முகப்புஉலகம்ஈழம்எதிர்கொள்வோம் ! - 6

எதிர்கொள்வோம் ! – 6

-

“ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும்” என்ற பெயரில் சமரன் வெளியீட்டகம் ஒரு நூல் பதிப்பித்திருக்கிறது. அதில் ஈழம், விடுதலைப் புலிகள் தொடர்பான ம.க.இ.க.வினர் நிலைப்பாடுகள் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆதாரபூர்வமான அந்நூலுக்கு ஏன் இன்னமும் பதிலளிக்கவில்லை என்ற கேள்வி சமரன் குழு சீடர்களால் எழுப்பப்பட்டது. ஆனால், அந்த விமர்சனங்களுக்கான பதில்களை வேறெங்கும் தேடத் தேவையில்லை. சமரன் குழு முந்தைய காலங்களில் எழுதி, அக்குழுவின் அரசியல் பாமரத் தனம், சுயமுரண்பாடு, சந்தர்ப்பவாதம் காரணமாக இந்நூலிலும் இடம் பெற்றுள்ள கருத்துக்களிலேயே காணலாம். இந்த வகையிலான எமது பதிலை மூன்று பகுதிகளாக புதிய ஜனநாயகம் இதழ்களில் எழுதியிருந்தோம்.

இந்தியா அமைதிப் படை
விடுதலைப் புலிகளுடனான போரில் தோற்றுப் போய், சென்னை – துறைமுகத்தில் வந்திறங்கும் இந்திய அமைதிப்படை. (உள்படம்) அப்படையின் தலைமைத் தளபதி ஏ.எஸ்.கல்கத்.

அவற்றின் தொடர்ச்சியாக, விடுதலைப் புலிகளைப் பற்றி முந்தைய காலங்களில் சமரன் குழு எழுதி, தற்போது பரிசீலனையில் உள்ள அதன் நூலில் இடம்பெற்றுள்ள வாக்குமூலங்களை, கருத்துக்கள் – மதிப்பீடுகளை ஆதாரத்துடன் 2013, அக்டோபர் புதிய ஜனநாயகம் இதழில் தொகுத்துக் கொடுத்திருந்தோம். அவற்றின் சாரம் பின்வருமாறு:

‘விடுதலைப் புலிகள் மாற்றுப் போராளிக் குழுக்களிடம் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகாரப் போக்குகளையும் பாசிச முறைகளையும் கடைப்பிடித்தார்கள், தடைசெய்தார்கள்; ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்போருக்கும் மற்றும் பிற ஜனநாயக சக்திகளுக்கும் கூட அவர்கள் ஜனநாயக உரிமைகளை மறுத்தார்கள்; தங்கள் செல்வாக்கிற்குட்பட்ட பிரதேசங்களில் மக்களுக்கு ஜனநாயக ஆட்சிக்கு மாறாகப் பழைய ஆளும் வர்க்க சக்திகளைச் சார்ந்தும் தனது படைபலத்தைக் கொண்டும் இலங்கை பாசிச ஆட்சிக்கு மாறாக, ஒரு இராணுவ அதிகார வர்க்க ஆட்சி முறையைச் செயல்படுத்தினர்; ஒரு படையின் ஆட்சி அல்லது அனைத்து அதிகாரத்தையும் தனது ஏகபோகமாக்கிக் கொள்வது என்ற பாசிசக் கொள்கையைப் பின்பற்றினார்கள்; புலிகள் அமைப்பின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகாரப் போக்குகளை எதிர்ப்பதற்கு ஆயுதம் ஏந்தும் உரிமை இருக்க வேண்டும்’ என்று முன்பு தானே எழுதிய இந்தக் கருத்துகளை சமரன் குழு இன்னும் விலக்கிக் கொள்ளவும் இல்லை, மறுத்துச் சொல்லவும் இல்லை. பரிசீலனையிலுள்ள தனது நூலிலும் அவற்றைப் பதிப்பித்து, அந்தக் கருத்துகளை அக்குழு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

11-eelam-2இப்படி விடுதலைப் புலிகளைப் பற்றித் தானே எழுதியவற்றை மூடிமறைத்துக் கொண்டு அல்லது அவற்றுக்கு மாறாக, பின்வருமாறும் சமரன் குழு எழுதியுள்ளது : “விடுதலைப் புலிகள் தேசிய விடுதலைக்காகப் போராடுவதை அங்கீகரித்து, ஜனநாயகத்திற்காக அதனுடன் போராடுவது என்ற – ஐக்கியம், போராட்டம் என்ற – அணுகுமுறையைக் கடைப்பிடிக்காதது போன்ற புரட்சிகர ஜனநாயக சக்திகளின் ஆழ்ந்த தவறும் (விடுதலைப் போரில் அதன் தோல்விக்கு) ஒரு காரணமாகும். அதற்காக ஈழ விடுதலைப் போர் கொடுத்துள்ள விலை மிகமிக அதிகமானது. வரலாற்றிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பும், பிற புரட்சிகர ஜனநாயக சக்திகளும், ஒரு சரியான பாடத்தைக் கற்கவேண்டும்” என்கிறது, சமரன் குழு.

இது என்ன நியாயம்! இது இரட்டை நிலை இல்லையா? தன்னைத் தவிர வேறு யாரும் எந்த அமைப்பும் ஈழத்தில் இருக்கவும் கூடாது, இயங்கவும் கூடாது என்று தடை விதித்து, கொன்று குவித்த புலிகளிடம் ஐக்கியம், போராட்டம் என்ற அணுகுமுறையை எப்படிக் கடைப்பிடிக்க முடியும்! (மனிதக் கறி உண்ணும் புலிகளுடன் எப்படி ஒரே கூண்டில் நட்புடன் வாழ்வது என்று சமரன் குழு அறிந்த ‘அஹிம்சை உபாய’த்தை காந்தி கூட போதிக்கவில்லையே!) அப்படிக் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் ஈழத்தின் துரோகிகள் என்று இப்போதும் புலிகளும் புலி அபிமானிகளும் சாதிக்கின்றனர்.

இல்லை, இது பிரபாகரனின் இரத்தத்திலேயே ஊறியதுதான் என்பதற்கும் எம்மிடம் ஆதாரம் உண்டு! 1986 ஜூன் மாதம் பிரபல ஆங்கில மாதமிருமுறை ஏடான ‘இந்தியா டுடே’ பிரபாகரனை பேட்டி கண்டது. அதிலுள்ள ஒரு பகுதியை இங்கே தருகிறோம்.

கேள்வி: தமிழீழத்திற்கானதாக என்ன அரசியல் அமைப்பை நீங்கள் கருதுகிறீர்கள்?

பிரபாகரன்: அது தமிழீழத்தின் ஒரு சோசலிச அரசாக இருக்கும். மேலும், மக்களால் ஆதரிக்கப்படும் ஒரு தனி அரசியல் கட்சி மட்டும் அங்கிருக்கும். நான் பல கட்சி ஜனநாயகத்துக்கு எதிரானவன். அந்த ஒரு கட்சி ஆட்சி மூலமாகத்தான் ஈழத்தைத் துரிதமாக நாங்கள் முன்னேற்ற முடியும். ஒரு சோசலிச அமைப்பில் மக்களுடைய தேவைகள் மிக முக்கியமானவை.

கேள்வி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை வைத்திருப் பீர்களா?

பிரபாகரன்: இல்லை. மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒரே கட்சி மட்டும் உள்ள யுகோஸ்லாவியாவில் உள்ளதைப் போன்றதொரு பாணியிலான மக்கள் ஜனநாயகம் இருக்கும்.

கேள்வி: ‘டெலோ’ மீது ஒரு யுத்தத்தை நீங்கள் தொடுப்பதற்கான காரணங்கள் என்ன? தீவிரவாதி களிடையேயான ஒற்றுமையின்மை உங்கள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தும் என்று நீங்கள் கருதவில்லையா?

பிரபாகரன்: எங்கள் போராட்டத்தில் ஒரு ஒருமைப்பட்ட அணுகுமுறையை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். எங்களுக்குள் நிலவும் எந்த ஒற்றுமையின்மையும் தமிழ் இயக்கம் முழுவதையும் பலவீனப்படுத்தும். எனது கருத்தின்படி போராட்டத்துக்குத் தலைமையேற்க ஒரே ஒரு தீவிரவாதக் குழு மட்டுமே இருக்க வேண்டும். மேலும், சிறீலங்கா இராணுவத் தாக்குதல்கள் பலவற்றை எங்கள் புலிகள் மட்டுமே முறியடிக்க முடிந்தது. ஒரு ஒருமைப்பட்ட தனி இயக்கத்தோடு போரிடுவது சிறீலங்கா இராணுவத்துக்கு ஆபத்தானதாக இருக்கும். இப்போது ஒரே ஒருமைப்பட்டதாக புலி இயக்கம் இருக்கிறது

கேள்வி: ஆனால், பேச்சு வார்த்தையின் மூலம் உங்களால் அய்க்கியத்தைச் சாதிக்க முடியாதா?

பிரபாகரன்: அவர்களுக்குள்ளாகவே மிக மோசமாகப் பிளவுபட்டிருக்கும் போது பிற குழுக்களோடு நாங்கள் எப்படி எதையும் விவாதிக்க முடியும்.

கேள்வி: பிற குழுக்களை ஒழிப்பதுதான் ஒரு ஒருமைப்பட்ட அணுகுமுறைக்கான ஒரே வழியா?

பிரபாகரன் : எந்த இயக்கத்தையும், நாங்கள் ஒழித்து விடவில்லை, ‘டெலோ’வுக்கு ஒரு பாடம் மட்டுமே புகட்டினோம். ‘டெலோ’வினர் எங்கள் புலிகள் தலைவர்களைக் கொன்று கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பதிலடி தராமலிருந்தால் புலி இயக்கமே சிறுகச்சிறுக இல்லாமல் போயிருக்கும். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியோடு பிரச்சனைகள் இருந்தபோதும் நாங்கள் பொறுமையோடு இருந்தோம் என்பதை நீங்களே பாராட்டுவீர்கள். ‘டெலோ’ விவகாரத்தில் கூட கிட்டத்தட்ட 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டாலும் 400 ‘டெலோ’ போராளிகளைக் கைது செய்து, ஆயுதங்களையும், கருவிகளையும் கைப்பற்றவே செய்தோம். உண்மையான எதிரிக்கு எதிராகப் போராட முடியாத இவர்கள் ஆயுதங்களை ஏந்த வேண்டியதில்லை என்பதுதான் ஒரே கொள்கை. எங்கள் அணிகள் இலங்கை இராணுவத்தைச் சிதறடித்துக் கொண்டிருக்கையில், இந்தப் பிற குழுக்கள் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். விடுதலை இயக்கத்தின் முழுக்கட்டுப் பாட்டையும் எடுத்துக் கொள்வது எங்களுக்கு நல்லது என்று யாழ்ப்பாண மக்கள் சொன்னார்கள்.”

இந்தப் பகுதி இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1987, பிப்ரவரி புதிய ஜனநாயம் இதழிலேயே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ஆக, இதிலிருந்து தெரிவதென்ன? மாற்றுப் போராளி அமைப்புகள் துரோகிகளாகிவிட்டதால் புலிகள் அவர்களை அழித்தார்கள் என்பது உண்மையல்ல; ஈழத்தில் தமது/தனது ஒரே ஏகபோக அதிகார ஆதிக்கம் மட்டுமே இருக்கவேண்டும் என்பது பிரபாகரனுடைய ஆரம்ப காலத்திலேயே இலட்சியமாக, கொள்கையாக இருந்தது என்பதுதான் உண்மை!

***

ழப் போரின் பின்னடைவுகளுக்கான காரணங்களை 2009 மே மாதமே நாம் எழுதியவற்றையே நான்காண்டுகளுக்குப் பிறகு காப்பி அடித்துப் பின்வருமாறு சமரன் குழு எழுதுகிறது.

“விடுதலைப் புலிகள் இயக்கம், அமெரிக்கா மீதிருந்த மாயையும், இந்திய அரசின் மீதான குருட்டு நம்பிக்கையும் கஸ்பர் சாமியார் போன்ற துரோகிகளை நம்பியதும்தான் தோல்விக்கும், தலைமையின் அழிவிற்கும் காரணமாகி விட்டது.” (சமரன் குழுவின் நூல், பக்.xviii)

“விடுதலைப் புலிகள் இயக்கத்தின் குட்டி முதலாளித்துவ அரசியல் நிலைப்பாடு ஏகாதிபத்தியம் பற்றிய மாயைகளுக்கு அடித்தளமாக இருந்தது. அதுவே விடுதலைப் போரில் தோல்விக்கும் தலைமையின் அழிவிற்கும் காரணமாகிவிட்டது.” (சமரன் குழுவின் நூல், பக். xx)

ஈழ விடுதலைப் போரின் தோல்விக்கும் தலைமையின் அழிவிற்கும் சமரன் குழுவே அந்நூலில் கூறும் காரணங்களையும் தொகுத்துக் கொடுத்த நாம், “புலிகளைப் பற்றி இவ்வாறு சமரன் கூறுவதற்கும் ம.க.இ.க. கூறி வருவதற்கும் என்ன வேறுபாடு என்பதைச் சமரன் குழுவின் தோழர்கள்தாம் விளக்கவேண்டும் !”என்றும் கேட்டிருந்தோம்.

ஆன்டன் பாலசிங்கம், பிரேமதாசா
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஆண்டன் பாலசிங்கம் (இடது) மற்றும் அதிபர் பிரேமதாசா (கோப்புப் படம்).

ஆனால், தவிடு தின்னும் அரசனுக்கு முறம் பிடிக்கும் அமைச்சரைப் போல சமரன் குழுத் தலைமைக்குத் தாம் மிகவும் தகுதியான சீடர்கள் தாம் என்று அக்குழுவின் தோழர்கள் காட்டிவருகிறார்கள். ஈழப்போரின் தோல்விக்கான காரணங்களாக மேற்படி கருத்துக்களை கூறும் அதேவேளையில், சமரன் குழுவினர் ஈழவிடுதலைப்போரில் இறுதிவரை சமரசமின்றிப் புலிகள் போராடியதாகப் பழைய ஒப்பாரியையே திரும்பத் திரும்பப் பாடுகின்றனர். அதையே அவர்களின் சீடர்களும் கோரசாகப் பாடுகின்றனர்.

“ஈழ விடுதலைப்போர் இறுதியில்” எப்படி முடிந்தது? ஈழ விடுதலைப் போரின் இறுதியில், சிங்களப் பாசிச இராணுவத்தால் பல்லாயிரம் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த ஒரு பாதியைத்தான் தமிழினவாதிகளும் சமரன் குழு உட்பட புலி விசுவாசிகளும் பேசுகிறார்கள். பிரபாகரனும் அவர் தலைமையிலான புலிகளும் இறுதிவரை சமரசமின்றிப் போரிட்டுக் கொல்லப்பட்டார்களா; (அப்படி நடந்திருந்தால் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் பாராட்டலாம்.) இல்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வாக்குறுதிகளை நம்பி சிங்களப் பாசிச இராணுவத்திடம் சரணடைந்து கொடூரமாகக் கொல்லப்பட்டார்களா என்ற மீதியை இவர்கள் பேச மறுக்கிறார்கள்! பிரபாகரனும் அவர் தலைமையிலான புலிகளும் இறுதிவரை சமரசமின்றிப் போரிட்டு, போர்க்களத்தில் இருந்து தப்பித் தலைமறைவாயிருக்கின்றார்கள், ஒருநாள் திடீரென்று தோன்றி மீண்டும் ஈழப் போரைத் தொடருவார்கள் என்று தமிழினவாதிகளும் புலி விசுவாசிகளும் கூறுவதைச் சமரன் குழுவினரும் நம்புகிறார்களா? அதனால்தான், ஈழ விடுதலைப்போரில் இறுதிவரை சமரசமின்றிப் புலிகள் போராடியதாகப் பழைய ஒப்பாரியையே திரும்பத் திரும்ப பாடுகின்றனரோ!

திறனாய்வுக்கு எடுத்துக் கொண்ட சமரன் குழுவினரின் நூலிலேயே உள்ள அரசியல் பாமரத்தனமான, தர்க்க நியாயமற்ற, சுயமுரண்பாடான வாதங்களைக் காண மறுக்கும் சமரன் குழுவின் சீடர்களும் “கல்லானாலும் மண்ணாலும் மரமானாலும் தங்களையே நம்புவோம்” என்னும் பக்தர்களைப்போல, “ஈழ விடுதலைப் போரில் இறுதிவரை சமரசமின்றிப் புலிகள் போராடி”யதாகப் பழைய ஒப்பாரியையே பாடுகின்றனர். அவர்களிடம் மீண்டும் கேட்கிறோம். இந்திய உளவுப் படை “ரா” விடமும், எம்.ஜி.ஆரிடமும் கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்றுக்கொண்டு, ஆயுதங்களை ஒப்படைத்து, சரணடைந்தும், “புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம்” என்ற முழக்கத்தைக் கைவிட்டு, “தன்னுரிமைக்கே சுயாட்சி” என்ற பொழிப்புரை கொடுத்தும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வாக்குறுதிகளை நம்பி சிங்களப் பாசிச இராணுவத்திடம் சரணடைந்தும் – இப்படித்தானே ஈழ விடுதலைக்காகப் புலிகள் இறுதிவரை சமரசமின்றிப் போராடினார்கள்! இதைத்தான் சமரன் குழுவினரும் அதன் சீடர்களும் போற்றுகிறார்கள். இவ்வாறே ம.க.இ.க. வினரும் அதன் தோழர்களும் செய்யவில்லை என்று தூற்றுகின்றனர்!

ஈழ விடுதலைக்காகப் புலிகளைப் பற்றிய ம.க.இ.க. வினர் கூறும் ஆதாரங்களையும் கருத்துக்கள்-மதிப்பீடுகளையும் எடுத்தாண்டு கொண்டே, ம.க.இ.க. வினர் எழுதியவற்றில் இருந்து ஓரிரு மேற்கொள்களை எடுத்துக்காட்டி அவற்றைத் திரித்து, அவற்றில் இல்லாத தமது சொந்த வியாக்கியானங்கள் கொடுத்து, ம.க.இ.க. வினர் மீது சமரன் குழு அவதூறும் செய்கின்றனர்.

“இந்தியாவுக்கும் இலங்கைக்கும் எதிராக விடுதலைப் புலிகள் இராணுவ வலிமை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜே.வி.பி.யை அடக்கி ஒடுக்குவதில் இலங்கை அரசும் இராணுவமும் பெற்றுள்ள வெற்றி, விடுதலைப் புலிகளுடனான பேரத்தில் அதற்குப் பலமளிப்பதாக உள்ளது. இந்நிலையில் புலிகளை நிராயுதபாணியாக்காமலேயே, அதன் ஆயுதத்தை அங்கீகரித்தே ஈழத்துக்கு மாகாண சுயாட்சியுடன் கூடிய அதிகாரத்தை அளிக்க இலங்கை அரசு முன்வரலாம். இதை ஏற்பது ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை விட்டுத் தருவதுதான். அநேகமாக புலிகள் அதற்குத் தயாராய் இருப்பதாகவே தெரிகிறது.” ( புதிய ஜனநாயகம், ஜனவரி 16-31, 1990)

இந்த மேற்கோளை எடுத்துக் காட்டி, அதன் சொற்றொடர்களைப் பிரித்து எழுதியுள்ளது; பிறகு பின்வருமாறு சமரன் குழு தனது சொந்தப் பொழிப்புரையையும் அவதூறையும் எழுதுகிறது:

“இலங்கை அரசுடன் விடுதலைப் புலிகள் இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்டதால், இலங்கை அரசு தனது இராணுவ பலத்தைப் பெருக்கிக் கொண்டு ஜே.வி.பி. அமைப்பை அடக்குவதில் வெற்றிபெற முடிந்தது. அல்லது, இதை மிகவும் வெளிப்படையாகவும் கொச்சையாகவும் சொன்னால், ஜே.வி.பி.யைக் காட்டிக் கொடுத்து விட்டு விடுதலைப் புலிகள் இலங்கை அரசுடன் பேரம் பேசி, போர் நிறுத்த ஒப்பத்தம் செய்துகொண்டார்கள்.

“இந்திய அரசாங்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்ததற்குக் கூறும் குற்றச்சாட்டுகளை விட, பு.ஜ., விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது சுமத்தும் இக்குற்றச்சாட்டுகள் கடுமையானதும் கேவலமானதும் ஆகும். எனவே, அழுத்தம் திருத்தமாக மறுத்துரைக்க வேண்டியவையாகும், கண்டனத்துக்குரியதாகும்.” (சமரன் குழுவின் நூல், பக். 229)

சமரன் குழுவின் நம்பிக்கைக்குரிய அபிமானிகளே, உங்கள் மனச்சாட்சிப்படி இப்போது சொல்லுங்கள்! கேடுகெட்ட இட்லரின் கோயபல்ஸ்-கோயரிங்க் கும்பல் கூட இப்படி ஒரு பொய்யைச் சொல்லத் துணியுமா? மேலே சமரன் குழு மேற்கோளிட்டுக் காட்டிய பு.ஜ. வின் வாசகத்துக்கு சமரன் குழு அளிக்கும் பொருள் நேர்மையானதுதானா? எந்தக் கேடுகெட்ட முட்டாளாவது இப்படியொரு பொருள் கூறுவானா, சமரன் தலைமையைத் தவிர?

ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்.
“அமைதிப் படை” என்ற பெயரிலான இந்தியாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஜே.வி.பி இயக்கத்தினர், புத்தபிட்சுக்களை இணைத்துக் கொண்டு தென்னிலங்கையில் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

பித்தலாட்டக்காரர்களா! “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் எதிராக விடுதலைப் புலிகள் இராணுவ வலிமை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜே.வி.பி.யை அடக்கி ஒடுக்குவதில் இலங்கை அரசும் இராணுவமும் பெற்றுள்ள வெற்றி விடுதலைப் புலிகளுடனான பேரத்தில் அதற்குப் பலமளிப்பதாக உள்ளது” என்றுதானே பு.ஜ. எழுதியுள்ளது. இதற்கு, “இலங்கை அரசுடன் விடுதலைப் புலிகள் இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்டதால், இலங்கை அரசு தனது இராணுவ பலத்தைப் பெருக்கிக் கொண்டு ஜே.வி.பி. அமைப்பை அடக்குவதில் வெற்றிபெற முடிந்தது” என்றா பொருள்? (இதை எழுதியவருக்குத் தாய்மொழி தமிழ்தானா?)

இதற்கு, “…..இதை மிகவும் வெளிப்படையாகவும் கொச்சையாகவும் சொன்னால் ஜே.வி.பி.யைக் காட்டிக் கொடுத்துவிட்டு விடுதலைப் புலிகள் இலங்கை அரசுடன் பேரம் பேசி, போர் நிறுத்த ஒப்பத்தம் செய்துகொண்டார்கள்” என்று பொருள் கொள்ளமுடியுமா? (இதை எழுதியவருக்குத் தாய்மொழி தமிழ் அல்ல என்பது உறுதியாகிறது!)

சமரன் குழு தனது மேற்படி சொந்தப் பொழிப்புரையையும் அவதூறையும் நியாயப்படுத்துவற்காக அடுக்கடுக்காகப் பின்வரும் வரலாற்றுப் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது: “இந்திய ஆக்கிரமிப்புப் படை இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையின் மீது விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசா அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. இதன் விளைவாக இந்திய ஆக்கிரமிப்புப் படை இலங்கையை விட்டு வெளியேறியது. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் ஓய்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தைத்தான் பு.ஜ. மேலே எடுத்துக்காட்டப்பட்டது போல விமர்சனம் செய்கிறது. பல நேரங்களில் விடுதலைப் புலிகள் பற்றிப் பு.ஜ. வெளியிடும் கருத்துகளும் சோ, ‘ரா’ வெளியிடும் கருத்துகளும் ஒரே மாதிரி இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.” (சமரன் குழுவின் நூல், பக். 230) ( விடுதலைப் புலிகள் பற்றிய சமரன் குழுவின் கருத்துகளும்தான் மேலே நாம் ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டியபடி பு.ஜ. கருத்துகளைப் போல ஒரே மாதிரி இருக்கின்றன. அதிலிருந்து சமரன் குழு வெளியிடும் கருத்துகளும் சோ, ‘ரா’ வெளியிடும் கருத்துகளும் ஒரே மாதிரி இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூற முடியுமா!)

உண்மையில் அப்போது நடந்தது என்ன? இந்திய இராணுவத்தின் ஈழ ஆக்கிரமிப்பையும் பாசிச ஜெயவர்த்தனேயின் அரசையும் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, ஜே.வி.பி.யும் கூடக் கடுமையாக எதிர்த்தது. ஆனால், இந்திய இராணுவத்தின் ஈழ ஆக்கிரமிப்புக்கு ஈழத் தமிழர்களின் இனப் போராட்டமும் எல்லா ஈழப் போராளிக் குழுக்களும் காரணம் என்று பழி போட்டும், ஜெயவர்த்தனே அரசின் துரோகத்தால் வடக்கு-கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தை இந்திய ஆக்கிரமிப்பு இராணுத்திடம் ஜெயவர்த்தனே அரசு பறிகொடுத்து விட்டதாகவும் பிரச்சாரம் செய்து சிங்களப் பேரினவாதத்தின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதில் வெற்றியும் பெற்றது. இதோடு, இலங்கையின் அரசியல், பொருளாதார நெருக்கடிகளைப் பயன்படுத்திக் கொண்டு, அடுத்தடுத்துப் பல போர்க்குணமிக்க போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டு, அதேசமயம் தனிநபர் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியது. இவற்றின் வளர்ச்சிப் போக்கில் நகர்ப்புற ஆயுதந்தாங்கிய எழுச்சியின் மூலம் இலங்கை அரசைத் தூக்கியெறியும் அளவுக்கும் தயாரானது.

ஜே.வி.பி. தென்னிலங்கையிலும், இந்திய ஆக்கிரமிப்பு இராணுத்துக்கு எதிரான போரில் பல வெற்றிகளை ஈட்டிய விடுதலைப் புலிகள் வடக்கிலும் இலங்கை அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்துவிட்ட நிலையில், “கலந்தாலோசனை, பொதுக்கருத்தை உருவாக்குவது, சமரசம் காண்பது ஆகிய மூன்றின் மூலம் நாட்டில் அமைதியை நிலை நாட்டுவது” என்ற முழக்கங்களை முன்வைத்துத்தான் 1988 டிசம்பரில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் பிரேமதாசா போட்டியிட்டார். இருந்தாலும் 50.43 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்று சொற்ப வித்தியாசத்தில் பிரேமதாசா வெற்றி பெற்றார். அதிபர் தேர்தலில் ஜே.வி.பி.யோ மூன்றாவது இடத்தைப் பிடித்து.

1989 ஜனவரி இரண்டாம் நாள், கண்டியில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியிலேயே ஜே.வி.பி., புலிகள் ஆகிய இரு அமைப்புகளையும் அமைதி வழிக்கும் பேச்சுவார்த்தைக்கும் வரும்படி பிரேமதாசா அழைப்பு விட்டார். நாடு முழுவதும் இருந்த அவசரநிலையை 1989 ஜனவரி பன்னிரண்டாம் நாள் விலக்கிக் கொண்டார்; 1800 ஜே.வி.பி. யினரை விடுதலை செய்தார். சிறிது கால அமைதிக்குப் பிறகு ஜே.வி.பி. தனது அரசியல் பிரிவான டி.ஜே.வி. மூலம் பொதுக் கடையடைப்பு, பொதுத் தொழில் வேலைநிறுத்தம், பொது அரசியல் வேலை நிறுத்தங்களை நடத்தியது.

சிங்கள, தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் பன்னிரண்டாம் நாள், பிரேமதாசா நாடு முழுவதுமாக இலங்கை இராணுவத்தின் தற்காலிகப் போர் நிறுத்தம் ஒன்றைத் தன்னிச்சையாக அறிவித்தார். அதேசமயம், பிரேமதாசா நிர்ப்பந்தத்தின் பேரில் இந்திய இராணுவமும் போர் நிறுத்தத்தை அறிவித்தது. ஆனால், விடுதலைப் புலிகளோ, இந்தியா ஆக்கிரமிப்புப் படையை விலக்கிக் கொள்ளாதவரை போர்நிறுத்தத்தை ஏற்க முடியாது என்று பகைமை நிறைந்த ஒரு திறந்த கடிதம் வெளிட்டனர்.

இருந்ததாலும், இலங்கையின் இராணுவ அமைச்சர் ரஞ்சன் விஜயரத்தனே புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அரசாங்கத்தின் சார்பில் ஒரு அறிக்கை விட்டார். 1989 ஏப்ரல் பதினைந்தாம் நாள், புலிகள் தமது இலண்டன் தலைமையகத்தில் இருந்து, பிரேமதாசாவின் அழைப்பை ஏற்பதாகவும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யும் படியும் ஒப்புதல் செய்தியை அனுப்பினர்.

1989 ஏப்ரல் மாதம், கொழும்பு புறநகர் கோவில் விழா ஒன்றில் கலந்துகொண்ட பிரேமதாசா, இந்திய இராணுவத்தை மறுப்பின்றி மூன்று மாதங்களுக்குள் விலக்கிக் கொள்ளும்படி கோரினார்; தொடர்ந்து, அதை விரைவுபடுத்தும்படி இந்தியத் தூதர் மூலம் இராஜீவுக்கு ஒரு கடிதமும் அனுப்பினார். இதைச் சாதகமான நடவடிக்கையாகப் புலிகள் பார்த்தனர்.

சில நாட்களிலேயே இலங்கை விமானம் மூலம் ஆண்டன் பாலசிங்கமும் அவரது மனைவி அட்லியும் கொழும்புவுக்கும், அடுத்து பிரபாகரனைச் சந்திக்க வன்னிக் காடுகளுக்கும் பயணித்தனர். அதேபோல பிரபாகரனின் மனைவி-மக்கள் புலிகளின் வன்னித் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

1989 மே முதல் வாரம், கொழும்பின் பிற விடுதிகளை மூடிவிட்டு, ஹில்டன் ஐந்து நட்சத்திர விடுதியில் புலிகளின் மெய்க்காப்பாளர்களுடன் பாலசிங்கம், யோகி, லாரன்ஸ், அட்லி ஆகியோர் அடங்கிய தூதுக்குழு தங்கியது. மே நான்காம் நாள், பிரேமதாசாவின் சொந்த வீடான சுசரிதாவில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. அரசுத் தரப்பில் ஹமீதும் பிரேமதாசாவும் ரஞ்சன் விஜயரத்தனேவும் கலந்து கொண்டனர்.

11-eelam-5இந்திய இராணுவத்தை முற்றிலும் வெளியேற்றுவது; அது உருவாக்கிய வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாக சபையையும் அமைச்சரவையையும் கலைத்து, புதிய தேர்தல்களை நடத்தி, புலிகளின் ஆதரவு பெற்ற நிர்வாக அமைப்பை உருவாக்குவது; இந்திய இராணுவமும் ஈழத் துரோகிகளும் அமைத்துள்ள தமிழ்த் தேசிய இராணுத்தை ஒழிப்பது; அதற்காகப் புலிகளுக்கு பிரேமதாசா அரசு நிதியும் நவீன ஆயுதங்களும் வழங்குவது; இலங்கை இராணுவம் தனது முகாம்களுக்குள்ளேயே முடங்கி இருப்பது ஆகிய கோரிக்கைகளைப் புலிகள் முன்வைக்க, பிரேமதாசா அரசும் ஏற்றுக்கொண்டது.

முறைப்படியான ஒப்புதல் பெறுவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டங்களும் நடந்தன. புலிகளும் அக்கூட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்று பிரேமதாசா வலியுறுத்தியதன் பேரில், முக்கியமாக “தமிழ் ஈழம்” என்ற பொருளைக் குறிக்கும் சொல் எதுவும் இடம் பெறாத வகையில் “விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி” என்ற பதிவு பெற்ற அரசியல் கட்சி உருவாக்கப்பட்டது.

தொடர்ந்து 14 மாதங்கள் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு நபர்கள் பங்கேற்புடன் பேச்சுவார்த்தைகள் நடந்தன. அவற்றினூடாக புலிகளின் தமிழீழத் தனியரசு அல்லது ஈழத் தமிழர்களின் தன்னுரிமை அல்லது திம்புப் பேச்சுவார்த்தைகளில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் புலிகள் முன்வைக்கவில்லை. ஆனாலும், இரண்டு கோரிக்கைகளில் இணக்கங்காண முடியாமற்போயின. அவை:

1) இலங்கை அரசியல் சட்டத்திற்கு ஜெயவர்த்தனே அரசு செய்த ஆறாவது திருத்தம் நீக்கப்பட வேண்டும்.

(அதாவது, இலங்கை நாட்டுக்குள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இன்னொரு தனி அரசமைப்பதை பிரச்சாரம் செய்யும், நிதியளிப்பது அல்லது ஊக்குவிக்கும், அதற்காக வாதாடும் நபர்களின் குடியுரிமை, சொத்துரிமை, நாடாளுமன்றப் பங்கேற்பு உரிமை போன்றவை பறிக்கப்படும்.)

2) வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாக சபையையும் அமைச்சரவையையும் கலைத்து, புதிய தேர்தல்களில் விடுதலைப் புலிகள் அல்லது “விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி” போட்டியிடவும், நிர்வாக அமைப்பில் பங்கேற்கவும் அனுமதிப்பது.

புலிகளின் இவ்விரு கோரிக்கைகளையும் ஆரம்பத்தில் பிரேமதாசா ஒப்புக்கொண்டாலும், இவற்றை நிறைவேற்றுவது இருவருக்குமே பாதகமானதாகவும் சிக்கலானதாகவும் இருந்தன.

முதலாவதாக, இலங்கை அரசியல் சட்டத்திற்கான ஆறாவது திருத்தத்தை நீக்குவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பலம் பிரேமதாசாவின் கட்சிக்கு இல்லை; மேலும் அதற்கு அவரது கட்சிக்குள்ளாகவே எதிர்ப்பிருந்தது. இரண்டாவதாக, அடிப்படையில் அவரே ஒரு சிங்களப் பேரினவாதி. இந்திய இராணுவ வெளியேற்றத்தின் மூலம் ஜே.வி.பி.யிடமிருந்து கைப்பற்றியிருந்த தனது சிங்கள ஆதரவை இழந்து விடும் பயம் அவருக்கு இருந்தது

வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாக சபையை இலங்கை அரசு கலைப்பதில் புலிகள் அதிக அழுத்தம் கொடுத்தாலும், மைய அரசு அவ்வாறு செய்வது இராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் 13-வது அரசியல் சட்டப்பிரிவின்படியான அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது; அதாவது, தகுந்த காரணமின்றி மாகாண நிர்வாக சபையைக் கலைக்கவும் முடியாது அல்லது அதிகாரப் பகிர்வுக்கு எதிராக13-வது அரசியல் சட்டப் பிரிவை நீக்கும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும். அவ்வாறு செய்து வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாக சபைக்குப் புதிய தேர்தல்கள் மூலம் புலிகளோ, அவர்களின் ஆதரவாளர்களா ஆட்சிக்கு வந்தால் இதையே மைய அரசு பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தைப் பறித்துக் கொள்ள முடியும்.

ஆனாலும், இந்திய இராணுவம் கட்டிக் கொடுத்த ஈழத் துரோகப் போராளி அமைப்புகள் தலைமையிலான தமிழ்த்தேசிய இராணுவத்தை அழித்தொழித்து ஆயுதங்களைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டு, வடக்கிலும் கிழக்கிலும் பல தளங்களை அமைத்துக் கொண்டனர். இராணுவ பலத்தையும் பெருக்கிக் கொண்டனர்.

இதற்கிடையே, தென்னிலங்கையிலும் அரசியல் நிலைமைகள் வேகமாக மாறின. பிரேமதாசாவின் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஜே.வி.பி. நிராகரித்தது. அது அரசை வீழ்த்தி, அதிகாரத்தைக் கைப்பற்றும் ‘புரட்சியை’த் தொடுக்கப்போவதை அறிந்த பிரேமதாசா அரசு, ஜே.வி.பி.மீது எதிர்ப்புரட்சித் தாக்குதலை ஏவி, தலைமையைக் கொன்றொழித்தது. எல்லாம் சதித்தனமாகவே நடந்தன.

11-eelam-6இந்த நிலையில், அதாவது பிரேமதாசா அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மேற்சொன்ன ஒரு சிக்கலான நிலையை எட்டின. இந்திய இராணுவம் வெளியேறியவுடன் வடக்கு- கிழக்கு மாகாணத்தில் யார் அதிகாரத்தைக் கையிலெடுப்பது என்ற உடனடிப் பிரச்சினை முன்னுக்கு வந்த போது, முன்சொன்ன காரணங்களால் இரண்டு தரப்புமே பேச்சுவார்த்தைகளை முன்நகர்த்திச் செல்லாமல் பிசு பிசுத்துப் போக விட்டனர். ஈழத் தமிழர்களின் நியாயமான சுயநிர்ணய உரிமையை ஏற்பதற்கு மாறாக, மீண்டும் ஈழத்தின் மீது தனது இராணுவ ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக பிரேமதாசா அரசு போர்தொடுத்தது. (இந்த வரலாற்றுத் தொகுப்புக்கான ஆதாரங்கள்: தமிழ் நேசன், தமிழ்வீக் முதலிய இணையத்தளங்கள்)

ஈழத்தை விட்டு இந்திய இராணுவம் வெளியேறிய நிலையில், ஜே.வி.பி.யை பிரேமதாசா அரசு அடக்கி ஒடுக்கி விட்ட நிலையில், அன்றைய அரசியல் போக்குகள் குறித்து பு. ஜ. எழுதியது; அதிலிருந்து ஒரு மேற்கோளை எடுத்துத் திரித்து, பு. ஜ. மீது அவதூறு செய்வதற்காகவே முன்பு சொன்னவாறு தனது சொந்த வியாக்கியானங்களை சமரன் குழு எழுதியிருக்கிறது.

இராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தையும், இந்திய இராணுவ ஆக்கிரமிப்பையும் ஆரம்பம் முதலே எதிர்த்த பிரேமதாசா, இந்திய இராணுவ வெளியேற்றம், புலிகள் மற்றும் ஜே.வி.பி. யுடன் போர் நிறுத்தம் ஆகிய வாக்குறுதிகளை 1988 டிசம்பரில் நடந்த அதிபர் தேர்தலிலேயே முன்வைத்தார். தேர்தலில் வென்று பதவியேற்ற 2 வாரங்களிலேயே தன்னிச்சையாக அவற்றைச் செயல்படுத்துவதிலும் இறங்கினார். புலிகள் – பிரேமதாசா பேச்சுவார்த்தைக்கு முன்பாகவே இந்திய இராணுவ வெளியேற்றத்துக்கான கெடுவைத்தார். புலிகள், ஜே.வி.பி. யுடன் போர் நிறுத்தம் அறிவித்து, இந்திய இராணுவமும் போர் நிறுத்தம் செய்ய வைத்தார், பிரேமதாசா.

ஆனால் புலிகளோ, பிரேமதாசாவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை முதலில் ஏற்கமறுத்து, பகைமையான ஒரு திறந்த மடலை வெளியிட்டனர். பிறகுதான் அந்த அழைப்பையே புலிகள் ஏற்றனர். அதன் பிறகு நடந்த புலிகள் – பிரேமதாசா பேச்சுவார்த்தையிலும் கூட ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை. இராஜீவுடன்தான் ஒரு படைவிலக்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், சமரன் குழுவோ புலிகளின் புத்திசாலித்தனத்தால் ஒரு உடன்பாட்டு ஒப்பந்தம் ஏற்பட்டு, அதன் விளைவாக இந்திய இராணுவம் வெளியேறியதாகவும் அந்த ஒப்பந்தத்தை பு.ஜ. விமர்சித்து ஒரு செயல்தந்திரம் வைத்ததாகவும் அந்தச் சமயத்தில் சமரன் குழு அந்த ஒப்பந்தத்தை வரவேற்று வேறொரு செயல்தந்திரம் வைத்ததாகவும் – இப்படி அடுக்கடுக்காகப் புளுகிக்கொண்டே போகிறது.

‘பு.ஜ. அந்த ஒப்பந்தத்தை ஒரு துரோகச் செயல் என்று நேரடியாகக் குற்றஞ்சாட்ட முடியாததால், புலிகள் சுயநிர்ணய உரிமையை விட்டுக்கொடுத்து மாகாண சுயாட்சித் தீர்வை ஏற்றுக் கொள்ளத் தயாராய் இருப்பதாய் ஒரு கற்பனைக் காரணம் கற்பித்து ஆரூடம் கூறுகிறது, பேரம்,பேரம் என்று புலம்புகிறது; மேலும் பிரேமதாசா அரசு தொடுத்த யுத்தத்துக்கு எதிராகப் புலிகள் யுத்தம் தொடுத்ததன் மூலம் பு.ஜ.வின் பொய்யையும் புனைசுருட்டையும் புலிகள் தூள்தூளாக்கி விட்டார்கள்’ என்கிறது சமரன் குழு. (சமரன் குழுவின் நூல், பக்.231)

சரி, அப்படியே இருக்கட்டும்! ஆனால், பிரேமதாசா அரசுக்கு எதிராகப் புலிகள் போர் தொடங்கிய பிறகு சமரன் குழு என்ன எழுதியது? அதையும் இதேநூலில் காணலாம்:

“இந்த யுத்தத்தில் பிரேமதாசா அரசை எதிர்த்துப் புலிகள் அமைப்பு போரிட்டாலும் மீண்டும் அது இந்திய அரசுடன் சமரசம் செய்துகொண்டு, அதைத் தலையிடக் கோருமா அல்லது பிரேமதாசா அரசுடன் சமரசம் செய்துகொண்டு ஈழத் தமிழகத்தின் ஆளும் வர்க்கமாக மாறிச் சீரழிந்துவிடுமா என்ற ஐயம் தோன்றுகிறது.

ஏனெனில், சமரசத்திற்கான சமூக வேர்கள் உள்ளன. இந்தவேர்கள் உள்ளவரை இப்பிரச்சினை எழவே செய்யும். எனவே இந்திய அரசு, இலங்கை அரசு, ஈழத்தமிழ் தேசிய இன விடுதலை இயக்கம் மற்றும் சர்வதேசிய நிலைமை ஆகியவற்றைப் பரிசீலனை செய்வோமானால் இதை அறியலாம்.” (பக்.172)

புலிகள், இந்திய-இலங்கை அரசுகளுடன் சமரசம் செய்து கொண்டு ஈழத்தின் ஆளும் வர்க்கமாகச் சீரழிந்து விடும் என்ற ஐயம் தோன்றுவதாகக் கூறிவிட்டு அதற்கான சில “சமூக வேர்களைக் கண்டுபிடித்து”க் கூறுகிறது. அவை, இந்திய, இலங்கை நிலைமைகள் சமரசத்திற்கான தூண்டுதல்களைக் கொண்டிருக்கின்றன. ஈழப்போரில் புலிகள் தனித்துப் போரிடுவது சாதகமானது என்றாலும், புலிகளின் ஜனநாயக மறுப்பு, எதேச்சதிகாரம், பாசிசக்கொள்கை காரணமாக அப்போரில் பங்கேற்க வேண்டிய பிற புரட்சிகர சக்திகளும் ஜனநாயக சக்திகளும் பார்வையாளர்களாக ஒதுங்கி நிற்கிறார்கள். குறும் தேசியவாதம் காரணமாக அனைத்து ஜனநாயக சக்திகள்,மலையக மக்கள், மற்றும் சிங்கள உழைக்கும் மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொள்ளத் தவறியது. இவற்றோடு ஏதாவது ஒரு வழியில் உதவியைப் பெறுதல் அல்லது இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் உள்ள முரண்பாட்டை எப்படியாவது பயன்படுத்திக் கொள்வது என்ற கொள்கையின் அடிப்படையில் அகில இந்திய, தமிழ் மாநில அரசாங்கங்களுடனும் அரசியல் கட்சிகளுடனும்விடுதலைப் புலிகள் அமைப்பு உறவுகொள்ளும் கொள்கையும் ஈழத் தமிழினம் விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்பதற்குத் தடையையும் எதிரிகளுடன் சமரசம் செய்துகொண்டு பணிந்துபோனதற்கான வாய்ப்பையும் உருவாக்குகிறது.” (பக்.177)

“ஆக,இந்த யுத்தத்தில் பிரேமதாசா அரசை எதிர்த்துப் புலிகள் அமைப்பு போரிட்டாலும் மீண்டும் அது இந்திய அரசுடன் சமரசம் செய்துகொண்டு, அதைத் தலையிடக்கோருமா அல்லது பிரேமதாசா அரசுடன் சமரசம் செய்துகொண்டு ஈழத் தமிழகத்தின் ஆளும் வர்க்கமாக மாறிச் சீரழிந்துவிடுமா என்ற ஐயம் தோன்றுகிறது” என்று சமரன்குழு எழுதினால் அது புரட்சிகரமான அரசியல் மதிப்பீடு!

ஆனால், “இந்நிலையில் புலிகளை நிராயுதபாணியாக்காமலேயே, அதன் ஆயுதத்தை அங்கீகரித்தே, ஈழத்துக்கு மாகாணச் சுயாட்சியுடன் கூடிய அதிகாரத்தை அளிக்க இலங்கை அரசு முன்வரலாம். இதைஏற்பது ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை விட்டுத் தருவதுதான். அநேகமாக புலிகள் அதற்குத் தயாராய் இருப்பதாகவே தெரிகிறது.” என்று பு. ஜ. சொன்னால் அது “கடுமையானதும் கேவலமானதும் ஆகும். எனவே அழுத்தம் திருத்தமாக மறுத்துரைக்க வேண்டியவையாகும், கண்டனத்துக்குரியதாகும்,” “ஆரூடமாகும்” என்கிறது, சமரன் குழு.

சமரன் குழுவின் சீடர்களே சிந்தியுங்கள்! கல்லானாலும் மண்ணாலும் மரமானாலும் தங்களையே நம்புவோம்” என்னும் பக்தர்களைப்போல இருக்காதீர்கள்!
______________________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________________

 1. Why are you writing this kind of articles now?
  Why dont you write an article about the muslims’ part in the Ealam struggle?
  Can you write? If you write truth about that, I will blindly follow you on this matter….

 2. முருகன்,
  விமர்சனத்திற்கு விமர்சனம் எழுதுவதல்ல தீர்வு என்பதால் அதற்கு இலக்கு என்ன? என்னளவில் விவாதிக்க ஆர்வம் கொண்டே கீழ்க்கண்ட கேள்விகளை வைக்கிறேன். இதில் நேரடியான பதில்களை முதலில் இட்டு பிறகு விளக்கத்திற்கு வருவீர்கள் என்று கருதுகிறேன். அப்போதுதான் என்னைப் போன்றவர்கள் புரிந்துகொள்ள முடியும்.
  1) ஸ்டாலின் அவர்களால் எழுதப்பட்ட நூலான “மார்க்சியத்தின் அடிப்படை அம்சங்கள்” என்ற நூலில் “தேசிய இனப் பிரச்சினை” என்ற தலைப்பில் எழுதப்பட்ட நிலைபாடுகளை ஒவ்வொருவரும் ஏற்கிறீர்களா இல்லையா என்பதை மார்க்சிய ரீதியாக தெளிவுப்படுத்த வேண்டும்.
  2) இன முரண்பாடு இலங்கையில் பகைமுரண்பாடாக இருந்தது, தற்போதும் தொடர்கிறது என்கிறீர்களா? மறுக்கிறீர்களா?
  3) தனி நாடு கோரிக்கையை மார்க்சிய லெனினிய வாதிகள் எப்போது ஏற்கலாம் எப்போது ஏற்கக் கூடாது என்பதற்கு வரையறைகள் உண்டா இல்லையா? அந்த வரையறையை என்னவென்று மார்க்சிய ஆசான்கள் துணைகொண்டு விளக்கமுடியுமா?
  4) காஷ்மீர் பிரிவினைக்கு போராடிக்கொண்டிருக்கிற இயக்கங்களை வைத்து அது தனிநாடு என்பதோ இல்லை என்பதோ தீர்மானிப்பீர்களா? இல்லை சமூக ஆய்விலிருந்து முடிவுசெய்து தீர்மானிப்பீர்களா?
  5) காஷ்மீர் மக்களுக்காக, வடகிழக்கு மாநில மக்களுக்காக என்று பல்வேறு போராட்டங்களை இதர இந்திய பகுதியில் உள்ள மக்கள் அல்லது இயக்கங்கள் போராடுகிறது என்பதை வைத்து காஷ்மீரி மக்களுக்கு தனி நாடு குறித்து தீர்மானித்தார்களா ம.க.இ.க.?
  6) தேசிய இனம் என்பது மத அடிப்படையை கொண்டதாக ஏற்கமுடியுமா?
  7) புலிகளின் கடந்த காலங்களை கருணாநிதிப் போல் பேசிவிட்டு அவர்களின் பிற்கால மாற்றங்களை ஏற்க மறுப்பது நேர்மையற்ற சந்தர்ப்பவாதமா? நேர்மையான சந்தர்ப்பவாதமா?
  8) புலிகள் பாசிச இயக்கமாகவே பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். ஒரு தேசிய இன விடுதலைக்கு போராடும் பாசிச தன்மை கொண்ட அமைப்புகளை நிபந்தனைக்கு உட்பட்டு ஆதரிப்பீர்களா இல்லை மறுப்பீர்களா?
  (எடுத்துக்காட்டாக உமர் முக்தார், வீரபாண்டிய கட்டபொம்மன், ஜான்சிராணி, வாஞ்சிநாதன், தற்போதைய காலத்தில் அமெரிக்க எதிர்ப்பினை வெளிப்படுத்திய சதாம் உசேன், வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் ஆப்கான் தலிபான்கள், ஈரான், சிரியா போன்றவை) (அமெரிக்கா நிதி உதவி கொடுத்து வழிநடத்திக் கொண்டிருக்கக் கூடிய, அரபு நாடுகளில் ஜனநாயகத்தின் பேரால் போராடிக் கொண்டிருக்கும் எடுபிடி அமைப்புகளின் கலகங்களை அரபு வசந்தம், மக்கள் புரட்சி, அது போல் இந்தியாவில் எழுப்ப வேண்டும் என்று கூறுவது தனிக்கதை – அது வேறொரு நேரத்தில் விவாதிக்கலாம்)
  9) தேசிய இனப் பிரச்சினையில் ம.க.இ.க. எடுத்த நிலைபாடு
  சமரன் பக்கம் 218
  1. “தேசிய இனப் பிரச்சினை என்பது தேசிய முதலாளித்துவத்தின் முழக்கம் தானே தவிர பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல” (16-31 ஜனவரி 1990, பு.ஜ. பக்கம் 11)
  2. ஒரு தேசத்துக்கொ நாட்டுக்கோ எதிராக ஏகாதிபத்தியம் ‘நேரடி’ ஆதிக்கம் என்று வரும்போதுதான் அந்த முழக்கத்தை முதன்மையாக எடுத்துக்கொள்கிறோம். (16-31 ஜனவரி 1990, பு.ஜ. பக்கம் 11)
  3. ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பிரிந்து போவது சரியா இல்லையா என்ற விவகாரத்தில் நாம் நடுநிலை வகிக்கிறோம். (16-31 ஜனவரி 1990, பு.ஜ. பக்கம் 10)
  தற்போது நான் படித்த இதழில் ஆகஸ்டு 2013 இதழில் பக்கம் 20
  1. பாசிசத்தின் ஆகமோசமான அரசியல் புகலிடம்தான் தேசியம் (என்று பொது நிலைபாடு எடுத்தது)

  இந்தக் கேள்விகளின் பதிலிலிருந்து விவாதத்தினை தொடரலாம். அரசியல் ஆரோக்கியமற்றதாக இருப்பதைவிட அரசியல் விவாதம் ஆரோக்கியமானதாக இருக்கவே விரும்புகிறேன்.

  உங்கள் மறுபதிப்பு விமர்சனத்திற்கு என் மறுபதிப்பு கேள்விகளையும், விளக்கத்தையும் வைக்கிறேன்.

 3. மார்க்சியத்தின் அடிப்படை பிரச்சனைகள்
  – ஸ்டாலின்
  தேசிய இனப் பிரச்சனை

  “ஒரு நாட்டுக்கு உள்ளேயானதாகவும், குறிப்பிடதொன்றாகவும் இருந்த வந்த தேசிய(இன)ப் பிரச்சனையானது, இப்போது ஒரு பொதுப் பிரச்சினையாகவும் சர்வதேசப் பிரச்சனையாகவும் மாற்றப்பட்டது. இத்துடன், காலனிகளையும் சார்பு நாடுகளையும் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள், ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள நடத்தும் உலகப் பிரச்சினையாக மாற்றப்பட்டது”
  “தேச விடுதலை இயக்கங்களில் புரட்சிகர ஆற்றல்கள் பொதிந்திருக்கிறது என்றும், பொது எதிரியான ஏகாதிபத்தியத்தைத் தூக்கியெறிய இந்த ஆற்றல்களைப் பயன்படுத்திக்கொள்ளும் சாத்தியம் உள்ளது என்றும் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கிறது லெனினியம்”
  “… ஒவ்வொரு தேசவிடுதலை இயக்கத்தையும், எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும், ஒவ்வொரு குறிப்பிட்ட வழக்காற்றிலும் பாட்டாளி வர்க்கம் ஆதரித்தே தீரவேண்டும் என்று இதற்குப் பொருள்படாது என்பது உறுதி. ஏகாதிபத்தியத்தைப் பலவீனப் படுத்துவதாக இருக்கக் கூடிய, தூக்கியெறிவதாக இருக்கக் கூடிய தேசவிடுதலை இயக்கங்களைத் தவறாமல் ஆதரிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். அந்த விடுதலை இயக்கமானது, ஏகாதிபத்தியத்தை பலப்படுத்துவதாகவும் பேணிப் பாதுகாப்பதாகவும் இருக்கக் கூடாது என்பதே இதன் பொருள்.”

  “தேச விடுதலை இயகங்களில் மிகப் பெரும்பாலானவை, கேள்விக்கிடமின்றி புரட்சிகரத் தன்மையுடையவையாக இருப்பது எப்படி பிற விசயங்களுடன் தொடர்புடையதாகவும் குறிப்பான இயல்புடையதாகவும் இருக்கிறதோ, அதேபோல குறிப்பிட்ட தேசவிடுதலை இயக்கங்கள் பிற்போக்குத்தன்மை கொண்டவையாக இருப்பதற்கும் சாத்தியம் உண்டு. ஏகாதிபத்திய ஒடுக்குமுறைச் சூழ்நிலையின் கீழ் உள்ள ஒரு தேசவிடுதலை இயக்கத்தின் புரட்சித் தன்மையை தீர்மானிக்க – இயக்கத்தில் பாட்டாளி வர்க்க சக்திகள் இருக்கவேண்டும் என்பதையோ, ஒரு புரட்சிகரமான அல்லது குடியரசுக்கான ஒரு வேலைத் திட்டத்தை அது கொண்டிருக்க வேண்டுமென்பதையோ, அந்த இயக்கம் ஜனநாயக அடிப்படையை உடையதாக இருக்க வேண்டுமென்பதையோ நாம் முன்னிபந்தனையாக்க வேண்டியதில்லை. அப்படிச் செய்வது அவசியமுமல்ல. ஆப்கானிஸ்தானுடைய சுதந்திரத்திற்காக அதன் மன்னர் (எமிர்) போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். அவரும் அவருடைய துணைவர்களும் முடியாட்சிக் கோட்பாடுகளைத் தமது கண்ணோட்டமாகக் கொண்டிருந்த போதிலும், அப்போராட்டம் எதார்த்தத்தில் புரட்சிகரமான போராட்டமாகவே இருக்கிறது. ஏனென்றால் அது ஏகாதிபத்தியத்தை பலவீனப்படுத்துகிறது, உருக்குலைக்கிறது, அதற்குக் குழி பறிக்கிறது.”

  “ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கமானது தனது “சொந்த நாட்டைச்” சேர்ந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, ஒடுக்கப்படும் மக்களின் விடுதலை இயக்கங்களுக்கு நேரடியானதும் தீர்மானகரமானதுமான ஆதரவை வழங்கினாலொழிய, ஒரு பொதுவான உலகப் புரட்சிகர முன்னணியை அமைப்பது சாத்தியமே இல்லை. ஏனெனில், “பிற தேசங்களை ஒடுக்கும் எந்த தேசமும் சுதந்திரமானதாக இருக்க முடியாது. (எங்கெல்ஸ்)
  இந்த ஆதரவின் உள்ளார்ந்த பொருள் என்ன? தேசங்கள் பிரிந்துபோவதற்கான உரிமை வேண்டும். தேசங்கள் சுயேச்சையான அரசுகளாக நீடிக்கும் உரிமை வேண்டும் என்ற முழக்கங்களை உயர்த்திப்பிடிப்பது; அவற்றை ஆதரித்துப் பாதுகாப்பதுடன் நடைமுறைப்படுத்துவது என்பதே”.

  “இது பற்றி லெனின் கூறுவதாவது “வளரும் முதலாளித்துவம் தேசிய(இன)ப் பிரச்சனையில் இரு போக்குகளை அறிந்திருக்கிறது. முதல் போக்கு: தேசிய வாழ்வில் விழிப்புணர்வு அடைதலும் தேசிய இயக்கங்கள் உருவாகி எழுதலும்; தேசிய ஒடுக்குமுறை அனைத்திற்கும் எதிராகப் போராடுதலும் தனி தேசிய அரசுகள் உருவாதலும். இரண்டாவது போக்கு: பொதுவாக பொருளாதார வாழ்வு அரசியல், விஞ்ஞானம், இன்னும் பிறவற்றில் உலகளாவிய ரீதியில் தேசங்களுக்கு இடையிலான எல்லா வகைகளிலுமான ஒன்று கலத்தல்கள் வளர்ச்சியுறுதலும் முடுக்கி விடப்படுதலும்; தேசிய எல்லைகள் நொறுங்கிப் போதல்; மூலதனம் சர்வதேச ரீதியில் ஐக்கியமடைவது உருவாதல்” … ஏகாதிபத்தியத்துக்கோ, இவ்விரு போக்குகளும் சமரசப்படுத்த முடியாத முரண்பாடுகளாக மலைபோல் முன்னிற்கின்றன. ஏனென்றால், காலனிகளைச் சுரண்டாமலும், “பிரிக்க முடியாத முழுமை” என்ற சிறைக்குள் காலனிகளை கட்டாயப்படுத்தி வைக்காமலும், ஏகாதிபத்தியம் நிலைத்திருக்கவோ உயிர்வாழவோ முடியாது. ஏனென்றால், பிரதேசக் கைப்பற்றல்களும் காலனிய ஆக்கிரமிப்புகளும் என்ற வழிமுறையைத் தவிர்த்து, வேறு முறைகளில் தேசங்களை ஒன்றுபடுத்துவதை ஏகாதிபத்தியத்தால் செய்யவே முடியாது. பொதுவாக கூறுவதனால், ஆக்கிரமிப்புகளில் ஈடுபடாத ஏகாதிபத்தியத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாது.
  இதற்கு நேர்மாறாக, கம்யூனிசத்தைப் பொறுத்தவரையில் இந்த இரு போக்குகளும் ஒரே நோக்கத்தின் இரு பக்கங்களே ஆகும். ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து ஒடுக்கப்படும் மக்களை விடுவிப்பது என்பதே அந்த ஒரே நோக்கம். ஏனென்றால், தேசங்கள் ஒன்றின் மீது ஒன்று கொள்ளும் நம்பிக்கை, தேசங்களுக்கு இடையிலான சுயவிருப்ப அடிப்படையிலான ஒப்புதல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே, ஒரே உலகப் பொருளாதாரக் கட்டமைவில் பல தேசங்களைச் சேர்ந்த மக்களின் ஒற்றுமை சாத்தியமாகும் என்பதை கம்யூனிசம் நன்றாக அறிந்திருக்கிறது. “பிரிக்க முடியாத முழுமை” என்ற ஏகாதிபத்தியச் சட்டகத்திலிருந்து காலனிகளைப் பிரிப்பதன் வாயிலாகவும், காலனிகளை சுயேச்சனியான அரசுகளாக மாற்றுவதன் வாயிலாகவுமே, பல தேசங்களை சேர்ந்த மக்களின் சுயவிருப்ப அடிப்படையிலான ஒன்றிணைவை உருவாக்கும் பாதை சாத்தியம் என்பதை கம்யூனிசம் நன்றாக அறிந்திருக்கிறது.”

  “ஒடுக்கும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் சர்வதேசியவாதக் கல்வியில், அழுத்தந்திருத்தமான வலியுறுத்தல் எதுவாக இருக்க வேண்டும்? ஒடுக்கப்படும் நாடுகள் பிரிந்து போவதற்கான உரிமையை அவர்கள் தவறாமல் ஆதரிப்பதாகவும் உயர்த்திப் பிடிப்பதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு செய்யாமல் போனால், சர்வதேசியம் என்பதே இருக்க முடியாது. இத்தகைய பிரச்சாரத்தை மேற்கொள்ளத் தவறும் ஒடுக்கும் தேசத்தைச் சேர்ந்த சமூக – ஜனநாயகவாதிகளை, ஏகாதிபத்தியவாதிகள் என்றும் கயவர்கள் என்றும் கண்டனம் செய்வது நமது உரிமையும் கடமையும் ஆகும். சோசலிசத்தைக் கட்டியமைப்பதற்கு முன்னரே, இவ்வாறு பிரிந்து செல்வதற்கான சாத்தியத்திற்கும் வசதிக்குமான வாய்ப்பு ஆயிரத்தில் ஒரு பங்காக இருந்தாலும்கூட. இது முற்றுமுழுதான ஒரு கோரிக்கையாகும்…”

  மேற்கண்ட இந்த நீண்ட மேற்கோளை ஏன் இடவேண்டிய அவசியம் இருக்கிறது. புலிகள் அமைப்பு எவ்வளவு குறைபாடுகளை கொண்டிருந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட திட்டத்தினை வைக்காது ஒரு குட்டிமுதலாளித்துவ மனோபாவத்துடன் தனது இயக்கத்தினை நடத்தினாலும் கூட அவர்கள் ஈழ விடுதலைக்கு உறுதியாக ஊன்றி நிற்கும்வரையில் என்ற நிபந்தனையடிப்படையில் அதை ஆதரிக்கத் தகுந்தது.

  மீண்டும் இந்த நீண்ட நெடிய ஸ்டாலின் வரையறையை வைக்கிறேன். இதை ஏற்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா என்பதை இன்னும் தெளிவுப்படுத்தாமல், சந்தர்ப்பவாதமாக ஸ்டாலின் வரையறையை காயடித்துக்கொண்டிருக்கிறீர்கள். தேசியம் என்ற வார்த்தையே பிடிக்காத வார்த்தையாகி போனதன் விளைவா என்பது தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் மேற்கண்ட கட்டுரையில் TNMLலின் நிலைபாட்டை வழிமொழிந்திருக்கிறீர்கள். தமிழ் மொழியையும், தமிழராக இருப்பவர்கள் மட்டுமே தமிழ் தேசியத்தையும், தமிழ் ஈழத்தையும் பேசத் தகுதியானவர் என்ற கோட்பாட்டினை வந்தடைந்திருப்பதாக தெரிகிறது. அதிலும் ஒரு நிலையில்லை. ஏனென்றால் ஈழத்தில் ஒன்றுபட்ட இலங்கையினுள் இருந்து போராடி சோசலிசம் வென்ற பிறகுதான் தேசியத்தின் சுயநிர்ணய உரிமைப் பற்றி பேசவேண்டும் என்று கூறுகிறீர்கள். தேசியத்தை மறுத்துக்கொண்டே தேசியத்திற்காக பேசுகிறீர்கள். அதிலும் இனவாத நிலைபாடு, தேசியத்தை மறுக்கும் நிலைபாடு, மரபுவழி தேசியம் பேசும் நிலைபாடு என்று எல்லாம் கலந்த கலவையாக இந்தக் கட்டுரை இருக்கிறது. முதலில் மூலவர்களின் தேசியத்தை குறித்த கோட்பாடும் அதிலும் குறிப்பாக எப்போது பிரிந்துபோகலாம், எப்போது பிரிந்துபோகக் கூடாது என்ற நிலைபாடு குறித்த மூலவர்களின் கருத்தை நீங்கள் ஏற்பதையும், நீங்கள் மறுப்பதையும் குறித்து நேர்மையாக விளக்குங்கல். நேர்மையான சந்தர்ப்பவாதத்தோடு விளக்காதீர்கள்.

 4. //Why dont you write an article about the muslims’ part in the Ealam struggle?//
  எழுத மாட்டார்கள் ஏனென்றால் முஸ்லீம்கள் ஓட்ட நறுக்கி விடுவார்கள் என்ற பயம். 🙂

  • I am here by tell all u that the website VINAVA, the organization MKEK are not fearing about Religious Fundamentalism or Religious terrorism
   For Examples: You can read the essays ………..

   https://www.vinavu.com/2013/12/13/abdul-quader-mollah-executed-for-war-crimes/

   https://www.vinavu.com/2013/08/15/sl-buddhist-attack-on-muslims/

   https://www.vinavu.com/2013/06/14/asgar-ali-engineer-a-tribute/

   https://www.vinavu.com/2013/04/29/contract-islamic-marriages/

   https://www.vinavu.com/2013/01/25/risana-murder-tntj-fundamentalism/

   https://www.vinavu.com/2012/09/14/tourist-broker-shahrukh/

   https://www.vinavu.com/2012/08/22/islamic-fundamentalists-pakistan/

   https://www.vinavu.com/2011/11/22/tntj-basith/

   https://www.vinavu.com/2008/10/03/shakeela/

   sarav said://Why dont you write an article about the muslims’ part in the Ealam struggle?//
   viyasan Said://எழுத மாட்டார்கள் ஏனென்றால் முஸ்லீம்கள் ஓட்ட நறுக்கி விடுவார்கள் என்ற பயம். //

   • குமரன் அண்ணா,

    நீங்கள் தந்த இணைப்புகள் எதுவுமே, எப்படி இலங்கையின் தமிழ்பேசும் முஸ்லீம்கள், தமிழைப் பேசிக் கொண்டே தாம் தமிழர்கள் இல்லை என்கிறார்கள் என்பதைப் பற்றியோ அல்லது சுயலாப நோக்கங்களுக்காக அவர்கள் எப்படி, சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு, சிங்களவர்களுடன் இணைந்து அவர்களின் மொழிவழிச் சகோதரர்களாகிய ஈழத் தமிழர்களின் முதுகில் குத்தினார்கள் என்பதைப் பற்றிய விடயங்களோ அல்ல. அல்லது எவ்வாறு TNTJ ஜெய்னுலாப்தீன் அவர்கள் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கெதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்தார் என்பதைப் பற்றியவையோ அல்ல.

    புலிகள் முஸ்லீம்களுக்கு இழைத்த கொடுமைகள், இலங்கை அரசால் புலிகள் முஸ்லீமகள் மீது நடத்திய தாக்குதல்கள் எனச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையோ நான் நியாயப்படுத்தவில்லை, அதே வேளையில், முஸ்லீம் ஊர்காவல்படையினர் சிங்கள இரனுவத்துடன் இணைந்து பல தமிழ்ப்படுகொலைகளை கிழக்கில் நடத்தினார்கள் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.
    இலங்கை முஸ்லீம்கள் மட்டும் ஈழத்தமிழர்களுடன் இணைந்திருந்தால் இன்று உலகில் தமிழர்களுக்கென ஒரு நாடு பிறந்திருக்கும் என்பது தான் உண்மை. அதைப்பற்றி எல்லாம் வினாவில் பேசமாட்டார்கள் என்பது தான் எனது கருத்தாகும்.

    (இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது: பி.ஜெய்னுலாப்தீன்)
    http://viyaasan.blogspot.ca/2013/02/blog-post_27.html

    (பெரியாருக்கும் பார்ப்பன‌ர்க‌ளுக்கும் பெரிய‌ வேறுபாடில்லை, அவ‌ர்க‌ள் செய்த‌தைத் தான் பெரியாரும் செய்தார் என்கிறார் த‌மிழ்நாடு தெளகீத் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் ஜெய்னுலாப்தீன்.)
    http://viyaasan.blogspot.ca/2013/01/blog-post_6775.html

    (சிங்களவரும் முஸ்லீம்களும் இணைந்து தமிழர்களை வேட்டையாடிய சத்துருக்கொண்டான் படுகொலையின் நினைவு தினம் இன்று.)
    http://viyaasan.blogspot.ca/2013/09/blog-post_10.html

    சிங்களவர்களின் முஸ்லீம் எதிர்ப்பை தமிழ்நாட்டு முஸ்லீம்கள் அடக்கி வாசிப்பதேன்?
    http://viyaasan.blogspot.ca/2013/08/blog-post_13.html

    (சிங்கள இராணுவமும், முஸ்லீம்களும் இணைந்து உடும்பன்குளத்தில் 130 தமிழர்களைப் படுகொலை செய்த 27ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.)
    http://viyaasan.blogspot.ca/2013/02/27.html

    (கிழ‌க்கில் த‌மிழ‌ர்க‌ளுக்கெதிராக‌ முஸ்லீம்க‌ளின் அட்டூழிய‌ம் தொட‌ர்கிற‌து. ……)
    http://viyaasan.blogspot.ca/2013/05/blog-post_10.html

    (இலங்கையில் தமிழர் படுகொலைகளில் தமிழ் பேசும் முஸ்லீம்களின் பங்களிப்பு. ஈழத்தில் தமிழர்களுக்கெதிரான போரில் முஸ்லீம்கள் வெறும் பார்வையாளர்கள் அல்ல தீவிர பங்கேற்றவர்கள்.)
    http://viyaasan.blogspot.ca/2013/02/blog-post_5484.html

    (த‌மிழ‌ர்க‌ள் மீது அப‌க‌ரிப்பு யுத்த‌ம் -‍ சிங்க‌ள‌த்துட‌ன் முஸ்லீம்க‌ளும் கூட்டு.)
    http://viyaasan.blogspot.ca/2013/01/blog-post_24.html

    (இந்திய‌ வீட்டுத் திட்ட‌த்தில் த‌மிழ‌ர்க‌ளுக்கு இழைக்க‌ப்ப‌டும் அநீதி ப‌ற்றி இந்திய‌ தூத‌ரிட‌ம் ம‌னு. முஸ்லீம் அமைச்ச‌ர்க‌ளின் உத‌வியுட‌ன் வெளியிட‌த்தைச் சேர்ந்த‌ முஸ்லீம்க‌ளால் வீடுக‌ள் அப‌க‌ரிப்பு.)

    http://viyaasan.blogspot.ca/2013/01/blog-post_30.html

 5. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பிரபாகரனின் பங்களிப்பையும், அவரும் அவரது முழுக் குடும்பம் மட்டுமல்ல, பல போராளிகளின் தியாகங்களையும் நாம் மதிக்கும் அதே வேளையில், இன்னொரு, ஆயுதப் போராட்டம் சாத்தியமல்ல என்பதை உணர்ந்து, இன்றைய காலகட்டத்தில், நடைமுறைச் சாத்தியமான வழியில் ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தமிழீழ மண்ணை திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களிலிருந்து காக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த ஈழத்தமிழர்கள், அதற்காக எந்தப் பேயுடனும் கூட்டுச் சேர தயாராக உள்ளார்கள். அந்தப் பேய், எங்களுக்கு முன்பு தீமை இழைத்திருந்தாலும் கூடப் பரவாயில்லை. எந்த ஈழத்தமிழரும் பிரபாகரனைப் பற்றி இப்பொழுது பேசுவதில்லை, அதற்காக அவரது தியாகங்களையோ அல்லது தவறுகளையோ மறந்து விட்டதாகக் கருத்தல்ல. பிரபாகர்னைப் போற்றியும் தூற்றியும் தமது வயிற்றை நிரப்பிக் கொண்டவர்கள் தான் இன்றும் பழசை எல்லாம் எழுதி தமது பசியைத் தீர்த்துக் கொள்கிறார்கள் போல் தெரிகிறது. 🙂

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க