எதிர்கொள்வோம் !

-

இவ்வளவு நாளாகப் புலிகளையும் பிரபாகரனையும் பாசிஸ்டு என்று கூறிவிட்டு, மாணவர் போராட்டம் அளித்த நிர்ப்பந்தத்தின் காரணமாக, தாங்களும் ஈழப் போராட்டத்துக்கு ஆதரவு என்று வேறு வழியில்லாமல் காட்டிக்கொள்கிறீர்கள். அல்லது ஆதாயம் அடைவதற்காக இப்படி நடிக்கிறீர்கள்.

இப்படிச் சொல்லுவது கொஞ்சமும் உண்மைக் கலப்பில்லாத முழுப்பொய். பாசிஸ்டுகளின் அதிகாரபூர்வ ஊதுகுழல்களான கோயபல்சு – கோயரிங் போன்றவர்கள்கூட இப்படிப் புளுகுவதற்குத் துணிய மாட்டார்கள். ஆனால், தங்களுக்கென்று எந்தவொரு சொந்த அரசியல் திட்டமும் நடைமுறையும் இல்லாமல் ஈழச் சிக்கலை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தும் சில அரசியல் காளான்கள் தொடர்ந்து இப்படிப் புளுகி வருகிறார்கள்.

சைதாப்பேட்டை ஆர்ப்பாட்டம்
“ஈழத்திலே வெறியாட்டம் ! இங்கே எதற்கு குடியரசுக் கொண்டாட்டம் !!” என்ற முழக்கத்தின் கீழ் ஈழத்தின் மீது நடத்தப்படும் போரில் இந்திய அரசு உடந்தையாக இருப்பதை அம்பலப்படுத்தி ஜனவரி 26, 2009 அன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ம.க.இ.க. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் இணைந்து நடத்திய எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்).

ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு என்ற நிலையிலிருந்து ம.க.இ.க., புதிய ஜனநாயகம் மற்றும் இதன் தோழமை அமைப்புகள் ஒரு போதும் விலகியிருந்ததாகவோ, ஒதுங்கியிருந்ததாகவோ, அல்லது மற்ற அமைப்புகளை விடப் பின்தங்கியிருந்ததாகவோ இவர்களால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா? அதற்கு மாறாக, ஈழ விடுதலைப் போராட்டத்தை எப்போதும் தம் தலையில் தாங்கிச் சுமப்பவர்களாகக் காட்டிக் கொள்ளும் நெடுமா, வைகோ, பெம, ராமா, திருமா, தியாகு, சுப.வீ., வீரமணி போன்றவர்களெல்லாம் தமது பிழைப்புவாத அரசியல் நலனுக்காகவும் தம் தோலைக் காத்துக் கொள்வற்கும் ஈழம் என்ற சொல்லை உச்சரிப்பதற்கோ, எழுதுவதற்கோ கூட அஞ்சிய தருணங்களையும் நாம் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்ட முடியும்.

அவர்களோடு சேர்ந்து இப்போது முளைத்துள்ள புலிகளின் புதிய துதிபாடிகளும் ஈழத்தின் எதிரிகளை வீழ்த்துவதை விட, ம.க.இ.க., புதிய ஜனநாயகம், பு.மா.இ.மு., மற்றும் இவற்றின் தோழமை அமைப்புகளை ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானவை என்று புளுகி, இவற்றைத் தமிழ் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தும் பணியை முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறார்கள். பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் பாசிஸ்டுகள் என்று மதிப்பிடுவதாலும் ஈழச் சிக்கலுக்குப் “பொதுவாக்கெடுப்பு” என்று ஒருபுறம் முழுங்கிக் கொண்டே, “தனி ஈழம்தான் ஒரே தீர்வு” என்பதை இப்பொழுதே முடிந்த முடிவாகக் கூறாதவர்களை, ஈழப் போராட்ட ஆதரவுக்கு எதிர்நிலைக்குத் தள்ளுகின்றனர்.

பிரபாகரன் மற்றும் புலிகளை பாசிஸ்டுகள் என்று இப்போதும்தான் ம.க.இ.க., புதிய ஜனநாயகம் மற்றும் இதன் தோழமை அமைப்புகள் கூறி வருகின்றன; எதற்காகவும் யாருக்காகவும் அவ்வாறு கூறுவதை இந்த அமைப்புகள் நிறுத்திவிடவில்லை; பிரபாகரன் மற்றும் புலிகளை பாசிஸ்டுகள் என்பது கடந்தகால வரலாற்று உண்மை. பிரபாகரன் மற்றும் அவர் தலைமையிலான விடுதலைப் புலிகளின் முந்தைய பாசிச அரசியல், இராணுவத் தவறுகளிலிருந்து பாடங் கற்றுக் கொள்ளவேண்டும். மீண்டும் அவர்களின் வழிமுறைகளை யாரும் பின்பற்றக் கூடாது.

ஆனால், கடந்த முப்பதாண்டுகால ஈழப் போராட்டத்தில் பிரபாகரனும் புலிகளும் தவறே செய்யவில்லை; ஈழப்போரின் துயரமான முடிவுகளுக்குப் பன்னாட்டுச் சதியும் இலங்கை, இந்திய அரசுகள் நடத்திய கொடூரமான தாக்குதல் மட்டும்தான் காரணம் என்று கூறி, பிரபாகரன் மற்றும் புலிகளின் பாசிச அரசியல், இராணுவ நடவடிக்கைகளையும் நியாயப்படுத்திக் கொண்டு, பிரபாகரன் மற்றும் புலிகள் மீது கட்டியெழுப்பப்பட்ட பிரமை, தனிநபர் வழிபாடு, கற்பிதங்கள் எல்லாமும் தொடரும் பொழுது இந்த விடயம் அவசியமாகிறது. இந்த அளவுக்குத்தான் ஈழச்சிக்கலின் இன்றைய நிலையில் பிரபாகரன் மற்றும் புலிகளை பாசிஸ்டுகள் என்ற கருத்து-மதிப்பீடு முக்கியத்துவமுடையது.

“மாணவர் போராட்டம் அளித்த நிர்ப்பந்தம்” என்பது கடைந்தெடுத்த பொய்யும் மாணவர் போராட்டம் பற்றிய ஞான சூனியத்தின் பிதற்றலும் தான். கடந்த பல ஆண்டுகளில் ஈழ ஆதரவு மாணவர் போராட்டத்தைக் கட்டியெழுப்பியதில் ம.க.இ.க., புதிய ஜனநாயகம் மற்றும் இதன் தோழமை அமைப்புகளின் பங்கு, குறிப்பாக, புட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் பங்கு மிக மிக முக்கியமானதாகும்.

புலிகளிடமிருந்து ஈழத்தின் கிழக்கு மாகாணத்தை முழுமையாகக் கைப்பற்றிக்கொண்ட இலங்கை பாசிச இராணுவம் 2008 நவம்பரில் வன்னியின் மீது தாக்குதல் தொடுத்து, புலிகளின் தலைமையகமாக இருந்த கிளிநொச்சியைச் சுற்றிவளைத்தது.

கசாப்புக்காரனிடமே காருண்யம் கோரும் கதையாக, கொலைகாரன் மன்மோகனிடமே, இங்குள்ள ஓட்டுக் கட்சிகள் ‘கோரிக்கை’ வைத்துக் கொண்டிருந்த சூழலில், தமிழக மக்கள் போராட்டங்கள் இந்திய அரசுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் எதிராக நடத்தப்பட வேண்டும் என்று ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு., பெ.வி.மு., ஆகிய அமைப்புகள் முன்வைத்தன. அந்த அடிப்படையில் அவ்வமைப்பினர், 2008 நவம்பரில் “ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணைநிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்”, “கொலைவெறி பிடித்த மன்மோகன் சிங்கே, உன் டாடாவும், அம்பானியும் கொள்ளையடிக்க எங்கள் ஈழத் தமிழர் சாக வேண்டுமா?” – என விண்ணதிரும் முழக்கங்களை எழுப்பி, சென்னை அண்ணா சாலையை மறித்து, நந்தனம் இராணுவ எஸ்டேட் அலுவலகத்தைத் திடீரென்று முற்றுகையிட்டுப் போராடினர். திருச்சி இராணுவ வளாகத்தை (கண்டோன்மெண்ட்) ம.க.இ.க., பு.மா.இ.மு. முதலான அமைப்புகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தின.

“சென்னையில் மட்டுமின்றி, அதே முழக்கங்களை முன்வைத்து இந்தப் புரட்சிகர அமைப்புகள் திருச்சி பாலக்கரையிலும்; கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பாகவும்; தஞ்சை இரயிலடி எதிரிலும்; ஓசூர் ராம்நகர் அண்ணாசாலை அருகிலும்; தருமபுரி ராஜகோபால் பூங்கா முன்பாகவும்; கடலூரில் உழவர் சந்தை அருகிலும் திரளான மக்கள் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

பு.மா.இ.மு. முற்றுகை
ராஜபக்சே கும்பலுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத்தமிழின அழிப்புப் போரை நடத்திவரும் இந்திய அரசை அம்பலப்படுத்தி, 12.02.2009 அன்று திருச்சியில் அனைத்துப் பள்ளி – கல்லூரி மாணவர்களை அணிதிரட்டி, மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள 117-வது பிரதேச இராணுவப் படைத் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பு.மா.இ.மு. நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

அந்த நாளில் போலீசின் அனுமதி மறுப்பு மற்றும் மழை காரணமாகத் தடைபட்ட பல பகுதிகளில் பேருந்து, ரயில் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்களை முன்னெடுத்துச் சென்றன. இதன் தொடர்ச்சியாக கடந்த 17.10.08 அன்று துறையூர் பேருந்து நிலையம் எதிரிலும், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும்; சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் தெருமுனைக் கூட்டத்தையும் நடத்தின. 19.10.08 அன்று கோத்தகிரியில், நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கத்தினர் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். 20.10.08 அன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.”

“13.11.08 அன்று அதிராம்பட்டினத்தில், ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை நிற்கும் இந்திய அரசுக்கெதிராக வி.வி.மு; பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகளின் சார்பில் செங்கொடி ஏந்தி விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. 19.11.08 அன்று கிருஷ்ணகிரியில் பு.ஜ.தொ.மு; வி.வி.மு., ஆகிய அமைப்புகளின் சார்பில் பகுதிவாழ் மக்களின் ஊக்கமான பங்கேற்போடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் – நெல்லிக்குப்பத்தில், வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; ஆகிய அமைப்புகள் இணைந்து ஈழத்தமிழர் படுகொலைக்குத் துணைபோகும் இந்திய அரசைச் சாடிப் பொதுக்கூட்டம் நடத்தின. புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இப்புரட்சிகர அமைப்புகள் இணைந்து 22.11.08 அன்று கோட்டக்குப்பத்தில் இதே முழக்கத்தின் கீழ் பொதுக்கூட்டத்தை நடத்தின. இப்பொதுக்கூட்டங்களும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியும் ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களின் நெஞ்சில் ஈழ ஆதரவு அரசியலைப் பதியவைத்தன.”

“2008 – ஆம் ஆண்டு இறுதியில் ஈழத்தமிழர்கள் மீதான அழித்தொழிப்புப் போர் உச்சமடைந்து வந்த சூழலில் பாசிச சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகவும், இப்படுகொலைகளுக்குத் துணை நிற்கும் இந்திய அரசுக்கெதிராகவும், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தொடர் பிரச்சார இயக்கத்தை மேலும் உறுதியாக நடத்தியது.

“திருச்சியில், 08.12.08 அன்று மாலை பாலக்கரை பிரபாத் திரையரங்கம் எதிரில் அனைத்துக் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து பு.மா.இ.மு. தலைமையில் ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போரை ஆதரித்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி அரசு சட்டக் கல்லூரி, உருமு தனலெட்சுமி கல்லூரி, நேஷனல் கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, இன்ஃபன்ட் ஜீசஸ் பாலிடெக்னிக் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். ம.க.இ.க., பு.மா.இ.மு., தோழர்களோடு மாணவர் பிரதிநிதிகளும் எழுச்சியோடு உரையாற்றினர்” (ஆதாரம்: புதிய ஜனநாயகம், 2008).

தஞ்சை பேரணி
ம.க.இ.க. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் இணைந்து, 2009-ம் ஆண்டு மே தினத்தன்று, “ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுப்போம்!” என்ற அரசியல் முழக்கத்தை முன் வைத்து தஞ்சையில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி. (கோப்புப் படம்)

2009 ஜனவரி-பிப்ரவரியில் இலங்கை இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றி, வன்னியைத் திறந்தவெளி வதை முகாமாக சிங்கள இராணுவம் மாற்றிவிட்ட நிலையில், புலிகள் முல்லைத் தீவுக்கு தள்ளப்பட்ட நிலையில் “எப்படியாவது போரை நிறுத்துங்கள், இங்கே நாங்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுகிறோம்” என்று துயரக்குரல் எழுப்பினர், ஈழத் தமிழர். முத்துக்குமார் தீக்குளிப்பும், வழக்குரைஞர்கள் போராட்டங்களும் தமிழகத்தில் ஈழ ஆதரவு உணர்வலைகளை ஏற்படுத்தின. முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தையும் மாணவர்கள், வழக்குரைஞர்கள் போராட்டங்களையும் போர்க்குணமிக்கவையாக மாற்றியதில் பு.மா.இ.மு., ம.க.இ.க. தோழர்களின் பாத்திரம் முதன்மையானதாக இருந்தது.

பு.மா.இ.மு. தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கில் சாலை மறியலில் இறங்கி, போலீசு கைது முயற்சியை முறியடித்தனர். முத்துக்குமார் உடலடக்கத்தை அரசியலற்றதாக நடத்தும்படியான போலீசின் கோரிக்கையை தமிழினவாதக் குழுக்கள் ஏற்ற நிலையில், ம.க.இ.க. பு.மா.இ.மு., தோழர்கள் தலையிட்டு அதை அரசியல் ரீதியிலானதாக்கினர். பு.மா.இ.மு., தோழர்கள் சிங்கள இராணுவ வெறியின் கொடூரங்களை சித்தரிக்கும் காட்சிகளோடு முத்துக்குமார் இறுதி ஊர்வலம் அரசியல் எழுச்சியோடு நடந்தது.

அதன்பிறகும், ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தையும் அழித்தொழிக்கும் பயங்கரவாதப் போரை சிங்கள இனவெறி அரசோடு கூட்டுச் சேர்ந்து நடத்திய இந்தியாவின் சதிச் செயலை எதிர்க்காமல், ஈழப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வு காணுமாறு இந்திய அரசிடமே கெஞ்சிக் கேட்கும் அடையாளப் போராட்டங்களை மட்டும் நடத்திவந்தன, தமிழினவாதக் குழுக்கள். ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., முதலிய புரட்சிகர அமைப்புகள் மட்டுமே ஈழத் தமிழர் ஆதரவு போர் நிறுத்தக் கோரிக்கையோடு, இந்தியாவின் சதிச் செயலை எதிர்த்த தொடர் பிரச்சார இயக்கத்தைத் தமிழகமெங்கும் நடத்தி வந்தன. ஈழப் போர் நிறுத்தத்திற்காகப் பல பத்தாயிரம் துண்டறிக்கைகளையும் பிரசுரங்களையும் சுவரொட்டிகளையும் வெளியிட்டு, பிரச்சாரக் குழுக்களைக் கொண்டு ரயில்களிலும் பேருந்துகளிலும் பிரச்சார இயக்கங்களைத் தமிழகம் தழுவிய அளவில் தொடர்ந்து நடத்தின. ஆனால், தமிழினக் குழுக்களோ, 2009 நாடாளுமன்றத் தேர்தல்களில் “ஜெயா- பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் போர்நிறுத்தம் ஏற்படும், இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்ற மயக்கத்தில் மாணவர்களையும் மக்களையும் மூழ்கடித்தனர்.

2009 தமிழினப் படுகொலைக்குப் பின் அடுத்த நான்காண்டுகளில் தமிழக மாணவர்களிடையேயும் பொது மக்களிடையேயும் பெரிய அளவு எழுச்சி எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. பெரும்பாலும் ஈழ ஆதரவு இயக்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் பங்கேற்ற போராட்டங்கள் மட்டுமே நடந்தன. இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று முள்ளிவாய்க்கால் போரில் பிரபாகரனோடு விடுதலைப் புலிகள் கூண்டோடு அழிக்கப்பட்டது கண்டு பிரமை தட்டிப் போயிருந்த தமிழினக் குழுக்கள், “பிரபாகரன் கொல்லப் படவில்லை; பிரபாகரனோடு விடுதலைப் புலிகள் மீண்டும் வருவார்கள்; சிங்கள வெறியர்களைப் பழி தீர்ப்பார்கள்” என்று புளுகி வந்தார்கள்.

ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு., பெ.வி.மு., ஆகிய அமைப்புகள் மட்டுமே ஈழப் போரின் இறுதி நாட்களின் உண்மைகளைச் சொன்னதோடு, போர்க் குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிப்பது, ஈழ விடுதலைப் போராட்டம் தொடருவது ஆகியவற்றுக்காக மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்பும் தீர்வை முன்வைத்து செயல்படுகின்றன.

உண்மை இவ்வாறு இருக்கையில், முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைகள் நடந்து கிட்டத்தட்ட நான்காண்டுகளுக்குப் பிறகு வந்த “மாணவர் போராட்ட நிர்ப்பந்தம் காரணமாகத்தான் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவு என்று வேறு வழியில்லாமல் காட்டிக்கொள்கிறீர்கள். அல்லது ஆதாயம் அடைவதற்காக இப்படி நடிக்கிறீர்கள்” என நம்மைப் பார்த்துக் கூறுவது பச்சைப் பொய் தவிர வேறென்ன? முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்கு பிரபாகரன், புலிகள் மட்டுமல்ல; தமக்குரிய பங்கை மூடி மறைப்பதற்காகவும், அதைச் சொல்லும் நமது வாயை மூடுவதற்காகவும் தமிழினவாதக் குழுக்கள் இவ்வாறு அவதூறு செய்கின்றன. ஆனால், அவர்கள் கனவு பலிக்காது.

மேலும், “ஈழ ஆதரவு மாணவர் போராட்டம்” என்பது எமது பு.மா.இ.மு. தலைமையிலான “ஈழத் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி”யையும் உள்ளடக்கியதுதான். விமான நிலைய முற்றுகை, ரயில்வே தலைமை அலுவலக முற்றுகை உட்பட சென்னை, கோவை, திருச்சி எனத் தமிழகமெங்கும் அவ்வமைப்பு நடத்திய போராட்டங்கள் எல்லாம் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவு என்று வேறு வழியில்லாமல் காட்டிக் கொள்ளும் அல்லது ஆதாயம் அடைவதற்காக இப்படி நடிப்பு என்று சொல்வதன் மூலம் அவற்றில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களைத்தான் அவர்கள் அவமானப்படுத்துகிறார்கள்.

– ஆசிரியர் குழு.
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________

 1. புலிகள் பாசிஸ்டுகள் என்றால் ராஜபக்ஷே மீதான வரையறை என்ன …..
  ஹிட்லர் ,முசோலினியும் ,பிரபாகரனும் ஒன்ற ??????????????

  ஒரு தேசிய இன விடுதலைக்கான பட்டளிவர்க்க சர்வாதிகார கட்சியின் வரையறை என ஸ்டாலின் கூறுவது

  ஏகாதிபத்தியத்தின் வரவு செலவு திட்டத்தில் லாபமா நசட்டமா என்பதை பொறுத்தே அந்த தேசிய இன விடுதலைக்கான ஆதரவு
  என்று கூறுகிறார் ..
  தேசிய இன விடுதலைக்கான ஆயுத போராட்டத்தில் …மற்ற ஆயுத போராட்ட குழுக்களின் அழித்தொழிப்பு மற்றும் சேர்ப்பு என்பது எப்போது இருக்க கூடிய நிகழ்வு …

  புலிகள் மீது ராணுவ நடவடிக்கைளும் ,முதலாளிகளை நம்பியதிலும் தவறு இருந்தாலும் ……..எதிர் அளவிற்க்கான பாசிஸ்டுகள் என்ற விமர்சனம் ……………..
  மிகவும் மோசமானதாகவே கருதுகிறேன் …………………………………………..

  • 24 மணி நேரத்தில் இஸ்லாமியர்கள் இடத்தை காலி செய்ய வேண்டும் என கட்டளையிட்டதும் பள்ளிவாசலில் குழந்தைகள் முதல் கொண்டு நிராயுதபாணியாக தொழுகை நடத்திக் கொண்டு இருந்தவர்கள்ளை சுட்டுக் கொன்றதை பாஸிசம் என்று சொல்லாமல் ஜனநாயகம் என சொல்லலாமா தானிஷ் தோழர்

 2. தேவையான ஒரு பதிவு சமயத்தில் வினவின் ஆதரவாளர்களுக்கே சில விஷயங்களில் கேள்வி எழுகிறது அதே போல சிலர் பொய்யான செய்தியின் ஊடாக குழப்பங்களை ஊதிவிடுகின்றனர். சமீபத்தில் அப்படி கேட்ட ஒரு அவதூறு ம.க.இ.க காரர்கள் கேசரி பர்மாறும் கல்யாணத்துக்கு போக மாட்டாங்க அவர்களை பொருத்த்வரை அது மேட்டுக்குடி உணவாம் என்பது

 3. மகஇக-வுக்கு எதிராக இந்த அவதூறுகளை வாரியிறைக்கும் அரசியல் காளான்களில் முதலிடம் வகிப்பது மே–17 இயக்கத்தினர். பெ.ம போன்ற பழைய பெருச்சாளிகளிடம் ஒரு சோர்வு நிகழ்வது போல தெரிகிறது. தியாகு, சுபவீ போன்றவர்கள் இத்தகைய கீழ்மையான செயல்பாடுகளில் இறங்கவில்லை. அவர்களிடம் அமைப்பு மீது ஒரு மரியாதை இருக்கிறது. சில உதிரிகளும் அமைப்பை தாக்குவதில் முன்நிற்கிறார்கள்.

  திருமுருகன் காந்தி, உமர் சென்னை போன்றவர்கள் காரணமற்ற வெறுப்பை பொழிகிறார்கள். ஜெயலலிதா இப்போது தமிழினவாதிகள் மீது எடுக்கும் நடவடிக்கைகள் முன்பு கருணாநிதி செய்ததை காப்பியடித்து செய்வதாக திருமுருகன் காந்தி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏதோ இவர்கள் கருணாநிதியின் முந்தைய ஆட்சி காலத்தில் பிறந்தவர்களாக நடிக்கிறார்கள்.

  சாதாரணமாக ஒரு அரங்கு கூட்டத்தில் பேசியதற்காக சுபவீ, நெடுமாறன், ஷாகுல் ஹமீது மற்றும் மருத்துவர் தாயப்பன் போன்றவர்கள் பொடா சட்டத்தில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டனர். அப்போது ஜெயலலிதா அளித்த பேட்டியில், தமிழ், தமிழன் என்று பேசுபவர்களை விடமாட்டேன் என்று எகத்தாளமாக பேசினார்.

  இவர்களுடைய தமிழீழக் கோரிக்கைக்கு மகஇக ஆதரிக்கும் தன்னுரிமைக் கொள்கை எந்த வகையில் எதிராக உள்ளது என்பதை இவர்களால் சொல்ல முடியுமா? தமிழீழம் என்ற இந்த ஒற்றை காரிய செயல்பாட்டாளர்கள் தமிழக மக்கள் மற்றும் இந்தியாவின் பிற பகுதி மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் எதை பற்றியாவது தமிழீழம் அளவுக்கு வேகமாக செயல்பட்ட உதாரணத்தை தர இயலுமா?

  அவர்கள் தளங்களில் பின்னூட்டம் போடுபவர்கள் அப்பட்டமான இனவெறியை துப்புகிறார்கள். ஒருவர் மலையாளிகள் எல்லாம் கொலையாளிகள் என்கிறார். இவற்றை எல்லாம் ரசிக்கிறார்கள்.

  • நன்றி புது நிலா …வினவிடம் பதிலை எதிநன்றி புது நிலா …வினவிடம் பதிலை எதிர்பார்ப்போம் ர்பார்ப்போம்

 4. பாரியும் கேள்விகளுக்கு மேம்போக்கான பதிலாகவே இந்த கட்டுரை தோன்றுகிறது.. உங்கள் கொள்கையில் முரண்பாடு உள்ளதாக கூரபடுள்ளதிர்க்கு என்ன பதில் தோழரே !!!! மேலும் உங்கள் தீர்வுகள் ஆகாயத்தில் கால் வைப்பதாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளதே !!

  உங்களிடம் இருந்து நீண்ட அல்லது ஒரு சரியான பதிலை எதிர்பார்க்கும் ஒரு சராசரி தமிழ் பேசும் தமிழன் …

  • முதல்ல கட்டுரையை முழுக்க படியுங்கள் நண்பரே, பிறகு எது மேம்போக்கு, என்ன மேம்போக்கு என்று குறிப்பாக கேள்வி கேளுங்கள், மற்றபடி சாபமிடுவது போல பேசுவதெல்லாம் பண்டைய தமிழ் புலவர் மரபு, கொஞ்சம் நவீன காலத்துக்கு வாருங்கள்!

   • தோழரே !!! அது மிக நீண்ட கட்டுரை …ஒருமுறை வசித்து விட்டு, உங்கள் கட்டுரையை பார்த்தால் , ஒரு சில குறிப்புகளுக்கு மட்டும் நீங்கள் பதிலளித்து உள்ளது போல் தோன்றுகிறது ..சாபம் எல்லாம் விடவில்லை ..அந்த கட்டுரையை படித்துவிட்டு ஏதோ வினவு தரப்பு சரியாக பதிலளிக்கவில்லை என தோன்றியது …

    மீண்டும் அதை படித்துவிட்டு என்னுடைய கேள்விகள் இருந்தால் , கேள்வியோடு வருகின்றேன்… எதிரி என்றோ , சாமியார் என்றோ பார்க்க வேண்டாம் தோழரே ..

    • பாலாஜி உங்களை ஏன் எதிரியாக பார்க்க வேண்டும்? மீண்டும் உங்கள் புரிதலில் தவறு உள்ளது. கீற்று கட்டுரைக்கு பதிலாக இந்த புதிய ஜனநாயகம் கட்டுரை வரவில்லை. இது இணையத்தில் பொதுவாக பேசும் தமிழினவாதிகளின் அவதூறுகளுக்கு பதில் சொல்லும் கட்டுரை. மேலும் கீற்று கட்டுரை ஏற்கனவே வெளிவந்த புதிய ஜனநாயகத்தின்
     ஈழம்: மாணவர் எழுச்சியில் ஒளிந்துகொள்ளும் துரோகிகள், பிழைப்புவாதிகள்! எனும் கட்டுரைக்கு பதில் என்ற பெயரில் வந்த உளறல். கீற்று கட்டுரையின் தரம் குறித்து அறிய வேண்டுமென்றால் நீங்கள் இந்த இணைப்பில் உள்ள புதிய ஜனநாயகத்தின் கட்டுர்ரையை படித்து விட்டு கேள்வி கேட்க வேண்டும். எந்த கட்டுரைக்கு எந்த கட்டுரை பதில் என்ற புரிதல் உங்களிடம் இல்லை என்பதை மீண்டும் வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறோம். அரசியல் விவாதம் அர்த்தமுள்ள வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி விமரிசிக்க வேண்டியிருக்கிறது. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இப்போது சரியாக வரிசைக்கிரமாக கட்டுரைகளை படித்து விட்டு கேள்விகள் இருந்தால் குறிப்பாக விளக்கி கேட்கவும் நன்றி.

     • சரிதான் சகா ….வினவின் கட்டுரை தொடர்ந்து படித்து வருகின்றேன் …கட்டுரையின் வரிசையை தவற விட்டு விட்டேன்.. பாரியின் கட்டுரையில் அவரின் \\அந்த அடிப்படையில்தான் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்து போவதையும், ரஷ்யாவிலிருந்து போலந்து பிரிந்து போவதையும் மார்க்ஸ் ஆதரித்தார். அதே நேரத்தில் செக்மக்கள், தென் ஸ்லாவியர்களின் பிரிவினையை எதிர்த்தார். இதே அடிப்படையில்தான் போலந்து பிரிந்து போவதை எதிர்த்த லெனின் நார்வே பிரிந்து போவதை ஆதரித்தார்\\

      மார்க்ஸ் மற்றும் லெனினின் தனி நாடு பற்றிய உண்மையான கருத்துதான் என்ன ? மேலும் அவர்களின் கருத்துகள் எப்படி ஈழத்தில் தற்போதைய நிலைமைக்கு ஒத்துபோகும் ?

      ஆனால் தோழர் மருதையன் பேட்டியில் ” இன ரீதியிலான பிரிதல் சாத்தியமில்லை” என்பது போல பேசியதாக நினைவு…மேலும் அவர் சிங்கள உழைக்கும் வர்கத்தையும் சேர்த்து போராட வேண்டும் என்றும் கூறியுள்ளார் …ஆனால் இது பாரி சொல்லவது போல் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது..செய்திகளை பார்க்கும் பொது , சிங்களம் பேசும் ஒருவரும் தமிழர்களுக்கு ஆதரவு தருவது போல் தோன்றவில்லை …மேலும் தமிழர்களை அவர்கள் ஒடுக்குவது அவர்களின் ரத்தத்தில் ஊறிய்து போல் தெரிகிறது..இது பற்றிய தங்களுடைய கருத்து என்ன ?

      மேலும் , ” இந்த உரிமை உலகத் தமிழர் அனைவருக்குமான உரிமை அல்ல. ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் இனத்துக்குள்ள இந்த உரிமையை, புலம் பெயர்த்து பல்வேறு நாடுகளிலும் அகதிகளாகவோ, குடியுரிமை பெற்றவர்களாகவோ வாழ்கின்ற மக்கள், தம் எதிர்காலம் குறித்து முடிவு செய்வதற்கான உரிமையை இங்குள்ள தமிழர்கள் எப்படித் தம் கையில் எடுத்துக் கொள்ள முடியும்? அந்த உரிமையை யார் கொடுத்தது? இதற்கும் இந்திய பெரியண்ணன் தனத்துக்கும் என்ன வேறுபாடு?” என்று.”…இது உங்கள் கருத்து என்றால் , வாக்கெடுப்புக்கு நீங்கள் எதிரியா ??

      அந்த கட்டுரை முழுவதும் , ம க இ க , “ஒன்றுபட்ட இலங்கைக்கு அதரவு என்று அர்த்தம் வருவது போல் சித்தரிக்கப்பட்டு உள்ளது … வினவை படித்த மட்டில் எனக்கு அப்படி தோன்றவில்லை ..பாரியின் கட்டுரை முழுமையாக இல்லை ..மேல உள்ள கேள்விகள் என்னது …நன்றி..

      நெல்லை பாலாஜி

 5. னிஙள் தமிழின துரொகி தான். அதை எப்படி நிங்கள் மரைத்தலும் அதுவெ உண்மை. எந்த விளக்கம் கொடுதலும். அல்லது மர்க்சியதிலிருந்து விவரம் கொடுத்தாலும் நீஙள் தமிழின துரொகி தான். அதர்கு விளக்கம் வென்டுமா? கெலுஙகள். விளக்குகின்ட்ரென் பிரகு

  • நீங்கள் யார்? துரோகிகளை ஹோல்சேலில் விற்பனை செய்பவரா? என்ன விளக்கம் கொடுத்தாலும் துரோகி என்றால் நிச்சயம் நீங்கள்தான் துரோகிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்பவராக இருக்க வேண்டும். வியாபாரம் பரவாயில்லையா?

 6. ஈழம் : ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டங்களின் பங்கு மகத்தானது.

  திரு மாணிக்கம்,நீங்கள் தமிழின நண்பனா? தமிழினத்திற்கு இதுவரை என்ன செய்துள்ளீர்கள்?

  புதுநிலா,தோழர் பாரி – பு.ஜ.குழப்பமடைந்துள்ளதாக நான் கருதவில்லை.
  ”எண்பதுகளில் ஏற்படுத்திய எழுச்சியை தமிழக வீதிகளில் ஏற்படுத்துவோம்”என்ற முழக்கம் ஒன்றே அதற்கு சான்று.

  மேலும்,இந்த புரட்சிகர அமைப்பினர் தான், மாணவர் போராட்டத்தை வீச்சாகவும்,வீரியமுடையதாகவும் கொண்டு சென்றனர்.ஒரு புரட்சிகர அமைப்பு ஆற்ற வேண்டிய பாத்திரம் அது.

  • கீற்று, பாரியுடன் எனக்கு உடன் இல்லை, மேலும் நெல்லை பாலாஜியின் கருத்திலும் இல்லை.

   நான் சுட்ட விரும்பியது அந்த கட்டுரையிலிருந்த தவறான கண்ணோட்டத்தைதான்.

   பாரி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் எழுதிய கட்டுரை காலம் தாழ்த்தி தவறான

   கண்ணோட்டத்தை ஏற்படுத்த எழுதப்பட்டுள்ளது எனக்கருதுகிறேன்.

   ஈழம்: மாணவர் எழுச்சியில் ஒளிந்துகொள்ளும் துரோகிகள், பிழைப்புவாதிகள்!

   இந்தக்கட்டுரை சரி,எனக்கு எந்தக்குழப்பமும் இல்லை.

  • நன்றி புதுநிலா.

   முள்வேலி : ம க இ க -வின் 12 ஆவது பாடல் ஒலிப்பேழை.

   எங்கே என் நிலம் எங்கே…. எங்கே என் இனம் எங்கே…

   அனைவரும் கேட்டுப்பாருங்களேன்.

 7. முள்வேலி : ம க இ க -வின் 12 ஆவது பாடல் ஒலிப்பேழை.

  எங்கே என் நிலம் எங்கே…. எங்கே என் இனம் எங்கே…

  கேட்டுப்பார்த்தேன்,இசை நன்றாக உள்ளது.

  வினவு, ம.க.இ.க வின் அனைத்து பாடல்

  ஒலிப்பேழைகளையும் பதிவேற்றினால் நல்லது என கருதுகிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க