அணிக் குழுக்கள் அநாகரிக தர்மபாலா பாணியிலான சிங்கள-பௌத்த மத, இனவாத இயக்கங்களாகவே இருந்தன.

தென்னிலங்கை இளைஞர் அணிக் குழுக்கள் மத்தியில் இருந்து மேலைக் கல்வி பயின்ற ‘இடதுசாரி’ லங்க சம சமாஜக் கட்சி என்ற போலி சோசலிச, போலிக் கம்யூனிசக் கட்சியைத் தோற்றுவித்து, ஆங்கிலேயர்களின் பெருந்தோட்ட முதலாளிகளுக்கு எதிராக நடேச அய்யர் தலைமையிலான மலையகத் தொழிலாளர் சங்கத்துடன் சேர்ந்து தொழிற்சங்கப் போராட்டங்கள் நடத்தினர். இந்தியப் போலி சோசலிசக் கட்சித் தலைவர்களை அழைத்துக் கூட்டங்கள் நடத்தினர்.

இதற்கிடையே, இரண்டாம் உலகப்போர் வெடித்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஜெர்மனி, ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து, அதிகாரத்தைக் கைப்பற்ற இலங்கை ஆளும் தரகு முதலாளிகள் முயன்றனர். அதற்காக ஜெயவர்த்தனே, சேனநாயக இருவரும் ஜப்பானுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினர். போரில் ஜப்பானும், ஜெர்மனியும் தோற்றுப்போகவே அந்த முயற்சி நிறைவேறாமல் போனாலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பலவீன மடைந்ததாலும் அமெரிக்க நிர்பந்தம் மற்றும் இந்தியாவில் அச்சமயம் நடந்த தன்னெழுச்சியான போராட்டங்கள் காரணமாக இலங்கையில் அதிகார மாற்றம் நடந்தது.    அப்போதும் கூட்டாகவேதான் சிங்கள – தமிழ் தரகு முதலாளிகளிடம் அதிகாரம் மாற்றித் தரப்பட்டது. அதன்பிறகு சிங்கள தரகு முதலாளிகள் படிப்படியாக இலங்கையின் அதிகாரத்தை ஏகபோகமாக்கிக் கொண்டிருந்தபோதும் தமிழ் தரகு முதலாளிகள் அவர்களின் ஆட்சியில் பங்கேற்று வந்தனர்.

இலங்கையின் காலனிய விடுதலை இயக்க வரலாறு என்றால் அது அநாகரிக தர்மபாலாவின் சிங்கள-பௌத்த பேரினவாத  பாரம்பரியம், மரபைச் சேர்ந்த ஊனமுற்ற விடுதலைப் போராட்ட வரலாறுதான் என்ற உண்மையைக் காண மறுக்கிறது, சமரன் குழு.

போரா, பார்சி, மெமோன் ஆகிய இந்தியப் பெருவணிக முதலாளி நிறுவனங்களின் ஆதிக்கம், நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வட்டித் தொழில் ஆதிக்கம் காரணமாக இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் மீது ஏன் சிங்கள மக்கள் ‘அவநம்பிக்கை’ கொள்ள வேண்டும்? இது குறித்து இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் நிலை என்ன? இம்மக்கள் அவ்வாதிக்கங்களை ஏன் எதிர்க்கவில்லை? மேலும், கிறித்தவத் தொண்டு நிறுவனங்களின் பலனாய் பெருமளவு கல்வி பயின்ற ஈழ நடுத்தர வர்க்கத்தினர் காலனிய காலத்திலிருந்தே உயர் கல்வியிலும் அரசு நிர்வாகத்திலும் தமது மக்கட் தொகைக்கு மிகவும் மேலான விகிதத்துக்கு, அதாவது  60 விழுக்காடிற்கு மேல் பிடித்துக் கொண்டிருந்ததோடு அவர்களில் பலரும் காலனிய ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருந்தனர்.   சிங்கள மக்கள் இதைத் தமது வேலை வாய்ப்புகளை மறுப்பதாகவும்,  ஈழத் தமிழர் ஆதிக்கமாகவும் பார்த்தனர்.

இலங்கை வாழ் முஸ்லீம் மக்கள் உள்ளிட்ட இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இலங்கையின் காலனிய காலத்திலேயே, ஒரே தொகுப்பாக, ஒரே இனமாக, ஒரே தேசமாக இருந்தாகவும் இந்தத் தமிழீழத் தேசத்தையும் சிங்கள தேசத்தையும் பிரித்தாளும் சூழ்ச்சி செய்து பலாத்காரமாக காலனியவாதிகள் இணைத்ததாகவும் சமரன் குழு கூறுவது உண்மையல்ல. இலங்கை வாழ் முஸ்லீம் மக்கள் அனைவரும் தமிழ் பேசுபவர்களும் அல்ல.   அரபு நாடுகளில் இருந்து குடியேறிய அரபு வழி ஆர்வி பேசும் மூர்கள், இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் மலேசியாவிலிருந்து குடியேறிய மலாய் பேசும் முசுலீம்கள், இந்தியாவிலிருந்து குடியேறிய தமிழ் பேசும் இசுலாமியர்கள் என்று மூன்று வெவ்வேறு மொழி, வரலாறு, மரபுகளைக் கொண்ட மத, மொழிச் சிறுபான்மையினர்கள், இலங்கை வாழ் முஸ்லீம் மக்கள். இவர்களில் தமிழ் பேசும் இசுலாமியர்களை விடப் பிற மொழி பேசுபவர்களே அதிகமானோர். ஆகவே, இலங்கை வாழ் முஸ்லீம் மக்கள் அனைவரும் தமிழ் பேசும் முஸ்லீம் என்று சமரன் குழு கூறுவதும் உண்மையல்ல.

இவ்வாறு பொதுவில் இலங்கையின் வரலாற்றை மட்டுமல்ல,  குறிப்பாக ஈழம் மற்றும் ஈழப் போராளிகளின் வரலாற்றையும் சமரன் குழு திரித்துப்  புரட்டுகிறது. மூர், மலாய், தமிழ் முஸ்லீம் மக்கள்,  மலையகத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் ஆகிய அனைவரையும் பல இடங்களில், ”இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள்” என்று பொதுவில் எழுதும் சமரன் குழு, சில இடங்களில் மலையகத் தமிழர்களையும், ஈழத் தமிழர்களையும் பிரித்தும் அடையாளப்படுத்துகிறது. ”இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின்  தேசிய இனப் பிரச்சினை” (பக். துடி,41,47) என்று எழுதும்போது சமரன் குழு உண்மையில் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை குறித்துத் தெளிவின்றிக் குழம்பிப் போயுள்ளதுதான் தெரிகிறது.

‘த.வி.கூ.வின் காட்டிக் கொடுத்தல்களால் அதிருப்தியுற்றுத் தனிநாடுக்காக ஆயுதப் போராட்டம் தொடங்கிய  தமிழீழ விடுதலைப் புலிகள் பல குழுக்களாகப் பிரிந்தனர். அதில் பின்வரும் குழுக்கள் குறிப்பிடத் தக்கவை. 1). தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (பிரபாகரன் குழு). 2) தமிழ் ஈழ  மக்கள் விடுதலை அமைப்பு (முகுந்தன் குழு). 3). தமிழ் ஈழ விடுதலை முன்னணி (ஈழவேந்தன் குழு). 4). ஈழ மாணவர் பொது மன்றம் (பத்மநாபன்) இன்னும் பிற’ (பக்.46).

பிரபாகரனையும் புலிகளையும் எல்லாவற்றுக்கும் மூல முதன்மையாக்கும் சமரன் குழுவின் இக்கருத்து ஈழத்தின் விடுதலைப் போராட்ட வரலாறு குறித்த அதன் அறியாமையை உறுதிப்படுத்துகிறது. தமிழர் விடுதலைக் கூட்டணி அமைக்கப்படுவதற்கு முன்னரே இளையதம்பி இரத்தினசபாபதி, நேசதுரை திருநேசன்(சங்கர் ராஜி), பாலநடராஜா அய்யர் ஆகியோரால் 1975-இல் இலண்டனில் உருவானது, ஈழ மாணவர் பொது மன்றம் (EROS). மட்டக்களப்பு, அம்பாறை, யாழ் குடா நாட்டைச் சேர்ந்தவர்களை, குறிப்பாக இசுலாமியரை ஈர்த்தது. பாலஸ்தீன விடுதலை அமைப்பைத் தொடர்பு கொண்டு ஆயுதப் பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தது. TELO,PLOTE,EPRLF ஆகியவற்றின் போராளிகளுக்கு பாலஸ்தீன விடுதலை அமைப்பின்  முகாம்களில் பயிற்சிபெற ஏற்பாடு செய்தனர்.

குட்டிமணி, தங்கத்துரை
டெலோ என்ற தனிப் போராளிக்குழு தோன்றுவதற்கு முன்னோடியாக, 1960 களின் பிற்பகுதியில் முற்போக்கு தமிழ் மாணவர்கள் அமைப்பை உருவாக்கிய குட்டிமணி, தங்கத்துரை

EROS – இன் மாணவர் அணியாகிய ஈழம் மாணவர் கள் பொதுச் சங்கத்திலிருந்து ஒரு பிரிவினர் வெளி யேறி   1980-இல் EPRLF  என்ற தனிப் போராளிக் குழுவை நிறுவினர்.

தங்கதுரை, குட்டிமணி ஆகியோரால் 1960 – களின் பிற்பகுதியில்  உருவாக்கப்பட்ட  முற்போக்கு தமிழ் மாணவர்கள் அமைப்பிலிருந்து தனிப் போராளிக் குழுவாக 1979 – இல் தோன்றியதுதான் TELO.

மேலும், ஈழவேந்தன் தலைமையிலான குழு TELO  தமிழ் ஈழ விடுதலை முன்னணி என்பதும், பத்மநாபன் தலைமையிலான குழு EROS – ஈழ மாணவர் பொது மன்றம் என்பதும் சமரன் குழுவின் வழக்கமான கற்பனைக் கண்டுபிடிப்புதான்!

(தொடரும்)
_________________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2013
_________________________________________